மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் .thank FB
வாழ்க்கையில் ஒருமுறையேனும்
கண்ணார காண வேண்டிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை!
அங்கயர்கண்ணி அன்னை மீனாட்சி நாள் தோறும் பல பூஜைகளையும் பல தரபட்ட அலங்காரங்களும் தந்தருள்கிறாள்.
திருவிழா மற்றும் திருப்பரங்குன்றத்திற்க்கு பயணம் எனும் போது மட்டும் ஒரு சில வகை பூஜைகள் நடக்காமல் இருந்து விடுகிறது.
ஆனால் வருடத்தில் 365 நாட்களும் இடைவிடாது நடக்கும் ஒரே பூஜை இந்த பள்ளியறை பூஜை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜை.
வருடத்தில் 5 தினங்கள் கோவிலின் நடை சாத்தப்பட்டு இருந்தாலும் சுவாமியும், அம்மனும் திரும்பி இந்த பூஜையில் நிச்சயமாக அருள்பாலிக்கின்றனர்.
சிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இரவு வெகுநேரம் நடை திறந்திருந்தாலும் அதிகாலை 3-4 மணியளவில் இப்பூஜைகள் நடக்கும்.
அதே போல் தெப்பதிருவிழா மற்றும் திருப்பரங்குன்றத்து குமரனுக்கு திருக்கல்யாண உற்சவநாளுக்கும் முதல் நாள் இரவே இப்பூஜைகளை இரவு முழூவதும் பக்தர்களுக்கு காண அருள் பாலிக்கின்றனர்.
எல்லாகோவிலிலும் முதலில் சுவாமிக்கு தான் தீபஆராதனை மற்றும் எல்லாவித பூஜைகள் செய்வர். ஆனால் மதுரையில் முதலில் அம்மனுக்கு தான் பூஜை செய்வது வழக்கம். இதற்க்கு
பல வித காரணங்கள் உள்ளன.
1. மீனாட்சி அம்மன் முதலில் மதுரையை ஆண்ட சமயத்தில் எல்லா வித மரியாதைகளும் அவருக்கே முதலில் செய்யப்பட்டதாகவும் காலப்போக்கில் அதுவே வழி வழியாக வந்ததாகவும் சொல்லப்படுகிறது
2. மனைவியானவள் கணவனுக்கு முன்பாக எழுந்து தயாராகி கணவனுக்கு பணிவிடை செய்து எழுப்பவேண்டும் என்ற நியதியை கடைப்பிடிக்க இவ்வாறு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இரவு 8:00 மணியளவில் அம்மன் சன்னிதி திரையிடப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வெள்ளை மலர்களாலும், மற்றும் வெண்நிற பட்டு சாற்றியும் அருட்காட்சி தருவாள் அன்னை அங்கயர்கண்ணி.
மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து தரும் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.
அவ்வாறு காட்சி தரும் அன்னையை தரிசித்தால் கையில் கிளியேந்திய கலைவாணி இவளே தான் என்றும் சிலர் சத்தியம் செய்து விடுவர், இவரே தான் அந்த வேதமாதாவோ என்றும் தோன்றக்கூடும்!
பள்ளியறை பூஜை:
முதல் நாள் இரவு சுவாமி தன் சன்னிதியில் இருந்து கிளம்பி வெளியே வருவார்! பிறகு கம்பத்தடி மண்டபத்திற்க்கு முன்னால் இருந்து, சமயக்குறவர்கள் சன்னிதியில் ஓதுவார்கள் தேவார பதிகம் பாடலிசைக்க பயணம் அம்மன் சன்னிதி நோக்கி தொடரும்.
பின் முக்கூருனி விநாயகருக்கு அருகில் தீபஆராதனையும் - அம்மன் சன்னிதி நுழைவாயிலில் பாதபூஜை நடக்கும். சுவாமி பல்லக்கில் இருந்த வாரே அம்மன் சன்னிதிக்குள் செல்வார், பிறகு திருமலை நாயக்கர் சன்னிதிக்கருகில் ஒரு முறை தீபாராதனை காட்டுவர், கடைசியாக பள்ளியறை எதிரில் இருக்கும் வாசல் வழியாக நேரே பள்ளியறைக்குச் செல்வார்.
பிறகு இரவு 9.15 மணியளவில் நடக்கும் பள்ளியறை பூஜையின் போது சுவாமி பல்லக்கில், அம்மன் சன்னிதிக்கு எதிரில் வந்து நிற்பார். அவருக்கு பாதபூஜை நடக்கும். அவரது பாதபூஜையை கண்ணார கண்ட பக்தர்கள் அம்மன் சன்னிதிக்குள் அம்மனுக்கு செய்யப்படும் கடைசி நேர இரவு தீபாரதனை பூஜையினை காண ஓடுவர்
அம்மனுக்கு செய்யும் இந்த தீபாரதனையில் மேலும் ஒரு விசேஷம் என்ன வென்றால் அம்மனுக்கு சூட்டபட்டிருக்கும் மூக்குதியானது எத்தனை தூரமாக நாம் நின்று கண்டாலும், மிகத் தெளிவாக தெரியும். காரணம் உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.
