Monday, July 13, 2015

சித்தவேதம் சுருக்கம்



வாசியை அறிந்தவன் 
[ சித்தவேதம் சுருக்கம் ]
சித்தவேதம் எனும் மோட்ச சூத்திரம் சுவாமி சிவானந்த பரமஹம்ஸப் பெருந்தகையால் அருளிச் செய்யப்பட்டது.

அனைத்திற்கும் அடிப்படையான உயிரை அதாவது ஜீவனைப் பேணுவதே ஆன்மிகம் எனப்படும். ஜீவனைக் காக்கும் யதார்த்த ஈஸ்வரசேவையாகிய சித்தவித்தையைப் பெற்று பயிற்சி செய்து வீடுபேறு அடைந்து இனிதே வாழ்வோமாக. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

ஞானியர் செயல்படுவது என்பது உலகோரை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

ஞானியர் செயல்படுவது என்பது உலகோர் நலமடைய வேண்டியாகும்.

ஜீவன் ஒன்றே உள்ளது. எந்த தனிப்பட்ட மனிதருக்கும் என தனிப்பட்ட ஒரு ஜீவன் இல்லை.

ஓரே ஜீவனே எல்லோரிடமும் வியாபித்து இருக்கிறது. அந்த ஒரே ஜீவனுடைய சரித்திரமே சித்தவேதம் ஆகும்.

ஈஸ்வரன் சர்வவியாபி. அவன் நம் உள்ளிலும் இருக்கிறான்.   ஈஸ்வரன் நம்முள் இல்லை யெனில் நமக்கு யாதொரு உணர்வுமில்லை. நம்மால் கேட்பதற்கோ, காண்பதற்கோ, அறிவதற்கோ, பேசுவதற்கோ முடியாது.   நாம் காண்கிற உலகம் முதலிய யாதொரு நிலைமையுமில்லை. ஈஸ்வரன் எல்லா சமயத்திலும் உள்ளவன். தன்னிடமுள்ள ஈஸ்வர சக்தியை (அறிவு) வெளியில் விடாமல் எவனொருவன் தன்னிலேயே நிலைநிறுத்துகிறானோ, அவனே ஈஸ்வர மதஸ்தன். ஈஸ்வரன் நம்மில் இல்லையெனில் நாம் பிணமாகின்றோம்.

ஈஸ்வரனுக்கு இரண்டு நிலைமைகள். இவ்விரு நிலைகளும் தன்னிலிருந்தே உண்டாகின்றது.

ஒன்று நிஸ்களத்துவம் அதாவது களங்கமில்லாத நிலை.

மற்றது சகளத்துவம் அதாவது களங்கமுடைய நிலை.

நிஸ்களத்துவ நிலை.

நிஸ்களத்துவ நிலையில் ஈஸ்வரன் நிர்குணனாகி அதாவது சாத்வீகம், ராஜஸம், தாமஸம் போன்ற குணமில்லாதவனாய், நிர்விகாரியாய் அதாவது விகாரம் இல்லதவனாய், படைப்பு, காப்பு, அழிப்பு முதலியவை இல்லாமல், விருப்பு வெறுப்பு அற்றவனாகி விளங்குகிறான்.

தன்னிலுள்ள ஈஸ்வரசக்தி (அறிவு)தன்னிலேயே லயித்து வெளியில் வியாபிக்காமல் இருக்கும் பொழுது நிஸ்களனாகிறது. நமது தூக்கத்திலுள்ள நிலைமை இதுவே.   தூக்கத்தின் போதும் ஒருவனுக்கு ஜீவன் உண்டு. அந்த நிலைமையில் ஜீவனுக்கு யாதொரு களங்கமும் இல்லை. அச்சமயம் ஜீவன் நிஸ்களனாயிருக்கிறது. அது களங்கமின்றி, நிர்மலமாய், பரிசுத்தமாய், ஆத்மாவாய் தன்னில் தானே லயித்து இருக்கின்ற நிலைமையாகும். அந்த ஜீவனே சிவன். அந்த நிலைமையே “ஜீவசிவோஹம்” என்ற நிலைமை. தான் இல்லையெனில் இவ்விதமான யாதொரு நிலைமையும் இல்லை. தான் தானேயாகும் ஈஸ்வரன். தன்னிலுள்ள ஈஸ்வரசக்தி (அறிவு) தன்னிலேயே லயித்து இருக்கும்போது அதைத்தவிர வேறு எதுவுமே இல்லை ஆதலால் வெளி உலக உணர்வுகள் எதையும் அது உணர்வதில்லை.

சகளத்துவ நிலை

எப்பொழுது தூக்கம் விழித்து தனது சக்தி வெளியில் வியாபிக்கின்றதோ அப்பொழுது சகளனாகிறது.

சகளத்துவ நிலையில் ஈஸ்வரன் சகுணனாகி அதாவது சாத்வீகம், ராஜஸம், தாமஸம் போன்ற குணமுடையவனாகி, ஜீவனிலிருந்து விகாராதிகளுண்டாகி, படைப்பு, காப்பு, அழிப்பு முதலியவை உண்டாகி, விருப்பு வெறுப்பு உடையவனாகி அமைகிறான்.   ராகத்துவேஷியாக அமைகிறான்.

வெளி உலக உணர்வு எனும் சங்கற்பம் மனத்தில் இருந்து உண்டாகிறது.   அந்த நிலையில் வெளி உலக உணர்வுகளை அந்த சக்தி உணர்கிறது, வெளி உணர்வுகளால் அந்த சக்தி பாதிக்கப்படுகிறது.   சகள நிலை களங்கமுற்ற நிலை.

ஜீவசக்தீயானது விழிப்பு நிலையில் விகாராதிகள் பெற்று சங்கற்பத்தின் காரணமாக மனம் உண்டாகிறது.   மனம் இல்லையெனில் யாதொன்றும் இல்லை. எல்லாம் மனத்திலிருந்தே தான் உண்டாகின்றன. ஆகையால் அவனவனுக்கு அவனவனுடைய மனமே குருவாகும். வேறு குரு இல்லை. அதனால் குரு சிஷ்யன் என்கிற நிலைமை இல்லாததாகும்.

ஒன்றில் இருந்து இரண்டு உண்டாவதில்லை.   இரண்டில் இருந்தே ஒன்று உண்டாகிறது.

ஒன்றை ஒரு பொருள் எனச் சொல்ல வேண்டுமானால் அதனுடைய ஆதியும் அந்தமும் அதாவது அடி எனும் அடிப்படையாகிய ஆதாரம் ஒன்று கீழும், முடிவு காண்பதற்கு வெளியான ஆகாசமாயிருக் கின்ற முடியாகிய ஒன்று மேலேயும் இருக்க வேண்டும். அந்த இரண்டிலாகும் ஒன்று நிற்பது. தவிர பூமி என்றும் ஆகாசம் என்றும் இரண்டு நிலைமைகள் இல்லையெனில் எந்தப் பொருளும் உண்டாகாது.   ஆகையால் எல்லாப் பொருள்களும் இரண்டிலிருந்தே தான் உண்டாகின்றன.

உதாரணம்: வித்தினுடைய முகம் இரண்டாகப் பிளவுபட்ட பின்னரே அதிலிருந்து முளை ஒன்று வெளி வருகிறது.   ஆணும் பெண்ணும் சேர்ந்தால் மட்டுமே குழந்தை உருவாகிறது.   இரண்டில்லையெனில் ஒன்றுமில்லாததாகும். ஒன்றும் இல்லாததற்குத்தான் “அத்துவைதம்” அதாவது இரண்டில்லாதது என்று சொல்லப்படுகிறது. தன்னிலுள்ள ஈஸ்வரசக்தி (அறிவு) தன்னிலேயே லயித்து சலனமற்று இருக்கும் “தான்” என்ற நிலை அது.   “தான்” என்றால் அழிவு இல்லாதது என்று பொருள்.

தன்னிலுள்ள ஈஸ்வரசக்திக்குச் (அறிவு) சலனம் உண்டானபோது ஈஸ்வரசக்தியில் இருந்து வெளி என்னும் ஆகாசம் உண்டாயிற்று. இந்த வெளியே சக்தி எனப்படும். அந்த ஆகாசத்தில் “தான்” தானே சக்தியாய் சலிக்கவும் அப்பொழுதில் இருந்தே இரண்டென்கிற எல்லா நிலைமைகளும் உண்டாயிற்று.

எப்பொழுது “தான்” வெளியாயிருக்கின்ற ஆகாயமாகி, சக்தியாய் சலிக்கத் தொடங்கிற்றோ, அப்பொழுது ஈஸ்வர சக்தி இரண்டாயிற்று. அந்த ஈஸ்வரசக்தியின் இரண்டில் மேலாயிருக்கின்ற முடியாகிய பொருள் பிரம்மம் (சமீரணன்) என்றும், கீழாயிருக்கின்ற அடியாகிய பொருள் மாயை (வாயு) எனவும் சொல்லப்படுகிறது.   மாயை என்பதி அஞ்ஞான நிலை; அறிவற்ற நிலை. “தான்” இல்லாமல் போன நிலை. அறிவு வாயு ரூபமாய் வெளியில் நசித்துக் கொண்டிருக்கும் நிலை.

பிரம்மமாய் தானாயிருக்கின்ற பொருளிற்கே சலனமுண்டாயிற்று. அந்தச் சலனத்திற்கே மாயை என்று பெயர். மாயையாயிருக்கின்ற சக்தி எப்பொழுது தன்னில் லயிக்கின்றதோ, அப்பொழுது யாதொன்றும் இல்லை. பிரம்மம் என்கிற ஒரு நிலையுமில்லை. தனக்குச் சலனமுண்டாகும் பொழுதே பிரம்மம் என்கிற ஒரு நிலைமை உண்டானது. அது பிரமையாகும். எப்பொழுது பிரமையாயிருக்கின்ற சலனம் தன்னில் அடங்குகின்றதோ, அப்பொழுது அடி, முடியில்லாமல், ஓசையற்றதாய், காணமுடியாத தாய், சூன்யபதவியாகிய ஆனந்தம் உண்டாகிறது. அத்தருணத்தில் பிரம்மம் என்கிற நிலைமையில்லை. மாயையுமில்லை.

மாயையின் நிலைகள் இரண்டு. ஒன்று காரண நிலை. இரண்டு. காரிய நிலை. காரணமும் காரியமும் சேர்ந்ததே உலகம்.

காரண நிலை:

காரணம் என்பது அவனவன் மனமே. மனம் இல்லையானால் எதுவும் உண்டாகாது. பந்தம்,

மோட்சம் எதுவும் இல்லை. குரு சிஷ்யன் வேறுபாடு இல்லை. அவனவனுக்கு அவனவன் மனமே குரு. எல்லாவற்றிற்கும் மனமே காரணம்; கிடைப்பதற்கு வேண்டிய முயற்சியே காரணம்.

காரிய நிலை: எது ஒன்று கிடைக்கிறதோ அதுவே காரியமாகும். ஈஸ்வர சக்தி வெளியில் வியாபித்த போது உலகம் உண்டாயிற்று. உலகம் நமக்கு காரியமாகும். உலகம் என்பது மூன்று நிலைகளாகும்.

1. கேட்கின்றது. 2. காண்கின்றது. 3. அறிகின்றது.

அறிவாகி, ஜீவசக்தியாயிருக்கின்ற பொருள் சலித்து, வாயுவாகி நம்முள்ளிலிருந்து வெளியே போய்க் கொண்டிருப்பதற்கே “மாயை” என்று சொல்லுகிறது. யாதொன்று (அறிவு )இல்லாததாகின்றதோ அது மாயை.   மாயை என்பது தன்னிலிருந்தே உண்டானது அதாவது அவனவனிலிருந்தே உற்பத்தியானது.   மனத்தின் உற்பத்தி மாயைக்குப் பிறகேயாகும். அந்த மனமே ஒருவனது குருவாகும்.

தானாயும் அக்ஷரமாயும் வித்தையாயும் போதமாயும் ஞானமாயும் அறிவாயும் நித்தியமாயும் உள்ள “தான்” இல்லாமல் போகின்றதற்கே மாயை என்று பெயர்.   மாயை என்பது அநித்தியமாகி, அறிவில்லாததாகி, அஞ்ஞானமாகி, போதமில்லாததாகி, வித்தையில்லாததாகி, அச்சரமில்லாததாகி, தானில்லாததாகித் தீருகின்ற நிலைமையாகும்.   மாயை என்றால் யாதொன்று இல்லாததோ அதுவேயாகிறது. இக்காணுகின்ற சராசரங்களை மாயை என்று சொல்வது சரியல்ல. மாயை இல்லை யெனில் யாதொன்றுமில்லை.     சராசரங்கள் எல்லாவற்றுக்கும் மாயையே அடிப்படை. ஏதாவது ஒன்று உண்டாக்குவதற்கோ, நசிப்பதற்கோ, நசிப்பிப்பதற்கோ, கேட்பதற்கோ, காண்பதற்கோ, அறிவதற்கோ, எல்லாவற்றிற்கும் அடிப்படையா யுள்ளது மாயை. பார்க்கின்ற இவையாவும் மாயை அல்ல.


அறிவு.

அறிவு என்பது ஞானம், அறிவே போதம். அந்த போதமே வித்தை. அந்த வித்தையே அக்ஷரம்.

அறிவு, ஞானம், போதம், வித்தை, அக்ஷரம் என சொல்லப்படுகின்ற அதுவே நித்தியமான

பொருளாகும். வாயுவே அறிவாயிருக்கின்ற பொருள். ஜீவசக்தியாகிய வாயுவே அறிவாயிருக்கின்ற பொருள். வாயு நம்மில் இருக்கின்றபோது மட்டுமே நமக்கு அறிவு இருக்கின்றது.


ஜீவசக்தியாகிய வாயுவே ஈஸ்வரன்.

ஜீவனுடைய சலனத்திற்கே ஜீவசக்தியாகிய வாயு என்று பெயர். ஜீவசக்தி வெளியில் வருவதற்கு வாயு என்று பெயர்.   மூச்சு என்று சொல்லுவது ஜீவசக்தியாகிய வாயு ஆகும்.   நமது சிருஷ்டிகர்த்தா ஜீவசக்தியாகிய வாயுவே. ஜீவசக்தியாகிய வாயுவே நம்மை சிருஷ்டித்தது. நாம் ஜீவித்திருக்க வாயு வேண்டும். எனவே நம்மைக் காப்பாற்றுவது ஜீவசக்தியாகிய வாயுவே. ஜீவசக்தியாகிய வாயு இல்லாமல் போனால் ஒருவன் செத்துப் போகிறான். எனவே அழிப்பதும் ஜீவசக்தியாகிய வாயுவே.   அந்த வாயுவே அடி முடியற்ற, நாம ரூபமற்ற, உள்ளும் வெளியுமற்ற சர்வ வியாபியான ஈஸ்வரன்.


ஈஸ்வரன் நம்மை ரட்சிப்பது.

ஈஸ்வரன் என்பதன் பொருள் நம்மை ஆளுதற்குரியவன் என்பதாகும். ஜீவசக்தியாகிய வாயுவே படைத்தல், காத்தல், அழித்தலைச் செய்கிறது. வாயுவே சக்தி என்றும் சிவசக்தி என்றும் சொல்லப்படு கிறது. இந்த ஜீவசக்தியாகிய வாயுவே சரீரமாகும் (தேகமாகும்). இந்த சக்தி ஒழிந்தால் சிவனும் சவரூபமாம். இந்த வாயுவை சேவிக்கிறதற்குத்தான் ஈஸ்வர சேவை என்று சொல்வது. ஜீவ சக்தியாகிய வாயுவை வெளியில் அலையவிட்டு தீர்த்துவிட்டால் ஜீவன் செத்துப் போகும்.

ஜீவசக்தி வெளியே போகாமல் தன் உள் வழியாய், மேல் கீழாய் நடமாடி பிரம்மரந்திரத்தைத் தாக்கிக் கொண்டிருக்கும் நிலைமைக்கு “பிரம்மம் (சமீரணன்)” என்று பெயர். தன்னுடைய சக்தி எப்பொழுது தன்னிலேயே லயிக்கின்றதோ, அச்சமயத்தில் அச்சக்தி வேறெதையும் அறிகிறதில்லை. அப்போதே நமக்கு உணர்வு வருகிறது.

தன்னுடைய சலனம் தன்னிலடங்கி ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது தான் நமக்கு உணர்வு உண்டாகின்றது. அதாவது ஆலோசித்துக் கொண்டிருக்கும் காரியம் ஞாபகத்துக்கு வருகிறது.   அந்த ஞாபகம் பிரகாசத்திலிருந்து வருகிறது.   பிரகாசம் அக்கினியிலிருந்து வருகிறது. அக்கினி வாயுவில் இருந்து வருகிறது.

