Friday, June 28, 2024

திருப்புகழ் கிடைத்த கதை


திருப்புகழ் கிடைத்த கதை:-
திருப்புகழ் நெருப்பென்று  அறிவோம்..

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  24 நான்கு வருட உழைப்பை நாம் அறிவோமா? அதற்கு யார் காரணம் என்பதை  வரலாறு அறியுமா?

அருணகிரிநாதர் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்
திருப்புகழ் ஆகும். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. அதாவது கிடைத்துள்ளன. இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும். இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசை நூல்களில் அடங்காத தனித்தன்மை பெற்றவை. 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன்...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை.... என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்பொழிவுகளைத் தொடங்குவார். அவர் மூலமே அடியேனுக்கும் திருப்புகழ் அறிமுகம் ஆனது.

அத்தகைய திருப்புகழ் நமக்கு கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்றது தொண்டினாலும், ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது 
அந்த  போற்றுதலுக்குரிய அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.

திருப்புகழ் நமக்கு கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது.
அவர் குறித்து  ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது.
அதை இப்போது சித்தர்களின் குரல் வாயிலாக பார்ப்போம்.....

பிரிட்டிஷ்காரர்கள் என்ற மாபாவிகள்  இந்தியாவை ஆண்டபோது  இந்தியர்களுக்கு அரிதாகவே அரசுப் பணி தருவார்கள். ஒருவர் மாவட்ட ஆட்சியர் ஆகும் தகுதி இருந்தால், அவர் இந்தியராக இருந்தால், அவருக்கு எழுத்தர் வேலை கொடுப்பார்கள்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர்.

அப்பாடலின் வரி;

வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை
மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே...

பொருள்:
              வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே....

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் அந்தப் பாடலை கேட்ட மாத்திரத்தில் சொக்கிப் போனார். என்ன பாடல் அது எனக் கேட்டார். அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ்  பாடல்கள் 16000 இல் ஒன்று என்று சொன்னார்கள். எங்கே அந்நூலைக்  காட்டுங்கள் என்றார். ஓலைச்சுவடி ஒன்றை நீட்டினார்கள். மீதம் பாடல்கள்  எங்கே.. என்று பதறினார்... எங்களிடம் இல்லை என்று கை விரித்தார்கள்.

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக் கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின.....

(1)  1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 

(2) 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. 

(3) அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 

(4) 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 

(5) 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது "என் சரித்திரம்" நூலில் பதிவுசெய்துள்ளார்.

அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,

"எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே" என்ற வாக்கால் கூறியுள்ளார்.

ஆனால்  வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது.

ஓலைச்சுவடிகளின் குறை களைக் களைந்து சீர் செய்வ தற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார்.

திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் தமது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும்புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

நாம் இன்று முருகனை நினைந்து உருகிப் பாடும் திருப்புகழ் ஒரு தனி நபர் விடா முயற்சியால் தான் என நாம் நினைக்கும்போது அய்யா வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் பெருந்தொண்டு எத்தகையது என நன்றியுடன் வணங்குவோம்.

சந்த முனி யின் 1324 திருப்புகழ் பாடல்களில் மொத்தமாக 857 சந்தங்களும் அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன. என ஓர் ஆய்வுக் குறிப்பு சொல்கிறது.

நமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் 857 சந்த பேதம்; 16000 பாடல்களும் கிடைத்திருந்தால்….!!

உதாரணமாக ஒரு மிக எளிய பாடல் பழனி  திருப்புகழில் இருந்து பார்ப்போம்.

சந்தம்:

தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான

பாடல் :

அபகார நிந்தைபட் ...... டுழலாதே
     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
     உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
     இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
     திருவாவி னன்குடிப் ...... பெருமாளே..

 இப்பாடலில் அருணகிரிநாதர் சாமிகள் முருகனின் அருள் பெறுவதற்கான எளிய வழிகள் சொல்கிறார்.
      பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அதனால் வினைகளை ஈட்டி விடாமல், அவ்வாறு  தீய  குணங்கள் கொண்ட மனிதர்களுடன் பழகாமலும், உரிய கிரியைகளுடன் கூடிய பூசையை தினம்  செய்தால் முருகனின் அருள் பெறலாம் என்கிறார்.  ஒவ்வொரு சைவரும் ஜெபமாலை வைத்து இருக்க வேண்டும்.

