Wednesday, January 11, 2023

தவ்வை என்னும் ஜேஷ்டா தேவி ( மூத்த தேவி )

#தவ்வை என்னும்
#ஜேஷ்டா_தேவி:( மூத்த தேவி)

ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை, மூதேவி , அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு. இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரியும் ஆவார்.

பிரதி தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர், ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். சமசுகிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர்.

தமிழர்களின் மூத்த தெய்வம்... வளத்தின் மூல வடிவம்... மூதேவி!

மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருளும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். 

இப்படியெல்லாம் அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வம் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்... மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.  

மூதேவி என்றால், மூத்த தேவி. தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு.  

தமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு 'கந்தழி' என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்தக்களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள், தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு, 'நடுகல்'  வழிபாடு என்று பெயர்.  

இவை அனைத்தையும்  விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரிதெய்வமாக மழையையும், நீராமகளிராக நதிகளையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழ் மரபு. 

கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. "தவ்வை" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள். 

யார் இந்த மூதேவி ? அவளின்  வரலாறு என்ன ?

நம் முது தந்தையரை எப்படி 'மூதாதையர்' என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்ததேவிக்கு 'மூதேவி' என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான 'அக்கை' என்கிற வார்த்தை எப்படி 'தமக்கை' ஆனதோ, அதேபோல் 'அவ்வை' என்ற வார்த்தை 'தவ்வை' ஆகியிருக்கலாம் என்கிறார்கள்  வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்குத்தான்! 

உரத்தின் அடையாளம் 'தவ்வை'. நெற்கதிர்களின் அடையாளம் 'திருமகள்'. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று. 

தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல், 'தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன், சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கிய'தாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. 'சேட்டை' மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர், தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 - ம் ஆண்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டது.  கி.பி 13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு  காரணாகமம், சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.

புராணங்களில் தவ்வை பற்றி :

சைவ - வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது.  இது பண்டைய தமிழரின்,  உரத்துக்குப் பின்னர் செழிப்பு என்பதன் தத்துவத்தின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதே போல் வருணனின் மனைவியாகவும் சொல்லப்படுகிறது. வருணன்  மழைக் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 தற்போதைய தவ்வை வழிபாடு :

 பல கோயில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா(தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. 

வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை, சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள்.. கிழிந்த ஆடை, அசிங்கமான தோற்றம், காக்கைக் கொடி இவையே தூமாதேவியின் அடையாளங்களாக உள்ளன. தவ்வைக்கும் இவையே அடையாளங்களாக உள்ளன. 

 தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோயில்களும் உள்ளன. 

பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து  'தவ்வை'யை அமங்கலத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர்.

தவ்வை வழிபாடு பற்றி வரலாற்று ஆய்வாசிரியர் தொ. பரமசிவத்திடம் கேட்டோம். "வளத்தின் மூல வடிவமே  ஜேஸ்டாதேவிதான் (தவ்வை). திருவள்ளுவர் ஜேஸ்டாதேவியை தவ்வை என்று சொல்கிறார். லட்சுமியின் அக்கா  மூதேவி(தவ்வை). மூதேவிதான் தற்போது ஜேஸ்டாதேவியாக வழிபடப்படுகிறாள். தவ்வை உரத்தின் கடவுள். லட்சுமி விளைந்த தானியங்களின் கடவுள். தவ்வை மங்கலமான தெய்வம். 

தமிழ்நாடு முழுவதும் தவ்வைக்குச் சிலைகள் பல உள்ளன. சிலர் எந்த சாமி என்றே தெரியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் அழுக்காப் போன கடவுள் என்று ஒதுக்குகிறார்கள். அது தவறு. வளங்களுக்கெல்லாம் மூல வளமே அழுக்குதான். எனவே அனைவரும் ஜேஸ்டாதேவியை வழிபடவேண்டும்" என்கிறார் பரமசிவம்.

தவ்வையின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம். அதேபோல், 'என்னைப் பார் யோகம் வரும்' என்று ஒவ்வொரு வீடுகளிலும் தொங்குகின்ற அட்டைகளை நாம் காண முடியும். கழுதையின் குரலைக் கேட்பது கூட நற்சகுணமாகத்தான் பலரால் நம்பப்படுகிறது. 

வழிபாடு:

தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்ததில் இவள் வழிபாடு முக்கிய இடத்தில் இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார்.

பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.

தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். தவ்வையை வண்ணார்கள் எனப்படும் இனத்தவர்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகின்றனர்,இவர்களை ஏகாளி (சிவன்காளி) அம்சத்தினர் என்றும் அழைக்கின்றனர்.

#கோயில்கள்:

தவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்சாமின் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீளா தேவிக்கு கோயில் அமைந்துள்ளது.

#தமிழகம் :

தவ்வையை மூலவராகக் கொண்ட கோயில்கள் தமிழ்நாட்டில் இல்லை. தவ்வை தனியாகவோ, மகன் மற்றும் மகளுடன் ஒரே பீடத்தில் அமைத்து வணங்கும் வழக்கம் உள்ளது. எண்ணற்ற கோயில்களில் தவ்வை சிலையானது உள்ளது. சில இடங்களில் தவ்வை கோயிலில் அல்லாமல் விவசாய நிலங்களின் மத்தியில் காணப்படுகிறார்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலமுனி சித்தர் பீடம் நுழைவுவாயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை அமைந்துள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காலம் பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதை.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு.
பல்லவன் இராச சிம்மன் எடுப்பித்த காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலிலும், கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும், வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது.
திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை "உஜ்ஜீவநாதர்' (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது.
ஓரையூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம்
குளித்தலை கடம்பவனநாதர் கோயில் - திருச்சுற்றில் உள்ளது.
சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் - திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி சன்னதிக்கு அருகே தனிக்கல்லாக வைக்கப்பட்டுள்ளது.
மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் - சுற்றுசுவரில் பதியப்பட்டுள்ளது.
திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் - திருச்சுற்றில் உள்ளது.
சிறீராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் - கோயிலுக்கு வெளியே பிள்ளையார், நவக்கிரக சன்னதி அருகே உள்ளது.

பெரணமல்லூர் திருக்கரேசுவரர் கோயில
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வளமைத் தெய்வமான தவ்வை நடுகல்லை, தூய நெஞ்சக் கல்லூரி பேரராசிரியர்கள், செப்டம்பர் 2018-இல் கண்டெடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பரளச்சி கிராமத்தில் ஆகஸ்டு 2020-இல், கிபி பத்தாம் நூற்றாண்டின் தவ்வை சிற்பத்தை கண்டெடுத்தனர்.
உத்திரமேரூர், அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூதேவி எனப்படும் ஜேஷ்டா தேவி கற்சிலையை, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் மே 2021-இல் கண்டெடுத்தனர்.
பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் உள்ள ஜேஷ்டாதேவி கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும்.

தமிழ் இலக்கியங்களில் :

சங்க இலக்கியங்களில் இவர் மாமுகடி ( 'கரிய சேட்டை ஆகிய மூதேவி'), தவ்வை, காக்கைக் கொடியோள் பழையோள் உட்படப் பதினான்கு (14) பெயர்களால் அழைக்கப்படுகிறாள். தெற்கின் பெரும் பகுதியைப் பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டில் தமிழர்களின் தாய்த் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்காலத்தில் சேட்டை வழிபாடு சிறப்புற்றிருந்தமையைக் கல்வெட்டுகள் கூறும். சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர்.

"வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை"

என்ற ஒளவையார் பாடலும்.

"மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

என்ற திருவள்ளுவர் குறளும் மூதேவியின் பழமையைக் கூறுகின்றன. குறளின் பொருள் சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும்.

அழுக்கு, நாற்றம், துன்பம்,புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் இவை எல்லாம் மூதேவியின் அறிகுறிகளாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும்.

மூதேவி வழிபாடு தற்போது மிகவும் குறைந்துவிட்டது. மூதேவி என்ற நாட்டுப்புற சிறு தெய்வம் தமிழரிடையே வழங்கும் கதைகளிலும், பழமொழிகளிலும் தாழ்த்தப்பட்டு இழிசொல்லாக்கப்பட்டு விட்டதால் இவளுடைய முக்கியத்துவத்தைச் சரிவர உணர முடியாதிருக்கிறது.

தரித்திரத்தின் தெய்வம் எனப் போற்றப்பட்ட தவ்வையை அக்காலத் தமிழர் செல்வத்துக்காகவும் வளத்துக்காகவுமே வழிபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரிய செய்தி. தமிழகத்தின் பெரும்பாக்கம், தென்சிறுவலூர், பேரங்கியூர் முதலான ஊர்களில் கிடைத்த கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பங்களில், அவள் தன் மகன் குளிகனுடனும், மகள் மாந்தியுடனும் கையில் பணப்பேழையுடனும் காட்சியளிக்கிறாள்.

தவ்வை பற்றிய மிகப்பழைய குறிப்பு திருக்குறளிலேயே வருகிறது.ஏழாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் தொண்டரடிப் பொடியாழ்வார் தன் திருவாய்மொழியில்,

'கேட்டிரே நம்பிமீர்காள் கெருட வாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே'

திருமால் இருக்க, தவ்வையிடம் செல்வத்தை எதிர்பார்க்கிறீர்களே! என்று இகழ்ந்து பாடுகிறார்.

தவ்வை செழிப்புக்காக வணங்கப்பட்டுவந்தாலும், அவள் அமங்கலத்தின் தெய்வம் என்ற நம்பிக்கை பல்லாண்டுகளாய்த் தொடர்ந்ததன் விளைவு, அவளது வழிபாட்டை மெதுமெதுவாக குறைக்க வழிவகுத்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தொன்றுதொட்டு நிலைத்துவந்த சமய வழக்கங்களே நிலைத்துவிடுவதும், இடைக்காலத்தில் திடீர் புகழ்பெற்ற, அல்லது புறக்கணிப்புக்குள்ளான, அல்லது வேறுபகுதியிலிருந்து அறிமுகமான தெய்வ வழிபாடுகள், முற்றாக அழிந்தொழிந்து போகாமல், சைவ - வைணவப் பொது நீரோட்டத்தில் கலந்து தம் சுயமிழந்து மறைந்துவிடுவதுமே காலம்காலமான வழக்கமாகும். தவ்வைக்கும் அதுவே நேர்ந்தது.

தவ்வை மட்டுமன்றி, தமிழகத்தில் ஆங்காங்கே சைவக் கோயில்களின் கவனிக்கப்படாத மூலைகளில் சிலைவடிவில் வீற்றிருக்கும் புத்தர்களும், சமண தீர்த்தங்கரர்களும், விநாயகி முதலான தாந்திரீக தெய்வங்களும் இதைத் தான் சொல்லாமல் சொல்லி, அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருக்கின்றனர்.
-----------------------------------------------------------

திருச்சிற்றம்பலம் 🙏

No comments:

Post a Comment