Tuesday, May 31, 2016

நேரடி வழிபாடு

தேவாரங்களில் சில வகைகள் உண்டு.

Late Jaybee ayya ...
https://jaybeesnotebook.blogspot.com/2012/01/personal-worship-1.html

நேரடி வழிபாடு
ஐயம் தெளிதல்

 2003-ஆம் ஆண்டில் தனிப்பட்ட முறையில் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்விகள் பல.
அவற்றிற்கு ஏற்ற பதில்களை நானும் தனிப்பட எழுதியனுப்பினேன்.
 பார்க்கும்போது அவை எல்லாருக்குமே பொருந்தும், பயன்படும் என்று நிச்சயமாகத்
தோன்றுவதால் அவற்றில் இரண்டு மடல்களில் கண்டுள்ள சாராம்சத்தை இங்கே இட்டிருக்கிறேன்.
 இது முதல் மடல்.....


  கிரகங்களின் விஷேச கூட்டமைப்புக் கொண்ட நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யலாம்.
 ஆனாலும் பொதுவாக எந்த நேரத்திலும் வழிபாடு செய்யலாம். அதில் சில நேரங்களில்
செய்வது இன்னும் ஆற்றல்வாய்ந்த வழிபாடாக இருக்கும். மந்திர வழிபாட்டில் இது முக்கியமாகக் கருதப்பட்டிருக்கிறது.
 உங்களுக்கென்று  சொந்த வழிபாட்டுக்குத் தேவாரப் பாடல்களைத்
தேர்ந்தெடுக்கலாம்.
 கந்தர் ஷஷ்டி கவசத்துக்கு மிகுந்த ஆற்றல் இருக்கிறது. காரியசித்தி மாலைக்கும் சில
பிரயோக முறைகள் இருக்கின்றன.

தேவாரங்களில் சில வகைகள் உண்டு.

சரணாகதி தேவாரம்.
இறைவனை வழுத்தும் தேவாரம்
வரம் கேட்கும் தேவாரம்
துயர்தீர்க்கும் தேவாரம்
இறைவனுடன் நேரடியாகப் பேசும் தேவாரம்
பயம் தீர்க்கும் தேவாரம்
கோபம் தீர்க்கும் தேவாரம்
பாவம் தீர்க்கும் தேவாரம்
பழிதீர்க்கும் தேவாரம்
தோஷம் தீர்க்கும் தேவாரம்
பகைவெல்லும் தேவாரம்
பகைதீர்க்கும் தேவாரம்

இப்படி இருக்கின்றன.

 பணம் வேண்டுமானால் இடரினும் தளரினும் படிப்பார்கள். நெடுங்களத் திருப்பதிகம்
இடர்தீர்க்கும் தேவாரம்.
 அர்ச்சனைக்குரிய தேவாரம் - போற்றித் திருத்தாண்டகம்.

 நேரடி வழிபாடு என்னும் மடலின் இரண்டாம் பாகம் இது.  கேள்வி பதிலாக அமைந்துள்ளது.

Date: Thu, 01 May 2003 18:58:26 +0000
From: jaybee

At 09:19 AM 4/30/2003 -0700, you wrote:
கேள்வி: சரணாகதி தேவாரம் எவையெவை?

பதில்: நான் எழுதியிருக்கும் நான்கும் சரணாகதி வகையைச் சேர்ந்தவைதாம். 'ப்ரபத்தி' என்றும் சொல்வார்கள். இதே போன்றவை நிறைய இருக்கின்றன.

கேள்வி: அதே போல இறைவனுடன் நேரடியாகப் பேசும் தேவாரம் எவை?

பதில்: இந்த வகையிலும் பல இருக்கின்றன. அப்பருடைய தேவாரங்களில் பலவற்றில் அவர் நேரடியாக இறைவனுடன் பேசுவதைக் காணலாம்.

கேள்வி: ஆனால் இறைவனுடன் நேரடியாகப்பேசும் தேவாரம் பாடுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா?

பதில்: இறைவனுடன் நேரடியாக எல்லாருமே பேசவேண்டும் என்பதால்தான் அந்தப் பாடல்களை அப்பர் போன்றவர்கள் பாடியிருக்கிறார்கள். பாடவேண்டும் என்று நினைக்கும்போதே அந்தத் தகுதி ஏற்பட்டுவிடுகிறது.

"Our Father which art in Heaven
Hallowed be Thy Name"....

என்னும் பொழுது இறைவனுடன் நேரடியாகப் பேசவில்லையா?
'Sermon of Mount' என்னும் மலைப் பிரசங்கத்தின்போது ஓர் ஆள், ஏசு பெருமானிடம் 'எப்படி இறைவனைத் தொழுவது?' என்று கேட்டதற்கு அவர் இந்த 'Lord's Paryer'-ஐச் சொல்லிக்
கொடுப்பார். 'தம்பிரான் வணக்கம்' என்று தமிழில் சொல்வார்கள்.

 Doa Selamat போன்ற பிரார்த்தனைகள் இறைவனிடம் நேரடியாகப் பேசுவதாய் அமைந்தவைதாம்.

கேள்வி: >எதாவது ஆச்சாரங்களை நான் கடைப்பிடிக்க வேண்டுமா?

பதில்: மனதில் நினைப்பதே ஒரு நல்லாசாரம்தான். அதைவிட ஆசாரம் என்ன இருக்கப்போகிறது?
 அப்பர் தேவாரத்திலுள்ள 'காயமே கோயிலாக' போன்ற பாடல்கள் மனதிலேயே இறைவனை
ஆவாஹணம் செய்து ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதைக் குறிப்பவைதாம்.

திருமூலர் சொல்லியிருப்பதைப் பாருங்கள்:

உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
தெள்ளத்தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்

 வேதத்தின் சாரமெல்லாம் என்ன?

சத்யம் வச: தர்மம் சர!

சத்தியத்தைப்பேசு; தர்மத்தில் நட!

 அதுதான் ஆசாரம் அனுஷ்டானமெல்லாம்:-)
>
கேள்வி: கந்த சஷ்டி கவசம் சொல்லுவதற்கு என்ன வெல்லாம் செய்ய வேண்டும்.

பதில்: முருகனை நினைத்துக்கொண்டு ஷடாட்சரத்தைச் சொல்லிக்கொண்டு பாராயணம் பண்ண வேண்டியதுதான்.
 செவ்வாய்க்கிழமை மாலை, வள்ளிதெய்வயானையுடன் ஆறுமுகம் பன்னிருகையுடன் மயில்மீது வீற்றிருக்கும் படத்தை வைத்து வழிபடலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் தேன் வைத்து, மலர்கள் போட்டு, கவச பாராயணம் செய்யலாம். இது ஒரு சுலபமான வழிபாடு.

 இதுவும் அதற்குரிய படம்தான் -

என்னுடைய ·பேஸ்புக்கில் அந்தப் படம் உண்டு.

கேள்வி: >அதே போல காரிய சித்தி >மாலையை பாடுவதென்றால் என்ன செய்ய வேண்டும். என்ன மாதிரியான முறைகளை செய்ய வேண்டும்.

பதில்: ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் எட்டு நாளைக்கு மூன்று வேளை படிக்கவேண்டும்.
சதுர்த்தியன்று எட்டுமுறை படிக்கலாம். இதுவும் பலன் பெறவேண்டி, செய்யும்முறைதான்.
 சும்மாவும் படிக்கலாம்.

>கேள்வி: கடவுளிடம், அதைத்தா, இதை செய் என்று கேட்பது நல்லதா என்று தெரியவில்லை.

பதில்: அதற்கும் வழிகாட்டியிருக்கிறார்கள்.

"Give us this day, our daily bread"
"Ask and it shall be given unto you"

"இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளுமாறு,
ஈவதொன்று எமக்கில்லையேல்?
அதுவோ உனது இன்னருள்,
ஆவடுதுறை அரனே?"

   -திருஞானசம்பந்தர்

கேள்வி: >கூடவே, எனக்கு எதெல்லாம் நல்லது என்று தெரியாது. நல்லதை செய்யும் பொறுப்பை அவரிடமே விட்டு விடலாம் என்று நினைக்கிறேன். :)

பதில்: அதுவும் நல்லதுதான்.

மாணிக்கவாசகர் சொல்வது போல்:

அன்றே என்றன் ஆவியுடன் உடலும் உடமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ? எண்டோள் முக்கண் எம்மானே!
நன்றே பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகமே?

>கேள்வி: அதனால்தான், கோவிலில் கடவுளை வணங்கி வேண்டுதல் விடுப்பது சரிதானா? Is it advisable என்ற கேள்விகள் எழுகின்றன.

பதில்: கேட்கவேண்டியதைக் கேட்டும் பெறலாம்.

 அம்பாளிடம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்ட அபிராமி பட்டர், 'கலையாத கல்வியும் குலையாத செல்வமும் கபடு வராத நட்பும்' என்று பதினாறு பேற்றையும் பட்டியலிட்டுக் கேட்கிறார்:-)
 அவர்களே பாதையையும் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

1 comment:

  1. அருமயான விளக்கங்கள் மனசுக்கு பெரிய தெளிவைத் தருகின்றன..இறைவனை நோக்கி பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும்..அருமையான கலங்கரை விளக்கம்...நன்றி..நன்றி..சிவாய நம திருச்சிற்றம்பலம்....

    ReplyDelete