Friday, December 28, 2012

சித்தர் தத்துவம்

சித்தர் தத்துவம் 


ஒப்பியல் இலக்கியம்
கலாநிதி. க. கைலாசபதி M. A., Ph.D.



தமிழ் மொழி தொன்மையானது; வரலாற்றுப் புகழ் படைத்தது. இலக்கியச் செல்வம் நிரம்பியது; தத்துவ வளம் உடையது என்றெல்லாம் அடிக்கடி பலர் கூறக் கேட்கின்றோம். இக்குரல்களின் மத்தியில் பழந்தமிழர் கண்ட விஞ்ஞான நோக்கும் அறிவும், போதியளவு முக்கியத்துவம் பெறவில்லை என்றே கூறுதல் வேண்டும். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியான நாகரிக வளர்ச்சி கண்ட தமிழ் மக்கள் விஞ்ஞானத்தைப் போற்றியே வந்துள்ளனர். எனினும் ஆன்மீகத் துறைக்குக் கொடுக்கப்பட்ட முதன்மையின் விளைவாகப் பொருளைப் பற்றிய ஆய்வு மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்படலாயிற்று. இந்நிலையில் அதனை ஓளவாவது பேணி வந்த அறிஞர் காலத்துக் காலம் வாழ்ந்துள்ளனர். அத்தகையோரைப் பற்றிய சில குறிப்புகளைக் கூறுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

விஞ்ஞான நோக்கும் அறிவும் மனிதனுடைய கற்பனையின் விளைவல்ல; வாழ்க்கைத் தேவைகள், அவசியப் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றுவன அவை. மனிதன் படைக்கும் கருவிகளைத் துணையாகக் கொண்டு மனிதன் கண்டுபிடிப்பனவே விஞ்ஞான உண்மைகள். கிறித்து அப்தத்திற்கு ஏழு நூறு வருடங்களுக்கு முன்னரளவில் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்கள், இரும்பின் பண்பையும் பயனையும் அறியத் தொடங்கினர். அதன் பின்னரே அவர்கள் முழு நாகரிக வளர்ச்சியுறத் தொடங்கினர் என்று வரலாற்றாசிரியர் கூறுவர். இக்காலப் பகுதியை 'இரும்புக் காலம்' எனவும் பெயரிட்டழைப்பர். அக்காலத்திலே வாழ்ந்த மக்கள் பிரேதங்களை அடக்கம் செய்வதற்குப் பல முறைகளைக் கையாண்டனர். அவற்றில் ஒன்றுதான் பெருங்கல் சவ அடக்கமுறை எனப்படுவது. நிலத்தை அகழ்ந்த சவத்தை வைத்துச் சுற்றிவரச் சவப்பொட்டிபோலப் பெருங்கற்களை அடுக்கி வைப்பதே இவ்வடக்கமுறையின் பிரதான அம்சமாகும். ஈமக்கிரியைகளின் ஒரு பகுதியாகச் சவக்குழிக்குள் பலவிதமான மட்பாண்டங்களை வைப்பர். புதைபொருள் ஆராய்ச்சியின் விளைவாகத் தொல்பொருள் ஆய்வாளர் இத்தகைய மட்பாண்டங்கள் பலவற்றை ஆராய்ந்துள்ளனர். கருமை நிறமும் செம்மை நிறமும் அமைந்த மட்பாண்டங்களைச் செய்த அம்மக்களுக்கு ஓரளவு இரசாயன அறிவு இருந்திருத்தல் அவசியம். மண்ணைப் பல்வேறு வெப்ப நிலைகளிற் சுடும்போது, அது கறுப்பாகவும் சிவப்பாகவும் நிற வேறுபாடடைகிறது என்பர்; மண்ணுடன் அப்பிரக்ம் முதலிய வேறு பொருட்களையும் கலத்தல் வேண்டும். பாண்டத்தை வனைவதற்குச் சக்கரம் வேண்டும். மட்பாண்டக் கலை வளர்ச்சியுடன் பண்டைய இரசாயனமும் பௌதிகமும் தோற்ற நிலையில் அரும்பத் தொங்கி விட்டன. இத்தகைய சூழலிலேயே இரும்பும் வழக்கிற்கு வந்தது. நாகரிக வளர்ச்சியின் முதற்படியினைத் தமிழ் மக்களும் உலகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்களைப் போல விஞ்ஞான அறிவின் துணைகொண்டே கடந்தனர்.

அந்த வரலாற்று நிலைக்குப் பின்னர் தமிழ்ச் சமுதாயத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தன; தத்துவம் வளர்ந்தது; சமயங்கள் நிறுவனங்களாக உருப்பெற்றன. தொழில் செய்வோர் தொழில் செய்யாதோர் என்னும் பாகுபாடு நிலைத்தது. அறிவர் அறிவில்லாதார் என்னும் பிளவு தோன்றியது. இவற்றிற்கேற்ப விஞ்ஞானத்திலும் மாற்றம் ஏற்பட்டது. புராதன விஞ்ஞான அறிவின் பயனாக அன்றைய மனிதன் பெரிதும் முயன்று மண்ணால் பாண்டங்களைச் செய்தான். அவற்றின் பயனைப் பெற்றான். பின்னாளில் சிலர் மட்பாண்டத்தைப் பயனற்ற அழிந்து போகும் மனித வாழ்விற்கு ஒப்பிட்டு மாயாவாதம் பேசினர். விஞ்ஞானம் வளராது பின்தங்கியது.

விஞ்ஞானம் என்பது சடப்பொருள்களைப் பரிசோதித்து ஆராய்வதின் மூலம் அவற்றிற்கிடையே சில உறவு முறைகளைக் கண்டறிவதாகும். உறவுகளைக் காண்பதற்குச் சில கோட்பாடுகள் அவசியமாகின்றன. நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகள் உண்மைகளாகின்றன. அவ்வுண்மைகளைக் கோட்பாடுகளாகக் கொண்டு மேலும் புதிய பரிசீலனைகளைச் செய்யவும் அவற்றினை நிரூபிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இத்தகைய ஒரு தொடர் நிலையாகவே விஞ்ஞான அறிவு முன்னேறுகிறது. எனவே சடப்பொருள்களை ஏற்றுக்கொள்வதும், அவற்றினை ஆய்வதும் விஞ்ஞான நோக்கின் முதற்படியாகும். ஆனால், இந்தியாவிலே தோன்றி வளர்ந்த பெரும்பாலான தத்துவ தரிசனங்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. பொருட்களும் பிரபஞ்சமும் அநித்தியமானவை என்றும், இறைவன் அல்லது பிரமமே முழுமுதற் பொருள் என்றும், அது சடப்பொருள்களுக்கு அப்பாற்பட்டது என்றும் அத்தத்துவங்கள் கூறும். இவ்வாதமானது கருத்துக்களின் பிரதிபலிப்பே பொருள்கள் என்னும் கருத்து முதல் வாதமாகும். இவ்வாதம் விஞ்ஞான நோக்கிற்கும் அதன் அபிவிருத்திக்கும் உகந்தது அன்று என்பது வௌிப்படை. சுருங்கக் கூறின், உலகிலே கருத்து முதல் வாதத்திற்கும் பொருள் முதல் வாதத்திற்குமிடையே நிலவிவரும் முரண்பாட்டினை இங்குத் தௌிவாகக் காணலாம். காண்பனவற்றைக் கணக்கெடுத்துப் பஞ்சபூதங்களின் நுட்பத்தை நுணுகி அறியவைப்பது விஞ்ஞானம் எனில், 'காண்பனவெல்லாம் பொய்: காணாதது ஒன்று உண்டு; அதனை மனத்தின் துணைகொண்டு தேடு' எனக் கூறுவது இலட்சியவாதத் தத்துவம். வேத, உபநிடத காலத்திலேயே இப்போராட்டந் தொடங்கிவிட்டது. இன்றுவரை பல சந்தர்ப்பங்களில் பொருள் முதல் வாதமும் விஞ்ஞான நோக்கும் ஆங்காங்குத் தலை தூக்கின. சான்றோர் இலக்கியங்களிலே இதனைக் காணலாம். நல்வினை, பிறவாநிலை முதுலியவற்றிலே நம்பிக்கை இல்லாதவரை மனத்திற் கொண்டு கோப்பெருஞ்சோழன் ஒரு பாடலைப் பாடியுள்ளான். இது புறநானூற்றிற் காணப்படும். சாங்கியம், சமணம், பௌத்தம், யோகம் முதலிய தத்துவ சமயக் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் விஞ்ஞானச் சாயல் பொருந்திய பல சிந்தனைகள் இலக்கிய நூல்களிலும் தத்துவங்களிலும் எதிரொலிக்கலாயின. எனினும், வைதிக சமயக் கருத்துக்களும் சநாதன தருமமுமே பெருவழக்காக நிலவின. இவற்றின் மத்தியிலே தம்மாலியன்றளவு உணர்ச்சி பூர்வமாகவேனும் விஞ்ஞானப் பண்பினை வளர்க்க முனைந்தவர் சிலரிருந்தனர். அவரைச் சித்தர் என்றழைக்கலாயினர். சித்தர்கள் என்றால் 'அறிவர்' என்பது பொருள்; விளங்கிய அறிவுரையடைவர் எனலாம்.

