Thursday, August 24, 2017

கணபதிக்கு பிரியமான 21.Vinayagar 80 tips




No automatic alt text available.

*Pillayarpatti Karpaga Vinayagar Sandal*

The 9th day 80 kilograms of sandal paste is made-up to cover Lord Karpaga Vinayagar. This decoration of sandal covering takes place only once in a year. [ Old image ] ..


#கணபதிக்கு_பிரியமான21

கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்...ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, , மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.ஜன்பகப்பூ

நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்



விநாயகர் பற்றிய *80 அற்புத உண்மைகள்!* தெரிந்து கொள்வோம்!

1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

8. முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

9. சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள்.
10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

18. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.

20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது. 

22. தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ”சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்பபடும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.

31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.

32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும். 

33. சாதூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவிலில் தீப்பெட்டி செய்வோர் ஒவ்வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை.நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ்செயலில் உங்களுக்குத்துணையாக இந்தக்கணபதி விளங்குவார்.

34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.

36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.

37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.

42. நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.

43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.

45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.

46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.

48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.

49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.

50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள் படுகிறது.

52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பெளத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.

53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.

54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

55. மும்பையில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு லட்சத்து 19 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட் டுள்ளது.

56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.

59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.

60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.

61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.

62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.

63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.

64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.

65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.

66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.

68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.

70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.

72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.

73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.

74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.

79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.

80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பெளத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.



...



No comments:

Post a Comment