Tuesday, April 9, 2024

லிங்கம் ஒரு அடையாளம்


Bala Krishnan contactbalki@gmail.com via googlegroups.com 


 சிவம் என்றால் கல்யாணம் , நிர்க்குணம் , மங்களம் என்று பொருள் என பெரியோர் சொல்ல கேட்டிருக்கிறேன். கல்யாணம் என்பது நன்மையையும் , நிர்க்குணம் என்பது குணமற்ற ஒன்றையும், மங்களம் என்பது சுபத்தையும் குறிக்கிறது.

     சிவலிங்கம் என்பது  மனிதனின் குறியை குறிக்கிறது என்பதெல்லாம் பிசகு. குணங்களை கடந்த இறைவனை குறிக்க இது ஒரு அடையாளம். அவ்வளவுதான். வெறும் அடையாளம் மட்டுமல்ல; அதில் ஒரு விசேஷத்தன்மையும் உள்ளது என்பதற்கு ருசு அதை வணங்குபவர்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றும் மாபெரும் அறிஞர்களும் அதை வழிபட்டுள்ளனர் என்பதுமே மட்டுமல்ல. வேதத்தில் இதை அப்படி உயர்வாய் சொல்லி உள்ளது என்கின்றனர்.

     அருவ வழிபாட்டின் உருவம்தான் லிங்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அதன் பெருமையை அப்படி சொல்லி முடிக்க முடியவில்லை. ஆதிசங்கரர் என்னென்ன பெருமைகள் சொல்கிறார் இதற்கு? ஸ்ரீதரர் இதில் அல்லவோ மறைந்தார்? இதிலிருந்து அல்லவா ஒரு கை கிளம்பி அத்வைதம் சத்தியம் என்றது? அதென்ன சிவலிங்கத்தின் மேல் நாகம்?

     இது வெறும் இனக்குறி என்றால் அதற்கு எதற்கு மாலை? அதற்கு ஏன் அஷ்டோத்திரம்? அதற்கு ஏன் நைவேத்தியம்? அதற்கு வேறு ஒரு தீபம் வேறு வருகிறதே? ஆக இது வெறும் உடம்பிலுள்ள ஒரு அங்கத்தை குறிப்பதல்ல.

     ஒரு கோலுக்கு துணியை கட்டினாலும் பெண்ணை கற்பனை பண்ணுவது மனிதனின் இயற்கைதானே? ஆண் பெண் உடற்சேர்க்கை இது என்பது மகா பிசகு. பிறர் போகட்டும். இந்துக்கள் இப்படி நினைக்க கூடாது.

     கோவில்களில் நிர்வாண அழகு பிம்பங்கள் இருப்பது, அதனால் விகாரப்படும் மனதினால், உள்ளே சென்று இறைவனை வசப்படுத்த முடியாது என்பதை சூசிக்கவே என ஆசான் சொன்னார். அப்படி இதற்கு ஒரு காரணம் இருக்கவே செய்யும்.


பால்கி

லிங்கம் ஒரு அடையாளம்

‘சிவவாக்கியர்’ ----- இந்த‌ கால‌ம் திரும்புமா

 


ராஜா அண்ணாமலை kundalani@gmail.com via googlegroups.com

இவர் சித்தர்களுள் தலை சிறந்தவர். பிறக்கும்போதே “சிவ சிவ” என்று சொல்லிக்கொண்டே பிறந்ததால் ‘சிவவாக்கியர்’ என்று பெயர் பெற்றார்.

இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரை தரிசித்தார். சிவவாக்கியரை அந்த சித்தர் இனிமையாக வரவேற்றார். அவரை சோதிக்க எண்ணிய சித்தர் “சிவவாக்கியா செருப்பு தொழில் செய்த காசு என்னிடம் உள்ளது. இதைக் கொண்டு போய், என் தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விடு அப்படியே இந்த கசப்பாக உள்ள பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக் கொண்டு வா” என்றார். சித்தர் கொடுத்த காசுகளையும் சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். கங்கையில் இறங்கி தண்ணீரைத் தொட்டார். அடுத்த நிமிடம் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்மையான கை ஒன்று வெளியில் வந்து அவரிடம் கையை நீட்டியது. சிவவாக்கியார் காசுகளை அந்தக் கையில் வைத்தார். உடனே, வளையோசையுடன் அந்தக்கை தண்ணீரிலே மறைந்தது.

