Sunday, April 5, 2015

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

from fb:
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
================================================
சங்கறுப்ப தெங்கள் குலம்
சங்கரனார்க் கேது குலம்
சங்கை அரிந்துண்டு வாழ்வோம்
அரனே உன் போல் இரந்துண்டு வாழ்வதில்லை
என்று இறைவனையே எதிர் வழக்கடி எரிந்து போனவர் நக்கீரர். பின்னர் உயிர்ப்பிக்க பட்டார்.
நக்கீரர் அல்லது நக்கீரன் என்பவர் சங்ககாலப் புலவர் ஆவார். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிக குறிப்பிடத்தக்க நூல் திருமுருகாற்றுப்படை மற்றும் இறையனார் அகப்பொருள் ஆகும். பெண்ணின் கூந்தலில் இயற்கையில் வாசனையுண்டா என்பது தொடர்பில் சுந்தரேசுவரருடனேயே (சிவன்) அஞ்சாது வாதிட்டவர் என்பது தொன்நம்பிக்கை. இன்றளவும் இந்த நிகழ்வு மதுரை மீனாட்சியம்மன் கோவில் விழாவில் நாடகமாகக்கப்படுவது குறிக்கத்தக்கது.
மதுரை சொக்க நாதர் பாடி நக்கீரனார் பொருட் குற்றம் கண்ட அப்பாடலாவது:
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே"
இவர் ஒரு முருக பக்தர்
பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. சிவனுடன் வாதம் புரிந்த நக்கீரரால் இது இயற்றப்பட்டது. இதுகடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச் செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்த நூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்தல் என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். முருகாற்றுப்படை எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி(இந்நாளில் பழநி என்றுவழங்கப்படுவது), திருவேரகம்(சுவாமிமலை) , குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன. இப் புலவர் பெருமானே பத்துப்பாட்டின்கண் ஏழாம் எண்ணுமுறைக்கண் நின்ற நெடுநல்வாடை என்னும் பாடலையும் இயற்றியவர் ஆவார். இவர் பெயர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அடைமொழிகளோடு வழங்கப்படுதலால், இவர் மதுரையிற் பிறந்தவரென்றும், இவர் தந்தையார் மதுரையின்கண் மாணாக்கர் பலர்க்கும் தமிழறிவுறுத்தும் நல்லாசிரியத்தொழில் நடத்தியவர் என்றும் அறியப்படும். கீரனார் என்பதே இவர்தம் இயற்பெயராகும். அப்பெயர் முன்னர்ச் சிறப்புப் பொருளைத் தரும் இடைச்சொல்லாகிய ந என்பது அடையாக வந்து நக்கீரனார் என்றாயிற்று. பண்டைக்காலத்தே கல்வி, கேள்விகளானே நிறைந்து நல்லிசைப் புலமைவாய்ந்த சான்றோர் பெயர் முன்பு இச் சிறப்படைச்சொற் பெய்து வழங்கும் வழக்க முண்மையை நத்தத்தனார். நப்பூதனார், நக்கண்ணையார், நப்பசலையார் எனவரும் பிற சான்றோர் பெயர்களிடத்தும் காண்க. பண்டைநாட் செந்தமிழ்ப் புலவர்களுள்ளும், நக்கீரனார் பெருஞ் சிறப்புடையர் என்பதனை இவரைப்பற்றி வழங்கும் பல வரலாறுகளானும் உணரலாம். இவர் மதுரையில் கடைச்சங்கத்தே வீற்றிருந்து தமிழாராய்ந்த தண்டமிழ்ப் புலவருள் ஒருவர் என்ப. ஒரு காலத்தே, மதுரையில் பட்டிமண்டபத்தே இப் புலவர் பெருமான் வீற்றிருந்தபொழுது அவண் வந்த குயக்கொண்டான் என்பான் ஒருவன், வடமொழியே சிறந்ததென்றும், தமிழ் மொழி தாழ்ந்ததென்றும் கூறினானாகத் தமிழ்மொழியையே தம்முயிரினும் சிறந்ததாகப் போற்றும் நக்கீரனார் அதுகேட்டுப் பொறாது சினங்கொண்டு
முரணில் பொதியின் முதற்புத்தேன் வாழி
பரண கபிலரும் வாழி- அரணிய
ஆநந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆநந்தஞ் சேர்க சுவா
எனப் பாடியருள, அக் குயக்கொண்டான் அப்பொழுதே மாண்டு வீழ்ந்தான் என்றும், அதுகண்ட ஏனைச் சான்றோர்கள் அவன் அறியாமைக்கும் சாவிற்கும் இரங்கி நக்கீரரை அவனுக்கு உய்தியருளும்படி வேண்டினராக, அவரும் சினம் விலகப்பெற்று அவன்பால் இரக்கமுடையராய்,
ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் சீரிய
அந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க சுவா
எனப்பாடி அவனை உயிர்ப்பித்து உய்யக்கொண்டருளினார் என்றும், ஒரு கதை வழங்கி வருகின்றது. இக்கதை பண்டுதொட்டே வழங்கிவருவதலை, நிறைமொழி மாந்தர் என்னும் தொல்காப்பியச் சூத்திர வுரையில் பேராசிரியர், இவை தெற்கண்வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் சாகவும் (மீண்டும்) வாழவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின, என விளக்கிச் சேறலான் அறிக. இனி, சிவபெருமான் தருமி என்னும் ஓர் அந்தணன் பொருட்டுப் பாடியருளிய கொங்குதேர் வாழ்க்கை என்னும் செய்யுள் குற்றமுடைத்தென்று நக்கீரனார் கூறினர் என்றும், இச் செய்யுள்பற்றி இறைவர்க்கும் இவர்க்கும் நிகழ்ந்த சொற் போரில் இறைவனார் வெகுண்டு நெற்றிக்கண்ணைத் திறந்தனர் என்றும், அதற்கும் அஞ்சாதவராய் நக்கீரனார், நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே! என வினயமாய் மொழிந்தனர் என்றுங் கூறுப. இக்கதைகள் நக்கீரனார் தெய்வத்தன்மையுடைய நல்லிசைப்புலவர் என்றும் தமிழின்பால் அளவிலா ஆர்வமுடையர் என்றும், தன்னெஞ்சறிந்தது பொய்யரப் பெருந்தகையாளர் என்றும், தமிழ்மொழியைத் தம் ஆருயிரினும் சிறந்ததாகப் போற்றுபவர் என்றும் நமக்கு நன்கு விளக்குதல் காண்க.
இனி, இவ்வாசிரியரைப் பார்ப்பன வகுப்பினர் என்று கூறுவாரும் உளர். சங்கறுப்ப தெங்கள் குலம் சங்கரனார்க் கேதுகுலம் எனவரும் பழைய வெண்பாவானே இவர் சங்குத் தொழில் செய்யுமொரு பார்ப்பன மரபினர் எனவும் கருதுவாரும் உளர். கீதமொழி கூட்டி வேதமொழி சூட்டுகீரர் என அருணகிரியார் கூறுவதனால் அருணகிரியாரும் இவரை அந்தணர் என்றே கருதினர் என்று கூறுவாறுமுளர். ஈண்டு அருணகிரி அடிகளார் திருமுருகாற்றுப்படையையே வேதம் என மதிப்பாராய் அதனையே வேதமொழி எனப் பாராட்டுகின்றார் ஆகலான், அதுபற்றி அவர் அந்தணராகக் கருதினர் என்றது நிரம்பாதென்க. இவர் அந்தண மரபினர் என்றற்குச் சிறந்த சான்றுகள் இல்லை. இனி, இந் நல்லிசைப்புலவர் திருமுருகாற்றுப்படை இயற்றியதற்குக் காரணமாகக் கூறப்படும் வரலாறும் ஒன்றுள்ளது. அஃதாவது: இறைவனார் சினத்திற்கு ஆளானமையாலே நோயுற்ற நக்கீரனார் அது தீர்தற்பொருட்டுக் கைலை காணச் சென்றார் என்றும், அங்ஙனம் செல்லுங்கால் திருப்பரங்குன்றத்தே உறையுமொரு பூதம் இவரைத் தினற்பொருட்டு அம்மலைமுழைஞ்சில் சிறையிட்டு வைத்ததென்றும் அச் சிறையினின்றும் தப்புதற்பொருட்டு நக்கீரனார் இத் திருமுருகாற்றுப்படையைப் பாடி முருகப்பெருமானைப் பரவ, அவர் வேலுடன் வெளிப்பட்டு அக்கொடிய பூதத்தைக் கொன்றொழித்து நக்கீரரை உய்யக்கொண்டார் என்றது.
இதனால், முருகப்பெருமான்பாற் பேரன்புகொண்டு வழிபட்டவர் நக்கீரர் என்பது புலனாம். இன்றும் தமிழகத்தே முருகப்பெருமான் சீரடியார்கள், இவர் பாடிய திருமுருகாற்றுப்படையை நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழியாகக் கொண்டு நாடோறும் ஓதி அவ்விறைவனின் திருவருள் பெற்றுவருகின்றனர். இனி, இப் புலவர் பெருமான் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் இவைகளேயன்றி, நற்றிணையில் ஏழு செய்யுட்களும், குறுந்தொகையில் எட்டுச் செய்யுட்களும், அகநானூற்றில் பதினேழு செய்யுட்களும், திருவள்ளுவமாலையில் ஒன்றுமாகப் பல செய்யுட்களைப் பாடித் தமிழை வளம்படுத்துள்ளார். இனிப் பதினொராந் திருமுறையிற் காணப்படும் கைலைபாதி காளத்திபாதி யந்தாதி முதலிய ஒன்பது நூல்களையும் இயற்றியவர் நக்கீரரே என்க. சங்ககாலத்து நூல்களுள் காணப்படும் இவர் செய்யுட்போக்கானும் சொல்லமைப்பு வடமொழிக் கலப்பு முதலியவற்றானும் இவற்றிற் பெரிதும் வேறுபடுதலால் இவற்றைப் பாடிய நக்கீரர் எனப்படும் மற்றொருவர் ஆதல் வேண்டும் எனக் கருதுவாரும் உளர்.
மதுரையில் மேலைமாசி வீதியின்கண் நக்கீரர் கோயில் என்று வழங்கப்படும் கோயில் ஒன்றுளதென்றும், அங்கு நக்கீரர் திருவுருவச்சிலை யுளதென்றும், இன்னும் திருப்பரங்குன்றத்தினும், திருவீங்கோய்மலையிலும் இப் புலவர்பெருமானுடைய திருவுருவச்சிலை உள்ளன என்றும் கூறுப. திருக்காளத்தியின் கண் இவரான் நடப்பட்ட சிவலிங்கவுருவம் ஒன்றுளதென்றும், அத் திருவுருவத்திற்கு நக்கீரநாதர் அல்லது நக்கீரலிங்கம் என்று திருப்பெயர் வழங்கப்படுகின்றதென்றும் கூறுப. இனி, ஆசிரியர் நக்கீரனார் சிறந்த நூலாசிரிய ராதலோடு ஒப்பற்ற உரையாசிரியருமாகத் திகழ்கின்றார். இறையனார் களவியலுக்கு இவர்கண்ட வுரை பண்டைக்காலத் தமிழ் உரைநூலிற் றலைசிறந்து விளங்குகின்றது. இப்புலவர் நூல்களிலே முருகவேள், இந்திரன், திருமால், அயன், சிவன், பலதேவர், குறுந்தாட்பூதங்கள், வரையரமகளிர், சூரரமகளிர் முதலிய பல தெய்வங்கள் கூறப்பட்டுள்ளன. தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் முதலிய, புரவலர்களைப்பற்றியும், ஆலங்கானம், இடையாறு, உறையூர், கருவூர், காவிரிப்பூம்பட்டினம், திருப்பரங்குன்றம், திருவாவினன்குடி, திருவேரகம், தொண்டி, முசிறி, பழமுதிர்சோலை, பெருங்குளம், மதுரை, மருங்கூர்ப் பட்டினம், வேங்கடம், மூதில், திருமருதந்துறை முதலிய சிறந்த ஊர்களைப்பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. இனிப் பண்டைக்காலத் தமிழ்மக்களுடைய தெய்வவழிபாடு அரசியல், தொழில், போர், காதல் முதலிய பல்வேறு செய்திகளும் இவர் நூல்களிலிருந்து நன்கு தெளியப்படும்.
பாட்டுடைத்தலைவன் வரலாறு!
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இயற்றிய இத்திருமுருகாற்றுப் படைக்குச் செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப் பெருமானே பாட்டுடைத் தலைவனாவான். ஏனை ஆற்றுப்படைகட்கு இவ்வுலகத்தே சிறந்த வண்மையாளராய்த் திகழ்ந்த புரவலர்களே பாட்டுடைத் தலைவராக, இப்பாட்டிற்கு உயிர்களின் துயர்போக்கி அந்தமில் இன்பத்து அழியாவீட்டை நல்கியருளும் ஒப்பற்ற வள்ளற் பெருமானாகிய முருகவேளையே சான்றாண்மைமிக்க நல்லிசைப் புலவராகிய நக்கீரர் பாட்டுடைத் தலைவனாகத் தேர்ந்துகொண்டமை பெரிதும் போற்றற்பாலதொன்றாம்.
இனி, இம் முருகப்பெருமானே, தமிழ்நாட்டின்கண் முதனிலமாகக் கொள்ளப்படும் மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத் தெய்வம் ஆவார். இதனைச் சேயோன் மேய மைவரை யுலகமும் எனவரும் தொல்காப்பிய நூற்பாவான் உணரலாம். உலகில் மக்கள் முதன்முதலாகத் தோன்றி வாழத் தொடங்கியது குறிஞ்சி நிலத்திலேதான் என்பர் உயிர்நூல் ஆராய்ச்சி வல்லுநர். மக்கள் முதன்முதலாக இவ்வுலகியற்கையைக் கூர்ந்து நோக்கி இவ் வுலகத்தை இவ்வாறு ஒழுங்குற நடத்தற்கு ஒரு முழுமுதற்பொருள் இருத்தல் வேண்டுமென்றும், அப்பொருள் இவ் வுலகின்கண் ஒவ்வோர் அணுவினும் உள்ளீடாய் உறைந்து இவ்வுலகினை இயக்குகின்றதென்றும், எங்கும் நிறைந்து எப்பொருட்கும் தான பற்றுக்கோடாய்த் தனக்கொரு பற்றுக்கோடுமின்றி நிற்பதும், தோற்றமும் ஈறும் இல்லாததும், எப்பொருளையும் தன்னுட்டோற்றி யழிப்பதுமாகிய, அப்பொருளாலேதான் இவ்வுலகம் இனிதின் இயங்குகின்றதென்றும், தம் கூரிய அறிவானே கண்டகாலத்தே, அப்பொருளைக் கந்தழி என்னும் பெயரானே வழங்கி, அதனை மனத்தானே போற்றி வருவாராயினர். இக் கடவுளறிவு மிகுந்த பிற்காலத்தே இங்ஙனம் கருதலளவையான் மட்டுமே ஊகித்துக் கண்ட அவ்விறைப் பொருளை மற்றோராற்றாற் காண்டல் அளவையானும் காணத்தலைப்பட்டனர். அஃதாவது இப் பேருலகத்தே எத்திசையினும், யாண்டும் முதிர்ந்த மனனுணர்ச்சிக்குப் புலனாகத் தெள்ளத் தெளியக் காணப்படுகின்ற அழகே அக் கடவுளின் தோற்றம் ஆதல்வேண்டும் என்று கருதினர். அவ்வழகு கடவுளின் வெளிப்பாடாகலான், அதற்கு முருகு என்னும் சிறந்ததொரு பெயரிட்டு வணங்குவாராயினர். முருகு என்னும் தனித்தமிழ்ச்சொல் அழகு, இளமை, இன்பம் முதலிய உயரிய கடவுட் பண்புகளை உணர்த்தும் ஒருசொல்லாதல் அறிக. அவ்விறைப் பொருளை ஆண் பெண் ஆகிய இரண்டுபாலுள் ஒன்றாகக் கருதாமையால், கந்தழி என்றாற்போன்று முருகு என்றே வழங்குவாராயினர்.
தமிழ்மொழி, மக்களிடத்தே வளர்ச்சியுற்று எழுத்து சொல் பொருள் என்னும் முத்திறத்த இலக்கணங்கள் சான்றோர்களால் வகுக்கப்பட்ட காலத்தேதான் முருகென இறைப்பொருள் என்னும் பொருட்டாய் நின்றசொல், அன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று முருகன் என்று வழங்கப்பட்டது. நிலத்தை நான்காக வகுத்த காலத்தே, தமிழ்நாட்டில் முதன் முதற்றோன்றிய இம் முருகு நானிலத்தொன்றாய் முதனிலமாகிய மலைநிலத் தெய்வமாக வகுக்கப்பட்டது. இக்காலமே வடவாரியர் தமிழகம் புகுந்து தமிழரொடு கலந்துவாழ்ந்த காலம் ஆகும். ஆகவே, அவர்கள் வழங்கிவந்த இந்திரன், திருமால், வருணன் முதலிய கடவுளரையும் குறிஞ்சி நிலமொழிந்த ஏனை நிலங்கட்குத் தெய்வமாக அமைத்துக்கொள்ளலாயினர். இனி, இம் முருகனையும் வடவாரியர் கொண்டிருந்த தெய்வங்களுள் ஒன்றாய கந்தன் என்னும் தெய்வத்தையும் ஒன்றாகக் கருதி, அக் கந்தன் என்னும் தெய்வத்தின் வரலாறனைத்தும் இம் முருகனுடைய வரலாறாகவே வேற்றுமையின்றி வழங்கலாயினர். குமாரசம்பவம், கந்தபுராணம் முதலிய வடமொழிக் காப்பியங்களிலே இக் கந்தனுடைய வரலாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment