1. சிவபெருமானை வழிபடுதற்கு உரிய முக்கிய ஸ்தானம் யாது?
திருக்கோயில்.
2. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?
ஸ்தானஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து, விபூதி இட்டுக்கொண்டு, போதல் வேண்டும்.
3. திருக்கோயிலுக்குச் சமீபித்த உடனே யாது செய்தல் வேண்டும்?
தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு, உள்ளே போதல் வேண்டும்.
4. திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
5. கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும், மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நம்ஸ்காரம் பண்ணல் வேண்டும்?
வடக்கே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
6. தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
கிழக்கே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
7. எந்த திக்குக்களிலே கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?
கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.
8. ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
9. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.
10. பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
11. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.
12. நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.
13. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?
பிரதக்ஷ?ணம்(வலம் வருதல்) பண்ணல் வேண்டும்.
14. எப்படி பிரதக்ஷ?ணம் பன்னல் வேண்டும்?
இரண்டு கைகளையும் சிரசிலேனும் மார்பிலேனுங் குவித்து சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு, கால்களை மெல்ல வைத்துப் பிரதக்ஷ?ணம் பண்ணல் வேண்டும்.
15. பிரதக்ஷ?ணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும்.
16. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?
முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி, தக்ஷ?ணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல் வேண்டும்.
17. விக்னேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?
முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து, கும்பிடல் வேண்டும்.
18. சந்நிதானங்களிலே தரிசனம் பண்ணும் பொழுதெல்லாம் யாது செய்தல் வேண்டும்?
இரண்டு கைகளையுஞ் சிரசில் ஆயினும் மார்ப்பில் ஆயினும் குவித்துக்கொண்டு, மனங் கசித்துருகத் தோத்திரஞ் செய்தல் வேண்டும்.
19. எந்தக் காலத்தில் சுவாமி தரிசனஞ் செய்யல் ஆகாது?
அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடக்கும் பொழுது தரிசனஞ் செய்யல் ஆகாது.
20. அபிஷேக காலத்தில் பிரதக்ஷ?ண நமஸ்காரங்களும் பண்ணல் ஆகாதா?
அப்பொழுது உட்பிரகாரத்திலே பண்ணல் ஆகாது.
21. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
சண்டேசுரர் சந்நிதியை அடைந்து கும்பிட்டு, மூன்று முறை கை கொட்டி, சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்தல் வேண்டும்.
22. சண்டேசுர தரிசனத்தின் பின் யாது செய்தல் வேண்டும்?
சிவசந்நிதானத்தை அடைந்து, நமஸ்காரம் பண்ணி, இருந்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துக் கொண்டு, எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.
23. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?
சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திர கிரகணம், சிவராத்திரி, நவராத்திரி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும்.
24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?
ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்) கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல், சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
No comments:
Post a Comment