அதனைக் கண்ட சிவவாக்கியர் சிறிதும் ஆச்சரியப்படாமல், பேய்ச்சுரைக்காயை நீரில் அலம்பிக்கொண்டு திரும்பி வந்து சித்தரை வணங்கினார். சித்தர், சிவ வாக்கியரை மீண்டும் சோதிக்க எண்ணி, “சிவவாக்கியா இதோ இந்த தோல் பை தண்ணீரிலும் கங்கை தோன்றுவாள். நீ அங்கே கொடுத்த காசுகளைக் கேள். அவள் கொடுப்பாள்” என்றார். அதன்படியே சிவவாக்கியரும் கேட்டார். சித்தர் செருப்பு தொழிலுக்காக வைத்திருந்த தோல் பையிலிருந்து ஒரு கை வெளியே வந்து சிவவாக்கியர் கைகளில் காசைக் கொடுத்து விட்டு மறைந்தது. சிவவாக்கியர் அப்போதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ படவில்லை. சிவவாக்கியரின் பரிபக்குவ நிலையை கண்ட சித்தர், அவரை அன்போடு தழுவினார். “அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி கொஞ்சம் மணலும், பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து “இவற்றை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார்.

சிவவாக்கியர் குருவை வணங்கி, அவர் தந்த பொருட்களோடு அங்கிருந்து புறப்பட்டார். ஒருநாள் பகல் வேளையில் சிவ வாக்கியர் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதி வழியாகச் சென்றார். அப்போது வெளியில் வந்த கன்னிப்பெண் ஒருத்தி சிவவாக்கியரைப் பார்த்தாள். உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி, “சுவாமி! தங்களுக்கு வேண்டியதைத் தர சித்தமாயிருக்கிறேன்” என்றாள். சிவவாக்கியர், “என்னிடம் உள்ள இம்மணலையும் பேய்ச்சுரைக்காயையும் சமைத்து எனக்கு உணவு தரமுடியுமா?” என்றார். குறப்பெண்ணும் ஒப்புக்கொண்டு அவரிடமிருந்து வாங்கி சமைக்கத் தொடங்கினாள். என்ன ஆச்சரியம்! மணல் அருமையான சாதமாகவும், பேய்ச்சுரைக்காய் கறி உணவாகவும் சமைந்தது. சமையலை இனிதே முடித்த அவள், சிவவாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள் குருநாதர் குறிப்பிட்ட பெண் இவள்தான் என்று நினைத்த அவர் மகிழ்வோடு அவள் இட்ட உணவை உண்டார். காட்டிற்குச் சென்றிருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். அவர்கள் இவரை வணங்கி “குருசாமி! தங்களின் பாதம் பட இந்த குடிசை என்ன தவம் செய்ததோ?” என்று சொல்லி வணங்கி நின்றனர். “தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன். பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப்பெண்ணை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். “சுவாமி நீங்கள் எங்களுடனே தங்குவதாயிருந்தால் எங்கள் குலப்பெண்ணைக் கொடுக்கிறோம்” என்றனர் குறவர்கள்.

