Friday, September 20, 2019

தேவர்கள் காட்டும் தீபங்கள் !!!


Thank to : Meenakshi Dasan FB

தேவர்கள் காட்டும் தீபங்கள் !!!
தேவரும் மூவரும் போற்றும் மதுரையம்பதியில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் சித்திரை திருவிழா கோலாகலமாக நடக்கவிருக்கிறது !!! உலகமே எதிர்நோக்கும் இத்திருவிழாவினை முன்னிட்டு சிறப்பு பதிவாக பலரும் அறியாத, ஆனால் அதே சமயத்தில் மிகமிக அற்புதமான "அஷ்ட திக்பாலக தீபம்" பற்றி இன்று காண்போம் !!!

மதுரையின் க்ஷேத்ர மஹாத்மியமும், திருவிளையாடல் புராணமும் மதுரைக்கும் தேவர்களுக்கும் உடனான சம்பந்தத்தினைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறது !!! இங்கே வீற்றிருக்கும் சோமசுந்தரப்பெருமானை தேவர்களின் தலைவனான சாக்ஷத் தேவேந்திரனே முதன்முதலில் பூஜித்தான். இதன் ஞாபகமார்த்தமாக இன்றளவும் வருடாவருடம் சித்திரைத்திருவிழா பன்னிரண்டாம் நாள் (சித்திராபௌர்ணமி) அன்று தேவேந்திர பூஜை ஐதீக விழா நடைபெறுகிறது !!! இதனைத்தவிர திருவிளையாடல் புராணத்தில் "கடல் சுவற வேல்விட்ட படலம், இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம், வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம், நான் மாடக்கூடலான படலம்..." போன்ற பல படலங்கள் தேவர்களை சம்பந்தப்படுத்தியதாகவே (கர்வபங்கம் செய்ததாகவே) உள்ளது குறிப்பிடத்தக்கது !!!

மிக முக்கியமாக, உமையன்னை, மாமதுரை மாதரசி, மதுரை மீனாட்சி தன் திருமண வைபவத்தினை முன்னிட்டு எட்டு திசைகளுக்கும் திக்கு விஜயம் செய்தருளினாள் !! ஒவ்வொரு திக்கிலும் இந்திரன், அக்னி, யமன், வருணன் என்று அந்த திக்கிற்கு அதிபதியான தேவருடன் போரிட்டு அவர்களை தலை வணங்க வைத்தாள் !!! இந்நிகழ்வும் சித்திரைத் திருவிழா ஒன்பதாம் நாள் "திக்விஜய" உற்சவமாக நடைபெறுவது யாவரும் அறிந்ததே !!! ஆக நம் மதுரை தெய்வங்களிடம் இந்த்ராதி அஷ்ட திக்பாலகர்களும் தோற்று, அவர்களை கைதொழுகின்றனர் என்பது கண்கூடாகின்றது !!!

நிற்க. மேற்கூறிய அனைத்தும் வெறும் ஏட்டோடு மட்டுமில்லாமல் தினம்தோறும் நடைமுறையில் இருப்பது தான் மதுரையின் சிறப்பு !!! மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு கால பூஜையின்போதும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது போல் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விதவிதமான தீபாராதனைகள் காண்பிக்கப்படுகின்றன !! ஆனால் அர்த்தஜாம பூஜையின் போது மட்டும் ஸ்பெஷல் (special) ஆக 8 கூடுதல் தீபாராதனைகள் காட்டப்படுகின்றன !!! அவைகளே "அஷ்ட திக்பாலக" தீபங்கள் !! இந்திர தீபம், அக்னி தீபம், வருண தீபம் என்று ஒவ்வொரு தீபத்திலும் ஒவ்வொரு திசைக்காவலரும் தத்தமது வாகனத்துடனும் ஆயுதங்களுடனும் கைகூப்பியவாறு வீற்றிருப்பர்(கீழே படங்கள் காண்க) !!!
இவர்களின் தீபத்தில் திரியிட்டு ஏற்றி அன்னைக்கும் சுவாமிக்குமாக காண்பிக்கும்போது அவர்களே வந்து தொழுவதாக ஐதீகம் !!!


அர்த்தஜாம பூஜைத்தவிர சில விசேஷ தினங்களுக்கும் காண்பிக்கப்படும் இத்தீபங்களின் அழகும், அதற்கென உள்ள பிரத்யேக மந்திரங்களின் ஒலியும் அதனை அறிந்து காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் !!! எங்கேயோ வானுலகில் கோட்டைக்கட்டிக்கொண்டு உலாவும் தேவர்கள் ஒவ்வொரு நாளும் தவறாது அத்தனை தூரம் இறங்கி வந்து சுவாமி அம்பாளை தரிசிக்கவருகின்றனர் என்றால், அருகிலேயே இருக்கும் நாமும் தவறாது தினமும் ஆலயம் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வராளை வணங்குவோம் !!! எதிர் வரும் சித்திரை திருவிழாவினை ஆர்வத்துடன் வரவேற்போம் !!!
பின் குறிப்பு : திருவிளையாடல் புராணம், திக்விஜயம், சிலப்பதிகாரம், திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை (அழகர்கோவில்), பாண்டியர்களின் இந்திரஹாரம் போன்றவற்றைகளையும் தேவர்களையும் ஒன்று சேர்த்து பார்க்கும்போது நிச்சயம் ஒரு தனி ஆழ்ந்த ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்பது நிதர்சனம் !!!

மீனலோசனி பாசமோசனி !!!

No comments:

Post a Comment