Saturday, December 23, 2023

திருப்புல்வயல் குமரேச சதகம்

 குருபாததாசர் அருளிச்செய்த "திருப்புல்வயல் குமரேச சதகம்", கூறும் தந்தையர் ஒன்பதின்மர்.


தந்தையர் ஒன்பதின்மர்!





[இஃதொரு மீள் பதிவு. அன்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க....]

மின்னூல் இணைப்புடன்.......


குருபாததாசர் என்ற புலவர் இயற்றிய "திருப்புல்வயல் குமரேச சதகம்'' என்ற நூலில், நமது வாழ்க்கையில் கொள்ளுவன, தள்ளுவன, அறிவன என்ற முறையில் நல்ல நல்ல நீதிகள் சொல்லப்பட்டுள்ளன.


"தந்தை'' என்றாலே நம்மைப் பெற்றவர் மட்டும்தான் நமக்கு நினைவுக்கு வருவார். 


ஆனால், நம்மைப் பெற்றெடுத்த தந்தையைத் தவிர மேலும் எட்டு பேரை தந்தை நிலையில் வைத்து எண்ண வேண்டும்; போற்ற வேண்டும் என்கிறார் குருபாததாசர். "தந்தைகள்' என்ற தலைப்பில் சொல்லப்பட்ட செய்யுள் "தந்தை'' என்ற நிலையில் விளங்கும் உத்தமர்கள் ஒன்பது பேரை அறியத் தருகிறது.


முதல் தந்தை - பெற்றெடுத்தவர்; இரண்டாவது தந்தை- (ஒரு வேளை தந்தையை இழந்தவராக இருந்தால்) ஆதரித்து வளர்த்தவர்; மூன்றாவது தந்தை - கல்வியைக் கற்றுக் கொடுத்தவர்; நான்காவது தந்தை - ஞான உபதேசம் செய்த குருநாதர்; ஐந்தாவது தந்தை - குற்றம் குறைகள் இல்லாமல் நல்ல முறையில் ஆட்சி செய்யும் அரசர்.ஆறாவது தந்தை ‍-ஆபத்து நேரும்போது, "அஞ்சாதே!' என்று சொல்லி ஆபத்திலிருந்து காப்பாற்றி துயரத்தைத் தீர்த்தவர்; ஏழாவது தந்தை -‍ (நம்மிடம்) அன்புகொண்ட உள்ளம் உடையவர்; எட்டாவது தந்தை - தன் மனைவியைப் பெற்றெடுத்தவர் (மாமனார்); ஒன்பதாவது தந்தை - நமது வறுமையைத் தீர்த்தவர்.


இந்த ஒன்பது பேரையும் தினந்தோறும் தந்தையாகக் கருதி மரியாதை செலுத்துவதே நீதியாகும் என்கிறார் குருபாததாசர். அப்பாடல் வருமாறு:


குமரேச சதகம் - பிதாக்கள் – பாடல் 6

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


தவமது செய்தேபெற் றெடுத்தவன் முதற்பிதா,

தனைவளர்த்த வன்ஒருபிதா,

தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா,

சார்ந்தசற் குருவொருபிதா,


அவமறுத் தாள்கின்ற அரசொரு பிதா,நல்ல

ஆபத்து வேளைதன்னில்

அஞ்சல்என் றுற்றதயர் தீர்த்துளோன் ஒருபிதா,

அன்புள முனோன்ஒருபிதா,


கவளம்இடு மனைவியைப் பெற்றுளோன் ஒருபிதா,

கலிதவிர்த் தவன்ஒருபிதா,

காசினியில் இவரைநித் தம்பிதா என்றுளம்

கருதுவது நீதியாகும்


மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு

மதலையென வருகுருபரா!

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

மலைமேவு குமரேசனே! 6


- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்


பொருளுரை:


மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு மதலையென வருகுருபரா! மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!


தவம் புரிந்து ஈன்றெடுத்தவன் முதல்தந்தை, தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை, அருளுடன் கல்வியைக் கற்பித்தவன் ஒரு தந்தை, உயிர் நன்னிலை அடைய மறையை ஓதிக் கொடுத்தவன் ஒரு தந்தை,


துனபத்தை நீக்கிக் காப்பாற்றுகிற அரசன் ஒரு தந்தை, கொடிய இடையூறு வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை, அன்புடைய தமையன் ஒரு தந்தை,


உணவு ஊட்டும் மனைவியை ஈன்றவன் ஒரு தந்தை, வறுமையைப் போக்கியவன் ஒரு தந்தை, உலகில்

இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்திற் கொள்வது அறம் ஆகும்.