சிவவாக்கியர் சம்மதித்தார். இல்லறத்தில் இருந்தாலும் தவத்தைக் கைவிடவில்லை. அதே சமயம் குறவர் குலத்தொழிலையும் கற்றுக்கொண்டார். ஒருநாள், சிவவாக்கியர் காட்டிற்குள் சென்று ஒரு பருத்த மூங்கிலை வெட்டினார். வெட்டப்பட்ட இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது. சிவவாக்கியர் திடுக்கிட்டார். சிவபெருமானே! என்ன இது நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா? செல்வம் அதிகமானால் கவலைகளும் அதிகமாகுமே என்று பயந்து ஓடிப்போய் தூரத்தில் நின்றுகொண்டு அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வெளிவருகிறான் என்று சொல்லி துகள்கள் உதிர்வதை சுட்டிக்காட்டினார். குறவர்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அங்கிருந்த தங்கத்தையெல்லாம் மூட்டையாக கட்டிக்கொண்டு புறப்பட்டனர். ஆனால் இருட்டிவிட அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். இருவர் காவல் காக்க இருவர் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று உணவு உண்டார்கள். அதன் பின் தங்கம் நிறைய உள்ளது, நாம் இருவர் மட்டுமே அதனை பங்கு போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே என்று திட்டமிட்டு மற்ற இருவருக்காக வாங்கிய் உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு கிளம்பினர். உணவுடன் வந்த அவர்களை பார்த்ததும் மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அதோ எதிரில் இருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று வேண்டினர்.

வந்தவர்கள் இருவரும் உணவு பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக சென்றனர். மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்கள் கிணற்றுக்கு அருகில் சென்றவுடன் காலை வாரிவிட்டு கிணற்றுக்குள் தள்ளிவிட்டு சென்றனர். “இனி இந்த தங்க மூட்டை நம் இருவருக்கும் தான்” என்று மகிழ்ந்து உணவு உண்டனர். உணவில் விஷம் கலந்திருப்பதால் இருவரும் அங்கேயே விழுந்து மாண்டனர். மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் காட்டிற்கு வந்த சிவவாக்கியர் நான்கு பிணங்களையும் கண்டு ஐயோ இந்த எமன் இவர்களை கொன்று போட்டுவிட்டதே என்று வருந்தினார்.

சிவவாக்கியர் ஒருநாள் வானவீதி வழியே சென்று கொண்டிருந்த கொங்கண சித்தரை கண்டார். கொங்கணரும் சிவவாக்கியரைப் பார்க்க இருவரும் நட்புகொண்டு சந்தித்து மகிழ்ந்தனர்.

அன்றிலிருந்து இருவரும் அடிக்கடி சந்தித்தனர். சிவவாக்கியர் மூங்கிலைப் பிளந்து கூடைகள் பின்னி விற்பதைக் கண்டார் கொங்கணர். இந்த மகான் தங்கம் செய்யும் வித்தை அறிந்திருந்தும் இப்படி வறுமையில் வாழ்கிறாரே என்று வருந்தினார்.

சிவவாக்கியர் இல்லாத சமயமாக பார்த்து, அவர் வீட்டிற்குச் சென்று அவர் மனைவியை சந்தித்து சில பழைய இரும்புத்துண்டுகளை வாங்கி அவற்றை தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றார். சிவவாக்கியர் வீடு திரும்பியதும் அவர் மனைவி கொங்கணர் வந்ததையும், நடந்த விவரங்களையும் சொல்லி தங்கத்தை கணவர் முன் வைத்தார்.

சிவவாக்கியர் இவைகளைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டுவிட்டு வா என்று கூற அவளும் அப்படியே செய்தாள். சிவவாக்கியர் மனைவியை அழைத்து உனக்கு தங்கத்தின் மீது ஆசையா என்று கேட்டார். அதற்கு அவள் சுவாமி! தங்களுடைய மாறாத அன்பு இருந்தாலே போதும், எனக்கு தங்கம் தேவையில்லை என்று கூறிவிட்டாள்.

சிவவாக்கியர் மனமகிழ்ந்து மனைவியைப் பாராட்டினார். இல்லறம் நல்லறமாக நடந்தது

--
வெந்ததைத் தின்றுவிட்டு வேளை வந்தால் சாகின்ற பிறவி அல்ல---இந்த சீவன்

சர்வம் சிவமயம்
சிவாய நமக‌

சும்மாயீரு

 சித்தர் தன் மாணவனிடம் விளக்கம் தருகிறார்.

