Thursday, July 17, 2025

நாக சதுர்த்தி பற்றிய

நாக சதுர்த்தி பற்றிய ரகசியங்கள்
        
நம்முடைய சித்த ரிஷிகளை போல பிரபஞ்ச அசைவுகளை கவனித்தவர்கள் யாருமில்லை. மானிடரைத் தாண்டி எல்லா லோகங்களையும் அதன் இயக்கங்களையும் அங்கு வாழும் சக்திமிக்க வடிவங்களையும் தங்கள் ஞானத்தால் உணர்ந்தவர்கள் ரிஷிகள்.

தாங்கள் உணர்ந்ததை வேதமாக, உபநிஷமாக, புராணமாக எழுதிவைத்தார்கள், அத்தோடு அவர்கள் தங்கள் பணி முடிந்ததென விலகவில்லை. மானிடர்மேல் மிக மிக அன்புகொண்ட அவர்கள் இப்பூமியில் மானிடர் நலமாக வாழ பல இதர உலக சக்திகளின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து, அந்த சக்திகளின் ஆசியினை எப்படி மானுடன் வாங்குவது என்பதை பல வடிவங்களில் சொல்லிக் கொடுத்தார்கள்.

நம்முடைய யோக கலாச்சாரம் எப்போதும் சூட்சும வடிவங்களை மானிடரை அண்டியிருக்கும் சில உயிர்களோடு, அதன் தன்மையோடு சுட்டிக்காட்டி இந்த வடிவில் வணங்க சொல்லுவது. காரணம், மனிதனுக்கு சில விஷயங்கள் புரியாது, உதாரணமாக, இன்றுள்ள மின்சக்திக்கோ, மின் காந்த அலை சக்திக்கோ அவனால் உருவம் கொடுக்க முடியாது. அதுவே சிரமம்; அப்படிக் கொடுத்தாலும் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. மானிட வாழ்விலும் அதனால் லவுகீக பலன் இல்லை.

இதனாலே எப்போதும் கண்ணுக்குத் தெரியாத உருவமில்லாத சூட்சும சக்திகளுக்கு வடிவம் கொடுக்கும் போது, மானிட லவுகீக உயிர்கள் ஒன்றின் இயக்கமும் அந்த சக்தியின் இயல்பும் பொருந்திப் போவதை கண்டு மிக நுணுக்கமாக அதற்கு அச்சக்தியின் பெயரைச் சுட்டிக்காட்டினார்கள். இதனால் மானிடருக்கு சூட்சும சக்திகளின் ஆசியும் கிடைத்தது, அப்படியே லவுகீக காரியங்களும் செழித்தன‌.
உதாரணமாக, அது காளையினை சிவ வாகனம் நந்தி "தேவர்" என்றது, பசுவினை கோ "மாதா" என்றது. இதனால் மானிடர் காளையினை தெய்வமாக வணங்கி தங்கள் மனோசக்தியால் சிவ அருள் பெற்றனர். அப்படியே அது காக்கப்பட்டு காளையினம் வலுவானதாக உருவாக்கப்பட்டு வண்டி, உழவு, விவசாயப்பணி என காளைகள் மானிடருக்கு உதவின‌. பசுவும் அவ்வாறே....

இப்படித்தான் காகம், சேவல், யானை என எல்லாவற்றையும் குறிப்பிட்ட சக்திகளின் பெயராகச் சொல்லி அந்த சக்திகளின் அருளையும் அப்படியே லவுகீக பூலோக நலன்களையும் காத்துக்கொண்டது. காகத்தால் பித்ருக்கள் ஆசி கிடைத்தது. அப்படியே சுற்றுச்சூழல் சீரானது, யானையினால் காடுகள் பெருகின, இன்னும் பலன்களும் அதிகரித்தன‌. இன்னும் இம்மாதிரி விலங்குகள் பறவைகளின் தன்மை பல அந்த சூட்சும சக்திகளின் குணங்களை ஒத்திருப்பதால், அவைகளே இதனுள் இறங்கி வரவும் வாய்ப்பு உண்டு என்பதை இந்துமதம் சொல்லிற்று. இன்னும் இவைகள் வடிவில் அந்த சக்திகளை வணங்கி அருள்பெறவும் சித்தர்கள் வழிகாட்டினார்கள்.

அப்படி சொன்ன ஒரு யோக வழிபாடுதான் நாக வழிபாடு, நாகங்கள் என பூலோக சர்ப்பத்தை காட்டி இன்னொரு சூட்சும உலகின் சக்திகளின் பலனைப் பெறும் பெரும் வழிபாடு. இந்தப் பிரபஞ்சத்தை ஆழ கவனித்த ரிஷிகள் 108 அண்டங்கள் இருப்பதைச் சொன்னது, அப்படியே 20 வகையான சக்தி மிக்க இனம் இருப்பதைச் சொன்னது. யக்ஷர்கள், ராக்ஷசர்கள் தொடங்கி தேவர்கள், மானிடர்கள் என இருபது பேரை அது சொன்னது. இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பதுதான் நாகசக்தி எனும் நாக உலகம். அது ஒரு தனி சக்தி.

இந்த சக்தியிடம் பல சூட்சும வரங்கள் உண்டு, பெரும் சக்தி உண்டு, இவைகளின் ஆசி மானிடருக்கு அவசியம், அந்த ஆசி இல்லையென்றால் பெரும் குழப்பம் மானிட வாழ்வில் வரும். அதே நேரம் இவர்கள் ஆசீர்வாதம் இருந்தால் மாபெரும் வாழ்வினை வாழலாம்.

இந்த சக்தி பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கின்றது. எல்லா உலகையும் ஆட்டிவைக்கின்றது. மானிட வாழ்விலும் அது அரூபமாக சூட்சுமமாக நிற்கின்றது, கோள்கள், சஞ்சாரம் என பல வகையில் அது ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை அறிந்தார்கள் ரிஷிகள். இன்னும் ஆழமாகச் சொன்னால் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு; அமுதும் உண்டு, விஷமும் உண்டு; வெளிச்சமும் உண்டு, பகலும் உண்டு; வெப்பமும் உண்டு, குளிர்ச்சியும் உண்டு. இந்த சமநிலை சரியாக இருத்தல் அவசியம்; இந்த சமநிலை தவறினால் ஏதோ ஒன்று மிக அதிகமாகி குழப்பம் அதிகரிக்கும். இவை சரியாக தராசின் முள்போல இருந்தால்தான் தெளிவும், ஞானமும், அமைதியும் வாய்க்கும். இது பிரபஞ்ச இயக்கத்தில் உண்டு, பூமியில் உண்டு, மானிட மனதில் உண்டு, உடலிலும் உண்டு.

உதாரணமாக, ஒவ்வொருவர் உடலிலும் ஒரு விஷத்தன்மை உணவிலோ, இல்லை இதர வடிவிலோ உருவாகும். இந்த விஷம் மிஞ்சிப் போகும்போது அது நோயாகின்றது. மனதின் விஷமான கவலை உள்ளிட்டவை முற்றும்போது, அது மன சஞ்சலமாகின்றது. இது இன்னும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடத்திலும் இப்படி மாறும்போது தீமையோ விஷத்தன்மையோ அதிகரிக்கும்போது குழப்பமே உண்டாகின்றது.

இதனால், இவற்றை எல்லாம் சீர்ப்படுத்தவும், இந்த விஷத்தன்மை எனும் எதிர்தன்மையினை தன்னுள் வாங்கி, தன்னை வணங்கும் உயிர்களைக் காக்கும் பணியினைச் செய்யவும் ஒரு மகா சக்தியினை பரம்பொருள் உருவாக்கியது. அவர்களுக்கென தனி உலகமும், தனி பலமும் வரமும் உண்டு, அவர்கள்தான் நாக தேவதைகள். இவர்கள் அரசன் நாகராஜா. இவர்கள் வாழும் உலகம் நாகலோகம். இது ஒரு சக்தி, தனி சக்தி, யாரும் காணமுடியாத அரூப சக்தி, இந்த உலகின் சமநிலை குறையாமல் காக்கும் ஒரு சக்தி, எதுவும் மிதமிஞ்சி போகும் போது கட்டுப்படுத்தும் சக்தி.

(விஞ்ஞானம் இதனை நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி என வகுக்கும். இந்த சமநிலை சரியாக இருந்தாலே சக்தி கிடைக்கும், அந்த சக்தி மனம் முதல் அண்டவெளிவரை பரவியிருக்கின்றது என்கின்றது விஞ்ஞானம்.

நமது கலாச்சாரதில் இதனை தேவர், அசுரர் என்றார்கள். இன்னும் கருடன், நாகம் என்றார்கள், இந்த இரு சக்திகளின் சமநிலைதான் சரியான இயக்கத்துக்கு அவசியம்.

அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பதுபடி மனதையும், உடலையும் காக்கும் சக்தி. இந்த சக்தி, பூமியில் உள்ள எந்த உயிர்களோடு சரிவரும்? எதனைச் சுட்டிகாட்டமுடியும்? எனத் தேடிய ஞானிகள், சர்ப்பம் எனும் பாம்பின் வடிவினைக் கண்டார்கள். அது பல வகைகளில் ஒரு பலனைக் கொடுத்தது.

முதலில் பாம்பு விவசாயிகளின் நண்பன்; அது செய்யும் பலன்கள் ஏராளம். வயலில் எலிகளை கட்டுப்பாடாய் வைப்பது, புற்றுமண் என வளமான மண்ணைக் கொடுப்பது. இன்னும் அதன் விஷம் ஒரு மருந்து, நாகரத்தினம் ஒரு மருந்து என அதன் பலன்கள் ஏராளம். சூட்சும சக்தி கொண்ட பாம்புகள் ஏகப்பட்ட பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தன. அதனால் அவை மானிடர் வாழ்வில் அவசியம் என்பதை உணர்ந்தார்கள். இன்னும் அதன் வடிவம் பல சூட்சும உண்மைகளை சொன்னது, அண்டவெளி முதல் மானிட மரபணு வரை பல வகைகளில் ஒரு குறியீட்டு ஒற்றுமை இருந்தது

சித்தர்கள் உடலில் மறைந்திருக்கும் மகா சக்திக்கும், மண்ணில் மறைந்திருக்கும் நாகத்திற்கும் பெரும் தொடர்பினை உருவகமாகக் கண்டார்கள். விரைவாகச் செல்லும் தன்மை. உடன் தோன்றுவதும் உடன் மறைவதுமான வேகம், இடுகாடு, சுடுகாடு, பொந்துள்ள மரங்கள், பழைய சுவர்கள், கரையான் புற்று ஆகிய இடங்களில் வாழும் தத்துவக் குறியீடு, மலைப்பாம்பு போல் வளைத்து சுருட்டும் ஆற்றல், பல்வேறு வகை வண்ணங்கள், வண்ணக்கலப்புக்கள், கடுங்குளிரையும் கடும் வெயிலையும் தாங்கும் ஆற்றல், நிலத்தில் விரைந்து ஓடுவதும் நீரில் விரைந்து நீந்துதலும் என நிறைய அதன் சிறப்பான தனித்துவம் உண்டு

பாம்பிற்குள்ள இமையா விழிகளும் தொலைநோக்கும் மிக சிறப்பானவை விழித்திருத்தலுக்கு அவை எக்காலமும் எடுத்துகாட்டு, பின்னிக்கொண்டு இனப்பெருக்கம் செய்தல் என்பதில் அப்படியே பாம்புக்கும் மானுட சாதிக்கும் ஒற்றுமை அதிகம், அந்த பிணைப்பு மனிதனுக்கும் பாம்புக்கும் அடிப்படை ஒற்றுமை. முக்கியமாக அழகாகப் படம் விரித்து ஆடுதல் என்பது நாகத்தின் சிறப்பு.

மண்ணில் சுருண்டிருக்கும் பாம்பு சட்டென 90 பாகை நேர்கோட்டில் மேல் நோக்கி எழும்புவதை அவதானித்தார்கள், அந்த சக்தி மண்ணில் எந்த விலங்குக்குமில்லை. ஒரு நாகத்தால் 90 பாகை மேல் எழமுடியும், அப்படியே நிற்க முடியும், தன் தலையினை வேல் போல மாற்ற முடியும்.

நமது மரபில் நாக வடிவம் முக்கியமானது, அதாவது வேல், தீபம் போன்றவையின் அந்த உருவம் மகத்துவமானது. ஒரே நேர்கோட்டில் வரும் சக்தி ஒரு பிரிவாக பிரிந்து அகன்று பின் மேலே கூடும் தத்துவம் அது. இன்னும் ஆழமாகச் சொன்னால் இடகலை பிங்கலை என இரு மூச்சுக்கள் அகன்று ஓடி கடைசியில் சுழுமுனை நாடி எனும் நெற்றியில் இணைவதைச் சொல்லும் தத்துவம் அது. வேல் தத்துவம், தீப தத்துவம், நாக படமெடுக்கும் தத்துவமெல்லாம் அதுதான்.

இதனால் குண்டலினி சக்தியின் அடையாளமாக நாகத்தை சொன்னார்கள், இன்னும் மானுட உயிரின் மரபணு மூலமும், பிரபஞ்ச பல வடிவமும் நாகத்தின் சாயலில் இருப்பதைச் சொன்னார்கள் இதனால் வெகு ஞானமாக பூலோக நாகத்தைக் காட்டி நாகலோக நாகங்களை வழிபடச் சொன்னார்கள். இதனால் பிரபஞ்ச சூட்சும சக்தியோடு புவியில் மானிடரின் லவுகீக பலன்களும் விவசாயம், மருத்துவம், காவல் என கிடைத்தன‌.

பாம்புக்கும் மனிதனுக்குமான பந்தம் இங்கிருந்துதான் உருவானது, ரிஷிகள் அதை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பாம்பும் யானைபோல், மாடுபோல், மானுடருடன் நெருங்கும் சக்தி கொண்டது, அது விஷம் கொண்டதாயினும் மானுடர் மனமறியும் சூட்சுமம் கொண்டது. அதற்கும் பிரபஞ்சத்தின் மகா சக்திக்கும் தொடர்பு உண்டு என்பதை ஞானத்தால் அறிந்த ரிஷிகள் அந்த நாக வழிபாட்டை தோற்றுவித்தார்கள். இதனால் மானிடர் லவுகீக பலமும் பெற்றார்கள், பிரபஞ்ச சூட்சும பலமும் பெற்றார்கள்.

இன்னும் இதனை அழுத்திச் சொன்னது, இந்த வழிபாட்டை ஊக்குவிக்க தெய்வங்களையெல்லாம் நாகங்களோடே நிறுத்திற்று. சிவனுக்கு கழுத்தில் நாகம், விஷ்ணுவுக்கு அதனையே படுக்கை ஆக்கிற்று, முருகனோ , பிள்ளையாரோ, அம்மனோ எந்த தெய்வம் என்றாலும் பாம்போடுதான் நிறுத்திற்று. நாக வடிவங்களை அப்படி வழிபட சொன்னவர்கள் ரிஷிகள்.

உலகெல்லாம்  பரவியிருந்த காலத்தில் எல்லா இனத்தவரிடையேயும் அந்த நாக வழிபாடு இருந்தது. சீனாவில் அது டிராகன் என உண்டு, ஜப்பானில் உண்டு, எகிப்தில் இருந்தது ஐரோப்பாவில் இருந்தது. கம்போடியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இருந்தது. இன்னும் பல இடங்களில் உண்டு. நாகத்தை வணங்குதல் அப்படி பெரும் வழிபாடாக இருந்தது, பின்னாளில் இந்தியாவிலும் சீனாவிலும் அது நிலைத்தது, சீனா நெருப்பை உமிழும் பாம்பை தன் தேசிய அடையாளமாக கொண்டிருப்பதும் புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் அவர்களின் பாம்பு நடனம் நடப்பதும் உலகம் அறிந்தது.

வேதங்கள் பாம்பு பற்றி சொல்கின்றன. வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள். யஜுர் வேதம் பாம்புகளை தெய்வ நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது. பழங்கால பாஞ்சல தேசத்தின் தலைநகரம் அஹீசத்திரமாகும். அதாவது இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று சொல்லலாம். இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய அக்னிமித்திரன், பானு மித்திரன் ஆகியோர்களின் காலத்து நாணயங்களில் பாம்பு முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.

அதர்வண வேதத்தின் சில பகுதிகளில் பாம்புகளை தாந்திரிக நெறிக்கு பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன.
நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும் பௌத்த நூலும் பேசுகிறது. அதில் சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை பற்றி விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

மதுராவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும் இருக்கிறது. கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின் ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும், புதையல்களை மர்மமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் நம்பிக்கை ஏற்பட்டது.

பாம்புகளை பொறுத்த வரை என்றும் எல்லா மதத்தினரும் அறிவு பூர்வமாகவும், மூடத்தனமாகவும் நம்பினர் என்றே சொல்ல வேண்டும். பண்டைய கால சிற்பங்களும், ஓவியங்களும், நாகர்களும், நாக கன்னிகைகளும் காட்டப்படுகிறார்கள். இவர்கள் பாதி மனித உருவம், பாதி பாம்பு வடிவமும் பெற்றவர்கள். நாம் அதனை இன்றும் தொடர்கின்றது, பழமையான அம்மதம் அந்த பாரம்பரியத்தை கைவிடாமல் பற்றி வருகின்றது.

பாலித்தீவில் நாக கன்னிகை மழை கடவுளான வருண தேவனின் பணிப்பெண்ணாக கருதுகிறார்கள்.
மகாபாரதத்தில் அனுஷாசன பர்வத்தில் நாகத்தை வழிபடுவதன் மூலம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே பிற்காலத்தில் உருவான வராக சிற்பத்தில் காலுக்கடியில் பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.

கிரிஸ் நாட்டில் வணங்கப்பட்ட நாக தேவதையின் பெயர் மினோவான் என்பது. எகிப்தில் படமெடுத்தாடும் பாம்பு தலையுடன் கூடிய நாகம்மா தெய்வமாக உண்டு, அவளை சூரியக் கடவுளின் கண்களாகவும் போற்றினர். இத்தாலியில் நோயை சுகமாக்கும் கடவுளாக நாகம்மாவை வணங்கினர். அவளுக்கு அன்கிதியா என்று பெயர். ஜெர்மனியில் பல குடும்பங்களுக்கு நாகம் குல தெய்வமாக இருந்து அவர்களின் ஆடு மாடுகளைப் பாதுகாத்தது. நாகம் இங்கு ஆணும் பெண்ணும் என ஜோடியாக இருந்து தமது குடும்பங்களைக் காப்பதாக நம்பினர். ஜப்பானில் மத்சுரா யோஹிமே என்ற பெயரில் நாகம்மாவை வழிபட்டனர். கொரியாவில் இயோப்ஷின் என்ற நாகம்மா செல்வத்துக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டாள். இவள் காதுகளுடன் கூடிய பாம்பு ரூபத்தில் இருந்தாள். இவளுக்கு ஏழு மகள்கள் உண்டு. ஏழு பேரும் பாம்புகள். பைபிளில் கூட யூத தெய்வம் நோயுற்ற மக்களை காக்க பாம்பை வணங்க சொல்லிற்று. அந்த பாம்பு வடிவம்தான் இன்று உலக மருத்துவ அடையாளமாகவும் விளங்குகின்றது.

ஆம், நாக தத்துவம் இந்த உடலிலும் உண்டு, ஆரோக்கியத்திலும் உண்டு. இன்று உலகின் எல்லா இனத்திலும் பாம்பு வழிபாட்டின் தாக்கம் உண்டு. அதைத் தொடங்கி வைத்தது. உலகெல்லாம் அதன் நாக வழிபாடும் இருந்த காட்சியே இன்று உலகின் பல இடங்களில் காணபட்டாலும் அதன் மூலம் நமது மதமே. இப்படியான நாக வழிபாட்டைச் சொன்னவர்கள் ஏழு முக்கிய நாகங்கள் இந்த பிரபஞ்சத்தை இயக்குவதாகச் சொன்னார்கள். எட்டு வகையாக நாகங்களை பிரித்தார்கள், இவை அஷ்ட லக்ஷ்மி சாயலில் ஒவ்வொரு வளம் தருவதாக சொன்னார்கள். அனந்தன், வாசுகி, தக்கன், கார்க்கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகன் என எட்டுவகை நாகங்களைச் சொன்னார்கள்.

அனந்தன் என்பவன் ஆதிஷேஷன், பூமியினை தாங்கி நிற்பவன். திருமால் பள்ளி கொண்டிருப்பதும் இந்த அனந்தன் மேலே. சேஷன் என்றால் தொண்டன் எனப் பொருள், அனந்தனும் அதே பொருள். இப்படி அனந்தன் மேல் படுத்திருப்பதாலேயே, அவர் அனந்த சயனப் பெருமாள், திருவனந்தபுரம் எனும் பெயர் இப்படி வந்ததே. இவர் உலகை தாங்குவார், பிரபஞ்ச இயக்கத்தை தாங்குவார் என்பது நம்பிக்கை.

(இன்றும் பூமிக்கும் இதர கோள்களுக்கும், ஒரு அண்டத்துக்கும் இன்னொரு அண்டத்துக்கும் இடையே கண்ணுக்கு தெரியா நெளிந்த வளைந்து செல்லும் பாதை இருப்பதாக விஞ்ஞானம் சொல்கின்றது, இந்த நெளிவுமிக்க அந்த இணைப்பில்தான் இந்த பிரபஞ்சம் இயங்குவதாகவும் அது சொல்கின்றது. அதைத்தான் ஆதிஷேஷன் என்றார்கள் ரிஷிகள்)

வாசுகி என்பது அமிர்தம் கடைய பயன்பட்டது என்பது ஐதீகம், அதாவது அமிர்தம் எனும் ஞானம் தரும் நாகம் அது.
தக்கன் எனும் நாகம் எதிரிகளை அழிக்கும் வரம் தரும். பாகவத புராணத்தில் பரீக்ஷித் கதையில் இந்த பாம்பு வரும்.
கார்க்கோடகன் எனும் நாகம் சாபங்களை தீர்க்கும். நளன் கதையில் இதனைக் காணலாம்.
பதுமனும் சங்கபாலனும் குபேர சம்பத்து நாகங்கள். சங்கநிதி பதுமநிதி எல்லாம் இவர்கள் கொடுக்கும் வரம்.
சங்கபாலன் அரச யோகங்களைத் தரும், சோம்பலை ஒழிக்கும், பெரும் அறிவும் பொருளும் ஒருங்கே தரும்.
குளிகன் எனும் நாகம் நோய் தீர்க்கும், உடல், மன ஆரோக்கியத்தை தரும்.

இப்படி எட்டு நாகங்களைச் சொல்லி, இவை உலகையும் மானிட மனத்தையும் உடலையும் காக்கும் வரத்தைத் தரும் எனச் சொன்னவர்கள் ரிஷிகள்.

இந்த நாகங்களின் நச்சுத்தன்மை என்பது அழிவை தருவது அல்ல, மிதமிஞ்சிய தீமைகளை அவை எடுத்துக்கொள்ளும். ஒரு மனிதனுக்கு என்ன விழிப்பு நிலை அவசியமோ அதைத் தரும் என்பது. அதைத்தான் இங்கே குறியீடாக வைத்தார்கள்.

அப்படியே ஜோதிடத்தில் ராகு, கேது எனும் இரு கிரகங்களை வைத்தார்கள், இந்த இரு கிரகங்களின் அருள் இல்லாமல், அதாவது இந்த நாகங்களின் அருள் இல்லாமல் எந்த ஜாதகமும் இல்லை என்பதை சொல்லியும் வைத்தார்கள்.

பாம்புக்கும் மனிதனுக்குமான சூட்சும உறவை சித்தர்கள் ஞானக்கண்ணால் அறிந்தார்கள். பாம்புபோல் ஒரு சக்தி உடலில் உறங்குவதைக் கண்டார்கள். அது விழித்தெழ சில பயிற்சி அவசியம் என்றார்கள். அதை யோகக்கலை என்றார்கள். யோகத்தில் செய்யும் பல பயிற்சிகள் பாம்பின் அசைவை ஒத்திருப்பதை காணலாம். அதை செய்யச் செய்ய ஆரோக்கியம் கூடும், ஞானம் பெருகும்.

கிராமங்களில் அல்லது பெரும் திருவிழாக்களில் சாமியாடிகளின் உடல் அசைவினை கவனித்தால், அருள்வாக்கோ தெய்வ நிலைக்கு செல்லும் சாமான்ய மனிதர்களைக் கண்டால் பாம்பின் அசைவுகள், நெளிவுகள் அங்கே தெரிவதை எளிதாகக் காணமுடியும். ஆம், மானிடனில் ஒரு சக்தி எழுவதையும் அவர்கள் இன்னொரு பரிமாணத்துக்கு செல்வதையும் பாம்பின் அசைவினோடு பொருந்துவதை காணமுடியும். இதைத்தான் நாகவழிபாட்டின் அவசியம் என்றார்கள் சித்தர்கள்.

இந்தியாவின் பரதக் கலையிலும் பாம்பின் தத்துவம் இருந்தது, பாம்பின் அடிபாகம் போல் கால்கள் உறுதியாக இருத்தல் அவசியம், இடுப்புக்கு மேல் பாம்பு போல் பெண் நடனமாட வேண்டும் என்பதும் இலக்கணம். ஆம் இந்தியாவின் பரதம் ஒரு யோக நடனம், அந்த நடனம் யோக சக்தியினை அதிகரிக்கும். அதனாலே அதை பாம்பின் சாயலில் ஆடச் சொன்னார்கள்.

பதஞ்சலி முனிவர் பாதி பாம்பாக போன தத்துவம் அதுதான், பாம்பின் அசைவில் மானிடன் இறைவனை உணரமுடியும் என்பது. ஆம், நாகங்களை வழிபட்டால் எல்லா பலன்களும் சூட்சுமமாக, அரூபமாக வரும் என்றார்கள். இன்னும் முன்னோர்கள் காக வடிவில் வருவது போல, சித்தர்கள் பாம்புவடிவில் வருவார்கள் என்பது நம்பிக்கை. இதனாலே பாம்புகளைத் தொழச் சொன்னார்கள்.

உண்மையில் பாம்புகள் அறிவானவை, சூட்சுமமானவை. அவைகளை புரிந்துகொண்டு பழகினால் உரிய வகையில் மந்திரங்களோ இல்லை இதர வகையில் அவைகளை நெருங்கினால், யானை பாகனுக்கு கட்டுப்படுவது போல், அவைகளும் மானிடருக்கு கட்டுபட்டு நிற்பவை. ஒரு காலத்தில் இந்துஸ்தானின் காவலாக பாம்புகளே இருந்திருக்கின்றன, அலெக்ஸ்டாண்டர் இந்தியாவில் நுழையாமல் திரும்பிப் போக நாகங்களே காரணம். நாகங்களை பழக்கும் வித்தை இந்தியரிடையே உண்டு, அவர்கள் கட்டளையிட்டால் நாகங்கள் தாக்குகின்றன என கிரேக்கர்கள் அஞ்சியிருக்கின்றார்கள். இந்தியாவில் நாகங்களைப் பழக்கி காவல் வைப்பதும் அவற்றின் நஞ்சினில் சில ஆயுதங்கள் செய்வதும் வழமையாய் இருந்திருக்கின்றன, அம்பிலோ ஈட்டியிலோ நாக நஞ்சினை தடவி எறிந்தால் எதிராளி நிச்சயம் காலி.

நாகஙகள் விலை உயர்ந்த பொருளுக்கு காவலாக வைக்கப்பட்டிருக்கின்றன‌. பின்னாளில் பவுத்தத்தால் பல வகை சீரழிவுகள் வந்து, இவை எல்லாம் மறைந்தாலும் கேரளாவில் அது தொடர்ந்திருக்கின்றது, கடைசிவரை ஆப்கானியரால், மொகலாயரால் மலையாள பூமி ஆளப்படாமலே போக அவர்களை யாரும் வெற்றிகொள்ள முடியாமல் போக முக்கிய காரணம் இந்த நாகங்கள்.

கேரளத்தின் நாகங்கள் அப்படி காவல் இருந்திருக்கின்றன. எஜமானர்கள் உத்தரவிட்டால் மாபெரும் நாகங்கள் அணி திரண்டு தாக்கியிருக்கின்றன, இதெல்லாம் கண்டு அஞ்சித்தான் அங்கே ஆப்கானிகள் செல்லவில்லை.

மாலிக்காபூரோ, துக்ளக்கோ, மொகலாயரோ யாரும் நுழைய அஞ்சியிருக்கின்றார்கள், அப்படிப்பட்ட பூமியாய் இந்துஸ்தானம் இருந்திருக்கின்றது. இங்கு நாகவழிபாடு எக்காலமும் உண்டு, நாகவழிபாடு சிறந்திருந்த வரை இந்துமதம் சீரும் சிறப்புமாக இருந்தது, நாகங்களை வழிபடும் வரை இந்தியாவில் வளமைக்கும் செழுமைக்கும் குறைவில்லை. நாக வழிபாடு என்பது சந்ததிப் பெருக்கத்துக்கு முக்கியம். அதன் பின்னிப் பிணையும் சக்தி போல மானிட சுபாவமும் உண்டு.

நாகத்தின் சாபமே குழந்தையின்மை என்பதும், கர்மவினை காரணமாக மாய‌ சர்ப்பம் கருமுட்டையினை தின்றுவிடும் என்பதும் என்றோ அறிந்த ஒன்று. இதனால் எல்லா வரங்களை போலவே குழந்தை வரத்துக்கும் நாகத்தை வணங்கினார்கள், மகப்பேறு வரத்தில் முக்கிய பங்கு நாகத்துக்கு உண்டு.

இதனாலேயே பாம்பினை வணங்கும் இந்திய, சீன தேசங்கள் எப்போதும் மக்கள் தொகை மிகுந்து காணப்பட்டன, இன்றும் அந்த வளம் உண்டு. நாகங்கள் மக்கட்வரம் மட்டுமல்ல, எல்லா வரங்களையும் அருளும், இந்தியாவின் நாக வழிபாடு உச்சத்தில் இருந்தவரை எல்லா வளமும் இருந்தது.

நாக வழிபாடு சரிய, குறைய எல்லாமும் குறைந்து போனது. நாம் வாழ, நமது கலாச்சாரம் வாழ, இந்துக்கள் இந்துக்களாய் வாழ, நாக வழிபாடு அவசியம். நாக வழிபாட்டால் எல்லா நலன்களையும் ஒருவன் பெறமுடியும். செல்வம், செழுமை, அதிகாரம், உடல் நலம், மனநலம், யோக மேன்மை, ஞானம் என எல்லாமும் அடைய முடியும்.

பாம்பே ஞானத்தின் அடையாளமானது, கேது எனும் கிரகம் ஞானத்தை வழங்கும் கிரகமாக கருதப்பட்டு, நாகம் பிள்ளையாரின் பூனூலாகவும் ஆனது. பூனூல் அணிவதும் நாக வடிவக் குறியீடே, அதுதான் நெற்றியில் நீண்ட திலகமாகவும் வந்தது, நெற்றியில் ஆற்றல் சுருண்டிருக்கின்றது எனும் வட்ட வடிவ பொட்டாகவும் வந்தது. இங்கு எல்லாமே நாக தத்துவம், அதுவன்றி வேறல்ல‌.

மிகபெரிய ரகசியம் ஒன்றை இந்துக்கள் பாம்பில் வைத்தார்கள் ஒரு மாபெரும் தத்துவத்தை சொன்னார்கள், அது உலக இயக்கம் உடல் இயக்கம் இன்னும் எலல இயக்கத்துக்குமான ஒற்றுமை. ஆம், இங்கே எல்லாமே அலை வடிவில் இயங்குகின்றது, இந்த பிரபஞ்சமே ஒருவித அலைவரிசையில் இயங்குவதாக் விஞ்ஞானம் சொல்கின்றது ஏறி இறங்கி செல்லும் ஒரு அலை அது, சக்தியின் இயக்கம் அலை அலையாக இயங்குகின்றது. இந்த அலைவடிவத்தை வரைபடத்தில் வரைந்தால் ஏறி இறங்கி ஏறி இறங்கி செல்வதை காணமுடியும், அதனை நன்றாக கவனித்தால் அது பாம்பு நெளிந்ததை போல் இருக்கும்

இந்த பிரபஞ்சம் அப்படி அலையால் இயங்குகின்றது, மானிட உடலில் ரத்தம் அப்படி அலை அலையாய் பாய்கின்றது, காற்றும் கடலும் எல்லா இயக்கமும் அந்த அலை போன்ற இயக்கத்திலேதான் இயங்குகின்றன‌

(மின்சாரம் கூட அந்த இயக்கமே, மின்னணு கருவிகளும் அந்த இயக்கமே, இதனாலே வரைபடங்களில் அலை அலையான வடிவங்களை நாகம் போல் காணமுடியும். இதுதான் நாகதத்துவம்)

இந்த சூட்சுமத்தை உணர்ந்த ரிஷிகள் ஏழு பெரும் சக்திகள் உலகை இயக்குவததை உணர்ந்து அதை ஏழு பெரும் நாகங்கள் என்றார்கள். மானிட மனதில் அலை அலையாய் எழும் சிந்தனைகளுக்கும் அந்த இயக்கத்துக்கும் ஒற்றுமையினை உணர்ந்தார்கள். இந்த சலனம் இந்த இயக்கத்தை கட்டுபடுத்தும் ஒரே சக்தி அந்த பரம்பொருள் என்றார்கள். அந்த பரம்பொருளே இந்த இயக்கத்துக்கெல்லாம் அதிபதி எல்லாமே அவன் கட்டுப்பாடு என சொல்ல இறைவனை அந்த நாகத்தோடு சொன்னார்கள். இயக்கம் இறைவனுக்கு கட்டுபட்டது என சொல்ல விஷ்ணுவினை பாம்பின் மேல் படுக்க வைத்தார்கள் நாகம் அவனுக்கு சுருண்டு கட்டுபட்டது என்பது இயக்கத்தை கட்டுபடுத்துவது பரமாத்மா என்றார்கள். சிவனுக்கு அப்படியே கழுத்தில் நாகமிட்டு சொன்னார்கள், முருகனுக்கும் விநாயகனுக்கும் சூரியனுக்கும் அன்னை சக்திக்கும் சொன்னார்கள். எல்லா இயக்கத்தையும் நாக வடிவில் சொல்லி அதனை கட்டுபடுத்துவது இறைவன் என்றார்கள்.

இன்னொன்றை சூசகமாக சொன்னார்கள், இயக்கத்தை கட்டுபடுத்தும் அந்த சலனமற்ற நிலையே இறைநிலை என்றார்கள், பாம்பு என்பது இயக்கம் அதை கட்டுபடுத்துவது இறை நிலை,மனதை கட்டுபடுத்தினால் இறைநிலை அடையலாம் என அழகாக சொன்னார்கள். நம்முடைய கலாச்சாரதில் நாக அடையாளமில்லாமல் வழிபாடே இல்லை, கோவில்கள் இல்லை, பூஜைகள் இல்லை, எதுவுமில்லை. நாகங்களும் சூட்சுமமானவை, அவைகளும் தர்மத்துக்கு கட்டுபட்டவை.

யானைகளுடன் பேசமுடியும் என்பதை உணர்ந்து பேசிய மனிதன் நாகத்துடனும் உறவாடினான் நாகத்தை பழக்கும் வித்தையும் அவனுக்கு வந்தது மனிதனின் மனதை உணரும் சக்தி பாம்புக்கும் உண்டு. அது யாரையும் தேடி சென்று கொல்லாது அது ஒதுங்கித்தான் செல்லும் கர்மவினை இல்லாமல் யார் முன்னால் கூட வராது. மந்திரத்துக்கு அது கட்டுபடும் என்பது மந்திரத்தால் அல்ல, மனதை ஒருமுகபடுத்த தெரிந்தவனால் அதன் ஆழ்மனதை தொடமுடியும் பேசமுடியும் அந்த அலைவரிசைக்கு செல்லும்போது பாம்பின் மனமும் அவன் மனமும் ஒரே புள்ளிக்கு வரும்போது அவன் சொன்னதையெல்லாம் அது கேட்கும். மந்திரம் என்பது மனதை ஒருமுகபடுத்தும் விஷயமே.

அப்படி ரிஷிகள் நாகங்களில் பிரபஞ்ச இயக்கம் கண்டார்கள், உடல் நலனை கண்டார்கள் உடலின் செல் முதல் விந்துமுதல், ரத்தகுழாய், மரபணு முதல் நரம்பு நாடி குடல் வரை பாம்பின் சாயலை கண்டார்கள். மூலத்தில் சுருண்டிருக்கும் சக்தி எழும்பி தலையில் விரியும் அந்த இயக்கத்தை நாகமென உணர்ந்தார்கள். பாரதம் முழுக்க, அதன் வரலாறு முழுக்க, அதன் ஆலய வழிபாடு முழுக்க, நாகத்தின் அடையாளமாக ஏகப்பட்ட இடங்களும் குறியீடுகளும் உண்டு. 

நாக வழிபாடு என்பது இந்துமதத்தின் பெரும் அடையாளமாக இருந்தது, உலகம் முழுக்க இருந்த இந்துமதம் இந்துஸ்தானில் சுருங்கிய பின் அது இங்கே பிரதானமானது, சீனா போன்ற நாடுகளில் அது அடையாளமானது.

பாம்பு நடனம் என அவர்கள் ஆடி தொடங்கும் புத்தாண்டு அவர்களின் வழிபாட்டு நிகழ்வு அன்றி வேறல்ல‌.
இந்துமதம் நாகத்தை  பிரதானமாக்கியது, அதற்கு மிக முக்கிய காரணங்களும் இருந்தன‌. அணுவுக்குள் துகள்கள் சுழல்வது போல, அண்டத்தில் கோள்கள் சுழல்கின்றன. இந்த இரண்டுக்கும் ஒரு தொடர்பு உண்டு, பொதுவிதி உண்டு என்பது விஞ்ஞானத்தின் கூற்று.  ஆனால் பொதுவிதி ஒன்றை வகுக்கமுடியாமல் இன்னும் வழி தேடிக்கொண்டிருக்கின்றது. பாம்பின் வடிவத்துக்கும் உடலின் முக்கிய நுணுக்கத்துக்கான தொடர்பை கண்டார்கள், அந்த பெரும் சக்தி பாம்பு வடிவில் உடலில் ஆடுவதை தங்கள் ஞானத்தால் உணர்ந்தார்கள்.

ஒரு உயிர் உருவாகக் காரணமான விந்துவின் உயிரணு பாம்பு வடிவில் இருப்பதை இன்றைய விஞ்ஞானம் சொல்கின்றது. அதனை ரிஷிகள் என்றோ உணர்ந்திருந்தார்கள். அனுதினமும் கோடிக்கணக்கான செல்கள் இறக்கும் உடல் இது, உடல் மாறிக்கொண்டே இருக்கின்றது, பாம்பு சட்டையினை கழற்றுவது என்பதை செல்களின் அழிவுக்கு சொன்னார்கள். பாம்பு சுருண்டிருப்பதை போல கருவில் உயிர் சுருண்டே இருக்கின்றது என்பதை சொன்னார்கள், பாம்பு தவழ்வதை போலவே மானிடனும் தவழ்ந்து வளர்கின்றான் என்பதை அனுமானத்தால் சொன்னார்கள். அதனாலே பாம்புக்கும் பாம்புக்குமான பொதுப் பொருளாய் பாலை வைத்தார்கள்

இன்று டி.என்.ஏ எனும் மரபணு பாம்பின் வடிவத்தில் நாகவடிவத்தில் இருப்பதை விஞ்ஞானம் சொல்கின்றது, இரு பாம்புகள் வடிவில் இருப்பதை விஞ்ஞானம் சொல்கின்றது. அந்த மரபணுவின் சக்தி இன்னொரு பெரும் சக்தியால் இயக்கப்படுகின்றது. அதுதான் நாகசக்தி என்பதை உணர்ந்து இரு நாகங்களை வணங்க சொன்னார்கள்.

இந்த வழிபாடு எல்லா இனத்திலும் இங்கே இருந்து சென்றது, அது ஐரோப்பாவில் இருந்தது, யூதர்களிடம் இருந்தது. பாம்பை வணங்கினால் நலமடையலாம் எனும் நம்பிக்கை எக்காலமும் உண்டு, இன்று நவீன உலகின் மருத்துவ அடையாளம் இணைந்த நாகங்களே. அதை கொடுத்தமதம் பாரதம் முழுக்க இந்த நாகவழிபாடு உண்டு.

நாகம் என்பது உயிரை எடுக்கமட்டுமல்ல, உயிரைக் கொடுக்கவும் செய்யும். உயிரைக் கொடுக்கும் சக்தி அதற்கு உண்டு என்பதால் வணங்கப்பட்டது. குறிப்பாக சந்ததிகள் பெருக, நோய் நீங்க அது வணங்கப்பட்டது. பாம்பின் நஞ்சில் இருந்து பெரும் மருந்துகளை சித்தர்கள் தயாரித்தார்கள், நாக பாஷாணம் சரியான முறையில் பல பொருட்களுடன் சேர்க்கப்பட்டபோது அது மருந்தானது. பாம்பை வணங்க வணங்க ஒரு உயிரின் தன்மை மாறும், அந்த உடல் நலமடையும் தெளிவடையும், பாம்பின் வடிவத்தில் ஒரு சிலையினை வணங்க வணங்க பல நன்மைகள் எங்கிருந்தோ பிரபஞ்சம் கொடுப்பதை இந்துக்கள் உணர்ந்தார்கள்.

பாம்பின் வழிபாட்டால் சந்ததி செழித்தது என்பதையும், நோய்கள் அகன்றது என்பதையும் அறிந்தார்கள்.
உடலில் நோய் ஏற்பட விஷத்தன்மையே காரணம். ஏதோ ஒரு வகையில் விஷம் உடலில் சேர்வதாலேயே நோய் உருவாகின்றது, இந்த விஷத்தை நாக வழிபாடு அகற்றும் என்பதை அனுபவத்தால் கண்டார்கள். இன்று உலகை மிரட்டும் புற்றுநோயினைக் கூட நாக வழிபாடு சரியாக்கும் எனும் நம்பிக்கை அன்றே இருந்தது,  புற்றுநோய் உலகில் புதிதல்ல; சித்தர்கள் காலத்திலே அது அடைப்பு நோய் என வழங்கப்பட்டிருக்கின்றது, உடலில் சேரும் விஷத்தால் அது உருவாகும் என்றார்கள் சித்தர்கள்.

அன்று வெகு அபூர்வமாக இருந்த நோய் இன்று ரசாயன உலகில் ரசாயான உணவுகளால் இயல்பாகிவிட்டது, மானிட தவறுகளும் அதிகம். இஞ்சி, பூண்டு உடலுக்கு நல்லது. ஆனால் தனித் தனியாக சேர்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக சமைத்தால் சிறிது விஷமாகும் என்பார்கள்.  இப்படி மானிட தவறுகள், ரசயானம் என பல வகைகளால் புற்றுநோய் பெருகிவிட்டது. அன்று புற்றுநோய்க்கு சர்ப்ப வழிபாடும், புற்றுமண்ணும் மருந்தாக இருந்தது. நாகத்தின் விஷத்தில் தயாரிக்கப்படும் நவபாஷாணம் போன்ற மருந்துகள் நோயினை தீர்த்தன என்கின்றன அக்காலக் குறிப்புகள்.ஆம், நாகவழிபாடு புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் என்பது அன்றே இருந்த வழமை. இப்படி நாகங்கள் கொண்டாடப்பட்டன, அவைகளுக்கான வழிபாடு எல்லா ஆலயங்களிலும் உண்டு.

ஷண் மதம் என ஆறுபிரிவுகள் இருந்தாலும், அந்த ஆறுபிரிவுகளிலும் நாகம் தனி அடையாளமாய் இருந்தது, நாகமே ஆதி தெய்வமாய் இருந்தது. அதன் அடையாளமாக இந்தியாவில் எல்லா ஆலயங்களிலும் நாகம் தனி இடம் பெற்றது, பல இடங்கள் ஆலயங்கள் நாகத்தின் பெயராலேயே அறியப்பட்டன‌.

நாகலாந்து முதல் நாகப்பட்டினம், நாகர்கோவில் என நாகத்தின் பெயர்களை பாரதம் முழுக்க காணமுடியும். திருவாரூரின் புற்றீசரும், வன்மீகநாதர் எனும் சிவனும் புற்றுவடிவில் வழிபட்ட சிவலிங்கங்களே, காளஹஸ்தி கூட நாகத்தின் பெயரில் உருவானதுதான், எல்லா தொடக்கமும் நாக வழிபாட்டில் இருந்தன‌. நாக வழிபாடு பாரதமெங்கும் இருந்தாலும், வேதம் வாழும் பரசுராமனின் பூமியான கேரளத்தில் உன்னதமாய் இருந்தது.

ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், ஷேச நாக், குஜராத்தில் உள்ள புஜ் மற்றும் கேரளாவில் உள்ள மன்னார்சாலா, திருநாகேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நாகத்திற்கென முக்கிய கோவில்கள் உண்டு. திருநாகேஸ்வரம் முதல் நாகூர் வரையான பஞ்ச நாக ஷேத்திரங்கள் உண்டு. நாகலாந்து, நாகபட்டின, நாகர்கோவில் எல்லாம் அப்படி உருவான நகரங்களே. கர்நாடகா நாகதேவி கோவிலும், குக்கே சுப்ரமண்யா கோவிலும் பிரசித்தியானவை, அங்கும் நாகத்தின் ஆலயங்கள் நிறைய உண்டு. அங்கு நாகத்தை சுப்பிரமணி என்றே அழைக்கின்றார்கள்.

ஆந்திராவின் கர்னூலில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலும் நாகங்களுக்கு முக்கியமானது. நாகர்கோவில் எனும் நாகத்தை மூலவராக கொண்ட அந்த ஆலயம் கேரள ஆலயமாகத்தான் இருந்தது; பின்னாளில் தமிழகத்தோடு இணைந்தது. அதன் மூலம் மலையாளமே.

அந்த அளவு கேரளாவில் நாக வழிபாடு பிரசித்தியானது, ஏகப்பட்ட ஆலயங்கள் நாகத்துக்காக அங்கு உண்டு எனினும், மேக்கோடு நாக ஆலயமும், மன்னாரசாலை ஆலயமும் பிரசித்தியானது. அந்த மன்னாரசாலை ஆலயம் நாகவழிபாட்டுக்குத் தனி அடையாளமாய் பெரும் ஆச்சரியமாய், இன்றுவரை மாபெரும் அதிசயம் நிறைந்த ஆலயமாய், இந்துக்களின் நாக வழிபாட்டுக்கு பெரும் சாட்சியாய் நிற்கின்றது. அந்த ஆலயம் உருவான விதம் மிகத் தொன்மையானது, யுகங்களைக் கடந்தது. அவ்வகையில் பல்லாயிரம் வருடமாக யுகங்களை கடந்து நிற்கும் ஆலயம் அது. அதனைத் தொடங்கி வைத்தவர் பரசுராமர், பரசராமர் தன் அவதாரம் முடியும் போது, வேதங்கள் வாழ ஒரு பூமியினை உருவாக்க எண்ணி சிவனிடம் வரம் கேட்டார்.

அவர் கோடரி விழும் இடத்தில் இருந்து கடல் ஒதுங்கி வழிவிடும், அந்த நிலத்தை எடுத்துக்கொள் என்றார் சிவன். அப்படியே தன் கோடரி எனும் மழுவினை அவர் வீச அந்த கடல் நகர்ந்து மலைப்பாங்கான இடம் ஒன்று உருவானது. ஆனால் உப்புசுவையும் உவர் நிலமுமான அங்கு உயிர்கள் வாழமுடியாது, பரசுராமர் மறுபடியும் சிவனை வேண்டினார். உயிர்கள் பிறக்கவும், நிலம் செழிக்கவும், பசுமை நிலைக்கவும் நாகராஜனின் அருள் வேண்டும், நீ அவரை வேண்டினால் இந்த பூமி செழிக்கும் என பதில் கிடைத்தது.

பரசுராமன் தவமிருந்து நாகராஜாவினை அழைக்க நாகராஜா வந்து ஆசீர்வதித்தார், அந்த கேரளம் செழித்தது. அப்படி நாகராஜா வந்து அமர்ந்த இடம் பரசுராமனின் தீர்த்தசாலை, அந்த தீர்த்தசாலை, மந்திர சாலை என்றும் அழைக்கப்பட்டு மன்னார் சாலை என்றானது. இந்த மன்னார்சாலைதான் உலகிலேயே நாகங்களுக்கான மிகப்பெரிய ஆலயம், முதல் மாபெரும் ஆலயம்.
இங்கே நாகராஜாவின் அருளில் எக்காலமும் மாபெரும் நாகங்கள் உண்டு. அவை, ஆலயத்தின் உட்புறத்தில் உண்டு. ஆனால் யாருக்கும் எந்த தீங்கும் இதுவரை இழைத்ததில்லை. ஒரு சிறிய சலசலப்புக் கூட வந்ததில்லை.

