Thank to Fb
#காந்தாரா இந்த படத்தின் அடிநாதத்தை அரசு மருத்துவரான அருண் பிள்ளை இன்னும் டீட்டெயிலாக தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், காந்தாரா திரைப்படத்தில் காட்டப்படும், பஞ்சுருளி மற்றும் குலிகா தெய்வங்களின் மூலமும், கதாப்பாத்திரங்கள் வழியாக தெய்வங்கள் ஊடுருவி சென்றது எப்படி என்பதை பற்றியும் கூறியுள்ளார்.
இதோ அவரது வார்த்தைகளில் இருந்து.. இதற்கு மேல் உலகமே பாராட்டிய படத்தை புகழ்ந்து எழுதுவது ஏற்புடையதல்ல. ஆகவே படத்தில் நீங்கள் புரிந்துக்கொள்ள தவறிய சிலவற்றைப் பற்றி எழுதுகிறேன். வேண்டுமானால் இந்த கட்டுரையை படித்து விட்டு மீண்டும் ஒருமுறை படத்தை OTTல் பாருங்களேன். 'காந்தாரா' என்றால் சமஸ்கிருதத்தில் 'அடர் காடு' என்று பொருள்படும். அது வெறும் மேம்போக்கான பொருள் மட்டுமே என்றாலும், உட்பொருள் 'பிறப்புகளின் அடர்வு' என்பதே ஆகும். ஒரு மனிதனின் ஜனன-மரண பிறவி என்பது காடு போன்றது. அதில் சிக்கி தவிக்காமல் இருக்க, சரணாகதி எனும் மோக்ஷமே வழி என்பது சூசகம்.
படத்தில் விலங்குகள் வாழும் காடு, மனிதர்கள் வாழும் கிராமம் இரண்டிற்குமான எல்லை வரையறை தான் முக்கிய பொருளாக பேசப்பட்டுள்ளது. இரண்டில் வாழும் உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று ஒன்றி வாழ வேண்டும் என்பதே வேட்கை. அதற்கு தெய்வம் எப்படி உதவியது என்பதே கதை. இதனைப் படத்தின் உட்பொருளாக எப்படி எடுத்து சென்றார்கள் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் முதலில் கர்நாடக மாநிலம் துளு நாட்டின்
சில பாரம்பரியங்களையும், கலாச்சாரங்களையும், அவர்களது மண்ணின் தெய்வங்களையும் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.
காந்தாரா காரணம்.. உருவான பிணைப்பு.. குலதெய்வம் கோவில்களுக்கு குடும்பத்தோடு கிளம்பி செல்லும் மக்கள்!
#பஞ்சுருளி ;
நான் முன்பு வராஹத்தைப் பற்றிய ஒரு பெரிய நீண்ட கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் வராஹம் எப்படி இந்திய நாட்டின் கலாச்சார தெய்வமானது என்பதனையும், பிறகு அது எப்படி விஷ்ணுவின் அவதாரமாக கொள்ளப்பட்டது என்பதனையும் விரிவாக எழுதியிருந்தேன். வராஹம் விஷ்ணுவின் அம்சமாக ஏற்றுக்கொள்ளப்படாத காலத்தில், துளு நாட்டினர் அத்தெய்வத்தை 'பஞ்சுருளி' என்று போற்றி வந்தனர். காடுகளின் முடிசூடா மன்னனான வராஹம், காட்டின் தெய்வமாக கருதப்பட்டது. இந்த பஞ்சுருளி தெய்வத்திற்கு உருவம் கிடையாது. செங்குத்தாக நிறுத்தப்படும் கல் ரூபமாக வணங்கப்பட்டு, வருடத்தின் ஒரு நாள் பூத கொலா என்ற பாரம்பரிய ஆட்டம் நிகழ்த்தப்பட்டு(படத்தில் காட்டப்பட்ட ஆட்டம்) வாக்கு கேட்கப்படும். அப்போது வராஹத்தைப் போன்ற உருவ கவசம் சாத்தப்படும். பஞ்சுருளி தெய்வத்திற்கென்று தனிக் கதை கிடையாது. மனிதன் காட்டில் பெரும்பாலும் சிங்கம் புலி போன்ற கொடிய விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதில்லை. ஆனால் சாதுவான வராஹத்தினை அடிக்கடி பார்க்க நேரிடும். வராஹம் மனிதனை சீண்டுவதில்லை, எனினும் அது மனிதனையே வீழ்த்தும் வல்லமைக் கொண்டது. ஆனால் முறையற்ற மனிதன், அதனை வேட்டையாடுவதை வாடிக்கையாக்கவும் தவறவில்லை. அச்செயல்களைத் தவிர்க்கவே வராஹம், மனிதன் எனும் விலங்குக்கும் வனத்தில் வாழும் கொடிய விலங்குகளுக்குமான ஒரு வரையறை விலங்கு போல் வைக்கப்பட்டது. அதனால் அக்காலத்தில் காட்டில் ஏராளமாக காணப்பட்டதும், வனப்பான தோற்றம் கொண்டதுமான வராஹம் தெய்வமாக கொள்ளப்பட்டிருக்கலாம்.