 
உன்னை அறிவித்தது யார்? இந்த உலகத்தை அறிவித்தது யார்?. 
                    என்னை அறிவித்தது எது? என்று ஆராயும்போது என்னை குனிந்து பார்கிறேன்.  எனக்கு இரண்டு கைகள் இரண்டு கால்கள் மற்றும் உடம்பு  இருப்பதை அறிந்தேன். எப்படி அறிந்தேன்?  யார் அறிவித்தது? என்று ஆராயும்போது அறிவு தான் அதை உணர்த்தியது என்பதை தெரிந்துகொண்டேன். இந்த உலகத்தை அறிவித்ததும் அதே அறிவுதான் என்பதை தெரிந்துகொண்டேன் . நான் யார் என்று ஆராயும்போது நானும் அறிவாகவே உள்ளேன் என்பதை அறிந்துகொண்டேன். அறிவே எல்லாமாக இருக்கிறது. உலக பொருட்கள் எல்லாம் அறிவின் தத்துவமே உண்மையில் அவை மாயையே.  மாயையும் அறிவிலேருந்து தோன்றியது. இங்கே அறிவு மட்டுமே உள்ளது.  ஆகையால் மற்றவையெல்லாம் மாயையே என்று அறிந்து சும்மா இருத்தல் சித்தி அளிக்கும். சும்மா இருத்தல் என்பது நாம் அறிவு என்பதை உணர்ந்துகொண்டு நம்மை சுற்றி எது நடந்தாலும் அதை பற்றி ஆராயாமல் அதில் தலையீடாமல் சும்மா இருத்தலே சும்மாயீரு  ஆகும். உண்மையெய் உணராமல் அறிவாகிய நாம் புலன்கள் வழியாக தன்னை சுற்றி இருக்கும் மாயையை  ஆராய்ந்து துன்பபட்டுகொண்டு இருக்கிறோம் அறியாமை விலகியதும் அமைதி ஏற்படுகிறது அதிவே சும்மா இருத்தல் ஆகும். முழுமையான அறிவில் புலனுணர்வு எல்லாம் கடந்து சும்மா இருப்பதே சுகமாகும். அங்கெ நானும் இல்லை உலகமும் இல்லை இறைவனாகிய அறிவும் இல்லை எதுவுமே இல்லை என்பதே உண்மையாகும்.  நாமும் சும்மா இருக்க முயற்சி செய்வோம்.

முக்திநிலை, சித்திநிலை விளக்கம் 

            சுத்தஅறிவே இறைநிலையாக இருக்கிறது.  சுத்தறிவே ஆன்மாவாகி பின் தேகமகிறது.  தேகமும் அறிவே தான். தேகத்துக்கு கை, கால் முதலிய் இந்திரியங்கள் எதுவும் இல்லை என்பது தான் உண்மை. கண் இல்லாமல் பார்க்கவும், காது இல்லாமல் கேட்கவும், நாக்கு இல்லாமல் சுவைக்கவும் முடியும் என்பது உண்மை. அறிவு, ஆன்மா, தேகம் மூன்றும் வொன்றே என்ற முழு அறிவு விளக்கம் பெறும்போது சித்திநிலை கைகூடும்.  உடம்பு வேறு ஆன்மா அறிவு வேறு,வேறு என்று நினைக்கும்போது முக்திநிலை ஏற்படுகிறது.  அறிவின் விளக்கமாக உலகம் இருக்கிறது.  இதில் தனிதனி பிரிவுகள் எதுவும் இல்லை.  எந்த இயக்கமும் இல்லை என்ற சுத்தறிவு விளங்கும்போது தத்துவங்கள் மறைந்து  சுத்ததேகம்,பிரணவதேகம் அடுத்து ஞானதேகம் உருவாகும். 
காலசக்கரம் 

