Saturday, February 8, 2025

அர்த்தநாரி

சிவசக்தி சம்மேளனம்.

கும்பகோணம் சௌராஷ்டிரா பெரிய கோயில் தெருவில்  உள்ள  ஸ்ரீ சாமுண்டேஸ்வரி ஆலய விமானத்தில் காணும் சிவசக்தி சம்மேளனம் [ அர்த்தநாரி நடராஜர்] சுதைச்சிற்பம்.இது போன்று காண்பது அரிது.எட்டுத்  திருக்கரங்கள்;வலப்பக்கம் விரிசடை;வியாக்ரபாதர், பதஞ்சலி வணங்குகின்றனர். 

இந்த செய்தியைப் படத்துடன் திருவாவடுதுறை ஆதீனம் சரஸ்வதிமகால் நூல்நிலையம் மற்றும் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள '' மகா அர்த்தநாரீசுவரர் '' என்னும் நூலுள் அடியேன் கண்டேன்.

   சிவசக்தி சம்மேளனம் என்னும் பதத்துடன் சம்பந்தப்பட்ட இடுகை ஒன்றினை   '' பக்தி '' இணையப்பக்கத்தில் கண்டேன்.சிவசக்தி ஐக்கிய தத்துவம் என்னும் தலைப்பில் அவ்விடுகை வந்துள்ளது.இடுகையின் ஆசிரியர் அன்பர்  பஞ்சாங்கம் ஆவார்.

அதனை அவ்வாறே அடியேன் கீழே தருகிறேன்.

சிவசக்தி ஐக்கிய தத்துவம்.

இன்றுள்ள சகல சாஸ்திரங்களும் நடராஜப் பெருமான் தன் டமருகம் என்ற உடுக்கையில் தட்டி எழுப்பிய ஒலியிருந்தே எழுந்தவை. இவை சிவ சூத்திரங்கள் எனப்படும், சமஸ்க்ருத எழுத்துக்களில் 51 அக்ஷரங்களில் 43 அக்ஷரங்கள் தான் பூரண உருவத்துடன் இருக்கின்றன. இந்த 43 அக்ஷரங்களும் ஸ்ரீசக்ரத்தைக் குறிப்பிடுகின்றன.

சிவ சூத்திரங்கள் அ,இ,உண் என்று ஆரம்பித்து ஹல் என்று முடிவடைகிறது. முதல் அக்ஷரத்தையும் கடைசி அக்ஷரத்தையும் சேர்த்தால் அஹ என்று வரும். அதாவது "அஹம்" ஆகவே சிவ சூத்திரங்கள் ஸ்ரீ சக்ரத்தைத்தான் குறிப்பிடுகின்றன. {அஹம் என்ற இந்த உடம்பே ஸ்ரீ சக்ரம் என்ற விளக்கம் பின்னர் வரும்.}

நடராஜர் ஒன்பது தடவை முதலிலும், பின்னர் ஐந்து தடவையும் ஆக பதினான்கு தடவை டமருகத்தை அடித்ததாக கூறப்படுகிறது. முதலில் ஒன்பது தடவை அடித்தது. ஒன்பது அக்ஷர நவாக்ஷரி,பின்னர் ஐந்து தடவை அடித்தது பஞ்சாக்ஷரம். தெய்வங்களுக்கான புருஷ மந்திரங்களுக்கு மந்திரம் என்றும் ஸ்திரீ தெய்வங்களுக்கான மந்திரத்தை வித்யை என்றும் சொல்கிறார்கள். ஒன்பது முறை அடித்ததால் மேரு மந்திரமான ஸ்ரீவித்யையும், ஐந்து முறை அடித்ததால் பஞ்சாக்ஷர மந்திரத்தையும் வெளிபடுத்துகிறார். பஞ்ச தசாக்ஷரி வித்தையில் வரும் அக்ஷரங்களை புனருக்தி இல்லாமல் கணக்கு பன்னினால் ஒன்பதுதான் வரும் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சிதம்பரம் நடராஜாவை பூஜை செய்யும் தீக்ஷிதர்களுக்கு பஞ்சதசீ, பஞ்சாக்ஷரம் என்ற இரு மந்திரங்களும் உபதேசமாயிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இன்றும் இருந்து வருகிறது. இந்த 14 ஒலியும் 14 வித்தைகளைக் குறிப்பிடுகின்றன. இப்பிரபஞ்சமும் பஸ்யந்தி, மத்யமா, வைகரீ, கிரியா, இச்சா. ஞானம், சத்துவம், ரஜஸ், தமஸ், என்கிற ஒன்பது சக்திகளால்தான் உருவாகியிருக்கிறது. சிதம்பர நடராஜர் ஆலயத்தில் ஸ்தூபி 9, படி 5, உத்ஸவ தினங்கள் 9,17,26 ஆகும்.

