Saturday, September 10, 2022

.பஞ்ச வில்வங்களில் ஒன்று. விளா

விளா.பஞ்ச வில்வங்களில் ஒன்று. 



( பஞ்ச வில்வம், பஞ்ச முக அர்ச்சனை பற்றிய அடியேனின் முந்தைய  பதிவு இணைப்புடன்)

அருகி வரும் மரங்களில் இஃதும் ஒன்று. 

ஹுனிசினஹள்ளியில்( தர்மபுரி மாவட்டம்) கண்டேன். 

    சிவபெருமானுக்கு உகந்த பத்திரமாக வில்வ இலை போற்றப்படுகின்றது.

வில்வத்திற்குச் சமமாக ஆகமங்களில் சில பத்திரங்கள் (இலைகள் )சிவபூஜைக்கு உகந்தனவாகச்  சொல்லப்பட்டுள்ளன.

      இவை, வில்வத்தைப் போன்றே மூன்று இதழ்களைக் கொண்டதாக விளங்கும்.வில்வத்தோடு சேர்த்து இவைகள் பஞ்சவில்வம் என்று அழைக்கப்படும்.

   மூன்று இதழ்கள் கொண்டுவிளங்குவதால் இவைகளுக்குச் சூலபத்ரம் என்ற பெயரும் உண்டு.

"குந்தாக்யம் சுகபில்வம் ச நிர்ஜீவித கபித்தகம்,
ஏதாநி சூல பத்ராணி பஞ்ச பில்வ மிதி ஸ்ருதம் "
                                -காரணாகமம்.

   குந்தம்           -ஸ்ரீ முல்லை இலை.
 சுகபத்ரம்         -ஸ்ரீ கிளுவை இலை.
  பில்வம்           -ஸ்ரீ வில்வ இலை.
நிர்ஜீவிதம்       -ஸ்ரீ வெண்நொச்சி இலை.
கபித்தம்            - ஸ்ரீ விளாமர இலை

  இவை ஐந்தும் பஞ்சவில்வம் என்று போற்றப்படுகின்றன.இவை ஐந்தும் கொண்டு சிவப்பரம்பொருளின் ஐம்முகங்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகப்பெரும் சிவப்  புண்ணியமாகும்.

 மேலும், முல்லை பத்ரம் இல்லாது மாவிலங்கை பத்ரம் பயன் படுத்துவதும் நூலில் உள்ளது.

 புஷ்பவிதி நூல், 

" மெச்சியேயடியவர்வியந்து
சாத்திடு
நொச்சியேநறுவிளாநுவன்ற
கூவிளம்
வைச்சிடுங்கிளுவையே
மாவிலிங்கையின்
பச்சிலையென்றிவைபஞ்ச
வில்வமே"

 என்று கூறுகின்றது.

தரையோடு ஒட்டிப் படரக்கூடியது நில விளா என்றும், சிறிய மரமாக வளரும் இயல்புடையதை சித்தி விளா என்றும்,  பெரிய மர வகுப்பைச் சார்ந்ததைப் பெருவிளா மரம் என்றும் கூறுவர். இங்கு, நாம்,பெருவிளா மரம் பற்றிய செய்திகளைக் காண்போம். 

கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி போன்றவை விளாவின் வேறு பெயர்களாம்.

விளாமரத்தின்  தாயகம் நம் பாரதப் புண்ணிய பூமி.  இலங்கை,மலேயா,தாய்வான், மியான்மர்,பிலிப்பைன்ஸ்  போன்ற கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது. 

 . இது எங்கும் வளரும். மர வகுப்பைச் சார்ந்தது. இது காடுகளில் அதிகம் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கு மேல் வளராது. 

 வீடுகளிலும், கோயில்களிலும்,(   நாகப்பட்டினம் மாவட்டம், திருநன்றியூர், அருள்மிகு உலகநாயகி சமேத மகாலட்சுமிபுரீஸ்வரர்,  திருவாரூர் மாவட்டம், திருக்காறாயில், அருள்மிகு கண்ணாயிரநாதர் போன்ற  திருக்கோவில்களில் தலவிருட்சமாக உளது)தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.  மூன்று வகைகளில் இது பெரிய மர வகுப்பைச் சார்ந்து பெரு விளா மரம். இது, கருமைநிறமாக  இருப்பதால் கருவிளாம் என்று சொல்லப்படுகிறது. 

விளாமரம் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலைகள்.   இலைகள் 5-7 வரை இருக்கும்,  இதன் இலைகள் நல்ல மணத்தைக் கொண்டவை. இலை நீள் வட்ட வடிவமாக இருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்று உருண்டையாக இருக்கும். இதன் விட்டம் 5-9 செ.மீ. இருக்கும். பழத்தின் ஓடு கெட்டியாக இருக்கும். உள் சதை பழுப்பு நிறத்தில் இருக்கும். விதைகள் வெள்ளையாக இருக்கும். காயாக இருக்கும் போது அதன் சதை துவர்ப்பாக இருக்கும். பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த சுவையாக இருக்கும். இது முள்ளுள்ள உறுதியான பெரிய மரம். 

