வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்!
வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் சடங்கு முறைகளைப் பற்றியே இனிவரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறையே ஹோமம் என பொதுமைப் படுத்திவிடலாம். இந்து மரபியலில் வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள் வழக்கில் இருந்து வருகிறது. வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருக்கின்றன.
ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது.நெருப்பின் பயன்பாடு அறியப்பட்ட பின்னர், நெருப்பினை சக்திவாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிப்பதாக கருதி பொருட்கள், விலங்குகள் சமயங்களில் மனிதர்களைக் கூட யாகத்தில் இட்டு வழி பட்டிருக்கின்றனர்.
யஜுர்வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. இந்த யாகங்களை குறிப்பிட்ட இனத்தவரே செய்திட வேண்டும் என்கிற மரபு காலம் காலமாய் இருந்து வருகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித் தனியான யாக முறைகள் கூறப் பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற் பலன்களைப் பெறலாம்; என்கிற கருதுகோளே காலம் காலமாய் இந்த பழக்கம் தழைத்திருக்க காரணம்.
மத நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்த யாகங்களின் பின்னனியில் அறிவியல் வாதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நிறுவும் வகையில் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஆய்வுகளின் தெளிவுகள் அறிக்கைகளாய் பகிரப் பட்டிருக்கின்றன.
சித்தர் பாடல்களில் ஹோமம்!
தமிழர்கள் வாழ்வில் ஹோமச் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை.ஆனால் அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர்.நான் பார்த்த வரையில் அகத்தியர்,திருமூலர், போகர், அகத்தியர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் போன்ற பல சித்தர்களின் பாடல்களில் ஹோமம் பற்றிய தகவல்கள் விரவிக் கிடக்கிறது.
அகத்தியர் தனத் “ஏமதத்துவம்” என்கிற நூலில் ஹோமம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
பாரப்பா பார்தனிலே யிருக்குமட்டும்
பத்திகொண்டு டிசைந்துநீ ஓமஞ்செய்தால்
நேரப்பா பருதிமதி யுள்ளம் மட்டும்
நீமகனே பூரணமாய் வாழ்வாயப்பா
காரப்பா நித்தியகர்ம அனுஷ்டானங்கள்
கருணையடன் செய்துகொண்டு கனிவாய்மைந்தா
தேரப்பா சிறப்புடனே ஓமஞ்செய்து
சிவசிவா விசயோகத் திறத்தைகாணே.
- அகத்தியர் -
ஹோமம் செய்வதனால் உண்டாகும் சிறப்புகளை அகத்தியர் இந்த பாடலில் கூறியிருக்கிறார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் ஹோமம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு...
"ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்"
"வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்"
"நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்"
"நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்"
பழந் தமிழகத்தில் அறுவடை முடிந்த பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களை கொளுத்தி விடும் பழக்கம் இருந்தது.இன்றும் கூட சில இடங்களில் இதனைக் காணலாம்.இதன் பின்னர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை.
ஆனால் அறிவியல் ரீதியாக இத்தகைய செயல்கள் நிலத்திற்குத் தேவையான சத்துக்களை தரும்.இதை இங்கே குறிப்பிட காரணம் வரப்புகள் சூழ்ந்த வயல்வெளியில் வளர்த்த தீயின் சுருங்கிய அல்லது சுருக்கிய வடிவமே ஹோம குண்டங்களாயிருக்க வேண்டும். ஏனெனில் ஹோமங்கள் பூமியின் மீதுதான் வளர்த்திட வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த ஹோம குண்டங்களின் வடிவங்கள் என்ன?, அவற்றின் வகைகள் யாவை?, என்பதைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.
ஹோமங்களின் அறிவியல்!
திருமூலர், யாகம்
ஹோமம் அல்லது யாகம் என்கிற சடங்குமுறை மதரீதியான ஒன்று என்றாலும், இதன் பின்னர் அறிவியலின் கூறுகள் இருப்பதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சித்தர்களின் யாக முறைகளைப் பற்றி பகிர்வதற்கு முன்னர், நானறிந்த சில அறிவியல் கூறுகளை இன்று பகிர விரும்புகிறேன்.
ஒலியும், ஒளியும் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் நினைத்தே பார்க்கமுடியாது. இந்த இரண்டு சக்திகள் நமது வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கண்ணிழந்த, செவித்திறனற்ற நமது சகோதர, சகோதரிகளை பார்க்கும் போது எவரும் உணரமுடியும்.
ஒலியின் மூலம் அதிர்வுகள், ஒளியின் மூலம் வெப்பம். யாகம் என்பது இந்த இரண்டு சக்திகளை ஒருங்கினைக்கும் ஒரு நிகழ்வு. இந்த ஒருங்கினைப்பு மனித உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதோடு, யாகம் செய்யும் இடத்தின் சுற்றுப்புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாகவே இந்த அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.
அமெரிக்க அறிவியலார் Dr.Howard steingull என்பவர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் உருவாவதாக கூறுகிறார். இந்த அதிர்வானது உச்சரிப்பவரின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கூறியிருக்கிறார். இது மாதிரி ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. இம் மாதிரியான மந்திரங்களை ஒத்திசைவுடன் குழுவாக சொல்லும்போது அவை உருவாக்கும் உணர்வுகளையும், அதிர்வுகளை அந்த சூழலில் இருப்பவர்கள் அனுபவித்தே அறியமுடியும்.
யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாக பல தெளிவுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மும்பை மாநகரில் இயங்கிவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான Haffkine Institute for Training, Research and Testing நிறுவனத்தை நிறுவிய Dr. Waldemar Mordecai Haffkine இது தொடபான பல தெளிவுகளை ஆதாரப் பூர்வமாய் முன்வைத்திருக்கிறார்.
ஹோமங்களின் அறிவியல் ...
சித்தர்கள் அருளிய ஹோமங்கள் பற்றிய தொடர் திசை மாறுவதாய் கருதிட வேண்டாம். பழமையின் அற்புதங்களை முன் வைக்கும் போது அவை தொடர்பான சமகால தெளிவுகளை இனையாக பகிர்ந்து கொள்வதனால் வாசிப்பனுபவம் மேலும் சுவாரசியமாகும் அல்லவா!. ஹோமங்கள் பொதுவாக ஏதேனும் ஒருவகையான எதிர்பார்ப்புகளை முன்வைத்தே செய்யப் படுகிறது. எண்ணிய எண்ணங்கள் ஈடேறிட, நோய் நொடிகளில் இருந்து காத்துக் கொள்ள, சமூக நன்மைகளை முன்வைத்து என எதிர்பார்ப்புகளே முன்னிலை வகிக்கின்றன.
ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்தி படுத்தி பலன்களை அடைந்திடலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தையை ஆய்வறிக்கைகள் ஹோமத்தின் பலன்களை அறிவியல் ரீதியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஹோமத்தில் இடும் பொருட்கள் எரிவதனால் உண்டாகும் வேதிவினைகளின் பலன்களாக பின்வரும் பயன்கள் பட்டியலிடப் படுகின்றன.
ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஹோமம் நடக்கும் இடத்தை சுற்றியிருக்கும் நீர்நிலைகள், உண்வுப் பொருட்கள் ஆகியவை நச்சுத் தன்மை அடையாதவாறு பாதுகாப்பதாகவும், காற்றில் பரவியிருக்கும் கரியமிலவாயுவினை சிதைத்து ஆக்சிஜனை அதிகரிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஹோமத்தில் உருவாகும் புகையானது சூரிய ஒளியோடு கலந்து உருவாகும் ஒளிவேதி சேர்க்கையினால் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் பட்டியல் தொடர்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன, எதிர்காலத்தில் மேலும் பல புதிய தகவல்கள் நமக்கு வந்து சேரலாம் அவை ஆச்சர்யமாகவுமிருக்கலாம்.
இறுதியாக ஒரு தகவல், யாகம் செய்வதனால் மழை வருமா?, இந்த கேள்வியும் அது தொடர்பான வாத விவாதங்களும் முடிவில்லாதவை. நவீன அறிவியலில் செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப் படுகிறது என பார்த்தால் விமானங்கள் மூலம் மேகக் கூட்டத்தினிடையே சில்வர் அயோடைட் அல்லது உலர் பனிக் கட்டிகள் தூவப் படுகின்றன. இதன் பொருட்டு மேகங்கள் குளிர்ந்து மழை பெய்கிறது. இந்த உலர் பனிக் கட்டி(dryice) என்பது திண்ம கரியமில வாயுதான். வருணயாகம் என சொல்லப் படும் ஹோமத்தின் மூலம் இத்தகைய ஒரு அறிவியல் நிகழ்வே செயல்படுத்தப் படுகிறது என்கின்றனர். இது தொடர்பாக பகிர்ந்து கொள்ள நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். தனியே மின் நூல் ஒன்று எழுதிடும் உத்தேசமிருக்கிறது. அப்போது இந்த ஹோமங்களின் அறிவியலை விரிவாக பகிர முயற்சிக்கிறேன்.
ஹோமம் செய்ய என்னவெல்லாம் வேண்டும்?
யஜுர்வேதத்தில் முப்பது வகையான ஹோமங்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று முன்னர் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கத்தை முன்னிறுத்தி செய்யப் படுபவை. எனவே இவற்றில் பயன்படுத்தும் பொருட்களும் வெவ்வேறானவை.பொதுவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களின் வகைகளை யஜுர்வேதம் பின்வருமாறு கூறுகிறது.
பலவகையான மர குச்சிகள் அல்லது விறகு, மூலிகைகள், பல வகையான தானியங்கள், பழங்கள், உலர்பழங்கள், திரவபொருட்களான நெய், பால், உண்வுப்பண்டங்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள், உலோகங்கள், நகைகள், கால்நடைகள் என பட்டியல் நீள்கிறது. இன்றைய பதிவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி நமது சித்தர் பெருமக்கள் கூறியுள்ளதை மட்டும் பார்ப்போம்.
அகத்தியர் மற்றும் புலிப்பாணி சித்தர் தங்களின் பாடலில் பின்வருமாறு பட்டியலிடுகின்றனர்.
"நாளப்பா சமுத்துவகை சொல்லக் கேளு
நலமான அரசினொடு மாவின் சுப்பி
சுப்பென்ற மாவினோடு அத்திக் கொம்பு
சொல்வெட்டி வேர் விளாமிச்சியோடு
ஆப்பென்ற ஆலுடன்மல்லிகையின் சுப்பி
அப்பனே நெல்லிசுப்பி நாவல் சுப்பி
சுப்பென்ர அத்தி சுப்பி யிலுப்பை சுப்பி
கண்மணியே பேயத்திச் சுப்பியோடு
நப்பென்ற கடுகுரோ கணியும் கூட
நலமான எருக்கினோடு கள்ளிக்கொம்பே"
- புலிப்பாணிச் சித்தர் -
"கேளப்பா மாவிலங்கு விளாஅத்தி நொச்சி
கெடியான அரசுடனே வில்வம் யெட்டி
வாளப்பா மாச்சுப்பி இதுவெட்டும்
வளமான எரிதுரும்பாம் அசுராளண்டர்
நாளப்பா துட்டகண பூதமெல்லாம்
நாடாது ஓமத்தில் வலுத்த சித்தி
மூளப்பா செபஞ்செய்து ஓம்சாந்தியென்றே
தீர்க்கமாம் ஓமத்தில் போடு போடே"
- அகத்தியர் -
இந்த ஓமத் தீவளர்க்க தேவையான மூலிகைகளை சமித்துக்கள் என்கின்றனர். இனி இந்த சமித்துகள் விவரம் பின்வருமாறு...
ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், தர்ப்பைப் புல், நாயுருவி, விளாமிச்சி வேர், சந்தனம், நொச்சி, தேவதாரி, மா, போன்ற பல மூலிகைத்தாவரங்களும், விலங்குக் கழிவுகளாய் பெறப்படும் வாசனை திரவியங்களும் அடங்கும். இது தொடர்பான முந்தைய பதிவை இந்த இணைப்பில் காணலாம்.
மேலும் இவற்றுடன், பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், கோசலம், மற்றும் கோமயம் பயன் படுத்தப்படுமாம். மேலும் இதில் அனைத்துவகை மூலிகை தாவரங்களும் பயன்படுத்தலாமாம். அத்துடன் தானிய வகைகளும், அனனம், எலுமிச்சை, பருத்தி ஆடைகள் மற்றும் நூல்களும் மேலும் பல பொருட்களும் வழிப்பாட்டின் தேவையைப் பொறுத்துப் பயன் படுத்தபடுகிறது என்கின்றனர்.
ஹோம குண்டத்தின் அமைப்பும்,வகைகளும்..
சித்தர்கள் அருளிய ஹோமங்கள் சிலவற்றை இந்த வாரத்தின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த பதிவுகளில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் இந்த ஹோமகுண்டங்களைப் பற்றி பார்ப்போம். சித்தர்கள் ஹோம குண்டங்களை ஆறு வகையாக கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு தேவைக்கேற்ப இந்த ஹோமகுண்டங்களின் அமைப்புகள் மாறுபடுமாம்.
ஹோமங்கள் பூமியின் மீதுதான் செய்யப் படவேண்டும் என்கின்றனர். இந்த ஹோம கிரிகைகளில் வழிபடுபவர் கிழக்கு முகமாய் பார்த்து உட்காரவேண்டுமாம். மிக முக்கியமாக இந்த ஹோமங்களை எவரும் செய்திடலாம் என்கின்றனர். குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே செய்திட வேண்டும் என்கிற இந்து மரபியலை சித்தர்கள் முழுமையாக நிராகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஹோம குண்டங்களின் ஐந்து படிநிலைகளை கொண்டதாக அமைத்திட வேண்டுமாம். நடுவில் வட்டவடிவமான குழி அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். ஹோம குண்டத்தின் மகத்துவத்தினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.
"தானான தீபமடா மந்திரபீடம்
சராசரத்துக் குயிரான மந்திரபீடம்
வானான அண்டமடா மந்திரபீடம்
மகத்தான ரவிமதியு மந்திரபீடம்
சிவாயகுரு பீடமென்ற பீடங்கள்போடே"
- அகத்தியர் -
ஹோம குண்டங்களை ஆறு வகையாக பார்த்தோம் அவையாவன...
முக்கோணம்..
நாற் கோணம்..
ஐங்கோணம்..
அறுகோணம்..
எண்கேணம்..
வட்டம்..
நாளைய பதிவில் ஹோமம் செய்வதைப் பற்றி பார்ப்போம்.
அகத்தியர் அருளிய “கிரக தோஷம்” போக்கும் ஹோமம்!
நண்பர்களே, இனிவரும் நாட்களில் சித்தர்கள் அருளிய ஹோமங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். ஹோமங்கள் என்றால் ஏதோ ஒரு சிலரால் மட்டுமே செய்விக்க கூடியது என்பதாகவே நம்மில் பலர் அறிந்து வைத்திருக்கிறோம். அந்த கருத்துக்களை சித்தர் பெருமக்கள் உடைத்தெறிகிறார்கள்.
குருவருளை வேண்டி வணங்கி இந்த ஹோமங்களை யாரும் செய்திடலாம். தேவையற்ற செலவு பிடிக்கும் காரியம் எதுவும் இதில் இல்லை. அந்த வகையில் முதலாவதாக நவகிரகங்களின் பாதிப்புகளில் இருந்து நீங்க உதவும் ஹோமத்தைப் பற்றி பார்ப்போம்.
சோதிட இயலில் நவகிரகங்களின் பாதிப்புக்கு உள்ளாகாத சாதகர்களே இருக்க முடியாது. இந்த பாதிப்புகளின் தீவிரத்தை தணித்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு பரிகாரங்களும் கூறப்பட்டிருக்கிறது. பெரிய பொருட் செலவில் செய்யும் பரிகாரங்கள் மட்டுமே தேவையான பலனைத் தரும் என்பது மாதிரியான ஒரு கருத்தோட்டம் நம்மில் பரவியிருக்கிறது. செலவு பிடிக்காததும் அதே நேரத்தில் நல்ல பலனைத் தரக்கூடியதுமான ஒரு ஹோம முறையினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.
"காணவே இன்னமொரு கருமானங்கேள்
கருணைவளர் புலத்தியனே கருணை கூர்ந்து
பேணவே ஓமகுண்டம் நன்றாய்ச் செய்து
பிலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் எள்ப்பொரிகொண் டோமாமம்பண்ணு
தோணவே கிரகமதில் நின்றதோஷந்
சுத்தமுட நீக்குமடா நித்தம்பாரே"
- அகத்தியர் -
என்கோண வடிவத்தில் ஹோம குண்டம் ஒன்றினை அமைத்து, அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்குமுகமாய் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் குருவினையும், குலதெய்வத்தினையும் வணங்கிய, அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீ வளர்க்க வேண்டும் என்கிறார். இந்த தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரத்தை சொல்லியவாறே தீயை உருவாக்க வேண்டும் என்கிறார். அக்கினியின் மூல மந்திரம் பின் வருமாறு.
"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"
தீயை நன்கு வளர்த்த பின்னர் அடுத்த கட்டமாக “புவனை”யின் மந்திரமாகிய "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா" என்ற மந்திரத்த்தை உச்சரித்தவாறே எள் பொரியினை நெருப்பில் இட வேண்டும் என்கிறார். இந்த மந்திரத்தை 1008 தட்வை உச்சரித்து எள் பொரியினை நெருப்பில் போட நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும் என்கிறார் அகத்தியர்.
அகத்தியர் அருளிய “புத்திரபாக்கியம்” தரும் ஹோமம்!
திருமணமான பலர் தங்களுக்கு புத்திரபாக்கியம் தள்ளிப் போவதைக் கண்டு மனம் வெதும்பி வாடுவதைப் பார்த்திருக்கிறோம். இன்றைய நவீன அலோபதி மருத்துவம் எத்தனையோ உயரங்கள் வளர்ந்து இக் குறையினை நிவர்த்திக்க நல்லபல தீர்வுகளைத் தந்திருக்கிறது.
எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில், குழந்தையின்மைக்கான தீர்வாக அகத்தியர் இந்த ஹோமத்தினை முன்வைக்கிறார். இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்விற்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை.
இந்த ஹோமத்திற்கு நாற்கோண வடிவத்திலான ஹோம குண்டத்தினை பயன் படுத்திட வேண்டும். ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திடல் வேண்டும். கணவணும், மனைவியும் ஒருங்கே அமர்ந்து செய்தால் இன்னமும் சிறப்பு. இந்த ஹோமத்தினை எவ்வாறு செய்திட வேண்டுமென்பதை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
சித்ததான சித்துகளுக் குறுதியான
சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை
பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு
பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி
சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி
கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண
வத்தாத பாக்கியசந் தான பாக்கியம்
வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே.
- அகத்தியர் -
கருங்காலி மரம் மற்றும் நாவல் மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீயை வளர்க்க வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூலமந்திரத்தை உச்சரித்து வரவேண்டும்.
அக்கினியின் மூலமந்திரம்...
"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"
தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின் மந்திரத்தைச் சொல்லி பசும்பால், சந்தனம், தேன் கலந்த கலவையினை நெருப்பில் விடவேண்டும் என்கிறார். இந்த முறையில் புவனையின் மந்திரத்தை 1008 தடவைகள் சொல்லிட வேண்டுமாம். புவனையின் மூல மந்திரம்...
"ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா"
இப்படி செய்தால் புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்கிறார் அகத்தியர். ஹோமம் செய்த மறு மாதமே கரு உண்டாகி பத்தாம் மாதத்தில் மகப்பேறு சித்திக்குமெனவும் கூறுகிறார். இந்த ஹோமத்தினை யாரும் இதை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர். சுவாரசியமான தகவல்தானே...
நீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்!
மனிதராய் பிறந்த அனைவருமே நல்ல ஆரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்புகின்றோம். நல்ல உடல் ஆரோக்கியமே நீண்ட நாள் உயிர்வாழ்வதற்கு ஆதாரமாய் அமைகிறது. இதற்கெனவே வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுகிறோம் என்பதும் உண்மை. உடலைப் பேண பல்வேறு வழி வகைகள் இருந்தாலும், அகத்தியர் ஹோமம் செய்வதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்கிறார். அதுவும் முன்னூறு ஆண்டுகள் வாழ முடியுமென்கிறார்.
ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா?, நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா என்று கேலிபேசி ஒதுக்குவதை விட இதன் பின்னால் ஏதேனும் சூட்சுமங்கள் பொதிந்திருக்கிறதா என ஆராயலாம். அகத்தியர் இந்த ஹோம முறை பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.
"ஆமப்பா நெற்பொரியுந் தேனுங்கூட்டி
தானென்ற டோமமது அன்பாய்ச்செய்தால்
நாமப்பா சொல்லுகிறோ முன்னூருண்டு
நன்மையுடன் தானிருப்பாய் நயனம்பாரு
தாமப்பா நயனமென்ற தீபந்தன்னை
சதாகாலம் பூரணமாய்த் தானேகண்டால்
வாமப்பால் மந்திரகலை வாமபோதம்
வாமம்வளர் புவனையைநீ மகிழ்ந்துகாணே"
- அகத்தியர் -
முக்கோணம் வடிவத்தை உடைய ஓம குண்டம் ஒன்றினை அமைத்து அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். ஹோம குண்டத்தில் ஆலமரக் குச்சிகளைக் கொண்டு அக்கினி வளர்க்க வேண்டும் என்கிறார். அக்கினி வளர்க்கும் போது அக்கினிக்குறிய மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.
நன்கு வளர்ந்த தீயில் நெற்பொரியும், தேனும் கலந்து போட வேண்டும் என்கிறார். அப்போது புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டுமென்கிறார். இப்படி 1008 முறைகள் செய்திட வேண்டுமாம்.
இந்த ஹோமத்தை ஒரு மண்டல காலத்திற்குள் நூறுமுறை செய்யும் ஒருவருக்கு நீண்ட ஆயுளும், மகா சக்தியான புவனையின் தரிசனமும் கிட்டும் என்கிறார் அகத்தியர். மேலும் நம்பிக்கை உள்ள எவரும் இந்த ஹோமத்தை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர்.
யாரிந்த புவனை?,அகத்தியர் அருளிய புவனையின் அருளைப் பெறும் ஹோமம்!
இன்று வெளியாவதாக இருந்த “செல்வம் தரும் ஹோமம்” பற்றிய பதிவு நாளை வெளியாகும். இன்றைய பதிவில் புவனை அன்னையின் அருளைப் பெறும் ஹோமம் பற்றி பார்ப்போம்.
முந்தைய மூன்று பதிவுகளிலும் புவனையின் மூல மந்திரங்களை ஹோமங்களின் போது கூறிடவேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். ஹோமத்தில் பயன்படுத்தப் படும் பொருட்கள் மட்டும்தான் மாறுகின்றன, ஆனால் மந்திரம் ஒன்றுதான். இத்தனை மகத்துவமான மந்திரத்துக்கு உரிய தெய்வமான புவனை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை தந்து அவளின் அருளைப் பெறும் முறையினை பகிர்ந்து கொள்கிறேன்.
சித்தர்கள் வணங்கிய தெய்வங்களின் ஒன்றான வாலைத் தெய்வத்தினைப் பற்றி முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். வாலை என்பவள் குழந்தை வடிவத்தையுடைய தெய்வம். வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த தெய்வம் உருவமில்லா உருவத்திற்கு சொந்தமானவள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு ஹோமம் மூலம் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.
அத்தகைய ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.
"பாரப்பா யின்னமொரு பாகங்கேளு
பத்தியுடன் கோதுமைகொண் டோமம்பண்ண
வீரப்பா கொண்டதொரு அபமிருத்து
மெஞ்ஞான பூரணத்தால் விலகும்பாரே
நேரப்பா அபமிருத்து விலகித்தானால்
நினைத்தபடி முடிக்கவண்ணம் நிசந்தான்பாரு
காரப்பா கருணைவளறர் புவனைதன்னால்
கண்காண இன்னம்வெகு கடாட்சமே"
- அகத்தியர் -
இந்த ஹோமத்திற்கு வட்ட வடிவ ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம். ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் அரச மரத்தின் குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறிட வேண்டும் என்கிறார்.
தீ வளர்ந்த பின்னர் அதில் கோதுமையை போட்டுக் கொண்டே புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தினை சொல்லிட வேண்டும் என்கிறார். இப்படி 1008 தடவை மந்திரம் சொல்லி கோதுமையைப் போட புவனை அம்மனின் அருள் கிட்டும் என்கிறார். அத்துடன் நன்மைகள் பலவும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை வீட்டில் எவரும் செய்யலாம் என்கிறார்.
நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.
பாவம் போக்கி, செல்வம் தரும் ஹோமம்!
பாவச் செயல்களை செய்வதன் மூலமாய் ஒருவன் தன் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பாவங்களின் வகைகளை அகத்தியர் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.
"காணவே யின்னமொரு சூட்சங்கேளு
கருணையுட னுலகத்தோ டிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்ற பாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே"
- அகத்தியர் -
வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பாவச் செயல்களை பார்ப்பதால் உண்டாகும் பாவம், தவறென அறிந்தும் செய்கின்ற செயல்களினால் உண்டாகும் பாவம், தீயவைகளை கேட்பதனால் உண்டாகும் பாவம், பெண்களுக்கும், பசுக்களுக்கும் கொடுமை செய்வதால் ஏற்படும் பாவம், உணவிற்காக பிற உயிர்களை கொல்வதால் உண்டாகும் பாவம் என பாவத்தின் வகைகளை பட்டியலிடுகிறார். இப்படி நாம் சேர்த்த கோடிக் கணக்கான பாவங்களை நீங்கிட வழியொன்று இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.
அதென்ன வழி... அதனை அகத்தியர் மொழியிலேயே பார்ப்போம்.
"ஒழியாத பாவமெல்லா மொழியமைந்தா
உனக்குறுதி சொல்லுகிறே னுண்மையாக
வழியாக ஓமகுண்டம் நன்றாய்ச்செய்து
சுழிவாக ஆலரசு சமுத்துதன்னால்
சுத்தமுட னக்கினியை வளர்த்துமைந்தா
தெளிவாகச் சொல்லுகிறேன் நன்றாயக்கேளு
மார்க்கமுடன் புவனையுட மந்திரந்தன்னால்
சிவசிவா நவதானியங்கொண் டோமஞ்செய்யே"
- அகத்தியர் -
மேலே சொன்ன பாவங்கள் எல்லாம் தீர்ந்திட, ஐங்கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் ஆலமரம், மற்றும் அரசமரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தைச் சொல்லி வளர்த்திட வேண்உம்
தீ நன்கு வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லியவாறு நவதானியங்களை தீயில் இட வேண்டும். இந்த முறையில் 1008 தட்வை மந்திரம் சொல்லி நவதானியத்தை போட வேண்டும் என்கிறார் அகத்தியர்.
"நீசெய்யடா சிறந்தஓமமது தீர்க்கமாக
தீராத பாவமெல்லாந் தீருந்தீரும்
மெய்யடா பிரமையொடு சகலரோகம்
விட்டுவிடும் யெக்கியஓ மங்கள்செய்தால்
மய்யமென்ற புருவநடு உச்சிமீதில்
மகத்தான கற்பூர தீபந்தன்னால்
அய்யனே உனதுடைய சமூகங்கண்டால்
அனுதினமுஞ் செல்வபதி யாவான்பாரே"
- அகத்தியர் -
இப்படி இந்த ஹோமத்தினை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர தீராத பாவமெல்லாம் தீருமாம், அத்துடன் மனக்குழப்பமும் சகல நோய்களும் தீருமாம். இப்படி மூன்று நாளும் சிறப்பாக செய்து முடித்தால் ஹோமம் செய்தவனின் புருவ மத்தியில் ஒரு ஒளி தென்படுமாம். அந்த ஒளியைத் தரிசித்தால் அவன் எப்போதும் செல்வ சிம்மானாக வாழ்வான் என்கிறார் அகத்தியர்.
300 வயதுவரை வாழவைக்கும் ஹோமம்?
நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமில்லை என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று. இருந்தாலும் சித்தர் பெருமக்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எப்படி அத்தனை காலம் வாழ்ந்தார்கள் என்கிற உபாயங்களும் நமக்கு சித்தர்களின் பாடல்களில் கிடைத்திருக்கிறது.
ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார் அகத்தியர். இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். வாருங்கள் அகத்தியரின் மொழியில் அந்த ஹோமம் பற்றிய தகவலைப் பார்ப்போம்.
"அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே"
- அகத்தியர் -
அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டுமாம்.
தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர்.
இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
அகத்தியர் அருளிய நோய் தீர்க்கும் ஹோமம்!
நோய் தீர்க்கும் ஹோம முறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார். எந்த மாதிரியான நோய்களுக்கு இந்த ஹோமம் பயன் தரும் என்கிற தகவல் பாடலில்இல்லை. எனினும் பொதுவான தேக ஆரோக்கியம் வேண்டுவோர் செய்து பயனடைந்திடலாம் என கருதுகிறேன். இந்த ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
"பாரப்பா யின்னுமொரு சூட்சுமந்தான்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
பேணவே ஓமகுண்டம் சிறப்பாய்ச் செய்து
நலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் பலாசுகொண் டோமாமம்பண்ணு
வீரப்பாயு ன்னைபிடித்த நோய்களோடு
வெகுநூறு பிணிகளெல்லாம் விலகுந்தானே"
- அகத்தியர் -
அறு கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்க்க வேண்டும். வழமை போல அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.
நன்கு வளர்ந்த தீயில் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே பலாசு மரத்தின் குச்சிகளை போட வேண்டும் என்கிறார். இந்த பலாசு மரத்திற்கு புரசு என்ற வேறொரு பெயரும் உள்ளது. இப்படி ஆயிரத்தி எட்டுத் தடவைகள் மந்திரம் சொல்லி பலாசுக் குச்சிகளைப் போடவேண்டும் என்கிறார்.
இப்படி செய்வதன் மூலம் இந்த ஹோமத்தை செய்தவரை பீடித்திருக்கும் நோய் விலகுவதுடன் எதிர்காலத்தில் பல வகையான நோய்களும் அண்டாது என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தை எவரும் செய்து பலனடையலாம்.
ஹோமம் - நிறைவாய் சில விளக்கங்கள்!
அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் அருளிய ஹோம முறைகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இதுகாரும் அகத்தியர் அருளிய சில அரிய ஹோம முறைகளைப் பகிர்ந்து கொண்டேன். தொடரின் சுவாரசியம் கருதி இன்றுடன் ஹோமங்கள் பற்றிய பதிவுகளை நிறைவு செய்கிறேன். கடந்த பதின்மூன்று பதிவுகளின் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக நண்பர்கள் சிலர் கேட்டிருந்த விளக்கங்களுக்கு என்னாலான தெளிவுகளை இன்றைய பதிவின் வாயிலாக பகிர்ந்து கொள்கிறேன்.
இந்து மரபியலில் ஹோமங்கள் ஒரு குறிப்பிட்ட உயர் பிரிவினரால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக அவர்களே ஹோமங்களைச் செய்து பலனை வழங்கி வந்தனர். இதனை சித்தர் மரபியல் உடைத்தெறிகிறது. அவசியமும், ஆர்வமும் உள்ள எவரும் ஹோமத்தினை செய்திடலாம் என்கின்றனர். இடைத் தரகர்கள் இல்லாத ஒரு நிலையினை சித்தரியல் வலியுறுத்துகிறது.
இந்த கருத்தியலின் இன்னொரு அம்சத்தினையும் நாம் அவதானிக்க வேண்டும். சித்தர்கள் தங்களின் தெளிவுகளை தங்களின் சீடர்களின் பயன்பாட்டுக்கெனவே பாடல்களாய் அருளியிருக்கின்றனர்.இந்த ஹோம முறைகளும் கூட சீடர்களின் நலன் விரும்பியே அருளப் பட்டிருக்கின்றன.எனவே பிறர் நலம் கருதி நாம் ஹோமம் செய்வதைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. எனவே இயன்றவரையில் நம்முடைய தேவைகளுக்கு நாமே ஹோமம் செய்து கொள்வது சிறப்பு.
ஹோம குண்டங்கள் பூமியின் மீதுதான் அமைக்கப் பட வேண்டும் என வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வீடுகளில் கூட தரையில் மணல் பரப்பி அதன்மீது ஹோம குண்டம் அமைப்பதன் பின்னனி இதுவாகவே இருக்க வேண்டும் என கருதுகிறேன். மேலும் இந்த ஹோம குண்டங்கள் களி மண்ணினால் செய்து பயன்படுத்த வேண்டுமாம். ஹோம குண்டங்கள் ஐந்து அடுக்கு உள்ளவையாக அமைய வேண்டுமென்பதும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.ஹோம குண்டத்தின் உட்புறம் வட்ட வடிவமாக இருத்தல் அவசியம்.
ஹோமம் செய்பவர் ஹோம குண்டத்தின் முன்னர் கிழக்கு முகமாய் அமர்ந்தே செய்திட வேண்டும் என வலியுறுத்தப் படுகிறது. ஹோம குண்டத்தில் எழுதப் படும் எழுத்துக்கள் சுத்தமான அரிசி மாவினால் மட்டுமே எழுதப்பட வேண்டுமாம்.ஹோமத்தினை துவங்கும் முன்னரும், ஹோமம் முழுமையடைந்த பின்னரும் குருவினை மனதில் நினைத்து வணங்கிட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமே ஹோமம் முழுமையடைவதாக கூறப்படுகிறது.
என் வரையில் ஹோமங்கள் என்பவற்றை ஒருவகையான அறிவியல் நிகழ்வாகவே கருதுகிறேன். இவற்றின் பின்னால் பொதிந்திருக்கும் நுட்பங்களை தேடுவதன் மூலம் பல அரிய உண்மைகள் நமக்குப் புலப்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. எதிர்காலத்தில் குருவருள் அனுமதித்தால் நானறிந்த தெளிவுகளை பொதுவில் பகிர்ந்து கொள்கிறேன்
https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_14.html
https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_4902.html
THANK:https://1234567.forumbuild.com/viewtopic.php?t=1321
மிக மிக நன்றி அக்னி ஹோத்திரம் எப்படி செய்வது
ReplyDeleteExcellent sir, it is very miracles job that you have given every religious activities are based on certain scientific reason. our siddharkal and ancient peoples are greatest scientist every thing they found and did are based on the
ReplyDeletegoodness for the people and the future. Now a days generation keen interest are scientific base as we able to coummunicate these messages to them will make great improvement in every filed but in the aim of developing all the peoples. Sceince without religious will only create greedy, aim of geeting money, conquiering manners ect.
அருமையான,அரிய பதிவு அய்யா. நன்றி
ReplyDelete