Sri Chalanatheeswarar Temple,thakkolam,vellore.Takkolam
அளித்திருந்தோமல்லவா? அவற்றின் விளக்கங்களை இங்கு தருகின்றோம். உதீத மஹரிஷி என்று அழைப்பாரும் உண்டு. பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகின்ற தக்கோலத் திருத்தலத்தில் தான் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்து அருள்புரிந்து அன்றும் இன்றும் என்றும் ஏகாந்த ஜோதியாய் விளங்கும் ஸ்ரீஉததீ சித்புருஷர் நமக்கு அருள்புரிகின்றார்.
இவ்வகையில் தக்கோலம் சிவாலயத்தில் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாக விளங்குகின்ற உததீ சித்புருஷர் கலியுக மக்களுக்கு எத்துணையோ முறைகளில் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். அவருடைய ஜீவாலய சமாதி லிங்கப் பிரதிஷ்டையில் இன்றைக்கும் அவர் சூட்சுமமாக உறைந்து தம்மை வலம் வருவோர்க்கெல்லாம் அருள்புரிந்து வருகின்றார். உயர்ந்த கோயிலின் மதில் மேல் யோக நிலையில் அமர்ந்து நமக்கு சுதை ரூபத்தில் தரிசனம் தரும் உததீ சித்புருஷரின் திருஉருவை அண்ணாந்து பார்த்தோமேயானால் எத்துணையோ அற்புத வரங்கள் நமக்குக் கிட்டுகின்றன. ஏதோ கோயில் கும்பாபிஷேகத்தின்போது அவரது திருவுரு அவ்வாறு அமைக்கப்பட்டது போல், நமக்கு மிகவும் சாதாரணமாகத்தான் தோன்றும். சிற்பியாய் இருந்தாலும், கொத்தனாராய் இருந்தாலும், கட்டிடத் தொழிலாளியாக இருந்தாலும் சரி ஒவ்வொருவருடைய கோயில் இறைப் பணிகளின் போது, அவரவர் மூதாதையரும், பித்ருக்களும் எத்துணையோ மஹான்களும், யோகியரும், அவரவர் தேகத்தில் சூட்சுமமாகக் குடிபுகுந்து பலவித அற்புத உருவங்களை வடித்துச் செல்கின்றனர். எனவே, இது ஒரு சிற்பியின் வேலை என்றோ, ஒரு ஓவியரின் ஓவியம் என்றோ எவரது இறைப் பணியையும் வெறுமனே கருதாதீர்கள்! அனைத்தும் அவன் செயலே!
இதற்காகத்தான் ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரத் திருப்பணியை மிகச் சிறந்த இறைப்பணியாக நமக்குத் தந்துள்ளார்கள். ஏனென்றால் சாதாரணமாக கோயிலுக்குச் செல்லும் போது நாம் பத்து நிமிடங்கட்கு மேல் அங்கு தங்குவது கிடையாது. ஏதோ வேகமாகச் சென்று ஒரு முறை பிரதட்சிணம் செய்து விட்டு உடனேயே திரும்பி விடுகின்றோம். இதுதானா கோயில் தரிசன முறை? 24 மணி நேரங்களில், பஸ் ஸ்டாண்டிலும், அலுவலகத்திலும், பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்களிலும், எத்துணை ஆயிரம் மணித் துளிகளை நாம் வீணடிக்கின்றோம் என எண்ணிப் பார்த்தால் இறை தரிசனத்திற்காக நம்மை ஒவ்வொரு வினாடியிலும் வாழ வைக்கின்ற இறைவனுக்காக ஐந்து அல்லது பத்து நிமிடம் கூட ஒதுக்குவது கிடையாது அல்லவா.
ஏன் இந்த இழிநிலை? வேட்டி, துண்டு அணிந்து, சுவாச கலைகள் சற்றும் மாறாது சூரிய, சந்திர கலையிலோ அல்லது சுழுமுனையிலோ சுவாசித்து மிகவும் அமைதியாக, சாந்தமுடன் நாம் பெற வேண்டிய ஆலய தரிசனத்தை பேண்ட், சர்ட்டுடன், ஷுவுடன் ஏதோ ஆபீஸ் முடிந்து வரும் போது சென்று பார்ப்போம் என்னும் எண்ணத்துடன் நாம் இதனை ஒதுக்கி வைத்து விட்டோம். இப்படி நாம் இறைவனையே மறந்து வாழ்ந்தால் இறைவனுக்காக ஒரு சில மணித் துளி கூடச் செலவிட மனமின்றி மிகவும் சுயநலமாக, லௌகீகமாக வாழ்ந்து கொண்டிருந்தால் எப்படி இறையருளைப் பெற இயலும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! எனவே தான் இதற்கு மாறாக ஒரு சற்குருவின் அருளாணையின் கீழ் சத்சங்கமாக உழவாரத் திருப்பணிகளை நாம் மேற்கொள்வோமாயின் இதில் எத்துணையோ கர்மவினைகள் மிக எளிதில் கழிகின்றன. பாவ தோஷங்கள் அழிகின்றன. மஹான்களும் வலம் வந்து உலாக் கொண்டுள்ள கோயில்களில் நாம் உழவாரத் திருப்பணிகளில் சில மணி நேரங்களாவது கோயில்களில் இருப்பதை விட உத்தமமாக நன்முறையில் நம் நேரத்தை செல்வழிக்கும் பாக்கியம் வேறு எவ்விதம் கிட்டும்?
தக்கோலம் சிவாலயத்தில் உள்ள ஜீவசமாதி ஆலயத்தில் உறைந்திருக்கும் ஸ்ரீஉததீ சித்புருஷரானவர் நமக்குப் பலவிதமான அருள்வழி முறைகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள். நாம் முன்பே கூறியது போல கோயிலில் நுழைந்தவுடனேயே உயர்ந்த மதில் சுவரில் யோகாசனத்தில் அமர்ந்திருக்கின்ற ஸ்ரீஉததீ மாமுனிவரை கழுத்தை உயர்த்தி வான் நோக்கி மேலே நாம் தரிசனம் செய்வதே வசுபூரண தரிசனமாகும்.. இதுவரையில் சமநிலையில் கண்களை நோக்கியவாறோ அல்லது பாதாளத்தில் இருக்கின்ற தெய்வ மூர்த்தியையோ (திருச்சி மலைக்கோட்டை பாதாள அய்யனார், திருஅண்ணாமலை ஸ்ரீரமண மஹரிஷி வழிபட்ட பாதாளலிங்கம், விருத்தாலசத்திலுள்ள ஸ்ரீஆழத்துப் பிள்ளையார்) ஆஜானுபாகுவாக 10, 20 அடி உயரமுள்ள தெய்வ மூர்த்திகளை நாம் தரிசிக்கின்றோமே தவிர, என்றேனும் அண்ணாந்து பார்த்து கோபுர தரிசனம் போல ஏதாவது சித்புருஷ தரிசனம் நாம் செய்துள்ளோமா? இதுதான் உததீ மாமுனியின் உத்தமப் பேறாகும். உததீ மாமுனிவர் பலரையும் அரிய திருப்பணிகளைச் செய்ய வைத்து தம்மை அண்டி வந்தோரை அவரவரின் கர்மவினைப் ப(ல)யன்களை எளிய முறையில் சீரமைத்துத் தந்து அவர்கட்கு நல்லருள் புரிந்தவராவார்.
அவர்தம் முக்கியத் திருப்பணி என்னவெனில் ஆலய கோபுரங்களில் ஊடு பயிராக விளங்குகின்ற மரங்களையும், செடிகளையும் நீக்கி ஆலய கோபுரங்களைப் பாதுகாப்பதாகும். ஆலய கோபுரத்தில் செடிகள் வேர்விட்டு முளைத்து விடுமாயின் அது ஆலய கோபுரத்தையே பதம் பார்த்து விடுமல்லவா? இது மட்டுமின்றி நட்சத்திர தியான முறையிலே நட்சத்திர யோகதரிசனம் எனும் அபூர்வ யோகாசனத்தில் அமர்ந்து இரவு பூஜையிலே சிறந்து விளங்கியவரே ஸ்ரீஉததீ மாமுனியாவார். பகலெல்லாம் பல ஆலயங்கட்கும் சென்று ஆலய கோபுர மற்றும் விமானத் திருப்பணிகளை ஆற்றி, இரவில் சற்றும் உறங்காது வானத்தில் உள்ள நட்சத்ராதி, கிரஹ தேவதை மூர்த்திகளைப் பலவிதமான துதிகளால் வணங்கி கண் துஞ்சாது, சிவ மந்திரங்களை ஓதியவாறு மிகச் சிறந்த தபோபலன்களைப் பெற்று, அவற்றை ஜீவன்களின் நல்வாழ்விற்கென அர்ப்பணித்தார்.
உங்களுடைய நட்சத்திரத்தை நீங்கள் அறிவீர்கள். உங்கள் பிறந்த தேதியோ, நட்சத்திரமோ தெரியாவிடில் அதை அறியும் நாடிகளும் உண்டு. எனவே, அவரவர் நட்சத்திரமும், அவரவரர் தம் கோத்ராதிபதியையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதி, மத, இன குல பேதமின்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கோத்திராதிபதி உண்டு. அதாவது நாம் அனைவரும் ஏதேனும் ஒரு மஹரிஷியின் பாரம்பரியத்தில் வந்தவர்களே. இதில் எவ்வித வேறுபாடும், பாகுபாடும் கிடையாது.. ஆனால் காலப்போக்கில் துரதிருஷ்டவசமாக இறைபக்தி மங்கியமையால் தான் நம்முடைய மூலாதர மஹரிஷி யார் கோத்ராதி பதி யார் எனத் தெரியாமற் போய்விட்டது..
64க்கும் மேற்பட்ட கோத்திராதிபதிகளுக்கும், பிரவர மஹரிஷிகளும் உண்டு.. இவர்கள் எல்லோரும் வானத்தில் உள்ள கோடானு கோடி நட்சத்திரத்திரங்களில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தைத் தம் உறைவிடமாகத் தேர்ந்தெடுத்து அங்கு குறித்த காலம் தவம்புரிந்து பின்னர் இறை ஆணையாகப் பல லோகங்கட்கும் சென்று வருகின்றனர்.. உதாரணமாக நீங்கள் பாரத்வாஜ கோத்திரம் எனில் (கோத்திரம் என்றால் மரபு, வம்சாவழி) நீங்கள் ஸ்ரீபாரத்வாஜ மஹரிஷி வழிவந்தவர்கள் என்று பொருள். உங்கள் நட்சத்திரம் பரணி என்றால் நீங்கள் ஸ்ரீபாரத்வாஜர் வழிவந்தவராய், அவர் பலவித நட்சத்திர மண்டலங்களில் தவம் புரியும் போது அவர்தம் ஆசியால் அவர் பரணி நட்சத்திர மண்டல பூஜையின் போது அவரவரின் பூர்வ ஜென்ம கர்மவினைகளுக்கேற்ப நீங்கள் பிறப்பெடுத்துள்ளீர்கள் என்பது பொருள்.
எனவே ஒவ்வொருவரும் தினந்தோறும் இயன்றவரை அனைத்து நட்சத்திரங்களையும், முத்திரைகளால் தரிசித்தாக வேண்டும். இதற்கு நட்சத்திர பீட நமஸ்காரம் என்று பெயர். நட்சத்திரங்கள் எல்லாம் வெறும் ஒளிக் கோளங்களோ அல்லது ஜடப்பொருட்களோ அல்ல. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு தேவதா மூர்த்தியாகும். உயர்ந்த உத்தம இறைநிலை கொண்டோர்க்குதான் இவ்வாறு நட்சத்திரமாகப் பிரகாசிக்கும் தெய்வத் திருவருள் கிட்டும். எனவே ஒவ்வொரு இரவிலும் எந்த அளவிற்கு நட்சத்திரங்களைத் தரிசிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நட்சத்திர நேத்திர சக்தி பெருகுகின்றது... இவ்வாறாக நட்சத்திர தியானத்திற்கு மிகச் சிறந்த தலம் தக்கோலம் ஆகும்.
இங்கு விடியற்காலையிலும், மாலையும் இருளும் சேரும் நேரத்திலும், இங்கு அமர்ந்து நட்சத்திர தரிசனம் பெறுவது மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் இங்கு தான் இரவு நேர தியான முறையில் தாமும் தியானித்துப் பிறருக்கும் உபதேசித்து நல்வழி காட்டியவரே ஸ்ரீஉததீ முனிவர்! கலியுக மனிதனானவன் பகல் நேரத்திலே, தொழில், கல்வி, குடும்பம் போன்றவற்றிற்காகச் செலவழிக்கிறானே தவிர இறைத் திருப்பணிக்காகவோ, வழிபாட்டிற்கோ அவன் ஒதுக்கும் நேரம் சில நிமிடத் துளிகளேயாகும். இரவு நேரமோ, உறக்கத்திற்கும், பலவித தீயவழிகட்கும் ஆட்பட்டதாய் அமைந்து விடுகின்றது. பின் எவ்வாறு தான் ஒரு மனிதனானவன் தன்னுடைய தெய்வீக நிலையில் முன்னேறுவதற்காக, தனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுளை நன்கு பயன்படுத்த இயலும்? இதற்கு இரவு நேர தியானங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன.
சில குறிப்பிட்ட திதிகளிலும், நட்சத்திரங்களிலும், நாட்களிலும் சில குறிப்பிட்ட இரவு நேரங்களில் செய்யப்படுகின்ற பூஜைகள், தியானங்கட்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. ஆதலின் இப்பூஜைகளின் இந்த அபரிமிதப் பலன்களால் செய்யாமல் விடுபட்ட பூஜைகட்கும் நந்நேரத்தை வீணே கழித்தமைக்கும் பிராயச்சித்தமாக அமைகிறது... உததீ சித்புருஷர் கலியுக மக்களின் நேரப் பற்றாக்குறை, நேரத்தை வீணாக்கும் தன்மையையுணர்ந்து, தீர்க்க தரிசனத்துடன் தான் தன் ஜீவசமாதியில் உததீ சக்திகளைத் தன் தபோ பலன்களின் திரட்சியாகப் பதித்துள்ளார். எனவே, தக்கோலத்தில், குருவாரமாக விளங்குகின்ற வியாழனன்று குருஹோரை நேரத்தில் (காலை 6 முதல் , மாலை 1 முதல் 2, இரவு 8 முதல் 9) போன்ற குரு ஹோரை நேரங்களில் 21 முழு எலுமிச்சம் பழங்களாலான மாலைகளை வைத்து குரு மந்திரங்களை ஓதி (தட்சிணாமூர்த்தி நாமாவளி, ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், கல் ஆலின் புடையமர்ந்து .. பாடல் .., திருமூலர், அப்பர், சம்பந்தர், மணிவாசகர் போன்றோரின் குரு துதிகளை) நன்கு ஓதி குறைந்தது அரைமணி நேரமேனும் தியானித்து குரு பகவானுக்குரித்தான மஞ்சள் நிற எலுமிச்சம் பழம் அன்னம் போன்ற உணவுப் பண்டங்களை ஜீவசமாதிக்குப் படைத்து தானமாக அளித்திட வேண்டும். சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட எலுமிச்சை மாலையை இல்லத்தில் வைத்து பூஜையில் வைத்து மறுநாள் அதனை அன்னமுடன் கலந்து எலுமிச்சை சாதமாக தானமளிக்க வேண்டும்..
ஒவ்வொரு மனிதனும், இரவில் தான் பல தீய வினைகளையும், தீவினை சக்திகளையும் சேர்த்துக் கொள்கிறான்... முறையற்ற காமச் செயல்களால் விந்துக் குற்றங்களும், கொலை, கொள்ளை, போன்ற தீய செயல்களும் இரவில் தான் நிகழ்கின்றன. மனிதப் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் இவ்வாறாக இரவில் கூடுகின்ற தீவினை சக்திகளைக் களைய இரவு நேரப் பூஜைகளை மேற்கொண்டு அதன் பலன்களாக சமுதாயத்தைப் புனிதப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உண்டு.
ஆனால் இன்றைய கலியுகத்தில் எவர்தான் இரவு நேர பூஜையை மேற்கொண்டு இவ்வித சமுதாயப் பூஜையைச் செய்து வருகிறார்கள்? இதற்காகத்தான் அக்காலத்தில் ‘அர்த்தஜாமப் பூஜை’ ஒன்றை நிகழ்த்தி அதில் எல்லோரும் பங்கு கொண்டு இரவு நேரம் நன்கு கழியப் பிரார்த்தனை செய்வார்கள். இது மிகச் சிறந்த சமுதாய பூஜை! ஆனால் இன்றோ எட்டு மணிக்கு மேல் ஆலயங்களில் எவரையும் காண்பது அரிதாயுள்ளது. கோயில் பள்ளியறைப் பால் பிரசாதம் என்பது மிகவும் விசேஷமானதாகும். அர்த்த ஜாமப் பூஜைக்குப் பின் நிகழ்கின்ற பள்ளியறைப் பால் வைபவத்தில் பங்கு கொண்டு இறைவனுக்கு வைக்கப்படுகின்ற பாலை அருந்துவோர்க்கு சந்நதி பாக்கியம் நிச்சயமாகக் கிட்டும்.
லட்சமாய்ப் பணத்தை மருத்துவத்தில் கொட்டுவதை விடத் தொடர்ந்து இரவு நேர அர்த்த ஜாமப் பூஜையில் பங்கு பெற்று பள்ளியறைப் பாலை அமிர்தப் பிரசாதமாக உண்டு வந்தால் இறைவனே நல்முறையில் அருள் கூட்டுவான்... உததீ மஹரிஷியின் ஜீவாலய சமாதிக்கு வியாழன், திங்கட்கிழமைகளில் குரு ஹோரை நேரத்தில் மூலிகைக் காப்பிடுதல் மிகவும் விசேஷமானதாகும். மூலிகைகட்குரித்தானவர்கள் தானே சித்புருஷர்கள். அதிலும் உததீ மஹரிஷியானவர் மூலிகைத் தாவரங்களின் தெய்வீக சக்தியுணர்ந்து அவற்றின் சாற்றினை மூலிகா பந்தன முறைப்படி மாத சிவராத்திரி தோறும் அருகிலுள்ள ஆற்றில் கலந்து அதன் பலன்கள் யாவருக்கும் சென்றடையும் வண்ணம் மகத்தான தெய்வீகப் பணியாற்றினார்.
குறிப்பாக மாத சிவராத்திரி தோறும் தக்கோலத்தில் பள்ளியறைப் பால் நைவேதனம், மூலிகைத் தைலக் காப்பு, எலுமிச்சை அன்னதானம், நட்சத்திர பூஜைகளை நடத்தி வருதல் மிகவும் விசேஷமானதாகும்... மது, முறையற்ற காமம், பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்கட்கு அடிமையானோர் வியாழன் தோறும், குருஹோரையில் உததீ சித்புருஷ லிங்க பிரதிஷ்டா மூர்த்தியை வணங்கி அவருடைய ஜீவ சமாதிக்கு அபிஷேக ஆராதனைகளையும் அவர் மிகவும் போற்றிய கீரைகள், மூலிகைகள் கலந்த உணவு பண்டங்களையும் படைத்து ஏழைகட்குத் தானமாக அளித்து வருதலால் எத்தகைய தீயவழக்கங்கட்கும் உததீ மாமுனியின் குருவருளால் தக்க பிராயச்சித்தம் கிட்டுவதோடு அவை அறவே நீங்குவதற்கான நல்வழியும் கிட்டும்.
No comments:
Post a Comment