Thursday, April 9, 2020

ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்

Thank FB karthi


திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது. இவ்வூர் முற்காலத்தில் ‘ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்’ என அழைக்கப்பட்டது. இங்கு அப்பரானந்தா சுவாமிகள் வந்து தவம் புரிந்த பின் ‘நிஷ்டைபுரி’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி நிட்டைபுரி என மாறி, இறுதியில் ‘நெட்டூர்’ என பெயர் பெற்றது.

இவ்வூரில்தான் மிகப்பெரிய அதிசய அருள் சக்தி குடிகொண்டுள்ளது. ஆம்.. அகத்தியப் பெருமானுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த முருகப்பெருமான் சன்னிதிக்குள், அப்பரானந்தா சுவாமி சமாதி அமைந்திருக்கிறது. இது எங்குமே காணக்கிடைக்காத அற்புதத் தரிசனம். குருவின் மூலஸ்தானம் அருகே சமாதி நிலை யாருக்கு கிடைக்கும்?. அப்படி கிடைத்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய மகானாக திகழ்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.

யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்?. இவர் எங்கிருந்து இவ்வூருக்கு வந்தார்?

தூத்துக்குடிக்கு அருகில் உள்ள பட்டினமருதூரில், சகல கலைகளிலும் வல்லவரான மகாராஜப் புலவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி மதுரவல்லி. ஆதிமூலப் புலவர், ஆறுமுகப் புலவர், அருணாசலப் புலவர், கந்தசாமிப் புலவர், நல்ல குமாருப் புலவர், சங்கிலி வீரப் புலவர், முத்தம்மாள், அய்யம்பெருமாள் புலவர் ஆகிய எட்டுபேர் இவர்களின் குலத்தோன்றல்கள். இவர்களில் அய்யம்பெருமாள் தான் பிற்காலத்தில் அப்பரானந்தா சுவாமிகளானார்.

குழந்தைகளுக்கு பக்தி, உண்மை, ஒழுக்கம், கல்வி ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தனர் பெற்றோர். முதல் ஆறு பேருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. முத்தம்மையை ஸ்ரீரெங்க பூபாலசமுத்திரத்தைச் சேர்ந்த வேலுமயில் பண்டிதருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். தம்பி அய்யம்பெருமாள் மீது பாசம் கொண்ட முத்தம்மாள், அவரையும் தன்னுடன் அழைத்து வந்தார். இதனால் அக்காள் வீட்டில் பாதி நாளையும் தனது சொந்த ஊரில் மீதி நாளையும் கழித்து வந்தார் அய்யம்பெருமாள்.

சுரண்டைப் பகுதியில் வாழ்ந்தவர், குழந்தை முக்தானந்த தேசிகர். அவர் திருக்குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டுப் பட்டினமருதூர் வந்து சேர்ந்தார். அங்கு விளையாடுகின்ற சிறுவர் கூட்டத்தில் அய்யம்பெருமாளைக் கண்டார். தமக்குத் தொண்டு செய்வதற்கேற்றச் சீடன் என்று நினைத்தார். அய்யம்பெருமாளை அழைத்து, ‘உன்னை நீ அறிவாயாக' என்று கூறி திருநீறு வழங்கி உபதேசம் செய்தார். அன்று முதல் குழந்தை முக்தானந்த தேசிகரை குருவாக ஏற்று, அவர்வழி நடந்தார் அய்யம்பெருமாள். குருவுடன் பல சிவ தலங்களுக்குச் சென்றார். இறுதியில் இருவரும் மதுரையில் தங்கினர்.

இந்த நிலையில் அய்யம்பெருமாளைக் காணாமல், அவரது பெற்றோர் தேடத் தொடங்கினர். குல தெய்வத்திடம் வந்து முறையிட்டனர். ‘உன் மகன், பரிசுத்தமான தேசிகனோடு மதுரையில் உள்ளான்' என வாக்கு கிடைத்தது.

மறுநாளே மதுரைக்கு ஓடோடிச் சென்றார், மகாராஜப் புலவர். அங்கே குருவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார் அய்யம்பெருமாள்.

மகாராஜப் புலவரைக் கண்ட குழந்தை முக்தானந்த தேசிகர், ‘இவன் உன்னுடைய மகனல்ல.. ஞானி' எனக் கூறி அய்யம்பெருமாளை, தந்தையோடு அனுப்பிவைத்தார்.