நடராஜர் இடதுகாலைத் தூக்கிக் காட்டுகிறார். அது அம்பிகையின் கால், இந்த காலை " குஞ்சிதாங்க்ரி " என்று பெரியோர்கள் கூறுகின்றனர். "குஞ்சிதாங்க்ரி" என்ற எழுத்துக்களுக்கு கடபயாதி சங்கியை ரீதியாகக் கணக்கு செய்தால் 15 வரும். இது பஞ்சதசாக்ஷிரிஎ வித்யைக் குறிக்கிறது. ஆகவே இக்காலைத் தூக்கிக் காட்டுவதன் மூலம் : தேவியை வழிபடு " என்கிறார் நடராஜர் அப்படி காட்டும் கையையும் உடௌரமாகக் காட்டுகிறார். குஞ்சிதாங்க்ரி குறிப்பிடும் "பஞ்சதசீ" வித்யை மானஸீகமாக ஜபம் செய் என்று அதற்கு அர்த்தம். அம்பிகைக்கு :அந்தர்முக ஸமாராத்யா" என்ற பெயர் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் ஸ்ரீவித்யைக்கு மிக முக்கியமான ஸ்தலம் என்பதற்கு மற்றொறு ஆதாரமாவது: சிதம்பரம் தில்லைவாழ் அந்தனர்களில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு உமாபதிசிவம் என்ற மகான் இருந்தார். இவர் சிவகாமி அம்மை ஆலயத்தின் வடக்கு பிரகாரச் சுவரில் ஸ்ரீசக்ரம் வரைந்து அதற்குமுன் ஸ்ரீ பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தை அந்தர்முகமாகத் தியானித்து அம்பிகை அனுக்ரஹத்திற்குப் பாத்திரமானவர். இவர் "குஞ்சிதாங்க்ரி ஸ்தவம் " என்ற 300 ஸ்லோகங்கள் கொண்ட நூலை இயற்ற்யிருக்கிறார். அதில் ஒவ்வொரு ஸ்லோகத்தைன் முடிவிலும் "குஞ்சிதாங்க்ரி பஜேஹம் " என்று வருகிறது. ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் தான் இயற்றிய "சிவகர்ணாம்ருத"த்தில் நடராஜரின் இடது காலுக்குத்தான் விசேஷம் என்று கூறியிருக்கிறார்.

சிதம்பரத்தில் ஸ்ரீசக்ர சம்மேளன யந்திரத்தில் 43 சக்ரங்களுக்குத்தான் பிரதான பூஜை செய்யப்படுகிறது. அந்த பூஜையும் 43 முக்கோணத்திலுள்ள ஆவரண தேவதைகளுக்குத்தான் நடைபெருகிறது.

மதுரையில் நடராஜர் காலைமாற்றி ஆடுகிறாரே என்கிறீர்களா? ஆமாம்! இங்கு அம்பிகையை வழிபடு என்று நான் சொல்லாமலேயே தேவி இங்கு பிரசித்தி பெற்றுவிட்டாள்" என்பதை சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம்.

நன்றி:
௧. திருவாவடுதுறை ஆதீனம் சரஸ்வதிமகால் நூல்நிலையம் மற்றும் ஆய்வு மையம்
 ௨.'' பக்தி '' இணையப்பக்கம் அன்பர்  பஞ்சாங்கம்.

No comments:

Post a Comment