Saturday, January 14, 2023

பேச்சியம்மன் வரலாறு

பேச்சியம்மன் வரலாறு

பெரியாச்சி (அ) பேச்சிஅம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள்.
கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள்.

அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள்.

(முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள். 

அவர்கள் கர்ப்பம் அடைந்தவர்கள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து, குழந்தை நல்ல முறையில் பிறக்க கர்பிணிப் பெண்களின் வயிற்றில் எண்ணைத் தடவி உருவி விட்டு சுகப் பிரசவம் அடைய தேவையானவற்றை செய்து வந்தார்கள்.

அது மட்டும் அல்ல வீடுகளில் வயதான மூதாட்டியின் அறிவுரைகள் முக்கியம் என்பதினால் அவர்களை அன்புடன் ஆச்சிமார்கள் என்றும் அழைத்து வந்தார்கள். 

ஆச்சிமார்கள் கர்பிணிகள் எந்த முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றை முறையாக தெரிந்து வைத்துக் கொண்டு இருந்ததினால் அவர்களும் மரியாதையான பொருளில் ஆச்சிமார்கள் என்று அழைப்பார்கள்.

அவர்களை கர்பமுற்றப் பெண்கள் வீட்டில் உள்ளவர்கள் தம் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களது உதவியைப் பெற்றுக் கொள்வார்கள்.

பயங்கரமான உருவைக் கொண்டு தன் கையில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டும், தொடையில் தனது கைகளினால் ஒரு பெண்மணி வயிற்றைக் கீறிய நிலையிலும் , கால் பாதத்தின் கீழ் ஒரு மனிதன் மிதிபட்டுக் கிடக்கவும் தோற்றம் தரும் பெரியாச்சி பார்ப்பதற்குத்தான் பயங்கரமானவளே தவிர அவளை வணங்கித் துதிப்போருக்கு அவள் அபாரமான கருணை காட்டுபவள். 

அவளை வேண்டி வணங்குபவர்களுக்கு அளவில்லா உதவி செய்பவள்.

பெரும்பாலான அவளது ஆலயங்களில் அவளுக்கு காவலனாக மதுரை வீரன் போன்றவர் காட்சி தருகிறார்.

அவளது தோற்றம் பற்றியும், பூமிக்கு வந்ததைப் பற்றியும் ஒரு கிராமியக் கதை உள்ளது. 

அந்தக் கதையின்படி ஒரு காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வல்லராஜா எனும் பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். 

அவன் ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்களுக்கு மட்டும் அல்ல, ரிஷி முனிவர்களுக்கும் அவனால் பெரும் தொல்லைகள் தோன்றின. 

அவன் ராக்ஷசர்களையும், அசுரர்களையும் தன் கையில் வைத்து இருந்தான். 

அதனால் அவனை யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. 

அதே நேரத்தில் அவனுக்குத் துணையாக இருந்த அரக்கர்களும், அசுரர்களும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெரியாச்சி அம்மனை துதித்து வந்தார்கள்.

அப்படி வாழ்ந்து கொண்டு கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வந்தவன் ஒருமுறை ஒரு முனிவர் மூலம் ஒரு சாபத்தைப் பெற்றான். 

அவளுக்குப் பிறக்க இருந்தக் குழந்தை பிரசவம் ஆனதும் அந்தக் குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான்.

அவனது நாடும் அழிந்து விடும். மேலும் அவனது குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தித் தரும்.

 மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால் அதற்குப் பிறகு ஒன்றும் ஆகாது.

அந்த மன்னனுக்கு வெகு காலம் குழந்தை பாக்கியமே இல்லாமல் இருந்தது. 

ஒரு முறை மனைவி கர்ப்பவதி ஆயினாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டு விட்டால் தனக்கு மரணத்தை சம்பவிக்கும் என்றாலும், அந்த சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு ஆபத்து கிடையாது என்பதை தெரிந்து வைத்து இருந்தவன் என்ன செய்வது என தவித்தான்.

ஆனால் அவன் அழிய வேண்டும் என்ற விதி இருந்ததினால் அசுரர்களையும் அரக்கர்களையும் அடக்கி வைத்து இருந்த பெரியாச்சி அம்மன் அவன் நாட்டில் ஒரு வயதோகிய பெண்மணி உருவில் வலம் வந்து கொண்டு இருந்தாள்.

அந்த காலங்களில் கட்டில்கள் கிடையாது. 
சொகுசான மெத்தைப் போன்றவையும் கிடையாது. பிரசவம் என்றாலே பிரசவத் தீட்டுப் படாமல் இருக்க பிரசவ வேளை வந்ததும் வீடுகளின் மூலைகளில் அவர்களை தனியாக இருக்கச் சொல்வார்கள். 

தரையில் பாயின் மீதுதான் இருந்து பிரசவிப்பார்கள்.
அத்தனைக் கட்டுப்பாடு இருந்த காலம் அது. 

அதனால்தான் பிரசவம் பார்க்க என்றே அனுபவம் மிகுந்த வயதான ஆச்சிகளை கர்பிணிகளுக்குத் துணையாக இருக்க வைப்பார்கள்.

அரசன் தன்னுடைய படையினரை அனைத்து இடத்துக்கும் அனுப்பி மனைவிக்கு பிரசவம் பார்க்க தக்க துணையைத் தேடினான். 

ஆனால் யாரும் அவனுக்கு உதவ முன் வரவில்லை. ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது.
பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் எனக் கவலை அடைந்த மன்னன் உடனடியாகக் கிளம்பி தானே ஊருக்குள் சென்று நல்ல ஆச்சியை பிரசவத்திற்காக தேடிக் கொண்டு இருந்த போது மன்னனின் முன்னால் ஒரு வயதான பெண்மணியின் உருவில் இருந்த பெரியாச்சி அம்மன் தென்பட்டாள்.

பெரியாச்சி அம்மன் ஒரு தெய்வப் பிறவி என்பதை அறியாமல் அவளது உதவியை மன்னன் நாடினான்.

பெரியாச்சி அம்மனும் அவனது மனைவிக்கு பிரசவம் பார்த்து அவன் குழந்தையின் உடல் முதலில் பூமியில் படாமல் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டு அவனிடம் ஒரு நிபந்தனைப் போட்டாள். 

அந்த நிபந்தனையின்படி அவள் அவனுக்குப் பிறக்கும் குழந்தையின் உடல் பூமியில் படாமல் வைத்துக் கொண்டு இருந்து விட்டால் அவளுக்கு ஏராளமான பொருட்களைத் தருவதாக உறுதி அளித்தான்.

குழந்தைப் பிறந்தது. 
மன்னனின் மனைவியின் அருகிலேயே அமர்ந்து கொண்டு இருந்த பெரியாச்சி அம்மனும் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள். 

காலக்கெடு முடிந்ததும், அரசன் வந்து அந்தக் குழந்தையை தன் மனைவியிடம் தருமாறு கேட்டான். 

ஆனால் பெரியாச்சி அம்மனோ குழந்தையை தன் கையிலேயே வைத்துக் கொண்டு முதலில் தனக்குத் தர வேண்டிய பொருட்களைக் கொண்டு வருமாறு கூறினாள். 

ஆணவம் பிடித்த மன்னனோ, ஒரு வயதான பெண்மணியினால் தன்னை என்ன செய்ய முடியும் என இறுமாப்புக் கொண்டு அவளுக்குக் கூறியபடி ஒன்றும் தர முடியாது எனவும், குழந்தையைக் கொடுக்காவிடில் உன்னைக் கொன்று விடுவேன் என கோபமாகக் கூறிய வண்ணம் உருவிய வாளுடன் பெரியாச்சியின் அருகில் சென்றான்.

அவ்வளவுதான், ஆத்திரம் அடைந்த பெரியாச்சி நான்கு கைகளுடன், கோரமான உருவைக் கொண்டு பயங்கரமான கண்களுடன் தன் சுய உருவைக் காட்டியபடி அங்கு அமர்ந்தாள். 

ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பிடித்தாள். 

இன்னொரு கையினால் மன்னனின் மனைவியை தூக்கித் தன் தொடை மீது வைத்துக் கொண்டு அவள் வயிற்றைக் கிழித்து அவள் உடலின் உட் பாகங்களைக் கடித்துத் தின்றாள்.

அதற்கிடையில் தன் அருகில் உருவிய வாளுடன் வந்த மன்னனை தன் காலடியில் தள்ளி அழுத்திக் கொன்றாள். 

அவன் படையினரை அவளது அடிமைகளான அசுரர்கள் துரத்திக் கொன்றார்கள்.

இப்படியாக கொடுங்கோல் மன்னனின் கதையை அவன் வம்சத்தோடு முடித்ததும் ஆக்ரோஷமாக நின்ற அவளைக் கைகூப்பி வணங்கி நின்ற மக்கள் அவள் கோபத்தைத் தணித்துக் கொண்டு தம்மை காப்பற்றி அருளுமாறு வேண்டிக் கொள்ள அவளும் கோபம் தணிந்து தன்னைப் பற்றிய உண்மையைக் கூறினாள். 

தானே காளியின் அவதாரம் எனவும், இனி தன்னைத் துதித்து வணங்கி வந்தால் தான் குடிகொள்ளும் ஊரைக் காப்பேன் எனவும், அவரவர் வீடுகளில் உள்ள கர்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் தான் உதவுவேன் என்றும், அவர்களுடைய குழந்தைகளுக்கு தானே பாதுகாவலராக இருப்பேன் எனவும் உறுதி தந்தாள்.

இப்படியாக தன்னை அடையாளாம் காட்டிக் கொண்டவள் பல கிராமங்களில் கிராம தேவதையாகவும், நகரங்களில் நகர மக்கள் வணங்கும் பேச்சி அல்லது பெரியாச்சி அம்மனாகவும் விளங்கி வருகிறாள். 

அவள் ஆடி மாதத்தில் பெருமளவு ஆராதிக்கப்படுகிறாள். 

கர்பிணிகளை அவள் ஆலயத்தில் அழைத்துச் சென்று அவள் ஆசிகளை வேண்டுகிறார்கள். 

குழந்தைப் பிறந்ததும், தொட்டில் போட்டு பெயர் வைக்கும் முன் முதலில் அவள் சன்னதிக்கு எடுத்துச் சென்று குழந்தையை அவள் சன்னதியில் கிடத்தியப் பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து மற்ற சடங்குகளை செய்கிறார்கள்.

பெண் குழந்தைகளுக்கு காது குத்தல் மற்றும் மொட்டைப் போடுதல் போன்ற சடங்குகளையும் அவளை வேண்டிக் கொண்டு அவள் ஆலயத்தில் செய்கிறார்கள். 

அவளை சிலர் மாரியம்மனின் அவதாரமாகவும் பார்க்கின்றார்கள்.

கிராமப்புறங்களில் உள்ள அவளது சில ஆலயங்களில் அவளுக்கு மிருக பலிகள் தரப்படுகின்றன. ஆனால் நகர்புற ஆலயங்களில் சுத்த சைவப் பிரசாதங்களையே படைக்கின்றார்கள்.

ஸ்ரீ பேச்சியம்மன் மந்திரம். 

ஓம் ஞான ஸ்ரீ பேச்சியம்மன் நமஹ ...

படித்ததில் பிடித்தது.

Friday, January 13, 2023

சங்கல்பம் என்ன சொல்கிறது

சங்கல்பம் என்ன சொல்கிறது?

பூஜா சங்கல்பம் மந்திரம் விளக்கமாக தெரிந்து கொள்வோம்

*மமோபாத்த ஸமஸ்த*
என்னால் அடையப்பெற்ற அனைத்து

*துரித க்ஷயத்வாரா*
பாபங்களின் நிவர்த்தி வாயிலாகவும்

*ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்*
இறைவனின் ப்ரீதிக்காகவும்

*சுபே சோபனே முஹூர்த்தே*
சுபமான இந் நல்வேளையில்

*அத்ய ப்ரஹ்மண*
இன்றைய பிரம்மாவின்

*த்விதீய பரார்த்தே*
பிரம்மாவின் ஆயுளில் இரண்டாம் பாகம் 

*ஸ்வேத வராஹ கல்பே*
ஸ்வேத வராஹ கல்பத்தின்

*வைவஸ்வத மன்வந்தரே*
வைவஸ்வத மன்வந்தரத்தின்

*அஷ்டாவிம் சதிதமே*
இருபத்தெட்டாவது

*கலியுகே பிரதமே பாதே*
கலியுகத்தின் முதல் கால் பாகத்தில்

*ஜம்பூ த்வீபே*
ஜம்பூ த்வீபத்தில்

*பாரத வர்ஷே*
பாரத வர்ஷத்தில்

*பரத கண்டே*
பரத கண்டத்தில்

*மேரோர் தக்ஷிணே பார்ஸ்வே*
மஹா மேருவாகிய ஹிமயத்தின் தென்பக்கம்

*சகாப்தே*
சக என்னும் ஆண்டு கணக்கின்படி

*அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே*
நமது தற்கால வழக்கிலுள்ள

*ப்ரபவாதி ஷஷ்டி ஸமவத்ஸரானாம் மத்யே*
பிரபவ முதல் தொடங்கும் அறுபது ஆண்டுகளினிடையே

*அமுக ஸம்வத்ஸரே*
இன்ன பெயருள்ள ஆண்டின்

*அமுக அயனே*
இன்ன அயனத்தில்

*அமுக ருதௌ*
இன்ன ருதுவில்

*அமுக மாசே*
இன்ன மாதத்தில்

*அமுக பக்ஷே*
இன்ன பக்ஷத்தில் (பிறையில்), 

*ஸுபதிதௌ*
சுபதிதி

*அமுக வாசர யுக்தாயாம்*
இன்ன கிழமையும்

*அமுக நக்ஷத்ர யுக்தாயாம்*
இன்ன நக்ஷத்திரமும்

*சுபயோக சுபகரன*
நல்யோகமும் கரணமும்

*விசேஷேன விசிஷ்டாயாம்*
மிக விசேஷமும்

*அஸ்யாம் ஸுபதிதௌ*
கூடிய நல்ல நாளில்

*ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம்*
நாராயண ப்ரீதிக்காகவும் (பரமேஸ்வரன் மற்றமுள்ள அம்பிகை போன்ற தங்களின் உபாசனைக் கடவுளர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்) 

*அஸ்மாகம் ஸஹ குடும்பானாம்*
நமது குடும்பத்தினரின்

*க்ஷேம ச்தைர்ய தைர்ய*
க்ஷேமம், ஸ்திரத் தன்மை, தைர்யம்

*வீர்ய விஜய ஆயுளாரோக்ய*
வீரம், வெற்றி வியாதியற்ற ஆயுளும், 

*அஷ்ட ஐஸ்வர்ய*
எட்டு செல்வங்களும்

*அபிவ்ருத்யர்தம்*
பெருகும் பொருட்டும்

*ஸமஸ்த மங்களா வாப்யர்தம்*
அனைத்து மங்களங்களும் கிடைக்கும் பொருட்டு

*ஸமஸ்த துரிதோப சாந்த்யர்தம்*
அனைத்து பாபங்களின் நிவர்த்திக்காகவும்

*தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித*
அறம், பொருள், இன்பம், வீடு, நால்வகை, 

*புருஷார்த்த சித்யர்த்தம்*
பேறுகள் கிட்டவும்

*யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி*
சக்திக்கேற்ப, தியானம் ஆவாஹனம் கூடிய

*பூஜாம் கரிஷ்யே*
பூஜையை செய்கிறேன்

*பூஜாம் கரிஷ்யாம்*
பூஜையை செய்கிறோம்.

Wednesday, January 11, 2023

தவ்வை என்னும் ஜேஷ்டா தேவி ( மூத்த தேவி )

#தவ்வை என்னும்
#ஜேஷ்டா_தேவி:( மூத்த தேவி)

ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை, மூதேவி , அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு. இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரியும் ஆவார்.

பிரதி தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர், ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். சமசுகிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர்.

தமிழர்களின் மூத்த தெய்வம்... வளத்தின் மூல வடிவம்... மூதேவி!

மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருளும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். 

இப்படியெல்லாம் அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வம் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்... மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.  

மூதேவி என்றால், மூத்த தேவி. தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு.  

தமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு 'கந்தழி' என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்தக்களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள், தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு, 'நடுகல்'  வழிபாடு என்று பெயர்.  

இவை அனைத்தையும்  விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரிதெய்வமாக மழையையும், நீராமகளிராக நதிகளையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழ் மரபு. 

கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. "தவ்வை" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள். 

யார் இந்த மூதேவி ? அவளின்  வரலாறு என்ன ?

