Wednesday, March 11, 2020

காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

Thank  FB Kala raj



காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

 'காரடையான் நோன்பு'  பெயர்க் காரணம்:


கார்காலத்தில் கிடைக்கும் நெல்லைக் குத்தி, அரிசி எடுத்து, அதில் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் அடையே 'காரடை' எனப்படுகிறது. அக்காலத்தில் தைமாத அறுவடை முடிந்து, வரும் புது நெல்லையே பொங்கலுக்கும் இந்த நோன்பிற்கும் உபயோகப்படுத்துவர். பார்ப்பதற்கு வடை போல இருந்தாலும், இது காரடை எனப்படுகிறது.

இந்த அடையை வைத்து நைவேத்தியம் செய்வதாலேயே இதற்கு 'காரடையான் நோன்பு' எனப் பெயர் வந்தது. கார்காலம் என்றால் 'முதல் பருவம் ' என்றொரு பொருளும் கூறப்படுகிறது. சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும் இந்த நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும்.

இந்த நோன்பின் பயன்:

கணவர் தீர்க்காயுளுடன் வாழவும், மாங்கல்ய பாக்கியம் பெருகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் கிடைக்கவும் இந்த நோன்பை நோற்க வேண்டும்.
சாஸ்திர சம்பிரதாயங்கள் கண்மூடித்தனமானவை அல்ல. அவை மக்களின் நன்மையை முன்னிட்டும், அக்கால வாழ்வியல் முறையைக் கருத்தில் கொண்டுமே ஏற்பட்டவை.சில சம்பிரதாயங்கள் வேண்டுமானால், காலம் மாறிப் போனதால்
மாறிப் போயிருக்கலாம். ஆனால் எல்லாவற்றையுமே அப்படிக் கூறிவிட முடியாது.

இந்திய பண்பாட்டின் சிறப்பே குடும்ப வாழ்க்கை முறைதான்.  திருமணம் என்பது இரு
குடும்பங்களின் இணைப்பு.
உயிரோடு இருப்பவர்கள் மட்டுமல்ல,  இறந்து தெய்வமாக அருளுகிற முன்னோர்களுக்கும் இதில் பங்குண்டு. அதனால் தான், திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை,சுப சாந்தி, மூதாதையர் படைப்பு என்று வழிபாடு செய்கிறோம். இல்லறத்தின் கூறுகளான, தேவகடன் தீர்த்தல், பித்ரு கடன் தீர்த்தல், விருந்தோம்புதல், உறவுகளைப் பேணல், முதலிய யாவற்றையும் நிறைவேற்றுவது, திருமணமான தம்பதிகளின் கடமை. ஒரு ஆணும் பெண்ணும் இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, வாழ்வில் இணைவதை ஊரறியச் செய்யும் நிகழ்ச்சிதான் திருமணம்.

பெண்கள் இரண்டாம் தரப் பிறவிகளென்றும் சம்பிரதாயச் சடங்குகளைச் செய்ய உரிமையற்றவர்களென்றும் நினைப்பது தவறு. மனைவியில்லாமல் ஆணும் எந்தச் சடங்குகளையும் செய்ய இயலாது.அக்னிஹோத்திரத்திலிருந்து ஆரம்பித்து, வேள்விகள் வரை, எந்தச் சடங்கையும் செய்யத் தொடங்கும் போது,  'என் மனைவியைத் துணையாகக் கொண்டு' என்று
பொருள்படும் மந்திரம் சொல்லித்தான் ஆரம்பிக்கவேண்டும்.

திருமணம் செய்த பிறகு, அந்தப் பெண், புகுந்த வீட்டின் ஒரு அங்கம். எக்காரணம் கொண்டும் அவளைக் கைவிடுவது கூடாது. அது, இப்பிறவியிலும், இறப்பிற்குப் பின்னாலும் ஒருவனுக்குத் தீராத துன்பத்தைத்தரும்.
மனுநீதி, கணவனின் புண்ணியத்தில் பாதி, மனைவிக்குக் கிடைக்கும்
என்றும் மனைவியின் பாவத்தில் பாதி,கணவனை அடையும் என்றும் கூறுகிறது.

இயல்பாகவே செய்நேர்த்தி மிகுந்த பெண்களுக்கு, சம்பிரதாயங்களை அனுஷ்டிப்பதும்,பொறுமையாகக் கோபமின்றி விரதமிருப்பதும் பெரிய விஷயமில்லை. ஆகவே குடும்ப நன்மைக்காக விரதமிருப்பது, பெண்களின் கடமையாயிற்று என்பது பெரியோர்கள் கருத்து!.. தன்னில் சரிபாதியான கணவனின் நன்மைக்காக விரதமிருப்பது, நமது நன்மைக்காக விரதமிருப்பது போல்தானே.... இரண்டு கண்களில் ஒன்று நோயுற்றால் மற்றொன்று அழுவது இயல்பு தானே.....