தந்தையும், மகனும் பட்டின மருதூர் திரும்பினர். அது முதல் அய்யம்பெருமாள் திடீர் திடீரென்று மாயமாக மறைந்து விடுவார். அவருக்கு கால்கட்டு போட்டால் சரியாகி விடும் என பெற்றோர் நினைத்தனர். இதற்காக களக்காட்டில் மாதவப் பண்டிதரின் மகள் இருளகற்றி அம்மையைத் திருமணம் செய்ய பேசி முடித்தனர். மணவறையில் தாலிக் கட்டும் சமயம், அய்யம்பெருமாள் மாயமாய் மறைந்து விட்டார். அனைவரும் அதிர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர், ‘இவன் பேய் போல.. இவன் எப்படி நம் பெண்ணை வைத்து காப்பாற்றுவான்' என வருந்தினர்.

அப்போது அய்யம்பெருமாளின் சகோதரி முத்தம்மை, ‘தம்பி! உன்னை நானும், உன் அன்பர்களும் அறிவோம். மற்றவர்கள் அறியமாட்டார்கள். தயவு செய்து மணவறையில் காட்சிக் கொடு' என வேண்டினார். அதன்பின் அவர் மணவறையில் தோன்றி இருளகற்றியை மணம் செய்து கொண்டார்.

தம்பதியர் பட்டினமருதூருக்கு வந்து சேர்ந்தனர்.

சில நாட்களிலேயே, தன்னுடைய தவத்திற்கு இல்லறம் தடையாக இருப்பதை அய்யம்பெருமாள் உணர்ந்தார். எனவே முத்தம்மையின் இல்லம் தேடி வந்தார். அங்கு சிற்றாற்றங்கரையில் தவமேற்றினார். இருளகற்றி அம்மையும் அங்கேயே வந்து விட்டார். சுவாமிகள் முச்சந்தியில் அமர்ந்து நிஷ்டையில் தவமேற்றினார்.

சித்தரை தனது அரியணையில் அமரவைத்து ஜமீன்தார் வணங்கி நின்ற காட்சி

நாட்கள் கடந்து பல மாதமாகியும் தவம் முடிந்தப்பாடில்லை. அவரைச் சுற்றிக் கரையான் புற்று உருவானது. மழை, வெயில் தாக்கி விடக்கூடாது என முத்தம்மாளும், இருளகற்றியும் தங்களது முந்தானைச் சேலையால் கரையான் புற்றை மூடி பாதுகாத்தனர். அய்யம்பெருமாளின் உடல் முழுவதும் கரையான் புற்றில் மறைந்து விட்டது. தமக்கையும், மனைவியும் உறக்கம் இல்லாமல், 20 நாட்கள் பக்தியோடு முப் புடாதி அம்மனை நோக்கி நோன்பிருந்தனர்.

அய்யம்பெருமாளின் தவத்தை கலைக்கும் பொறுப்பை அன்னையானவள், விநாயகப்பெருமானிடம் ஒப்படைத்தார். விநாயகர் யானை உருவம் கொண்டு தன் துதிக்கையால் புற்றை பெயர்த்து எடுத்து, சித்ரா நதியில் தூக்கி வீசினார். நீரில் புற்று மண் முழுவதும் கரைந்தது. அய்யம்பெருமாளின் உடல் குளர்ச்சி உண்டாயிற்று. இதனால் அவர் தவம் நீங்கி கரையேறினார். அவருக்கு ஆடை கொடுத்த தமக்கைக்கும், மனைவிக்கும் திருநீறு பூசி ஆசி வழங்கினார்.

அய்யம்பெருமாளிள் இந்த நீண்ட நிஷ்டையான தவத்தால்தான், இந்த ஊர் ‘நிஷ்டையூர்’ என்று வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்துக்கு பின் முப்புடாதி அம்மனை வழிபடுவதை வழக்கமாக்கினார் அய்யம்பெருமாள். ஒரு நாள் அன்னை, ‘நீ.. இல்லறத்தில் சிறப்புற வாழ வேண்டும்' என வாழ்த்தி, அழகிய வேல் ஒன்றைக் கொடுத்தார். அந்த வேலை, பக்தியுடன் நெட்டூரில் வைத்து வணங்கினார். அதன்பின் இல்லறத்தில் மனநிறைவுடன் ஈடுபட்டார். அதன் பயனாக அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்.