நம் முது தந்தையரை எப்படி 'மூதாதையர்' என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்ததேவிக்கு 'மூதேவி' என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான 'அக்கை' என்கிற வார்த்தை எப்படி 'தமக்கை' ஆனதோ, அதேபோல் 'அவ்வை' என்ற வார்த்தை 'தவ்வை' ஆகியிருக்கலாம் என்கிறார்கள்  வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்குத்தான்! 

உரத்தின் அடையாளம் 'தவ்வை'. நெற்கதிர்களின் அடையாளம் 'திருமகள்'. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று. 

தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல், 'தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன், சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கிய'தாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. 'சேட்டை' மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர், தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 - ம் ஆண்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டது.  கி.பி 13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு  காரணாகமம், சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.

புராணங்களில் தவ்வை பற்றி :

சைவ - வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது.  இது பண்டைய தமிழரின்,  உரத்துக்குப் பின்னர் செழிப்பு என்பதன் தத்துவத்தின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதே போல் வருணனின் மனைவியாகவும் சொல்லப்படுகிறது. வருணன்  மழைக் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 தற்போதைய தவ்வை வழிபாடு :

 பல கோயில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா(தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. 

வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை, சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள்.. கிழிந்த ஆடை, அசிங்கமான தோற்றம், காக்கைக் கொடி இவையே தூமாதேவியின் அடையாளங்களாக உள்ளன. தவ்வைக்கும் இவையே அடையாளங்களாக உள்ளன. 

 தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோயில்களும் உள்ளன. 

பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து  'தவ்வை'யை அமங்கலத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர்.

தவ்வை வழிபாடு பற்றி வரலாற்று ஆய்வாசிரியர் தொ. பரமசிவத்திடம் கேட்டோம். "வளத்தின் மூல வடிவமே  ஜேஸ்டாதேவிதான் (தவ்வை). திருவள்ளுவர் ஜேஸ்டாதேவியை தவ்வை என்று சொல்கிறார். லட்சுமியின் அக்கா  மூதேவி(தவ்வை). மூதேவிதான் தற்போது ஜேஸ்டாதேவியாக வழிபடப்படுகிறாள். தவ்வை உரத்தின் கடவுள். லட்சுமி விளைந்த தானியங்களின் கடவுள். தவ்வை மங்கலமான தெய்வம். 

தமிழ்நாடு முழுவதும் தவ்வைக்குச் சிலைகள் பல உள்ளன. சிலர் எந்த சாமி என்றே தெரியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் அழுக்காப் போன கடவுள் என்று ஒதுக்குகிறார்கள். அது தவறு. வளங்களுக்கெல்லாம் மூல வளமே அழுக்குதான். எனவே அனைவரும் ஜேஸ்டாதேவியை வழிபடவேண்டும்" என்கிறார் பரமசிவம்.

தவ்வையின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம். அதேபோல், 'என்னைப் பார் யோகம் வரும்' என்று ஒவ்வொரு வீடுகளிலும் தொங்குகின்ற அட்டைகளை நாம் காண முடியும். கழுதையின் குரலைக் கேட்பது கூட நற்சகுணமாகத்தான் பலரால் நம்பப்படுகிறது. 

வழிபாடு:

தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்ததில் இவள் வழிபாடு முக்கிய இடத்தில் இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார்.

பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.

தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். தவ்வையை வண்ணார்கள் எனப்படும் இனத்தவர்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகின்றனர்,இவர்களை ஏகாளி (சிவன்காளி) அம்சத்தினர் என்றும் அழைக்கின்றனர்.

#கோயில்கள்:

தவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்சாமின் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீளா தேவிக்கு கோயில் அமைந்துள்ளது.

#தமிழகம் :

தவ்வையை மூலவராகக் கொண்ட கோயில்கள் தமிழ்நாட்டில் இல்லை. தவ்வை தனியாகவோ, மகன் மற்றும் மகளுடன் ஒரே பீடத்தில் அமைத்து வணங்கும் வழக்கம் உள்ளது. எண்ணற்ற கோயில்களில் தவ்வை சிலையானது உள்ளது. சில இடங்களில் தவ்வை கோயிலில் அல்லாமல் விவசாய நிலங்களின் மத்தியில் காணப்படுகிறார்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலமுனி சித்தர் பீடம் நுழைவுவாயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை அமைந்துள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காலம் பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதை.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு.
பல்லவன் இராச சிம்மன் எடுப்பித்த காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலிலும், கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும், வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது.
திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை "உஜ்ஜீவநாதர்' (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது.
ஓரையூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம்
குளித்தலை கடம்பவனநாதர் கோயில் - திருச்சுற்றில் உள்ளது.
சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் - திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி சன்னதிக்கு அருகே தனிக்கல்லாக வைக்கப்பட்டுள்ளது.
மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் - சுற்றுசுவரில் பதியப்பட்டுள்ளது.
திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் - திருச்சுற்றில் உள்ளது.
சிறீராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் - கோயிலுக்கு வெளியே பிள்ளையார், நவக்கிரக சன்னதி அருகே உள்ளது.

பெரணமல்லூர் திருக்கரேசுவரர் கோயில
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வளமைத் தெய்வமான தவ்வை நடுகல்லை, தூய நெஞ்சக் கல்லூரி பேரராசிரியர்கள், செப்டம்பர் 2018-இல் கண்டெடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பரளச்சி கிராமத்தில் ஆகஸ்டு 2020-இல், கிபி பத்தாம் நூற்றாண்டின் தவ்வை சிற்பத்தை கண்டெடுத்தனர்.
உத்திரமேரூர், அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூதேவி எனப்படும் ஜேஷ்டா தேவி கற்சிலையை, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் மே 2021-இல் கண்டெடுத்தனர்.
பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் உள்ள ஜேஷ்டாதேவி கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும்.

தமிழ் இலக்கியங்களில் :

சங்க இலக்கியங்களில் இவர் மாமுகடி ( 'கரிய சேட்டை ஆகிய மூதேவி'), தவ்வை, காக்கைக் கொடியோள் பழையோள் உட்படப் பதினான்கு (14) பெயர்களால் அழைக்கப்படுகிறாள். தெற்கின் பெரும் பகுதியைப் பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டில் தமிழர்களின் தாய்த் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்காலத்தில் சேட்டை வழிபாடு சிறப்புற்றிருந்தமையைக் கல்வெட்டுகள் கூறும். சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர்.

"வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை"

என்ற ஒளவையார் பாடலும்.

"மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

என்ற திருவள்ளுவர் குறளும் மூதேவியின் பழமையைக் கூறுகின்றன. குறளின் பொருள் சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும்.

அழுக்கு, நாற்றம், துன்பம்,புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் இவை எல்லாம் மூதேவியின் அறிகுறிகளாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும்.

மூதேவி வழிபாடு தற்போது மிகவும் குறைந்துவிட்டது. மூதேவி என்ற நாட்டுப்புற சிறு தெய்வம் தமிழரிடையே வழங்கும் கதைகளிலும், பழமொழிகளிலும் தாழ்த்தப்பட்டு இழிசொல்லாக்கப்பட்டு விட்டதால் இவளுடைய முக்கியத்துவத்தைச் சரிவர உணர முடியாதிருக்கிறது.

தரித்திரத்தின் தெய்வம் எனப் போற்றப்பட்ட தவ்வையை அக்காலத் தமிழர் செல்வத்துக்காகவும் வளத்துக்காகவுமே வழிபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரிய செய்தி. தமிழகத்தின் பெரும்பாக்கம், தென்சிறுவலூர், பேரங்கியூர் முதலான ஊர்களில் கிடைத்த கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பங்களில், அவள் தன் மகன் குளிகனுடனும், மகள் மாந்தியுடனும் கையில் பணப்பேழையுடனும் காட்சியளிக்கிறாள்.

தவ்வை பற்றிய மிகப்பழைய குறிப்பு திருக்குறளிலேயே வருகிறது.ஏழாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் தொண்டரடிப் பொடியாழ்வார் தன் திருவாய்மொழியில்,

'கேட்டிரே நம்பிமீர்காள் கெருட வாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே'

திருமால் இருக்க, தவ்வையிடம் செல்வத்தை எதிர்பார்க்கிறீர்களே! என்று இகழ்ந்து பாடுகிறார்.