தமிழ் நாட்டிலே பதிணென் சித்தரைப் பற்றிய வழக்கும் செவிவழிச் செய்திகளும் உள்ளன. சில பொதுப் பண்புகளையே குறிக்கலாம். தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், இரேகை சாத்திரம், வான சாத்திரம் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன. இவற்றிற் பல இன்னும் ஓலைச்சுவடிகளாகவே கிடக்கின்றன.

வேதாந்தச் சார்புள்ள இறைத் தத்துவங்கள் யாவும், "காயமே பொய்; உடலை விடுத்து உயிரின் ஈடேற்றத்திற்காக உழை' என்றே மாயாவாதம் பேசின. இப்போக்கை வன்மையாகக் கண்டித்து மறுத்தனர் சித்தர். தமிழிலே திருமூலர் முதன் முதலாக இவ்வெதிர்க் குரலுக்கு உருவங்கொடுத்தார் எனலாம். திருமந்திரத்திலே பலவிடங்களில் உடம்பின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார் திருமூலர்.

    ".................உடம்பொடு
    செத்திட்டு இருப்பர் சிவயோகிகள்
    "உடம்பார் அழியில் உயிரார் அழிவர்."
    "உறுதுணையாவது உயிரும் உடம்பும்."
    "உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்."
திருமூலரின் இக்கருத்துக்கள் மாயாவாதத்திற்கு நேர் முரணான மெய்ம்மை வாதத்தை அடி நிலையாகக் கொண்டவை. திருமூலர் ஒரு சித்தர். திருமந்திரத்தை 'தந்திரம்' என்றும் கூறுவதுண்டு. தந்திரம் என்பது இந்தியாவிலே பண்டுதொட்டு வளர்ந்து வந்த ஒரு வழிபாட்டு முறை. இவ்வுடலின் துணைக்கொண்டே இவ்வுடலின் மூலமாகவே-பேரின்பத்தை அடையும் உண்மையைக் காட்டுவன யோகம், தந்திரம் முதலியன. கிரியைகள், சடங்குகள், மந்திர உச்சாடனங்கள், உடற்பயிற்சி, உடல்வலிமை முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. யோகமும், தந்திரமும், மனித உடலுக்கு உண்மை- மெய் என்னும் பெயரை மெய்யாகக் கூறியவர்கள் தந்திரவாதிகள். அந்தளவிற்கு அவர்கள் மெய்மை வாதிகள்.

சித்தர்களின் இப்பண்புகளைப் பற்றி, சாமி சிதம்பரனார் கூறுவது வருமாறு:

"சித்தர் பாடல்களை ஆழ்ந்து படித்தால், அவர்கள் வைதிக மதத்திற்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர். வைதிக மதக் கொள்கைகள் பலவற்றைத் தாக்குகின்றனர். ஆனால் அவர்கள் தங்களை நாத்திகர் என்றோ, உலகாயதர்கள் என்றோ வௌிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. வௌிப்படையாகப் பாடவில்லை. கடவுள் அன்பர்கள் போலவே காட்சியளிக்கின்றனர். ஆயினும் சித்தர்களின் பாடல்களிலே உலகாயதத்தை - நாத்திகத்தைப் பற்றிய கண்டனங்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விஞ்ஞானிகளும், ஆன்மா தனித்த ஒரு பொருள் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆன்மா என ஒன்று தனியாக மதவாதிகள் சொல்லுகின்ற படி அழியாத தனிப்பொருளாக இல்லையென்பதே பல விஞ்ஞானிகள் கருத்து. சித்தர்களின் கொள்கை இதற்கு ஒத்திருப்பதைக் காண்கிறோம்."

சித்தர்களைப் பற்றிக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்தவர்கள் யாவரும் ஏகோபித்த குரலிற் கூறுவது இதுதான். சித்தர்களைப் பற்றியும் அவர்களது இரசாவாதத்தைப் பற்றியும் எழுதிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையிலே, கும்பகோணம் கே.சி. வீரராகவ ஐயர் இவ்வாறு கூறியுள்ளார்:

"பெரும்பாலான சித்தர்கள் சங்கரரின் ஒருமைவாதத் தத்துவத்தையும் இந்துக்களின் விக்கிரக வழிபாட்டையும் எதிர்த்து மறுத்தவராகவே காணப்படுகின்றனர்."

இவ்வாறு சித்தர்கள் வைதிக சமயத்தை எதிர்த்து நிற்கவும், வைதிக நெறியினரும் அவர்களைத் தள்ளி வைத்தனர். மிகச் சமீபகாலம் வரை சைவ சித்தாந்திகளும் சித்தர் நூல்களை விலக்கி வைத்திருந்தனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய கா.சு. பிள்ளை முதலிய சிலரே சித்தர் பாடல்களும் கற்கத் தகுந்தன எனக் கூறுத் தொடங்கினர். மரபு வழி வரும் கருத்துக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் இரு மேற்கோள்கள் அமையும்.

"இதுகாறும் சைவ சாத்திர வரிசையிலே நுழைவதற்கு இடம் பெறாத பஞ்சம நிலையிலே நிற்கும் சித்தர் நூல் அவ்வியாசத்தில் அக்கிரஸ்தானம் பெற்றுவிட்டது.

"சைவ சமயத்தைத் தாபித்து உபகரித்த சைவ சமய குரவர்கள் கற்பித்த வழியைக் கைப்பிடித்து ஒழுகும் சைவ மக்களும் சித்தர் நூலை நோக்கவும் இசைவாரா? ஒருகாலும் இசையார்."

மேற்கூட்டிய இரு கூற்றுக்களும் முறையே வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, திருநெல்வேலி மா. சாம்பசிவ பிள்ளை ஆகியோரால் திருநான்மறை விளக்க ஆராய்ச்சி என்னும் நூலிற் கூறப்பட்டவை.

தமிழரிடையே நிலவிய சாதியமைப்பின்படி, பஞ்சமர் நால் வருணத்துக்குப் புறம்பான வருணத்தார்; சித்தர்களைப் பஞ்சம நிலையில் உள்ளோர் என்று கூறுவது உற்று நோக்கத்தக்கது. சுருங்கக் கூறின், வைதிக சமய எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்துக் கூறப்படுகிறது. வைதிக சமயிகளின் கோபாவேசத்திற்குக் காரணம் எமக்குத் தெரிந்ததே. இடைக்காலச் சமுதாயம் வேத வாழ்க்கையை மூலாதாரமாய்க் கொண்டு வருணாசிரம தருமத்தின் அடிப்படையிற் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. வேத வழக்கொடு மாறுபடும் எதுவும் ஆக்குரோசத்துடன்கண்டிக்கப்பட்டது. சித்தர்களோ அடிப்படையையே கோடரி கொண்டு வெட்டினர்.

    "சதுர் வேதம் அறுவகைச் சாத்திரம் பல
    தந்திரம் புராணங்களைச் சாற்றும் ஆகமம்
    விதம் விதம் ஆனதான வேறு நூல்களும்
    வீணான நூல்கள் என்று ஆடாய் பாம்பே!"
இது பாம்பாட்டிச் சித்தர் பாடல்; இதைவிடக் கொடிய தேவ நிந்தனையும், பழிப்பரையும் வேறு என்ன இருந்திருக்க முடியும்? இந்து மரபு வழிச் சமுதாயம் புனிதத்திலும் புனிதமானவை என்று போற்றுவனவற்றை 'வீணானவை' என்று அடித்துக் கூறுகிறார் பாம்பாட்டிச் சித்தர். திரு.வீரராகவ ஐயர் குறிப்பிட்ட விக்கிரக வழிபாட்டெதிர்ப்புக்கும் இதே சித்தரின் பாடலொன்றை உதாரணமாகப் பார்க்கலாம்.

    'உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
    உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
    புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம்
    போகாது மூடர்க்கென்று ஆடாய் பாம்பே"
சிற்சில பரிபாஷைகளில் தவிர, சித்தர்களின் மொழி நடை பழகு தமிழில் அமைந்திருப்பதனால் பாடல்கள் விளக்கம் வேண்டா எளிமையுடையனவாய் இருப்பதும் கவனிக்கத்தக்கதே. பாமர மக்களை நோக்கியே இவை பாடப் பெற்றன என்பது இதனால் உறுதிப்படுகின்றது. சமயத்துறையில் புரட்சிக் குரலையெழுப்பியது போல, சமூகத் துறையிலும் தளராத சமத்துவ வாதிகளாக அவர்கள் திகழ்ந்தனர்.

    "சமய பேதம் பலவான சாதி பேதங்கள்
    சமயத்தோர்க் கேயல்லாது சற்சாதுக் களுக்கோ?"
என்றும்.

    "சாதிப் பிரிவினிலே தீமூட்டுவோம்
    சந்தை வௌியினில் கோல் நாட்டுவோம்"
என்றும்

    "சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெல்லாம்
    பூத வாசல் ஒன்றலோ? பூதம் ஐந்தும் ஒன்றலோ?"
என்றும், அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடனும், தன்னம்பிக்கையுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும் பாடினர் சித்தர். சிவவாக்கியர் போன்றோரது குரல் எமது காலத்தது போலச் சமுதாய உணர்வு தோய்ந்துள்ளது. இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது சித்தர்கள் கிளர்ச்சியாளர் (Rebels) என்றே கூறத் தோன்றுகிறது. கீழே நாம் காட்டியுள்ள ஒப்புமைப் பகுதிகளை அவதானிக்குமிடத்து அவ்வாறு கூறுவது பொருத்தமாகக் காணப்படும். சமயத்துறையில் அவர்கள் வௌிக்காட்டிய எதிர்ப்பு, உண்மையில் சமூகத் துறையில் இருந்த முரண்பாட்டின் விளைவேயாம். அன்றைய நிலையில் அவர்கள் தம்மைத் தாமே சமூகத்திலிருந்து விலக்கிக் கொண்டனர். தமக்குப் பிடிக்காதனவற்றை ஏற்று வாழ்வதிலும் ஒதுங்கி வாழ்வது மேல் எனக் கருதினர். அஞ்சாது தமது உள்ளக் கிடக்கையைப் பாடித் தள்ளிய போதும், அதனால் சமுதாய மாற்றத்தைக் காண முடியாதிருந்தது. அவர்கள் எதையும் குறிக்கோளாகக் கொண்டு இயக்கம் நடத்தவில்லை. மனம் ஒப்பாதவற்றைச் சாடினார்கள். அது எதிர்மறைச் செயலாகும். அதனால் நேரடியான ஆக்கப் பணிகளைச் செய்ய இயலாது போயிற்று. தேங்கித் தம்பித்து நின்ற சமுதாயத்தில் வலிமையுடன் விளங்கிய பௌதிக வதீத வாதத்தையும் கருத்து முதல் வாதத்தையும் போராடும் மார்க்கம் அவர்களுக்குத் தெரியவில்லை. சித்தர்களைப் போன்ற சிலரால் அம்மாற்றம் நடைபெற்றிருக்க மாட்டாது. அதற்குரிய வரலாற்று கட்டம் அன்றிருக்கவுமில்லை. ஆகவே சநாதனிகளின் முழு மூச்சான எதிர்ப்பை எதிர்த்து நிற்கவல்ல இதயக் குமுறல்களைப் பாடியதோடு திருப்தியடை வேண்டியவராயினர்.

இந்நிலையிற் சில சித்தர்கள் காயகல்பம், இரசவாதம், முதுலிய நடைமுறை மார்க்கங்களில் கவனஞ் செலுத்தலாயினர். அவை ஓரளவுக்கு மக்களின் அபிலாஷைகளையும் தழுவியனவா யமைந்தன.

மாதவர் இயற்றிய 'சர்வ தரிசன சங்கிரகம்' என்னும் நூலில் இராசேசுவர தரிசனத்தைப் பற்றிச் சில சுவையான கருத்துக்கள் காணப்படுகின்றன. இரசாவாதத்தினால் கீழான உலோகங்களைப் பொன்னாக மாற்றலாம் என்று பண்டைக் காலத்திற் பலர் நம்பியது போலவே இரசவாதத்தினால் மனித உடலையும் அழியாமல் நிலைக்கச் செய்யலாம் என அவர்கள் நம்பினர். மனித உடல் கண்ணிற்கும், புலன்களுக்கும் புலப்படுவது; எனவே அது உண்மை. அதன்றி, உடலை விட்டபின் உயிர் பேரின்பம் அடையுமென்ற கூற்றிற்கு ஆதாரம் கோரி ஆணித்திரமாகக் கேட்டவர்கள் இராசேசுவரவாதிகள்; சைவ சமயத்தின் ஒரு பிரிவினராகவே இவர்கள் விளங்கினரெனினும் பொருள்களைப் பற்றிய மெய்ம்மை வாதத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர்.

"மனிதனுடைய இலட்சியம் பேரின்பம் அடைவதே. அதை அடைவதற்கு முதலில் ஞானம் தேவை. வித்தையின் மூலமே ஞானத்தைப் பெறுதல் கூடும். வித்தை சித்திப்பதற்கு நோயற்ற வாழ்வு அவசியம். உடல் நல்ல திடகாத்திரமாக இருப்பதற்கு உதவுபவை அப்பிரகம் (Mica) பாதரசம் (Mercury) ஆகிய இரண்டும்.

இவ்வாறு கூறுவர் இராசேசுவராதிகள். இரசர்ணவம் என்னும் நூலில் கோவிந்த பகவன் என்னும் பண்டைத் சித்தர் இவ்வாறு கூறியுள்ளதாக மாதவர் கூறுவர். அப்பிரகம், பாதசரம் ஆகிய இரண்டும் முறையே பார்வதியையும் சிவனையும் குறிப்பதாகப் பரிபாஷை பேசுவர் சித்தர்கள். அவ்விரண்டையும் உடலிற் பூசியும், பிற மூலிகைகளையும் திராவகங்களையும் உட்கொண்டும் பல்வேறு சித்திகளைப் பெறலாம் என்று சித்தர்கள் எண்ணினர். இவ்வித நம்பிக்கைகளுக்கு அடிப்படையாக உள்ளது உடலைப் பற்றிய கருத்து. 'உடல் நித்தியமானது; இனிமையானது; நல்லது. உலகம் இனியது' என்பது சித்தர் வாக்கு. இதனால் உலகியல் அவர்கள் சிந்தனையில் முக்கியத்துவம் பெற்றது. பெறவே, துறவும் பொய்ம்மை வாதமும் கண்டிக்கப்பட்டன. மற்றோர் இரசவாத நூலாசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார்:

"சிதைவற்ற நிலைபேறுடைய உடலினைவிடப் பேரின்ப மயமானது வேறென்ன இருத்தல் கூடும்? விஞ்ஞானம் சிறப்பு, செல்வம், இன்பம் விடுதலை, ஆகியவற்றின் களஞ்சியம் அதுவன்றோ!"

இராசேந்திர சிந்தாமணி என்னும் நூலின் தொடக்கத்திலேயே பின்வருமாறு கூறப்படும்:

"என்னுடைய சொந்தப் பரிசோதனைகளின் விளைவாகக் கண்டவற்றையே நான் விளம்புவேன்; நான் பரிசோதித்தறிந்த பாதரச ஆய்வுகளே எனது நூலிற் கூறப்பட்டுள்ளன. பரிசோதனைகள் நடத்த முடியாதவை பற்றிப் பேசுவர்கள் வீணே முயல்கின்றனர்."

சுருதிகளையும், சிமிருதிகளையும், ஆகமங்களையும் பிரமாணமாகக் கொண்ட மாயாவதிகளின் குரலுக்கும் மேற்கூறியவற்றிற்கும் எத்துணை வேறுபாடுண்டு என்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. உலகத்தையும் மானிட உடலையும் மெய்யெனக் கொண்டவர்கள் சித்தர்கள். உடல்-உலகம் - உண்மை என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்தே அவரது விஞ்ஞான நோக்கும், அதாவது பரிசோதனை வேட்கையும் தேவையும் வளர்ந்தன. அப்பிரகம், கந்தகம், பாதரசம் முதலிய பதார்த்தங்களின் இரசவாத ஆய்வானது, பொதுவான வளர்ச்சிக்கு உதவியது. தமது ஆராய்ச்சிக்காகப் பல்வேறு கருவிகளை - யந்திரங்களை - அவர்கள் அமைத்தனர். தோலயந்திரம், சுவேதனியந்திரம், பதன யந்திரம், தூபயந்திரம் முதலியன அவற்றுள் சில.