பின்னர் அய்யம்பெருமாளின் மனைவியும் துறவறம் ஏற்றுக்கொண்டார். கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து, இறை பணி செய்ய ஆரம்பித்தனர்.

சாதுகளுக்கு தவமேற்ற நல்ல இடம் வேண்டுமே.. எனவே நெட்டூரில் பூந்தோட்டத்தில் தவமேற்றினார். இவரைப் பற்றி அறியாத மேல்தட்டு மக்கள் இவரை நோக்கி கல் எறிந்தனர். ஆனால் அவர்கள் எறிந்த கல் ஒன்றுகூட அப்பரானந்தர் மீது படவில்லை. இதனால் பயந்து போன அவர்கள், அங்கிருந்து ஓடினர். பலர் மனம் திருந்தி, அவருக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் கொடுத்த பொன், பொருட்களை, சைவ சமய வளர்ச்சிக்கு சித்தர் பயன்படுத்தினார்.

அப்பரானந்த சித்தர் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார். தவத்தில் இருக்கும் போது அகத்திக் கீரை, சோறு ஆகியவற்றைப் பிசைந்து மக்களுக்கு தருவார். இதனால் நோய் தீர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வூரில் இருந்த வெற்றிலை கொடிகால் பயிரிடும் தொழிலாளிகள், சித்தரின் தவ உணவுக்கு பொருள் அளிப்பார்கள். இதனால் அவர்களின் கொடிகால் அமோக விளைச்சல் அடைந்தது.

சித்தர் தவமிருக்க தனிமையை நாடிச் செல்லும் போதெல்லாம், இருளகற்றி அம்மை தினமும் முருகனின் வேலுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒரு முறை ஆலங்குளம் அருகே உள்ள ஒக்க நின்றான் பொத்தையில், அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அவரது தவம் பல மாதங்களைக் கடந்தது. உயிர்க் காற்றையே உணவாக கொண்டு தவமியற்றிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் சொக்கம்பட்டி ஜமீன்தார் வடகரைப்பாண்டியன், அந்தப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை திகைக்கச் செய்தது. அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருக்க, அவர் முன்பாக இரண்டு நாகங்கள் படமெடுத்து காவல் காத்துக் கொண்டிருந்தன.

ஜமீன்தார், சித்தரின் முன்பாக விழுந்து வணங்கினார். சுவாமிகள் தவம் கலைந்தது. ஆனால் கோபமடையவில்லை. தன்னோடு அரண்மனை வரவேண்டும் எனப் பணித்தார், ஜமீன்தார்.

அதற்கு சித்தர், ‘நீ இப்போது இங்கிருந்து செல். நான் 7 நாளில் அங்கே வருகிறேன்' என்று அருளினார். அது போலவே அரண் மனைக்குச் சென்றார். இந்தக் கால கட்டத்தில் ஜமீனின் சில பகுதிகளை ஜமீன்தார் இழந்திருந்தார். அதுகுறித்து சித்தரிடம் ஜமீன்தார் கேட்க, மூன்று விரலைக் காட்டினார். முருகன் அருளால் மூன்று மாதத்தில் அவருக்கு இழந்தப் பகுதி கிடைத்தது.

இதையடுத்து ஜமீன்தாருக்கு சித்தரின் மேல் அதீத பற்று ஏற்பட்டது. அவர் அடிக்கடி சித்தரை சந்திப்பதும், அவரை அரண் மனைக்கு அழைத்து உபசரிப்பதும் வாடிக்கையாகிப் போனது.

ஒரு முறை சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்திருந்தார் சித்தர்.

அவரை தான் அமரும் அரியணையில் அமரச் செய்து அழகு பார்த்தார், ஜமீன்தார். அந்தச் சமயத்தில் எட்டையபுரம் ஜமீனின் தலைமை புலவர் கடிகை முத்து புலவர் அங்கு வந்தார்.

அவர் ‘யார் இந்தப் பரதேசி.. இவனுக்கு ஏன் இந்த மதிப்பு மரியாதை' என கிண்டல் செய்தார்.

அவரை மவுனமாக, புன்சிரிப்புடன் பார்த்தார் அப்பரானந்தா சித்தர்.

அந்த மவுனச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.

இவர் எனக்கு ஞானகுரு. என் பிறவித் துயர் தீர்க்கும் மெய்க்குரு' என பதறியபடி கூறினார்.