தவ்வை செழிப்புக்காக வணங்கப்பட்டுவந்தாலும், அவள் அமங்கலத்தின் தெய்வம் என்ற நம்பிக்கை பல்லாண்டுகளாய்த் தொடர்ந்ததன் விளைவு, அவளது வழிபாட்டை மெதுமெதுவாக குறைக்க வழிவகுத்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தொன்றுதொட்டு நிலைத்துவந்த சமய வழக்கங்களே நிலைத்துவிடுவதும், இடைக்காலத்தில் திடீர் புகழ்பெற்ற, அல்லது புறக்கணிப்புக்குள்ளான, அல்லது வேறுபகுதியிலிருந்து அறிமுகமான தெய்வ வழிபாடுகள், முற்றாக அழிந்தொழிந்து போகாமல், சைவ - வைணவப் பொது நீரோட்டத்தில் கலந்து தம் சுயமிழந்து மறைந்துவிடுவதுமே காலம்காலமான வழக்கமாகும். தவ்வைக்கும் அதுவே நேர்ந்தது.

தவ்வை மட்டுமன்றி, தமிழகத்தில் ஆங்காங்கே சைவக் கோயில்களின் கவனிக்கப்படாத மூலைகளில் சிலைவடிவில் வீற்றிருக்கும் புத்தர்களும், சமண தீர்த்தங்கரர்களும், விநாயகி முதலான தாந்திரீக தெய்வங்களும் இதைத் தான் சொல்லாமல் சொல்லி, அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருக்கின்றனர்.
-----------------------------------------------------------

திருச்சிற்றம்பலம் 🙏

பஞ்சவாசம்

இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அருமருந்து #பஞ்சவாசம் 
பசி இன்மை 
பதற்றம்
மனம் சார்ந்த பிரச்சினைகள்
குடும்பத்தில் ஏதோ ஒரு குழப்பமான சூழல் ஒற்றுமையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு

*பஞ்ச வாசம்*

பஞ்ச வாசம் என்பது நமக்கு புதிதாக தோன்றும் ஆனால் நம் முன்னோர்கள் இதை தினமும் பயன்படுத்தி நல் வாழ்கையும் மகிழ்ச்சியும் நிறைவும் அடைந்தனர்,

 பஞ்ச பூதம் ஐந்து , ஐந்து என்னும் மூலிகை கலவைகள் கொன்ட மருந்துகள்(உணவே மருந்து) இன்றும் பயன்படுத்தப் படுகின்றன, 

பஞ்ச வாசம் என்பது ஏலம், கிராம்பு, பச்சை கற்பூரம், ஜாதிக்காய்,வால் மிளகு,(அல்லது)தக்கோலம் (,சுத்தி செய்து) என்னும் ஐந்து கலவையாகும்.

 🌹லட்சுமி வாசம் செய்யும் மங்கள பொருள் ,வாசம்=சுவாசம்=வாழ்வு (நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்)ஆகும்.

பயன்படுத்தும் முறை ;

தாம்பூலம் தரிக்கும் போது பஞ்ச வாசத்துடன் தரிக்கவும் என்று வள்ளல் பெருமானின் உரைநடைப் பகுதியிலும்,ஏலம்    தக்கோலம் போன்ற வாசனை திரவியங்களுடனும் என்ற வரிகள் பதார்த்த குண சிந்தாமணி   போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

👳‍♂🧕திருமணம் செய்த இல்லற தர்மவாசிகள் தாம்பூலம் தரிக்கும் போது இந்த பஞ்ச வாசனை சேர்த்து(ஒரு சிட்டிகை அளவு)  பயன்படுத்த உடல் பிணிகள் ஏற்படாது.(தாம்பூலத்தின் போது🍃 வெற்றிலை யின் நுனி,காம்பு,நடு நரம்பு ஆகியவை நீக்கி சாப்பிட வேண்டும்.

👨‍👩‍👦‍👦ஒரு தாமிரப்பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி  பஞ்ச வாசம(ஒரு சிட்டிகை அளவு)🌓 இரவில் போட்டு பூஜை அறையில்🥢 வைத்து காலையில்☀ இறை சங்கல்பத்துடன் தீர்த்தமாக 💧 சாப்பிடலாம்,
மேலும் 20லிட்டர் நீர் உள்ள குடத்தில் அரை அரிசி அளவு பஞ்சவாசம் போட்டு நீரை சுத்தி செய்து பருகலாம்.

▪️இதில் கிராம்பு உள்ளதால் பணம் சேமிக்கும் இடத்தில் வைக்க செல்வ வளம் பெருகும்..

 இதை சிறிய அளவில் பர்சில் வைத்துக்கொண்டால்🚎 பிரயாணம் செய்யும்போது. அல்லது ஓட்டலில்🏢 சாப்பிட்டு வயிறு  அசௌகரித்தின்போது ஒரு சிட்டிகை சாப்பிட லாம்.

இனிப்பு🍮 பண்டங்கள் தயாரிப்பிலூம் சிட்டிகை 0.1gm  அளவு சேர்க்கலாம்,குளுக்கந்திலும் கலந்து சாப்பிட மிகவும் நறுமணமாக இருக்கும்.

🏵பஞ்ச வாசம்  உடலில் உள்ள இராஜ உறுப்புகளிலுள்ள சக்தியை தூண்டுகிறது இதனால் மந்தநிலை விலகி புத்துணர்ச்சி ஏற்படுகிறது, அஜீரணத்தை தடுக்கிறது, வாய்துர்நாற்றத்தை போக்குகிறது, வயிற்றுவலியை நீக்குகிறது,சரியான முறையில் தூக்கத்தை ஊக்குவிக்கும்,சுவாசம் சீராகும்,மன அழுத்தம் குறையும் இவ்வாறாக பல நன்மைகள் உண்டாகும்.

பஞ்சவாசம் 3.gm ரூ.40+ கொரியர்

பஞ்சவாசம் 10gm ரூ.110+கொரியர்

Thanks FB

Saturday, December 31, 2022

காந்தாரா

Thank to Fb
#காந்தாரா இந்த படத்தின் அடிநாதத்தை அரசு மருத்துவரான அருண் பிள்ளை இன்னும் டீட்டெயிலாக தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், காந்தாரா திரைப்படத்தில் காட்டப்படும், பஞ்சுருளி மற்றும் குலிகா தெய்வங்களின் மூலமும், கதாப்பாத்திரங்கள் வழியாக தெய்வங்கள் ஊடுருவி சென்றது எப்படி என்பதை பற்றியும் கூறியுள்ளார்.

இதோ அவரது வார்த்தைகளில் இருந்து.. இதற்கு மேல் உலகமே பாராட்டிய படத்தை புகழ்ந்து எழுதுவது ஏற்புடையதல்ல.‌ ஆகவே படத்தில் நீங்கள் புரிந்துக்கொள்ள தவறிய சிலவற்றைப் பற்றி எழுதுகிறேன். வேண்டுமானால் இந்த கட்டுரையை படித்து விட்டு மீண்டும் ஒருமுறை படத்தை OTTல் பாருங்களேன். 'காந்தாரா' என்றால் சமஸ்கிருதத்தில் 'அடர் காடு' என்று பொருள்படும். அது வெறும் மேம்போக்கான பொருள் மட்டுமே என்றாலும், உட்பொருள் 'பிறப்புகளின் அடர்வு' என்பதே ஆகும். ஒரு மனிதனின் ஜனன-மரண பிறவி என்பது காடு போன்றது. அதில் சிக்கி தவிக்காமல் இருக்க, சரணாகதி எனும் மோக்‌ஷமே வழி என்பது சூசகம்.

படத்தில் விலங்குகள் வாழும் காடு, மனிதர்கள் வாழும் கிராமம் இரண்டிற்குமான எல்லை வரையறை தான் முக்கிய பொருளாக பேசப்பட்டுள்ளது. இரண்டில் வாழும் உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று ஒன்றி வாழ வேண்டும் என்பதே வேட்கை. அதற்கு தெய்வம் எப்படி உதவியது என்பதே கதை. இதனைப் படத்தின் உட்பொருளாக எப்படி எடுத்து சென்றார்கள் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் முதலில் கர்நாடக மாநிலம் துளு நாட்டின் 
சில பாரம்பரியங்களையும், கலாச்சாரங்களையும், அவர்களது மண்ணின் தெய்வங்களையும் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

காந்தாரா காரணம்.. உருவான பிணைப்பு.. குலதெய்வம் கோவில்களுக்கு குடும்பத்தோடு கிளம்பி செல்லும் மக்கள்!