தன்னுடைய சக்தி எப்பொழுது சலனப்படுகிறதோ அப்போது அச்சக்திக்கு எல்லா நிலைமை களும் உண்டாகி வெளிப்பட செய்கின்றன.   உலகம் அனுபவத்துக்கு வருகிறது.


மோட்சம் . நம் உள்ளில் உள்ள ஜீவன் நமக்கு மேலாக நம்மில் தானே இருக்கின்ற பிரம்மரந்திரத்தில் வாயுவை சேர்ப்பதே மோட்சம் கிடைப்பதாகும். மோட்சத்திற்கான முயற்சி உள்ளே நிகழ்வது.


பிணத்திற்கு அறிவு இல்லை; ஜீவன் இல்லை; சக்தி வெளியே போய்விட்டதால் சக்தியாகிய வாயு இல்லை; சுவாசம் இல்லை; அசைவு இல்லை; மனம் இல்லை; மற்ற எதுவும் தெரிவதில்லை.

தூங்குபவனுக்கு அறிவு உண்டு; ஜீவன் உண்டு; சக்தியாகிய வாயு உண்டு; சுவாசம் உண்டு; அசைவு உண்டு. மனம் ஜீவனில் லயித்திருப்பதால் மற்ற எதுவும் தெரிவதில்லை.


மனம்.

மனதின் இருப்பிடம் ஜீவன். ஜீவன் இல்லாவிட்டால் மனம் உண்டாகாது. மனம் உண்டாகாத நிலையில் ஜீவனுக்கு யாதேனும் கேட்பதற்கோ, காணுவதற்கோ, அறிவதற்கோ முடியாது. எனவே

மனமே குரு ஆதலால் மனதின் இருப்பிடமான ஜீவனே குருவின் இருப்பிடம் ஆகும்.   தூங்கும்போது மனம் ஜீவனில் கரைந்து அதாவது லயித்து போய்விடுவதால் மற்றொன்றும் இல்லாமல் போகிறது.

ஜீவனில் இருந்து உண்டான மனம், தான் உண்டான ஜீவனிலேயே சேர்ந்து லயித்துவிடும்போது

வேறொன்றும் இல்லாமலாய் ஜீவரூபம் மட்டுமாய்த் தீருகிறது. மனமற்ற அந்நிலையில் எதையும் கேட்கவோ, காணவோ, அறியவோ முடிவதில்லை. மனம் இல்லையானால் எதையுமே செய்ய முடியாது. மனம் மட்டுமே இருந்தால் சிந்திக்க முடியாது. சிந்திக்க புத்தி வேண்டும். மனதின் சிந்திக்கின்ற பகுதியே புத்தியாகின்றது. பல காரியங்களைக் குறித்தும் சிந்திப்பதற்காகப் பத்திரப்

படுத்தி வைத்திருக்கும் இடம் மனம். அந்த மனமாகிய இடத்தில் புத்தி போய் சிந்திக்கின்றது. மனதின் இருப்பிடம் புருவமத்தி. சிந்திக்கும்போது ஒருவனது விழிகள் மேல்நோக்கிப் போவதன் காரணம் மனம்

மேலே இருப்பது தான்.


புருவமத்தி.

இரு கண்களுடைய புருவங்களின் மத்தியத்திற்கே புருவமத்தியம் என்று பெயர். புருவ மத்தியே மனதின் இருப்பிடம். அந்த புருவ மத்தியமே “இருதயம்” என்று சொல்லப்படும். புருவமத்தியிலேயே தட்சிணா மூர்த்தியாகிய மனமாகிய குரு இருப்பது. புருவமத்தியிலேயே சூரியனாய் அக்கினி சொரூபமான பிராணன் இருக்கின்றது. புருவமத்தியே பிராணனின் இருப்பிடம். பிராணனாகிய அக்கினி சொரூப மான சூரியனின் கிரணங்கள் நம்முடைய ஜடத்தில் நகநுனி வரையும் வியாபித்திருக்கின்றன. நம் வயிற்றில் இருந்து உணவான எருவின் சத்தினை நம் புருவமத்தியில் பிராணனாய் இருக்கின்ற சூரியனே ஆகர்ஷித்து, அசத்தான மலத்தை வெளியே தள்ளிகிறது.   புருவ மத்தியில் உள்ள பிராணனே சூரியனாக, அக்கினியாக, வெளிச்சமாக, ஞாபகமாக, சிந்தனையாக ஆகிறது. அக்கினி புருவமத்தியில் தான் உள்ளது. அக்கினி நம் வயிற்றில் இல்லை.

நமது ஜீவனே சிவன் ஆகும். ஜீவனாய் இருக்கின்ற சிவனுக்கு மூன்று கண்கள்.

முதல் கண் –   இடது கண் – இடகலை – சந்திரகலை – சந்திரன் – அதுவே மனம்.

2வது கண் –   வலது கண் – பிங்கலை – சூரியகலை – சூரியன் – அதுவே பிரகாசம்.

3வது கண் –   சுழுமுனை எனும் புருவமத்தியம் – அதுவே அக்கினி.

எல்லா நாடிகளும் வந்து சேருமிடம் புருவமத்தியம்.   அதுவாகும் சுழுமுனை என்று சொல்லப்படும் நெருப்புக்கண். நாடிகளில் இருந்து உண்டாகும் வீரியம் தான் சுக்கிலம். புருவமத்தியில் தான் சுக்கிலம் அக்கினி சொரூபமாய் இருக்கிறது. புருவமத்தியமே சுழுமுனை என்று சொல்லப்படுகிற அக்கினி நேத்திரமாகும். நம்மில் ஜீவன் தன்னில் பிரகாசிப்பது, ஆகாயமத்தியில், புருவமத்தியமாய், இருதயமாய், சுழுமுனையாய் இருக்கின்ற அக்கினி நேத்திரத்தில் இருந்தே. புருவ மத்தியம் தான் பிரம்மாவின் இருப்பிடம்.


ஆகாயம்:

ஆகாயம் அவனவன் சிரசே ஆகும். புருவமத்தியின் மீது தலைக்குள் உச்சிவரையாகும் பகுதியே ஆகாயம் எனப்படும். இந்த ஆகாயத்தில் தான் ஜீவன் இருக்கிறது. ஜீவன் தன்னில் தானே மேலேயிருக்கின்ற இடத்திற்கே ஆகாயமென்று சொல்வது. ஆகாயம் என்பது அதிகம் பிரகாசிக் கின்றதும் மேலே இருக்கின்றதும், காணமுடியாததுமாகும்.   ஜீவன் பிரகாசிக்கின்றது அவனவனில் இருந்தேயாகும். அவனவனின் மேல்பக்கமான சிரசில் இருந்தேயாகும். நமக்குக் காணமுடியாத பொருள் அவனவனின் சிரசேயாகும். பல்வேறு கண்ணாடிகளை உபயோகித்துப் பார்த்தாலும் சிரசு முழுவதையும் ஒரே சமயத்தில் பார்ப்பதற்கு முடியாது. சிரசில் தான் எல்லா சக்தியும் இருக்கிறது. சிரசில்லாவிட்டால் ஆதியும் அந்தமும் ஆகாயமும் இல்லை. நமக்குப் பிரகாசிப்பது சிரசில் இருந்து தான்; பிரகாசிப்பது புருவமத்தியில் இருந்து தான்.


சப்தம்.

ஆகாயமான சிரசில் இருந்து தான் சப்தம் உண்டாகிறது. ஆகாயத்தினால் தான் சப்தம் கேட்கமுடிகிறது.

ஆகாயமான சிரசு இல்லாவிட்டால் சப்தம் உண்டாக்கவோ, கேட்கவோ முடியாது.


புண்ணியம் – பாவம்.

புண்ணிய பாவங்கள் உண்டாவது மனத்திலாகும். அறிவினால் செய்யப்படுவது புண்ணியம். அறிவாயிருக்கின்ற வாயுவினால் பிரம்மரந்திரத்தைத் தாக்கித் தொட்டுக் கொண்டிருப்பதற்கு புண்ணியம் என்று பெயர்.   அறிவில்லாத நிலையில் செய்யப்படுவது பாவம். அறிவாயிருக்கின்ற வாயு உள்வழியே அல்லாமல் வெளியில் போய்த் தீருவதற்கு பாவம் என்று பெயர். சீவனை சிநேகிக்காமல் நம்முடைய ஜீவன் மூக்கின் வழியாகவும் வாயின் வழியாகவும் நானா விஷயங்களிலும் சென்று நசிக்கின்றதற்கே பாவம் என்று பெயர்.   புண்ணியம் நசித்தால் பாவம்.

ஜீவனை நேசியுங்கள்.

ஜீவனை நேசிப்பவர் ஜீவனை வெளியில் விடாமல் உள்ளேயே ஒடுக்கி வைக்கிறார். தன்னைத் தான் சிநேகித்தால் ஜீவன் தன்னை விட்டு வெளியே போகிறதில்லையாதலால் மற்றொன்றை இம்சிக்க வழியில்லை. ஜீவனை வெளியில் விடாமல் தன்னிலேயே மேல்பாகத்தில் நிறுத்தினால் யாதொன் றையும் இம்சை செய்யாமல் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கலாம். அப்பொழுது மட்டுமே ஜீவனை சிநேகித்து வருவதாக சொல்ல முடியும்.


சரீரம்.

இன்ப துன்பங்கள் உண்டாக்குகிறதும் உலகிற்கு ஏக காரணமாயிருக்கின்றதும், விஷயமாயிருக்கின் றதும் சரீரமாகும். ஜடம் சரீரமாகாது. சரீரம் என்னவென்றால் திரவித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது திராவகமாதல். ஜீவசக்தியாயிருக்கின்ற வாயு ஜடத்தில் இருக்கிறவரை ஜடத்தை சரீரம் என்றும், அது இல்லாமல் போனதற்குப்பின் பிணம் என்றும் சொல்கிறார்கள். சரீரம் என்பது ஜீவசக்தியாகிய வாயுவே தான். ஜீவசக்தியாகிய வாயுவே தேகம். தேகமென்றால் தகிக்கப்படுவது என்று பொருள். ஜீவசக்தியாகிய வாயுவே தகிக்கப்படுகிறது. வாயுவில் அக்கினி இருக்கிறது. சப்தம் அக்கினியின் சொரூபமாகும். சப்தம் மூலமாக அக்கினியை வைத்துள்ள ஜீவசக்தியாயிருக்கின்ற வாயு எரிந்து அழிந்து போகிறது. வாயு நசித்துப் போவதால் அதற்கு அதற்கு தேகம் என்று பெயர்.


சிருஷ்டி.

சிருஷ்டி உண்டாவது சம்யோகத்தினாலாகும். எப்போதும் பஞ்சேந்திரங்கள் வழியாக வெளியே போய்க்கொண்டிருக்கின்ற சக்தியானது, சம்யோக சமயத்தில் வெளியே போகாமல் உள்வழியே மேல்

பாகத்தில் தனது உற்பத்தி ஸ்தானமாகிய புருவமத்தியத்திற்குச் சென்று அங்கே நிலையாய் இருக்கிற ஜீவனோடு சேருகிறது. புருவமத்தியில் நிலைத்திருக்கும் ஜீவன் புருஷனாகும். உள்வழியே சென்று சேரும் சக்தி ஸ்திரீயுமாகும். இப்படியுள்ள ஸ்திரீ புருஷ சம்யோகத்தினால், அக்கினி சொருபமாய் இருக்கின்ற சுக்கிலத்தை இளக்கி, அந்த சுக்கிலத்தை மேற்சொன்ன ஜீவன் சக்தியோடு சேர்த்துக் கீழே கொண்டு வந்து சக்தியின் வழியாய் சுக்கிலத்தைக் கொண்டு அந்த ஜீவசக்தியாய் இருக்கின்ற வாயு சிருஷ்டிக்கிறது.

சிருஷ்டி தேகத்தின் வியர்வையில் இருந்தே. வாயுவாயிருக்கின்ற தேகத்தில் அக்கினி அதிகரித்த போது அதிலிருந்து ஆவியாக உற்பவித்த வியர்வை தான் சுக்கிலம்.   இவ்வித சுக்கிலத்தினால் தான் சர்வ சிருஷ்டிகளும் உண்டாகின்றன.   நம் ஜடத்தின் வியர்வையில் சிருஷ்டி உண்டாவதில்லை.


சுக்கிலம்.

குழந்தை பிறந்த போது அக்குழந்தைக்கு சுக்கிலம் விருத்தியாவதில்லை. வளர வளர அதில் அக்கினி அதிகரித்த போது நாளடைவில் சுக்கிலம் விருத்தியாகி காமாதிகள் உண்டாகி வருகின்றன. சுவேதம் என்பது சுயமாக உண்டாகிய வியர்வை.      அந்த சுவேதமாயிருக்கின்ற சுக்கிலம் முதலில் முட்டை யாகின்றது. அந்த முட்டையில் இருந்து தான் உற்பவம். ஆண் பெண் உறவின் போது சுக்கிலம் முட்டை வடிவெடுக்கிறது. சுக்கிலமென்பது ஒரு பசையாகும்.     அந்தப் பசையாய் இருக்கின்ற சுக்கிலத்தை சம்யோக சமயத்தில் ஜீவ சக்தியாயிருக்கின்ற வாயு மூத்திரதுவாரத்தின் வழியாகத் தள்ளிக்கொண்டு வருகிறது. மூத்திர துவாரத்தின் நுனியில் இருந்து கொஞ்சம் நீண்டு அதில் அந்த

ஜீவ சக்தியாகிய வாயு நிறைந்து, அது முட்டை வடிவமாகி மூத்திரதுவாரத்தினின்றும் வேறுபட்டு, கர்ப்பப்பையில் சென்று விழுகிறது. இப்படி எத்தனை துளிகள் மேற்சொன்னபடியுள்ள சக்தியோடு சேர்ந்து வாயு நிறைந்து முட்டை வடிவங்களாய் கர்ப்பப்பையில் விழுகின்றனவோ, அத்தனை குழந்தைகள் உண்டாகின்றன.


மோட்சம்.

ஜீவன் ஈஸ்வரனோடு ஐக்கியமாதலே மோட்சம். மோட்சம் என்றால் விமோசனம்; விடுதலை;

பந்தத்தில் இருந்து விடுதலை. தன்னில் இருக்கின்ற ஜீவன் வெளியில் வியாபித்து விஷயங்களைப் பற்றிப் பிடித்து புலம்பிக் கொண்டிருப்பதே பந்தம்.

தானாகிய சிவன் சக்தியாய் வெளியில் வியாபித்த போது சிவசக்தியாயிற்று. அந்த சக்தியில் இருந்தே சிருஷ்டிகள் உண்டாயின. சிருஷ்டிகளையே சுற்றம், மானம், அவமானம் என இப்படி நாம் பற்றிப் பிடித்து புலம்பிக் கொண்டிருக்கிறோம். இவை நம்மைப் பற்றியிருக்கவில்லை. நாமே பற்றி யிருக்கிறோம். அவ்விதப் பிடிப்பை அதிலிருந்து வேறுபடுத்தி அந்த சக்தியைத் தன்னுள்ளே நடத்தி பிரம்மரந்திரத்தில் லயிக்கச் செய்வதே மோட்சம். தன்னுடைய ஜீவசக்தியை வெளியில் விடாமல் தன்னுள்ளேயே மேல்கதியாக நடத்தி, அந்த ஜீவனால் பிரம்மரந்திரத்தைத் தட்டித் திறக்க வேண்டும். அவ்விதம் செய்து ஜீவன் பிரம்மரந்திரத்தில் லயித்து, தானாகி, தன்மயமாகித் தீருகின்றதே மோட்சம்.

மோட்சம் என்பது ஜீவ ஈஸ்வர ஐக்கியம் ஆகும்.   இதற்கு பிராண அபானன்மார்களை ஐக்கியப் படுத்துவது என்று சொல்லுவது. நம் உள்ளில் இருப்பது பிராணன். வெளியில் போவது அபானன். அப்படி வெளியில் போகின்ற அபானனை வெளியில் போக விடாமல் தடுத்து பிராணனுடன் சேர்த்து உள்ளிலேயே ஒரே கதியாய் நடத்த வேண்டும். அப்படி நடத்துவதற்குத் தான் பிராணாயாமம் என்று பெயர். பிராணாயாமம் என்றால் பிராணனை அபானனாய் வெளியே போகாமல் தடுத்து நிறுத்துவது; பிராணனை நேராகப் போகச் செய்வது; பிராணனை நீட்டுவது என்று பொருள். பிராணாயமத்தால் நமது பிராணன் தூங்கும்போது எவ்விதம் இயங்குமோ அப்படியே தூங்காதிருக்கும் சமயத்திலும் இருக்கும்.


