பொதியமலை உச்சியில்
அகத்தியர் சிலை நிறுவுதல்.
நான் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி.
60 ஆண்டுகளுக்கு முன்- அதாவது 01.05.1971 நள்ளிரவு 1 மணிக்கு 'என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்ட' அகத்தியர் வாழ்ந்த பொதியமலை உச்சியில் அவரது சிலையை என் தலைமையில் சென்ற குழுவினர் நிறுவினோம். இதற்குப் பின்னே ஒரு வரலாறு உண்டு.
1970இல் கிறித்தவ ஆர்வலர்கள் பொதியமலை உச்சியில் ஒரு சிலுவையை நட்டு அதன் அருகில் Saint Augustus peak எனக் கல்லிலே பொறித்துத் தமிழ்ப் பண்பாட்டுத் தடத்தை சிதைக்க முற்பட்டனர். இச்செய்தி மலைவாழ் மக்கள் வழியே எங்களுக்குத் தெரிந்தது. பொறியாளர் சுந்தரம்பிள்ளை போன்ற உள்ளூர்ப் பெருமக்கள் பலருடைய ஒத்துழைப்புடன் காவல்துறை நீதித்துறை வழியே உரிய நடவடிக்கை எடுத்துச் சிலுவை அகற்றப்பட்டது. அதற்குப் பின்னர் இனியும் இது போன்று ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நிகழக்கூடாது என்ற நினைப்பில் அகத்தியர் சிலையை நிறுவலாம் என்றேன். அதை ஏற்று உரிய ஏற்பாடு செய்து சிலைமுடிக்க மூன்று திங்கள் ஆயின. இடையில் மழைக்காலம் குறுக்கிட்டது.
மலை ஏறுதல் அவ்வளவு எளிய செயலன்று. வேனில் வரட்டும் என்று பொறுத்திருந்தோம். அதுவரை பொறியாளர் சுந்தரம்பிள்ளையின் வீட்டு வளாகத்தில் சிலையை வைத்தோம், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வழிபாடு செய்தனர்.
கல்லூரி முடிந்து வேனிலும் தொடங்கியது. முதலில் நாங்கள் 20 பேர் மட்டுமே மலையுச்சிக்குச் சென்று சிலை நிறுவுவது என்று திட்டம். அக்காலத்தில் நானே எதிர்பார்க்காத அளவு பெரும் செல்வாக்கும் புகழும் எனக்கு உண்டு. நான் தலைமை வகிக்கின்றேன் என்று கேள்விப்பட்ட ஆண்-பெண் அறுபதின்மர் என்னிடம் வந்து தாங்களும் வருவதாக வேண்டினர். சிவபெருமான் தம் திருமணக் கோலத்தை அகத்தியருக்குப் பொதிய மலையில் காட்டியருளினார் என்னும் தொன்மத்தை உறுதியாக நம்பும் ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவர்கள். பொதிகையைக் கைலாயமலை ஆகவே கருதக்கூடிய சைவர்கள். அவர்களுக்கு அகத்தியர் வாழ்ந்த புனித மலை உச்சிக்கு சென்று வழிபட வேண்டும் என்ற தணியாத ஆவல்; ஆதலால் அவர்கள் வருவதற்கு உடன்பட்டேன்.
30 ஏப்ரல் 1971 விடியல் 4 மணிக்குப் புறப்பட்டோம், பொதிய மலை அடிவாரத்திலிருந்து 10 கி.மீ காரையாறு தாமிரபரணி நீர்த்தேக்கம்வரை பேருந்துப் பயணம். படகில் சென்று அக்கரையை அடைந்தோம். அங்கிருந்து மலைக்காட்டுவழி நடைப்பயணம். ஏழரை மணி அளவில் கன்னிகட்டி பண்ணை சேர்ந்தோம் . பண்ணை மேலாளர் எனக்கு நண்பர்.அவரிடம் செய்த முன்னேற்பாட்டின்படி காலை சிற்றுண்டி முடித்து ப் பிற்பகலுக்குப் பொதிசோறு, வழிகாட்டிகள் பலர் துணையோடு 8 மணிக்குக் குழு புறப்பட்டது அதன் பின்னர் கடினமான செடி கொடி அடர்ந்த கரடுமுரடான ஒற்றையடிப்பாதை. 30 கிலோமீட்டர் சுற்றி வளைத்து செல்ல வேண்டும்.