திருமுருகன் ஆறுபடைகளில் மூன்றாவது படைவீடு திருஆவினன்குடி என நக்கீரதேவ நாயனார் அவர்களால் திருமுருகாற்றுப்படை நூலில் பாடப்பட்டு  இருக்கிறது. இத்திருக்கோயிலில் மயிலில் ஆரோகணித்து திருமுருகன் வீற்றிருப்பார். பழனி மலைமேல் இருக்கும் தண்டபாணி கோயில் படை வீடு அல்ல என்பர் பெரியோர்.

திருத்தணி திருப்புகழில் அருணகிரிநாதர் சுவாமிகள் திருப்புகழ் சிறப்பு சொல்கிறார்.

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்.

அய்யா  வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் நம் கையில் உள்ளது. நெருப்பையும் எரிக்கும் நெருப்பான  திருப்புகழில் இருந்து எளிய பாடல் ஒன்றாவது தினம் ஒன்று விடாமல் சொல்வோம்... முருகனின் திருவருள் பெறுவோம்.

படம்:
    - அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

            - சித்தர்களின் குரல்.

Thursday, June 27, 2024

தமிழர்களின் ஐந்து திணைகளுக்குமான கடவுள்கள், வழிபடும் முறைகள்!



ஐந்து திணைகள் - 

தமிழர்களின் ஐந்து திணைகளுக்குமான கடவுள்கள், வழிபடும் முறைகள்!

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகள். திணைக்கடவுள்கள் பற்றி தொல்காப்பியம் என்கிறது.

இதில் பாலைத் திணை தவிர்த்து நான்கு திணைக் கடவுள்கள் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஏனெனில், `பாலை’ என்பது தனி நிலம் அல்ல. குறிஞ்சியும் முல்லையும் மழை இல்லாமல் காய்ந்து போன நிலமே பாலை எனப்படும். எனினும், பாலைக்கும் தெய்வம் உண்டு. ஒவ்வொரு திணை மக்களும் ஒவ்வொரு கடவுளை வழிபட்டனர். அவை மாயோன், சேயோன், வேந்தன் , வருணன், கொற்றவை ஆகியன. ஐந்திணை மக்களின் வழிபாட்டு முறையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

முருகன் - சேயோன்

ஐந்து வகை தமிழர் திணைகளுள் இது முதன்மையானது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சித் திணையில் வாழ்ந்த மக்கள் குன்றக்குறவர்கள் ஆவர். இவர்கள் ஐவனம், தினை ஆகிய தானியங்களைப் பயிரிட்டு வாழ்ந்தவர்கள் . குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகு. முருகுக்கு நெடுவேள், சேய் போன்ற பெயர்களும் உண்டு. முருகுவை 'சேயோன்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

மலையே முருகு வீற்றிருக்கும் இடமாகும். குறிஞ்சி நிலத்தில் செந்தினையை நீரோடு கலந்து தூவி வழிபடும் முறை இருந்தது. இது வேலன் வெறியாடிய சடங்கு எனப்படும். இது இளம்பெண்ணைப் பற்றிய முருகனை விலக்கிட வேண்டி நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இது புராதன சமயம் சார்ந்தது . முருகையே பிற்காலத்தில் 'முருகன்' என்று அழைத்தனர். மலையில் உறைந்து இன்றளவிற்கும் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் புரியும் தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

திருமால் - மாயோன்

காடும் காடு சார்ந்த இடமும் முல்லை. இது குறிஞ்சிக்கும் மருதத்துக்கும் இடைப்பட்ட நிலம். இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் உணவாக வரகு, சாமை இருந்தன. முல்லை நில மக்கள் மால் எனப்படும் திருமாலை தங்கள் கடவுளாக வழிபட்டனர் . திருமாலை 'மாயோன்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

திருமால் நீலமணி போன்றவர் என்றும், கரிய மலர் போன்றவர் என்றும் கார்மேகம், காரிருள், கடல் போன்றவர் என்றும் சொல்லப்படுகிறது. சங்க இலக்கியங்கள், `ஒளிரும் திருமேனியையுடையவர்’ என்று குறிக்கின்றன. திருமாலை, 'கண்ணன்' என்றும் அழைக்கின்றனர். ஆடுமாடு மேய்த்தல் முல்லை நில மக்களின் தொழில். முல்லை நில மக்களில் ஒருவராகப் பிறந்தவரே கண்ணன் . முல்லை நில மக்களுக்கு வரும் துன்பங்களைப் போக்கி அவர்களைக் காப்பாற்றியவரே கண்ணன் என்றும் சொல்லப்படுகிறது.