மேல்கதி, கீழ்கதி.

மந்திர உச்சரிப்பாலோ, தியானிப்பதாலோ நம் ஜீவனுக்கு மேல்கதி கிடைப்பதில்லை. ஜீவன் கீழ்கதி யாகத் தான் போகிறது. கீழ்கதியாகிறது எப்படி என்றால் அக்கினி சொரூபமாயிருக்கின்ற சப்த மூலமாக ஜீவனாய் தேகமாயிருக்கின்ற வாயு தன்னில் இருந்து தகித்து கீழ் கதியாய்ப் போகின்றது. அப்போது தான் நாம் செத்துப் போகின்றோம். அவ்விதம் கீழ்கதியாகாமல் மேல்கதி கிடைப்பதற்குத் தான் உபதேசம்.


சரியான கதி.

எந்த வித சேட்டையோ, சப்தமோ இல்லாமல், சுவாசம் உண்டோவென்று அறிவதற்குக் கூட முடியாமல், நெஞ்சுக்குழியில் இருந்தோ அல்லது தொண்டைக்குழியில் இருந்தோ ஒரு துடிப்பு மட்டும் இருக்க மூச்சின் போக்கு வரவு இருந்தால் ஆது தான் சரியான கதி. அந்த கதி தான் நாம் தூங்காத

சமயத்திலும் கிடைக்க வேண்டியது. அதுவே மோட்சத்துக்குரிய மார்க்கம். அந்த கதி வரும்போது ஜீவன் நம்மிலேயே பிரகாசிக்கிறது.

புருவ மத்தியில் லயித்து துர்குணங்களை எப்போது எரிக்கின்றோமோ அப்பொழுது தான் ஞானம் உண்டாகின்றது. சதா பிராணாயாமிக்கு வியாதியே இல்லை.


உபதேசம்.

உபதேசம் என்பது சமீபஸ்தானம். ஜீவன் உள்ளிருக்கிறது.   ஜீவனுடைய ஸ்தானம் மேல்பாகம்.

உள்ளிருக்கின்ற ஜீவனுடைய மார்க்கத்தைத் தான் நன்றாக்க வேண்டியது. இதற்குத் தான் ஜீவனுக்கு மேல்கதி கிடைக்கவேண்டுமென்று சொல்வது. அது எவ்விதமென்றால் தனதுள்ளில் வியாபித்திருக் கின்ற ஜீவனை உள்ளிலுள்ள மார்க்கத்தை நன்றாக்கி, அதன் வழியே ஒரே கதியாக நடத்த வேண்டும். அந்த விதத்தில் தான் ஜீவனுக்கு கதி வருகிறது.


பிறப்பு உண்டு – இறப்பு இல்லை.

பிறப்பு உண்டு என்றால் இறப்பும் உண்டு என்று எண்ணுவது தவறு. இறக்காமல் இருப்பதற்கு வழி

உண்டு. நான் என்று சொல்லப்பட்ட நிலைமையையும் உலகத்தையும் மறந்து தன்னுடைய ஜீவனை உள்ளில் அடக்கம் செய்யும் மார்க்கத்தைப் பிடித்து ஜீவனை நம்முள்ளில் அடக்கம் செய்தால் நாம் செத்துப் போக வழியில்லை. நமக்கு இறப்பில்லை.


பஞ்சபூதங்கள்.

பஞ்சபூதங்கள் தன்னில் தானே இருக்கின்றதாகும். அவைகள்:

(1) ஆகாயம் எனும் சதாசிவனான ஜோதி.   அது புருவ மத்தியத்திற்கு மேல் சிரசின் அடிவரை உள்ளது.

(2) சிவனாயிருக்கின்ற ஜீவசத்தியான வாயு. அது ஜோதியில் இருந்து கீழ்பாகாமாய் புருவ மத்தியம் வரை இருக்கிறது.

(3) புருவமத்தியத்தின் கீழ் நாசிவரை இருப்பது தேஜசான அக்கினி. இது ருத்திரனாகும்.

(4) நாசியில் இருந்து நாசி நுனி வரை கீழ்பாகமாய், ஜல அம்சமாய், விஷ்ணுவாய் இருப்பது மனம்.

(5) நாசியின் கீழ்புறம் பிருத்வியாய் இருப்பது பிரம்மா.


தானாகிய சதாசிவனாய் இருக்கின்ற ஜோதி சலித்து, வியாபித்து

ஜீவ சக்தியாகிய வாயுவாகி, தேயுவாகிய அக்கினியாகி, ஜலமாகிய மனமாய், பிருத்வியாகிய அகங்காரமாய் வந்ததாகும். அப்பொழுது தான் உலகம் உண்டானது.

பஞ்சபூதங்கள் எல்லாம் அக்ஷரத்திலிருந்து உற்பத்தியானது.   அக்ஷரம் என்பது தானாய் இருக்கின்ற பிரம்மம். அது நாசமில்லாத வஸ்து.   அந்த பிரம்மமே காலியாயிருக்கின்ற ஆகாயம் ஆயிற்று. அப்பொழுது அத்துடன் ஐந்து குணங்களும் உண்டாயின. அந்த ஐந்து குணங்களாயிருக்கின்ற பஞ்ச பூதங்கள் இருந்தால் மட்டுமே சிருஷ்டிக்க முடியும்.   சிருஷ்டி உண்டாவது சம்யோகத்தினால்.



தன்னைத்தான் அப்பியசிக்கின்றதுவே அக்ஷராப்பியாசம். தானாக இருக்கின்ற பொருளை அப்பியசிக்கும் பொழுது நாசமில்லாதவராகிறோம். அப்பொழுது தான் அவனவனிலிருக்கின்ற தாதுவிற்கு உணர்வு உண்டாகிப் பொருள் கிடைக்கிறது.

உள்தான் முதலில் உண்டானது. அது நிரம்பவும் சிறியது.
வெளியோ மிகவும் பெரியது. சிறியதில் இருந்து தான் பெரியது உண்டாயிற்று.

வெளி என்பது அசத்தியம்; இல்லாதது. ஆகையால் நாம் படித்ததும், படிக்கின்றதும், படிப்பிக் கின்றதும், செய்கிறதும் முதலியன எல்லாம் பொய்யாகின்றன.   இது வெறும் புத்தக ஞானம்.

சத்தியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் உள்ளில் படிக்க வேண்டும். நம் உள்ளிலிருந்து வெளியே வந்த ஜீவனைத் திருப்பி உள்ளில் கொண்டு போய்ப் பார்க்கும் பொழுது தான் சத்தியத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அப்பொழுது தான் ஞானம் உண்டாகிறது. அதற்கே மத்தக ஞானம் என்று பெயர்.


விசேஷபுத்தி.

ஜீவன் ஒன்றே ஒன்று தான்.   எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கும் ஜீவன் ஒன்றே தான். எனவே உருவ வித்தியாசத்தால் வேறுபடுத்தி உயர்ந்தது, தாழ்ந்தது என்று சொல்லக்கூடாது.

நமக்கு விசேஷ புத்தி இல்லை. மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் விசேஷ புத்தியும் அறிவும் உள்ளது. நாலுகாலி முதலான ஜீவிகளை மனிதரென்று தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் அவற்றிற்கு விசேஷபுத்தி உண்டு. அறிவாயிருக்கின்ற வஸ்துவாகிய வாயு அவற்றிற்கு சுவாதீனமாகும். சுவாசகதி நாலுகாலிகளுக்கு சதாகாலமும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. அறிவாய் ஜீவசக்தியாகிய வாயு எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதால் எல்லா நிலைமைகளும் சுவாதீனமாய் வருகின்றன. எனவே விருப்பு வெறுப்பான ராகத்துவேஷாதிகள் அவைகளுக்கு இல்லை.

நாம் இருகாலிகள்.   நமக்கு விசேஷ புத்தி இல்லை. நாம் உறங்கும்போது வாயு ஏக கதியாகவும், விழித்ததும் பின்னகதியாகவும் வேறுபடுகிறது. இந்த வேறுபாட்டால் ராகத்துவேஷாதிகள் உண்டாகி விருப்பு வெறுப்புகளால் கெட்ட எண்ணங்களும் மிருகங்களாகி நடக்கிறோம். அதனால் நமக்கு விசேஷ அறிவு இல்லாமல் போகிறது.

மற்ற ஜீவராசிகள் அவைகளின் மொழிகளைப் புரிந்து கொள்வதோடு மனிதனின் மொழிகளை யும் புரிந்து கொள்ளுகின்றன. எவ்வளவு காலம் பழகியபோதும் மனிதன் மற்ற ஜீவராசிகளின் மொழி களைப் புரிந்து கொள்ளுவதில்லை.

பறவைகள் தன் குஞ்சுகளுக்கு சுயமாக இரை தேட சுய சக்தி வரும்வரை உணவைக் கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன, குஞ்சுகளுக்கு இரைதேட கற்றுக் கொடுக்கின்றன. சுயசக்தி குஞ்சுகளுக்கு உண்டான பிறகு, அவைகளுக்கு உணவு ஊட்டுவதை விட்டு, அதுவரை இருந்த பற்றை விட்டு, தன் குஞ்சுகளை சமபாவனையில் நடத்துகின்றன. அவைகளினிடையே அம்மா, அப்பா, குஞ்சு

என்ற பந்தம் இல்லை. இது அவைகளின் விசேஷ சக்தி.

மனிதன் அப்படி இல்லை. குழந்தைகள் வளர்ந்த பிறகும் கூட பந்தம் விடாமல், பற்று விடாமல் அவர்களுக்கு சொத்து சேர்க்கிறான். தேவையுள்ள பிறருக்கு கொடுக்க மறுக்கிறான். விருப்பு, வெறுப்போடே வாழ்கிறான். இவனுக்கு விசேஷ அறிவு இல்லை.


புருஷனும் சக்தியும்.

எப்பொழுது ஜீவன் அடங்குகிறதோ அப்பொழுது ஜீவன் புருஷன் ஆகிறது. புருஷன் என்பது ஜீவனாய்

இருக்கின்ற சிவன். புருஷபிரகிருதி என்பது புருஷன் வீட்டிலிருந்து வெளியினுள் சக்தியாய் மாறுவது ஆகும்.

எப்பொழுது ஜீவன் தூக்கம்விழித்து உள்ளேயிருந்து சிவசக்தியாய் வெளியே வியாபிக்கின்றதோ அப்போது சிவசக்தி எனப்படுகிறது. சக்தி என்பது ஸ்திரீயாய் இருக்கின்ற பிரகிருதி. அதாவது மாயை.

மாயையான சக்தியிலிருந்து தோன்றுவது மனம். அதாவது விஷ்ணு. மனமாகிய விஷ்ணுவிலிருந்து

“நான்” எனும் அலியான அகங்காரம் உற்பத்தியாகிறது. அகங்காரமே பிரம்மா. பிரம்மா மனம் என்ற சக்தி கொண்டு சிருஷ்டிக்கிறது.


கர்ப்பம்.

புருஷன் சுக்கிலத்தை வெளியில் விடாமல், பெண்ணின் கருப்பையில் பத்திரம் செய்து விருத்தியாக்கு கின்றது. அப்பொழுதாகும் கர்ப்பம் தரித்தது. கர்ப்பம் தரிக்கின்றதும் புருஷன். பிரசவிக்கிறதும் புருஷன். புருஷன் தரிக்கின்ற கர்ப்பத்தை ஸ்திரீகளின் கருப்பையில் புணர்ச்சி செய்து தளர்ச்சியாக்கி அந்த தளர்ச்சியில் வித்தாகிய சுக்கிலத்தை புருஷன் பிரசவிக்கின்றான். அந்த சுக்கிலத்தில் இருந்து பிரகிருதி மனித உருவுடன் உருவாகின்றது. புருஷர் என்று சொல்லுகின்றவரில் அடங்கியிருக்கின்ற

சுக்கிலத்தில் இருந்து மனித உரு உற்பத்தியானால் புருஷ உருவமும், ஸ்திரீயின் சுக்கிலத்தில் இருந்து மனித உரு உற்பத்தியானால் ஸ்திரீயின் உருவமும் உண்டாகின்றன. புருஷனுக்கு சுக்கிலம் உள்ளது போல் ஸ்திரீக்கும் சுக்கிலம் உண்டு. ஸ்திரீயின் உடலிலும் ஆணின் மூத்திரக்குழாய்க்கு சமமான ஒரு கருவி உண்டு. அதன் வழியே தான் மூத்திரமும் சுக்கிலமும் வருகின்றன. பெண்ணின் குழாய்க்கு கீழே கர்ப்பப்பை உள்ளது. அது புணர்ச்சி காலத்தில் வாயுவினால் திறக்கப்படுகிறது. அது திறந்த சமயம் புருஷனின் சுக்கிலமோ, ஸ்திரீயின் சுக்கிலமோ அல்லது இரண்டுமோ முட்டை வடிவாகச் சென்று கர்ப்பப்பையில் விழுகிறது. அது பெரிதாகி, முதிர்ந்து உடைந்து உருவம் பெறுகிறது.

புணர்ச்சியின் போது பெண்களுக்கு முதலில் சுரதம் எனும் நீரும், இரண்டாவதாக சுரோணிதம் எனும் ரத்தமும், மூன்றாவதாக வீரியமாக இருக்கின்ற சுக்கிலமும் மூன்று விதமான முறையில் இளகி

வருகின்றன. இவை மூன்றும் தனித் தனியாய் வருவதால் இவர்களது சுக்கிலம் கெட்டியாக இருக்கும்.

புணர்ச்சியின் போது ஆண்களுக்கு சுரதம், சுரோணிதம், சுக்கிலம் மூன்றும் தனித்தனியாக

இல்லாமல் ஒன்றாய்ச் சேர்ந்து வருவதால், அது மிருதுவாயும், இளகலாயும் இருக்கும். புணர்ச்சியின்

போது சுக்கிலம் முட்டை வடிவமாக விழுந்தால் தான் சிசுவாக உருவாகும். சுக்கிலம் முட்டை வடிவமாக விழாவிட்டால் அது சுரோணிதத்தில் விழுந்து அதோடு கரைந்து விடும்.


ஞானம்.

ஸ்திரீயும் புருஷனும் தங்களுடைய சுக்கிலத்தை ஊதிக்கட்டி நிறுத்தும்போது தான் ஞானம் உண்டாகின்றது. அதை ஊதிக்கட்டி நிறுத்தும் பொழுது சுக்கிலம் மணியாகும். அதற்கு ரசமணி என்று சொல்வது. ரசம் சுக்கிலமாகும். வாதம் வாயுவாகும். அந்த சுக்கிலத்தை ஊதிக் கட்டி நிறுத்துவதையே ரசவாதம் என்று சொல்வது. ஆதனால் நம்முடைய ஜீவசக்தி வாயு வடிவாய் வெளியே போய் நசிப்பதை அப்படியே நசிக்கவிடாமல் நம் உள்வழியாய் மேலும் கீழும் ஊதி சுக்கிலத்தைக் கட்டி நிறுத்த வேண்டும். அப்பொழுதாகும் நமக்குப் பிறவி பெரும் பயன் கிடைப்பது.


நாம் இருப்பது தூக்க நிலையில்.

தூங்கும் பொழுது நான் இப்பொழுது தூங்குகிறேன் என்ற நினைவு நமக்கு இல்லை. அப்படித் தூங்கு வதால் தான் நான் இப்பொழுது தூங்குகிறேன் என்ற நினவு இல்லாமலாயிற்று. இது தூக்கமாகும். அப்படியே தான் இப்போதைய நமது நிலைமை. இப்போது நாம் கேட்பதும், காண்பதும், அறிவது மாகிய யாவும் சொப்பனமாகும். இந்தத் தூக்கம் எப்பொழுது தெளிகின்றதோ அப்பொழுது மட்டுமே, நான் இதுவரை தூங்கிக் கொண்டிருந்தேன் என்றும், அப்பொழுது பார்த்ததெல்லாம் சொப்பனமாய் இருந்தது என்றும் புலப்படுகின்றது.

