Friday, January 5, 2024

ஆறாம் திருமுறை 042 திருநெய்த்தானம்

 திருநாவுக்கரசர்!                                                         திருச்சிற்றம்பலம்!                            சிவாயநம! 

   

"
தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
    பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்
    ஆங்காரந் தவிர்நெஞ்சே
 
"

 

"நெஞ்சே ! உரிய காலம் முடிந்த பின் சிறிது நேரமும் தாமதிக்காமல் உயிர்விடுத்து நீங்கும் இவ்வுடம்பை மேம்பட்ட பொருளாகப் பெரிதும் கருதி நம் புத்தியினாலே இந்த உலகம் முழுதையும் நமக்கு அடிமைப்படுத்தலாம் என்று பேசும் தன் முனைப்பை நீக்கு"


 

 

                                                                                   ஆறாம் திருமுறை  

                                                    

                                                                                                  042 திருநெய்த்தானம்  

 
 
 

பாடல் எண் : 5

 

தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
    பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்
    ஆங்காரந் தவிர்நெஞ்சே
 யமரர்க் காக
முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று
    முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்த பெருங் கருணையன்நெய்த் தான மென்று
    நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.


 

பொழிப்புரை :

 

நெஞ்சே ! உரிய காலம் முடிந்த பின் சிறிது நேரமும் தாமதிக்காமல் உயிர்விடுத்து நீங்கும் இவ்வுடம்பை மேம்பட்ட பொருளாகப் பெரிதும் கருதி நம் புத்தியினாலே இந்த உலகம் முழுதையும் நமக்கு அடிமைப்படுத்தலாம் என்று பேசும் தன் முனைப்பை நீக்கு. தேவர்களுக்காகப் பகைத்து வந்த மதில்கள் மூன்றும் அழியுமாறு முன்னொரு காலத்தில் விரைவாகத் தூக்கிய வில்லை வளைத்து அம்மதில்களைத் தீக்கு இரையாக்க நினைத்துச் செயற்பட்ட பெரிய கருணையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும்.  
 
 
 
 
 
    

பாடல் எண் :  6

 

மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி
    வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை    கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப
    அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
    நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.


 

பொழிப்புரை :

 

நெஞ்சே ! துன்பமே விளைக்கின்ற இந்த உடலில் வாழும் வாழ்வு நிலையானது என்று கருதி வினைப்பயனிலே கிடந்து ஈடுபட்டு மகிழாதே. தம்மைப் பற்றித் தாழ்வாகக் கருதுபவர் மனத்து இருப்பவனாய், முருகனுக்குத் தந்தையாய், கூத்தாடுதலைப் பண்பாக உடையவனாய், கொல்லும் முத்தலை வேல் ஏந்திய கையனாய்த் திருவடிகளில், கழலும், சிலம்பும் ஒலிக்க இவ்வுலகமே பெயருமாறு ஆடும் ஊழிக் கூத்தில் மனநிறையுடையவனாகிய சிவபெருமானுடைய திருத்தலமாகிய நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாம்.
  
  
 

பாடல் எண் :  7

 

பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்
    பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு
வாசக் குழல்மடவார் போக மென்னும்
    வலைப்பட்டு வீழாதே
 வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீ றாடித்
    துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா
நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று
    நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

 
 
பொழிப்புரை :
 
நெஞ்சே ! வருக. பேசுதற்கு ஏற்ற உயர்ந்த பொருள் அல்லாத இப்பிறவியைக் கிட்டுதற்கு அரிய பொருளாக உன் அற்பப்புத்தியில் கருதி நறுமணம் கமழும் கூந்தலையுடைய மகளிர் இன்பம் என்னும் வலையில் அகப்பட்டு அழியாமல், யானைத்தோலை உரித்துப் போர்த்துத்தூய திருநீறு பூசிப் பூணூல் அணிந்து, தன்னை அணுகாத கீழ்மக்களுக்கு அரியவனாயுள்ள சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம். 

No comments:

Post a Comment