இந்திரன் - வேந்தன்

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். மருத நில மக்களின் இறைவன் இந்திரன். 'வேந்தன்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இந்திரன் என்ற சொல்லுக்கு, `வேதக் கடவுளரின் தலைவன்’ என்று பொருள் . போருக்குச் செல்லும் முன்னர் இந்திரனையே மருத நில மக்கள் வணங்கினர். இந்திரன், பொன் இடியை ஆயுதமாகக் கொண்டவன். இந்திரனுடைய ஆயுதம் 'வஜ்ஜிராயுதம். வஜ்ஜிரம் என்றால், `இடி’ என்று பொருள்.

இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக்கொண்டவன். சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா பற்றித் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்றோர் மருத நில மக்கள் ஆவர். வேளாண்மையே மருத நில மக்களின் தொழில்.

வருணன்

கடலும் கடல் சார்ந்த நிலமே நெய்தல். சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் நெய்தல் நிலத்து மக்கள் ஆவர். நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன். வருணன் ஆகாயத்தைக் குறிப்பவர். வருணன் மேகம், மழை, ஆறு, கடல் என்று நீர் நிலைகளுடன் தொடர்புடைய நீர்க்கடவுள். உலகம் முழுவதும் பரந்து இருப்பவர். `உலகத்தையே ஆள்பவர்’ என்று அழைக்கப்படுவதும் உண்டு.

நெய்தல் நில மக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் காணிக்கையாகச் செலுத்தி, தங்கள் கடல் தெய்வத்தை வழிபட்டனர். சிலப்பதிகாரத்தில் மாதவி, கோவலன் அல்லாத வேறொருவனை தான் காதல்கொண்டது போல் பாடியதை மன்னிக்க வேண்டி கடல் தெய்வமான வருணனை வழிபடுகிறாள்.

கொற்றவை

முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போன நிலமே பாலை. விடலை, காளை, மறவர், மறத்தியர் பாலை நிலத்து மக்கள். பாலை நிலத்தின் கடவுள் 'கொற்றவை'.

கொற்றவைக்கு அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சி முதலியன படைக்கப்படும். கொற்றவை பவனி வரும்போது புல்லாங்குழல் இசைக்கப்படும். பாலை நில மக்கள் தாங்கள் போருக்குச் செல்லும் முன்னர் போரில் வெற்றியடைய தங்கள் தெய்வத்தை வழிபடுவர்.

ஐந்திணைக் கடவுள்களைப் போற்றும் விழாக்கள்

கார்த்திகைக் கார்த்திகை : முருகன்
ஆவணித் திருவோணம் : மாயோன்
சித்திரைச் சித்திரை: இந்திரன்
மாசி மகம் : வருணன்
புரட்டாசித் திருவோணம்: கொற்றவை

தமிழர்கள் ஆதிகாலத்தில் இயற்கையையே தங்கள் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் இருந்து மேம்பட்டவிதமாகத் தங்களைக் காத்த மக்களையே இறைவனாக வழிபடத் தொடங்கியது திணைவாழ்வில்தான். ஐந்திணைக் கடவுள்களும் அவ்வகைக் கடவுள்களே. தமிழர் மரபில் ஐந்திணை வாழ்வியல், வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மாயோன் (முல்லை), சேயோன் (குறிஞ்சி), வேந்தன் (மருதம்), வருணன் (நெய்தல்), கொற்றவை (பாலை)

Monday, June 10, 2024

இறைவனிடம் இறைவன் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்

*இறைவனிடம் இறைவன் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்*

1. ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

2. உத்திரகோசமங்கை - பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

3. இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.

4. திருவுசாத்தானம் - இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

5. ஆலங்குடி - சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

6. திருவான்மியூர் - அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

7. திருவாவடுதுறை - அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

8. சிதம்பரம் - பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.

9. திருப்பூவாளியூர் - நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.

10. திருமங்களம் - சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

11. திருக்கழு குன்றம் - சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

12. திருமயிலை - 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.

13. செய்யாறு - வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.

14. திருவெண்காடு - நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.

15. திருப்பனந்தாள் - அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.

16. திருக்கடவூர் - பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

17. திருவானைக்கா - அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.

18. மயிலாடுதுறை - குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.

19. திருவாவடுதுறை - அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.

20. தென்மருதூர் - 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.

21. விருத்தாசலம் - இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.

22. திருப்பெருந்துறை - மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.

23. உத்தரமாயூரம் - ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.

24. காஞ்சி - ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.

25. திருப்புறம்பயம் - சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.

26. விளநகர் - அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.

27. திருத்துருத்தி - சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.

28. கரூர் - ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.

29. திருவோத்தூர் - ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

Thursday, June 6, 2024

அது என்ன அடைப்பு ?

இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும்!

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.
• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. 

அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.

முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.

ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.