ஆலப்புழா அருகே அமைந்திருக்கும் அந்த ஆலயம் பெரியது, அங்கிருக்கும் நாக சிற்பங்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம். விதவிதமான நாக வடிவங்கள் அங்கே அப்படி ஆயிரகணக்கில் உண்டு. ஏன் அப்படி அத்தனை ஆயிரம் வடிவங்களை ஸ்தாபித்தார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை, அங்கேதான் இருக்கின்றது நுணுக்கமான நாக வழிபாடு.

மனித உடல் சூட்சுமமானது. அதன் நோய்களும் பிணியும் மருந்தினால் மட்டும் குணமாவதில்லை. அதாவது வாய்வழி உள்ளே செல்லும் மருந்துகள் மட்டும் நோயினை குணமாக்குவதில்லை. உடலின் விஷமானது உள்ளே செல்லும் உணவினால் மட்டும் ஏற்படுவதில்லை. அது காற்று, கதிர்வீச்சு, சுற்றுப்புறம், பார்க்கும் விஷயத்தின் அதிர்வு என எல்லாவற்றிலும் உருவாகும். அதாவது ஒருவனை அவன் சுற்றுபுறமும், அதிர்வுகளும், காற்றும், பார்வையும் கூட நோயுற்றவனாக்கும்.
அப்படியே சில அதிர்வுகளாலும், பார்க்கும் விஷயங்களாலும் நோயினை குணப்படுத்தவும் முடியும்.
பாம்பின் வடிவங்கள் நோயினை தீர்க்கும் என்பது நம்பிக்கை, பாம்பின் வடிவம் மரபணு மற்றும் உடலை இயக்கும் செல்களின் வடிவினை ஒத்திருக்கும்.

இந்த வடிவங்களைக் காணும் போது உடலின் சில நுணுக்கமான செல்கள் அல்லது அணுக்கள் தங்கள் வடிவத்தை மாற்றும், அப்போது உடல் தானே சரியாகும். பாம்பின் வடிவத்தைக் காணும்போது, உடலின் செல்கள் தன்னை சரிசெய்யும், நோயுற்ற செல்கள் குணமாகும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

(யூதர்களின் தோரா இதை சொல்கின்றது, பாலை நிலத்தில் மக்கள் சாகும் போது அவர்கள் தெய்வம் ஒரு பாம்பை வெண்கலத்தில் செய்து உயர்த்தி பிடிக்க சொல்கின்றது. அதைக்காணும் மக்களெல்லாம் குணமடைந்தார்கள் என்கின்றது. இந்த பாம்பு வடிவம்தான் இன்று மருத்துவ அடையாளமாக மாறி நிற்கின்றது, நாம் மருத்துவரின் அடையாளமாக உலகளாவில் காணும் அந்த லச்சினை அதுதான், அந்த சாயல்தான்)

இந்த நுணுக்கத்தில்தான் 30 ஆயிரம் பாம்பு சிலைகள் வைக்கபட்டிருக்கின்றன‌. உண்மையில் பல பாம்பு வடிவங்களை இந்துக்கள் செய்ததெல்லாம் நோய் தீர்க்கும் மருத்துவமே, அப்படித்தான் வடித்து தீர்வுகளும் சொன்னார்கள். நாக மருத்துவ இலக்கணம் அதை தெளிவாகச் சொல்கின்றது.
புத்திர பாக்கியம் கிடைக்க அனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும், குஷ்ட ரோக நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்க வேண்டும். பலப்ராப்தி  பெற தக்ஷன், குணப்ராப்தி  பெற பத்மா, சூட்டினால் ஏற்படும் ரோக வியாதிக்கு குணம் பெற  நாக ஷங்கபலா எனும் ஷங்ககர்னாவையும்  வணங்கிப் பூஜிக்க வேண்டும்.

பூர்வ ஜென்ம பாபம் அகல  கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும்  மோட்ஷப்ராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கி பூஜிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு நோய் தீரவும், ஒவ்வொரு வரம் பெறவும், ஒவ்வொரு நாக வடிவம் அவசியம். இதனாலேயே 30 ஆயிரம் நாகங்கள் வடிவம் அங்கே உண்டு.

அங்கே தீரா நோயில்லை, கிடைக்கா வரமில்லை. எல்லா நோய்களும் அங்கே தீரும், எல்லா வரமும் அங்கே கிடைக்கும். நாக சிற்பங்களின் வலிமையும், அந்த ஆலயத்தில் அன்றாடம் நடக்கும் பூஜைகளின் சக்தியும் அப்படியானது. அந்தக் கோவிலில் எல்லா பிணியும் நோயும் தீர்ந்தாலும் மிக முக்கியமான ஒன்று குழந்தை வரம்.
அதற்கு அவர்கள் மிக வித்தியாசமான முறையினை தொன்றுதொட்டு, அதாவது பரசுராமர் காலத்தில் இருந்தே பின்பற்றுகின்றார்கள்.

அந்தக் கோவிலில் பெண்கள்தான் பூசாரிகள், முதிர்ந்த வயதுடன் பூசாரியாக வருவார்கள். இவர்கள் வாலியம்மா அல்லது வலியம்மா என, அதாவது சர்வ சக்திவாய்ந்தவர் எனும் பொருளில் அழைக்கபடுகின்றார்கள்.

பாம்புகள் அதுவும் ராஜநாகங்கள் நிறைந்த தலைமை பீடத்தில் இவர்கள்தான் பூஜை செய்வார்கள். நாகங்கள் அப்போது கோசாலை பசுக்கள் போல இவர்களை சுற்றிச் சுற்றி வரும். பசுக்களுக்கு கோசாலை போல, நாகங்களுக்கான நாகசாலை அந்த மன்னாரசாலை குழந்தைவரம் வேண்டுவோர் அங்கு சென்று தங்கள் வேண்டுதலை வைத்து உருளி எனும் சிறிய பாத்திரத்தை கவிழ்த்துவைப்பர், பின் மனமார வேண்டி நாக தரிசனம் செய்துவிட்டு கிளம்புவார்கள்.

உரியநாளில் அவர்களுக்கு பதில் கிடைக்கும். பின் குழந்தையோடு வந்து அந்த உருளியினை நிமிர்த்தி வைத்து வழிபட்டு வேண்டுதல் முடிப்பார்கள், அந்நேரம் ஆலயத்துக்கான சிறப்பு பிரார்த்தனைகளை அவர்கள் செய்ய வேண்டும்.

இங்கே கவனிக்க வேண்டிய விசயம், பெரிய காணிக்கையோ, லட்சக்கணக்கான தட்சனையோ, பூஜையோ எதுவுமில்லை. எல்லாமே இலவசம். பலன் கிடைத்து குழந்தை வந்தபின், நாகங்களுக்கு அவர்கள் ஏதும் செய்யலாம் ஆலயத்துக்கு உதவலாம். பன்னெடுங்காலமாக நடக்கும் ஆச்சரியம் இது. இதுவரை அங்கு சென்று உருளி கவிழ்த்து ஏமாந்தவர் யாருமில்லை. எப்படி நாகர்கோவில் நாகராஜா கோவில் சுற்றுபுறங்களில் பாம்புகடித்து யாரும் இறக்கவில்லையோ, அப்படி இந்த நாக ஆலயமும் யாரையும் கைவிட்டதில்லை.

சாட்சிகள் கோடான கோடி. நாக வழிபாட்டின் சக்தியினை இந்த ஆலயம் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றது, என்றும் அது உண்டு. குழந்தை வரம் அங்கு பிரதானம். மற்றபடி எல்லா நோய்களுக்கும் அங்கு தீர்வு உண்டு. இறைவன் அருள் உங்களோடு இருந்தால், சரியான நாக சிற்பத்தை அடையாளம் கண்டு உங்கள் நோய் எவ்வளவு கொடியதாயினும் நாகத்தின் அருளால் அங்கு குணமாக்க முடியும். அப்படியான சக்தி கொண்டது நாக வழிபாடு. அதன் பெரும் சாட்சி இந்த ஆலயம்.

நாகம் என்பது மானுடரோடு பின்னிப் பிணைந்த இறை சக்தி. இன்னொரு லோகத்தில் வாழும் மாபெரும் சக்தியின் மிக மேம்பட்ட சக்தியினை, தேவர்கள், கிங்கணர்கள், கந்தர்வர்கள் எனப் பலரை விட மகா சக்தியான நாக சக்தியினை நமக்கு இங்கு பெற்றுத் தருபவை நாகங்கள்.
அந்த மகா சக்தியின் க்ஷேத்திர பாலகர்களாக நம்முன் நிற்பவை நாகங்கள். நாகங்களின் அருளாலே கேரளம் செழித்தது, நாகங்களின் அருளாலே இன்றும் மன்னாரசாலையில் அனுதினமும் அதிசயம் நடக்கின்றது.

நாக வழிபாட்டின் சக்தி அசாத்தியமானது, அதனால்தான் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவழியில் நாக தரிசனம் பெற வேண்டும் என்ற ஏற்பாட்டை செய்தது இந்துமதம்.

சிவனின் கழுத்திலோ, விஷ்ணுவின் படுக்கையிலோ, அம்மனின் தலையிலோ, முருகனின் காலடியிலோ, விநாயகன் பூனூலாகவோ , சூரியனின் குதிரையின் கயிறாகவோ பாம்பினை வைத்தார்கள் இந்துக்கள்.
அது போல எல்லா ஆலயங்களிலும் வழிபாட்டிலும் தனி இடம் கொடுத்தார்கள்.

ஜோதிடத்திலும் இரு நாகங்களை வைத்து குறியீடாய் சொன்னார்கள். அந்த நாகங்களுக்கான நாள் இந்த நாக பஞ்சமி. நாக சதுர்த்தி என அது சொல்லபட்டாலும், நாக பஞ்சமி என்றுதான் புராணங்கள் சொல்கின்றன. ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி நாகத்துக்கானது.

(நிலவை பிரதானமாக கொண்ட நாட்காட்டிப்படி ஆவணி வளர்பிறை பஞ்சமி நாகங்களுக்கானது, சூரிய அளவையினை கொண்ட நாள்காட்டிப்படி ஆடிமாத பஞ்சமி அமையும்.)

பாம்பு மானிடரைப் போல ஐந்து புலன்களின் ஆற்றல் மிக்கது, ஐம்புலன்களையும் மிக மிக விழிப்பான நிலையில் எப்போதும்  வைத்திருக்கும். அதன் விவேகத்துக்கும், நகர்வுக்கும், வேகத்துக்கும் அந்த விழிப்பு நிலைதான் காரணம். அப்படி மானிடரும் ஐம்புலன்களையும் எப்போதும் விழிப்பாக வைத்திருக்க வேண்டும் எனும் தத்துவப்படி, அந்த ஐந்தாம் நாள், பஞ்சமி நாள் நாகபஞ்சமி என்றானது. பொதுவாக பஞ்சமி என்பது சூட்சும சக்திகளுக்கு தோதான நாள் எனும் வகையில் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் நாளாக அமைந்தது.

அதனால் அந்நாளில் நாகத்துக்கான நாளாக அமைத்தார்கள், அன்று பூஜைகள் அவசியம், வழிபாடு அவசியம். நாக வழிபாட்டுக்கு பால் என்பதெல்லாம் அவை புற்றில் ஊற்ற வேண்டியவை, உயிருள்ள நாகத்துக்கு வழங்க வேண்டியவை. நாக சிலை என்றால் பழமும் வெற்றிலை பாக்கு வழிபாடு போதும். சில அர்ச்சனைகள், அலங்காரங்களும் அவசியம்.

நாகத் துதிகளைச் சொல்லி பாடலாம், வேண்டலாம்.

"ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம் ச கம்பலம் 
ஸங்கபாலம் தார்தராஷ்ட்ரம் தக்ஷகம் காளியம் ததா 
ஏதானி நவநாமானி நாகானாம் ச மகாத்மனாம் 
சாயங்காலே படேந்நித்யம் ப்ராத(ஹ்)கால விசேஷதஹ 
தஸ்மை விஷபயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!
ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ நந்தஹ் ப்ரசோதயாத்"
                 எனச் சொல்லி வழிபடலாம்.....

நாக வழிபாடு என்பது மூட நம்பிக்கை அல்ல. ராகு கேது எனச் சொல்லி வைத்த வெறும் ஜாதகமும் அல்ல, அது பிரபஞ்ச சக்தியினை மானிடன் பெற்று நலமும் வளமும் ஆரோக்கியமும் பெற இந்து ஞானியர் ஏற்றிவைத்த ஜோதி. ஞானமாக அவர்கள் போதித்த சூட்சும வழிமுறை.

அதனை இந்துக்கள் உலகுக்கு கொடுத்தார்கள்; அவர்களும் பின்பற்றுகின்றார்கள். இன்று இந்துக்களின் அந்த வழிபாடுதான் மருத்துவ சின்னமாக, ஐநாவின் சுகாதார நிறுவனச் சின்னமாக நிற்கின்றது. அதை கொடுத்தவர்கள் இந்துக்கள்.

பாம்பு வடிவத்தின் மகத்துவம் அப்படியானது, அது ஞானமானது, புரிந்துகொள்ள முடியாத சூட்சும விஞ்ஞானம் அது. அந்த பாம்பு வடிவத்தை பார்த்து உடலில் வரும் மாறுதல், மானிட உடலிலும் அணுக்களிலும் ஏற்படும் மாறுதலை எல்லாம் விஞ்ஞானம் விளக்க, பலகாலம் ஆகும்.

பாம்பு என்பது உயிரை எடுக்க அல்ல, உயிரை உருவாக்கவும் உயிரின் வடிவாகவும், உடலை இயக்கும் வடிவாகவும், உயிரை வாழவைக்கும் வடிவாகவும் ஒரு அரூப சக்தியாய் உண்டு. அதைத்தான் ரிஷிகள் கண்டறிந்து எல்லா மக்களுக்கும் சொன்னார்கள், அந்த பலனை உலகம் கண்டும் வருகின்றது. சித்தர்கள் ரிஷிகள் வழியில் முன்னோர்கள் சொன்னபடி நாகத்தை வணங்கி எல்லா நலமும் பலமும் அடைய வாழ்த்துக்கள்.

நாக பஞ்சமி அன்று யாரும் ஏரோட்ட மாட்டார்கள், காரணம் வயலில் பாம்புகள் அடிபட்டுவிடலாம் எனும் அச்சம் இருந்தது. அந்த அளவு நாகத்தை வணங்கி, காத்த சமூகம் இது.

இந்நாடும் சமூகமும் மதமும் கண்ட வீழ்ச்சிக்கு, ஆரோக்கியமும் ஞானமும் கொண்ட இந்துமக்கள் நோயாளிகளாக அறியாமையில் மூழ்கியவர்களாக மாறிப்போக, நாக  வழிபாடு குறைந்ததும் ஒரு காரணம்.
அதனை மீட்டெடுப்போம்; எல்லா நலமும் அடைவோம்.

உங்களுக்கு எந்த குறைபாடும் உடலில் இருக்கலாம், தீரா நோய் இருக்கலாம், குழந்தை பாக்கியம் தள்ளிப் போகலாம். அவ்வாறு வேதனை இருப்பின், அந்த மன்னாரசாலை நாகராஜா ஆலயம் சென்றுவாருங்கள். எவ்வளவு பெரிய நோயோ குறையோ உடலில் இருந்தாலும், அந்த நாகராஜாவின் அருளால் எல்லாம் குணமாகும் அது சத்தியம், பாம்புகள் காக்கும் சத்தியம் போல, உறுதியான சத்தியம்!!!

வடக்கே காஷ்மீரத்து நாக ஆலயம், மேற்கே தட்சசீலம் (இன்று பாகிஸ்தானில் இருக்கும் அந்த இடம் தட்சன் எனும் நாகத்தால் உருவானது) , கிழக்கே நாகலாந்து தெற்கே நாகர்கோவில், நாகரத்தினத்தை மூக்குத்தியாக கொண்ட கன்னியாகுமரி அம்மன் ஆலயம் என நாற்புரற‌மும் நாகங்களின் அடையாளும் காவலும் கொண்ட தேசம் இது.

அந்த நாகங்களின் பெரும் அருளிலும் காவலிலும் தேசம் செழிக்கட்டும், நாகங்களினால் காக்கபடும் இத்தேசம் ஒவ்வொரு மக்களுக்கும் நல்ல அறிவும் ஆரோக்கியமும் தெளிவும் கொடுக்கட்டும்

அந்த பெரும் அருளில் தேசம் வாழட்டும், நாகத்தின் ரத்தினம் போல் தேசம் ஜொலிக்கட்டும்

நன்றி:பிரம்ம ரிஷியார் ஐயாவின் பதிவில் இருந்து.....
                    - சித்தர்களின் குரல்.

No comments:

Post a Comment