Thursday, May 17, 2012

சும்மா இரு சொல்லற [Stay Idle]சும்மா-இரு-சொல்-அற - அதீதம் கடைசிப் பக்கம்"மனம் ஒரு குரங்கு.. மனித மனம் ஒரு குரங்கு "
கண்ணதாசனின் வரிகள் பாடலாக டி.எம்.எஸ்ஸின் குரலில்  என் கணினியில் ஒலித்துக் கொண்டிருந்தது.  உண்மை தான். மனித மனம் என்றும் எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. எதையும் வெகு இலகுவில் நம்பிவிடுவதில்லை.  எத்தனை முயற்சித்தாலும் அது தன்னிலையில் ஒருமித்து இருப்பதில்லை. அப்படி ஒருமித்திருப்பது ஞானிகளுக்கும் யோகிகளுக்கு மட்டுமே  வாய்க்கும் போலிருக்கிறது.  இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட  பல நினைவுகள் இங்கும் அங்குமாய் அலைபாய்ந்துக் கொண்டிருக்கிறது.  


அருணகிரி நாதர், சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தமக்கையின் வளர்ப்பில் வளர்ந்தவர்.  போகங்களில் நாட்டம் கொண்டு தீ வழியில் சென்று தொழுநோயால் இடர்பட்டுக் கிடந்த போதும் அவரின் காமம் தணியவில்லை. ஆனால் தொழுநோய்க்காட்பவரை  எத்தனைப் பணம் கொடுத்தாலும் பரத்தையர் ஏற்கமாட்டார். இவரிடம் பணம் வேறு இல்லை. அவரின்  தமக்கையார் இவரை திருத்த  எடுத்த செயல்கள் யாவும் தோல்வியிலே முடிந்தது.  கடைசியாக  உனக்குத் தேவை பெண் தானே. நானும் பெண்தான் என்னை எடுத்துக் கொள் என்று தமக்கை அரற்றிய போது புத்தியில் தெளிவேற்பட்டது. கண்கெட்ட பின் செய்யும் சூரிய வணக்கம் போல உடல் தொழுநோயால் சிதைந்த பின் திருவண்ணாமலை மூன்றாம்  கோபுரத்தின் மேலேறி குதிக்கிறார்.


ஆனால் அவனன்றி  அணுவும் அசையாது எனும் போது இவரின் முயற்சி முருகப்  பெருமானின்  சித்தமின்றி நடைபெருமா என்ன ?  முருகா என்று கதறிக் கொண்டே விழும்  அருணகிரி நாதரை கந்தன் ஏந்தி நிற்கிறான்.  அப்போது அருணகிரியாருக்கு முருகன்  உபதேசிக்கிறான். அது என்ன என்பதை அருணைகிரியாரின் பாடல் மூலமே பார்ப்போமா ?

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.


புள்ளைங்க அப்பா இல்லாட்டி அம்மாவை உரிச்சுட்டு வந்திருக்கும். இந்த முருகன் இருக்கானில்ல அப்படியே அவங்க மாமன் கிருஷ்ணனை மாதிரி. என்ன பண்ணாங்கறீங்க ? மான் வயிற்றில் பிறந்தவளான வள்ளிய களவாடிட்டான்.  அப்படி திருடும் திருடனான பெருமான் முருகனுக்கு பிறப்பு இறப்பு எதுவுமே இல்லைங்க.  அந்த  முருகன் எமக்கு  சொன்ன உபதேசம் என்ன தெரியுமா ? சும்மா இரு.. பேச்சற்றிரு. ஆனா அதற்கு பொருள்  அடியேன் அறியலையே .. என்று அருணகிரி நாதர் பாடி இருக்கிறார்.