உடலுக்கு உறுதியும் உறுதுணையும் அளிப்பதற்கு உலோகங்களையும் மூலிகைகளையும் நுணுகி ஆராய்ந்தனர் சித்தர்கள். இதன் விளைவாகச் சித்த வைத்தியம் வளர்ந்தது. உலோக வகைகள், இரசவகைகள் முதலியவற்றால் செய்யும் மருந்துகள், தமிழ் நாட்டுச் சித்தருடைய தனிமுறை என்று பலர் காட்டியுள்ளனர். பஸ்பம், செந்தூரம், திராவகம் முதலியன இம்முறையைச் சார்ந்தன. உலோக வகைகளை மருந்தாக மாற்றுவதற்கு இரசாயனமும், மாற்றியதன் விளைவு வைத்தியப் பொருளாகவும் கண்ட தமிழ்ச் சித்தர்கள், மக்கள் சாகாமல் வாழலாம் என்னும் உடல் உண்மையை யொட்டியே தமது பரிசீலனைகளைச் செய்தனர்.

உலோகங்களையும், தாதுப் பொருட்களையும் மூலிகைகளையும் தக்க சமயத்திலே பெற்று, உரிய தட்பவெப்ப நிலைகளில் வைத்து, உகந்த முறையிலே பயன்படுத்துவதற்குப் பருவங்களைப் பற்றிய அறிவு தேவையாக இருந்தது. இதனையொட்டி வானிலை அறிதல் அவசியமாயிருந்தது. இதன் பயனாக வான சாஸ்திரம் வளர்ந்தது. அதன் உபபிரிவாகச் சோதிடமும் விரிந்தது.

இவ்வளவு முயன்று உடலைப் பாதுகாத்து இன்பம் கண்ட அவர்கள் உடல் அழகைப் பற்றி சிந்திப்பது இயல்பல்லவா? உடலமைப்பைப் பற்றி நுணுகி ஆராய்வதும் இயல்புதானே. உடலுக்கு இத்துணை முதன்மை அளித்தவர்கள் உடற்கூறு சாத்திரத்தை வளர்த்தனர். இது சாமுத்திரிகா லட்சணம் என்னும் பெயரில் சித்தர்களால் ஆராயப்பட்டது.

இதுபற்றி தி.நா.சுப்பிரமணியன் பின்வருமாறு கூறியுள்ளார்:

"விஞ்ஞான முறைப்படி சாமுத்திரிகா லட்சணமும் ஒரு சாத்திரமேயாகும் என்பதை நிரூபித்து, லாவதர், சார்லஸ் டார்வின் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். சாமுத்திரிகா லட்சணம் உடற்கூறு சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. நவீன விஞ்ஞான முறைப்படி அதை ஆராய்ந்தால் இரண்டு விஷயங்கள் தௌிவாகும். உள்ளத்து இயல்புகளில் காணும் வேறுபாடுகளுக்கு ஏற்பவே புறத்தோற்றத்தில் காணும் வேறுபாடுகள் அமையும் என்பது ஒன்று. உடலின் பொது அமைப்புக்கு ஏற்பவே ஒவ்வோர் உறுப்பும் அமைந்திருக்கும். அதுபோல ஒவ்வோர் உறுப்பும் உடலின் மொத்த அமைப்பின் ஒரு பாகமாகும் என்பது இரண்டாவது."

இவ்வாறு இரசாயனம், தாவர சாத்திரம், வைத்தியம், வானசாத்திரம், உடற்கூறு சாத்திரம், சோதிடம் முதலிய பல அறிவியற் துறைகளிலெல்லாம் சித்தர் வாக்குகளே நமது மரபு முறை விஞ்ஞானத்திற் சிறந்து விளங்குகின்றன. மக்கள் யாவருக்கும் பொதுவான அறிவியல் துறைகளில் ஈடுபட்ட சித்தர்கள் தமது காலத்துக்குப் போலிச் சாத்திரங்கள், சாதிப் பாகுபாடுகள், குருட்டு நம்பிக்கை, வைதிகப் பற்று, மதவெறி, தூய்மை வாதம், வேத வழக்கு ஆகியவற்றைப் பல வழிகளில் எதிர்த்ததில் வியப்பெதுவுமில்லை. ஆனால் அதன் காரணமாகவே மெய்ம்மை வாதிகளான அவர்கள் கேவலம் காய சித்திகள், சுயநலமிகள், மாந்திரீகர்கள், சித்த சுவாதீனமற்றவர்கள் என்றெல்லாம் நிந்திக்கப்பட்டனர். தூஷிக்கப்பட்டனர். சமூகத்திலே புறக்கணிக்கப்பட்டனர். உன்னதமான அவர்களுடைய விஞ்ஞானப் பரிசோதனைகள் கீழ்த்தரமான மந்திர ஜால வித்தைகளாகவும், கண்கட்டு வித்தைகளாகவும், அலட்சியம் செய்யப்பட்டன. இவை யாவற்றின் விளைவாகவும் சித்தர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கியும், ஒதுக்கப்பட்டும் வாழ்ந்தனர். அவர்தம் கருவிகள் இயந்திரங்கள் - வளர்ச்சியடைய வில்லை.

சுருங்கக்கூறின், சமூகத்திலே உடலுழைப்பாளருக்கும் புத்திசீவிகளுக்கும் இடையே பிளவு தோன்றும் பொழுது விஞ்ஞானம் தேங்குகிறது. வாழ்க்கையும் விஞ்ஞானமும் இணைந்தாலன்றி உண்மையான விஞ்ஞான விருத்தி ஏற்படுதல் சாத்தியமன்று. தமிழ் நாட்டின் மத்தியகால வரலாறு இதற்குத் தக்க சான்றாகும். மேனாட்டாரின் தொடர்பினாலும், புதிய சமூக ஏற்பாடுகளினாலும் விஞ்ஞானக் கல்வி, நமது சமூகத்திலும் இப்பொழுது பரவி வருகிறது. அதே சமயத்தில் அது புதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி வருகிறது. விஞ்ஞானத் துறையில் உழைப்போர் உயர் நிலையை எய்தும் வாய்ப்பும், பிறர் தாழ்வு நிலை பெறும் சூழ்நிலையும் உருவாகின்றது. இதுவும் அர்த்தமற்றதே. இத்தகைய பிரச்சினைகளுக்குப் பின்னணியாகப் பண்டைய விஞ்ஞானத்தின் வரலாறு பல பாடல்களை எமக்குப் புகட்டும்.

சித்தர்களைப் பற்றிச் சிந்திக்கும் போது சீன தேசத்துப் பண்டைக்கால ஞானியரான தாவோயிகள் (Taoists) நினைவுக்கு வராமற் போகார். இரு சாராருக்கும் மிக நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன. சீனாவிலே பௌத்தமும், கொன்பூஸியஸ் மதமும் பண்டைய காலம் தொட்டுப் பெருவழக்கமாக இருந்து வந்துள்ளன. ஆயினும் தாவோ மார்க்கமும் சீனவரலாற்றிற் சிறப்பு இடம் பெற்றுள்ளது. உலகமளாவிய கண்ணோட்டத்தைப் பெற்றிருந்த மகாகவி பாரதியார் தமது சுயசரிதையில் "நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துச் சித்தருக்கும் தாவோயிகளுக்கும் ஒப்புமைகள் மாத்திரமன்றி, நேரடியான தொடர்புகளு மிகுந்திருக்கின்றன. இதில் ஆச்சிரியப்படுவதற்கு எதுவுமில்லை. இவையிரண்டும் - சித்தர்கள் தத்துவம் தாவோயியமும்- ஏறத்தாழ ஒரே தன்மையான சூழலிலே தோன்றி வளர்ந்தன. சித்தர்கள், சித்தவைத்தியம், இரசவாதம் முதலியவற்றை வளர்த்தது போலவே சீனத்தாவோயிகளும் தேகவாதம், வைத்தியம், இரசவாதம் முதலியவற்றை உருவாக்கினர்... "சீனாவிலே இரசவாதம் தாவோயியத்தின் அடிப்படையிலேயே சுயமாகத் தோன்றியது." என்கிறார் ஓ.எஸ்.ஜோன்சன். அதே சமயத்தில் பண்டைக்காலம் தொட்டே தென் இந்தியாவிற்கும் சீனத்திற்கும் பலவிதமான தொடர்புகள் இருந்துள்ளன. சென்னைப் பல்கலைக் கழக வௌியீடான (லெக்சிகன்) அகராதியை ஒருவர் புரட்டிப் பார்த்தால், சுமார் முப்பத்தைந்து சொற்கள் - பொருட்பெயர்கள் 'சீனம்' என்ற அடைபெற் றனவாகக் காணலாம். இவற்றில் பல வைத்தியத் தொடர்புடையனவாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சித்தர்களுக்கும் சீன நாட்டுச் சித்தருக்கும் நெடுங்காலமாகவே உறவு இருந்து வருவதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இதுபற்றிச் சாமி சிதம்பரனார் கூறுகிறார்:

"நமது நாட்டுச் சித்தர்களும், சீன நாட்டுச் மருத்துவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகட்டு முன்பே தொடர்பு உண்டு என்று தெரிகிறது... சீன நாட்டு வைத்தியம் நமது நாட்டுச் சித்த வைத்தியம் போலவே சிறந்து விளங்ககின்றது... போகர் என்பவர் தமிழ் நாட்டுச் சித்தர்களிலே ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் சீனர், சீனத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர். பழனி மலையிலே தங்கியிருந்தார். புலிப்பாணி என்பவரும் சீனர். இவரையே 'வியாக்ரபாதர்' என்று குறிப்பிடுகின்றனர். இவர் போகரின் மாணவர் என்றும் சொல்கின்றனர்.

வீரராகவ ஐயரவர்கள் தமது கட்டுரையிலே போகர் தமிழ் நாட்டுக்கு வந்த காலத்தைத் துணிய முற்படுகிறார்.

"போகர் தமிழிற் பல வைத்திய நூல்களும் இரசவாத நூல்களும் எழுதினார். சீனத்தவரான அவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தாரென்பர். முதலில் பாட்னா, கயா, முதலிய இடங்களுக்குச் சென்றபின், தென்னிந்தியாவுக்கு வந்து, தமிழ்ச் சித்தரிடம் இரசவாதமும் வைத்தியமும் கற்றார். அவரும் இத்துறைகளைத் தமிழருக்குப் போதித்தார். தென்னிந்தியாவிலிருந்து அராபியாவுக்குச் சென்று, அங்கிருந்து தாயகம் திரும்பினார் என்பது ஐதீகம். அவருடன் சீனத்துக்குச் சென்ற தமிழ்ச் சீடர்கள் சிலர் பொறியியற் கலைகள் பயின்று வந்து தமிழ் நாட்டிற் புகழெய்தினர். புலிப்பாணி என்பவர் போகருடன் வந்து தமிழ் நாட்டில் தங்கியிருந்தவர். அவரும் தந்திரம், இரசவாதம், வைத்தியம் முதலியனவற்றைப் பற்றிப் பல நூல்கள் எழுதியுள்ளார்.

திரு. வீரராகவ ஐயரும், சாமி சிதம்பரனாரும் தமிழ்நாட்டிலே பரம்பரை பரம்பரையாக நிலவி வரும் செய்திகளையே தொகுத்துக் கூறுகின்றனர். பல நூற்றாண்டுகளாக நிலைத்து வந்த இவ்வாய்மொழிச் செய்திகள் பெரும்பாலும் உண்மையானவையே. அவற்றை மறுப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் இல்லை. இவ்வாறு தமிழ் நாட்டுச் சித்தருக்கும் சீனத் தாவோயிகளுக்கும் வரலாற்றுத் தொடர்புகள் இருந்து வந்தாலும், இரு சாராரில் ஒரு பகுதியினடமிருந்து மறுசாரார் இத் தத்துவங்களைப் பெற்றுக் கொண்டனர் என்று கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு கொள்வது அநாவசியமான பிரச்சினைகளில் எம்மை இழுத்து வீழ்த்துவது மட்டுமின்றிச் சமூகவியற் கருத்துக்களுக்கு முரணாகவும் இருக்கும். வேறொரு சந்தர்ப்பத்திலே பேராசிரியர் நீதாம் கூறுவது இங்கும் பொருத்தமாகக் காணப்படுகிறது.

"கருத்துக்கள் ஓரிடத்திலிருந்து மற்றைய இடத்துக்குச் சென்று பரவின என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரே தன்மையான பிரச்சினைகளை ஆயும் ஒரே தன்மைத்தான உள்ளங்கள் ஒரே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்."

ஒப்பியல் ஆய்வு பயனுள்ளதாக அமையவேண்டின் இத்தகைய 'ஒருபாற்கோடா' மன நிலை அத்தியாவசியமாகும். சமய சம்பந்தமான சிந்தனைகள் புடைபெயர்வது பற்றி உன்னிக்க வேண்டிய கருத்தொன்றைப் பேராசிரியர் தொம்சன் ஈஸ்கிலசும் அதென்சும் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார். புராதன எகிப்துக்கும் கிரேக்கத்துக்கும் உள்ள தொடர்பைத் தௌிவுறுத்தும் போது பின்வருமாறு எழுதுகிறார்:

"சமயக் கருத்துக்கள் வணிகக் காற்றில் வெகு தூரங்களுக்கும் மிதந்து செல்கின்றன என்பதுண்மையே. ஆயினும், தம்மைத் தாங்கத் தயாராயுள்ள மண்ணிலேயே அவை வேரூன்றி நிலைக்கின்றன. அவற்றின் பிற்பட்ட வளர்ச்சியை ஆங்குள்ள சுற்றுச் சூழ்நிலைகளே பிரதானமாக நிர்ணயிக்கின்றன. இரு அமைப்புகளுக்கும் பொதுவாக உள்ள அம்சங்களின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்கு, இரு நாட்டுக் கமத்தொழிலின் பொதுவான வரலாற்றுப் பின்னணியில் இரண்டையும் வைத்து நோக்கி, இரு அமைப்புகளிலும் காணும் வேறுபாடுகளை அவ்வப் பிரதேசத்தின் சிறப்பான வரலாற்றுப் பண்புகளினடிப்படையில் விளக்க வேண்டும். இதனைத் திருப்திகரமாகச் செய்து முடித்தாலன்றிப் பரவலைத் தனித்தவொரு காரணியாக நாம் ஆராய்தல் இயலாது."

அருமந்த இவ்வெச்சரிக்கையை மனத்திருத்தி, சித்தருக்கும், தாவோயிகளுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச் சுருக்கமாக ஆராய்வோம். இரு சாராருக்கும் தொடர்பு இருந்தது வரலாற்றுண்மை. அதன் இயல்பும் பயனுமே சிறப்பாக நோக்கத்தக்கன.

முதலிலே தாவோயிகளைப்பற்றிச் சிறிது கூறுவோம். பண்டைக் காலத்திற் சீனாவிற் பெருவழக்காயிருந்த சமயங்கள் இரண்டு: கொன்பூசியஸ் மதமும் பௌத்தமுமே அவ்விரண்டும். இவற்றைவிட நாட்டிற் பிரபலமாயிருந்த நெறிகளுள் தாவோ மார்க்கம் ஒன்றாகும். தாவோ நெறியினை மதம் எனல் பொருந்தாது. பௌத்தத்தைப் போலவோ, அல்லது கொன்பூசியஸ் மதத்தைபோலவோ அது நாட்டின் அரச மதமாக விளங்கியது இல்லை. தாவோ மார்க்கத்தைப் பொறுத்தவரையில் அதன் கூறுகள் பல, சீனாவின் புராதன வரலாற்றுக் காலத்திலிருந்து வழிவழி வருகிறதெனச் சில அறிஞர் சுட்டிக்காட்டுவர். இந்தியாவிலே தோன்றிய தரிசனங்களுள் சாங்கியம் தொன்றுதொட்டே நிலவி வருவதுபோல, தாவோ கருத்துக்களும் மிகப் பழங்காலந் தொட்டே சீனாவில் இருந்து வந்தவை. ஆயினும் தாவோயிகள் பெரும்பான்மையினராக இருக்கவில்லை. பௌத்தம் கொன்பூசியஸ்மதம் முதலியன நிறுவன வடிவமும் அரசாங்க ஆதரவும் பெற்றுத் திகழ்ந்தமையால், அவற்றைப் பின்பற்றுவது எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. மதங்கள் மக்கட் சமுதாயத்திலே கூட்டு மனப்பான்மையின் அடிப்படையிற் செழித்து வளர்வன. சிற்சில நியமங்களை யாவரும் ஏற்றுக்கொள்வதே மதத்தின் மூலவேராகும். கொன்பூசியஸ் மதம் அவ்வாறே தழைத்து வளர்ந்தது.

உதாரணமாக, கொன்பூசியஸ் மோட்சம் என ஒன்றிருப்பதாக ஏற்றுக்கொண்டு, மனிதன் நல்லமுறையில் வாழ்ந்து, இறுதியில் அதனை அடைதல், வேண்டும் என்று போதித்தார். வையத்தில் வாழ்வாங்கு வாழும் முறையையே கொன்பூசியஸ் மதம் அழுத்திக் கூறியது; ஒரு வகையில், கொன்பூசியஸ் வள்ளுவரைப் போன்றவர். இன்னொருவகையில் முற்று முழுதான சமயவாதி. தமது காலத்துத் தந்தைவழிச் சமுதாயத்தை முழு நிறைவானதாகக் கொண்ட கொன்பூசியஸ், மனிதன் குரவரைப்போற்றி வாழவேண்டுமெனப் போதித்தார்; கடமைகளையும் சடங்குகளையும் மனிதர் வழுவாது செய்யவேண்டுமென வற்புறுத்தினார். கொள்கையளவில் இவ்வுபதேசங்கள் உயர்ந்தவையாயிருப்பினும், குடும்பம், அரசாங்கம் முதலிய நிறுவனங்கள் மனிதரைக் கட்டுப்படுத்துவனவாயமைந்தன. சடங்குகளும் சம்பிரதாயங்களும் மலிவதைத் தடுக்குங் சக்தியற்றிருந்தன. கொன்பூசியஸ் அன்பையும் நடுவுநிலைமையையும் எடுத்துரைத்தபோதும், நடைமுறையில் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் எழாமற் பார்த்துக் கொள்ளும் தத்தவமாகவே அவரது போதனை செயற்பட்டது.

இதற்கு மறுப்பாகத் தோன்றிய மார்க்கங்களில் தலையானது தாவோ நெறி எனலாம். தாவோயிகள் தெய்வத்தின் உண்மையை மறுத்தார்கள் அல்லர். ஆனால் சடங்கு - சம்பிரதாயங்களை வெறுத்தொதுக்கினர். சீன மெய்யியலின் உள்ளியல்பு என்னும் நூலில் பேராசிரியர் ஃபுங் யூ-லான் பின்வருமாறு கூறுகிறார்.

"தாவோயியம் தனித்து வாழ்ந்தோராலும் ஆண்டிகளாலும் வளர்க்கப்பட்டது. 'உலகத்தை வெறுத்தொதுக்கியவர்கள்' எனத் தம்மைத்தாமே கூறிக்கொண்டவர்களே அதனைப் பேணிப் போற்றினர்."

கொன்பூசியஸ் தாவோயிகள் சிலரைச் சந்தித்ததைப் பற்றிய செய்திகள் லுன்யூ என்ற நூலிற் கூறுப்பட்டுள்ளன. உலகைக் காக்கும் நோக்கங் கொண்டிருந்த கொன்பூசியஸ், தம்மால் அது ஆகாது எனத் தெரிந்தும், அதனைச் செய்ய முனைகிறார் என்று அத்தாவோயிகள் கூறினராம்.

"நிறுத்து! நிறுத்து! ஆட்சியிற் பங்கெடுப்பவரை ஆபத்து எதிர் நோக்குகிறது. உலகமெங்கும் கலக்கமும் குழப்பமும் நிரம்பி உள்ளன. அவற்றை எல்லாம் மாற்ற முடியுமோ? நாம் எம்மையே காப்பாற்றிக்கொள்வோம். பொருள்களைப் புறக்கணிப்போம்; வாழ்க்கையைப் பேணுவோம்."

தாவோயிகள் சிலரது கூற்றாகக் கூறப்படும் முற்கூறிய வாக்கியங்கள் அவர்களின் பொதுவான வாழ்க்கைத் தத்துவத்தைத் திரட்டிக் கூறுகின்றன எனலாம்.

குழப்பமும் கலக்கமும் நிறைந்த உலக வாழ்கையை வெறுத்தொதுக்கிய தாவோயிகள் உலகிலே மாற்றமற்ற நிலையான பொருள் ஒன்று உண்டென்பதை ஏற்க வேண்டியவராயினர். அதுவே தாவோ. அதுவே ஒன்றாகியும் பலவாகியும் தோன்றுகிறது. இவ்வாறு சிந்தித்த தாவோயிகள் தவிர்க்க முடியாதபடி பிரபஞ்சத்தைப்பற்றியும் இயற்கையைப்பற்றியும் ஆழமாக உன்னித்தனர். இயற்கை மாற்றங்களைப் பற்றிச் சில நியதிகளைக் கண்டறிந்தனர். அவற்றை ஒருவன் உணர்ந்துகொண்டால் துன்பமின்றித் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என எண்ணினர். சுருங்கக்கூறின், மனித உடலையும் கண்ணுங் கருத்துமாகப் பேணினர் தாவோயிகள். இயற்கையை ஊடுருவி உன்னித்த அவர்கள் "உயிரே பிரதானம்" என்றனர். இவ்வாறு கொள்ளவும், உடம்பைப் பேணுவதற்கு உகந்த மூலிகைகள், ஔடதங்கள், மந்திரதந்திரங்கள் முதலியவற்றைத் தேடுவது இயல்பாயிற்று. பிற்காலத்தில் சில தாவோயிகள் கருத்து முதல் வாதத்தின் அதீத செல்வாக்குக் காரணமாகக் காயத்தை பொய்யென்றும், அதிலிருந்து விடுதலை பெறுவதே வாழ்க்கையின் இலட்சியம் என்றும் போதித்தனர். ஆயினும் தாவோயியத்தின் அடிப்படை தேகவாதம், சடவாதம் என்பனவே. சக்தி (ஆற்றல்), இயற்கை விதி முதலியவற்றை ஓரளவு நுணுக்கமாக ஆராய்ந்த தாவோயிகள் பரம்பொருள் ஒன்றனை ஏற்றுக்கொண்டபோதும், பிரபஞ்சத்தைச் சடவாத அடிப்படையிலேயே விளக்கினர். ஏனெனில் உடலுழைப்பை ஆதாரமாகக் கொண்ட பரிசீலனைகளைச் செய்தவர்கள் தாவோயிகள். அப்பரிசீலனைகள் வௌித் தோற்றத்திற்கு மாயவித்தைகள்போலக் காணப்பட்டபொழுதிலும், உண்மையில் விஞ்ஞான விருத்திக்கும் பொருள்வாதத்திற்கும் நெருங்கிய தொடர்புடையன. இது குறித்துப் பேராசிரியர் நீதாம் சீனாவில் விஞ்ஞானமும் நாகரிகமும் என்ற நூலில் (இரண்டாம் தொகுதி. பக்.34) கூறுவன அறிவு கொளுத்து வனவாயுள்ளன:

"விஞ்ஞானமும் மாயவித்தையும் அவற்றின் தொடக்க நிலைகளில் வேறுபடுத்திப் பார்க்க முடியாதன. இயற்கையை அழுத்திக் கூறிய தாவோயிகள் காலக்கிரமத்திலே தவிர்க்கமுடியாதபடி தனியே அவதானிக்கும் படியிலிருந்து பரிசீலனை முறைக்குச் சென்றனர். இரசவாதம் தாவோயிகள் கண்டறிந்த மூலப்படிவ விஞ்ஞானமே யாகும். மருந்தாக்க இயலும் மருத்துவத் துறையும் தாவோயிகளுடன் நெருங்கிய தொடர்புடையனவே. தாவோயிகள் வெறும் அவதானிப்பிலிருந்து பரிசீலனைக்கு முக்கியமளித்ததன் பயனாக அன்றைய கல்வி முறையில் மகத்தானவொரு மாற்றத்தை உண்டாக்கினர். பரிசீலனை என்பது சூழ்நிலையை மாற்றியமைத்து ஒரு நிகழ்வை அவதானிப்பதுடன் நின்றுவிடவில்லை. நிலமானிய முறையில் வாழ்ந்த உயர்குடிப் பிறப்பாளர் மத்தியிலே உலாவிய சிறு கூட்டத்தினராகிய தத்துவவாதிகள் கையிலிருந்தும், அரசவை சார்ந்த கலை இலக்கிய காரரிடமிருந்தும், விலகி, உடலுழைப்பாலும் கைவினைகளாலும் உண்மைகளைக் கண்டறியும் மார்க்கத்தைப் புகுத்தியது. இதனால் தாவோயிகளது கருத்துக்களைச் சிறப்பாகக் கூறும் வாய்ப்பில்லாது போயிற்று. மரணமற்ற வாழ்க்கையை அளிக்கவல்ல குளிகையைச் செய்யும் பொருட்டு உலைக்களத்தில் தீப்பேணிக் கொண்டிருக்கும் இரசவாதியும், ஐம்பெரும் பூதங்களையும் ஆண் பெண் தத்துவத்தையும் எண்ணி அவைபற்றிய விளக்கத்தால் மன அமைதிபெறும் ஞானியும், பேய்பிசாசுகளை ஒட்டுவதற்காக யந்திரத்தகடுகள் வார்த்து மந்திர உச்சாடனஞ் செய்து மறைவினைகள் புரியும் தாவோயிய மாயவித்தைக்காரனும் அடிப்படையில் ஒரு நிகரானவரே. கைவினைகளால் இயற்கை வென்றடக்கியாளலாம் என்னும் நம்பிக்கை ஆதிகால மாயவித்தைக் காரனுக்கும் விஞ்ஞானிக்கும் பொதுவானது. இரகசிய மைறைவினைச் செயல்களில் நம்பிக்கை கொண்டோரும், இவற்றை நம்பாத பகுத்தறிவாளரும் என இரு திறத்தார் உலகில் இருந்தனர்.

நீதாம் அவர்களின் இறுதிவசனம் நுனித்து நோக்கத் தக்கது. கொன்பூசியஸ் மதம் பகுத்தறிவின் பேரில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, முதலியவற்றை வற்புறுத்தியது. மன்னர்கள் ஞானியராக இருக்க வேண்டும் எனவும் இலட்சியவாதம் பேசிற்று. ஆனால் நடைமுறையில் பலாத்காரமும், இலாப நோக்கும், ஈவிரக்கமற்ற சுரண்டலுமே நிலவின. எனவே, கொள்கைக்கும் செயலுக்கும், சித்தாந்தத்துக்கும் செயன் முறைக்கும் பெரும்பிளவிலிருந்தது. ஆஷாட பூதித்தனமும் போலியுபசாரங்களும் மலிந்தன. இவற்றையே வெறுத்தொதுக்கினர் தாவோயிகள். இப்பண்பு எமது சித்தரிடத்தும் சிறப்பாகக் காணப்பட்டதன்றோ? உலகத்தையும் உலக நிறுவனங்களையும் புறக்கணித்த தாவோயிகள், தமது உள்ளுணர்வையே அளவுகோலாகக் கொண்டு வாழ்ந்தனர். உள்ளொளியிற் கண்டவற்றை உரைத்தனர். தருக்கரீதியாகவன்றி அநுபூதி நெறி நின்று தமது உள்ளத் துணர்வுகளைக் கூறினர். இது வௌித் தோற்றத்திற்கு, பகுத்தறிவிற்கு முரணானதாயும், பிற்போக்கானதாயும் இருத்தல் கூடும். ஆனால் அது கண்டு நாம் ஏமாறக் கூடாது. பேராசிரியர் நீதாம் கூறுகிறார் (பக்.97):

"அநுபூதி நெறியும் பகுத்தறியும் வாதமும் எத்தகைய சூழ்நிலையிலே முற்போக்குச் சக்திகளாக விளங்குகின்றன என்றொருவர் கேட்கக்கூடும். பகுத்தறிவு வாதம் மூட நம்பிக்கைகளையும் அறிவுக்குப் பொருந்தாதனவற்றையும் எதிர்த்துப் போராடும் முற்போக்குச் சக்தியென்றும், அறியாமை காரணமாகச் சமுதாயத்திலே சிலர் பெற்றுவரும் தனிச் சலுகைகளை எதிர்க்கும் ஆயுதம் என்றும் பொதுவாக நாம் கருதுவதுண்டு. ஆனால், பகுத்தறிவின் அடிப்படையிலே எழுந்த சில சிந்தனைகள் வழக்காறற்ற பழமைப்பட்டவன் கடுமைச் சமுதாய அமைப்புடன் இணைந்து மக்களைக் கட்டுப்படுத்தி அமுக்கும் நிலையை அடையும்போது அநுபூதி நெறி புரட்சிகரமானதாக அமைதல் கூடும். அதன் வாயிலாக எதிர்ப்புக் குரல் எழக்கூடும்."

பகுத்தறிவு வாதமான கொன்பூசியஸ் மதம் புரையோடிப்போன சீனச்சமுதாயத்தின் அடக்குமுறைகள் அத்தனையையும் ஆமோதிக்கும் அரச மதமாக மாறியபோது, மறைமுகமாகவும் அநுபூதி நெறியிலும் கூறப்பட்ட தாவோயிய போதனைகள் சமுதாயச் செய்திகளை வேறுவடிவத்திற் கூறின. தாவோயிகளின் தத்துவார்த்தப் பாடல்கள் ஒருபுறமிருக்க, அவர்கள் அக்காலச் சமுதாய அமைப்பை எதிர்த்தவர்கள் என்பது பொதுவாக வற்புறுத்தப்படாத செய்தியாகும். நீதாம் கூறுகிறார் (பக்.100):

"கொன்பூசியஸ் மதத்தை மட்டுமன்றி நிலமானிய அமைப்புமுறை முழுவதையும் தாவோயிகள் வெறுத்தமை போதியளவு தௌிவுறத்தப்படாதிருப்பது வியப்புக்குரியதொன்றே. 'கீழைத் தேய ஞானத்தை எடுத்துக் கூறும் அப்பாவித் துறவிகள்' என்ற தோரணையில் அவர்களை வருணிப்பவர்கள், தாவோயிகள் கையாண்ட வன்சொற்களை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தல் தகும்."

சித்தர்களின் ஞான வாக்குகளைப் படித்தோர் பேராசிரியர் நீதாமின் கூற்று முற்றிலும் உண்மையே என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்கமாட்டார்.

"பொய்ம் மதங்கள் போதனைசெய் பொய்க்குருக்கள்"
என்றும்

"பூரணத்தை அறியா மூடர் நாய்போல குரைத்தலைவார்"
என்றும்

    "வாசிதனை அறியாத சண்டி மாக்கள்
    வார்த்தையினால் மருட்டி வைப்பார்."
என்றும் சித்தர்கள் பாடுவதைக் கேட்ட நாம் தாவோயிகள் குரலை விளங்கிக் கொள்வது கடினமன்று.

சித்தருக்கும் தாவோயிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படும் அம்சம் ஒன்றைக் குறிப்பிடலாம். தமது காலத்துச் சமுதாய அமைப்பையும் விதிமுறைகளையும் எதிர்த்தனராயினும், அவ்வெதிர்ப்பைச் செயல் வடிவாக்கினார் அல்லர். தமது ஆத்ம சாந்திக்கு வழி கண்டனரேயன்றிச் சமுதாயத்தை மாற்ற முனையவில்லை. இது அவர்ளது முற்போக்கினைக் குறைபாடுடைய தாக்கியது. திரு. ஃபுங் யூ-லான் எழுதுகிறார்:

"உலகிலிருந்து விலகிக் கொண்டமையால் (தாவோயிகள்) தம்மையே பேணுபவ ராயினர். இதன் விளைவாகச் சமுதாயத்தைப் பொறுத்தளவில் ஆக்கப்பூர்வமான நோக்குநிலை அவர்களிடத்துக் காணப்படவில்லை. தமது ஒழுக்கலாற்றுக்குச் சமாதானமும் விளக்கமும் கூறுவதிற் கைதேர்ந்தவராயிருந்தனர். இவ்வாறு பார்க்கும்பொழுது அவர்கள் சுயநலமிகளே."