          காணப்படும் இவ்வுலகம் ஒரு ஜடமாகும். காணப்படும் இவ்வுலகம் நமக்கு ஒரு தொழிற்சாலை யாகும். நீர் சாதாரணமாகத் தூங்குகிறேனென்று சொல்லும் சமயம் தொழிற்சாலையை விட்டு சொந்த வீட்டில் இருக்கின்ற சமயம். இப்போது வீட்டில் இருப்பதால் தொழிற்சாலையை விட்டு விலகி இருப்ப தால் இது தொழில் விட்ட சமயமாகும். இது தூக்கமன்று. இது மனம் வேலையை விட்ட சமயம் . விழிப்பு நிலையில் தொழிற்சாலையில் இருக்கும் பொழுது மனம் வேலை செய்து கொண்டிருக்கிறது.

இது மனம் வேலையை விடாத சமயம். மனம் தன் தொழிலை விட்டு சொந்த வீட்டில் இருக்கும் பொழுது தன்னால் அறியப்பட்டதும், காணப்பட்டதும், கேட்கப்பட்டதும் பற்றி ஆலோசிக்கும்.

நிலைமை சொப்பனம் அன்று. அது இப்பொழுது அனுபவிக்கின்றதாகும். இது மனம் ஆலோசிக்கும் நிலை.   இந்த உலக வாழ்வே மாயை எனும் தூக்கமாகும். இங்கு நடைபெறும் அனைத்தும் சொப்பன மாகும். இந்தத் தூக்கமும் சொப்பனமும் அல்லாமல் வேறு நீர் தூங்குவதோ, காணுவதோ இல்லை.


தூக்கம்.

தூக்கம் என்று சொல்லுவது அறிவை அறியாமல் இருப்பதற்காகும். அறிவாயிருப்பது தானாயிருக்கின்ற ஜீவன். அறியாமல் இருப்பது மாயை எனப்படும். நாம் எல்லோரும் மாயையாகிய தூக்கத்தில் இருக்கி றோம். இவ்வுலக நிலை அனைத்தும் மாயையாகிய தூக்கத்தில் அனுபவிக்கின்ற சொப்பனமாகும். எப்பொழுது மாயையாயிருக்கின்ற தூக்கம் தெளிகின்றதோ அப்பொழுது உணர்வு உண்டாகும். அந்த உணர்வாகும் “ஜாக்கிரதை”.

அநித்தியமாகி, என்னுடையதென்றும் உன்னுடையதென்றும், மற்றுமுள்ள ராகத்துவேஷங் களான எண்ணங்களை விட்டு நித்தியமாயுள்ள தன்னைத் தான் அறிகின்ற நிலைமை “ஜாக்கிரதை உணர்வு” ஆகும். அப்பொழுது மட்டுமே ஜாக்கிரதை நிலை உண்டு. உலக நிலையில் ‘ஜாக்கிரதை’ எப்போதும் இல்லை.


கர்மம்.

கர்மத்தின் பொருள் தொழில் என்பது தவறு. கர்மம் என்ற சொல்லின் அர்த்தம் ‘பொருள், வஸ்து” என்பதே. கர்மம் இல்லையானால் ஒன்றுமில்லை. எல்லாம் கர்மமாகும் என்று சொல்லுவதன் பொருள்

எல்லாம் அந்த வஸ்துவேயாகும்; எல்லாம் அந்த பொருளேயாகும் என்பதே. ஜீவ சக்தியாயிருக்கின்ற வாயுவே அந்தப் பொருள். அந்த வாயு எனும் கர்மா எனும் பொருள் இல்லையானால் ஒன்றுமில்லை.

அந்த வாயுவினால், கர்மத்தினால் பந்திக்கப்பட்டதே உலகம்.

கர்மமாயிருக்கின்ற வாயு வெளியில் வியாபித்து நானாவித எண்ணங்கள் தட்டுப்படுவதால்

பந்தப்படுகிறது. கர்மம் செய்தாலே மோட்சம் என்பது கர்மமான வாயுவைத் தன்னில் தானே லயிக்கச் செய்யும் போது மோட்ச நிலைமை அடைகிறது.

செத்த போது உடலில் வாயு கதாகதம் செய்வதில்லை. அதனால் வாயு அற்றுப் போகிறது. எனவே கர்மம் அற்றுப் போகிறது. உறங்கும் போது உடலில் வாயு கதாகதம் செய்கிறது. எனவே அவனுக்கு கர்மம் அற்றுப் போகவில்லை. ஒருவனை உலகோடு கட்டியிருப்பது வாயுவே. வாயுவே உலகபந்தம் ஏற்படுத்தி உள்ளது. எனவே வாயு பந்தமாகிய கர்ம பந்தமே உலகைக் கட்டிப் போட்டதாக சொல்லுவது.   கர்மம் இல்லையானால் ஒரு நிமிஷங்கூட இருக்க முடியாது என்பதே.

கர்மயோகம்.   கர்மம் என்பது வாயு.   யோகம் என்பது சேர்க்கை. கர்ம யோகம் என்பது வாயுவின் சேர்க்கை. வாயுவானது அதன் உற்பத்தி ஸ்தானமாய், ஆகாயமாய் இருக்கின்ற பிரம்மரந் திரத்தில் சேருவதாகும் கர்மயோகம். கர்மயோகம் ஞானம் தரும்.


பிரம்ம அண்டம்.

பிரம்ம அண்டம் எனப்படும் பிரம்மாண்டம் என்பது பிரம்ம சொரூபமாகிய சுக்கிலமிருக்கின்ற சிரசிற்

கேயாகும். அச்சிரசில் இருந்து ஜீவசக்தியாய், பரமாத்மாவாய் இருக்கின்ற வாயு இயற்கையாய் இருக்கின்ற மாயா சொரூபமாய் வெளியில் தள்ளிக் கொண்டு வந்ததாகும் நாம் காணுகின்ற இவ்வுலகம்.

காணுகின்ற இவ்வுலகம் பிண்டாண்டம். அப்பிண்டாண்டமாய் இருக்கின்ற உலகம் பிரம்மாண்டத்தில் இருந்து முட்டை வடிவமாய் உற்பத்தியான பொழுது “நான்” என்ற அகங்காரம் உண்டாயிற்று. அந்த அகங்காரத்திற்கே “பிரம்மா” என்று பெயர். அவனவன் தானேயாகும் பிரம்மா.

          பிரம்மா என்பது தேகமல்லாமல் இருக்கின்ற இந்த ஜடத்தை தேகமென்று அபிமானித்துக் கொண்டிருக்கிற அகங்காரமாகும். பிரம்மா சிருஷ்டிகர்த்தா அல்ல. ஜீவ சக்தியாயிருக்கின்ற வாயுவே

சிருஷ்டிகர்த்தா. பிரம்மாவின் நான்கு முகங்கள் என்பது மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் நான்கு அறிவுகளாகும். மனம், சித்தம், புத்தி, அகங்காரம் முதலான நான்கு முகங்களோடு கூடிய “நானே”

பிரம்மா.


உலகம்.

உலகம் ஜீவனில் இருந்து உண்டாகிறது. ஜீவன் உலகத்தின் முகமாகின்றது. முகமே ஜீவனாகிறது, அறிவாகிறது. ஜீவனாய், அறிவாய் இருக்கின்ற முகம் நான்கு அறிவுகளாயிருக்கின்ற முகங்கள் ஆகின்றன. அவையே மனம், சித்தம், புத்தி, அகங்காரம். இவையே பிரம்மாவின் நான்கு முகங்களா கின்றன. இந்த நான்கும் இல்லாவிட்டால் சிருஷ்டி இல்லை. உண்டாக்குவது ‘நான்’ எனும் அகங்காரம் தான்.  குழந்தைகளுக்கு மனம், சித்தம், புத்தி இருப்பினும் அகங்காரம் எனும் நான் பூர்த்தியாகாததால் யாதொன்றையும் அவர்கள் உருவாக்க முடிவதில்லை. வயதான காலத்தில், உடல் நலமில்லாத சமயத்தில் ‘நான்’ எனும் அகங்காரத்தின் சக்தி குறைந்து போய்விடுவதால் அப்போதும் எதையும் உண்டாக்க முடிவதில்லை.     உலகம் உம்மிலாகும். உலகம் உம்மிலிருந்து உண்டானது. நம்மில் இருக்கின்ற மனம் புகையாகி வெளியே பரவிற்று. அந்த மனமாகிய புகையில் தான் நாம் இப்பொழுது இருக்கின்றோம். அது எவ்விதமென்றால் பாத்திரத்தில் இருந்த புகை வெளியே பரவி, பின் புகையில் பாத்திரம் இருப்பது போல் தோன்றுவது போல, நம்மிலிருந்து வெளியே பரவிய மனமாகிய புகையில் நாம் இருக்கின்றதனால் தான் உலகில் நாம் இருக்கின்றதாகத் தோன்றுகிறது.

மனமாகிய புகை ஜீவனாயிருக்கும் அக்கினியில் இருந்து உண்டானது. ஜீவனாகிய அக்கினி இல்லையேல் மனமாகிய புகையில்லை. எனவே நாம் இல்லையானால் நமக்கு உலகமில்லை. தன்னில் இருக்கின்ற சத்தாகிய ஜீவன் மனமாகிய புகையாகி வெளியினுள்ளில் போய்த் தீரும் பொழுது

ஜீவனாகிய சத்து தீர்ந்து போகிறது. அதையே செத்துப் போகிறது என்று சொல்வது.


சரஸ்வதி.

சப்த சொரூபமாகிய சக்தியாலேயே இக்காணப்படுகின்ற எல்லா நிலைமைகளும் உண்டாயின. ஸ்திரீயாகிய சப்தத்தை உண்டாக்குவதற்குக் காரணமாயிருப்பது “நாவு” என்பதால் நாவுக்குப் பெயர் சரஸ்வதி ஆயிற்று. சப்தத்திற்கு சரஸ்வதி என்று பெயர். சரஸ்வதி எனப்படுவது நாக்காகும். அகங்காரமாயிருக்கின்ற ஜடம் இல்லாவிட்டால் நாவு இல்லை.

ஜடத்தில் நாவு உண்டானதால் – ஜடமாகிய பிரம்மாவிற்கு சரஸ்வதி மகளாக சொல்லப்படு கிறது. பிரம்மா தன்னில் இருந்து உண்டாகிய மகளாயிருக்கின்ற நாவைப் புணர்ச்சி செய்து அந்த நாவினை மேலும் கீழும் தட்டி சப்தம் உண்டாக்கி பேச்சாயிருக்கின்ற தொழிலை உண்டாக்குகிறது. இதனால் தான் சரஸ்வதி பிரம்மாவிற்கு மனைவி என்று சொல்லுவது.            சப்தம் இல்லாவிட்டால் யாதொன்றுமில்லை. நான் என்கிற நிலைமையும் இல்லை. நான் என்கிற நிலைமை சப்தத்தில் இருந்தே பிறந்ததால் சப்தம் ‘நான்’ என்கிற நிலைமைக்குத் தாயார் ஆகின்றது. அதனால் சரஸ்வதி பிரம்மாவின் தாயாக சொல்லப்படுகிறது. தன்னில் இருந்து முதலில் ‘நான்’ உண்டாகியது. அதன்பின் தன்னில் இருந்தே சப்தம் உண்டாகியது. முதலில் நானும் பின் சப்தமும் தன்னில் இருந்தே உண்டாகியதால் பின்பு உண்டாகிய சரஸ்வதி (சப்தம்) முன்பு உண்டாகிய ’நானுக்கு’ சகோதரி (தங்கை) ஆயிற்று.


விஷ்ணு.

பிரம்ம, சரஸ்வதி இருவரது உற்பத்தியும் மனத்தின் உற்பத்தியாகும். அந்த மனம் விஷ்ணுவாகும். விஷ்ணுவாகிய மனம் உலகத்தை உற்பத்தி செய்து ஆண்டு கொண்டிருக்கிறது. மனமாகிய விஷ்ணு இல்லையேல் உலகம் இல்லை. உறங்கும் போது உலகம் இல்லை. விழிக்கும் போது விஷ்ணுவாகிய மனம் முட்டை வடிவில் வெளியில் வருகிறது. அப்பொழுது விஸ்வமாகிய உலகு தோன்றுகிறது. தன் ஜீவ சக்தி உள்ளே லயிக்காமல் வெளியில் பிரதிபிம்பித்துக் காணுகிறதே நாம் காணும், கேட்கும், அறியும் எல்லா நிலைமைகளும்.

மனமாகிய விஷ்ணு சுக்கிலமாகும். விஷ்ணுவின் குணம் ரஜோ குணம். ரட்சிக்கும் குணம். மனம் இல்லையென்றால் சம்யோகமாகிய புணர்ச்சி ஆசை எழுவது இல்லை. அகங்காரம் இல்லை யென்றால் சம்யோகமாகிய புணர்ச்சி செயல் நிகழ்வது இல்லை. மனமாகிய சுக்கிலம் நிமித்தம்

அகங்காரமாயிருக்கின்ற பிரம்மா, சம்யோகமாகிய தொழிலினால், மேற்சொன்ன ரஜோகுணமாகிய சுக்கிலத்தைக் கொண்டு சிருஷ்டிக்கிறது.


முக்குணங்கள் – மும்மூர்த்திகள்

சாத்வீகம், ராஜசம், தாமசம் என்பது முக்குணங்களாகும். சாத்வீகம் என்பது ஜீவன் (சிவன்) ஆகும்.

ராஜசம் என்பது சாத்வீகமாயிருக்கின்ற ஜீவனில் இருந்து உண்டாகிய மனம் (விஷ்ணு) ஆகும்.

தாமசம் என்பது ராஜசமாய் இருக்கின்ற மனத்தில் இருந்து உண்டாயிருக்கின்ற அகங்காரம் (பிரம்மா)

ஆகும். இதாகும் முக்குணங்கள் மற்றும் மும்மூர்த்திகள்.

பிரம்மா தாமச குணம். மனமாகிய விஷ்ணுவில் இருந்தே தாமச குணமாகிய பிரம்மா உற்பத்தியாகிறது.

மனமாகிய விஷ்ணு ரஜோகுணம். பரிபாலனகர்த்தா. விஷ்ணு அலங்காரப் பிரியன். விஷ்ணு விடம் மனம் எனும் அலங்காரம் உண்டு. அதில் அழுக்குமுண்டு. அலங்கார நிலையில் மகிழ்வும் அலங்காரமற்ற நிலையில் மகிழ்ச்சியின்மையும் மனதுக்கு உண்டு.        அதாவது இன்ப துன்பம் உண்டு.

சிவன் மெளனி. சாத்வீக குணம். சிவன் அபிஷேகப் பிரியன். சதா காலமும் அபிஷேகம் நடப்பதால் அழுக்கில்லை – களங்கமில்லை. இன்ப துன்பம் இல்லை. அமைதி, சாந்தி நிலைக்கிறது. சிவனாயிருக்கின்ற ஜீவன் இரக்ஷகர்த்தா. ருத்திரனாக சிவன் பிறந்து நம்மைக் கொல்வதில்லை.

நம்மில் இருக்கின்ற ஜீவனாய், வாயுவாய், பிரகாசமாய் இருக்கின்ற பொருள் அகங்காரம் நிமித்தம் தன்னைத் தான் அறியாமல் முன் சொல்லிய துரபிமானமாகிய விசாரங்களால் நசித்துப் போகிறதாகும் சம்ஹாரம் என்பது.

பரிபலனம் செய்யும் ராஜாவான விஷ்ணுவை பிரஜைகள் பூஜித்து வருகிறார்கள். ராஜாவும், பிரஜைகளும் சந்நியாசிகளாகிய உலக குருக்களை – சாத்வீகத்தை – சிவனைப் பூஜித்து வருகிறார்கள்.

உலகில் ரஜோகுணத்தையும் (விஷ்ணுவையும்) சாத்வீக குணத்தையும் (சிவனையும்) மட்டுமே பூஜிக் கிறார்கள்.   ராகத்துவேஷாதியாக நடக்கும் தாமச குணத்தை (பிரம்மாவை) எவரும் பூஜிப்பதில்லை. அதனாலேயே பிரம்மாவுக்கு (அகங்காரத்துக்கு) கோயில்கள் அதிகம் இல்லை.

மும்மூர்த்திகளாகி இப்படியாக இருக்கின்ற முக்குணங்களும் ஒன்றாய்ச் சேர்ந்து உற்பத்தி ஸ்தானமாகிய ஆகாசத்தில் எப்பொழுது லயிக்கின்றதோ அப்பொழுது திரிகுண ரகிதமாய், திருகுணா தீதமாய்த் தீருகிறதே மோட்சம்.


ஒரே பொருள் – பல பெயர்கள் – பல மாற்றங்கள்.