#குலிகா ;
படத்தில் வரும் அடுத்த தெய்வம் குளிகா. இது நாம் அனைவரும் படத்தில் கிரகிக்க மறந்த ஒரு தெய்வம். ஆனால் கதையே இந்த குளிகா தெய்வத்தை சுற்றி தான் நகர்கிறது. முதலில் யார் இந்த குளிகா என்று கூறிவிடுகிறேன். கைலாயத்தில் பார்வதி தேவி ஒரு நாள் சிவபெருமான் பூசிக் கொள்ள திருநீறு எடுத்து வந்தார், அதில் ஒரு கல் இருந்தது. அதனை சிவன் தூக்கி எறிய, அது சிவன் ஸ்பரிசம் பட்டு குளிகா எனும் பூத கணமாக மாறியது. அந்த கணத்தின் விசித்திரமான செய்கைகளால் சிவன் வேதனையுற்று குளிகாவை வைகுண்டத்தில் விஷ்ணுவிற்கு பணிவிடை செய்ய அனுப்பி வைத்தார். அங்கும் குளிகாவின் செய்கைகள் மாறாததால் ஆத்திரமடைந்த விஷ்ணு, குளிகாவை உலகில் பிறக்க சபித்தார்.
பூவுலகில் தாயின் நிறைமாத கர்ப்பத்தில் இருந்த குளிகா தன் தாயிடம் கேட்டது 'நான் உன் வயிற்றிலிருந்து எப்படி வெளி வர வேண்டும்?' அதற்கு தாய் 'மற்ற குழந்தைகள் போல் சுகப்பிரசவம் செய்' என்றாள். முன்பு சிவனையும் விஷ்ணுவையும் ஆத்திரமடைய செய்த விலங்கு குணமும் விதண்டாவாத செய்கைகளும் குளிகாவை நீங்கவில்லை. உடனே தாயின் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்தது. வந்த நேரத்தில் பசி பசி என்று கண்ணில் பட்ட அனைத்தையும் சாப்பிட்டது. விஷ்ணு துயின்ற கடலையும் குடித்து வற்றச்செய்து, அதிலிருந்த மீன்களையும் தின்று தீர்த்தது. பிறகு வனத்தில் புகுந்து யானை குதிரைகள் இரத்தம் குடித்தது. எவ்வளவு தின்றும் தீரா பசியும் தாகமும் கொண்ட குளிகாவிற்கு தன் சுண்டு விரல் இரத்தம் தந்து பசி அடக்கினார் விஷ்ணு.
#பஞ்சுருளியும்_குளிகாவும் ;
எனினும் நிலப்பிரதேசத்தின் குளிகாவை கானகத்தில் அடக்கி ஆளவே விஷ்ணு காட்டுப்பன்றி அவதாரம் எடுத்து பஞ்சுருளி ஆனார் எனலாம். அப்போது பஞ்சுருளிக்கும் குளிகாவுக்குமான சண்டை ஓயாது. விலங்கு குணம் கொண்ட குளிகாவை விலங்கு ரூபம் கொண்டு எதிர்த்தார் விஷ்ணு. இதற்கிடையே பார்வதி தேவியின் அம்சமான ஏழு ஜல துர்க்கைகள் (சப்தகன்னியர்) ஒருமுறை கானகத்திற்கு வந்திருந்த போது, குளிகாவிற்கு அடைக்கலம் கொடுத்து உணவளித்து சாந்தப்படுத்தினர். அப்போது பஞ்சுருளிக்கும் குளிகாவிற்குமான சச்சரவுகளைத் தீர்த்து வைத்து இருவரையும் அண்ணன்-தம்பி போல் வாழ கேட்டுக்கொண்டனர். குளிகாவை தங்கள் காவல் தெய்வமாக ஆக்கிக் கொண்டனர். இதனால் குளிகாவிற்கு 'ஷேத்திரபாலன்' என்ற பெயரும் உண்டு. இதனால் காடு-கிராமம் ஆகியவற்றின் எல்லை தெய்வங்களாக முறையே பஞ்சுருளி-குளிகா போற்றப்பட்டனர். இருநிலங்களுக்குமான எல்லை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகவே வழிபடப்பட்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் இணைபிரியாதவர்களாக மாறினர். காலப்போக்கில் குளிகா, பஞ்சுருளியின் காவல் தெய்வமாக ஆக்கப்பட்டார்! காரணம் காடு அழிவை சந்தித்தது, கிராமம் காட்டை காக்க வேண்டியதாயிற்று. குளிகாவிற்கு தனி உருவம் கிடையாது. வானத்தை பார்த்த கல் ஒன்றே குளிகாவாக ஏற்கப்பட்டது. இதற்கும் தனியே குளிகா கொலா என்ற ஆட்டம் உண்டு (படத்தில் காட்டப்படவில்லை).
#வராஹ_ரூபம்_பாடல் ;
படத்தின் அடிநாதமாக விளங்கியது 'வராஹ ரூபம்' பாடல். இந்த பாடல் தோடி, மோஹனம் ஆகிய இராகங்களால் தந்த கிரக்கத்தையும், அத்தோடு கூடிய பயபக்தியையும் ஒருவர் வாய்விட்டு கூறிவிட முடியாது. காரணம் அது ஒவ்வொரு ஆன்மாவின் பக்தியினையும் அதன் ஆழ்மனதில் சென்று கிளறியுள்ளது. அத்தனை மொழிகளும், இப்பாடலை மொழிபெயர்க்காமல் அப்படியே ஒரு ஸ்லோகம் போல் ஏற்றுக்கொண்டு விட்டது தான் இந்த பாடலின் தனித்துவம். மேலும் பாடல், மேலே சொன்ன கதையினை மிக அழகாக ஊர்ஜிதம் செய்கிறது. பாடலில் வரும் முதல் பத்தி வராஹத்தை போற்றுவது ஆகும்.
'வராஹ ரூபம் தெய்வ வரிஷ்டம்
வரஸ்மித வதனம்
வஜ்ர தந்த தர ரக்ஷா கவசம்'
வராஹம் என்னும் காட்டுப்பன்றியின் இந்த ஒப்பற்ற கடவுளின் ரூபம், வரங்கள் பல தரும் அவரின் மகிழ்ந்த கோலம் ஆகும். வைரம் போல் அங்கே ஒளிரும் அவரின் தந்தம்(கொம்பு) நம் அனைவரையும் காக்க வந்த கவச ஆயுதம் ஆகும்! பாடலின் இரண்டாவது பத்தி குளிகாவைப் பற்றியது என்று சொன்னாலும், இது வராஹத்திற்கும் பொருந்தும்.
'ஷிவ ஸம்பூத புவி ஸம்ஜாத
நம்பீ தவ கிம்பு கொடுவவ நீத
ஸாவிர தைவத மந ஸம்ப்ரீத்த
பேடுத நிந்தெவு ஆராதிஸுத!'
