Tuesday, November 6, 2012

''சும்மா இரு'' -ஶ்ரீகாஞ்சி மகா பெரியவர்


ஶ்ரீகாஞ்சி மகா பெரியவர்
''சும்மா இரு''

உபகாரமோ, அபகாரமோ, நல்லதோ, பொல்லாததோ எப்படி எப்படி நடக்கின்றதோ அப்படியே நடக்கட்டும். நாம் சும்மா இருந்தால் போதும். அதுவே நாம் மற்றவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய உபகாரம். இதை நான் சொல்லவில்லை. ஆதி சங்கரர் சொன்னதாக மகா பெரியவர் சொல்லியிருக்கிறார். ஏன் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் ? அதற்கான விளக்கத்தையும் பெரியவர் சொல்கிறார். படிப்போமா ?
சன்னியாசி என்றால் ஒரு இடத்தில் இருக்கக்கூடாது என்கிற நியதிப்படி சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தார் ஆச்சார்யர்.
காசிக்கும் சஞ்சாரம் மேற்கொண்டார்.காசி என்பது சப்த மோட்ச ஸ்தலங்களில் ஒன்று. காசி, காஞ்சி, அயோத்தியா, மதுரா, மாயா, அவந்திகா, துவாரகா என்கிற மோட்ச ஸ்தலங்களில் ஞானம் வருகிறதோ இல்லையோ, அங்கே மரணம் அடைந்தால் மோட்சம் என்பார்கள்.சன்னியாசிகள் கூட அங்கே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வாசம் பண்ணலாம். அங்கே செத்தாலே மோட்சம் என்பதனால் அங்கே இருப்பதனால் எத்தனை அழுக்கு ஒட்டிக் கொண்டால்தான் என்ன ? ஆகையால் சப்த மோட்ச புரிகளில் மட்டும் சன்னியாசிகள் தங்கலாம் என்று விலக்கு கொடுத்திருக்கிறார்கள். 
56 தேசங்களில் உள்ள ஜனங்களும் காசிக்கு வருவார்கள். எனவே ஆச்சார்யரின் கீர்த்தி லோகமெங்கும் பரவியது. ப்ரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார். அபார தேஜஸ்வியாக இருக்கிறார் என்று எல்லா இடங்களும் பரவ அனைவரும் வந்து ஆச்சார்யரின் சரணத்தில் வீழ்ந்து அவர் பாஷ்யாம்ருத ச்ரவணத்தைக் கேட்டு ஆனந்தப் பட்டார்கள். எல்லா தேசத்தில் உள்ளவர்களின் அன்பை கண்டு மகிழ்ந்த ஆச்சார்யர் இந்த லோகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். என்ன செய்யலாம் ?
ஒருவருக்கு உபகாரம் பண்ணுவது என்றால் இன்னொருவருக்கு அபகாரமாகப் போய்விடுகிறது. ஒரு தேச்துக்கு உபகாரம் செய்தால் மற்ற தேசத்துக்கு விரோதமாகப் போய்விடுகிறது. ஒரு ஜாதிக் காரனுக்கு உதவி செய்தால் அது இன்னொரு ஜாதிக் காரனுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஒரு மதத்தை சேர்ந்தவனுக்கு உபகாரம் செய்தால் அடுத்த மதத்தை சேர்ந்தவன் எதிரியாகி விடுகிறான். இது மட்டுமா ? ஒவருவன் கஷடப்படுகிறானே என்று அவனுக்கு 10 ரூபாய் கொடுத்து உதவினால், அவன்போய் சொல்லி இனிஒருவன் வந்து கேட்கிறான். நம்மிடம் இல்லை எனவே இல்லை என்று சொன்னால் , நமக்கு மட்டும் இல்லை என்று சொல்லிவிட்டானே என்று அவன் வருத்த மடைகிறான். ஆச்சாரியர் தங்கியிருந்த ஒரு பழைய காலத்து மடம் ஒன்றில் ஒரு உளுத்தப் போன உத்திரம் இருந்தது. ஒட்டுக் கட்டிடம், நடுவில் முற்றம். முற்றத்திலே செடிகள் வைப்பதற்காக தளம் போடாமல் மண்தரையாகவே பாதி இடம் இருந்தது. ரீங்காரம் பண்ணியபடி பறக்கின்ற பெரிய வண்டுகள் உத்திரத்தில் துளையிட்டு அந்தத் துளையில் வாசம் செய்தன. சில சமயம் அவை முற்றத்தில் வந்து புரளும். அங்கு கட்டை எறும்புகள் சாரிசாரியாய் போய்க் கொண்டிருக்கும். இந்த வண்டு வந்து தலை குப்பிற விழுந்து புரள முயற்சி செய்து கொண்டிருக்கும் போது 10, 15 எறும்புகள் இந்த வண்டைப் பிடித்து வெடுக் வெடுக் என்று அதன் காலைப் பிடித்து கடிக்கும். வண்டு துடிக்கும். ஐயோ பாவம் என்று எண்ணி வண்டை புரட்டிப் போட்டால் அது உடனே இந்த எறும்புகளைப் பிடித்து சாப்பிட ஆரம்பித்து விடுமாம். ஆச்சார்யர் பதறிவிடுவாராம். இது உபகாரமா, அபகாரமா ? அப்போதுதான் முடிவு செய்தாராம். ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பது என்று. ஆனால் உலகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமே ? என்ன செய்வது ?யாருக்கும் உபத்திரபம் இல்லாத ஒன்றைச் செய்ய வேண்டும் . என்ன செய்யலாம். யோசனை பண்ணினார் ஆச்சார்யர். ஒரு முடிவுக்கு வந்தார். இந்த சும்மா இருக்கும் விஷயத்தையே உலகுக்கு சொல்லிவிடுவோம். யாருக்கும் உபத்திரபம் இல்லாமல் போகும் என்று முடிவு செய்தார்.
அதையே சொன்னார். உபகாரமோ, அபகாரமோ, நல்லதோ, பொல்லாததோ, எப்படி எப்படி நடக்கிறதோ அப்படியே நடக்கட்டும். நாம் சும்மா இருந்தால் போதும். சும்மா இருப்பதுதான் நாம் பிறருக்கு செய்யும் உபகாரம். 
அவர் சொல்லிவிட்டார். வாஸ்தவத்தில் சும்மா இருப்பதுதான் ரெம்பக் கஷ்டம்.

ஶ்ரீகாஞ்சி மகா பெரியவர் அருளியது.

No comments:

Post a Comment