விதவை பெண்களுக்கு சனாதனம் அளித்து இருந்த மிக மிக உயரிய இடம் பற்றிய எனது இனிய நண்பர் - அனீஸ் கிருஷ்ணன் நாயர் - (இவர் மலையாள நாயர் குடியை சேர்ந்தவர் ஆக பிறந்து இருப்பினும் - இவரது ஆழ்ந்த சாஸ்திர புலமையை கண்டு - வட மொழி அறியாத நான் சொன்னால் அபத்தம் - என்னிடம் சிரித்து கொண்டே சொன்னவர் - வியாசராஜா மட பீடாதிபதியும் - திருப்தி வேத பாடசாலை தலைவராகவும் பல பெரிய வேத பீடங்களை அலங்கரித்த - ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யா ஸ்ரீஷ தீர்த்த சுவாமிஜிகள் - நாங்கள் இருவரும் அவரின் ஸ்ரீரங்க விஜயத்தில் பேசும் பொது - வியந்து இவ்வளவு சாஸ்திர விற்பன்னரை கண்டது மகிழ்ச்சி என்று என்னிடம் சொன்னார் !!!
====================================
விதவைகள் பற்றி காஞ்சி சங்கராச்சாரியா - பெரியவர் சொன்ன பற்றிய செய்தி - அதற்கு மறுப்பு என்கிற விசயத்தை பற்றிய பதிவு இது - சங்கர மட விஸ்வாசிகள் கூட இவ்வளவு தெளிவாக எழுத முடியாது - படித்து பாருங்கள்
==================
மத்யமர் குழுவில் கு.பி (மகளிர் பிரிவு) மஹாபெரியவரை திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தனர் .
பெரியவர் சிலையை ஆகமக் கோவில்களில் வைக்கக் கூடாது என்று நான் சொல்லும் போதெல்லாம் வந்து தகராறு செய்யும் " பெரியவர் விசுவாசிகள்" கும்பலைச்சார்ந்த எவனாவது விளக்கம் எழுதுவான் என்று பார்த்தேன் .ப்ச் . அவர்கள் என்ன நம்மைப் போல வெட்டியாக வா இருக்கிறார்கள் ? பெண்டாட்டியையும் பெண்பிள்ளையும் வேலைக்கு அனுப்பி திரட்டிய பணத்தில் தண்ணியடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது ஏதாவது நிறுவனத்தில் வாடிக்கையாளர் கணக்கில் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள் .
தேவ்ராஜ் அமெரிக்காவிலோ மயிலாப்பூரிலோ லோஷன் தடவி முகத்தை பராமரித்துவிட்டு, நாளை அமாவாசை என்பதால் இன்று இரவே முகத்தை மொழுங்க சிரைத்து விட்டு நிம்மதியாக கண்ணயர்ந்திருப்பார் .
ஆகவே வேறு வழியே இல்லாததால் நானே பதில் எழுதினேன் .
//
மஹா பெரியவர் என்று அழைக்கப்படும் காஞ்சி மடாதீசர் சந்திரசேகர சரஸ்வதி குறித்து ஒரு பதிவை ஒரு உறுப்பினர் எழுதியிருந்தார் .மஹா பெரியவர் சகேசி விதவைகளை பார்க்க மாட்டார் என்பதை அடிப்படையாகக் கொண்ட பதிவு (இதைக்கூட தெளிவாக புரிந்து கொள்ளாமல் அவர் விதவைகளையே பார்க்க மாட்டார். ஏன் என்றால் விதவைகள் அமங்கலிகள் ; விதவைகளுக்கு மன சஞ்சலம் வரும் .அவர் அம்பாள் உபாசகர் என்பதால் .....என்று ஏகப்பட்ட விளக்கங்கள்) .
குருவின் தேவை குறித்து பலரும் எழுதியிருந்த பதிவுகளுக்கு எதிராக இப்பதிவு வந்தது என்று எண்ணுகிறேன் . இது தொடர்பாக சில விளக்கங்களை சொல்லலாம் என்று எண்ணுகிறேன் .
அ) வைதவ்ய தீக்ஷை என்பது துறவறத்திற்கு சமமமானது .துறவிகளின் வாழ்வும் வைதவ்ய தீக்ஷை எடுத்துக் கொண்டவர்களது வாழ்வும் ஏறத்தாழ ஒன்று தான் .தினசரி மூன்று / இரண்டு அல்லது குறைந்த பட்சம் ஒருமுறையாவது முழுமையான குளியல் . ஜபம் ; சூரியாஸ்தமனத்திற்கு பிறகு உணவு உண்பதில்லை என்ற நியமம்
ஆ) 30/40 வருடங்களுக்கு முன்பு வரை துறவியும் விதவையும் ஒரு வகையான காவி + சிவப்பு கலந்த உடையைத்தான் அணிந்து வந்தார்கள் .வெள்ளை ஆடை வாங்கி அதில் 10/20 நாட்களுக்கு ஒரு முறை காஷாயம் முக்கி அணிந்து கொள்வார்கள் .இப்போது பல துறவிகள் ஆயத்த காவி வேஷ்டிகளை பயன்படுத்துகிறார்கள்
இ) பிராமணனுக்கு பிரதானம் சிகையும் பூணூலும் . ராமானுஜ வைணவம் தவிர்த்து ஏனைய மரபுகளில் துறவறத்தின் போது சிகையும் பூணூலும் நீக்கப்டும் .அதே போல வைதவ்ய தீக்ஷை எடுத்துக்கொள்ளும் கணவனை இழந்த பெண்கள் தாலியையும் கேசத்தையும் நீக்கி கொள்வார்கள் .துறவிக்கும் விதவைக்கும் தலை மொட்டை தான் .தினசரி மூன்று முறை குளிப்பதற்கு இது தான் வசதி .இருவருக்கும் கடும் உணவு நிபந்தனைகளும் ஆச்சார நிபந்தனைகளும் உண்டு .
ஈ) துறவியின் நோக்கமும் விதவையின் நோக்கமும் முக்தி மட்டுமே .அவர்களுக்கு லௌகீக நோக்கங்கள் இல்லை .
உ) ஒரு காலத்தில் துறவிகளுக்கும் விதவைகளுக்கும் சமமான அளவு மரியாதை கொடுக்கப்பட்டது .நல்ல மடி ஆச்சாரம் உள்ள விதவைகளுக்குத்தான் பல நேரங்களில் மடாதிபதிகள் முதல் தீர்த்தத்தை வழங்கினார்கள் .
மாத்வ விதவை ஒருவர் ஒழுங்காக ஏகாதசி விரதம் இருப்பதால் தான் மழை பொய்க்காமல் பெய்கிறது என்பாராம் மஹா பெரியவர் . தனது தவத்தை விட அந்த விதவையின் ஆச்சாரத்திற்கு, ச்ரத்தைக்கு , வைராக்கியத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்தார் பெரியவர் .
ஊ) கணவனை இழந்த மனைவிக்கு லௌகீக கடமைகள் ஏதும் இல்லை . அதனால் அவள் ஆன்மீக சாதனை செய்ய வேண்டும் என மதம் சொன்னது .இதே விதிதான் மனைவியை இழந்த கணவனுக்கும் .அவனை விதுரன் / அபத்னீகன் என்று சாத்திரம் சொல்கிறது
.அவனும் துறவறம் ஏற்க வேண்டும் என்று நூல்கள் சொல்கின்றன . மனைவியை இழந்தவன் அநாச்ரமி ; அவனுக்கு தானம் கொடுக்கக்கூடாது ; அவனிடம் ஆசிர்வாதம் வாங்கககூடாது ; அவனுக்கு யாகங்களில் பங்கில்லை ; அவன் ஒற்றை பிராமணன்; சில அர்ச்சக மரபுகளில் திருமணமாகாதவனும் மனைவியை இழந்தவனும் தெய்வத்திருமேனியை தீண்டக் கூடாது என்ற விதி இருக்கிறது .
அவன் முக்கியின் பாதையில் செல்ல வேண்டும் என்று புனித நூல்கள் சொல்கின்றன . துறவற வழக்கம் இல்லாத யாகங்களை இறக்கும் வரைக்கும் செய்ய வேண்டிய பூர்வ மீமாம்சக பிரிவை சார்ந்தவனுக்கு தான் நியாயத்திற்கு மறுமணம் .பிறர் எல்லாம் பெண்டாட்டி போன பிறகாவது வைராக்யத்தை கைக்கொள்ள வேண்டும் என்பதே விதி . ஆனால் விதவிலக்கை ஆண்கள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தினர் .
எ ) நிவர்த்தி மார்க்கத்தில் இருக்கும் விதவைகள் மற்றும் சாமியார்கள் மீது ப்ரவர்த்தி மார்க்கத்தில் இருக்கும் கருஹஸ்தர்களுக்கு என்றுமே விலக்கம் இருந்தது .சாமியார்களுடன் சுற்றும் சம்சாரியும் உருப்பட மாட்டான் ; சம்சாரியுடன் சுற்றும் சாமியாரும் உருப்பட மாட்டான் என்பார்கள் . சில வீடுகளில் சாமியார்கள் வந்து போனால் கழுவி துடைக்கும் வழக்கம் இருந்தது. ஆக சாமியார்களையும் விதவைகளையும் சம்சாரிகள் அமங்கல வஸ்துக்களாகத்தான் கண்டனர் . இதில் எப்போது சாமியார் மங்கல ரூபமாகவும் விதவை மட்டும் அமங்கலமாகவும் மாறினாள் என்பது தெரியாது .
ஏ) பிரச்சனை எங்கு வந்தது? பாட்டி செத்த பிறகு தாத்தா மைனராக சுற்றினால் யாருக்கும் பிரச்சனை இல்லை ; ஆனால் அத்தான் இறந்த பிறகு அக்கா வண்ண ஆடை அணிந்தால் மறுமணம் குறித்து யோசித்தால் தம்பிக்கு மான பிரச்சனை . ஜாதிக்கு ஒழுக்க பிரச்சனை .ஆணோ பெண்ணோ அனைவருக்கும் வைராக்யம் இருக்க வேண்டும் என்பதில்லை .ஒரு சிலருக்கு வைராக்யம் இருக்கும் ; ஒரு சிலருக்கு வைராக்யம் இருக்காது . இருப்பவர்களை போற்ற வேண்டும் ; இல்லாதவர்களை விட்டு ஒதுங்கி விட வேண்டும் . சாத்திரத்தில் பாகுபாடு இல்லை . சமூகத்தில் தான் உண்டு . அந்த சமூக பாகுபாட்டால் தான் பிரச்சனை .
ஐ) ஒரு உதாரணத்தை சொல்கிறேன் .வறட்டு ஆச்சாரத்திற்கு பெயர் போன ஒரு மாத்வ நிறுவனம் உண்டு .அதன் சிஷ்யர்களுக்கு தங்கள் சாமியாரின் வறட்டு ஆச்சாரத்தின் மீது மிகப்பெரிய பிரமிப்பு உண்டு . பாரம்பர்யமோ இன்னபிற பெருமைகளோ சொல்லத்தக்க மஹான்களோ இல்லாததால் இந்த வறட்டுத்தனத்தையே இவர்கள் பெரும் ஆபரணமாக அணிந்து வந்தனர் . ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆஷாட தசமி அன்று சமூக ஊடகங்களில் மேற்படி நிறுவனத்தின் சிஷ்யர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். தங்கள் சாமியார் ஆஷாட ஏகாதசி அன்று எந்த சகேசி விதவைக்கும் (தலையை மழிக்காத விதவை) தப்த முத்திரை (சங்கு சக்ர தாரணம் ) வழங்க மாட்டார் என்று பெருமையாக அறிவித்தனர்
உண்மையில் சகேசி விதவைகள் இவர்களது லூசுத்தனங்கள் தெரிந்து அந்த அமைப்பு இருக்கும் தெருவிற்கு கூட செல்ல மாட்டார்கள் .இருந்தாலும் தங்களது சாமியாரின் கடும் நியமத்தை பறைச்சாற்ற மேற்படி கும்பல் செய்த வேலை இது. சாமியாருக்கு தெரியும் என்று தோன்றவில்லை .செய்தி பற்றிக்கொண்டது .பல விதமான வாத பிரதிவாதங்கள் நடந்தன;
நான் அவர்கள் பதிவில் ஒரு கருத்தை சொன்னேன் ."சகேசி விதவைகளுக்கு முத்திரை கொடுக்கக்கூடாது என்பதை ஆதரிக்கிறேன் .ஆனால் அதே போல சிகை இல்லாத ஆண்களுக்கும் முத்திரை கொடுக்கக்கூடாது . சிகை இல்லாமல் இருப்பதும் பெரும்பாவம் அல்லவா ?" என்று கேட்டேன் . சிகை வைத்தவனுக்கு மட்டும் தான் முத்திரை என்றால் வசூல் என்னவாவது? ஆகையால் அந்த பதிவு காணாமல் போனது 🙂 அவ்வளவு தான் விஷயம் .
ஒ) சகேசி விதவைகளை மஹாபெரியவர் பார்க்க மறுத்தது இம்மியளவும் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். சகேசி விதவைகள் எதற்கு மடத்திற்கு செல்லவோ சாமியாரை பார்க்கவோ விரும்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை .வைராக்யம் இத்யாதிகள் கைகூடாமல் வேடிக்கை பார்க்கவா செல்கிறார்கள் ? வாசிப்பதில் விருப்பமே இல்லாதவர்களை நூலகத்தில் பொழுது போக்க விட்டால் என்னவாகும்?
ஓ) அவரவர் விஷயத்தில் மஹாபெரியவர் இன்னமும் கொஞ்சம் கருணை காட்டியிருக்க வேண்டும் என்று அனைவரும் எண்ணுகிறார்கள் .மஹாபெரியவரே சொன்னது போல அவனவன் கொஞ்சம் கொஞ்சமாக மீறத்தொடங்கினால் தர்மம் என்று ஏதும் மிஞ்சாது .சிலருக்கு முடியுடன் இருக்கும் விதவையை பார்க்க மறுப்பது மனதை புண்பட செய்யும் சிலருக்கு மடாதிபதி பிராமணராக இருப்பது உறுத்தும் .சிலருக்கு மடத்தில் இடியாப்பம் பாயா கிடைக்காதது மன வருத்தத்தை தரும் .சிலர் மடத்திற்கு ஆகும் செலவில் எத்தனை பள்ளிக்கூடங்கள் நடத்தலாம் என்று புண்படுவர் .இப்படியே போனால் மடம் என்பதே இருக்காது.
ஒள) அபத்னிகர்களை மஹாபெரியவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்று தெரியவில்லை .என்னை கேட்டால் சிகை இல்லாதவர்களை , மீசை வைத்தவர்களை , ஸ்ம்ருதி விரோதமான, வர்ண விரோதமான ஜீவன உபாயங்களை கொண்டவர்களை எல்லாம் மடத்திற்குள் அவர் விடாமல் இருந்திருக்க வேண்டும். அந்த அளவு கடுமையாக அவர் இருந்திருந்தால் இந்த விவாதமே நடந்திருக்காது .ஒரு சிலர் இன்று அவர் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை கோவில் ஆக்கமிப்பு போன்றவற்றில் ஈடுபட்டிருக்கவும் மாட்டார்கள் .
//
நன்றி .... Bcak Nayar
விஜயராகவன் கிருஷ்ணன்
Fb
Miga Arumaiyana vilakkam. Nandri
ReplyDelete