🙏🏻தந்தை_மகனுக்கு_ஆற்றும்ன நன்றி சடைதரித்தல்_தீக்கை
சைவசமய மரபுகளில் குருநாதனே சீடருக்கு தந்தையாவார், இம்மரபினை தவறாது பின்பற்றுபவர்கள் எமையாளும் தருமையாதீனத்து அடியவர்கள் ஆவார்கள்
தருமையாதீன குருபீடத்தில் எழுந்தருளியுள்ள குருமணிகளை அணுகி துறவறம் ஏற்க விரும்பும் அடியவர்களுக்கு சிவாகமத்துள் விதித்தபடி படிமுறையிலான தீக்கைகள் செய்து அவர்களை துறவறத்தில் வழிநடத்தி குருமகாசன்னிதானங்கள் சிவஞானத் தெளிவை உண்டாக்குவார்கள்
இப்படி சீடருக்கு ஆச்சார்யர் வழங்கும் படிமுறையிலான தீக்கைகளில் ஒன்று சடைதரித்தல் தீக்கையாக தருமையாதீனத்தில் வழிவழியாக பின்பற்றப் படுகிறது
அண்டி வந்த அடியவருக்கு சிவகுருநாதர் காஷாயம், கௌபீனம், வேணுதண்டம், விபூதி பொக்கணம் முதலியவை வழங்கி சீடரின் சிரசை சிகையாகவோ, முண்டிதமாகவோ, சடையாகவோ செய்து, சிவஞான சாத்திரங்களை கைதந்து சிவஞானியாக்க வேண்டும் என்று சிவாகமத்தில் குறிக்கப் படுவதாக தருமையாதீனத்தின் வருணாசிரம சந்திரிகா குறிப்பிடுகிறது
மேலும் *"கவசமந்திரத்தால் சீடரின் சிரசை மறைத்து கொள்ள அவகுண்டம் என்ற வஸ்திரத்தையும் குருநாதர் தருவார்"* என்று சிவாகமம் கூறுகிறது
மேற்சொன்ன விசயங்களில் தருமையாதீன திருக்கூட்ட அடியவர்கள் வேணுதண்டம் தவிர மற்றையவற்றை குருநாதரிடம் பெற்றுவாழும் இயல்புடையவர்களாக இருப்பது காலங்காலமான மரபாகும்
தருமையாதீனத்தில் துறவறம் மேற்கொள்ள விரும்பும் அடியவருக்கு, முதலில் பக்குவத்திற்கு ஏற்ப ஆச்சார்யர் "யாத்திரை காஷாயம்" என்பதனை வழங்குவார்கள், இதன்பொழுது அடியவர் தமது சிகைகளைந்து காவிரியில் நீராடி ஆச்சார்யருக்கு முன்வரும்பொழுது உரிய ஆகமமுறையில் குருமகாசன்னிதானங்கள் அவருக்கு காவிஉடையை வழங்குவார்கள், தற்பொழுது அவர் தமது தாயாகவும் தந்தையாகவும் உடன்பிறந்தாராகவும் எல்லாமாகவும் இனி குருநாதரே இருப்பார் என்ற உறுதியை ஆச்சார்யருக்கு வழங்கவேண்டும் என்று ஆகமம் சாற்றுகிறது
யாத்திரை காஷாயம் பெற்ற அடியவர், அது முதல் பிக்ஷை ஏற்று உண்டு தேசாந்திரம் சென்று பக்குவம் அடைந்து குருநாதரை மீண்டும் அடைவது ஆகம மரபாகும்,
தருமையாதீனத்தில் யாத்திரை காஷாயம் பெற்ற அடியவர்கள் ஆதீனத்திலேயே தங்கியிருந்து, சன்னிதானத்தின் திருவுளப்படி யாத்திரைகள் செய்து குருமகா மகா சன்னிதானத்தின் பரிகலசேடத்தை உணவாக பெற்று உண்டு தருமையாதீன குருமூர்த்தங்களில் சரியாதி தொண்டுகள் செய்து பக்குவம் பெற்று வருவர்,
இந்நிலையில், காஷாயம் தரப்பட்டபோது களைந்த சிகை வளரத் தொடங்கும் போது அதனை மறைத்து கொள்வதற்காக மேற்சொன்னபடி குருமகாசன்னிதானத்தின் திருவுளப் படியான ஒரு நன்னாளில் குருமகாசன்னிதானம் சீடருக்கு *"கவசமந்திரத்தின் மூலம் அவகுண்டமான வஸ்திரத்தை வழங்குகிறார்கள்"*
இதனை தருமையாதீன வழக்கத்தில் *"ஜடபரிவட்டம்"* என்பார்கள், ஆச்சார்யரிடத்து ஜடபரிவட்டம் பெற்ற அடியவர் எப்பொழுதும் அதனை தமது சிரசில் அணிந்து கொள்ளுவது வழக்கமும் மரபுமாகும்,
பின்னாளில் என்றைக்கு அச்சீடருக்கு ஆச்சார்யத்துவம் கிடைக்குமோ அதுவரையிலும் அவர் ஜடபரிவட்டம் இல்லாது குருநாதருக்கு எதிரில் வருவதோ, சுவாமி சன்னதியில் பிரவேசிப்பதோ மரபில்லை!! அவகுண்டம் என்றாலே மூடுதல் என்று பொருள், "அனுட்டான கிரியைகளில் அவகுண்ட முத்திரையை எண்ணி கொள்ளுக", இதன்படி சீடர் தமது சிரசை மறைத்து கொண்டு தொண்டு செய்து வருங்காலத்தில் அவரது சிகையும் வளர்ந்து வரும்,
சிவகமத்தில் கூறிய துறவிகள் சிகைமுடிப்போ, முண்டிதமோ செய்யலாம், சடையும் தரிக்கலாம் என்ற மரபின்படி *"தருமையாதீனத்தின் சிறப்பு அடையாளமாகவே சடைதரித்தல் இருக்கிறது!!*