சும்மா இருத்தல் என்றால் என்ன? செயலெதுவும் செய்யாமல் இருப்பதா ?   சும்மா இருத்தலும் சொல்லற்றிருத்தலும் நம்மில் இன்று எத்தனை சாத்தியம் ?  ஆனால் அருணகிரி நாதர் அதை சாதித்திருக்கிறார். அந்தச் சாதனைக்குப் பின் தெளிந்தவர். முழு ஞானம் அடைந்தவர். அவர் அளித்த திருப்புகழ் அத்தனைக்கும்  சாட்சியாய் நம்மிடை இருக்கிறது.


பட்டினத்தாரும் இப்படித்தான் புலம்பி இருக்கிறார்


"சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!"


தாயுமானவரும் விட்டாரா ? அவரும் "சும்மா இருக்கும் சுகம் ஒன்று அறியேன் பராபரமே" என்று புலம்பி விட்டு  பின்,சும்மா இருக்க அறிந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்கிறார் கேளுங்கள்.


கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும்
கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகது லாவலாம்
விண்ணவரை  யேவல் கொளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி மும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
திறமரிது சத்தாகி யென்
சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே.


– தாயுமானவர்.
யானையை அடக்கலாம், குதிரையை அடக்கலாம், சிங்கத்தின் முதுகில் ஏறி செல்லலாம். இரசவாதம் செய்யலாம். எப்பவும் இளமையோட இருக்கலாம். தண்ணீர் மேல் நடக்கலாம்.  தீயில் நிற்கலாம்.. தன்னிகர் இல்லாத சித்தி பெறலாம். இதெல்லாம் எப்ப நடக்கும் ? சும்மா இருக்கும் திறம் அறிஞ்சா நடக்குமாம்.
உண்மையில் அலைபாயும் மனதால் எதையும் முழுமையாக சாதிக்க முடியாது.  ஒரு ஜென் கதை உண்டு.  ஜென் துறவி ஒருத்தரிடம்  சீடனாக ஒருவன் சேர விரும்பினான். ஆனால் குரு  ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது அங்கே இருக்கும் காலத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இரண்டு வார்த்தைகள் பேச அனுமதி உண்டு.   மற்ற நேரத்தில் மௌனம் மட்டுமே பயில வேண்டும் என்பதாய் அந்த நிபந்தனை இருந்தது.  சேரும் ஆர்வத்தில் அவனும் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு சேர்ந்து ஆறு மாதம் கழித்து அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தையை குருவிடம் சென்று சொன்னான்.


" படுக்கை கரடுமுரடு " அவ்வளவு தான். மீண்டும் பாடசாலைக்கு திரும்ப அனுப்பப் பட்டான். அடுத்து ஆறு மாதம் கழித்து மீண்டும் பேச வாய்ப்பு கொடுக்கப் பட்டது. 


சீடன் சொன்னான்
" சாப்பாடு பிடிக்கல" சொல்லி  முடிந்ததும் மீண்டும் பாடசாலைக்கு திரும்பச் சென்றான். அடுத்த ஆறு மாதம் முடிந்தது குருவிடம் வேக வேகமாகச் சென்றான். இந்த தடவை அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தையை வேகமாக உதிர்த்தான்


" நான் போகிறேன் "
இப்படியாக கற்கவேண்டியதை விடுத்து மாதம் முழுதும் என்ன பேசவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த மாணவன் என்ன கற்க முடியும் சொல்லுங்க. குரு  " போய்வா தம்பி.  நீ இங்கிருந்த காலம் முழுதும் குறை சொல்வதை மட்டுமே உன் குறிக்கோளாய் கொண்டிருந்தாய். உன்னால் இங்கே மேலும்  பயில்வது என்பது இயலாது " என்றார். 
இதைத்தான் பகவத் கீதையில் கண்ணன் அர்ஜ்ஜுனனுக்கு சொல்கிறான் யோகநிலையில் நில். யோகம் செயல்களிலே  திறமையானது என்று.  குழந்தையின் மனது நிஷ்கலங்கமற்றது.   உணவின் போது உணவு மட்டுமே அதற்கு நினைவில் இருக்கும். தூக்கத்தின் போது அலைபாயா மனமும் கொள்கிறது. அதனால் தான் குழந்தைகள்  நித்திரை என்று வரும் போது  படுத்த உடன் சட்டென்று தூங்க முடிகிறது.   பைபிளில் " நீங்கள் குழந்தைகள் போலானாலன்றி மோட்ச சாம்ராஜ்ஜியத்தை அடைய முடியாது" என்று சொல்வதும் இதைத் தான். இதயச் சுத்தி வேண்டும்.  தூய்மை இல்லா இதயத்தில் தெளிவேற்பட்டாற்போல் தெரிந்தாலும் மீண்டும்  குழம்பி விடும்.


யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥


என்கிறான் கண்ணன். அதாவது , அர்ச்சுனா, யோகத்தில் நின்று  உன் கடமையை செய்.  வெற்றியோ தோல்வியோ அதை உன் கவனத்தில் கொள்வது வேண்டாம். மன ஒருமித்தலோடு செய்தால் அதற்குண்டான பலன் நிச்சயம் என்று அறிவுறுத்துகிறான்.


எளிய உதாரணத்தோடு  சொல்வதென்றால்  ஜென் குருவிடம் ஒருத்தர் கேட்டாராம். ஜென் என்றால் என்ன என்று. அதற்கு அவர் சொன்னார் " உண்ணும் போது உண்ணுவது, உறங்கும் போது உறங்குவது. இது தான் ஜென்" என்றார்.  யோசித்து பாருங்கள். நம்மில் எத்தனை பேர் நாம் உண்ணும் போது உணவில்  கவனமும், உறங்கும் போது வேறெதுவும் நினைவுகளின்றி உறங்கவும் செய்கிறோம்.


ஆனால் பாருங்க இந்த அடங்கா மனசு எல்லாவற்றிற்கும் ஆசைப்படும். எதிலும் திருப்தி அடையாது.   ஒருவனுக்கு அவன் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். ஊர் ஊராக பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பையன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஏதோ ஒரு குறை சொல்லி தவிர்த்துக் கொண்டிருந்தான். கடைசியில் எல்லோரும் நம்பிக்கை இழந்து இருந்த நிலையில் இவனே தேடி கண்டுபிடித்து இவன் நினைத்தபடியான அழகு, உயரம், கருங்கூந்தல் என எல்லா வகையிலும் தான் நினைத்தவகையில் இருந்த பெண்ணை தேர்ந்தெடுத்தான்.   திருமணமும் நடந்து முடிந்தது.

அந்த காலத்தில் வருசத்துக்கு ஒரு முறை பாரதப் பிரசங்கம் செய்யும் வழக்கம் உண்டு என்பார்கள். அப்படியாவது மக்கள் ஏதேனும் காதில் போடுவார்கள் என்று நம்பிக்கை போல.  பிரசங்கம் ஆரம்பிப்பதை ஊருக்கே அறிவிக்கும் வரையில் மூன்று முறை வெடி வைத்து அறிவிப்பார்கள்.  இந்தப் பிள்ளையாண்டான் அந்தப் பெண்ணை மணம் முடித்து ஊருக்கு திரும்பும் போது தெரியாமல் அந்த வெடி வைக்கும் பக்கத்தில் வந்துவிட்டான். வெடி படார் படார் என்று வெடித்தது. இவன் காதைப் பொத்திக் கொண்டு நகர்ந்தான்.  கொஞ்ச தூரம் போனதும்  மணப் பெண் இவனிடம் கேட்டாள்.


" ஏங்க அங்க பொகை வரும் போது நீங்க ஏன் காதைப் பொத்துனீங்க ? பொகை வந்தா மூக்கைத்தானே பொத்தனும் "
 
 
- நன்றி kaladi blogspot

No comments:

Post a Comment