                     அறிவின் சலனதிலிலிருந்து அன்பு உருவாகியது.  அந்த அன்பை காட்ட ஆன்மா உருவாகியது.  ஆன்மா அன்பை அனுபவிக்க உடம்பு எடுத்தது.  உடம்பின்மேல் உள்ள ஆசையால் உலகம் உருவாகியது. ஆசை நிராசையாக ஆகும்போது கோபம் வஞ்சகம் போன்ற பத்து குணங்கள் உருவாகியது. இதனை அடிப்படையாக கொண்டு காலசக்கரம் சுழல ஆரம்பித்தது. இதனால் காலம் என்ற ஒன்று உருவாகியது.  இதுநாள்வரை காலசக்கரம் சுழல்கிறது.    எல்லாம் தானே என்கின்ற தன்னை அறிதல் நடக்கும்போது அறியாமை நீங்கி அறிவு தன்னிலையை அடைந்து அமைதியடைகிறது.  அது நடக்கும்வரை காலசக்கரத்தில் மாட்டி சிக்கி தவிக்கிறது. ஒருவன் தன்னை போல் பிறர் கஷ்ட படகூடாது என்ற நல்ல மனதுடன் சமூகசேவை செய்து பின் நல்லவனாக வாழ்ந்து பின் இறந்து அடுத்தபிறவி பெற்று காலசக்கரத்தில் சுழல்கிறான்.  தன்னை ஆன்மா என்று உணர்ந்தவன் நல்ல ஆன்மீகவாதியாக சேவைசெய்து பின் இறந்து அடுத்தபிறவி பெற்று காலசக்கரத்தில் சுழலுகிறான்.  தன்னை அன்புரு என்று உணர்ந்தவன் தெய்வமாக மதிக்கபெற்று பின் இறந்து அடுத்தபிறவி பெற்று காலசக்கரத்தில் சுழலுகிறான்.  தன்னை அறிவு  என்று உணர்ந்தவன் தத்துவங்களை கடந்து சித்தியடைந்து அடுத்தபிறவி பெறாமல் சுத்தசிவநிலையில் கலக்கிறான்.  காலசக்கரதிலிருந்து விடுதலை பெறுகிறான்.
 
உயிர்.

uyir b.r. uyir73@yahoo.com

Mon, May 31, 2010, 2:51 AM

Monday, March 18, 2024

கபாலீஸ்வரர் திருக்கோயில் வெள்ளி அதிகார நந்தி

நூற்று ஏழாவது  ஆண்டாக பவனி வந்த வெள்ளி அதிகார நந்தி வாகனம்!

௧௮ - ௩ - ௨௦௨௪ திங்கள்கிழமை - காலை.
[18/03/2024]

சென்னை, மயிலாப்பூர்,அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா - 2024.
மூன்றாம் நாள் காலை உற்சவம்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், 'பங்குனிப் பெருவிழா' ஆண்டுதோறும்  சென்னை மாநகர மக்கள் அனைவரும் தவறாது பங்கேற்கும் மிகப்பெரும் திருவிழா. 'மயிலையே கயிலை' என வாழும்  ஆன்மிகப் பெருமக்களுக்கு, அருளையும் ஆனந்தத்தையும் வாரிவழங்கும் ஆன்மிகத் திருக்கோயில் விழா. 

இங்கு குடிகொண்டிருக்கும் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் உலகைக் காக்கும் அம்மைஅப்பனாக,  குறிப்பாக சென்னை மக்களின் கண்கண்ட கடவுள்களாக நாளும் காத்து வருகின்றனர். மயிலைக் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா  கோலாகலத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக அதிகார நந்தி வாகனத்தில் இறைவன் வீதி  உலா வரும் நிகழ்ச்சி  இன்று காலை  சீரும் சிறப்புமாக நடைபெற்றது..

பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம் நாள் காலை நடைபெறும்  இந்த அதிகாரநந்திக் காட்சி  வரலாற்று சிறப்பு வாய்ந்தது. ரிஷபத்தின் முகமும்  (காளையின் முகம்) சிவபெருமானின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். 'அதிகார நந்தியின் சேவை' சரியாக காலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. 