அதற்கும் எகத்தாளமான சிரிப்பை உதிர்த்தார் கடிகை முத்து புலவர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடிகை முத்து புலவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையில் அப்பரானந்த சித்தர் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரின் வாதங்களையும் சிரித்தபடியே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

நாட்கள் கடந்தன.

எட்டயபுரம் வந்த கடிகை முத்து புலவருக்கு கன்னத்தில் புற்று நோய் உருவாகி விட்டது. இதனால் அன்னம், தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்தார். வலியால் துடித்தார். சங்கரன்கோவில், திருச்செந்தூர் என ஒவ்வொரு தலங்களாகச் சென்று, இறைவனைப் பாடி சுகம் அளிக்கும்படி வேண்டினார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

ஒரு முறை திருச்செந்தூரில் வழிபட்ட கடிகை முத்து புலவர், இரவு நேரத்தில் ஆலயம் முன்பாக உள்ள கடற்கரையில் படுத்து கண் அயர்ந்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய முருகப் பெருமான், 'என்னுடைய சீடனை நீ பழித்து விட்டாய். நெட்டூர் போ.. அவன் கையால் உணவு வாங்கி சாப்பிடு. எல்லாம் சரியாகிவிடும்' என்றார்.

அதிர்ந்து போன புலவர், விடிந்தும் விடியாததுமாக நெட்டூர் வந்து சேர்ந்தார். அங்கு தியானத்தில் இருந்த அப்பரானந்த சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

இப்போதும் சிரித்தபடியே கடிகை முத்து புலவரைப் பார்த்தார் அப்பரானந்த சித்தர். பிறகு தான் தவப்பிச்சையாக பெற்று வைத்திருந்த அன்னத்தை புலவரின் கன்னத்தில் தேய்த்தார். தான் தவப் பிச்சை எடுத்து வரும் உணவை மூன்று நாட்கள் சாப்பிடும்படி கூறினார். புலவரும் அப்படியே செய்தார்.

என்ன ஆச்சரியம்.. புலவரின் நோய் பூரணமாக தீர்ந்து போனது. ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார், கடிகை முத்து புலவர்.

அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக 'அப்பரானந்த ஆனந்த மாலை' என்ற பாடல் தொகுப்பைப் பாடி, நன்றியுடன் சித்தர் வசம் அதைச் சமர்ப்பித்தார். அதன்பிறகு எட்டயபுரம் புறப்பட்டுச் சென்றார்.

குருவுக்கு மரியாதை

தனது குருநாதரான குழந்தை முக்தானந்த சுவாமிகள் பரிபூரணம் அடையப் போவதாக அய்யம்பெருமாளின் மனதுக்கு பட்டது. இருளகற்றியிடம் முறைப்படி வேலுக்கு பூஜை செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன் குரு அடங்கவுள்ள அம்பாசமுத்திரம் மன்னார் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

‘அய்யம்பெருமாள்! நீ என்னைக் காட்டிலும் பெருமை அடைந்து விட்டாய். உன்னை உலகம் ‘அப்பரானந்தா’ எனப் போற்றும். நீ மிகுந்த சித்தி அடைந்திருக்கிறாய். நான் வீடு பேறு அடையும் சமயத்தில் அதை அறிந்து நீ வந்தமையால் மகிழ்கின்றேன்’ என்ற குழந்தை முக்தானந்த சுவாமிகள், சிறிது நேரத்தில் சமாதி நிலை அடைந்தார். குருவுக்கு வேண்டியக் காரியங்களை நிறைவேற்றினார் அப்பரானந்தர்.

குருநாதரின் பாதக்குறடு, கைத்தண்டு முதலியவற்றை தன்னோடு எடுத்துக் கொண்டு, பாவநாசம், திருக்குற்றாலம் சென்று அவருக்காகச் சிறப்பு பூஜைகள் செய்தார். நெட்டூர் முருகன் கோவிலில் வைத்து பூஜை செய்தார். சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தில் குருவின் நினைவாக, அவரது பொருட்களுக்கு பூஜை நடத்தினார்.

 ஒரு முறை சித்தரை தரிசிக்க வந்த சொக்கம்பட்டி ஜமீன்தார், 'சுவாமி! நான் திருச்செந்தூர் செல்கிறேன். என்னுடன் பல்லக்கில் எழுந்தருள வேண்டும்' என்றார்.