#பஞ்சுருளி ;
நான் முன்பு வராஹத்தைப் பற்றிய ஒரு பெரிய நீண்ட கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் வராஹம் எப்படி இந்திய நாட்டின் கலாச்சார தெய்வமானது என்பதனையும், பிறகு அது எப்படி விஷ்ணுவின் அவதாரமாக கொள்ளப்பட்டது என்பதனையும் விரிவாக எழுதியிருந்தேன்‌. வராஹம் விஷ்ணுவின் அம்சமாக ஏற்றுக்கொள்ளப்படாத காலத்தில், துளு நாட்டினர் அத்தெய்வத்தை 'பஞ்சுருளி' என்று போற்றி வந்தனர். காடுகளின் முடிசூடா மன்னனான வராஹம், காட்டின் தெய்வமாக கருதப்பட்டது. இந்த பஞ்சுருளி தெய்வத்திற்கு உருவம் கிடையாது. செங்குத்தாக‌ நிறுத்தப்படும் கல் ரூபமாக வணங்கப்பட்டு, வருடத்தின் ஒரு நாள் பூத கொலா என்ற பாரம்பரிய ஆட்டம் நிகழ்த்தப்பட்டு(படத்தில் காட்டப்பட்ட ஆட்டம்) வாக்கு கேட்கப்படும். அப்போது வராஹத்தைப் போன்ற உருவ கவசம் சாத்தப்படும். பஞ்சுருளி தெய்வத்திற்கென்று தனிக் கதை கிடையாது. மனிதன் காட்டில் பெரும்பாலும் சிங்கம் புலி போன்ற கொடிய விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதில்லை. ஆனால் சாதுவான வராஹத்தினை அடிக்கடி பார்க்க நேரிடும். வராஹம் மனிதனை சீண்டுவதில்லை, எனினும் அது மனிதனையே வீழ்த்தும் வல்லமைக் கொண்டது. ஆனால் முறையற்ற மனிதன், அதனை வேட்டையாடுவதை வாடிக்கையாக்கவும் தவறவில்லை. அச்செயல்களைத் தவிர்க்கவே வராஹம், மனிதன் எனும் விலங்குக்கும் வனத்தில் வாழும் கொடிய விலங்குகளுக்குமான ஒரு வரையறை விலங்கு போல் வைக்கப்பட்டது. அதனால் அக்காலத்தில் காட்டில் ஏராளமாக காணப்பட்டதும், வனப்பான தோற்றம் கொண்டதுமான வராஹம் தெய்வமாக கொள்ளப்பட்டிருக்கலாம்.

#குலிகா ;
படத்தில் வரும் அடுத்த தெய்வம் குளிகா. இது நாம் அனைவரும் படத்தில் கிரகிக்க மறந்த ஒரு தெய்வம். ஆனால் கதையே இந்த குளிகா தெய்வத்தை சுற்றி தான் நகர்கிறது. முதலில் யார் இந்த குளிகா என்று கூறிவிடுகிறேன். கைலாயத்தில் பார்வதி தேவி ஒரு நாள் சிவபெருமான் பூசிக் கொள்ள திருநீறு எடுத்து வந்தார், அதில் ஒரு கல் இருந்தது. அதனை சிவன் தூக்கி எறிய, அது சிவன் ஸ்பரிசம் பட்டு குளிகா எனும் பூத கணமாக மாறியது. அந்த கணத்தின் விசித்திரமான செய்கைகளால் சிவன் வேதனையுற்று குளிகாவை வைகுண்டத்தில் விஷ்ணுவிற்கு பணிவிடை செய்ய அனுப்பி வைத்தார்‌. அங்கும் குளிகாவின் செய்கைகள் மாறாததால் ஆத்திரமடைந்த விஷ்ணு, குளிகாவை உலகில் பிறக்க சபித்தார். 

பூவுலகில் தாயின் நிறைமாத கர்ப்பத்தில் இருந்த குளிகா தன் தாயிடம் கேட்டது 'நான் உன் வயிற்றிலிருந்து எப்படி வெளி வர வேண்டும்?' அதற்கு தாய் 'மற்ற குழந்தைகள் போல் சுகப்பிரசவம் செய்' என்றாள். முன்பு சிவனையும் விஷ்ணுவையும் ஆத்திரமடைய செய்த விலங்கு குணமும் விதண்டாவாத செய்கைகளும் குளிகாவை நீங்கவில்லை. உடனே தாயின் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்தது. வந்த நேரத்தில் பசி பசி என்று கண்ணில் பட்ட அனைத்தையும் சாப்பிட்டது. விஷ்ணு துயின்ற கடலையும் குடித்து வற்றச்செய்து, அதிலிருந்த மீன்களையும் தின்று தீர்த்தது. பிறகு வனத்தில் புகுந்து யானை குதிரைகள் இரத்தம் குடித்தது. எவ்வளவு தின்றும் தீரா பசியும் தாகமும் கொண்ட குளிகாவிற்கு தன் சுண்டு விரல் இரத்தம் தந்து பசி அடக்கினார் விஷ்ணு.

#பஞ்சுருளியும்_குளிகாவும் ;
எனினும் நிலப்பிரதேசத்தின் குளிகாவை கானகத்தில் அடக்கி ஆளவே விஷ்ணு காட்டுப்பன்றி அவதாரம் எடுத்து பஞ்சுருளி ஆனார் எனலாம். அப்போது பஞ்சுருளிக்கும் குளிகாவுக்குமான சண்டை ஓயாது. விலங்கு குணம் கொண்ட குளிகாவை விலங்கு ரூபம் கொண்டு எதிர்த்தார் விஷ்ணு. இதற்கிடையே பார்வதி தேவியின் அம்சமான ஏழு ஜல துர்க்கைகள் (சப்தகன்னியர்) ஒருமுறை கானகத்திற்கு வந்திருந்த போது, குளிகாவிற்கு அடைக்கலம் கொடுத்து உணவளித்து சாந்தப்படுத்தினர்‌. அப்போது பஞ்சுருளிக்கும் குளிகாவிற்குமான சச்சரவுகளைத் தீர்த்து வைத்து இருவரையும் அண்ணன்-தம்பி போல் வாழ கேட்டுக்கொண்டனர். குளிகாவை தங்கள் காவல் தெய்வமாக ஆக்கிக் கொண்டனர். இதனால் குளிகாவிற்கு 'ஷேத்திரபாலன்' என்ற பெயரும் உண்டு. இதனால் காடு-கிராமம் ஆகியவற்றின் எல்லை தெய்வங்களாக முறையே பஞ்சுருளி-குளிகா போற்றப்பட்டனர். இருநிலங்களுக்குமான எல்லை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகவே வழிபடப்பட்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் இணைபிரியாதவர்களாக மாறினர். காலப்போக்கில் குளிகா, பஞ்சுருளியின் காவல் தெய்வமாக ஆக்கப்பட்டார்! காரணம் காடு அழிவை சந்தித்தது, கிராமம் காட்டை காக்க வேண்டியதாயிற்று. குளிகாவிற்கு தனி உருவம் கிடையாது. வானத்தை பார்த்த கல் ஒன்றே குளிகாவாக ஏற்கப்பட்டது. இதற்கும் தனியே குளிகா கொலா என்ற ஆட்டம் உண்டு (படத்தில் காட்டப்படவில்லை).

#வராஹ_ரூபம்_பாடல் ;
படத்தின் அடிநாதமாக விளங்கியது 'வராஹ ரூபம்' பாடல். இந்த பாடல் தோடி, மோஹனம் ஆகிய இராகங்களால் தந்த கிரக்கத்தையும், அத்தோடு கூடிய பயபக்தியையும் ஒருவர் வாய்விட்டு கூறிவிட முடியாது. காரணம் அது ஒவ்வொரு ஆன்மாவின் பக்தியினையும் அதன் ஆழ்மனதில் சென்று கிளறியுள்ளது. அத்தனை மொழிகளும், இப்பாடலை மொழிபெயர்க்காமல் அப்படியே ஒரு ஸ்லோகம் போல் ஏற்றுக்கொண்டு விட்டது தான் இந்த பாடலின் தனித்துவம். மேலும் பாடல், மேலே சொன்ன கதையினை மிக அழகாக ஊர்ஜிதம் செய்கிறது. பாடலில் வரும் முதல் பத்தி வராஹத்தை போற்றுவது ஆகும்.
'வராஹ ரூபம் தெய்வ வரிஷ்டம்
வரஸ்மித வதனம்
வஜ்ர தந்த தர ரக்ஷா கவசம்'
வராஹம் என்னும் காட்டுப்பன்றியின் இந்த ஒப்பற்ற கடவுளின் ரூபம், வரங்கள் பல தரும் அவரின் மகிழ்ந்த கோலம் ஆகும். வைரம் போல் அங்கே ஒளிரும் அவரின் தந்தம்(கொம்பு) நம் அனைவரையும் காக்க வந்த கவச ஆயுதம் ஆகும்! பாடலின் இரண்டாவது பத்தி குளிகாவைப் பற்றியது என்று சொன்னாலும், இது வராஹத்திற்கும் பொருந்தும்.