ஏனைய சைவாதீனங்களான துறைசை, வேளாக்குறிச்சி முதலியவற்றில் முண்டிதமாக செய்து கொள்வதனை பின்பற்றுகிறார்கள், *"தருமையாதீனமே சடை தரித்தலை வழக்கமாக கொண்டிருக்கிறது!!"*
இதன்படி, சீடருக்கு வளர்ந்துவிட்ட சிகையினை சடையாக கட்டிக் கொள்வதற்கான வழிமுறையை குருநாதரே செய்வது சடைதரித்தல் தீக்கை எனப்படுகிறது
தேவாரத்தில் இறைவரது சடாபாரத்தை பற்றி, *"கந்தம் மல்கு கமழ்புன் சடையாரே!!"*, என்றும் *"நீட வல்ல வார்சடையான் மேய நெடுங்களம்"* என்பது முதலிய திருவாக்குகளால் நமையுடைய பெருமக்கள் கூறுகின்றனர்
இங்கு புன்சடை என்பது சிறிது சிறிதாக அள்ளிமுடிக்கப் பட்ட சடை என்றும், வார்சடை என்பது நீண்டு இருக்கும் சடை என்றும் பொருள் விளங்குகிறது,
*"மருந்து வேண்டில் இவை, மந்திரங்கள் இவை, புரிந்து கேட்கப் படும் புண்ணியங்கள் இவை, திருந்து தேவன்குடி தேவர் தேவு எய்திய அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே!!"* என்று இறைவனது திருவேடத்தினை பற்றி பிள்ளையார் கூறுவதனை அப்படியே கைக்கொள்ளும் தருமையாதீன அடியவர்களுக்கு,
*ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானங்கள் தமது திருக்கரங்களாலேயே தமது சீடரது சிரசினை தீண்டி சீடரின் சிகையை புன்சடையாகவும் வார்சடையாகவும் செய்கிறார்கள், இதுவே சடை தரித்தல் தீக்கை எனப்படுகிறது"*
இதன்போது சீடரின் சிகையை சிறுசிறு பகுதியாக எடுத்து அதில் சாம்பிராணி தைலம் முதலிய முக்கிய பொருட்கள் கலந்த கலவையை தடவி சிறுநூல்கொண்டு குருமகாசன்னிதானம் கட்டிவிடுகிறார்கள், இதன் பிறகு சீடரது முழுசிகையும் *"கந்தம் மல்கு கமழ் புன் சடையாகவும் வார்சடையாகவும் தோன்றும்"* இதனை அவர்கள் தமது ஜடபரிவட்டத்தால் மூடி சுற்றி கட்டிகொள்வார்கள்
இப்படி சடையை சுற்றி கட்டி கொள்வதற்கான அனுமதியையும் குருநாதரே உரிய நன்னாளில் வழங்குகிறார்கள், இதன் மூலம் தருமையாதீன திருக்கூட்ட அடியவர்கள், *"அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்ட வார்சடையன்"* போல காட்சி தருவார்கள்
மேற் சொன்ன தேவாரம் *"வட்ட வார் சடையை உடைய இறைவனை அட்டமாசித்திகள் சென்று அடையும் என்று கூறுகிறது!!"* இது போலவே தருமையாதீன அடியவர்களும் தமது புன்சடையை வார்சடையை வட்டமாக கட்டிகொள்கிறார்கள், தருமையாதினத்திற்கே உரிய யோக அமைப்பான பதினாறொடுக்கத்தின் மூலம் அட்டமாசித்திகள் கைவரப்பெறும் யோகத்தையும் பயில்கிறார்கள்
ஆக!!, தேவரத்தில் காட்டப் பெறும் இறைவனது திருக்கோலத்தையே நினைப்பிக்கும் வல்லமை உடையவர்களாக தருமையாதீன குருமகாசன்னிதானங்களும் அவர்களது சீடர்களும் தோன்றுகிறார்கள் என்று இதன் மூலம் தெள்ளிதின் விளங்குகிறது!!
மேற்சொன்ன சடைதரித்தல் தீக்கை இன்று ஆதீனத்தின் திருச்சிராப்பள்ளி மௌனமடகட்டளை விசாரணை சுவாமிகளுக்கும் சீர்காழி சட்டநாதஸ்வாமி தேவஸ்தான கட்டளை விசாரணை சுவாமிகளுக்கும் எமையாளுடைய பெருமானார் 27வதுகுருமகா சன்னிதானங்கள் மூலம் செய்விக்கப் பெற்றுள்ளது
இவ்வரிய காட்சிகள் நாம்வாழும் காலத்திலும் நடக்கின்றது அதனை நாம் காணவும் முடிகிறது என்பதெல்லாம் நம்பால் ஸ்ரீலஸ்ரீ 27வது குருமகா சன்னிதானங்கள் கொண்ட கருணையே அன்றி வேறென்ன!?
*"அருட்குருவாகும் நின் திருக்கூட்டம் வாழ்க!!நற்கோநிரைகள் தெருவாழ் தருமை திருஞான சம்பந்த தேசிகனே!!"*
🔥சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் பொற் பாதங்கள் சரணம்🔥
**சிவாய நம🙇 சிவமே தவம் .சிவனே சரணாகதி*
*அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி*
🌹சித்தமெல்லாம்🌹
🌹சிவ மயமே🌹
🙇ஷிவானி கௌரி 🙇
திருச்சிற்றம்பலம்🙏🏻❤️
நன்றி: சிவதீபன்
No comments:
Post a Comment