அதற்கு சித்தர், 'எனக்கு சிவிகை வேண்டாம். உனக்கு முன் நான் திருச்செந்தூர் வந்து சேர்ந்து விடுவேன்' என்று கூறிவிட்டு, அங்கிருந்த மருதமரத்தின் அடியில் போய் அமர்ந்து கொண்டார்.

இதையடுத்து ஜமீன்தார் திருசெந்தூர் புறப்பட்டார். வழியில் அவருக்கு கடுமையான நீர் தாகம் எடுத்தது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது சேவகனின் முன்பு தோன்றிய அப்பரானந்த சித்தர், 'தென் கீழ்த்திசையில் போய் பார் தண்ணீர் கிடைக்கும்' என்றார். அது போலவே தண்ணீர் இருந்தது.

ஜமீன்தாருக்கு முன்பாகவே திருச்செந்தூர் ஆலயம் வந்த அப்பரானந்த சித்தர், சேவகன் வடிவில் ஆலய நிர்வாகத்தினரிடம் 'சொக்கம்பட்டி ஜமீன்தார் நாளை வருவான்' எனக் கூறி மறைந்தார்.

மறுநாள் ஜமீன்தாரை வரவேற்க ஆலய குருக்கள் காத்திருந்தனர். ஆச்சரியமுற்ற ஜமீன்தார், சுவாமி நேற்று இரவே இங்கு வந்து விட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, அங்கேயே தங்கினார் ஜமீன்தார்.

இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் சன்னிதிகள் மூடப்பட்ட பிறகு, ஆலயத்திற்குள் நுழைந்தார் அப்பரானந்த சித்தர். கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது. நேராக முருகப்பெருமான் சன்னிதிக்குச் சென்ற சித்தர், 'குருவே, நான் சித்தி அடைவது எப்போது?' எனக் கேட்டார்.

அப்போது அங்கு ஒரு குரல் கேட்டது. பேசியது முருகப்பெருமான் தான். 'அப்பரானந்தா! இன்னும் 24 மாத காலங்களுக்கு உனக்கு பணி உள்ளது. பெற்றோரின் கடன் முடித்த பிறகே உனக்கு சித்தி கிடைக்கும், நீ.. வணங்கும் வேல் அருகிலேயே உனக்கு சமாதி வைப்பார்கள். அதன் பின் கர்ப்பக்கிரகத்தில் தற்போது நீ வேல் வைத்து வணங்கிய இடத்தில், என்னை பிரதிஷ்டை செய்வார்கள். என்னை வணங்கும் பக்தர்கள் அனைவரும் உன்னையும் வணங்குவார்கள்' என கூறி அருளினார்.

இறைவனை தரிசித்து விட்டு வெளியே வந்தார் சித்தர். அனைத்தையும் வெளியே இருந்து கவனித்துக் கொண்டிருந்த சொக்கம்பட்டி ஜமீன்தாரின் சேவகன், ஆச்சரியத்துடன் இதுபற்றி ஜமீன்தாரிடம் கூறினான். அவருக்கு, முருகப்பெருமானுடன் பேசும் ஆற்றல் பெற்றவர் சித்தர் என்பதில் எல்லையில்லாத மகிழ்ச்சி.

உடனடியாக சித்தரைப் போய் சந்தித்த ஜமீன்தார், 'சுவாமி! நான் குழந்தை பேறு இல்லாமல் தவிக்கிறேனே. இதற்கு அருள்புரியமாட்டீர்களா' என்று வேண்டினார்.

'உனக்கு மகன் பிறப்பான். அதற்காக நீ.. செந்தூரில் உள்ள சரவணப் பொய்கையைச் சீர் செய்யவேண்டும்' என்றார் சித்தர். மறுநிமிடமே சரவணப்பொய்கையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தார் ஜமீன்தார்.

பின்னர் சொக்கம்பட்டி திரும்பும்போது, தனது தாகம் தீர்த்த சுனையைத் தேடினார். ஆனால் அந்த சுனை அங்கே இல்லை. எல்லாம் சித்தரின் செயல் என்று நினைத்தபடி அரண்மனை வந்து சேர்ந்தார். அப்பரானந்த சித்தர் கூறியபடியே ஜமீன்தாருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

 காலங்கள் கடந்தன. முருகப்பெருமான் சொன்னபடியே தனது தாய் தந்தைக்கு இறுதி மரியாதை செய்து விட்டு, நெட்டூரில் தவப்பிச்சை அன்னத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் அப்பரானந்த சித்தர். வேலுக்கும் தவறாமல் பூஜை செய்தார்.

இந்த நிலையில் இருளகற்றி அம்மையின் இறுதி காலத்தை சித்தர் உணர்ந்தார். அவரை தவம் செய்யும்படி சித்தர் பணித்தார். இருளகற்றியம்மை தவம் இருந்தார். அவரது உயிர் ஒளியில் கலந்தது. அவரது ஒடுக்கத்தை தான் அடங்கப்போகிற இடத்திற்கு அருகில் தன் கையாலேயே அமைத்தார். சித்தரின் தமக்கை முத்தம்மையும் அந்த ஆலய வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டார்.

அது ஒரு ஆனி மாதம் வியாக்கிழமை பூச நட்சத்திரம். அப்பரானந்த சித்தர், சொக்கம்பட்டி ஜமீன் மற்றும் பக்தர்களை அழைத் திருந்தார். பின் அவர்களை நோக்கி, ‘எனது இறுதி காலம் வந்து விட்டது. இருளகற்றிக்கு வடக்கில் என்னை அடக்கம் செய்யுங்கள். நான் ஒடுங்கியப் பின் இறைவனுக்கும் வேற்படைக்கும் உண்மையான அன்போடு பணி செய்யுங்கள். இந்த இடத்தில் நற்பணி செய்ேவாருக்கு எல்லா அறப் பயன்களும், பொருளும், இன்பமும் கிட்டும். அவர்கள் அனைவரும் முக்தியும் அடைவார்கள்’ என்று அருளினார்.

மேலும் ‘இந்தச் சன்னிதியில் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்யுங்கள். எல்லா தேவர்களும் துதி செய்ய அவர் இங்கு வந்து கோவில் கொள்வார்’ என்றார்.

அனைவரும் சூழ்ந்து நிற்க, அப்பரானந்தர் சிற்றாற்றில் நீராடினார். புலித் தோலை ஆசனமாக விரித்து வடக்கு நோக்கி பத்மா சனத்தில் அமர்ந்தார். சின்முத்திரைக் காட்டி அருட் சமாதி நிலையில் ஒன்றினார். எல்லாரும் அதிசயிக்குமாறு மேலேழுந்த ஒரு சோதி வான் நோக்கிச் சென்றது.

அதன்பின் அப்பரானந்த சித்தர் அருளியபடியே ஆலயம் அமைக்கப்பட்டது. கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்தார்கள். தற்போது இந்த ஆலயம் சுப்பிரமணிய சுவாமி, அப்பரானந்த சுவாமிகள் ஆலயம் என்றே போற்றப்படுகிறது.

அப்பரானந்த சுவாமிகளின் குருபூஜை ஆனி மாத பூசம் நட்சத்திரத்தில் நிகழ்த்தப்படுகிறது. இக்கோவிலில் திருச்செந்தூரில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் நடைபெறும்.

ஆனி திருவிழா தான் இக்கோவிலில் மணிமகுட திரு விழாவாகும். இவ்விழாவில் அன்ன பிச்சை வழங்கப்படும். இதற்காக அன்னம் குவிக்கப்பட்டு, சுவாமி மற்றும் அவரின் குருநாதரின் பாதக்குறடுகள், கைத் தண்டுகள் படையலில் வைத்து பூஜை செய்யப்படும். இச்சமயம் அப்பரானந்த சுவாமி களும் இவரது குருநாதர் குழந்தை முத்தானந்தா சுவாமிகளும் இங்கே வந்து அருளி நிற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அன்ன பிச்சையை சாதுக்கள் பக்தர்களுக்கு வழங் குவார்கள். அதை உண்ணும் மக்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. குறிப்பாக குழந்தை வரம். தடைபட்ட திருமணம் நடந்தேறுகிறது. கடன் தீர்ந்து தொழில் பெருகுகிறது. நாள் பட்ட நோய் தீருகிறது.

தினமும் இக்கோவிலின் நடை காலை 6 மணியில் இருந்து 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது ஆலங்குளம். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் அழகிய பாண்டிய புரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை, சோழச்சேரி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவிலும் நெட்டூர் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

No comments:

Post a Comment