'ஷிவ ஸம்பூத புவி ஸம்ஜாத
நம்பீ தவ கிம்பு கொடுவவ நீத
ஸாவிர தைவத மந ஸம்ப்ரீத்த
பேடுத நிந்தெவு ஆராதிஸுத!'
சிவ பெருமானின் சாராம்சம் கொண்டவரும், பூமித்தாயுடன் ஒன்றி வாழ்பவரும், நம்பியவர்களுக்கு அபயம் தருபவரும், ஆயிரமாயிரம் தேவர்களின் மனதை கவர்ந்தவருமான தேவரே! {எழுத்துரு - அருண் பிள்ளை} உங்கள் முன்பு பணிவோடு நாங்கள் கைக்கூப்பி நிற்கிறோம்! இதனால் தான் 'பூத கோலா' ஆடுபவர் சிவனைக் குறிக்கும் முக்கண் குறியீட்டினை நெற்றியில் இட்டும், மங்களத்தைக் குறிக்கும் மஞ்சள் நிறம் இட்டும், வராஹ படிமத்தை தலையில் தாங்கியும் ஆடுகிறார். 'குளிகா கொலா' என்ற ஆட்டத்தில் நடனமாடுபவர், குளிகாவாக மனித முக ரூபம் கொண்டு கருப்பு சிவப்பு வர்ணங்கள் இட்டு ஆடுவார். படத்தில் பார்க்கவேண்டுவன நிதர்சனத்தில் உள்ளது போன்றே பஞ்சுருளி-குளிகா என்கிற ying-yang characterisationஐ படத்திலும் காண்பித்திருக்கின்றனர். படத்தில் பஞ்சுருளி, வராஹமாகவே காட்டப்பட்டிருக்கும். குளிகா தான் நம்ம ஹீரோ!
மறைந்து போதல் - பூத கொலா ஆடுபவர் மறைந்து போவது என்பது அந்த ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களில் ஒன்று. நிஜ ஆட்டத்தில் தெய்வம் நீங்கி (மறைவதாக) காட்டப்பட்டாலும், படத்தில் அமானுஷ்ய முறையில் ஆடுபவரே மறைவதாக காட்டப்படுவது மிக அருமை.‌ அடர் காட்டினுள் (பிறப்பு அடர்வு) சிக்கிக்கொள்ளாமல் இருக்க மறைவதே (மோக்ஷம்) சிறந்தது என்பது தான் சூசகம். சிவாவின் அப்பாவும் மோக்ஷம் அடைகிறார்.

#ஆட்கொள்ளுதல்
சிவா சிறுவயது வரை நல்லவனாகவே இருந்து வருகிறான். அவனது அப்பா மறைகின்ற போது, அங்கே அவரை நோக்கி ஓடுகிறான். அப்போது அனைவரும் பின் தொடர்ந்த போதும், அவர் மறைந்த மாய தீ வளையம் அவனை மட்டுமே உள் வாங்குகிறது‌. அந்த நொடியிலேயே குளிகா தெய்வம் அவனை ஆட்கொண்டுவிடுகிறது. குளிகா தான் - அது முதல், தன் தந்தையின் பிரிவு என்ற பெயரில் சிவா விலங்கு குணமும் விதண்டாவாத செய்கைகளும் கொண்ட அடங்காபிடாரியாகவும் குளிகாவின் குணத்துடன் திரிகிறான்.
மது மாமிசம் - குளிகாவின் செய்யற்கரிய செயல்கள் என்று தெய்வங்களை ஆத்திரமடைய செய்தது இவைகளே. மது அருந்துவதும், மாமிசங்கள் உண்பதும் என சிவா திரிந்தது குளிகாவின் செய்கைகளால் தான். சிவா காட்டுப்பன்றியை (வராஹம்) வேட்டையாடி உண்டதும் இவ்வகையையே சாரும். மீன் உணவு - குளிகா விஷ்ணுவின் கடலை உறிந்து மீன்களை உண்டது போல, படம் முழுவதும் சிவா மீன்களை விரும்பி சாப்பிடும் வழக்கத்தை கொண்டதும் ஒரு சூசகம். குளிகாவிற்கு மீன் மிகவும் பிடித்த உணவு.
பெயர் - முதலில் கதாநாயகனுக்கு சிவா என்ற பெயரே குளிகாவின் சிவ பூத கணம் என்ற குறியீடு தான்.

#மர_வீடு ;
சிவா எப்போதும் மரத்தின் உச்சியில் உள்ள வீட்டில் (வீட்டின் பெயர் கைலாயம், அது புராணப்படி, குலிகா பிறந்த இடம் என்பது மற்றொரு உவமை) வாழ்வதும் குளிகாவின் செய்கை எனலாம். சொர்க்கத்தில் இருந்து துரத்தப்பட்ட குளிகா, வானுக்குமில்லாமல் பூமிக்குமில்லாமல் வாழ்வதையே இது குறிக்கும். கெட்ட கனவுகள் - தன் காவல் தெய்வமான குளிகாவை பஞ்சுருளி அழைப்பதே சிவாவிற்கு வரும் கெட்ட கனவுகள். சாமியாடி தம்பியான குருவா கொல்லப்பட்ட போது, பஞ்சுருளி பூத கொலா வேடத்தில் சிறைக்கு வந்து அழுது புலம்பி அழைத்தது குளிகாவை தான். தன் கானகத்தினைக்/கிராமத்தினைக் காப்பாற்ற வேண்டுகிறது. படத்தில் பல முறை பஞ்சுருளி தெய்வம், வராஹமாக சிவாவை நேரடியாக தொடர்பு கொள்ளும். ஆனால் அவன் பயந்து ஓடி விடுவான். உண்மையில் அவன் வராஹத்தை எதிர்கொண்டு அதனை பயமுறுத்திய பிறகே (இருவரும் போட்டி போடும் பாவனை - பஞ்சுருளிக்கும் குளிகாவிற்குமான அடிப்படை பந்தம்) சிவா தன்னை குளிகாவாக உணர்கிறான். குளிகாவிற்கு இன்றளவும் பொரி மற்றும் இளநீர் படைப்பது வழக்கம், அதுவே குளிகா பொரி இறைக்கும் காட்சி. மேலும் சிவா மேலாடை இல்லாமல் வேட்டியுடன் ஆடும் அந்த ஆட்டம் தான் குளிகா கொலா.

#குளிகா_வெளிப்படுதல் ;
ஆதியில் மன்னனிடம் பேசும் போது பஞ்சுருளி தெய்வம் ஒரு கர்ஜனை விடுகிறது. நான் மறந்தாலும், என் காவல் தெய்வமான குளிகா சும்மா இருக்க மாட்டான் என்கிறது. அது போலவே படத்தின் இறுதியில் சிவா (மயங்கிய) பிறகு, பஞ்சுருளியின் அழைப்பின் பேரில் குளிகா முற்றிலுமாக வெளிப்படுகிறது. வானம் பார்த்த கல், அதன் அருகில் ஆயுதம் என்று climaxஇல் குளிகா முழுமையாக வெளிப்பட்டு அதகளம் செய்கிறது. மேலும் வில்லனைக் கொலை செய்யும் போது தன்னை க்ஷேத்திரபாலன் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறது. வந்த வேலை முடிந்ததாக, வனத்துறை அதிகாரியிடம் கிராமத்தினைத் தத்துக் கொடுக்கும் பாவனையில் ஆடுவது, காட்டை நோக்கி ஓடி மறைவது என அனைத்தும்‌ மோக்ஷம் குறிக்கும். குளிகா (சிவா) ஓசையெழுப்ப, கானகத்தில் மறுஒலியை பஞ்சுருளி தெய்வம்(சிவாவின் அப்பா) எழுப்புகிறது. சிவா தனக்கான வேலை வந்தது என ஓடுகிறான்‌. அங்கே அண்ணன் தம்பியாக பழக ஜல துர்க்கைகள் அணையிட்டவாறு இருவரும் சிலாகித்து மறைந்துவிடுகின்றனர். இதுவே பஞ்சுருளி-குளிகாவின் பந்த தத்துவம்‌. இது தான் படம்! இறுதியில் மனிதன்-மிருகம்-கடவுள் : இந்த மூன்று தத்துவங்களும் இயற்கையாகவே ஒன்றோடு ஒன்று பினையப்பட்டுள்ளது. அவை ஒன்றோடு ஒன்று உறவாடி வாழ தகுதி உடையது என்பதனைக் கூறி, தவறினால் ஒன்று மற்றொன்றாக மாறிவிடும் என்பதனையும் மிக தெளிவாக, அழகாக கூறியுள்ளது இந்த காந்தாரா!

Friday, December 30, 2022

சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள்

சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!

♣ஆதம்பாக்கம் ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில்
♣அயனாவரம் ஸ்ரீ பரசுராமலிங்கேஸ்வரர் கோயில்
♣எழுச்சூர் ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர் கோயில்
♣காட்டூர் (பொன்னேரி) திருவல்லீஸ்வரர் கோயில்
♣கோயம்பேடு ஸ்ரீ குருங்கலீஸ்வரர் கோயில்
♣குன்றத்தூர் ஸ்ரீ முருகன் கோயில்
♣குன்றத்தூர் ஸ்ரீ வட நாகேஸ்வரர் கோயில்
♣மாடம்பாக்கம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயில்
♣மைலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில்
♣மயிலாப்பூர் ஸ்ரீ விருபாக்ஷேஸ்வரர் கோயில்
♣மயிலாப்பூர் ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில்
♣மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோயில்
♣பம்மல் ஸ்ரீ அக்கீஸ்வரர் கோயில்
♣பாடி திருவலிதாயம் ஸ்ரீ திருவல்லீஸ்வரர் கோயில்
♣பூவிருந்தமல்லி ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில்
♣புரசைவாக்கம் ஸ்ரீ கங்காதீஸ்வரர் கோயில்
♣சைதாப்பேட்டை ஸ்ரீ பிரசன்னவேங்கட நரசிம்ஹ கோயில்
♣சைதாப்பேட்டை ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில்
♣திருப்போரூர் ஸ்ரீ கந்தசுவாமி கோயில்
♣திருவலிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்
♣திருவல்லிக்கேணி ஸ்ரீ திருவேட்டீஸ்வரர் கோயில்
♣திருவல்லிக்கேணி ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
♣திருவொற்றியூர் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோயில்
♣திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயில்
♣திருமழிசை ஸ்ரீ ஜகன்னாதபெருமாள் கோயில்
♣திருமுல்லைவாயல் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் கோயில்
♣திருநீர்மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில்
♣திரிசூலம் ஸ்ரீ திரிஸுலநாதர் கோயில்
♣வேளச்சேரி ஸ்ரீ தண்டீஸ்வரர் கோயில்
♣வில்லிவாக்கம் ஸ்ரீ சௌம்யாதாமோதர பெருமாள் கோயில்
♣வில்லிவாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில்
♣வடபழனி வேங்கிஸ்வரர் கோயில்
♣வியாசர்பாடி ஸ்ரீ ரவீஸ்வரர் கோயில்
♣நெமிலிச்சேரி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்

பிற்கால கோயில்கள்:
♣1200 வளசரவாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில்
♣1500 நுங்கம்பாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
♣1673 ஜார்ஜ் டவுன் ஸ்ரீ கந்தசுவாமி கோயில்
♣18ம் நூற்றாண்டு கொசபேட்டை ஸ்ரீ கந்தசுவாமி கோயில்
♣1700 ராயபுரம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில்
♣1717 மண்ணடி ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில்
♣1734 சிந்தாதரிபேட்டை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோயில்
♣1735 ஜார்ஜ் டவுன் ஸ்ரீ கச்சளீஸ்வரர் கோயில்
♣1762 பாரி முனை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில்
♣1779 தண்டையார்பேட்டை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில்
♣1787 மண்ணடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்
♣19ம் நூற்றாண்டு அயனாவரம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்
♣1800 கோலெட்பெட் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்
♣1806  ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அகஸ்தீஸ்வரர் கோயில்
♣1806 ஜார்ஜ் டவுன் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்
♣1850 மேற்கு மாம்பலம் ஸ்ரீ கோதண்டராமர் கோயில்
♣1880 வடபழனி ஸ்ரீ முருகன் கோயில்
♣1900 நங்கநல்லூர் ஸ்ரீ அர்தனாரீஸ்வரர் கோயில்
♣1990 நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்

நமது திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள்

!!🥥ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ண பிரசாதம்🥥!! 

"நமது திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள்"

சிங்கப்பெருமாள் தோசை பிரசாதம்!

திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீரங்கம் என்றால் புளியோதரை! 

 இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மர் என்றால் சுவையான மிளகு தோசை தான் நினைவுக்கு வரும்.

அகோபிலம் என்றால் பானகம்! 

  இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு தோசைக்கே வரவேற்பு அதிகம். இந்த தோசைகள் பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும். அதில் எண்ணெய் பொடி சேர்த்து கொடுக்கின்றனர். இதை குழந்தைகள் விரும்பி உண்பதால்தோசைப் பெருமாள் கோவில் என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர்.

 ஒரு தோசை விலை ரூ.25

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் (சிங்கப்பெருமாள்) திருக்கோயில்

மண் உருண்டை பிரசாதம்!

திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அப்பம், அரவணை, நெய், லட்டு ஆகியவற்றை பிரசாதமாக தரும் கோயில்கள் உண்டு.

 ஆனால், கடன்தொல்லை தீர வேண்டும் என்பதற்காக மண்சாந்து உருண்டையை ராமநாதபுரம் அருகே திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தருகின்றனர். இங்குள்ள வில்வ மரத்தின் கீழ் உள்ள மண்சாந்தை உருண்டையாக உருட்டி தருகின்றனர். இதை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால் கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

புற்றுமண் பிரசாதம்

தூக்கணாங்குருவிக்கூடு, சிலந்தி வலை, புற்று இவைகளை மனிதன் அவ்வளவு எளிதாக உருவாக்கி விட முடியாது. புற்று என்பது வழிபடத்தக்க ஒரு உருவம். கும்பாபிஷேக நாளில் மிருத்ஸங்க்ரணம் என்ற கிரியைக்கு புற்று மண் தேவைப்படுகிறது. 

புற்றுமண், துளசி செடி மண், வில்வமரத்தடி மண் இவைகள் புனிதமானவை. மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், திருவொற்றியூர், திருவேற்காடு போன்ற தலங்களில் புற்று மண் பிரசாதம் தரப்படுகிறது.

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்

வரட்டி சாம்பலே பிரசாதம்!

மயிலை முண்டகக் கண்ணி அம்மன் கோயிலில், ஆடிமாதம் பொங்கல் (ஏதாவது ஒரு வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில்) வைப்பது மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. 

அன்று பொங்கல் வைக்க உபயோகப்படுத்தப்படும் வரட்டியின் சாம்பல் விபூதிப் பிரசாதமாகத் தரப்படுகிறது.

அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில்

எலுமிச்சை சாறு பிரசாதம்!

பொதுவாக அம்மன் கோயில்களில் எலுமிச்சம் பழங்களைத்தான் பிரசாதமாகத் தருவர். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலில் அம்பாளுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சை அனைத்தும் பிரசாதமாகத் தரப்படுகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஏகவுரி அம்மன் கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு எலுமிச்சை சாறை பிரசாதமாக கொடுக்கிறார்கள். இதைப் பருகினால், கர்ப்பமாவார்கள் என்பது ஐதீகம்.

அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில்

அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில்

பச்சிலை பிரசாதம்!

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆனைமலை மாசாணியம்மன் ஆலயம். நெற்றியில் சக்கரத்துடன் சயன நிலையில் அம்மன் அருளும் இந்த ஆலயத்தில், பச்சிலை பிரசாதம் விசேஷம். 

இது, பெண்களுக்கான உடற்பிணிகள், வயிறு தொடர்பான நோய்களை நீக்கும் வல்லமையானது என்பர். தை அமாவாசையில் வழிபட வேண்டிய தலம் இது!

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்

ஐஸ்கிரீம் பிரசாதம்!

டேராடூன்-முசௌரி சாலையில் அமைந்துள்ளது சிவபுரி. இங்குள்ள ஸ்ரீபிரகாஷ் ஈஸ்வர் மகாதேவ் மந்திரில் காலை நேரங்களில் காராசேவும் பூந் தியும் பிரசாதமாகத் தரப்படுகிறது. மதிய வேளைகளில் சாதமும், பருப்பும் கூடவே ஐஸ்கிரீமும் பிரசாதமாகத் தருகிறார்கள்.

புளிய இலை பிரசாதம்!

குவாலியரில் இசைமேதை தான்சேன் சமாதி அருகில் ஒரு புளியமரம் உள்ளது. இது அவரே நட்டு வளர்த்த மரம் என்று கூறுகிறார்கள். இதன் இலை, பூவைத்தான் தான்சேனின் பிரசாதமாக இசை அன்பர்கள் பக்தியுடன் பெற்றுச் சுவைக்கிறார்கள்.

அம்மன் சன்னிதியில் விபூதி பிரசாதம்!
ஸ்ரீமுஷ்ணம் திருக்கூடலையாற்றூர் ஸ்ரீநர்த்தனவல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளது சிறப்பு. ஸ்ரீஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும், ஸ்ரீபராசக்தி அம்மன் சன்னிதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுகின்றன.

அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில்

வெற்றிலை பிரசாதம்!

செகந்திராபாத் ஸ்கந்தகிரியிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும், எல்.பி.நகர் அருகிலுள்ள கர்மன்காட் தியான ஆஞ்சநேயர் கோயிலிலும் வெற்றிலையினால் சகஸ்ரநாம, அஷ்டோத்தர அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அதை பிசாதமாக க்கொடுக்கிறார்கள். அதனால் பக்தர்களும்  அர்ச்சனைக்காக அனுமனுக்கு நிறைய வெற்றிலை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

உப்பு மண் விபூதி பிரசாதம்!

மோகனூரிலிருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் ஒருவந்தூரில் உள்ளது பிடாரி அம்மன் கோயில். அம்பாள் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கும் இத்தலத்தில் உப்பு மண் விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது.

 இந்தப் பிரசாதத்தைப் பூசினால் வினைகள் யாவும் தீரும் என்பது இப்பகுதி  மக்களின் நம்பிக்கை. சிவன் பார்வதி இணைந்த சொரூபமே பிடாரி அம்மன் என்றும், குழந்தை பாக்கியம் பெற, திருமணத்தடை விலக, கல்வியில்  சிறந்து விளங்க இந்த அம்மனை வழிபட, வேண்டுதல் கைகூடும் என்றும் சொல்லப்படுகிறது.

அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில்

மிளகாய் வற்றல் பிரசாதம்!

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிரிவலப்பாதையில் மிளகாய் சித்தர் சமாதி உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மிளகாய் வற்றல் தரப்படுகிறது. இதை வீட்டிற்குக் கொண்டுபோய் சமையலில் பயன்படுத்தி சாப்பிட்டால் நோய் நொடிகள் அகலும் என்பது நம்பிக்கை!

பிரியாணி பிரசாதம்!

மதுரை திருமங்கலத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. வடக்கம்பட்டி எனும் கிராமம். இங்குள்ள முனியாண்டி கோயிலில் வருடா வருடம் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து கடவுளைக் கும்பிடுகிறார்கள். அன்றைய தினம் கடவுளுக்கு பிரியாணி படைக்கப்பட்டு, அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தேங்காய் பிரசாதம்!

நவராத்திரி விழாவின் போது நெமிலி பாலா திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமல் இருக்கும் அதிசயத்தைக் காணலாம்.

 அந்தக் தேங்காயை மறு வருடம் நவராத்திரி விழாவின் போது முதல் நாள் பூஜித்து உடைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.

இக்கோயிலில் குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 மேலும் சரஸ்வதியின் அம்சமாக பாலா திகழ்வதால் மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இத்தேவியை வணங்குவதன் மூலம் கிரகிப்புத்திறன், ஞாபக சக்தி பெற்று கல்வியில் சிறந்து விளங்குவர்.

அருள்மிகு பாலா திருக்கோயில்

மண்டையப்பம் பிரசாதம்!

நாகர்கோவில் அருகில் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் அம்மனுக்கு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதம் செய்து படைக்க தீராத தலைவலியும் நீங்கிவிடும்.

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்

திருமண் பிரசாதம்!

கரூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோயில். இங்கு அம்பாள் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்யப் பார்வையுடன், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

 இக்கோயிலில் நடக்கும் வைகாசி பெருவிழாவில், கம்பம் நடும் விழா விசேஷமானது. வேப்ப மரத்தின் மூன்று கிளைகளைக் கொண்ட ஒருபகுதியை.

 அதன் பட்டைகளை உரித்து, அதில் மஞ்சள் செருகி, ஆற்றில் பூஜித்து, கோயிலின் பலி பீடத்தின் அருகில் நடப்படுகிறது. இதையே பக்தர்கள் அம்பாளாகக் கருதி வழிபடுகிறார்கள். இக்கோயிலில் அம்மன் பிரசாதமாக திருமண் வழங்கப்படுகிறது.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

லேகிய பிரசாதம்!

பொதுவாக பெருமாள் கோயிலில் துளசியைப் பிரசாதமாகக் கொடுப்பார்கள். ஆனால் திண்டுக்கல் தாடிக்கொம்பு சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தன்வந்திரி சன்னதியில் லேகியம் மற்றும் தைலத்தைப் பிரசாதமாகத் தருகிறார்கள். உடல்நல பாதிப்புக்கு உள்ளானோருக்கு இது மாமருந்து என்கின்றனர்!

அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில்

ருத்ராட்ச பிரசாதம்!

குடந்தை நாகேஸ்வரம் கோயிலிலிருந்து 4 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேப்பெருமாநல்லூர் திருத்தலம் இங்கு அருள்பாலிக்கும் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதர் சுவாமிக்கு ருத்ராட்சத்தினால் அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சனை செய்த ருத்ராட்சங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.

அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில்
வில்வக்காய் பிரசாதம்!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியிலுள்ள மறவர் கரிசல் குளம் கிராமத்திலிருக்கிறது. ராஜராஜேஸ்வரி சமேத விஸ்வநாதர் கோயில். 

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வணங்கி, வில்வ இலையையும் காயையும் பிரசாதமாக எடுத்துக்கொண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை! இங்குள்ள கோயில் கிணற்றில் ஆண்களே தண்ணீர் இறைக்கிறார்கள். பெண்களுக்கு அனுமதி இல்லை.

துளசி விபூதி பிரசாதம்!

சங்கரன்கோவில் சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயிலில் சிவன் மற்றும் அம்பாள் சன்னிதிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது, அருள்மிகு சங்கரநாராயணர் சன்னிதி, இங்கே, காலை பூஜையில் மட்டும் துளசி தீர்த்தமும், மற்ற நேரங்களில் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில்

அழகர் கோயில் தோசை பிரசாதம்!
மதுரையிலிருந்து 20 கி.மீ., தூரத்தில் அழகர் கோயில் உள்ளது.

 இங்குள்ள அழகுமலையானை வணங்கினால், விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும்.

 மேலும் குழந்தைவரம், குடும்பநலம், கல்யாண வரம் வேண்டுவோர் இங்கு பிரார்த்தித்து நேர்த்திக்கடனாக பக்தர்கள் காணிக்கையாகக் கிடைக்கும்

 தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாக தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்
மருந்து பிரசாதம்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே, கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நோய் தீர்க்கும் மருந்து, பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அருள்மிகு நெல்லிக்காட்டு பகவதி திருக்கோயில்

கஷாயம் பிரசாதம்

கர்நாடகா மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

ஒரு முறை ஆதிசங்கரர், மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை.

 அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்
கிணற்று நீர் பிரசாதம்

திருப்பதி அருகிலுள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கோயிலுள்ள கிணற்று நீரை பிரசாதமாக தருகின்றனர். இதை அருந்தினால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.