அக்ஷரம் என்பது தானாயுள்ள பொருள். அது மாறி ஆகாயம் (ஜோதி, சதாசிவன்) ஆகிறது. அதில் சலனம் உண்டானபின் அதுவே ஜீவன் (ஆத்மாவாய், சைதன்யமாய், தேகமாய்) ஆகிறது. தேகத்திலிருந்து ஆவியாய், வியர்வையாய், அக்கினி சொரூப சுக்கிலம் உண்டாகிறது. சுக்கிலமே மனமாகும்; நீர் அம்சமான விஷ்ணு ஆகும்; சக்தியாகும். சக்தியே சுக்கிலமாகும். சக்தியில் இருந்தே சிருஷ்டி, சம்ஹாரம், ஸ்திதி உண்டானது. சக்தி இல்லையேல் சிருஷ்டி இல்லை. பிரம்மாண்டம் எனப்படும் சிரசே சுக்கிலமாயிருக்கின்ற சுவேதஜமாகும்.

சமுத்திரத்தில் உண்டாயிருந்த ஜலமே அலைகளாகவும், நுரைகளாகவும், நீர்க்குமிழிகளாகவும்

நிலை மாறி ஜலத்தின் மீது கிடப்பதாகும். அலை, நுரை, நீர்க்குமிழி எல்லாம் சமுத்திரத்தில் முன்பு ஜலமாய்த் தான் இருந்தது. ஜலம் இல்லையென்றால் இவையாவும் இல்லை. இது போலவே ஆகாயத்தில் ஜீவ சக்தியாயிருக்கின்ற வாயு உண்டானதால் மாயா சமுத்திரம் என்றும், அந்த மாயா சமுத்திரத்திலே வாயுவின் அலைகளினுடைய சலனத்தின் நிமித்தம் நுரையாகின்ற மனமும், அகங்காரமாயிருக்கின்ற நீர்க்குமிழியும் உண்டாயிற்று.   எப்படி ஜலம் நுரையாகவும்நீர்க்குமிழியாகவும் உண்டாயிற்றோ அப்படியே தான் ஜீவசக்தியாயிருக்கின்ற வாயு, மனமாகவும் அகங்காரமாகவும் உண்டானதாகும். எப்படி நீர்க்குமிழி ஜலத்தின் மீது கிடந்திருந்ததோ அப்படியே அகங்காரமாயிருக் கின்ற குமிழியும் ஜீவசக்தியாகிய வாயுவிலேயே வாயுவின் மீது கிடக்கின்றது.

அகங்காரம் பளிங்கு நிறமானதால் (ஜீவன்) அதில் கூடி பிரதிபிம்பித்து, தான் யாரென்றறியாமல் “நான் எல்லாவற்றுக்கும் மேலாகும். சர்வமும் எனக்கும் கீழாகும்.” என்று துரபிமானித்துக் கிடக்கின்றது.

நீர்க்குமிழி ஒரு நிமிஷ நேரத்திலேயே உடைந்து அது உண்டான ஜலத்தியே லயித்துப் போவது போல, அகங்காரமாய் இருக்கின்ற குமிழிகள் தன்னைத் தானே அறியாமல் அபிமானித்து, கொஞ்ச நேரத்திலேயே உடைந்து அவை உண்டான ஜீவ சக்தியாகிய வாயுவில் தானே லயிக்கின்றன. ஒரே

வஸ்துவே இப்படியெல்லாம் மாற்றம் பெற்றதால் மாறுதல்களுக்கு ஏற்ப அதைப் பல பெயர்களால் அழைக்க நேரிட்டது.


மூன்று தேகங்கள்.

ஜடம் தேகமல்ல.   ஜடத்தை ஸ்தூலதேகம் என்று சொல்லக் கூடாது. வாயு தான் தேகம். ஸ்தூலம் என்பது ஜீவன்.   சூக்குமம் என்பது ஜீவனின் சலனமாயிருக்கின்ற சக்தியாகிய மனம். காரணம் என்பது மனதில் இருந்து உண்டான மாயையாகிய அகங்காரம். எப்பொழுது தனது உண்மையான ஜீவனாய் இருக்கின்ற ஸ்தூலத்தை அறிகிறோமோ அப்பொழுது சூக்குமமும் காரணமும் இல்லை.

இப்பொழுது நாம் காரணமாயிருக்கின்ற சுழுத்தியில் அதாவது மாயையாயிருக்கின்ற, அகங்கார மாயிருக்கின்ற தூக்கத்தில் இருக்கிறோம் என்பதால் நாம் அனுபவிக்கிறோம் என்று தோன்றுவதெல் லாம் சொப்பனமாகும். அப்படியுள்ள சொப்பனத்திலானது கொண்டாகும் ஸ்தூல, சூக்கும, காரணம் என்கிற தோற்றம் உண்டானது. நாம் இருப்பது தூக்கத்தில் ஆனபடியால் எல்லாமே சொப்பனமே தவிர இம்மூன்று நிலைகள் இல்லை.

தானும் தன்னில் இருந்து உண்டான மாயையும் நித்தியமும் அநித்தியமும் ஆகும்.

நித்தியமாயிருக்கின்ற “தான்” அநித்தியமாயிருக்கின்ற மாயையில் கலந்திருக்கிறது. மாயையில் லயித்துக் கிடக்கின்ற தன்னை அறிய வேண்டுமென்றால் மாயையைச் சுண்டச் செய்ய வேண்டும். மாயையாய் இருக்கும் உலகைச் சுண்டச் செய்ய விவேகம் என்ற அக்கினி வேண்டும்.


நித்தியாநித்திய வஸ்து விளக்கம்.

இந்த உலகம் உண்டானது என்னில் இருந்தாகும். நான் காணும் எல்லா நிலைமைகளும் என்னுடைய உள்ளில் இருக்கின்றதாகும். என் ஊர், உறவு, பந்தம் எல்லாம் என் உள் உள்ளதாகும். இவை யாதொன்றும், “நான்” என்றுள்ள நிலைமையும் நித்தியமல்ல. அநித்தியமேயாகும். இவ்வளவு பெரிதாயிருக்கின்ற உலகத்தோடு கூடி “நான் என்கிற அகங்காரம்” உண்டானது மனமாயிருக்கின்ற சக்தியில் இருந்தாகும். தன்னைத் தானே அபிமானமாயிருக்கும் அகங்காரம் நசிப்பதாகும்.   தானாய்

இருக்கின்ற சிவனுடைய சக்தியாகும் மனம். மனம் ஜீவனின் சக்தி. மனமே சக்தி. மனமே சிவசக்தி.

தானாகும் சதாசிவன் à சிவன் à ஜீவன் à மனம் (சக்தி, சிவசக்தி) à அகங்காரம்.

அந்த சக்தியான மனதையாகும் தன்னிலடக்க வேண்டியது. அதனால் மேற்சொன்னவாறு விசாரணை செய்து தன்னுடைய சக்தி இன்னதென்று அறிந்து அந்த சக்தியை வெளியினுள்ளில் பிரதி பிம்பிக்காமல் விவேகமாகிய விசேஷ அக்கினி கொண்டு மேல் சொன்ன உலகத்தைத் தகிப்பித்து அதாவது எரித்து தன்னில் சேர்த்து தானாயிருக்க வேண்டும். இதற்கே “நித்தியாநித்திய வஸ்து விளக்கம்” என்று சொல்வது.

அன்னம்.

உலகத்தில் அன்னத்தைப் புசிப்பதில்லை. அன்னத்தைக் கொண்டே ஜீவித்திருக்க முடியும் என்பது

உண்மை. ஆனால் அன்னம் என்பது நாம் சொல்லும் உணவு அல்ல. அன்னம் என்பது அசனம். அசனம் என்றால் அசுவாயிருக்கின்ற பிராணனை அயனம் செய்தல். அயனம் என்றால் தடுத்து

நிறுத்துதல். அதாவது தன் உள்ளிலுள்ள பிராணனை (ஜீவ சக்தியாயிருக்கின்ற வாயுவை) வெளியினுள் செல்ல விடாமல் தடுத்து – தன் உள் வழியே பிரம்மரந்திரம் வரை நேரே கொண்டு போகின்றதாகும்.

வாயுவே நமது அன்னம். அந்த வாயுவான அன்னம் உள்ளபோது மட்டுமே எரிகிறதற்கும், கொதிக் கிறதற்கும், வேகிறதற்கும், உண்கிறதற்கும் முடிகின்றது. எனவே ஜீவசக்தியாய் இருக்கின்ற வாயுவான அன்னத்தை உட்கொண்டால் மட்டுமே ஜீவித்திருக்க முடியும். அதனால் தான் அன்னத்தால் போஷிப்பதாகும் தேகம் என்று சொல்வது. அன்னமாய் இருக்கின்ற அந்த வாயுவை நிறைத்து பூரிப்பிக்க வேண்டும். அவ்விதம் செய்தாலேயே செத்துப் போகமாட்டோம்.

மனமாகிய மரம் இருட்டாகிய அகங்காரத்தின் வழியாய்க் கொஞ்ச நேரத்தில் பூத்து, கர்ப்பமாகிய காய் அதற்கு உண்டாகிறது. அகங்காரமாகிய அந்தகாரம் இல்லையென்றால் புணர்ச்சி உண்டாவது

இல்லை. அதனால் அகங்காரமாகிய அந்தகாரத்தில் பூப்பதனால் இன்ன பூவினுடைய காய் என்று சொல்வதற்கு முடியாமலாய் வந்தது. இப்படி மனமாகின்ற மனத்திற்கே “சம்சார விருட்சம்” என்று பெயர். நம்முள்ளிலிருந்து மனமாகிய சம்சார விருட்சம் முளைத்து வெளியே சக்தியாக வியாபித்து

இவ்வுலகம் எனும் வடவிருட்சமாகிறது. இப்படியாயுள்ள வடவிருட்சத்தினுடைய மூலத்தில் அதாவது உற்பத்தி ஸ்தானமான புருவமத்தியிலேயே தட்சிணாமூர்த்தியாகிய மனமாகிய குரு இருப்பது.


குரு.

நம்முடைய மனம் உள்ளில் அடங்கியிருக்கும் பொழுதும் புகையைப் போல் வெளியினுள்ளில் பரவிய பொழுதும் ஒரே மனமாகத்தான் இருந்தது. மனம் ஒன்றே. மனம் இரண்டன்று. அடங்கியிருக்கும்

மனத்தையே குரு என்று சொல்லுவது. சிரசு வடக்கு ஆகும். சிரசின் தெற்குப் பகுதியில் உள்ள புருவ

மத்தியத்தில் மனமாகிய குரு கீழ்முகமாய் இருக்கின்றது. அதனால் தான் குருவிற்கு தட்சிணாமூர்த்தி என்று பெயர். தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொல்வதும் இதனாலேயே.


மூக்கு.

மூக்கின் அளவு அவனவன் கட்டைவிரல் நீளம் மட்டுமே. மூக்கின் உற்பத்தி ஸ்தானமாகிய புருவ மத்தியத்திற்கு மேல் ஜீவன் போனால் உலகம் இல்லை. மூக்கின் நுனியிலிருந்து ஜீவன் போனாலும் உலகம் இல்லை. மூக்கிற்கு மேலும் கீழும் உலகம் இல்லை. கட்டைவிரல் நீளமுள்ள ஜீவன் மேலும் கீழும் கதாகதம் செய்யும்போது மட்டுமே உலகம் இருக்கிறது.

உலகினுடைய உற்பத்தி ஸ்தானம் கிழக்கு. அதாவது பிராணனாகிய சூரியன் உற்பத்தி ஸ்தானத்தில் அடங்கியிருக்கும் பொழுதாகும்.   சூரியன் உதிக்கிறது ஆகாயமான சிரசில் ஆகும்.

உற்பத்தி ஸ்தானத்தில் வெளிச்சம் உண்டாவதே சூரிய உதயம். எந்த இடத்தில் இருந்து வெளிச்சம் உண்டாகிறதோ, அந்த இடத்தில் இருந்து வெளிச்சம் இல்லாமல் போகின்ற சமயம் சூரிய அஸ்தமனம். சூரியன் அஸ்தமித்த போது உற்பத்தி ஸ்தானம் இருட்டாயிருக்கும். சூரியன் என்றால் பிராணன்.


பகல் – இரவு.

உலகில் நாம் காணும் பகல் இரவென்பது பகலும் இரவும் அல்ல. இந்த நிலைமை நமக்கு தூக்கமாகும். நாம் காணும் இரவும் பகலும் இந்த தூக்கத்தில் வரும் சொப்பனமாகும். சிரசாகிற ஆகாயத்தில் பிராணனை அசையாமல் நிறுத்தினால் அது பகலாகும். மனம் சிரசில் பிரகாசிக்கும் பொழுது, சூரியன் உதித்து பிரகாசித்து பகலாகும். பின்பு இருட்டில்லை. அவ்வாறு சூரியன் உதித்தால் யாதொரு தடையும் இல்லாமலே எல்லா நிலைமைகளும் காணப்படுவதும், அறியப்படுவதும் ஆகும். அதற்கு யாதொரு காலமுமில்லை. நம் புருவமத்தியில் பிராணனாய், சூரியனாய் இருக்கின்ற பிரகாசம் அகங்காரமாயிருக்கின்ற கதவடைத்து வெளியினுள்ளில் பரவிப் பிரகாசிக்காமல் இருக்கும் நிலையே பகலாகும்.

நம் புருவமத்தியில் பிராணனாய், சூரியனாய் இருக்கின்ற பிரகாசம் அகங்காரமாயிருக்கின்ற வாசலின் வழியாய் வெளியினுள்ளில் பரவிப் பிரகாசிக்கும் நிலையே இரவாகும். தானாயிருக்கின்ற ஜோதி – சிவசக்தியாய் இருக்கின்ற திரிகுணங்களாகி வெளியினுள்ளில் பரவியிருக்கும் நிலையே இரவாகும். இரவு நமக்கு இருட்டாகும். அந்த இருட்டிலாகும் இப்பொழுது பிரகாசம் உண்டென்று தோன்றுகிறது.   வெளியினுள்ளில் பரவியிருக்கும் சாத்வீகம் (சிவம்), ராஜசம் (விஷ்ணு), தாமசம் (பிரம்மா) ஆகிய திரிகுணங்களான இந்த முக்குணங்களையும் ஒன்றாகச் சேர்த்து அவற்றினுடைய உற்பத்தியாய் இருக்கிற சக்தியோடு சேர்த்து புருவமத்தியத்தில் நிறுத்தி, அங்கேயே மனத்தையும் கண்களையும் அசையாமல் நிறுத்த வேண்டும். அப்போது ஜோதி பிரகாசிக்கும். அச்சமயத்திலாகும் ஆகாயத்தில் சூரியன் உதித்துப் பகலாகின்றது. இப்பொழுது இருள் இல்லை, இரவும் இல்லை.


சுயம்பிரகாசம்.

மத்தியான சமயத்தில் ஆயிரம் கோடி சூரியர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து உதித்தாலுள்ள பிரகாசம் எப்படியிருக்குமோ, அப்படியுள்ள பிரகாசத்தோடு கூடியதாகும் நம்மிலுள்ள சைதன்யம். அதை நாம்

பார்க்க முடியும். ஜீவசக்தியாகிய வாயுவில் இருந்து மனம் உற்பத்தியாகி பளிங்கு வர்ணமாய், முட்டை வடிவமாய் இருக்கின்ற வெளியினுள்ளில் நம்மிலிருந்து முன் சொல்லிய பிராணன் பிரகாசமாகிப் பிரதிபிம்பித்தலாகும் இக்காணுகின்ற சூரியன். அதை நாம் அகங்காரத்தினால் பார்ப்பதினால் அது மிகவும் ஜொலிக்கின்றதாய், நம்மால் பார்க்க முடியாததாய் இருக்கின்றது.   எப்பொழுது அப்படி பிரதிபிம்பிக்க விடாமல் தன்னில் அடக்குகின்றோமோ, அப்போது நமக்குப் பகலாகும்.


ஜீவனின் இயக்கம்.

நாம் தூங்கும் பொழுது அண்ணாக்கிலிருந்து மேலே போவதற்குள்ள இரண்டு (குதங்கள்) துவாரங்கள்

வழியாக ஜீவன் உள்வெளியே கதாகதம் செய்கிறது.

தூக்கம் விழித்த பொழுது மூக்கினுடைய உற்பத்தி ஸ்தானமாகிய சுழிமுனையில் (புருவமத்தியில்)

இருந்து ஜீவன் வெளியே வருகிறது. ஜீவன் மூக்கினுடைய உற்பத்தி ஸ்தானமாகிய புருவமத்தியில் இருந்து அதன் நுனிவரை உள்ளிலும் வெளியிலும் கதாகதம் செய்கிறது. தூங்கும் போதும் உலகம் இல்லை.   ஜீவன் விழித்த போது மட்டுமே உலகம் இருக்கிறது. மூக்கின் நுனியில் ஜீவன் இல்லா விட்டால் உலகம் இல்லை. ஜீவன் சுழிமுனையில் அடங்கிய போதும் உலகம் இல்லை.    ஜீவன் விட்டுப் போவது மூக்கின் நுனியிலாகும்.