சிவ பெருமானின் சாராம்சம் கொண்டவரும், பூமித்தாயுடன் ஒன்றி வாழ்பவரும், நம்பியவர்களுக்கு அபயம் தருபவரும், ஆயிரமாயிரம் தேவர்களின் மனதை கவர்ந்தவருமான தேவரே! {எழுத்துரு - அருண் பிள்ளை} உங்கள் முன்பு பணிவோடு நாங்கள் கைக்கூப்பி நிற்கிறோம்! இதனால் தான் 'பூத கோலா' ஆடுபவர் சிவனைக் குறிக்கும் முக்கண் குறியீட்டினை நெற்றியில் இட்டும், மங்களத்தைக் குறிக்கும் மஞ்சள் நிறம் இட்டும், வராஹ படிமத்தை தலையில் தாங்கியும் ஆடுகிறார். 'குளிகா கொலா' என்ற ஆட்டத்தில் நடனமாடுபவர், குளிகாவாக மனித முக ரூபம் கொண்டு கருப்பு சிவப்பு வர்ணங்கள் இட்டு ஆடுவார். படத்தில் பார்க்கவேண்டுவன நிதர்சனத்தில் உள்ளது போன்றே பஞ்சுருளி-குளிகா என்கிற ying-yang characterisationஐ படத்திலும் காண்பித்திருக்கின்றனர். படத்தில் பஞ்சுருளி, வராஹமாகவே காட்டப்பட்டிருக்கும். குளிகா தான் நம்ம ஹீரோ!
மறைந்து போதல் - பூத கொலா ஆடுபவர் மறைந்து போவது என்பது அந்த ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களில் ஒன்று. நிஜ ஆட்டத்தில் தெய்வம் நீங்கி (மறைவதாக) காட்டப்பட்டாலும், படத்தில் அமானுஷ்ய முறையில் ஆடுபவரே மறைவதாக காட்டப்படுவது மிக அருமை. அடர் காட்டினுள் (பிறப்பு அடர்வு) சிக்கிக்கொள்ளாமல் இருக்க மறைவதே (மோக்ஷம்) சிறந்தது என்பது தான் சூசகம். சிவாவின் அப்பாவும் மோக்ஷம் அடைகிறார்.
#ஆட்கொள்ளுதல்
சிவா சிறுவயது வரை நல்லவனாகவே இருந்து வருகிறான். அவனது அப்பா மறைகின்ற போது, அங்கே அவரை நோக்கி ஓடுகிறான். அப்போது அனைவரும் பின் தொடர்ந்த போதும், அவர் மறைந்த மாய தீ வளையம் அவனை மட்டுமே உள் வாங்குகிறது. அந்த நொடியிலேயே குளிகா தெய்வம் அவனை ஆட்கொண்டுவிடுகிறது. குளிகா தான் - அது முதல், தன் தந்தையின் பிரிவு என்ற பெயரில் சிவா விலங்கு குணமும் விதண்டாவாத செய்கைகளும் கொண்ட அடங்காபிடாரியாகவும் குளிகாவின் குணத்துடன் திரிகிறான்.
மது மாமிசம் - குளிகாவின் செய்யற்கரிய செயல்கள் என்று தெய்வங்களை ஆத்திரமடைய செய்தது இவைகளே. மது அருந்துவதும், மாமிசங்கள் உண்பதும் என சிவா திரிந்தது குளிகாவின் செய்கைகளால் தான். சிவா காட்டுப்பன்றியை (வராஹம்) வேட்டையாடி உண்டதும் இவ்வகையையே சாரும். மீன் உணவு - குளிகா விஷ்ணுவின் கடலை உறிந்து மீன்களை உண்டது போல, படம் முழுவதும் சிவா மீன்களை விரும்பி சாப்பிடும் வழக்கத்தை கொண்டதும் ஒரு சூசகம். குளிகாவிற்கு மீன் மிகவும் பிடித்த உணவு.
பெயர் - முதலில் கதாநாயகனுக்கு சிவா என்ற பெயரே குளிகாவின் சிவ பூத கணம் என்ற குறியீடு தான்.
#மர_வீடு ;
சிவா எப்போதும் மரத்தின் உச்சியில் உள்ள வீட்டில் (வீட்டின் பெயர் கைலாயம், அது புராணப்படி, குலிகா பிறந்த இடம் என்பது மற்றொரு உவமை) வாழ்வதும் குளிகாவின் செய்கை எனலாம். சொர்க்கத்தில் இருந்து துரத்தப்பட்ட குளிகா, வானுக்குமில்லாமல் பூமிக்குமில்லாமல் வாழ்வதையே இது குறிக்கும். கெட்ட கனவுகள் - தன் காவல் தெய்வமான குளிகாவை பஞ்சுருளி அழைப்பதே சிவாவிற்கு வரும் கெட்ட கனவுகள். சாமியாடி தம்பியான குருவா கொல்லப்பட்ட போது, பஞ்சுருளி பூத கொலா வேடத்தில் சிறைக்கு வந்து அழுது புலம்பி அழைத்தது குளிகாவை தான். தன் கானகத்தினைக்/கிராமத்தினைக் காப்பாற்ற வேண்டுகிறது. படத்தில் பல முறை பஞ்சுருளி தெய்வம், வராஹமாக சிவாவை நேரடியாக தொடர்பு கொள்ளும். ஆனால் அவன் பயந்து ஓடி விடுவான். உண்மையில் அவன் வராஹத்தை எதிர்கொண்டு அதனை பயமுறுத்திய பிறகே (இருவரும் போட்டி போடும் பாவனை - பஞ்சுருளிக்கும் குளிகாவிற்குமான அடிப்படை பந்தம்) சிவா தன்னை குளிகாவாக உணர்கிறான். குளிகாவிற்கு இன்றளவும் பொரி மற்றும் இளநீர் படைப்பது வழக்கம், அதுவே குளிகா பொரி இறைக்கும் காட்சி. மேலும் சிவா மேலாடை இல்லாமல் வேட்டியுடன் ஆடும் அந்த ஆட்டம் தான் குளிகா கொலா.
#குளிகா_வெளிப்படுதல் ;
ஆதியில் மன்னனிடம் பேசும் போது பஞ்சுருளி தெய்வம் ஒரு கர்ஜனை விடுகிறது. நான் மறந்தாலும், என் காவல் தெய்வமான குளிகா சும்மா இருக்க மாட்டான் என்கிறது. அது போலவே படத்தின் இறுதியில் சிவா (மயங்கிய) பிறகு, பஞ்சுருளியின் அழைப்பின் பேரில் குளிகா முற்றிலுமாக வெளிப்படுகிறது. வானம் பார்த்த கல், அதன் அருகில் ஆயுதம் என்று climaxஇல் குளிகா முழுமையாக வெளிப்பட்டு அதகளம் செய்கிறது. மேலும் வில்லனைக் கொலை செய்யும் போது தன்னை க்ஷேத்திரபாலன் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறது. வந்த வேலை முடிந்ததாக, வனத்துறை அதிகாரியிடம் கிராமத்தினைத் தத்துக் கொடுக்கும் பாவனையில் ஆடுவது, காட்டை நோக்கி ஓடி மறைவது என அனைத்தும் மோக்ஷம் குறிக்கும். குளிகா (சிவா) ஓசையெழுப்ப, கானகத்தில் மறுஒலியை பஞ்சுருளி தெய்வம்(சிவாவின் அப்பா) எழுப்புகிறது. சிவா தனக்கான வேலை வந்தது என ஓடுகிறான். அங்கே அண்ணன் தம்பியாக பழக ஜல துர்க்கைகள் அணையிட்டவாறு இருவரும் சிலாகித்து மறைந்துவிடுகின்றனர். இதுவே பஞ்சுருளி-குளிகாவின் பந்த தத்துவம். இது தான் படம்! இறுதியில் மனிதன்-மிருகம்-கடவுள் : இந்த மூன்று தத்துவங்களும் இயற்கையாகவே ஒன்றோடு ஒன்று பினையப்பட்டுள்ளது. அவை ஒன்றோடு ஒன்று உறவாடி வாழ தகுதி உடையது என்பதனைக் கூறி, தவறினால் ஒன்று மற்றொன்றாக மாறிவிடும் என்பதனையும் மிக தெளிவாக, அழகாக கூறியுள்ளது இந்த காந்தாரா!