Wednesday, January 18, 2023

பிள்ளையாரை பற்றி தெரிந்த கதையும் தெரியாத உண்மையும்

.பிள்ளையாரை பற்றி தெரிந்த கதையும் தெரியாத உண்மையும்.. 
"சிவமகா"புராணத்தில் உள்ள கதை
நமக்கு எல்லோருக்கும் தெரியும் அதாவது
முற்காலத்தில் யானை முகம் கொண்ட "கஜாசுரன்" என்ற அசுரன், சிவபெருமானை நோக்கிப் பல வருடங்களாகக் கடுந்தவம் புரிந்தானாம்.
அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார்.

அதற்கு
"கஜாசுரன்",
தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப்பெருக்கிறான்.
இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி,
தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கேட்கிறார்.

பிறகு விஷ்ணு
மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வருகின்றனர்.
நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த "கஜாசுரன்",
அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான்.
அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார்.

கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்து,
அவன் மீண்டும் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.
அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான்,
"கஜாசுரனின்" யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார்.

மேலும்
சிவபெருமான் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார்.
பிறகுச் சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார்.

சிவபெருமான் கயிலாயம்
வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி,
அவரை வரவேற்கும் முன்பு
தயாராக நினைத்தார்.
ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை.
எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார்.
அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார்.

மேலும் தான் தயாராகி
வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான்.
பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார்.

பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி,
பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார்.
அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக்கொண்டார். அதற்குப் பார்வதி,
விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார்.
அதன்படி சிவகணங்கள் "கஜாசுரனின்" தலையுடன் திரும்பி வந்தனர்.

அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர்.
பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான்,
அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்ற பெயரை வழங்கினார்'ரென்று அந்த புராணம் கூறுகின்றது.

சரி இது கட்டுக்கதை அல்ல இதெல்லாம் உண்மையேன்றே வைத்துக்கொள்வோம்,
அடுத்து கவனியுங்கள்.

பண்டைக்கால இலக்கியங்களில் பிள்ளையார் சொல்லே காணவில்லை,
இது மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பிள்ளையார் வணக்கம்
(உடலின் ஆதார சக்கரங்களான ஏழு சக்கரங்களின் மூலாதரத்தை பற்றி பேசும் விநாயகர் அகவல்)
தமிழ் நாட்டில் தொடங்கியது.

வட நாட்டில் பல பகுதிகளில் பாமர மக்கள் விக்கினேசுவரர் என்ற பெயரில்,
அவரை வணங்கி வந்தார்கள்.
வட நாட்டவர்களின் பார்வையில் ஆரம்ப காலத்தில்
மனித முயற்சிகளுக்கு,
கேடு விளைவிக்கும் ஒரு தெய்வமாகத்தான் அவர் கருதப்பட்டார்.

மக்கள் தமக்குக் கேடு வராமல், இருத்தற் பொருட்டு அவரைத் திருப்திப்படுத்த விரும்பினார்கள். பிற்காலத்தில்,
பாமரர் தெய்வங்கள் வேதக் கடவுளரோடு தொடர்பு படுத்தப்பட்டபொழுது விக்கினேசுவரர் சிவனின் மகனாகவும்,
இடையூறுகளை நீக்கும் வல்லமை படைத்தவராகவும் மாறிவிட்டார்.

வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்ட போதிலும், அவரைச் சந்திகளிலும், குளக்கரைகளிலும்,
வாய்க்கால் கரைகளிலும், அரசமரத்தடியிலுமே காணலாம்.

வங்காளதேசத்தில் இன்னும் உழத்தியரது அபிமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார்.
உழவுத் தொழிலின் பல செயல்களிலும்,
அவர் தொடர்பு பெறுகிறார். செழிப்பின் உருவமாக விளங்குகிறார்.
ஒவ்வொரு ஆண்டும்
ஆவணி மாதம் வரும் விநாயகச் சதுர்த்தசியன்று பூமி மழையின் வரவால் கருக்கொள்ளுமாறு செய்வதற்காக,
விநாயகரை வேண்டி பெண்கள் தங்களின் வீடுகளிலே களிமண் பொம்மை வைத்து விரதம் இருக்கிறார்கள்.

பொதுவாக,
செழிப்பைக் குறிக்கும் தெய்வம் மஹாலட்சுமி,பச்சையம்மாள், போன்ற பெண் தெய்வமாக இருக்கும்.
கொஞ்சம் ஆழ சிந்தியுங்கள்,
பல புராதன நாகரிக வரலாறுகளிலும் தேவியரே,
செழிப்பு, வளப்பம், இனப்பெருக்கம், செல்வவளம் இவற்றின் அதி தேவதைகளாகக் கருதப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆனால், செழிப்பளிக்கும் சக்தியுடையவராக பிள்ளையார் ஒருவரே ஆண் தெய்வமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பது நமக்கு வியப்பளிக்கிறது.

ஆனால்,
பெண்ணுருவமான விநாயகர் கற்சிலைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த 
பெண் வடிவிலான விநாயகரை விநாயகி,
கணேசினி,
விக்னேஸ்வரி,
கஜனானி இப்படி பல பெயர்களில் வழிபடுகிறார்கள்.
நம்முடைய முன்னோர்கள் விநாயகரை பெண் தெய்வமாக வழிபட்டுள்ளார்கள்.

இதற்கு ஆதாரமாக தமிழ்நாட்டில் பல கோவில்களில் விநாயகரின் பெண் உருவம் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்படி பெண் உருவில் உள்ள விநாயகி சிலைகள் எங்கெங்கு உள்ளதுதோற்ற காலத்தில் இத் தெய்வம் பெண்ணாகவே இருந்ததென்று கொள்ளலாம். ஆனால்,
முடிவாகச் சொல்லிவிடப் போதிய சான்றுகள் இல்லை.

பண்டைய தமிழ்நாட்டு உழவர்கள் பிள்ளையார் ஏர்ச்சாலிலும்,
மண்ணும் கலந்தக் கூட்டத்திலே பிறந்தார் என்று கருதினார்கள்.

இதனோடு சீதை பிறந்த கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம், உழவுக்காலுக்கும்,
மண்ணிற்கும் பிறந்த பிள்ளையாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
தாங்கள் படைத்த பண்டங்களை முதலில் அவருக்குப் படைத்து அருள் வேண்டுகிறார்கள்.
பாமரர் பார்வையில் பிள்ளையார் உழைப்பவருக்கு உதவி செய்யும் தெய்வம்.
இத்தெய்வத்தை ஒவ்வொரு செயலிலும், தொடர்புபடுத்தி அவர்கள் வணங்குகிறார்கள்.

பண்டைய (உழவர்களின்)தமிழரின் பிள்ளையாரின்
ஒரு பாடலை காணுங்கள்.

"பிள்ளையார் பிறந்தார்
வடக்கே தெற்கே ஒட்டி,
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!

முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு,

ஒடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு,
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு,
இத்தனையும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!

வட்டார வழக்கில்,
முச்சாணி புழுதி = சாணம் + புழுதி, ஒடு
முத்தும் - ஒடு முற்றிய: கொடுக்கறமாம் - கொடுக்கிறோம்.

குறிப்பாக
தமிழர்களின் பார்வையில் 
பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையர்கள் யார் என்று சொல்லப்படவில்லை.
விநாயகர் சிவகுமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை.
உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார்.
இது தமிழ்நாட்டார் நம்பிக்கை.
முதல் விளைச்சலை பிள்ளையாருக்குக் கொடுக்கிறார்கள்

ஆகவே விவசாய செழிப்புக்கான கடவுளாக பண்டைய தமிழர்கள் பார்த்தர்களே தவிர
ஆரிய வேத கடவுளாக பார்த்ததில்லை
அவர்களுக்கு "சிவமகா" வேத புராணங்களும் சிவன் பார்வதி மைந்தன் என்ற இடைச்சொறுகள் கதைகளையும் அறிந்திருக்க சற்றும் வாய்ப்பில்லை.
நன்றி.

No comments:

Post a Comment