புள்ளினங்கள் பாடும் பூபாள வேளையில், வங்கக் கடற்கரையின் மென்காற்று வீச அதிகாரநந்தியின் மீதமர்ந்து அகிலத்தை ஆள வரும் சிவபெருமானின் திரு உலா காட்சியைக் 'காண கண்கோடி வேண்டு'மென அப்போதே  பாடி விட்டார் அமரர் பாபநாசம் சிவன்.

அதிகாரநந்தி ஆலயத்துக்கு வழங்கப்பட்டு 107 ஆண்டுகள் ஆகின்றன. 

இந்த நந்தி வாகனத்தை வழங்கியவர், த.செ .குமாரசாமி பக்தர் என்பவர்.  வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமம்தான் இவரது சொந்த ஊர். பாரம்பர்ய மருத்துவத்திலும் சித்த ஆயுர்வேத மருத்துவத்திலும் பதிவு பெற்ற  ஏழாவது தலைமுறை வைத்தியராகத் திகழ்ந்தவர்.  

வைத்தியத்தின் மூலம் தங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த வருமானத்தில், நான்கில் ஒரு பங்கை ஆலயத் திருப்பணிக்காக வழங்கினார். இதையொட்டி அதுநாள்வரை மர வாகனமாக இருந்த, இந்த வாகனத்தைக் கலையழகுடன் வெள்ளியில் வடிவமைத்து வழங்கினார். இதற்கான பணிகள் 1912 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1917 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றன. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த இறைப்பணி நிறைவடைந்தது. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான பணி.  

இந்த அதிகார நந்திக்கு 107 ஆவது ஆண்டு இது!

இன்றளவும் குமாரசுவாமிபக்தரின் குடும்பத்தினர் ஆண்டுதோறும் உழவாரப் பணியாகக் கொண்டு இந்த நந்தி வாகனத்தை முறையாகப் பராமரிக்கின்றனர்.

இவரை ஏன் 'அதிகார நந்தி' என்று அழைக்கிறார்கள்? இவர் எல்லோரையும் அதிகாரம் செய்பவரா? அதுதானில்லை... அகிலத்தையே காக்கும் ஈஸ்வரனை தானே சுமக்கும் அதிகாரம் பெற்றவர் என்பதே இதன் பொருள். 

சிவபெருமானின் வாகனமான நந்தி பகவான். வேதங்களின் முதல்வனாகப் போற்றப்படுகின்றார். 'நந்தி' என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன், நந்தி தேவருக்குத்தான் முதலில் கூறியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

சிவாலயங்களில் கருவறைக்கு எதிரே இருக்கின்ற நந்தி பகவானை 'தர்ம விடை' என்றே  அழைக்கிறார்கள். அழிவே இல்லாமல் எல்லா காலங்களிலும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம்தான் ஈசனைத் தாங்கி நின்றது. 

ஈசன் சுவாசிக்கும் மூச்சுக்காற்று நந்தி தேவனுடையது. தர்மம்தான் இறையனாரின் சுவாசம். சிலாதர் முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.  

நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.  

அதனால்தான் அவரது முகத்தில் அந்த கம்பீரம் அந்த ராஜஸம்... சென்னைக்குப் பெருமை மயிலை என்றால், மயிலை கபாலீஸ்வரருக்குப் பெருமை அதிகார நந்தி!

புகைப்படங்கள்:

107 ஆண்டுகள் பழமையான சென்னை, மயிலாப்பூர்,அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வெள்ளி அதிகார நந்தி வாகனம். 

வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருள்மிகு கபாலீஸ்வரர்.

மயிலாப்பூர்,அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
 ௧௮- ௩ - ௨௦௨௪ திங்கள்கிழமை - காலை.
இன்றைய வாகன தரிசனம்:

 அருள்மிகு விநாயகர் மூஷிக வாகனம்.

அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் வெள்ளி அதிகார நந்தி வாகனம்.

அருள்மிகு கற்பகாம்பாள் கின்னரி வாகனம்.

அருள்மிகு  வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் கின்னரர் வாகனம்.

அருள்மிகு சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனம்.

புகைப்படங்களுக்கு நன்றி:
கபாலி சிவம் முகநூல் பக்கம்.