விளக்கவுரை:


முன்னோன் என்பது முனோன் என்று இடையில் எழுத்துக் குறைந்து வந்தது.

கவளம் - ஒரு பிடி; யானைக்கிடும் உணவையே கவளமென்று கூறுவது முன்னாள் வழக்கம்.

நாளடைவில் நாம் உண்ணும் உணவில் ஒருபிடிக்கும் வந்து வழங்கி விட்டது.

கலி - வறுமை. மவுலி - முடி; மதலை - மகன்.


குருபரன் - முருகன்; பரமனுக்கும் குருவாக இருந்ததனால் குருபரன் ஆனார்.


உலகியல் கற்பிப்பவன் ஓராசிரியன்; ஆன்மவியல் கற்பிப்பவன் மற்றோராசிரியன்; இவர்களைப்

போதகாசிரியன் எனவும் ஞானவாசிரியன் எனவும் கூறுவர்.


கருத்து:


பெற்றவனைப் போலவே வளர்த்தவன், கல்வி கற்பித்தவன், மறை சொல்லிக் கொடுத்தவன், அரசன், உற்ற இடத்தில் துணைசெய்தவன், தமையன், மனைவியின் தந்தை, வறுமையை நீக்கியவன் ஆகிய இவர்களும் ஒருவனுக்குத் தந்தை முறையில் வைத்து எண்ணத் தக்கவர்கள்.


சதகம் - சிறு குறிப்பு:


சதகம் என்ற சொல் வடமொழிச் சொல். வடமொழியில் சதம் என்றால் நூறு என்று பொருள்படும். சதம் என்ற சொல்லின் இடையில் 'க' என்ற ஓர் எழுத்து கூடிச் சதகம் என்று ஆகின்றது. இவ்வாறு இடையில் 'க' என்ற ஓர் எழுத்து வருதலைக் 'க-பிரத்தியயம்' என்று வடமொழி அறிஞர்கள் கூறுவார்கள். சதகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ''நூறு கொண்டது'' என்பது பொருள் ஆகும். நூறு எண் கொண்டதைச் சதகம் என்று வழங்குதலால் நூறு எண்ணிக்கை அளவுள்ள பாடல்களைக் கொண்டு அமையும் இலக்கியத்தையும் சதகம் என்ற வடமொழிப் பெயராலேயே அழைத்தனர்.


கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைத்தியநாத தேசிகரே தமது இலக்கண விளக்கப் பாட்டியலில் முதன் முதலாகச் சதகத்தின் இலக்கணத்தைக் கூறியுள்ளார்.


"விளையும் ஒருபொருள் மேலொரு நூறு

தழைய உரைத்தல் சதகம் என்ப"

(இலக்.வி. 847)


என்ற நூற்பா சதக இலக்கணத்தைக் கூறுகிறது. அகப்பொருள் பற்றியோ அல்லது புறப்பொருள் பற்றியோ நூறு செய்யுள்களில் உரைப்பது சதகம் ஆகும் என்பது மேல் நூற்பாவின் பொருள் ஆகும்.


"பயிலும் ஓர் பாட்டாய் நூறு உரைப்பதுதான் சதகம்"

(சுவாமிநாதம். 168)


என்று, சுவாமிநாதம் எனும் பாட்டியல் நூற்பாவும் மேல் கருத்தையே உறுதி செய்கின்றது. பொருள் அமைப்பை விடப் பாடல்களின் எண்ணிக்கைக்கே இந்நூற்பாக்களில் முதன்மை தரப்பட்டுள்ளது.


சதக இலக்கியங்களை மூன்று வகைகளாகப் பிரித்து உள்ளனர்.வரலாற்று நூல்கள்,துதி நூல்கள்,நீதி நூல்கள் என்பவையே அவை.


கொங்கு மண்டலச் சதகம் முதலியன வரலாற்று நூல்களில் அடங்கும். போற்றி வகையில் அமைந்த நூல்கள் துதி நூல் வகையில் அடங்கும். உலகியல் நீதி கூறும் சதகங்கள் நீதி நூல் வகையில் அடங்கும்.