ஆகவே தான் இந்த மூக்குத்தி மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர்.
அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனை தரிசிக்கலாம். பலர் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிக்க முடியவில்லை என்று சொல்வர், சிரமம் பார்க்காமல் இந்த பூஜைக்கு சென்றால் நிச்சயம் அம்மனை தரிசிக்க இயலும்.
பள்ளியறை பூஜை சமயம், ஓதுவார் ஒருவர்
"தேவ தேவோத்தமா
தேவதா சர்வ தோமா
ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகாச் எச்சரிகா!
பார்வதிப் பிரிய நாயகா எச்சரிகா
பாண்டியமண்டாலிதிபாஎச்சரிகா
சோமாநாத பாண்டிய மஹாராஜா பராக்!"
என்று பராக் சொல்ல, பல்லக்கில் இருந்து திருவாச்சி சமேதமாக இருக்கும் சோமசுந்தர கடவுளின் பாதுகை பள்ளியறை நோக்கி செல்லும்!
(எச்சரிகை என்பது பராக் என்பதன் இன்னொரு வடிவம்!
அரசன் வருவதைக் குறிப்பிடுவது.
எச்சரிக ரா ராம, ஹே ராமச்சந்திரா என்ற தியாகராஜர் பாடலும் இதே வகை தான்)
பின் தீப தூப ஆராதனைகள் ஆரம்பமாகும்.
தீபங்களில் 16 வகை உண்டு.
தூபம், மகாதீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப தீபம், புருஷா மிருக தீபம், ஓலதீபம், கமடதி தீபம், கணு தீபம், வியான்ர தீபம், சிம்ம தீபம், துவஜ தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம்
ஆகிய 16 வகை தீபஆராதனைகள் செய்வித்து! அப்பனும் அம்மையும் உளமகிழ்ந்து பொன்னூஞ்சலில் அமர்ந்து அருள்பாலிப்பர்.
மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது. (மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)
இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார். அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.
தீபஆராதனைகளனைத்தும் முடிந்தவுடன், கூடியிருக்கும் அடியார்கள்
"பொன்னூஞ்சலில் பூரித்து,
பூஷனங்கள் தரித்து!
பொன்னூஞ்சலில் பூரித்து,
பூஷனங்கள் தரித்து!
ஈசனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
கண்ணூஞ்சல் ஆடுகின்றாள்
காஞ்சனமாலை
மயிலாள் பொன்னூஞ்சல் ஆடுகின்றாள்...
பூலோக கைலாச,
பூலோக கைலாச
புண்ணியமா ம மதுரா,
புண்ணியமா ம மதுரா
ஆகாச சுந்தரேசா,
ஆகாச சுந்தரேசா
சதானந்தமே கண்மலராய்!
இந்திரயங்கள் பூஜிக்க,
சங்கரியும் பூரித்து
மங்களத்தாம்பூலம் ஆற்றினாள் - தேவி
தங்க கதவை மெல்ல சாற்றினாள்!"
என்று பாடலிசைக்க, விசிறி ஆட்டம் கண்டு, பின் ஊஞ்சல் ஆடி அப்பனும் அம்மையும் அருள்பாலித்து நடையை சாற்றுவர்!
ஒரே நாளில் தானே இச்சா, கிரியா மற்றும் ஞானசக்தியாக அருள்பாலிக்கும் மதுரை மீனாட்சி அன்னையை தரிசிக்க வேண்டிய நேரங்கள்.
இச்சா-சக்தி(காலை பொழுதில் - 11.00 மணியளவில்).
கிரியா-சக்தி (மாலை பொழுதில் மாலை 4-4.30 மணியளவில்).
ஞான-சக்தியாக (இரவு பொழுதில் - 8.00 மணியளவில்).
(அன்னையின் சக்தியினை ஒவ்வொரு நாளும் 5 விதமாகச் சொல்லுவர். காலையில் மஹா ஷோடசி (திருவனந்தல்), பின்னர் ப்ராத சந்தியில் பாலை, பின்னர் உச்சிகாலத்தில் கெளரி, மாலையில் மாதங்கீ, இரவில் பஞ்சதசாக்ஷரி என்பதாக சாக்த ரூபங்களைக் கொள்வதாகச் சொல்வது வழக்கம். இதனால்தான் லலிதா பரமேஸ்வரி/பராசக்தியின் சகல கலைகளையும் கொண்டவளாக மீனாக்ஷியைச் சொல்வது வழக்கம்.)
#aarakadai #sankara #meenakshi #சுந்தரேஸ்வரர் #madurai #டிராவல் #டூரிஸ்ட் #meenkashisundareswarar #டெம்பிள் Voice of the people —suriyaprakash