முக்காலம்.

எண்ணமெல்லாம் எதிர்காலம். செய்கை எல்லாம் நிகழ்காலம். விளைவெல்லாம் இறந்த காலம்.

உதாரணமாக வீட்டில் இருந்து ஒரு இடத்திற்கு செல்ல நினைக்கிறது எதிர்காலம்.   செல்ல நடக்கின்றது

நிகழ்காலம். சென்று சேர்ந்த பின் அது இறந்தகாலம்.

எதிர்காலம் என்று சொல்லுவது “பாவி”யாகும். பாவி என்றால் சலனம், அசைவு என்று

பொருள். ஒன்றுமில்லாத நிலைமையில் இருந்தாகும் எதிர்காலமாகிய சலனம், அதாவது அசைவு உண்டாகின்றது. சலிக்கின்றது ஜீவ சக்தியான வாயுவாகும். ஜீவசக்தி அசைவது எதிர்காலம். அந்த அசைவில் இருந்து உற்பத்தியான மனம் நிகழ்காலம். அந்த மனத்தால் உண்டாக்கப்பட்ட இந்த ஜடமாகும் பூதமாயிருக்கின்றது இறந்த காலம். வாயு எதிர்காலம்; மனம் இறந்த காலம்; உலகம் இறந்த காலம். எதிர்காலமாய் இருக்கின்ற ஜீவசக்தியான வாயு எப்பொழுது வெளியினுள்ளில் சலிக்காமல் தன் உற்பத்தி ஸ்தானமாகிய புருவ மத்தியில் லயிக்கின்றதோ, அப்பொழுது காலம் நசிக்கின்றது. அந்த சந்தர்ப்பத்தில் வாயு தானாய் தன்மயமாய்த் தீருகிறது.   அதற்கு கைவல்யம் என்று சொல்வது. ஜோதியாய் இருக்கின்ற “தான்” தானே எப்பொழுது ஆகாயமாய்த் தீருகிறதோ, அப்பொழுது அதற்குள் சலிக்கிறது ஜீவசக்தியாகிய வாயுவேயாகும். அந்த வாயுவே எதிர்காலம், மாயை, சிவசக்தி, சக்தி, பிரம்மம் எனப்படுவது.

ஏகாதசி விரதம் – பிரதோஷ விரதம் – சிவராத்திரி விரதம்.

ஏகாதசி விரதம் : கண்கள், செவிகள், மூக்கு, நாக்கு, தோல் ஆகியவைகளால் உணர்ந்து அறிவதும் வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் ஆகிய தொழில்களை அறிவதும் மனோசக்தியாகும். செவி, கண் முதலான ஐந்துவித துவாரங்களின் வழியாக ஜீவசக்தியாய் கர்மமாயிருக்கின்ற வாயு வெளியினுள்ளில் பிரவேசிக்கின்றது. அவைகள் கர்மேந்திரியங்கள் எனப்படும். இவ்வாறு வெளியினுள்ளில் கர்மமாய் இருக்கின்ற வாயுவோடு கூடி, சலித்துக் கொண்டிருக்கிற மனத்தினுடைய உற்பத்தி ஸ்தானமாகிய பிரம்மரந்திரத்தில், ஜீவ சக்தியாய் சலித்துக் கொண்டிருக்கிற வாயுவை அசைய விடாமல் நிறுத்துகின்ற தாகும் ஏகாதசி விரதம்.   ஏகாதசி விரதம் என்பது என்னவென்றால் தன்னிலிருந்து தசேந்திரியங்களின் வழியாய் வெளியினுள்ளில் பரவுகின்ற மனோசக்தியைத் தன்னிலேயே ஒன்றாக்கி நிறுத்துகின்றதாகும்.

தன்னிலிருந்து சலித்துக் கொண்டிருக்கிற மனம் சலனமில்லாமல் சொஸ்தானத்தில் லயிக்கின்ற நிலைமையே ஏகாதசி விரதம்.

பிரதோஷ விரதம்: பிரதோஷம் என்பது திரயோதசி கூடிய தினமாகும். அதன் உண்மை என்னவெனில் தசேந்திரியங்களுடன் தன்னுடைய சக்தி, சத்துவ, ரஜோ, தமோ குணங்களாகி வெளியில் பரவுவதை, முன் சொன்ன மூன்று குணங்களோடு கூடி அந்தரங்கத்தில் அதாவது சீவனாகிய சிவனோடு ஐக்கியப் படுத்துவதாகும். இதுவே பிரதோஷ விரதம்.

சிவராத்திரி விரதம்: வெளியினுள்ளில் மூன்று விதமாய் மாயையில் பிரகாசித்த பிரகாசம், அந்தரங்கத் தில் அதாவது உள்ளில் ஜீவனாகிய சிவனோடு ஐக்கியப்படுவதாகும்.


விக்கிரஹ பிரதிஷ்டை.

சக்தி உன்னிடமே. உம்மில் ஈஸ்வரன் இல்லாவிட்டால் மற்றோரிடத்தில் ஈஸ்வரன் இல்லை. சக்தியின் உற்பத்தி ஸ்தானம் ஈஸ்வரன். நம்முடைய இருதய ஸ்தானமாகிய புருவமத்தியே உற்பத்தி ஸ்தானம். அந்த புருவமத்தியத்தில் இருந்தே சக்தி ஒழுகிக் கொண்டிருக்கிறது. ஈஸ்வரனில் இருந்து ஒழுகிக் கொண்டிருக்கிற சக்தியை மோகித்ததால் ஈஸ்வரனுடைய நிலைமை அறியமுடியாமல் போயிற்று.   சக்தியை மோகிக்காமல் சக்தியின் உற்பத்தி ஸ்தானமான ஈஸ்வரனை சேவிப்பதானால் தன்னில் இருந்து சக்தி ஒழுகுவதற்கோ, ஈஸ்வரன் இல்லாமல் போவதற்கோ சாத்தியமில்லை. உம்முடைய சக்தி வெளியினுள்ளில் பரவி உம்மால் சங்கற்பிக்கப்பட்டதாகும் விக்கிரஹம். அப்பிரதிஷ்டையில் யாதொரு சக்தியும் இல்லை. சிலைவழிபாடு அறியாமையின் வெளிப்பாடு ஆகும்.

விக்கிரஹங்களில் ஈஸ்வரத்துவம் இல்லை.   அபிஷேகம் செய்வதாலோ, அர்ச்சனை செய்வதாலோ, பூஜிப்பதாலோ பயனில்லை. இது அறியாமை.


பிராண பிரதிஷ்டை.

பிராண பிரதிஷ்டை என்பது ஈஸ்வர சக்தியை ஒழுகுவதற்கு விடாமல் உற்பத்தி ஸ்தானமான புருவ மத்தியத்தில் சலிக்காமல் நிறுத்துவதாகும். அதற்கே பஞ்ச பிராணபிரதிஷ்டை என்று சொல்வது. அவ்விதத்தில் பிரதிஷ்டித்துள்ளதுவே க்ஷேத்திரம் என்று சொல்வது. அது காத்திர க்ஷேத்திரம் (சிரசு) ஆகும். அந்த க்ஷேத்திரத்தில் தான் கண்-2, காது-2, வாய்-1, மூக்கு-2, அண்ணாக்கினுள் குதம் எனப்படும் துவாரங்கள்-2 ஆக ஒன்பது வாயில்கள் உள்ளன.   ஜடம் முழுவதும் க்ஷேத்திரம் அல்ல.

சிரசு மட்டுமே க்ஷேத்திரம்.   மூத்திர துவாரம் லிங்கம் அல்ல.   லிங்கம் என்பது சிரசில் பிரதிஷ்டித் துள்ளது. சிரசில் பிரதிஷ்டித்துள்ள லிங்கமே சிவலிங்கம். அதன் மூலத்தில் தான் சுக்கிலம் இருக்கிறது. மூலமே புருவமத்தியாகும். எல்லா சிருஷ்டிகளுக்கும் லிங்கமும் உபஸ்தமும் உண்டு. அது ஆண், பெண் இருவருக்கும் உண்டு.   ஓம் என்பது பிரம்மமாகும். ஓம் என்பதே சுக்கிலமுமாகும்.

மூத்திர துவாரமும் மலதுவாரமும் நவ துவாரங்களில் சேராது. அண்ணாக்கினுள் உள்ள இரண்டு துவாரங்களுக்குத் தான் குதம் என்று சொல்வது. குதத்தில் இருந்து தான் சப்தம் உண்டாகிறது. மூக்கின் இரண்டு பக்கங்களிலும் அண்ணாக்கிலிருந்து மேலே செல்லும் குதமான இரு துவாரங்களும் தம்மில் சேருவது புருவமத்தியத்திற்கு கீழேயுள்ள இடத்திலாகும். அங்கிருந்தாகும் ஆகாய அமசமாகிய சப்தம் உண்டாவது.


க்ஷேத்திரோபவாசம்

க்ஷேத்திரோபவாசம் என்பது க்ஷேத்திரத்தில் உபவசித்தல் என்றாகும். க்ஷேத்திரம் காத்திர க்ஷேத்திர மாகும். உபவசித்தல் என்பது கூடியிருப்பது. அதாவது ஜீவ ஈஸ்வர ஐக்கியம். சிரசாகிய காத்திர க்ஷேத்திரத்தில் பிரதிஷ்டை ஸ்தலமாகிய புருவ மத்தியத்தில் ஜீவன் ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாய் இருக்கிற நிலைமைக்காகும் க்ஷேத்திரோபவாசம்.  


யோனி.

பெண்களுக்கு குழந்தை பிறக்குமிடம் யோனி அல்ல. சுக்கிலம் உற்பத்தியாகிற இடத்திற்கே யோனி, சக்தி யோனி என்று பெயர். அது பிரம்மரந்திரமாகும்.   உலக உற்பத்தி அங்கிருந்தாகும். சக்தி என்பது ஸ்திரீ என்பதால் அது சக்தி யோனி, ஸ்திரீ யோனி என்றும் சொல்லப்படும். பிரம்மரந்திரமே யோனி.

ஜீவன் எப்பொழுது புறமாயிருக்கிற ஜடத்தின் உள்ளில் அதாவது தன்னில் தானே அடங்குகின்றதோ, அப்பொழுது ஜீவன் புருஷன் ஆகிறது.   ஜீவன் புருஷன் ஆகும் அப்பொழுது சிவலிங்கம் சிரசில் அறியப்படும். அது எப்பொழுது புருஷனாகிறதோ அப்பொழுது மட்டுமே தன்னுடைய லிங்கத்தை அறிந்து கொள்ள முடியும். அதனால் தான் அது புருஷலிங்கம் என்று பெயர் பெற்றது.

எல்லா சிருஷ்டிகளுக்கும் லிங்கமும் உபஸ்தமும் உண்டு. உபஸ்தம் என்பது உப+ஸ்திதம்,

அதாவது சேர்ந்து இருக்கின்றது என்று பொருள். உபஸ்தானம் என்றும் சக்தியோனி என்று சொல்வதும் லிங்கத்துடன் சேர்ந்தே இருக்கின்றது. இவ்வகையில் யோனியும், லிங்கமும், குதமும் சிரசில் ரகசியமாய்

இருக்கின்றன.


புற உலகக் கோயில் அமைப்பும் சிரசில் கோயில் அமைப்பும்.

புற உலகக் கோயில்களில்: (1) க்ஷேத்திரம் தோட்ட ஈசான மூலையில் இருக்கும். (2) க்ஷேத்திரம் உள்ளே போக நான்கு பக்கங்களிலும் கோபுரங்கள் – வாசல்கள் உண்டு. (3) கோபுர வழியில் சென்று நாலம்பலம் அதாவது சுற்றம்பலம் செல்லலாம். (4) சுற்றம்பலத்தில் இருந்து உள்ளே செல்ல மூன்று வாசல்கள் உண்டு. (5) அந்த வழியில் சென்றால் மூலஸ்தானத்திற்கு வெளியில் உள்ள நமஸ்கார மண்டபம் செல்லலாம். (6) நமஸ்கார மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் செல்ல இரண்டு வாசல்கள் உள்ளன. (7) அந்த வாசல் மூலம் பிரஷ்டை ஸ்தலம் காணலாம்.

சிரசாகிய கோயிலில்: (1) நமது சிரசே க்ஷேத்திரம் (2) க்ஷேத்திரம் உள்ளே போக இரு கண்கள், இரு காதுகள் ஆகிய நான்கு வாசல்கள் உண்டு (3) நமது சுற்றம்பலமாகிய நாலம்பலம் நமது மேல் வாய்.

மேல் வாயை மூடிக்கொண்டிருக்கும் சமயம் ‘கம்’ என்ற உணர்வுடன் அந்த இடத்தில் வாயு நிறைந்து சுழன்று கொண்டிருக்கும். (4) சுற்றம்பலத்தில் இருந்து உள்ளே செல்ல மேல் வாயில் மூக்கின் இரு துவாரங்கள், வாய் ஆகிய மூன்று வாசல்கள் உண்டு. (5) அந்த வழியில் சென்றால் மூலஸ்தானத்திற்கு வெளியில் உள்ள நமஸ்கார மண்டபம் எனும் அண்ணாக்கினுள் செல்லலாம். (6) அண்ணாக்கு எனும் நமஸ்கார மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் செல்ல அண்ணாக்கின் மேல் குதம் எனும் இரண்டு வாசல்கள் உள்ளன. (7) அந்த குதங்களான வாசல் வழியாக ஜீவன் கடந்து போனால் மூலஸ்தானத்தில் புருவமத்தியில் பிரதிஷ்டித்திருக்கின்ற சிவலிங்கம் காணலாம்.

நமஸ்கார மண்டபமாகிய அண்ணாக்கில் இருந்துவெளியே ஜீவசக்தியாகிய வாயு வரும்பொழுது பேச்சாகிய சப்தம் உண்டாகும். மூலஸ்தானத்திற்குள்ளில் ஜீவசக்தியாகிய வாயு கடக்கும் பொழுது உள்ளில் வாயு அடங்கிய சப்தம் கேட்கும்.


ஜடத்தின் கதவுகளும் ஜன்னல்களும்.

மெய், வாய், கண், மூக்கு, செவிகள் முதலானவற்றால் ஞானம் உண்டாவதில்லை. அவை இந்த ஜடத்தின் கதவுகளும், ஜன்னல்களுமாகும். அதாவது, கர்மமாய், ஜீவசக்தியாய், விஷ்ணுவாய், மனமாய் இருக்கின்ற வாயு வெளியினுள்ளில் கதாகதம் செய்து வர ஏதுவாக உள்ள கதவுகளே மூக்கும் வாயும் ஆகும். கண்களும் செவிகளும் ஜன்னல்கள் ஆகும். அதனால் கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகியவற்றிற்கு யாதொரு அறிவோ, பொறுப்போ இல்லை.


வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் ?

வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் – இவை ஞானேந்திரியங்களாகும்.

வாக்கு என்பது சப்தம்.

பாணி என்பது பரமாத்மாவாயிருக்கின்ற மனம் விஷ்ணுவிற்குள்ள நான்கு கைகளாகி, மன சக்தியாய்த் தீர்ந்து, வெளியினுள்ளில் பரவியிருக்கிறது என்ற நிலைமை. காது, கண், மூக்கு, வாய் ஆகியவையே

நான்கு கைகள்.

காது எனும் கை சங்கை வைத்திருக்கிறது. இது சப்தத்தைக் குறிக்கும்.

கண் எனும் கை சக்கரத்தை வைத்திருக்கிறது. இது மனதைக் குறிக்கும்.

மூக்கு எனும் கை “கதா”வை வைத்திருக்கிறது. இது வாயுவை (மூச்சைக்) குறிக்கும்.

வாய் எனும் கை பத்மத்தை (தாமரையை) வைத்திருக்கிறது. இது அகங்காரத்தைக் குறிக்கும். வாய் வழியே வாயு வெளியே வந்த போது நான் என்ற அகங்காரமாகிய தாமரை உண்டானது. வாயு உள்ளில் தங்கி ஆகாயமயமான போது அகங்காரமில்லாத இதயகமலமாகிறது.

பாதம் என்றால் மனம் சொஸ்தானம் அதாவது சொந்த இடத்தில் மனம் உள்ள நிலை.

