Friday, March 13, 2020

மாரநாடு கோடாங்கி கருப்பசாமிe



மாரநாடு கருப்பசாமி:-

Thank  https://m.facebook.com/story.php?story

மாரநாடு கோடாங்கி

*சற்று நீளமான பதிவு. தவறாமல் படிக்கவும்.*🙏🙏



(250-300 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி
அருகில் உள்ள மாரநாடு கிராமத்தில் நடை​பெற்ற உண்மைச் சம்பவம்)

அரண்மனை அந்தப்புரம். அரசி, இளவரசி, சேடியர் தவிர வேறுயாரும் உள்ளே செல்ல முடியாது. அவ்வளவு பாதுகாப்பு. யாரேனும் உள்ளே
தெரிந்தால் உடனடியாகத் தூக்கிலிட்டுவிடுவார்கள். அவ்வளவு கடுமையான தண்டனை. இராமநாதபுர சமஸ்தானத்தின் இளவரசி பருவமடைந்து அந்தப்புரத்தில் இருந்தாள். அழகு என்றால் அழகு அவ்வளவு அழகு. பார்த்தோரைப் பரவசப்படுத்தும் அழகு. மக்களுக்கு மகாலெட்சுமி போல் காட்சியளிப்பாள்.

இதனால், சமஸ்தான மன்னர்களுக்குள் கடும் போட்டாபோட்டி. அவளை மணந்து கொண்டால், இராமநாதபுர சமஸ்தானத்திற்கு மன்னனாகி விடலாம், வீரமிக்க மன்னனுக்குச் சொந்தமாகிவிடலாம், ஆளுக்கு ஆளும் ஆச்சு, பேருக்குப் பேரும் ஆச்சு, ஊருக்கு ஊரும் ஆச்சு. அதனால், "நான் நீ" என்று போட்டி போட்டுக் கொண்டு, பெண் கேட்டுத் தூது அனுப்பிக் கொண்டிருந்தனர்; அரசனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.

நல்லவனாக, வல்லவனாக ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். பெண்கேட்டுப் போட்டாபோட்டி போட்டதால், அரசனுக்குக் கொஞ்சம் பெருமையும் கூடியது. தன் பெண்ணை எண்ணிப் பூரிப்படைந்திருந்தான்.

ஆனால், விதி வேறுவகையாக வேலை செய்தது! ஒருநாள் மாலை, அமைச்சர்களுடன் ஆலோசனையில் இருந்த அரசனுக்கு, அவசரமாக அந்தப்புரத்தில் இருந்து அழைப்பு வந்தது! என்ன அவசரம் என்று எவருக்கும் தெரியவில்லை. அரசனும் அவசர அரசாங்க ஆலோசனைகளை நிறுத்திவைத்துவிட்டு அந்தப் புரத்திற்கு விரைந்து சென்றான்.

அங்கே அதிர்ச்சி காத்திருந்தது! இளவரசியின் கழுத்தில் இருந்த "அரசமுத்திரை"மாலையைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அந்த மாலை யார் கழுத்தில் உள்ளதோ அவர்களே அந்நாட்டின் இளைய பட்டம் ஆவர், அந்த மாலையைக் கையில் வைத்திருப்போரே   இளவரசியை மணந்து கொள்ளும் அதிகாரம் பெற்றவர் ஆகிவிடுவர்.

கழுத்தில் இருந்த மாலை காணாமல் போனது எப்படி? காணாமல் போனதைக் கண்டுபிடிப்பது எப்படி? மன்னனுக்கு மகளைப் பற்றி ஒரே கவலை. நல்லவனாக வல்லவனாக அமைந்தால், மகளைக் கட்டிக் கொடுப்பதற்குத் தயாராய் இருந்தார். ஆனால், இப்போது நிலைமை வேறு, மாலையை எவன் எடுத்திருந்தாலும், எதுவும் செய்ய முடியாது! பேசாமல் கொள்ளாமல் மாலையை வைத்திருப்பவனுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டியதுதான். வேறு என்ன செய்யமுடியும்!

யார்கையிலாவது கிடைத்து ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால் என்ன செய்வது! அந்தப்புரத்திற்குள் நுழைந்த அந்தக் களவாணி யார்? ஆயிரத்தெட்டு விசாரணைகள். இளவரசிக்குப் பதில் சொல்வதே ஒருபெரும் தொல்லையாய் போய்விட்டது!

"யாரிடமும் நான் மாலையைக் கொடுக்கவும் இல்லை. யாரும் மாலையை எடுக்கவும் இல்லை" என்று எத்தனையோ முறை "இது சத்தியம் சத்தியம்" என்று கூறினாள் !

ஆளே புகமுடியாத அந்தப்புரத்தில் அரசமுத்திரை பதித்த நகை எப்படிக் காணாமல் போனது? அரன்மனையிலேயே களவு நடந்துள்ளதால், மக்களிடம் மரியாதை குறைவதை உணர ஆரம்பித்தான் அரசன். என்ன செய்வதென்று எப்போதும் ஒரே நினைப்பு!. நாடுபோனாலும் போகட்டும், நகரம் போனாலும் போகட்டும், மானம் போய் விடக் கூடாதே! எத்தனைபேர் பெண் கேட்டுத் தூதுஅனுப்பியுள்ளனர். அத்தனைபேர் முகத்திலும் எப்படி இனி நான் விழிப்பேன் என்று மன்னன் இரவு முழுவதும் இதை மட்டுமே எண்ணியிருந்தான். எண்ணி எண்ணி உருக்குலைந்திருந்தான்.


எப்போதும் சரியாய் ஓடுவது காலம் மட்டுமே! விடியற்காலம் வந்துது! அவையைக் கூட்டி ஆலோசனை கேட்டான் அரசன். ஆளாளுக்கு ஆள், ஆயிரத்தெட்டு யோசனை சொன்னார்கள். ஒன்று கூட உருப்படியாய் இல்லை. என்ன செய்வது?  எதுவுமே தெரியவில்லை யாருக்கும்!. அரசன், யோசனைகள் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றாகச் செயல்படுத்த முடிவுசெய்தான் .

அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த அனைவரையும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தனர் அரசு அதிகாரிகள். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. முத்திரைமாலை போன இடத்தை அறியமுடியவில்லை. அதிகாரிகள் விசாரணை விபரங்களை மன்னனிடம் கூறினர். அரசனுக்குத் தாளமுடியாத வருத்தம். மானம் போகிறதே என்று கண் கலங்கினான். என்ன செய்வது? ” முத்திரை மாலை கிடைக்கும்வரை அத்தனை பேரையும் அரண்மனையிலேயே அடைத்து வையுங்கள்! “ என்று உத்தரவு போட்டான்.

அரண்மனையிலிருந்து யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. உள்ளே யிருந்த யாரும் வெளியே வரமுடிய வில்லை. எல்லா இடமும் தேடியாச்சு. அத்தனைபேர் தேடியும் முத்திரைமாலை மட்டும் அகப்படவே இல்லை. என்ன செய்வது? அரண்மனையே ஸ்தம்பித்து. எனவே என்ன ஆலோசனை என்றாலும் ஏற்கத் தயாராக இருந்தான் அரசன். ஆலோசனைக்கு மேல் ஆலோசனை. அதில் ஒன்றுதான் குறிகேட்பது.

குறிசொல்வோர் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தான் அரசன். குறிசொல்வோர் சொன்ன குறியெல்லாம் தவறாகப் போனது; குறி சொன்னது போல் மாலை கிடைக்கவில்லை;  அரசனுக்குக் கோபமான கோபம். அரசுமுத்திரைமாலை கிடைக்காமல் யாரையும் வெளியே விடுவதாக இல்லை.

தவறாகக் குறி சொன்னவர்களையும் சிறையில் அடைத்தான் அரசன். ஒருவர் இருவர் அல்ல, ஒரு ஊருக்கு  இரண்டு மூன்று என்று குறிசொல்வோர்  இருந்தனர். எத்தனை பேர் இருந்து என்ன செய்ய? அரசமுத்திரை மாலை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து குறி சொல்ல முடியவில்லை! அரசனது கோபத்துக்கு அஞ்சி, நாட்டிலிருந்த குறிசொல்வோர் எல்லாம் அண்டைநாடு, அயலார்வீடு என ஓடி ஒளிந்து
கொண்டனர்.

குறிசொல்வோரில் ஒருவன் மட்டுமே துணிந்து அரசன் முன் சென்று நின்றான். "என்ன? சொல்!" என்றான் மன்னன். "எனக்குச் சரியாகச் குறி சொல்லத் தெரியாது! ஆனால் சரியாகக் குறிசொல்பவனைத் தெரியும்; அவன் ஒருவனை மட்டும் அழைத்து வந்தால், தேடும் பொருள் கிடைத்துவிடும்" என்றான்.

குறிசொல்பவன் சொன்ன சொல் மன்னனின் காதில் வீழ்ந்தது. ”நீ சொல்வதுபோல் நடந்து விட்டால், உங்கள் அனைவரையும் விடுதலை செய்து விடுகிறேன்” என்று மன்னன் வாக்களித்தான். மந்திரியை அழைத்தான், "இவன் யாரைச் சொல்கிறானோ, அவனை இங்கே அழைத்து வாருங்கள். இது நமது ஆணை” என்றான் .

” குறி தப்பாமல் சொல்பவன் நாட்டிலேயே ஒருவன்தான் உண்டு; அவன்தான், "மாரநாட்டுக் கோடாங்கி".  அவன் கோடாங்கி எடுத்து அடித்தால்,
கருப்பணசாமி வரும். மாரநாட்டுக் கருப்பணசாமி வந்து சொல்லும்" என்றனர் அறிந்தவர் அனைவரும். அரசு அதிகாரிகள் விரைந்தனர், மாரநாடு
கிராமத்திற்கு. இராமநாதபுரத்திலிருந்து, பரமக்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி வந்து மாரநாடு கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஊரின் உள்ளே நுழையும் முன்பு, முகப்பு வாயிலிலேயே, கண்மாய்க்கரை ஓரமாகக் கருப்பணசாமி கோயில் இருந்தது. கோயில் உள்ளே சென்று கருப்பணசாமியைக் கும்பிட்டனர். கருவறையில் சிலையோ, படங்களோ எதுவும் இல்லை, வெருமெனே இருந்தது, கருவறை முன் மண்டபத்தில் சூலம் மட்டும் நடப்பட்டிருந்தது. அந்தச் சூலத்தையே கருப்பணசாமி என மக்கள் வணங்கி வருகின்றனர், கருப்பண சாமி வழிபாடு முடிந்ததும், கோயில் பூசரியிடம், "கோடாங்கியைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்றனர்.

இப்படி மண்டபத்தில் உட்காருங்கள் என்று சொல்லி பிரசாதத் தட்டை கோயில் கருவறையில் வைத்து விட்டு அங்கே வந்து பூசாரியும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

சொல்லுங்கள், "மாரநாடு கோயில் பூசாரிதான் மாரநாடுகோடங்கி ஆவான்". நான்தான் அந்தக் கோடாங்கி, உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் கோடாங்கி. வந்தர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஆஜாகுபான உடம்பைத் தேடிவந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. ஒல்லியான ஒருவ​ரைக் கோடங்கியாகப் பார்த்தவுடன் அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்,கோடாங்கி, நாங்கள் வந்த நோக்கம், என்ன என்றால், "நீங்கள் இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து குறி சொல்ல வேண்டும்", இது அரச உத்தவரவு என்றனர்.

"நான் குறி சொல்வது இல்லை, இந்தக் கருப்பணசாமிதான் வந்து குறி சொல்லுவான், உங்களுக்கு யார் வேண்டும்?" என்று கேட்டார் கோடாங்கி.
”எங்களுக்குக் குறி சொல்ல வேண்டும், கருப்பணசாமிதான் குறிசொல்லும் என்றால், சாமியைத்தான் அழைத்துச் செல்ல வேண்டும்” என்றனர்.

”கருப்பணசாமி வருவது என்றால், சும்மாவா? ஒட்டு மச்சம்கூட இல்லாத வெள்ளைக்குதிரையில்தான் கருப்பணசாமி வருவார். முடிந்தால் அந்தமாதிரிக் குதிரையுடன் வாருங்கள். அல்லது வரும் மாசிமாதம் மகாசிவராத்தி அன்றுதான் திருவிழாபற்றிப் பேசி முடிவு செய்வார்கள்.பங்குனிமாதம் திருவிழா நடைபெறும், சாமிபுறப்பாடு இருக்கும், அப்போது வந்து குறி கேளுங்கள்” என்று கூறிமுடித்தார்.

கோடாங்கி சொன்னது எல்லாம் சொல்மாறாமல் இராமநாதபுர மன்னனிடம் கூறப்பட்டன. மானம் போகிற பிரச்சனை ஆயிற்றே. எனவே ”உடனடியாகக் கோடாங்கி கூறியது போல் குதிரை ஒன்றை அனுப்பி வைத்து அழைத்து வாருங்கள்” என்று சொன்னான். அனைவரும் தயங்கி நின்றனர். மன்னனுக்குக் கோபமான கோபம் வந்தது! "ஏன் நிற்கின்றீர்கள் ” என எரிந்து விழுந்தான் மன்னன்.

மந்திரி, தயங்கித் தயங்கி மன்னன் அருகில் சென்று, "மன்னா! கோடாங்கி சொல்லியபடி, ஒட்டுமச்சம்கூட இல்லாமல் வெள்ளைவேளேர் குதிரை ஒன்றே ஒன்றுதான் உள்ளது, அதுதான் ஒரே யோசனை" என்றான். ”ஒன்று இருக்கிறதல்லவா? அந்தக் குதிரையைக் கூட்டிச் செல்வதற்கு ஏன் இத்தனை தயக்கம்?” என்று மன்னன் கேட்டான்.  “அது பட்டத்துக் குதிரை மன்னா! பட்டத்துக் குதிரையில் யார் ஏறி வருகிறாரோ அவரே அந் நாட்டின் மன்னன் ஆவான், பட்டத்துக் குதிரையில் கோடாங்கி ஏறியவுடன், ஏடாகூடமாக ஏதாவது செய்தால், என்ன செய்வது? ஒரே நாளில் ஓராயிரம் கட்டளைகளைப் பிறப்பித்தால் என்ன செய்வது? பட்டத்துக் குதிரையைத் தவிர்த்து, மற்றொரு குதிரைக்கு எங்கே போவது! மற்றொரு குதிரை வாங்கிவரும் வரை காத்திருக்க முடியாதே!” என விடை கிடைத்தது.

இருக்கும் மானத்தைக் காத்தாக வேண்டுமே! என்ன விலையும் கொடுக்கத் தயாராய் இருந்தான் மன்னன், மன்னனுக்குப் பட்டத்துக் குதிரையை அனுப்பிவைப்பதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை, மன்னன் பட்டத்துக் குதிரையை மாரநாட்டிற்கு அனுப்பி வைத்தான், மாரநாடு கருப்பணசாமி கோயில் பூசாரியான கோடாங்கி, வந்திருந்த பட்டத்துக் குதிரைக்கு மாலை அணிவித்தான், மரியாதை செய்தான்.   உடுக்கையையும் விபூதிப் பையையும் எடுத்துக் கொண்டான், கோயிலை வலம் வந்தான், கருப்பணசாமியை வணங்கினான்.

அனைவரும் மாரநாட்டிலிருந்து இராமநாதபுரத்திற்குச் சொல்லத் தயாராய் இருந்தனர்; ஆனால் கோடாங்கி குதிரையில் ஏறவில்லை!
மந்திரி, கோடாங்கியிடம் சென்று, "குதிரையில் ஏறவில்லையே"? என்று கேட்டான்! ”பட்டத்துக் குதிரையில் கருப்பணசாமிதான் ஏறி வரும். நான்
சாமிகூட ஓடியே வந்துவிடுவேன் என்றான் கோடாங்கி. மற்றொரு குதிரையை ஏற்பாடு செய்கிறேன், அதில் ஏறி வாருங்கள் என்றான் மந்திரி. கோடாங்கி மறுத்துவிட்டான். சாமி பாதத்துக்கு மேலே நான்  இருக்கக்கூடாது. எனவே நான் இப்படியே சாமிகூட ஓடியே வந்து விடுவேன்” என்றான்.

மந்திரிக்கு, பட்டத்துக்குதிரையில் ஒரு மனிதன் ஏறிவராமல்  தெய்வம் ஏறிவருவது பெருமையாய் இருந்தது. தான் நினைத்தபடி ஏதுவும் ஏடாகூடமாக நடக்க வாய்ப்பு இல்லை என்பதையும் எண்ணி மனநிறைவடைந்தான் மந்திரி.

பட்டத்துக்குதிரை, கோடாங்கி போட்டுவிட்ட மாலையுடன் முன்னே சென்றது. பட்டத்துக் குதி​ரையுடன் கோடாங்கியும் ஒன்றாக ஓடத் துவங்கினான். மந்திரியும் மற்றோரும் அவரவர் குதிரையில் ஏறிப் புறப்பட்டனர். மாரநாடு ஊரே ஒன்றாக இணைந்து ஓடத் துவங்கியது. வழி​நெடுக, அலையலையாய் மக்கள் கூட்டம்,

வழியெல்லாம் தண்ணீர் தெளித்து, பாதைஎங்கும் மாக்கோலம் போட்டுத் தோரணம் கட்டி, கொம்பு ஊதி வரவேற்பு செய்தனர் மக்கள். தெய்வத்திற்கும் அரசனுக்கும் செய்யும் மரியாதை அத்தனையும் செய்து, பட்டத்துக்குதிரையுடன் ஓடிவரும் கோடாங்கியுடன் ஒன்றாய் சேர்ந்து ஓடத் துவங்கினர் மக்கள்.

மாரநாட்டிலிருந்து கிளம்பி, திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி வழியாக இராமநாதபுரம் அரண்மனை வந்தது சேர்ந்தது பட்டத்துக் குதிரை.

குதிரையின் பின் நாடே ஒன்று திரண்டு ஓடி வந்து சேர்ந்தது ஏறத்தாழ எழுபதுகல் தூரம், மாரநாடு கோயிலில் துவங்கிய ஓட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாயிலில் வந்துதான் நின்றது,

அரண்மனை வாயிலுக்கு வந்து வரவேற்றான் மன்னன், உள்ளே சென்ற கோடாங்கி மன்னனிடம், சாணம் கரைத்துத் தெளித்து அதில் மாக்கோலம் போட்டு​வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். கோடாங்கி மாக்கோலத்தின் நடுவே உட்கார்ந்து கொண்டான். மன்னனும் சிம்மாசனத்திலிருந்து கீழே இறங்கிக் கோடாங்கி எதிரே, அவனுக்குச் சமமாக உட்கார்ந்து கொண்டான்,

உடுக்கையை எடுத்து அடித்து கருப்பணசாமியை வரவழைத்தான் கோடாங்கி, "என்னை எதுக்கு இங்கே அழைக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? " என்று மன்னனிடம் கேட்டது கருப்பணசாமி,

"சாமி, மன்னனான எனக்கு ஒரு மானப்பிரச்சனை, பிரச்சனைக்கு உரிய பொருள் எங்கே இருக்கிறது என்று கண்டறிய முடியவில்லை" அதனால் குறி சொல்ல வேண்டும் என்றான் மன்னன். "மன்னன் கேட்டால், மறுக்கக்கூடாது! உன்னைக் காத்து அருளுவோம், இரண்டு குறிக்குமேல் கேட்கக் கூடாது!, கேள், சொல்கிறேன்" என்றது கருப்பணசாமி,

"வந்திருப்பது கருப்பணசாமிதான் என்று எப்படி இந்த மன்னனும் இங்குள்ள மக்களும் நம்புவது?" என்று கேட்டான் மன்னன்,

"முதற்குறி கேட்டுள்ளாய், கருப்பணன் வந்த குதிரையில் மற்றொருவன்
ஏறக்கூடாது, எனவே நான் வந்த வெள்ளைக்குதிரை நின்றபடியே இறந்திருக்கும் பார்" என்றது கருப்பணசாமி,

எல்லோரும் ஒடிச் சென்று பார்த்தனர். மன்னன் முன்வந்து, நின்ற குதிரையைத் தொட்டுப் பார்த்தான், அவ்வளவுதான் சடமாய் நின்ற குதிரை செத்துப் பிணமாய் விழுந்தது,

பட்டத்துக்குதிரை பரிதாபமாய் இறந்துகிடப்பது கண்டு மன்னன் உள்ளம்
பதைபதைத்தது! இருப்பினும் கருப்பணசாமியே அரண்மனைக்கு வந்து குறி சொல்லிக் கொண்டிருப்பதை நினைத்துப் பெருமை கொண்டான் மன்னன்,

ஓடோடி உள்ளே சென்றான், கருப்பணசாமியின் காலில் விழுந்து வணங்கினான், "சாமி என்பிழையைப் பொருத்தருள வேண்டும், மனிதன் ஒருவன் கோடங்கியுடன் வந்து குறி சொல்வதாகத் தவறாக நினைத்துவிட்டேன். குறிசொல்வது மாரநாடு கருப்பணசாமி என்று அறியாமல் நான் செய்த பிழையைப் பொருத்தருள வேண்டும்" என்று கருப்பணசாமியிடம் வேண்டிக் கொண்டான்,

"என்மகள் கழுத்தில் அணிந்திருந்த அரசமுத்திரைமாலையைக் காணவில்லை?",
"கருப்பணசாமி தான் எங்களைக் காத்தருள வேண்டும்" என்றான் மன்னன்.

"இரண்டாவது குறி கேட்கிறாய், மன்னனே, காணாமல் போன அரசமுத்திரைமாலை, அரண்மனை அந்தப்புரத்தில் இளவரசி குளிக்கும் அறையில் தண்ணீர் வெளியேறும் தூம்பின் உள்ளே கிடக்கிறது, போய் எடுத்து வரச் சொல்" என்றது கருப்பணசாமி,

மன்னனும் "எடுத்துவாருங்கள்" எனக் கட்டளை இட்டான்,

அவ்வளவுதான், மன்னன் இட்ட கட்டளையை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்,

கோடாங்கியையும் மன்னனையும் தவிரக் கூடியிருந்தோர் அனைவரும் அரண்மனை அந்தப்புரம் நோக்கி ஒடினர். மன்னன் மட்டும் கருப்பணசாமியின் அருகிலேயே நின்றான், கருப்பணசாமியின் காலில் விழுந்து விபூதி பிராசதம் பெற்றுக் கொண்டான், ஓடிய மக்கள்கூட்டம் அரண்மனை அந்தப்புரம் என்பதை எல்லாம் உள்ளே சென்று தேடிப்பார்த்தது. தூம்பாக்குழியைத் தோண்டியே எடுத்துவிட்டது,

உள்ளேகிடந்த அரசமுத்திரைமாலையை அப்படியே கையில் அள்ளி எடுத்துவந்தார் மந்திரி. மந்திரியும் மக்களும் கருப்பணசாமி காலில் கும்பிட்டுவிழ முற்பட்டனர்.

கோடாங்கி அவர்களைக் கும்பிட்டு விழாமல் தடுத்துவிட்டான். "மன்னனுக்குப் பிரசாதம் கொடுத்துவிட்டு கருப்பணசாமி மலையேறிப்
போய்விட்டது, என் காலில் நீங்கள் யாரும் விழுந்து கும்பிடக்கூடாது" என்றான் கோடாங்கி.

மன்னனின் மானம் மட்டுமன்று; நாட்டு மக்களின்மானமும் காக்கப்பட்டுள்ளது. காத்தவன் அந்த மாரநாடு கருப்பணசாமி என்றான் கோடாங்கி.

"எங்கள் மானத்தைக் காத்த, கருப்பணசாமிக்கு நாங்கள் எல்லாம் அடிமை" என்றனர் மன்னனும் மக்களும். தங்கக்காசுகள் உட்பட, தாம்பாலம் தாம்பலமாய் பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து மன்னன் கையில் கொடுத்தனர் அரண்மனை அலுவலர்கள், மன்னன், அவற்றை அப்படியே வாங்கிக் கோடாங்கி கையில் கொடுக்க முயன்றான்,

ஆனால், கோடாங்கி அவற்றைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை, "மானம் காத்த கருப்பணசாமிக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யுங்கள்" என்றான். "நான் உண்பது நாழி உடுப்பது இரண்டு" என்றான். அப்படியே செய்வதாக வாக்களித்தான் மன்னன்,

சிறை​வைக்கப்பட்டிருந்த அரண்மனை அந்தப்புறத்தில் பணியாற்றி​யோர் மற்றும் குறி​சொன்ன அனைவரும் விடுவிக்கப்பட்டனர், அவரவர் செய்து வந்த தொழிலை அப்படியே தொடர்ந்து செய்துவருமாறு மன்னன் ஆணையிட்டான்,

சமபந்தி போஜனத்திற்கு ஏற்பாடு செய்தான். மன்னனும், கோடாங்கியும் மந்திரியும் மக்களும் ஒன்றாய் உட்கார்ந்து உணவருந்தினர். கோடாங்கிக்கு ஒரு வேட்டியும் துண்டும் பரிசாகக் கொடுத்தான் மன்னன்,

இதுநடந்து இருநூற்றைம்பது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இருந்தாலும், இன்றும் ஒருகுறையும் இல்லாமல், மரபு மாறாமல் செய்து வருகின்றனர் மன்னர் குடும்பத்தினர்.

பங்குனித் திருவிழாவில் கருப்பணசாமி புறப்பாடு ஆரம்பித்தவுடன், முதல் மரியாதையாகக் கருப்பணசாமிக்கு இராமநாதபுரஅரண்மனை மாலை அணிவிக்கப்படுகிறது. அரண்மனை மாலையைத் தொடர்ந்து மக்கள்அனைவரும் சாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் உய்வடைகின்றனர்,

இரவு முழுவதும் கருப்பணசாமி ஆட்டம், மாலை என்றால் மாலை, மலைபோல் குமிந்து விழும், அதை அப்படியே குவித்து வைத்திருப்பர். இரவு முடிந்து சூரியன் உதிப்பதற்கு முன் கருப்பணசாமி ஆடிக் குறிசொல்லி முடித்துவிடும். விடிந்தால், சாமியும் இருக்காது. மலைபோல் குவிந்த மாலையும் இருக்காது !

கருப்பணசாமி கோயிலுக்குள் சென்ற மறுவினாடியே அத்தனை மாலையையும் அவரவர் பிரசாதமாக எண்ணிப் பக்தர்கள் எடுத்துச் சென்று விடுவர்,  குறிகேட்க விழைவோர் எல்லாம் வந்து சாமிக்கு மாலையணிவித்து, மரியாதை செய்து, வேண்டிய குறி கேட்டு உய்யலாம்.

இத்த உண்மைக் கதையைக் படித்தோரும், படித்ததைப் பிறருக்குச் சொன்னோரும், அதைக் கேட்டோரும் மாரநாடு கருப்பணசாமியின் திருவருளாள் இன்னல்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர்.

நன்றி:-  ஆன்மீக களஞ்சியம் முகநூல்

Thank  other link
Tamil. Paratillipi. Com

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete