Wednesday, January 22, 2020

நல்லோர் நாடும் மௌன நிலை


பலர்கூடின் தருக்கம் செய்மின், இருவரானால் ஞானத்தில் தேர்மின்
தனிமையில் தியானம் செய்மின், வேறெவரும் வேண்டா தெளிமின்
(சௌஹட் என்றால் நாற்சந்தி. பலரும் கூடும் இடம் என்று கொள்ளலாம்)மாற்று :




தருக்கத்திற் குத்தேவை நால்வர், தேடுகின்ற ஞானத்திற் கிருவர்
பரமோ னத்திற்கு ஏகாந்தமே, தேவையு மில்லை இன்னொருவர்
சத்சங்கம் கூடி பலநல்வழிகளை விவாதித்து பரிசீலிப்பது ஆரம்ப முனைப்புகள்.
பிறகு குருவும் சீடனுமாகி இருவரே பகிர்ந்து கொள்ளும் ஞானத்தேடல். அதன் அடுத்த கட்டமாக ’பேசுவதால் பயனில்லை அனுபவத்தால் அறி’ என்பதைக் காட்டும் தியான மார்க்கம். இங்கே முன்னேற்றம் என்பது அவரவர் முயற்சியைப் பொறுத்தே அமையும். ஒருவருக்காக இன்னொருவர் எப்படி உண்ண இயலாதோ அப்படி குரு காட்டிய வழியில் தனியனாகவே பயணத்தை நடத்த வேண்டும் என்று கபீர் உணர்த்துகிறார்.
அறிந்ததை -அல்லது கற்றதை -உள்வாங்கி உண்மையை அறியும் அந்த பயிற்சி தனிமையிலே தியானத்திலே செய்ய வேண்டியது. பாரதியாரும் குள்ளச்சாமி தனக்கு தரும் உபதேசமாக அதைக் குறிப்பிடுகிறார்.

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே; பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒரு குட்டிச் சுவர் காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுள் தன் விம்பங்காட்டி,
”அறிகொலோ!” எனக்கேட்டான். அறிந்தேன் என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான், யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன் கை காட்டி எனக்குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்’
“வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே
தெரிவது போல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்” என்றான்.

பேசுவதில் பயனில்லை என்பதை தாயுமானசுவாமிகளும் உணர்த்துகிறார்.

நேராயம் மௌன நிலை நில்லாமல் வாய்பேசி
ஆராய் அலைந்தீர்நீர் ஆகெடுவீர் தேரீர்
திரையுந் திரையுநதிச் சென்னியனை நாவால்
கரையுங் கரையும் மனக்கல்

(நாவால் கரையும் = இறைவன் புகழை செபித்தல்; திரையுந் திரையுநதி சென்னியனை = அலைபொங்கும் கங்கையை தன்னுள் அடக்கியவன்)
கல்போன்ற மனதை கரைக்க வல்லது இறைவன் நாமம். அதற்குத் தேவை முழு சரணாகதி பக்குவம். அதனையே ”தேடுகின்ற ஞானத்திற் கிருவர்” என்று குருவின் அவசியத்தை கபீர் உரைக்கிறார். குரு கிருபை இருந்துமே பரமோனம் சுயமுயற்சி இல்லாமல் கைகூடாது என்பதையும் தாயுமானவர் பாடுகிறார்

எல்லாமே மோன நிறை எய்துதலால் எவ்விடத்தும்
நல்லோர்கள் மோன நிலை நாடினார் -பொல்லாத
’நான்’ என இங்கொன்றை முளைக்க விட்டு இங்கு
ஏன் அலைந்தேன் மோன குருவே.

‘நான் என ஏன் அலைந்தேன்’ என்னும் பிரச்சனைக்கு முடிவு ’மௌனமே’ ஆகும். பேசினால் தர்க்கம் வருகிறது. தர்க்கத்தில் ’நான்’ தலையெடுக்கிறது. அதன்பின்னும் அது மனதை விட்டு அகலாமல் களைச் செடி போல உறுத்திக் கொண்டே இருக்கிறது. களையெடுத்தல் தியான நிலையில் மட்டுமே சாத்தியம்.

ஆரம்பத்தில் தியான முயற்சிகள் சுய பரிசோதனைக் களமாக இருப்பினும் நாளாவட்டத்தில் களைகள் போன பரிசுத்த நிலையில் இறைவன் பால் அன்பு மிகுத்து ’காதலாகி கசிந்து கண்ணீர் மல்க’ வைக்கும்.

மோனத்திலே  தான் உண்மையான பக்தியும் ஞானமும் மலர்கின்றன. அது கைகூடாத வரை சாதகனின் முயற்சிகள் எல்லாம் விசாரமாகத் தான் இருக்குமே ஒழிய் அனுபவமாக இருக்காது. அதை சுட்டிக் காட்டத் தான் பராபரக் கண்ணியிலும் தாயுமானவர் தன் விண்ணப்பத்தை முன் வைக்கிறார்

மோனந்தரு ஞானமூட்டி எனக்கு வட்டா
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே


மௌன விரதம் என்பது என்ன??


மௌனமாக இருந்து பழகினால், மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்பர். மோனம் (மௌனம் ) என்பது ஞானவரம்பு என்று அவ்வையார் குறிப்பிடுகிறார். சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மொழி என்ன தெரியுமா?  மௌன மொழி. ஆம்..இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்துக்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மவுனச்சாமி என்ற பெயர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மௌனமாக இருப்பது வழிபாட்டு வகைகளில் ஒன்றாகும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தியானித்து மௌனவிரதம் மேற்கொள்வது இதனால் தான். பெரும்பாலான துறவிகள் வியாழக்கிழமைகளில் பேசுவதில்லை. மவுனத்தில் மூன்று வகை உண்டு. அவை உடல் மௌனம், வாக்கு மௌனம், மன மௌனம் என்பன. உடலைச் சிறிதும் அசைக்காமல் கட்டைபோல இருப்பது உடல் மௌனம். இவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டி தியானத்தில் ஆழ்ந்திருப்பர். வாக்கு மௌனம் என்பது பேசாமல் அமைதி காப்பதாகும். மனதாலும் மௌனமாக இருப்பதே மன மௌனம். இந்த மௌனங்களை கடைபிடிப்பவர்கள் ஞானநிலை எய்துவதுடன், கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுகிறார்கள்.

thank: https://sivarppanam.blogspot.com/2012/09/blog-post_16.html

No comments:

Post a Comment