Sunday, December 1, 2024

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் வழிபாடு...

வேண்டிய வரம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்த்திகை மாதத்தில் ஒன்பது நாட்கள் மட்டும் ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் போதும்.
கார்த்திகை மாதம் என்பது சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பலரும் சிவபெருமானை வழிபாடு செய்வார்கள், முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள், ஐயப்பனை வழிபாடு செய்வார்கள், அம்மனை வழிபாடு செய்வார்கள், பெருமாளை வழிபாடு செய்வார்கள். பலரும் அறியாத ஒரு வழிபாடு தான் ஆஞ்சநேயர் வழிபாடு. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கார்த்திகை மாதத்தில் ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

**ஆஞ்சநேயர் வழிபாடும்**

காரிய தடையை நீக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அவரைப் போலவே காரிய தடையை நீக்கக்கூடிய தெய்வமாகவும் கலியுகத்தில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிற தெய்வமாகவும் ஆஞ்சநேயர் திகழ்கிறார். எந்த ஒரு தெய்வத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த தெய்வத்திற்கு இருக்கிறது என்றால் அது ஆஞ்சநேயர் தான். ஆஞ்சநேயரின் பெயரை கூறாமல் இராமா என்ற இரண்டு எழுத்து மந்திரத்தை மட்டும் கூறினாலே ஆஞ்சநேயரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆஞ்சநேயர் வழிபாட்டை கார்த்திகை மாதத்தில் எந்த நாள் வேண்டுமானாலும் செய்ய தொடங்கலாம். தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து கொள்ளுங்கள். எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வேண்டுதலை முன்வைத்து இந்த வழிபாட்டை ஒன்பது நாட்களும் மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய ஆஞ்சநேயரின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

கிழியாத நல்ல வெற்றிலையாக 9 வெற்றிலையை வாங்கிக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் அல்லது சந்தனத்தை பன்னீர் ஊற்றி குலைத்து ஒரு குச்சியால் ராமா என்று ஒவ்வொரு வெற்றிலையிலும் எழுத வேண்டும். இப்படி எழுதிய வெற்றிலை முற்றிலும் காய்ந்த பிறகு நூலை வைத்து பூ கட்டுவது போல் இந்த வெற்றிலையை மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மாலையை ஆஞ்சநேயரின் படத்திற்கு சாற்ற வேண்டும். பிறகு ஆஞ்சநேயருக்கு ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பின்வரும் இந்த மந்திரத்தை ஒரே ஒருமுறை கூற வேண்டும்.

**மந்திரம்**

ஓம் ஐம் ப்ரீம் ஹனுமதே ஸ்ரீ ராம தூதாய நமஹ

இந்த முறையில் தினமும் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். தினமும் வெற்றிலை மாலை சாற்ற இயலாதவர்கள் முதல் நாளும் ஒன்பதாவது நாளும் மட்டும் சாற்றினால் போதும். ஆனால் இந்த மந்திரத்தை 9 நாட்களும் தொடர்ச்சியாக சொல்லி உங்களுடைய வேண்டுதலை ஆஞ்சநேயரிடம் முன்வைக்க வேண்டும்.

இந்த முறையில் ஆஞ்சநேயரை முழுமனதோடு வழிபாடு செய்து உங்களுடைய வேண்டுதலை முன் வைக்கும் பொழுது ஆஞ்சநேயர் உங்களுடைய வழிபாட்டை முழுமனதோடு ஏற்று வேண்டுதலை நிறைவேற்றுவார்.

No comments:

Post a Comment