விளாமரம் வளர்ந்த 5 வது வருடத்தில் காய் காய்க்கும்.  இதை எந்த பூச்சியும் தாக்காது. விளா ஓடு கைவினைப் பொருள்கள் செய்யப் பயன் படுத்துகிறார்கள். விளா விதைகளின் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.
விசாக நட்சத்திரத்தின் விருட்ச மரம் விளா. விசாக நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களால் குழந்தை பாக்கியமின்மை, பிறக்கின்ற குழந்தை ஊனமாகப்பிறத்தல், வாயுத்தொல்லைகள், நோய்த்தொற்று, இருமல், ஆஸ்துமா, ஒவ்வாமை, சர்கரை நோய், மனப்பதற்றம், ஈறு மற்றும்
கர்பப்பைக் கோளாறுகள் ஆகியவை உண்டாகின்றன. இதனை விசாக நட்சத்திர தோசம் என்பர். விளாமரத்தின் நிழலில் இளைப்பாறினால் இந்த தோசத்திலிருந்து விடுபடலாம் என்று சோதிட சாஸ்திரம் கூறுகிறது. .

விளாம் பழத்தில், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து,  புரதச் சத்து, விட்டமின் ஏ, சி  ஆகிய சத்துகள் இருக்கின்றன. . உடம்பில் சுருக்கங்கள் ஏற்பட்டால் விளாம் பழத்தை சாப்பிட்டால் சுருக்கங்சள் ஓடியே போயிடும்.  

முகம் பொலிவாக வேண்டுமா,  இரண்டு தேக்கரண்டி  பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி கஸ்தூரிமஞ்சள், இரண்டு தேக்கரண்டி விளாம்பழத்தினை அரைத்து முகத்தில் தடவி, காய்ந்தப் பின்னர் குளிர் நீரில் கழுவினால்,  முகம்  பளப்பளவென்று  பிரகாசிக்கும். 

   உங்கள் கூந்தல் பட்டுப் போல மிருதுவாக இருக்க வேண்டுமானால், சிகைக்காயுடன் விளாம்பழ ஓட்டினையும் கலந்து அரைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் கேசம் மிருதுவாக இருக்கும்.

 இது குடல் புண், வாய்ப் புண்,  நரம்பு தளர்ச்சி, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்து. எலும்புக்கு வலுவினைத் தருவதுடன் இரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை எதிர்க்கும் சக்தியும் விளாம் பழத்திற்கு உண்டு.  

விளா மரத்தின் வேர், பட்டை, காய், பழம், பிசின், இலை, கொழுந்து என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்கள் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை நோயினை நீக்குவதோடல்லாமல்,   விளாம்பழம் கல்லீரலையும், மண்ணீரலையும் வலிமைப்படுத்தி, எலும்புகளுக்கு சக்தியைத் தரக்கூடியது.   புத்துணர்ச்சியினையும், சக்தியையும் அளிக்கும். தொண்டை புண்களை ஆற்றி, பல் ஈறுகளையும் உறுதியாக்கும்.   

விளா  மரத்தின் பட்டை இருமல், இளைப்பு, நீர்வேட்கை, பிதற்றல், வெறிநோய், அழல்நோய், வாயு கோளாறு  போன்றவற்றிருக்கு சிறந்த மருந்தாகும். பட்டையை அரைத்து வெண் குஷ்ட நோய்ப் பகுதியில் தடவினால் குணமாகும். பிசினைப் பொடியாக்கி சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும். விளாம் பழம் நறுமணத்துடன் துவர்ப்பும், புளிப்பும் உடையது.  இதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சாப்பிட்டால் சுவை கூடும். பசியைத் தூண்டும்.  

விளாமரத்தின்  தளிர் இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். வயிற்றுக் கடுப்பும் குணமாகும். செம்பருத்தி இலையுடன், சமபங்கு விளா இலையையும் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்  தலைமுடி  பளபளவென்று பிசுக்கு இல்லாமல் இருக்கும்.   விளா இலையை குடிநீரிலிட்டு அருந்தி வர காய்ச்சல், இருமல், தேக வறட்சி நீங்கும்.  

"விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு" என்பது பழமொழி . இடு மருந்தை விளாம்பழத்து ஓடு முறிக்கும் என்பது பொருள் !

விளாம்பிசினை உலர்த்தி தூளாக்கி காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு (மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு), நீர் எரிச்சல், உள் உறுப்புகளில் ரணம் போன்றவை சரியாகும். இதைச் சாப்பிடும்போது உணவில் உப்பு சேர்க்கக்கூடாது.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விளா மரத்தின் பழங்கள் விரும்பி உண்ணப்பட்டாலும் இந்த மரத்தை ஆர்வமாக நட்டு வளர்க்க யாரும் முன்வராததாலேயே இஃது ஓர் அரிய வகை மரமாக மாறிவிட்டது.

பஞ்ச வில்வம், பஞ்ச முக அர்ச்சனை பற்றிய அடியேனின் முந்தைய  பதிவு இணைப்பு=

https://m.facebook.com/story.php?story_fbid=10208509800141802&id=1811732522

நன்றி:

EFLORA OF KARAIKAL DISTRICT.

தமிழ்நாட்டரசு வனத்துறை. 

சிவபூஜா பத்ததி- தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்.

சித்தமருத்துவர் அன்பர் அன்பரசு அவர்கள்.

No comments:

Post a Comment