THANK TO : https://www.vallamai.com/?p=55456
About the Author
கவியோகி வேதம்
தவமா? செய்வதுவா? தமியனென்ன மகானா?
சுவைமிக்க உணவுகளும், சூடான ’பிட்சா’வும்
கனிவுடன் கவனிக்கும் அலுவலகக் கன்னிகளும்
இனிமைதரும் இன்றைய சினி-குத்துப் பாடல்களும்,
எப்போதும் என்மனம் இனிதெனக் கவர்கையிலே
தப்பாகத் தவம்பற்றிச் சற்றேனும் சிந்தியேன்
என்றே என்னிடம் யோகா கற்கவரும்
முன்னூறு மாணவரும் முனகுகின்றார்! அஞ்சுகின்றார்!
‘தவம்’எனில் அவர்எண்ணம் காட்டில்போய்ச் செய்வதுவாம்..
பாவமாயை அவரையின்று பலமாகக் கட்டிற்றே!
உடல்வலிமை வேண்டுமென்றே ஓடோடி வருகின்றார்!
கடல்போன்ற வெட்டவெளிக் காருண்ய வலிமையினை,
ஆன்ம ரகசியத்தை, அறியஒரு ஆசையில்லை!
தேன்போன்ற சூட்சுமங்கள் வானிலே தேங்கிநிற்க,
சித்து வேலையெல்லாம் பயிற்சியினால் தேகம்வர,
மொத்த வானமும் முற்றத்தில் வந்துநிற்கும்,
அற்புத ஆனந்தம் யோகத்தால் அடைந்திடவும்
பொற்பதங்கள் தொடவும்ஓர் புதுவழி கண்டிடவும்
இளைஞர்க்கும், முதியவர்க்கும் ஏனோ ஆவலில்லை!
முளைப்பயிறை விட்டுஇவர் ‘சிப்ஸில்’போய் முங்குகின்றார்!
தேகத்தின் வலிமையொடு உள்உள்ள சக்கரத்தின்
நாகப் பந்தத்தின் நாட்டியமும் கற்பிப்பேன்
என்கின்றேன்!இவர்களோ இளைஞிகள் எமைப்புகழ
மின்னலாம் ஆசனங்கள் விரைவில் தருவீரா?
ஆயிரம் காசுகள் அச்சாரம் தருவமென்பார்!
பாயிரமே போதுமாம்! …பனுவல் வேண்டாமாம்!?
என்னசெய்ய? இவரைஇன்று டிவியும் அரசியலும்
முன்னூறு விதமாக எண்ணம் முடக்குகையில்,
மூலையிலே,.. நான்மட்டும் தவத்திற்கு விதைதருவேன்!
காலையிலே வாருங்கள் என்றால் கசக்குதய்யா!
கோவில்கோ விலாய்ச்சுற்றல் தவமாமோ? சிலையிலுள்ள
ஆவியைஉள் ஏற்றாமல் கும்பிடுதல் தவமாமோ?
ஆமாம்!.. தவமென்றால் அன்றைய முனிவர்க்கே
பூமாரி போல்என்றும் பொழிவதன்று! இல்லறத்தில்
தாமரை இலைப்பனிபோல் நிற்கும்என் போன்றவர்க்கும்
தேமதுர வாய்ப்புண்டே! தேகம், உள்நிற்கும்
ஆதாரச் சக்கரங்கள் அத்தனையும் தினம்சுழற்றி
பாதார விந்தம்தொடப் பக்குவமாய் மூச்சிழுத்தே
தியானத்தில் மிகஅமர்ந்தே தேன்தாரை ஒழுகுமட்டும்
வியாகுலம் அகற்றி வெல்லும்ஒளி காண்பதுவே
தவம்ஆகும்! சாதா மனிதர்க்கும் சாத்தியம்தான்!!
சுவைகளை ’நா’மறக்க,காமம் தூரநிற்க,
பிரபஞ்ச மாயையை நீமிரட்டிப் பீறிடும்,
கூரிய ஆஞ்ஞாவில் அமுதம் குடித்துநிற்கும்,
விந்தையை உணர்வதுவே வெல்லும் தவம்ஆகும்!
மொந்தைக் கள்இதனை உனக்குகுரு முன்வாயில்
மெல்லவே ஊற்றிடநீ வான்மிதந்தால் தவம்என்பேன்!
வல்லஅச் சாற்றை ‘வாசி’யிலே தேக்கிடலாம்!
தேசுமிக்க முகத்தோடு தெய்வத்தைத் தழுவிடலாம்!
காசினியை உன்கையில் கட்டியே வைத்திடலாம்!
மூச்சுப் பயிற்சியையே முதல்உணவாய் நீபயின்றால்
பேச்சில்நீ ப்ரம்மத்தைக் கண்டிடலாம்! பின்னிடலாம்
யோகத்தை தினம்பயின்றால்!ஒருகோடி பேருக்கு
தாகம்கொண்டு வருவோர்க்கு, ஆன்மாவைக் காட்டிடலாம்!
எந்தவித நோய்களும்உன் விரல்பட்டால் எல்லைபோம்!
சந்தனம் தேகமுறும்! சாந்தமே நடைபயிலும்!…(ஆம்!)
தவம்ஒரு குற்றாலம்! தவம்ஓர் சன்னதி!
தவம்நம் கைக்கே எளிதில்வரும் சிவலிங்கம்!..(அது)-
சக்திஒளி! பரவசம்! சாந்தநிலை!பெரும்மோனம்!
பக்திகொண்ட யோகம்இது ப்ரம்மமுணர் தவம்என்பேன்!
வாழ்க நெஞ்சே! வளர்ந்துநில் தவம்தன்னில்!
Good. who can teach us thavam.
ReplyDeletePlease whatsapp +65-94881456