இம்மாதிரி விரதங்கள் கணவன் மனைவி ஒற்றுமையைப் பலப்படுத்தும் சக்தி கொண்டவை. 'நானும் நீயும் வேறு வேறல்ல,ஒன்றுதான்' என்ற மனப்பான்மையே இன்று, பல தம்பதிகளிடம் தேவையாக உள்ளது.இந்த விரதத்தின் முக்கியப் பலனே, கணவன் மனைவி ஒற்றுமை தான்.

விரதம் இருக்கும் நாள்;

மற்ற விரதங்களைப் போல், குறிப்பிட்ட நாள், நட்சத்திரம் என்று இதற்கு எதுவும் இல்லை. மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நேரம் இந்த நோன்பைச் செய்யவேண்டும். சில சமயம், நடு இரவில் கூட இந்த நோன்பு வரும்.

இந்த வருடம், 14‍‍‍‍‍‍‍‍‍‍‍.3.20 அன்று காலை 10.30 மணியிலிருந்து, 11.30 மணிக்குள் இந்த நோன்பைச் செய்யவேண்டும்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள்,குங்குமம், நோன்புச்சரடு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மாவிலை, வாழை இலை, பூ (சரம் மற்றும் உதிரி), கற்பூரம், விளக்கு ஏற்றத் தேவையான பொருட்கள் (திரி, எண்ணெய் முதலியன), மாக்கோல மாவு, சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் தருவதானால், அதற்குத் தேவையான கிஃப்ட்,
ரவிக்கைத்துணி முதலியன.
       
நிவேதனத்திற்கு:

வெல்ல அடை, உப்படை, மற்றும் வெண்ணை.

முதல் நாள் செய்ய வேண்டியது:   

பூஜை அறையைத்துடைத்து, சுத்தம் செய்யவும்
மாக்கோலமிடவும்.
சுவாமி படங்களைத் துடைத்து, சந்தனம் குங்குமம் இடவும்.
கலசம் வைக்கத் தேவையான சொம்பு, மற்றும் பூஜைப் பாத்திரங்களைச் சுத்தம் செய்து, பொட்டு வைக்கவும்.
ஒரு தேங்காயை மஞ்சள் பூசி,குங்குமம் வைத்து, தயார் செய்யவும்.
அடை செய்யத் தேவையான மாவு தயாரித்து, வறுத்து வைக்கலாம் (நேரமிருந்தால்).
தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறில் திருமாங்கல்யம் அணிந்திருந்தால்)மாற்றிக் கொள்ளவேண்டும்.' மாசிக் கயிறு பாசி படரும்'  என்பது நம்பிக்கை.

நோன்பன்று செய்ய வேண்டியது.

அதிகாலையில் எழுந்து, நீராட வேண்டும்.  வீடு,வாசலை மெழுகிக் கோலமிட வேண்டும். வாசலில் மாவிலை கட்டுவது விசேஷம். அவரவர்கள் சம்பிரதாயப்படி உடை அணிந்து, தலையை பின்னி அல்லது முடிந்து கொண்டு, ஒரு கிள்ளுப் பூவை தலையில் வைத்துக் கொண்டு, நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்துக் கொண்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.  நம் இருதய கமலத்தில் தேவி உறைந்திருப்பதால், எந்தப் பூஜையானாலும் நம்மை சரியானபடி அலங்கரித்துக் கொண்டுதான் செய்ய வேண்டும்.                                                                             
சொம்பில் நீர் நிறைத்து, அதில் ஏலக்காய், பன்னீர் போன்ற வாசனைத் திரவியங்கள் சேர்த்து, பின் மாவிலைக் கொத்து, மஞ்சள் பூசிய‌ தேங்காய் வைத்து, ஒரு ரவிக்கைத்துணி சாற்றவும்.
ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, அதில் கலசத்தை வைக்கவும்.
பக்கத்தில் அம்மன் படம் வைக்கவும் (துடைத்து, பொட்டு வைத்து வைக்க வேண்டும்).

இதையே சாவித்திரி அம்மனாகக் கருதி வழிபடலாம். பொதுவாக, காமாக்ஷி அம்மனையே சாவித்ரி அம்மனாக வழிபடும் வழக்கம் இருக்கிறது.
கலசத்திற்கும், படத்திற்கும்,  பூ சாற்றவும்.நோன்புச் சரடில் ஒரு பசு மஞ்சளைத் துளையிட்டுக் கோர்க்கவும். இல்லாவிட்டால், பூ கட்டியும் வைக்கலாம். நோன்புச் சரடை, இரட்டைப்படை எண்ணில் வாங்கவேண்டும். இரண்டு சுமங்கலிகள் இருந்தால், நான்காக வாங்கவும். இரண்டை, கலசம், அம்மன் படத்துக்கு அணிவித்து விட்டு, இரண்டை உபயோகிக்கலாம். சிலர் துளசிச் செடிக்கும் கட்டுவதுண்டு.

பூஜை அறையில் அம்பாளுக்குப் பெரிய கோலமாக ஒன்றும், வீட்டில் சுமங்கலிகள் எண்ணிக்கைக்கேற்ப சிறிய மாக்கோலங்களும் போடவும்.
அம்மனின் கோலத்தில்,ஒரு தட்டில், தேங்காய் (உடைத்தது),வெற்றிலை, பாக்கு, பழம், பூ, அம்மனின் சரடு, முதலியவை வைக்கவும். மற்ற சிறிய கோலங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய நுனி வாழை இலையை வைக்கவும்.

சில வீடுகளில், ஒவ்வொரு இலைக்கும், தனித்தனியாக வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, சரடையும் வைத்து, இலை நுனியில் வைப்பர். இருப்பதில் வயதான சுமங்கலி, தன் இலையில் அம்மனின் சரடையும் சேர்த்து வைத்துக் கொள்வார். இது, அவரவர் வீட்டு வழக்கத்தைப் பொறுத்தது.

வாழை இலையை சிறிதாகக் கிழித்துத் தான்,அடையை வேக வைக்கவேண்டும். இட்டிலிப் பானை அல்லது குக்கரில் சிறிது வைக்கோல் சேர்த்து (கிடைத்தால்) வேக வைப்பது நல்லது. இதன் காரணம், இறந்த சத்தியவான் உடலை வைக்கோலால் மூடி விட்டுத் தான், சாவித்திரி எம தர்ம ராஜனின் பின் சென்றாள்.  வைக்கோல் சத்தியவானைப் பாதுகாத்தது  போல், கணவனை தெய்வ அருள் காக்கும் என்பது நம்பிக்கை.

வேகவைத்த இலையோடு, அடையை எடுத்து (இரண்டு அடைகளாக
இருக்க வேண்டும்),   நிவேதனம் செய்யும் நுனி வாழை இலையில் வைத்து, சிறிது வெண்ணையையும் வைக்கவும். உப்படையை தனியாக ஒரு தட்டில் வைக்கலாம்.

பூஜை செய்யும் வழக்கம் இருந்தால், கலசத்திற்கு பூஜை செய்யவும். மற்றவர்கள் முதலில் ஒரு விநாயகர் துதியைச் சொல்லி, பிறகு, கீழ் வரும் ஸ்லோகத்தை 21 முறை சொல்லவும்.

மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே சதா

இதன் பொருள் :
'மங்கள ஸ்வரூபமாகவும்,
சர்வமங்களங்களுக்கும் ஆதாரமாகவும்,நித்ய மங்களங்களை அருளுபவளாகவும் இருக்கிற ஹே தேவி, எனக்கு, மாங்கல்யம் நிலைக்க அருளுவாய்'. 

பிறகு, கணவனின் நலனுக்காக மனதார வேண்டிக் கொண்டு,   

 'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்து, நோன்பு செய்தேன்.
ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்'

என்று கூறி,நீரைச் சுற்றி அடைகளை நிவேதனம் செய்ய வேண்டும். வெற்றிலை பாக்கையும் நிவேதனம் செய்ய வேண்டும். கற்பூரம் ஏற்றிக் காண்பிக்கவும். பிரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்.

 உதிரிப் பூக்களை சமர்ப்பித்து, தேவியை வேண்டிக் கொண்டபின், வயதில் பெரிய சுமங்கலிகள், அம்மன் படத்துக்குச் சரடு சாற்றிவிட்டு, சிறியவர்களுக்குக் கட்டவும். பிறகு  அவர்கள் தங்களுக்குத் தாங்களே சரடு கட்டிக் கொள்ளலாம்.
சரடு கட்டும் போது, இலைக்கு எதிரில் ஒரு மணை போட்டு, அதில் உட்கார்ந்து கட்டவும். பிறகு சரடுக்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். நெற்றியிலும் இட்டுக் கொள்ள வேண்டும்.

நிவேதனம் செய்ததில் ஓர் அடையை வெண்ணையுடன் வைத்து கணவனுக்குக் கொடுத்து,  நமஸ்கரித்த பின்,  இலையில் உட்கார்ந்து சாப்பிடலாம்.பூஜை முடியும் வரை விளக்கு எரிய வேண்டும். எனவே தகுந்தபடி எண்ணை விடவும்.

மாசி முழுவதும் முடிவதற்குள் நோன்பைச் செய்துவிட வேண்டும்.சாவித்திரி தேவியின் கதையைப் படிப்பது, மிகவும் நல்லது. அன்று, அக்கதையைப் படிப்பவர்களை சாவித்திரி தேவியே நேரில் வந்து ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.எமதர்ம ராஜனும் 'தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என்று ஆசி கூறுவாராம்.

அனைவருக்கும், தேவி சகல சௌபாக்கியங்களும் அருளிடப் பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment