Monday, November 22, 2021

நீலகண்ட சமுத்திரம்

• புது மண்டபம் கட்டியபோது நடந்ததாக கூறப்படும் மற்றொரு செவி வழிச்செய்தியாக ஓர் கதை உள்ளது. அது பின்வருமாறு:-நன்றிகள் புதுமண்டபம் பற்றிய கட்டுரை எழுதிய அன்புடன்  ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம் E.P.I. இராம சுப்பிரமணியன் அவர்கள் பதிவு செய்த தகவலையும்   படமும் அவருக்கு நன்றிகள் கூறி பதிவு செய்துள்ளேன் )

சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையும் தமது துணைவியார் சிலைகளையும் வடிக்க நிவந்தமளித்து அவற்றையும் கோவில்களில் நிறுவது வழக்கம். [நாயக்கர் தம் மனைவிகளுடன் இருப்பது போன்ற சிலையை திருப்பரங்குன்றம், அழகர்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார் வளாகம் போன்ற திருத்தலங்களிலும் காணலாம்.] இவ்வாறாக புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க திருமலை மன்னர் உத்தரவிடுகிறார் .  அரச உத்தரவுக் கேற்ப, தலைமை சிற்பி சுமந்திர மூர்த்தி தானே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் இடது முழங்காலுக்கு 
மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது.

அரசரது கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என்று மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். அப்போது அங்கே மேற்பார்வையிட வந்த அரசனது பிரதம மந்திரி நீலகண்ட தீக்ஷதர் [இவரே அப்பய்ய தீக்ஷதரது தம்பி மகன்] சிற்பியின் கவலையை அறிந்து கொண்டு சற்று உள்ளார்ந்து இருந்துவிட்டு, பின்னர் அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார். 
அரசர் சிலைகளைப் பார்வையிட வருகையில் அரசியின் சிலை பற்றி 'நீலகண்ட தீட்க்ஷிதர்' சொன்ன கருத்து அரசரிடம் சொல்லப்படுகிறது. பிரதம மந்திரிக்கு அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு அழைத்துவர உத்தரவிடுகிறார்.
சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, பூஜையில் இறைவனுக்கு காண்பிக்கப்பட்ட கர்ப்பூர ஆரத்தியின் உதவியால் தன் கண்களை தாமே அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களிடம், அரசர் தர இருந்த தண்டனையை தாமே விதித்துக் கொண்டுவிட்டது பற்றி அரசருக்குத் தெரிவித்துவிடச் சொல்லுகிறார்..
தர்பாருக்குத் திரும்பிய சேவகர்கள் நீலகண்டரது செயலையும், செய்தியையும் மன்னரிடம் கூறுகின்றனர். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக மன்னனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட திருமலை மன்னர், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறார். தனது தவறை நினைத்து வருந்திய மன்னர், நீலகண்டரைத் கண்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டு, அவரது கண் பார்வை திரும்ப என்ன செய்வதென்று வினவுகிறார். அப்போது நீலகண்ட தீட்க்ஷிதர் அன்னை மீனாக்ஷியை வணங்கிப் பாடியதுதான் 'ஆனந்தஸாகர ஸ்தவம்' இந்த ஸ்லோகங்களைப் பாடி முடித்ததும் நீலகண்டரது கண்பார்வை திரும்பியதாகச் சொல்லப் படுகிறது.

  பின்னர் அரச சேவையை உதறித்தள்ளிவிட்டு திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையிலுள்ள 'பாலாமடை' கிராமத்தில் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்தார். (அவருடைய சமாதியும் அவ்வூரில் இருக்கிறது. )
திருமலை மன்னன்  நீலகண்ட தீக்ஷிதருக்கு மான்யமாக பாலாமடை கிராமத்தை அளித்தார். நாயக்க அரசின் ஆவணங்களில் பாலாமடை கிராமம் "நீலகண்ட சமுத்திரம்" என்றும் வழங்கப்படுகிறது. (See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244).
அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்

No comments:

Post a Comment