பாரதியை ஆகர்சித்த எமது அருளம்பல (மௌன) சுவாமிகள்
எமது யாழ் மண்ணின் செழுமைக்கு கை கொடுத்தவர்கள் பலர். கல்வி, வாணிபம், அரசியல் கலை இலக்கியம் என எத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் கால் பதித்து அளப்பரிய பணிகள் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்ந்தவர்கள் பலர்.
அந்த விதத்தில் எமது மண்ணின் ஆத்ம ஞானிகள் பலரும் மண்ணில் பலமாக ஆழ வேரூன்றி அகலச் சடைபரப்பி எம்மை ஒத்த சாதாரணர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கு உள்ளொளி பாய்ச்சியதை மறக்க முடியாது. சித்தர்கள், யோகிகள், ஞானிகள், சுவாமிகள் எனப் பலவாறு எம்மக்களால் அழைக்கப்பட்டு உயர் பீடத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்கள். கடையிற் சுவாமிகள், யோக சுவாமி முதற்கொண்டு ஜேர்மன் சுவாமி என அறுகுபோல் வேரூண்டிப் படர்ந்த ஞானப் பரம்பரியம் இம் மண்ணில் இருந்திருக்கிறது. அவர்களின் ஞானத் தேறலில் ஒரு சிறு பங்காவது எம் எல்லோரிலும் இன்றுவரை ஒட்டிக் கொண்டிருப்பது நாம் செய்த பாக்கியம்தான்.
"குவலயத்தின் விழி போன்ற" என மகாகவி பாரதி போற்றிய அற்புத ஞானி ஒருவர் வடமராட்சியில் அதுவும் நான் பிறந்த ஊரான வியாபாரிமூலை மண்ணில் விளைந்திருக்கிறார். அவர்தான் தான் அருளம்பல சுவாமிகள் ஆவார். யாழ்பாணத்துச் சுவாமி என பாரதி அவரை விழித்தபோதும் மௌன சுவாமி எனத் தன்னைத்தான் ஓரிடத்தில் குறிபிட்டிருக்கிறார். ஊரவர்களும் அருளம்பல சுவாமி, மௌன சுவாமி ஆகிய பெயர்களில் அவரைப் போற்றித் துதித்திருக்கினறனர்.
ஆயினும் அவரைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. எனது தந்தையார் பாட்டனார் ஆகியோர் அவரைப் காணும் பாக்கியம் பெற்றிருக்கின்றனர். 1942 மார்கழி மாதம் மகாசமாதியடைந்த அவரை வியாபாரிமூலை பேந்தாள் வளவிலிருந்து நிஷ்டையிலிருந்த அதே நிமிர்ந்த கோலத்தில் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று வியாபாரிமூலை வீரபத்திர கோயிலுக்கு அண்மையாக, ஈசான மூலையில் சமாதி வைக்கபட்டார். தானும் சிறுவனாகக் அதில் கலந்து கொண்டதை எனது தந்தையார் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
வியாபாரிமூலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளைக்கும் வதிரியைச் சேர்ந்த இலட்சிமி அம்மாள் ஆகியோரின் மகனாக 1980 ஆண்டு அருளம்பலம் பிறந்தார். அவர் பிறந்த தினம் 1880 ஆம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி என அவரைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் நா.ஞானகுமாரன் 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்' என்ற நூலில் ஆய்வு ரீதியாகக் குறிப்பிடுகிறார்.
எமது ஊரில் பிறந்து, எமது பகுதிப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தில் கல்வி கற்றபோது அவர் சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் மாணாக்கனாக இருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. 5ம் வகுப்புவரை அங்கு கல்வி கற்ற அவர் பின்னர் குடும்ப பொருளாதார நிலைகாரணமாக் தொழில் நிமித்தம் கம்பளை சென்றார்.
5ம் வரை மட்டுமே கல்வி கற்ற போதும் இராமாயணம் மகாபாரதம் திருமூலர் திருக்குறள் முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் பட்டினத்தார் பாடல்கள் அருகிரிநாதர் பாடல்கள் வரையானவற்றில் தேர்ச்சி பெற்றிருந்ததை அவரது படைப்புகள் ஊடாக அறிய முடிகிறது என பேராசிரியர் நா.ஞானகுமாரன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
உலக வாழ்வில் நாட்டங் குறைந்து ஆன்மீக ஆர்வம் மீதௌ 1910ம் ஆண்டளவில் இந்தியா சென்ற அவர் நாகை நீலலோசனி அம்மன் ஆலயத்தில் நிஷ்டை நிலை கற்றார் என அவரது படைப்புகள் மூலம் அறிய முடிகிறது. 1910 முதல் 1914 வரை நான்கு ஆண்டுகள் உணவு மறுத்து கடுமையான நிஷ்டையில் ஆழ்ந்தார். அந் நிலையில் புலித்தோலில் அவர் அமர்ந்திருக்கும் உடல் மெலிந்த ஞானத் தோற்றமுடைய புகைப்படம் ஒன்று கிட்டியுள்ளது. அவரது மேலும் இரு புகைப்படங்கள் கிடைத்துள்ளன.
நிஷ்டையில் இருந்த நேரத்தில் இவரது உண்மையான ஞானநிலையைப் புரியாத ஆலய நிர்வாகி போலிக் குற்றச்சாட்டு செய்தபோது பொலிசார் இவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். சற்று நேரத்தில் பார்த்தபோது அறை பூட்டிய படியே இருக்க இவர் காணாமல் போயிருந்தார். தேடியபோது இவர் கடற்கரையில் நிஷ்டையில் இருப்பதைக் கண்டனர். இதைக் கண்ட நீதிபதி அவரது ஆன்மீக மகிமையை உணர்ந்து, எவரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என ஆணையிட்டதாகத் தெரிகிறது.
சித்து வல்லமை பெற்ற அருளம்பல சுவாமி அவர்கள் வரப்போவதை எதிர்வு கூறல், மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல், ஒரு நேரத்தில் பல இடங்களில் தன் உருவம் காட்டல் போன்ற பலவற்றை செய்யும் ஆற்றல் பெற்றிருந்திருக்கிறார். ஆனாலும் சித்து வேலைகளில் அதிக நாட்டம் கொண்டதில்லை.
அருளம்பல சுவாமிகள் ஞானந் தெளிந்த சித்தர். அதற்கு மேலாக அற்புதமான படைப்பாற்றல் கொண்ட கலைஞனாகவும் காணப்படுகிறார். நுணுக்கமும் நேர்த்த்pயும் கொண்ட அவரது பல கைவினைப் பொருட்களான மண்விளக்கு, சட்டி, செம்பு போன்றவற்றை அவரின் பரம்பரையினர் வதிரியில் பேணி வந்ததை நேரில் கண்டுள்ளேன்.
அத்துடன் அவர் சிறந்த ஓவியராகவும் விளங்கியுள்ளார். எமது ஊரான வியாபாரிமூலை விநாயகர் ஆலய களஞ்சியசாலைக்கு முன்பாகவுள்ள வாகனசாலைச் சுவரில் செங்காவி கோட்டோவியமாக பக்த அடியார் ஒருவரின் சித்திரம் ஒன்றைச் சிறுவயதில் கண்டது மங்கிய கனவாக நினைவில் நிற்கிறது. அதேபோல வசந்த மண்டப சுவரிலும் அவர் வரைந்த தெய்வ ஓவியங்கள் இருந்திருக்கின்றன.
பேணப்பட வேண்டிய பெறுமதி வாய்ந்த பொக்கிஷங்கள் அவை. "..பாவியரைக் கரை சேர்க்கும் ஞானத் தோணியான" அருளம்பல சுவாமிகளின் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கும் கைவண்ணமான அவற்றை வெள்ளை அடித்து மறையச் செய்த எமது பேதமையை எண்ணி மனங் கலங்குவார் எமது மண்ணின் பிற்கால ஓவியரான திரு.ஏ.கே. நடராஜா.
சித்தராக, கலைஞனாக, ஓவியனாக தன்னை வெளிப்படுத்திய அருளம்பல சுவாமிகள் தன்னை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் வெளிப்படுத்தவும் தவறவில்லை. தான் தெளிந்த ஆன்மீக அறிவையும் உணர்வையும் மக்களுக்கு ஊறச் செய்யும் முயற்சியாக கவிதையாகவும் உரைநடையிலும் அவர் படைத்தவை பல. பதின்னான்கிற்கு மேற்பட்ட இத்தகைய ஆக்கங்கள் உள்ளதாக பேராசிரியர் நா.ஞானகுமாரன் கூறுகிறார். இவை படித்துப் பயன்பெற ஏற்றவை என்பதற்கு மேலாக ஆய்விற்குரிய ஆவணங்களாகவும் திகழ்கின்றன.
அருளம்பலம் சந்தேக நிவிர்த்தி, கற்புநிலை, அருவாச தேவ ஆரம், நாகை நீலலோசனி அம்மன் பேரில் தோத்திரம், நாகை நீலலோசனி அம்மன் ஊஞ்சல், கற்பு நிலைச் சுருக்கம், பழைய வேற்பாட்டுடன் படிக்கை, ஆதிபுராணம், ஆதிநீதி ஆகியவை கிடைக்கப் பெற்றதாக பேராசிரியர் நா.ஞானகுமாரன் குறிப்படுகிறார். ஆநாதி போதம், சங்க வினாவிடை, சைவ வினாவிடை, தர்க்க சாஸ்திரம் ஆகியவை கிடைக்கப் பெறவில்லை.
இருந்தபோதும் எம்மிடையே விளைந்த அந்த ஞான ஒளியை நாம் உணரச் தாமதித்தபோது, தமிழகப் பாரதி எம் கண்ணைத் திறக்கத் தேவைப்பட்டான். நாகையிலிருந்த சுவாமிகள் வேதாரணியம், அகத்தியாம் பள்ளி, மாயாவாரம், சிதம்பரம், காரைக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களிற்கும் சென்றிருக்கிறார். பாரதி புதுவையில் மறைந்திருந்த காலத்திலேயே சுவாமிகளைச் சந்தித்துள்ளார்.
"..மங்களம் சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன் யாழ்ப்பாணத்தீசன் தன்னைச்
சங்கரனென் றெப்போது முன்னே கொண்டு
சரணடைந்த . . ."
என்று பாரதி அவரைப் பாடுகிறான். வேறு இரு பாடல்களிலும் இவரைத் தனது ஞானகுருவாகச் சுட்டிக் காட்டுகிறான்.
பாரதியின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் இவர்தான் என 1960 களில் இ.மு.எ.ச ஆரவாரமாக விழா எடுத்துக் கொண்டாடியதன்; பின்னர் வெளியுலகில் மறக்கப்பட்டிருந்த அருளம்பல சுவாமிகளை, ஒரு பல்கலைக்கழகத்தின் அறிவாண்மையுடன் ஆய்வு செய்து 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்' என நூலுருவில்; நிலை நிறுத்தியவர் பேராசிரியர் நா.ஞானகுமாரன்.
அவரின் தொடர்ந்த சலிக்காத தேடலும், தன்னலமற்ற பணியும் காரணமாக அருளம்பல சுவாமிகளின் சில படைப்புகள் இப்பொழுது நூல் வடிவில் ஆவணப்படுத்தப்படுகின்றன.
எம்.கே.முருகானந்தன்.
No comments:
Post a Comment