சிவபெருமானை வழிபடும் சைவர்களுக்கு சிவச்சின்னமானதாகவும், முக்கியமானதாகவும் அமைவது விபூதி.
பஸ்மம், ரக்ஷை, திருநீறு என்று பல்வேறு பெயர்களால்போற்றப்படுவது விபூதி.
விபூதி என்பதற்கு மொழியியல்படி, பலவேறு அர்த்தங்கள்உண்டு.
இறையருள் பெற்றது, உயர்விலும் உயர்வானது,முழுமையானது, எங்கும் நிறைந்திருப்பது, உள்ளத்தைதூய்மைப்படுத்துவது, வணங்கத்தக்கது, செழுமை நிறைந்தது,வளங்களைத் தரக்கூடியது, சித்திகளைத் தருவது, வேண்டும் வரங்களைத் தருவது, அலங்கரிப்பது.
சிவபெருமானின் திருமேனி முழுவதும் அலங்கரிக்கக் கூடியஒரே பொருள் விபூதி மட்டுமே. பொன்னார் மேனியனின்திருமேனியில் மேவியிருப்பதால், விபூதி பொன்னிறமாக,தங்கத் துகள்களாக மின்னுகின்றதாம் (பஸ்மோத்தூளிதவிக்ரஹாய நம: – ஸ்ரீ சிவாஷ்டோத்தரம்)
விபூதி காட்டும் தத்துவங்கள் எண்ணற்றவை.
இறந்தபின் அனைவரும் சாம்பலாகத் தான் வேண்டும்என்பதைக் காட்டுகின்றது. ஆகையால், இறைவன் முன்அனைவரும் சமமே என்பதையும் சுட்டுகின்றது.
உலகம் அக்னியால் தூய்மையடைவது போல விபூதியால்ஆன்மாக்கள் தூய்மையடைகின்றன.
வேதங்களும, உபநிஷதங்களும், புராணங்களும், தமிழ்த்திருமுறைகளும் விபூதியின் மகிமையைப் போற்றிப்பறைசாற்றுகின்றன.
ஒரு சமயம், வித்துன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும்மூன்று அரக்கர்கள் பறக்கும் தன்மை கொண்ட பொன்,வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கொண்டு, தேவர்களைவருத்தினர்.
அரக்கர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மா,விஷ்ணுவிடம் முறையிட, இவர்களை அழித்து சாம்பலாக்க,சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று அறிந்து, சிவனைநோக்கி பிரார்த்தனை செய்தனர்.
பிரம்மா தனது மனதிற்குப் பிடித்தமானதும், அவர்தோற்றுவித்தத்தும் ஆகிய மானச சரோவர் என்னுமிடத்திலும்,மஹா விஷ்ணு தான் பள்ளி கொண்டிருக்கும், பாற்கடலில்சேரும் நதியாகிய விரஜா எனும் நதியின் கரையிலும்ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து யாகம் செய்தனர். யாகத்தின் பஸ்மம் (சாம்பல்) போல அரக்கர்கள் அழியபிரார்த்தனை செய்தனர்.
மஹாவிஷ்ணு, சிறப்பான மந்திரங்களால் யாகம் செய்தார்.அது வேதங்களில், விபூதியைப் போற்றக் கூடிய,மஹாநாராயண உபநிஷத் எனும் மந்திரமாக அமைந்தது.பொதுவாக சிவாலயங்களில், விபூதியை அபிஷேகம்செய்யும்போது இந்த மந்திரங்களைத் தான் சொல்வது மரபு. (ஆத்மாமே சுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜா விபாப்மாபூயாஸம் ஸ்வாஹா)
இந்த மந்திரம் – உடல், மனது, வாக்கு, ஆத்மா, அந்தராத்மா எனஅனைத்தையும் தியாகம் செய்தால், நமது ஜீவனைசிவபெருமான் தன் உடலில் சாம்பல் போல பூசிக்கொள்வார்என்கின்றது (மஹா நாராயண உபநிஷத்தின் முழுமையானஅர்த்தம் – மிகவும் அற்புதமானது.)
பிரம்மா, விஷ்ணு – இருவரின் தவத்திற்கு இணங்கி,சிவபெருமான் மூன்று அரக்கர்களையும், தன் மந்தகாசப்புன்னகையால் மட்டுமே எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள்மகிழ்ந்தனர்.
(ஒரு தகவல்: முப்புரங்களை எரித்தபொழுது,அக்கோட்டைகளின் ஒரு பாகம் மட்டும் முழுதும் எரியாமல்(வேகாமல்) பூமியில் விழுந்தது. அந்த இடம் வேகாக்கொல்லைஎன்று அழைக்கப்படுகின்றது. இவ்விடம், தமிழகம், கடலூர்மாவட்டம், நெய்வேலிக்கு அருகாமையில் உள்ளது. இவ்வூரைச்சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் மண் செங்கல் அமைக்கஉதவினாலும், இந்த ஊர் மண் மட்டும் செங்கல் சுடுவதற்குபயன்படாது. வேகாத மண் கொண்ட நிலம் என்பதால் வேகாக்கொல்லை என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில்அருமையான சிவஸ்தலம் உள்ளது)
சிவபெருமான் உடல் முழுவதும் பரவியிருக்கும் விபூதியை,சிவச் சின்னமாக, புனிதமான பொருளாக சைவர்கள்மதிக்கின்றார்கள்.
விபூதி தயாரிக்கும் முறையை சாஸ்திரங்கள் அற்புதமாகவிளக்கியுள்ளன.
காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து,அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காயவைக்க வேண்டும். அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்றுவர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும்,கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத்திருநாளில், எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்றுஏற்றப்படும், சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும்என்பர்)
அது, திறந்த வெளியில், தானாகவே ஆறவேண்டும். மார்கழிமாதம் முழுவதும் – பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல்சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தைமாதம் முழுவதும்அச்சாம்பலை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். பனிபெய்ய பெய்ய, சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.
மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில்அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம் – ஒரு பானையின் வாயில் தூய்மையானதுணியைக் கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால்தேய்க்க தேய்க்க, மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத்தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்). அதை,சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள்தரிக்க வேண்டும்.
மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறை. மற்றும் சிலமுறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம், காமதபஸ்மம்,பெளஷ்டிகபஸ்மம்)
பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின்தன்மையை விபூதி கொண்டிருக்கின்றது.
விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும்பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதைவலியுறுத்துகின்றது. (பிரம்மச்சரியம், கிரஹஸ்தம்,வானப்ரஸ்தம், சன்யாசம்)
சிவாலயங்களில், விபூதியை பிரஸாதமாக வலதுஉள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும். (உள்ளங்கைபிரம்ம, விஷ்ணு பாகமாகக் கருதப்படுகின்றது. பிரம்மா,விஷ்ணு தவமிருந்து பெற்றதால் – அவர்களின் பாகமாகியஉள்ளங்கையில்தான் பெற வேண்டும்)
ஆண்கள் விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத்தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்றுகிடைக்கோடுகளாகவும்), உத்தூளனமாகவும்(தண்ணீரில்லாமல் வெறும் விபூதியை) அணிந்துகொள்ளலாம் என்றும்,
பெண்கள் – தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ளவேண்டும் (உத்தூளனமாக) என்றும், சாஸ்திரங்கள்வலியுறுத்துகின்றன.
பெண்கள் – ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால்விபூதியை எடுத்து, நெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமேஅணிந்து கொள்ள வேண்டும். (சிவ–தீட்சை பெற்ற பெண்கள்மூன்று கோடுகளாக அணியலாம்)
விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷரமந்திரத்தையோ அல்லது ‘சிவசிவ’ என்றோசொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.
ஆண்கள் – விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல்,நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்றுகிடைக்கோடுகளாக, நெற்றியிலும், மார்பிலும், தொப்புளுக்குமேலும், முழங்கால்கள் இரண்டிலும், இரு தோள்களிலும், இருமுழங்கைகளிலும், மணிக்கட்டுகள் இரண்டிலும், இரு விலாப்புறங்களிலும், கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இருகாதுகளிலும், சிலர் மேல் முதுகிலும், பின்கழுத்திலும்தரிப்பார்கள்). காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும்,பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்.
பஸ்மாபிஷேகம் – பல்வேறு தீட்டுக்களை அகற்ற வல்லது.குளிக்கும் நீரில் விபூதியைத் தூவி விட்டு, அந்த விபூதி கலந்ததண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும்அகன்றுவிடும். பயம் நீங்கவும், ஜுரம் நீங்கவும், உடல்உபாதைகள் நீங்கவும் விபூதி பயன்பட்டிருக்கின்றது.
விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதிவழிபடும் வழக்கம் உண்டு. விபூதியின் புனிதத்தையும் அதன்மேன்மையையும் பல்வேறு புராணங்களிலும், திருமுறைகளில்பல்வேறு இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னிருதிருமுறைகளில் குறிப்பிடப்படும் சில சம்பவங்களை மட்டும்இங்கே காண்போம்.
சூலை (தாங்காத வயிற்று வலி) நோயால் துடிதுடித்த அப்பர்சுவாமிகள், தனது தமக்கையார் கையால் விபூதி பெற்றவுடன்,வலி நீங்கப் பெற்று சைவத்திற்கு பெரும் தொண்டாற்றினார்.
சமண சமயத்தைச் சார்ந்திருந்த கூன் பாண்டியன் எனும்மன்னன் மதுரையை அரசாண்டு கொண்டிருந்தான். அவனுக்குதீராத வெப்ப நோய் இருந்தது. அதை நீக்க, அவன் மனைவிமங்கையர்க்கரசியார் சிவபெருமானை வேண்டினாள். அவள்கனவில், சிவன் வந்து திருஞான சம்பந்தரைக் கண்டு வந்தால்நோய் நீங்கும் என்றார். மங்கையர்க்கரசியாரும், அதன்படியே,திருஞான சம்பந்தரை தரிசித்து, தன் குறையைச் சொல்ல,அவர் ‘மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு‘ எனத்தொடங்கும் ‘திருநீற்றுப் பதிகம்‘ பாடி விபூதியை, கூன்பாண்டியனின் உடலில் பூசியவுடன், பாண்டியனின் நோய்நீங்கியது. கூன் பாண்டியன் சைவத் தொண்டு ஆற்றினான்.
சிவச்சிந்தனையில் சிறந்து விளங்கிய சேரமான் பெருமான்,அரசு தாங்கி ஒரு சமயம், பட்டத்து யானை மீது அமர்ந்துநகர்வலம் வருகின்றார். அப்பொழுது, துணிகளை வெளுக்கும்தொழிலாளர், உழமண் எனும் வெள்ளை நிற மண்ணைக்கூடையில் சுமந்து வர, நீரில் நனைந்த அந்த மண் அவரின்மேனி முழுவதும் வழிந்து, விபூதி பூசியது போல தோற்றம் தரச்செய்தது. பட்டத்து யானையிலிருந்து, சலவைத்தொழிலாளியின் உடல் முழுவதும் திருநீறு பூசியிருப்பதைக்கண்ட சேரமான் பெருமான், யானையிலிருந்து உடன் இறங்கி,அவர் பெரும் சிவத்தொண்டர் போலும் என்று எண்ணி,சலவைத் தொழிலாளியை வணங்கினார். அரசன் தன்னைக்கண்டு வணங்கியதால், அச்சமுற்ற சலவைத் தொழிலாளி தன்நிலையை உணர்த்த, வெள்ளை உழமண் விபூதியை நினைவுபடுத்திய காரணத்தினாலேயே, அவரை வணங்க முற்பட்டதைசேரன் விளக்கி, பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்.