சதக இலக்கியங்கள் பல்வேறு நோக்கங்களைக் கொண்டனவாக விளங்குகின்றன. முதல் சதகமாகிய கார்மண்டலச் சதகம் ஒரு மண்டலத்தின் பெருமையை விரித்துரைப்பதாக அமைந்துள்ளது. ஒரு நாட்டின் ஆட்சி, மன்னர், இயற்கை வளம் முதலியவற்றை விவரித்துள்ளது. சமய நோக்கம் கொண்டனவாகச் சில சதகங்கள் விளங்குகின்றன. சமய நோக்கம் என்பது சமயத்தைப் பரப்புதல், வேற்றுச் சமயத்தை மறுத்தல் எனும் இரு நிலையில் அமையும். கதை கூறுவதை நோக்கமாகக் கொண்டு மகாபாரதச் சதகம் அமைந்துள்ளது. சமுதாய நீதி கூறும் நோக்கில் சில சதகங்கள் அமைந்துள்ளன. குமரேச சதகம் இதற்குத் தக்க எடுத்துக்காட்டு. வாழ்வியல் நடைமுறைகளைப் பல்வேறு சதகங்கள் எடுத்துக் கூறுகின்றன. சகுனம், நம்பிக்கை முதலியனவாக அவை அமைந்துள்ளன.


சமயத் தத்துவத்தைச் சில சதகங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. தமிழ் மொழியின் சிறப்பு, கல்வியின் பெருமை முதலியனவும் நோக்கங்கள் ஆகும். சமுதாயச் சீர்திருத்தம், உடல் நலம் பேணல், முன்னோர் மொழியைப் போற்றுதல் முதலியனவும் சதக இலக்கியங்களின் நோக்கங்கள் ஆகும்.


சதகம் தனியொரு சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்ற காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஆகும். சதகம் என்ற சொல்லை மாணிக்கவாசகர் காலத்திலேயே அறிகிறோம். அவிநாசி ஆறைகிழார் இயற்றிய கார்மண்டலச் சதகம் என்னும் இலக்கியமே சதக இலக்கியங்களில் காலத்தால் மூத்த நூலாகத் திகழ்கிறது. அடுத்துப் படிக்காசுப் புலவர், தொண்டை மண்டலச் சதகம் என்ற நூலை இயற்றினார். இவர் பாடிய தண்டலையார் சதகம், சதக இலக்கியத்தின் ஒரு திருப்பு முனை ஆகும். பழமொழிகளைச் செய்யுள்தோறும் வைத்து இச்சதகத்தை அவர் பாடியுள்ளார். தொடர்ந்து 18-ஆம் நூற்றாண்டு வரை சதகம், மிகுதியாக இயற்றப்படும் பெருமையைப் பெற்றிருந்தது. 


குருபாததாசர் அருளிச்செய்த திருப்புல்வயல் குமரேச சதகம்


மின்னூல்கள் இணைப்பு:


குருபாததாசர் அருளிச்செய்த திருப்புல்வயல் குமரேச சதகம்.

ஆசிரியர் : குருபாத தாசர், active 18th century

பதிப்பாளர்: சென்னை : மலர்மகள் விலாச அச்சுக்கூடம் , 1955

வடிவ விளக்கம் : 64 p.

துறை / பொருள் : இலக்கியம்

குறிச் சொற்கள் : சதகம் , திருப்புல்வயல்.


https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp2kuQy


-------------------------------------------------------

குருபாததாசர் இயற்றிய திருப்புல்வயல் குமரேச சதகம்

ஆசிரியர் : குருபாத தாசர், active 18th century

பதிப்பாளர்: தஞ்சாவூர் : சரசுவதி மகால் நூலகம் , 1998

வடிவ விளக்கம் : xxxi, 300 p.

தொடர் தலைப்பு: சரசுவதி மகால் நூலகம் 392

துறை / பொருள் : இலக்கியம்

குறிச் சொற்கள் : சதகம் , குமரேச சதகம் , குருபாததாசர் , திருப்புல்வயல் ,

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM7kJly

‐---------------------‐-

Thursday, December 7, 2023

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 54 ஆண்டு

   பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 54ஆண்டு




"வரும் 10.12.2023 ஞாயிறு அன்று நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 54 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு  9.12.2023 மாலை 6.30 மணிக்கு பழமுதிர்சோலை முருகன் கோவிலில்  தங்கரதம் இழுக்க உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்

வரும் 10.12.2023 ஞாயிறு பழமுதிர் சோலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சபை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது"

Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai (Regd.No 32/16) 

Chamundi Supari
New 41 old 20/3 West Tower Street ,
Madurai -  625 001 
Cell: 9442408009 
chamundihari@gmail.com