பாயு என்றால் மனமாகிய ஊற்று உண்டாகிற இடம். அதாவது மனம் ஊறுகிற இடம்.

உபஸ்தம் என்றால் சேர்ந்து ஸ்திரமாய் இருக்கிறது என்று பொருள். புருவமத்தியத்தில் உற்பத்தி ஸ்தானமாகிய யோனியில் லிங்கம் சேர்ந்து திடமாக இருக்கிறது. அது ஈஸ்வர லிங்கம் எனப்படும்.

சம்யோக ஸ்தலம் : பிரம்மமாய் இருக்கின்ற சுக்கிலம், சம்யோக நிமித்தம் நரகத் துவார வழியில் கும்பிபாக நரகத்தில் சென்று விழுவதற்கும், கும்பிபாக நரகத்திலிருந்து வெளியே வருவதற்குமுள்ள நரகக் கதவாகும் பெண்களுடைய சம்யோக ஸ்தலம் எனும் பெண்குறி.


லிங்கம், யோனி, உபஸ்தம் ?

சிவலிங்க (உருவை) எடுத்துக் கொண்டால் அதில் உண்டாக்கப்பட்ட குழி யோனி . அந்த யோனி எனும் குழியில் நடப்பட்டுள்ளது லிங்கம். யோனியில் லிங்கம் ஸ்திரமாக நடப்பட்டு யோனியும் லிங்கமும் சேர்ந்து இருக்கிறதே உபஸ்தம் எனப்படுகிறது. லிங்கத்தின் மேல் எதை அபிஷேகம் செய்தாலும், திராவக ரூபமான பொருள் எதுவானாலும் அது ஒன்றாகி ஊறி வரும் இடம் பாயு எனப்படும். அபிஷேகம் செய்த பொருள் கீழே குதிக்குமிடம் குதம் எனப்படும். அது ஸ்தானத்தில் இருந்து பாதத்திலிருந்து குதிக்கின்றதாகும்.


குதம் 
பாயு 
யோனி
உபஸ்தம்
லிங்கம்


பாதம் என்ற சொஸ்தானத்திலிருந்து பரமாத்மாவான மனமான விஷ்ணு மன சக்தியாய் நான்கு கைகளாய் வெளியினுள்ளில் பாயு என்ற இடத்திலிருந்து ஊறி குதத்தின் வழியாக வெளியே வருவதால் – அந்த நான்கு கைகளையும் அடக்கி ஜீவசக்தியை அந்தக் குதத்தின் வழியாய் மேலே உற்பத்தி ஸ்தானத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் பொழுது ஞானம் உண்டாகிறது.

கண், காது, மூக்கு, வாய், மெய் மூலம் ஜீவசக்தி வெளியே போக இடமில்லாமல், போகாமல் தனக்குள்ளே ஜீவசக்தி அடங்கும் போது தான் ஞானம் உண்டாகிறது. அதனால் தான் அவை ஞானேந்திரியம் எனப்படுகிறது. கை, கால், நாவு, மலத்துவாரமாகிய குதம், மூத்திர துவாரம் – இவையெல்லாம் கர்மேந்திரியமோ ஞானேந்திரியமோ அல்ல. அவை தொழிற்செய்வதற்குரிய இடங்களேயாகும்.

யோகங்கள்:

யோகம் என்பது ஒரு ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்றாவதையே குறிக்கும். அது ஜீவ ஈஸ்வர ஐக்கியமாகும். யோகம் என்பது ஒன்றே. வேறு வேறு அல்ல.

கர்மம் என்ற ஜீவசக்தியாயிருக்கிற வாயு அதன் உற்பத்தி ஸ்தானமாகிய ஆகாயமான பிரம்மரந்திரத்தில் சேருகின்றதாகும் கர்மயோகம்.

பிராணன் என்பது சூரியனும், அபானன் என்பது சந்திரனும் ஆகும். அபானனாயிருக்கின்ற சந்திரனே மனம். அதனால் பிராணனாயிருக்கின்ற சூரியனும், அபானனாயிருக்கின்ற சந்திரனும் ஐக்கியமாகின்றதாகும் ஹடயோகம். மனம் பிராணனில் அடங்குவது ஹடயோகம்.

ரஜோகுணமாயிருக்கின்ற மனமாகிய விஷ்ணு தன் உற்பத்தி ஸ்தானமாகிய புருவ மத்தியில் அசையாமல் நிற்கிற நிலைமையாகும் இராஜயோகம். மனம் புருவமத்தியத்தில் (பிராணனில்)

அசையாமல் நிற்பது தான் இராஜயோகம்.

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் (விரோதம்), டம்பம், ஆசையெனும் பொறாமை ஆகிய எட்டு நிலைமைகளும் பிரகிருதியாகிய சலனத்திலிருந்து உண்டாகிறது. சலனம் வெளியினுள்ளில் சலிக்காமல் எப்பொழுது தன்னில் தானே லயிக்கின்றதோ அந்த சந்தர்ப்பத்தில் இந்த எட்டு நிலைமைகளும் அவைகளின் உற்பத்தி ஸ்தானமாகிய பிரகிருதியிலேயே லயித்து அந்நியத்துவம் இல்லாமல் தானாய்த் தீருகிறது. அதற்கே அஷ்டாங்க யோகம் என்று பெயர்.


ஈஸ்வரனும் ஜீவனும் ஒன்றே – இரண்டல்ல.

ஈஸ்வரன் என்பது “தான்” தன்னுடைய மேல்பாகத்தில் ஆகாயமாகிய பிரம்மரந்திரத்தில் இருக்கின்றது. அந்த ஈஸ்வரனே (கீழாகி விட்டுப் போகாமல்) தன்னுள்ளில் கூடி கதாகதம் செய்து கொண்டிருக்கிற ஜீவனாகிறது.

ஜீவன் தன்னிலிருந்து வெளியினுள்ளில் வாயு ரூபமாக சலித்துக் கொண்டிருப்பதற்கு பரமாத்மா என்று பெயர். பரமாத்மாவே மனமாகும். மனமே விஷ்ணுவாகும். விஷ்ணுவே விஸ்வம்பரனாகும்.

பரமாத்வாய், மனமாய், விஷ்ணுவாய், விஸ்வன்பரனாய் இருக்கின்ற வாயுவில் இருந்தே உலகம் உண்டானது. இப்படி உலகமாக மனமாகிய பிம்பத்தில் பிரதிபிம்பித்துக் காணப்படுவதெல்லாம்

நம்முடைய ஜீவனேயாகும்.

மனம் பிரதிபிம்பிப்பதன் காரணம் நான் என்ற அகங்காரமே. நான் என்ற அகங்காரம் நசிக்கும்ம் போது யாதொன்றும் காணப்படுவதில்லை.       நான் என்ற அகங்காரத்தினால் தோன்றுவதே ஈஸ்வரன், ஜீவன் என்ற வேறுபாடு. தான் (ஈஸ்வரன்) நான் உள்ளபோது ஜீவன் ஆக மாறித் தோன்றுகிறது. தான்

(ஈஸ்வரன்) நான் இல்லாத போது ஈஸ்வரனாகவே இருக்கிறது.  

உதாரணமாக: ஆற்றில் நீர் ஒரே மாதிரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆற்று நீரில் ஒரு குச்சியின் ஒரு

பகுதியை நீரின் உள்ளே , விட்டால் இப்போது ஆற்று நீர் குச்சியின் இருபுறமும் பிளவு பட்டு ஓடுவது போல் தோன்றும். குச்சியை எடுத்துவிட்டால் நீரோட்டம் ஒன்றாக மீண்டும் தோன்றும். அதே மாதிரி

ஈஸ்வரனுடைய வெளியினுக்குள்ள ஓட்டத்தில் மனம் “நான்’ என்கிற அகங்காரமாய் இருக்கின்ற

குச்சியைப் பிடித்த போது ஜீவன் என்றும் ஈஸ்வரன் என்றும் இரண்டு நிலைமைகளாய்த் தோன்றுகிறது. அகங்காரமாய் இருக்கும் குச்சியை எடுத்ததும் ஜீவேஸ்வர ஐக்கியமாய் ஒன்றாகிறது.

“உலகம் முழுவதும் நிற்கிறது ‘நான்’ என்றுள்ள ஒரே முடிப்பின் மேலாகும்.”

யோகம் அநேகமில்லை. அதனால் வெளியினுள்ளில் பரவி சலித்து பிரமித்துக் கொண்டிருக்கிற தன்னுடைய சக்தி எப்பொழுது வெளியினுள்ளில் சலிக்காமல் தன்னில் தானே லயிக்கின்றதோ அப்பொழுது அது யோகமாயிற்று. தன்னில் தானே லயிப்பதுவே யோகம்.


நான்கு வர்ணங்கள்:

பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் – யார்?

மனம் பிராமணன். நித்தியாநித்திய வஸ்துவை தெரிந்து கொள்பவன் பிராமணன். வேதம் என்பது அறிவாகும். அறிவின் அதிகாரி மனமாகும். மனமில்லையானால் யாதொரு அறிவுமில்லை. வேதத்தினுடைய அதிகாரஸ்தன் தான் மனமாகும். ஆகவே மனமே பிராமணன் ஆகும்.

பிராமணனைக் காட்டிலும் கீர்த்தி உள்ளவன் க்ஷத்திர்யன். சித்தமாயிருக்கின்ற பிரகாசம் க்ஷத்திரியன் ஆகும். க்ஷத்திரியன் தொழில் துஷ்டநிக்ரஹம் செய்து, சிஷ்ட பரிபாலனம் செய்வது. துஷ்டன் என்பது துர்விசாரங்களான ராகத்துவேஷாதிகள் ஆகும். சிஷ்டன் என்பது மனமாகும். துர்விசாரங்களால் மனதிற்கு, வேதமாயிருக்கின்ற அறிவிற்கு வரும் தடைகளை க்ஷத்திரியனாயிருக் கின்ற பிரகாசம் வெட்டி நசிப்பித்து மனதிற்கு அறிவை நிறுத்துவதாகும் சிஷ்ட பரிபாலனம்.

புத்தி என்பது வைசியன். வையன் “கோ”வினை ரட்சிக்க வேண்டும். வியாபாரம் செய்ய வேண்டும் புத்தியாகிய வைசியன் “கோ” எனும் தன்னில் இருந்து உண்டான சப்தத்தைத் தன்னில் தானே நிறுத்தி லயிக்கச் செய்ய வேண்டும். இதாகும் கிருஷி. கிருஷி என்பது சிரசில் சுழிமுனையில்

தன்னுடைய சக்தியை அடக்குவதாகும். அவ்விதம் கிருஷி செய்திருக்கிற சக்தியைக் கொண்டு தன்னில் தானே வியாபிக்கச் செய்வதே வியாபாரம். பிராமணனாயிருக்கின்ற மனதுக்கு நாசமில்லாமல் தன்னில் தானே லயிக்கச் செய்வது வைசியனான புத்தியின் தொழில்.

சூத்திரன் என்று சொல்வது அகங்காரமாகும். அகங்காரத்திற்காகவும் அநேக விசாரங்களான ஜாதிகள் உள்ளது. எல்லா விசாரங்களையும் தொழில்களையும் விட்டு தனது மனத்தினுடைய உற்பத்தி ஸ்தானமாகிய புருவ மத்தியத்தை அடிபணிந்து சேவை செய்து அவ்விடத்திற்குத் தன்னுடைய ஜீவனைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு வேண்டிய யத்தனம் செய்கின்றவராவார் சூத்திரர். இதாகும் பிராமணர் பாத சேவை.

உலகியலில் நான்கு வர்ணங்களோ ஜாதிகளோ கிடையாது. இவ்வித ஜாதிகளெல்லாம் அவனவன் உண்டாகி, அவனவனில் உள்ளதான குணமாயிருக்கின்ற ஜீவன் கர்மமாகி, வாயுவாகி வெளியினுள்ளில் பரவிய பொழுது, அதிலிருந்து நான்கு வர்ணங்களாகி உற்பத்தியாகவும், அவை

(மனிதன் ) தன்னால் தானே சிருஷ்டிக்கவும் செய்ததாகும். இதல்லாமல் பிராமணன் என்றோ, க்ஷத்திரியன் என்றோ, வைசியன் என்றோ, சூத்திரன் என்றோ எந்த ஒரு சிருஷ்டியும் உண்டாயிருக்க வில்லை. இவையெல்லாம் அந்தகாரமான அகங்காரத்தில் தன்னைத் தான் அறியாதபோது உண்டான வேறு நிலைமைகள்.

தன்னைத் தான் அறிய வேண்டுமானால், தன்னுடைய மற்ற பைத்தியச் செயல்களைவிட்டு தன்னுடைய சக்தி தன்னில் தானே லயிக்க வேண்டும். அப்பொழுது தன்னைத் தான் அறியலாம். தானாய், தன்மயமாய் இருக்கும் அந்நிலைக்கு கைவல்யம் என்று பெயர்.


மது: மது என்பது கள் – சாராயம் போன்ற மதுபானங்களைக் குறிப்பதன்று.   மகான் சாப்பிடும் மது “எண்சாண் பனையின் தலையில் ஊறிய மது”வாகும். ஜடமாகிய உடல் ஏழு சாண். அதற்கு மேலான எட்டாவது சாண் சிரசாகும். அந்த சிரசில் இருக்கிறது மது. லம்பிகா முத்திரையினால் அம்மதுவை பானம் செய்யலாம். “லம்பிகா” என்பது பிரகாசமான (லோகமாதாவாகிய) சக்தி. அந்த சக்தி சிரசில் அடங்கும் போது அமிர்தம் இறங்கும்.

சக்தி பூஜை: தன்னிலிருந்து வெளியினுள்ளில் பரவி பின்னமாய், வெவ்வேறாய் பந்திக்கப்பட்டிருக்கின்ற தன்னுடைய சக்தியை அந்தப் பந்தத்தில் இருந்து ஜீவனாகிய சிவன் வேறுபடுத்தி பிரம்மரந்திரத்தில் சேர்க்கின்றதாகும் சக்தி பூஜை. இதற்கே சிவன் சக்தியை பூஜிப்பதாகச் சொல்வது. அப்படி பூஜிக்கும் பொழுது, மத்தகத்தில் உள்ள மது இறங்கி, அந்த மதுவையாகும் மகான்கள் பானம் செய்தது. இதுவே சக்தி பூஜை செய்பவர் மதுபானம் செய்யதிருக்க முடியாது என்று சொல்வது.

ஆனந்தமத்தன்: தன்னுடைய சக்தியை யாரொருவர் தன்னில் லயிப்பதற்காகப் பூஜிக்கின்றாரோ, அவர்

தன்னிலிருந்து உண்டாகின்ற மதுவைப் பானம் செய்து ஆனந்தமத்தனாய், சர்வக்ஞனாய் இருக்கலாம்.

அந்த மதுவுக்குப் பெயர் “அமிர்தம்”. அந்த அமிர்தமாகிய மதுவையே மகான்கள் சாப்பிட்டது.


உலகின் மதம்:

உலகில் ஒரே மதமே உண்டு. அதற்குப் பெயர் “ஈஸ்வர மதம்”. ஹிந்து மதம் என்பது இந்து மதமாகும். “இந்து” என்பது சந்திரனாகும். மதம் என்பது ஸ்தாபனம். மனமாகிய சந்திரனை ஈஸ்வரனாய் இருக்கின்ற ஜீவனில் ஸ்தாபிப்பது இந்து மதம். இவ்விதம் செய்பவர் இந்து மதக்காரர்.

ஈஸ்வர மதத்தினுடைய தத்துவத்தைக் கிரஹித்து ஈஸ்வர விசாரணை செய்ய வேண்டியற்குள்ள உண்மை மார்க்கத்தை புத்தன் என்ற மகான் ஸ்தாபித்தார். அம்மகான் ஸ்தாபித்தது உண்மையில் ஈஸ்வர மதமே. ஆனால் அதை ஸ்தாபித்தது புத்தன் என்பதால் அது புத்தமதம் எனப்பட்டது.

இப்படியே கிறிஸ்து என்ற மகான் படைத்த ஈஸ்வர மதம் கிறிஸ்துவ மதமானது. முஹம்மது என்ற மகான் படைத்த ஈஸ்வர மதம் முஸ்லிம் மதமானது. வெவ்வேறு பெயரில் வெவ்வேறு மதங்கள் என சொல்லப்பட்டாலும் அவையனைத்தும் ஈஸ்வர மதமே. அதுவல்லாமல் வேறு யாதொரு மதமுமல்ல.

உலகம் என்பது தன்னுடைய சக்தியிலிருந்து உண்டானது என்றும், தன்னுடைய அந்த சக்தியைத் தன்னில் தானே லயிக்கச் செய்ய வேண்டியது என்றும், அதாகும் உண்மை என்றும் மற்றவை

எல்லாம் தவறுதல் ஆகுமென்றும் அவர்கள் ஸ்தாபித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சொன்னது ஒரே மார்க்கந்தான்.


மகா வாக்கியங்கள் :

1. பிரக்ஞானம் பிரம்மம். என்றால் பிரதிபலிக்கப்ப்ட்டிருக்கின்ற அறிவு பிரம்மம் என்றாகும். தன்னிலிருந்து பிரதிபிம்பிக்கப்பட்டிருக்கின்ற பொருள்களை அறிகின்ற அறிவு எதுவோ அதுவே பிரம்மம். அப்படி பிரகாசித்திருக்கின்ற மனசக்தி பின்னமின்றி தன்னில் தானே அடங்கி நின்றதாகும்

“பிரக்ஞானம் பிரம்மம்”.

2. அஹம் பிரம்மாஸ்மி என்றால் அகாரமாயிருக்கிற வெளியினுள்ளில் தானாயிருக்கின்ற பிரம்மம்

“ஹம்” என்ற பிரகிருதி தன்னில் இருந்து மாயையாய்ச் சலித்துக் கொண்டிருக்கின்ற சலனம் இல்லாமல் உற்பத்தி ஸ்தானமாகிய தன்னில் தானே அடங்குவதற்கு ஆகிறது.

3. தத்துவமஸி என்பது “தத்” எனும் பிரம்மத்தில் இருந்து “துவம்” அதாவது நீ என்னும் மனசக்தி வெளியினுள்ளில் பரவி நானாவிதமாய் சலித்துக் கொண்டிருப்பது – சலிக்காமல் பிரம்மத்தில் லயித்திருக்கின்ற நிலையாகும்.

4. அயம் ஆத்மா பிரம்மம். அயம் என்பது “ஈ” என்கிற சக்தி வெளியினுள்ளில் நானாவிதத்தில் பிரவேசித்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறதாகும்.   அச்சக்தி வெளியினுள்ளில் பிரகாசிக்காமல்

தன்னுள்ளில் இருக்கின்ற ஆத்மாவில் பிரகாசித்துச் சலனமில்லாமல் இருக்கின்ற நிலைமையாகிறது “அயம் ஆத்மா பிரம்மம் என்று சொல்வது.

5. பிரம்ம ஜோதிரஹம் என்றால் “தான்” தானே பிரம்மஜோதிஸ் என்ற பொருளாகிறது. அந்த பிரம்ம ஜோதிஸ் அகாரமான வெளியினுள் “ஹம்” என்ற பிரகிருதியாகி பின்னமாய் அதாவது வேறாய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரகாசம் பின்னப்படாமல் ஒரே பிரகாசமாகி அடிமுடியற்ற தாய் தன்னிலடங்குகின்ற நிலைமையாகும் பிரம்மஜோதிரஹம்.

6. பிரம்ம ஸத் ஜகத் மித்யா. தானாயிருக்கின்ற பிரம்மம் தன்னில் இருந்து உண்டாயிருக்கின்ற சலனம்

இல்லாமல் தன்னில் லயித்து அடிமுடியற்றதாய் தானாய் தன்மயமாகி நிற்கின்ற நிலைமையில் பிரம்மம் மட்டுமே இருக்கிறது. மற்ற எதுவும் இல்லாமல் போகிறது.

இப்படி பிரம்மம் தன்னிலேயே லயிக்கும் நிலையை அனுபவிப்பதே மோட்ச நிலையாகும். அப்பொழுது சக்தி நசிப்பதில்லை. அதைவிடுத்து மகாவாக்கியங்களை மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருப் பதால் சக்தி நாசமடைவதைத் தவிர பயன் ஏதுமில்லை.

அமைதி உள்ளே இருக்க வேண்டும். இது தான் உலகம். இது தான் வாழ்க்கை. பிரம்ம அனுபவம் ஏற்பட்ட நிலையில் மகாவாக்கிய உச்சரிப்பு இல்லாது போகும்.


ஆறு ஆதாரங்கள் எவை?

ஆறு ஆதாரங்கள் உலகோர் சொல்வது போல மலதுவாரம் முதல் பிரம்மரந்திரம் வரை அடுக்கடுக்காய் இருப்பதில்லை. சிருஷ்டி சிரசில் இருந்தே ஆரம்பிக்கிறது. மூலம் என்பது அவனவனது சிரசே.

பிரசவத்தின் போது தலையே முதலில் வெளி வருகிறது. மூலாதாரம் முதலான எல்லா ஆதாரங்களும் அடங்கியிருப்பது சிரசிலாகும்.

மூலாதாரம். மனதில் இருந்து உற்பத்தியான “நான்” என்ற அகங்காரத்தின் மூலமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஜாக்கிரதை, சொப்பனம், சுழுத்தி என்ற மூன்று நிலைமைகளையும் விட்டு “நான்”

என்கிற அகங்காரம் தன்னுடைய உற்பத்தி ஸ்தானமாகிய மனத்தில் போய்ச் சேருகிறதாகும் மூலாதாரம்.

மூலாதாரம் என்பது அகங்காரம் மனதோடு சேருவது. இது விஷ்ணு பிரம்மாவுடன் சேரும் நிலை.

சுவாதிஷ்டானம். வெளியிலிருந்து அகங்காரமாய் இருக்கின்ற நான் என்கிற நிலைமை மனத்தில் சேருகின்ற சமயம், மனம் தன் வெளிச்செயல்களை எல்லாம் விட்டுத் தன் சுய ஸ்தானத்தில் பிரவேசிக் கிறது. அச்சமயம் மனதிற்கு பிரகாசமோ அறிவோ இல்லாமல் சுத்த இருட்டாய் ஒன்றும் அறியாமல் இருக்கின்ற நிலைமையாகிறது. இது மனதின் சுழுத்தி (உறக்கம்) ஆகின்றது. இதற்கே சுவாதிஷ்டானம் என்கிற நிலைமை. இது பிராணன் புருவமத்தியத்தில் போய் நிற்கும் நிலை. இது பிரம்மா, விஷ்ணு ருத்திரனோடு சேரும் நிலை.

மணிபூரகம் என்பது மனதின் விழிப்பு நிலையாகின்றது. மணி என்பது மனம். பூரகம் என்பது நிறைந்தது. அப்பொழுது மணியாய் இருக்கின்ற மனம் வேறொன்றும் இல்லாமல் ஜீவனோடு சேர்ந்து தானாகி நிற்கின்றது. அப்பொழுது அவ்விடம் மிகவும் பிரகாசமாக ஜொலிக்கின்றது. மனம் தன்னில் நிலைத்தபின் உள்ள நிலைமை. இது பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் சிவத்துடன் சேரும் நிலைம

அநாஹதம். அந என்பது அக்கினி. ஹதம் என்பது நாசம். அக்கினி சொரூபமாய் பிரகாசித்துக் கொண்டிருக்கிற மனம் தன்னுடைய உற்பத்தி ஸ்தானமாகிய ஜீவனில் லயிக்கின்றது. அப்பொழுது அது ஜீவனுக்கு சொப்பனமாகிறது. பிரகாசமான மனம் ஜீவனில் லயித்த உடன் பிரகாசத்தை அறியமுடியாமல் இருக்கும் நிலைமை. இது பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், சிவன் சதாசிவத்துடன் சேரும் நிலைமை.

விசுத்தி. வி + சுத்தி. அறிவு நிர்மலமாகிறது என்று பொருள். ஒன்றும் தெரியாத விதத்தில் யாதொரு அறிவும் இல்லாமல் நிச்சலமாய் ஜீவன் மட்டுமாய் இருக்கின்ற நிலைமை விசுத்தி. விசுத்தி என்பது சக்தி நிலை.

ஆக்ஞை என்பது ஜீவன் சிவனாகி உற்பத்தி ஸ்தானமாய் இருக்கின்ற ஆனந்தத்தில் லயித்து மற்றொன்றும் இல்லாமல் ஆனந்தித்துக் கொண்டிருக்கிற நிலைமை. அது ஜீவனுடைய விழிப்பு நிலை. இதற்கே ஆக்ஞை என்று பெயர். ஆக்ஞை என்பது ஜீவன் நிலை. இதுவே ஆறு ஆதாரங்களின் நிலைமை.


பிரம்மானந்தம்.

பிரம்மம் என்பது சுக்கிலம். அந்த பிரம்மமாயிருக்கின்ற சுக்கிலத்தை ஜீவன் சென்று தொடுகின்ற சமயத்தில் மிகவும் சிறிய ஒரு நொடிப் பொழுது அதாவது கண் இமைகள் மூடித்திறக்கின்ற சமயம் உள்ள ஆனந்த நிலைமை பிரம்மானந்த நிலைமையாகும். அதாகும் ஆனந்தம். இந்த ஆனந்தத்தில் தான் லயிக்க வேண்டும். ஆனந்தத்தில் இருக்க வேண்டும்.   மேற்சொன்னபடி உண்டாகிற ஆனந்தத்தில் ஜீவன் சென்று லயிக்கின்றதாகும் பிரம்மானந்தம். அப்படி பிரம்ம சொரூபமாய் இருக்கின்ற சுக்கிலத்தைப் பானம் செய்து, லயித்து என்றென்றைக்கும் உபஜீவனம் செய்து ஜீவித்திருக்க வேண்டிய தன்னுடைய சொந்த சொத்தான சுக்கிலத்தைத் தானே திருடி பல வகைகளில் நாசம் செய்கிறோம்.

பிரம்மானந்தத்தைச் சொல்லித் தெரிவிக்க முடியும். உலகில் இருக்கின்ற சர்வஜீவிகளும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பது ஆண்பெண் சேர்க்கைக்காகும். ஆண்பெண் சேர்க்கையின் சமயத்தில் மனம் வெளியில்

யாதொன்றிலும் செல்லாமல் (அதாவது ஐம்புலன்கள் வழி வெளியே செல்லாமல்) ஜீவனோடு சேர்ந்து தன்னுள்ளில் அடங்கி, தன்னுள்ளில் கூடி மேலும் கீழுமாய் கதாகதம் செய்து, தன்னுடைய ஜீவசக்தி மேலே போய் பிரம்மரந்திரத்தில் இருக்கின்ற சுக்கிலத்தைத் தொடுகின்றது. அந்த சமயம் உண்டாகிற ஆனந்த நிலைமையே பிரம்மானந்தம்.   (ஆண் பெண் சேர்க்கையின் போது மனம் சுக்கிலத்தைத் தொட்டுவிட்டு அதைத் திருடி கீழாக வீணாக்கி விடுகிறது. அதனாலேயே ஆண் பெண் சேர்க்கையின் போது கிடைக்கும் பிரம்மானந்தம் சிற்றின்பம் எனும் சிறிய இன்பம் ஆகிவிடுகிறது.)

ஆண் பெண் உடல் சேர்க்கையின் போது எப்படி ஜீவன் நம் உள்ளில் தானே அடங்கி, உள்ளிலேயே கீழும் மேலுமாய் நடந்து மேலேயுள்ள பிரம்மமாய் இருக்கின்ற சுக்கிலத்தைத் திருடப் போகின்றதோ – அப்படியே ஜீவன் உள்ளில் தானே கீழும் மேலுமாய் நடந்து, மேலேயுள்ள பிரம்மமாய் இருக்கின்ற சுக்கிலத்தில் லயித்தால் (சுக்கிலத்தை வீணாக்காமல் நிலைத்தால்) என்றென்றைக்கும் ஆனந்த மத்தனாய் லயிக்கலாம். இதற்காகும் பிரம்மானந்தம் என்று சொல்வது.


ஈஸ்வரன் – ஈஸ்வரன் என்பதன் பொருள் நம்மை ரட்சிப்பவன்; நம்மை ஆளுதற்குரியவன். சர்வ வியாபி – ஒன்றே ஒன்று – சலனமற்ற நிலைமையும், சலனமுள்ள நிலைமையும் கொண்ட ஒரு சக்தி.

சலனமற்ற நிலையில் ஒரே சக்தியான ஈஸ்வரன் – அந்த நிலை நிஷ்களத்துவ நிலை – களங்கமற்ற நிலை – நிர்குணன் (சாத்வீக, ராஜச, தாமசமெனும் முக்குணமற்றவன்) – விகாரமற்றவன் – தன்னுள்ளேயே லயித்திருப்பவன் – விருப்பு வெறுப்பற்றவன் – இந்நிலையில் படைப்பு, காப்பு, அழிப்பு என எந்த தொழிலும் செய்வதில்லை – மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எதுவும் இல்லை – வெளியில் எங்கும் வியாபிக்காத நிலை – ஆதி அந்தமில்லாத நிலை – உறக்க நிலை – காரண காரியம் இல்லாத நில – “தான்” ஆகவுள்ள நிலை – இந்த நிலை சுயம்பிரகாச அறிவுநிலை – ஞான நிலை – மேல் நிலை – அழியா நிலை – ஈஸ்வரனே ஜீவசக்தி, அறிவு, ஞானம், அக்கினி, சுக்கிலம் எல்லாம்.

சலனமுற்ற நிலையில் ஈஸ்வரன் களங்கப்பட்டதால் ஆகாயம் எனும் வெளி உண்டாயிற்று –ஆகாயத்தில் (சதாசிவன் ) ஆகாயம், (சிவன்) காற்று, (ருத்திரன்) நெருப்பு, (விஷ்ணு) நீர், (பிரம்மா) நிலம் எனும் பஞ்சபூதங்கள் உண்டாயின – ஈஸ்வர நிலை சக்தி நிலையாயிற்று – ஈஸ்வரன் களங்கப்பட்ட நிலை –

முக்குணமுடைய சகுணன் – விகாரமுற்றவன் – விருப்பு வெறுப்புடையவன் – ராகத்துவேஷாதி –

படைப்பு, காப்பு, அழிப்பு தொழில் செய்பவன் – பஞ்ச பூதங்களால் உலகம் உண்டானது – மாயையால் காரண காரிய நிலை உண்டானது – ஈஸ்வரன் சக்தியாகி, வாயுவாகி வெளியில் வியாபிக்கிறது – ஒன்றான ஈஸ்வரன் சக்தியானபோது ஆதி அந்தம் உண்டானது – ஒன்று இரண்டானது – ஆதிநிலை

மேல்நிலை என்றும் பிரம்மம் என்றும் ஆனது – அந்தநிலை கீழ்நிலை என்றும் மாயை (மனம்) ஆனது –

“தான்” என்ற நிலை போய் “நான்” என்ற அகங்காரம் உருவானது – கீழ்நிலை அறிவற்ற நிலை, அஞ்ஞான நிலையானது – அறிவானது வாயு ரூபமாய் நசித்துக் கொண்டிருக்கும் நிலை.


உலகோர் செய்யும் தவறு.

உலக மக்கள் பிரம்மானந்தத்தைப் பற்றித் தெரியாமலும், அதை பற்றி ஆலோசிக்காமலும் அவரவர் களுடைய ஜீவசக்தியை வெளியினுள்ளில் விட்டு, பலவற்றிலும், பலவித்திலும் பந்தப்படுத்தி அவற்றில் பிரதிபிம்பித்து நசித்துப் போகின்றார்கள்.


எல்லோரும் செய்ய வேண்டியது. சுவாமி சிவானந்த பரமஹம்ஸர் அருளியது.

1. தன்னைத் தான் அறிய வேண்டும்.

2. தன்னைத் தான் அறிய தன்னைத் தானே பார்க்க வேண்டும்.

3. தன்னைத் தான் பார்க்காமல் மற்ற ஒவ்வொன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தால், தான்

இன்னதென்று அறியாமல் நசித்துப் போக வேண்டியது தான்.

4. உலகவாசிகளாகிய சர்வ ஜீவிகளும் அவனவனில் இருந்து உண்டாகின்ற சக்தியை அவனவனில்

கூடி நடத்தி மேற்சொன்னபடி பிரம்மமாயிருக்கின்ற சுக்கிலத்தில் லயித்து, தானாகி, தன்மயமாகி,

கைவல்யத்தை அடைந்து சதா ஆனந்தமத்தன்மார்களாய் இருப்பார்களாக.

==========================================================================  என் மனதில் எழுந்த சுவாமி சிவானந்த பரமஹம்ஸர் ஆனையின்படி

சித்தவேதம் சுருக்கம் தொகுத்தவன்
மு.குஹன். M.A., PGDBA.,PGDGC.,DME., Dip.T.D.
திருச்சிராப்பள்ளி

No comments:

Post a Comment