சிவபக்தியில் சிறந்த ஒரு புகழ்ச்சோழ மன்னர், தனக்குக்கப்பம் கட்டாத மன்னன் மீது படையெடுத்து வர ஆணையிட,படைகளும் எதிரி நாட்டை வென்று, தோல்வி கண்ட வீரர்களின்தலைகளைக் கொண்டு வந்து, சோழனிடம் வெற்றிப் பரிசாகஅளிக்க, அதைக் கண்டு, கொண்டு வந்த அந்த வீரர்களின்தலைகளுள் – ஒரு தலை மட்டும் குடுமி கொண்டு,சிவச்சின்னமாகிய விபூதி அணிந்திருப்பது கண்டு அதிர்ந்து,ஒரு சிவனடியாரைக் கொல்லக் காரணமாகிவிட்டோமே என்றுமனம் நொந்து, சோழன் அக்னியை மூட்டி அதனுள் விழுந்தான்.
சிவபெருமானிடம் அதீத பக்தி கொண்ட ஏனாதிநாதனார்என்பவர், படைகளுக்கு வாள் பயிற்சி அளிப்பவர். அவருடன்பல முறை போராடி தோல்வியுற்ற ஒருவன் அவரை வீழ்த்த, ஒருஉபாயம் செய்தான். அவன் ஏனாதிநாதரைத் தனிமையில்சமர் செய்ய அழைத்து, அச்சமயம் இவன் சிவச்சின்னமாகியவிபூதியைத் தரித்துக்கொண்டு, அதை கேடயத்தால் மறைத்துக்கொண்டு, போரிட வந்து, ஏனாதிநாதர் அருகில் வந்ததும்,கேடயத்தை நீக்க, ஏனாதிநாதர் எதிரியாயிருப்பவன்,தன்னைக் கொல்லவந்தவன் திருநீறு அணிந்திருப்பது கண்டு,அவனை சிவ அம்சமாகவேக் கண்டு, சண்டை செய்யாமல்பணிந்து மடிந்து சிவலோகம் அடைந்தார்.
‘மெய்ப்பொருள்’ எனும் அரசன் சிவபக்தி நிரம்பி, தனது அரசைநீதிமுறை தவறாது ஆட்சி செய்து வந்தார். சிவ தத்துவங்களின்மெய்யான உண்மைகளை, மக்களுக்கு அறிவிப்பதில்தேர்ந்தவராக இருந்ததால் ‘மெய்ப்பொருள்’ என்றுபோற்றப்பட்டார். இவரின் எதிரி தேசத்து அரசன், தமதுவலிமையால் இவரை வெல்லமுடியாது என எண்ணி, சிவச்சின்னமாகிய விபூதி தரித்து, ஓலைச் சுவடிகளுடன்,சிவனடியார் வேடத்தில் வந்து, அரசனிடம் ஆகம உட்ப்பொருள்உணர்த்த வந்தேன் எனக் கூறினான். மெய்ப்பொருள், அதைக்கேட்க ஆவலாகக் கண் மூடி அமர, அச்சமயம்,ஓலைச்சுவடிகளுள் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து,மெய்ப்பொருளை வெட்டினான், எதிரி தேசத்து அரசன்.
சத்தம் கேட்டு வந்த மெய்க்காப்பாளன், எதிரியை வெட்டக்கையை ஓங்க, ரத்தம் சிந்திக் கொண்டு, மரணத்தின்தறுவாயில் இருந்தபோதும், மெய்ப்பொருள், இவர் எதிரியாகஇருந்தாலும், சிவனடியார் கோலத்தில் இருப்பதால், இவரும்சிவாம்சமே, ஆகவே, இவருக்கு எவ்வித தொல்லையுல்இல்லாமல் எல்லை வரை பத்திரமாகக் கொண்டு விடக்கட்டளையிட்டான். அவ்வண்ணமே மெய்க்காப்பாளன்செய்ததைக் கூற, மெய்ப்பொருள் அதன் பிறகு உயிரைவிட்டுசிவபதம் அடைந்தார்.
விபூதி, நோய்களை நீக்கும் அருமருந்தாகவும்,சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவசிந்தனைமேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும்,விளங்குகின்றது. ‘விபூதீரைச்வர்யம்’ என்ற சொல் – விபூதி, ஐஸ்வர்யங்களைத் தரவல்லது – என்ற அர்த்தம் கொண்டது.
–ஹைந்தவ திருவலம்
No comments:
Post a Comment