இடையில் கடுவா எனப்படும் புலி, சிறுத்தை, மிளா எனப்படும் மாடு போன்ற மான், இயல்பாகவே ஊர்ந்து செல்லும் மலைபாம்புகள். காலில் ஒட்டிக்கொள்ளும் அட்டைகள் உள்ள இரண்டு காட்டாறுகள் , மேடுபள்ளம் செங்குத்து சரிவு வழிகள் -இவற்றை எல்லாம் பெரும் துன்பத்துடன் கடந்து மாலை 5 மணிக்கு உச்சிக்குச் சென்றால் கடைசியில் ஏற முடியாதபடி மலைக்கவைக்கும் 150 அடி செங்குத்து உயரம் , ஒருவாறு சரிவுப் பாறையில் முளையடித்துக் கயிறு கட்டி மகளிரையும் சிலை நிறுவும் கனமான ஸ்தபதியாரையும் உச்சிக்குக் கொண்டு சேர்க்கும் போது சரியாக ஏழு மணி . ஏறத்தாழ 100 பேருக்கும் மேலாக புழங்கக்கூடிய திடல் போன்ற உச்சிப்பகுதி . எல்லோருக்கும் களைப்பு மிகுதி இருப்பினும் சமையற்காரர்கள் உணவு சமைத்தார்கள் உண்ட பின் அனைவரும் உறங்கினோம்.
மறுநாள் காலை 01.05.1971 அன்று சிலையை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீர் வேண்டுமென்றால் கீழே 200 அடிக்கு அப்பால் சென்று தான் கொண்டு வர வேண்டும். உச்சியிலேயே ஒருபக்கம் நீர்ச்சுனை இருப்பதைக் கண்டறிந்து அங்கேயே 4-க்கு 6 அடி 3அடி ஆழம் என்ற வகையில் பாறையை வெடிவைத்து தகர்த்துப் பொறியாளர்கள் நீரூற்று உண்டாக்கினர். நானும் சுந்தரம் பிள்ளையும் ஸ்தபதியார் அருகிருந்து சிலை நிறுவும் பணிக்கு உதவினோம். அவர் ஆகம முறைப்படி சடங்குகளை மேற்கொண்டார் மே முதல் நாள் நள்ளிரவு ஒரு மணிக்கு அகத்தியர் சிலையை நிறுவினோம்.
அடுத்த நாள் எங்களில் 15 பேரைத் தவிர ஏனையோர் காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பாபநாசம் பொதிகையடிக்குத் திரும்பினர். விலங்கு, இயற்கைச் சீற்றத்தி னால் சிலைக்கு ஊறு நேராத வாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, பின்னர் அடுத்திருக்கும் ஐந்துதலைப் பொதிகையையும், மலைமுகட்டில் தாமிரபரணி தோன்றும் இடத்தையும் பார்வையிட்டுப் பின்னர் நாங்கள் பொதிகையடி அடைந்தோம்.
நாளடைவில் அன்பர்கள் முயற்சியால் கல்லிடைக் குறிச்சியில் இருந்து நேரடியாகப் பொதிய மலை உச்சி அகத்தியர் கோயிலுக்குச் செல்லுமாறு பாதைகள் அமைக்கப்பட்டு, இப்போது ஆண்டுதோறும் இந்த மே முதல் நாளில் திருவிழா நடக்கின்றது என்று அன்பர்கள் தெரிவித்தார்கள். இந்த வரலாற்று- பண்பாட்டுச் சாதனையை எண்ணும்போது இதயம் பெருமிதத்துடன் இறும்பூது எய்துகிறது, நினைவலையில் நீந்தி மகிழ்கிறது.
No comments:
Post a Comment