    "தன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்
    தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
    பின்னையொரு கடவுளைப் பேண நினையார்
    பேரொளியைப் பேணுவார் என்று ஆடு பாம்பே!"
இது பாம்பாட்டிச் சித்தர் பாடல். இதனை ஒரு தாவோயியும் பாடியிருக்கலாம். ஆன்றவிந்து அடங்குவதே சித்தர் கொள்கை: அதுவே தாவோயிகளின் குறிக்கோளுமாம். தம்மை மறைப்பவர் சமுதாயச் சீர்திருத்தவாதிகளாகவோ, சமூகப் புனருத்தாரணஞ் செய்பவர்களாகவோ இருக்கவியலாது. ஆனால் தாவோயிகளிடத்தும் சித்தர்களிடத்துங் காணப்பட்ட இப்பலவீனத்தையும் குறைபாட்டையும் நாம் அளவுக்கு மீறிப் பெரிது படுத்தலாகாது. அன்றைய நிலையில் அவர்கள் காட்டிய எதிர்ப்பே பாராட்டத்தக்கது. சமுதாய மாற்றத்தினால் ஏற்படக்கூடிய புதிய வாழ்க்கையை எண்ணிப் பார்க்கும் இயக்கவியலறிவு அவர்களிடம் இருக்கவில்லை. எனவே, மாசு மறுவற்ற புராதன கூட்டுச் சமுதாய வாழ்க்கையையே மீண்டும் காணவிழைந்தனர். திரு ஹுவை-லூ சீன மெய்யியற் சுருக்கம் என்னும் நூலில் குறிப்பிடுவது போல," அவர்கள் புராதன சமுதாய வாழ்கையை மீட்டும் அமைக்க விழைந்தனர். அவர்கள் காலத்தில் பரவலாகக் காணப்பட்ட சமூக முரண்பாட்டையும் பேராட்டங்களையும் குறைப்பதற்கு அதுவே சிறந்த மார்க்கமாகத் தோன்றியது. இதனடிப்படையிலேயே அவர்களது சாத்வீக எதிர்ப்பும் எழுந்தது."

நமக்குப் பிடிக்காத சபையிலிருந்து நாம் எழுந்து போய்விடுவது போல, தமக்குப் பிடிக்காத நிலமானியச் சமூகத்திலிருந்து ஒதுங்கித் தனிவாழ்வு நடத்தினர் தாவோயிகள். நீதாம் கூறுவது போல,

"அவர்கள் அவ்வாறு விலகிக் கொண்டதே ஆட்சேபத்தைத் தெரிவித்ததற்குச் சமானமாகும்."

சமுதாயத்திலே பாரதூரமான எழுச்சியையோ மாற்றத்தையோ உண்டுபண்ணாவிட்டாலும், தாவோயிகளின் போதனைகள் தமிழ் நாட்டிலே சித்தர் பாடல்களைப் போல பாமர மக்களிடையே குறிப்பிடத்தக்களவு வழங்கி வந்துள்ளன. சீன வரலாற்றைப் படிக்கும் பொழுது, தாவோ மார்க்கத்தைப் பேணிய மக்கள் தாழ்ந்த நிலையிலிருந்த உழைக்கும் மக்களாகவும் இருந்து வந்தமை புலப்படும். மருத்துவம், மருந்தாக்க இயல் முதலியன மந்திர தந்திரங்களுடன் பிணைந்து காணப்படினும், வாழ்க்கையோடு தொடர்பு உடையனவே. அவை அன்று தொட்டுச் சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களிடையே பெருஞ் செல்வாக்குடன் விளங்கி வந்துள்ளன.

இரசவாதம், மாந்திரீகம், மருத்துவம், மருந்தாக்கம் முதலிய செயன்முறைகளை அடிப்படையாக கொண்டியங்கியமையால், ஓரளவிற்கேனும் இகலோக சிந்தையுடையது சித்தர் தத்துவம். தமிழ் நாடடிற் பல்வேறு காரணங்களினால் சித்தர்களது விஞ்ஞான நோக்கும் போக்கும் தொடர்ச்சியாக வளரவில்லை. வளராதது மாத்திரமன்றி வெகு விரைவிலேயே, சுற்று முற்றும் செல்வாக்குடன் விளங்கிய மாயாவாதத்திற்கும் கருத்து முதல் வாதத்துக்கும் எதிர் நிற்க மாட்டாது அவற்றுட் கலக்கலாயிற்று. ஆனால், சீனாவிலோ தாவோ மார்க்கம் மாத்திமன்றிப் பல்வேறு துறைகளிலே விஞ்ஞான அபிவிருத்திக்கும் ஏதுவாக விருந்தது. அதன் தருக்க ரீதியான விளைவுகளும் முக்கியமானவையே.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் சித்தர் தத்துவத்திற் பொதிந்துள்ள விஞ்ஞான நோக்கிலும், சமுதாய உணர்வே உயிராற்றலுடன் விளங்கிவந்திருக்கிறது எனலாம். சமயத்துறையிலே உயர் வைதிக நெறிகள் சித்தர் தத்துவத்தைப் "பஞ்சம" நிலையில் வைத்தபோதும், வீறும், தன்னம்பிக்கையும், கருத்துறுதியும் பொருந்திய சித்தர் வாக்குகள் உணர்ச்சி பூர்வமாகச் சமுதாயச் சீர்திருத்தத்தை மேற்கொள்ள விரும்புபவர்க்கு உறுதுணையாக இருந்துள்ளன. சென்ற நூற்றாண்டிலே இராமலிங்கரும் இந் நூற்றாண்டிலே பாரதியாரும் சித்தர்மரபைப் பேணியவரேயாவர். வள்ளலாரிடத்துக் காணப்பட்ட சமரச நோக்குச் சித்தர் வழி வருவதே. திரு.வி.கலியாண சுந்தரனாரிடத்தும் இம்மரபுணர்ச்சி ஒரோவழி தென்படுகிறது. இவை யாவும் சித்தர் தத்துவத்தின் உள்ளார்ந்த சமூக உணர்வுக்கும், முற்போக்குக்கும் கட்டியங் கூறுகின்றன. இவ்விடத்திலே இராமலிங்கர் சம்பந்தமாக ஒன்று கூறத் தோன்றுகிறது. அவருக்கும் அவர் காலத்தில் வாழ்ந்த சில சைவ சித்தாந்திகளுக்கும் மூண்ட பகைமைக்கு ஒரு காரணம் அவர் தம்மையொரு சித்தர் எனக் கூறிக்கொண்டமையுமாகும்.

    "தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம்
    துரும்பைப் பெருந் தூணாகத் தோற்றச் செய்வோம்
    ஆணைப்பெண்ணும் பெண்ணை ஆணும் ஆகச் செய்குவோம்
    ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே!
என்று சித்தர் வல்லபம் பாடிய பாம்பாட்டிச் சித்தர் முதலியோர் பாஷையிலேயே இராமலிங்கரும் தமது சித்திகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்; தமது மரணமிலாப் பெருவாழ்வுபற்றிச் சொல்லியிருக்கிறார். இதனை அவரது எதிரிகள் எவ்வாறு நோக்கினர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, நாவலர் அவர்களின் சீடராகிய கனகரத்தின உபாத்தியாயர் அவர் எழுதியுள்ளார்;

"கருங்குழி இராமலிங்கபிள்ளை யென்னுமொருவர் தாஞ்சிவானுபூதி பெற்றவரென்றும், ஓதாதுணர்ந்தவரெண்டும்... அம்மட்டில் நில்லாது, செத்தவர்களை உயிர்ப்பிப்போமென்றும், புத்திரரில்லாதவர் களுக்குப் புத்திர பாக்கியங் கொடுப்போமென்றும், குருடர் செவிடர் முதலானவர்களுடைய குறைபாடுகளை நீக்குவோமென்றும், பசித்தவர் களெல்லாருக்கும் அன்னங் கொடுப்போமென்றும், தண்ணீரால் விளக்கெரித்தோமென்றும், அம்மட்டில் நில்லாது, மாணிக்கவாசக சுவாமிகள் சிதம்பரத்திலே சபாநாயகருடன் கலந்ததுபோலத் தாமுங் கலப்போமென்றும், இன்னும் இவைபோலப் பல பிரயோசனமற்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு திரிவாராயினர்."

பாரதி இராமலிங்கரைப் பாராட்டியபோதும், தம்மைச் சித்தராகப் பாவித்தாரேயன்றி உண்மையில் தம்மைச் சித்தராகக் கொள்ளவில்லை. பாரதி சித்தரிடமிருந்து பெற்றது கவி வளமாகும். எவ்வாறாயினும் இது சித்தர் பாக்களின் காலங்கடந்த சிறப்பியல்பைக் காட்டுகின்றது. சித்தர் பாடல்களை விரிவாக ஆராய்ந்தால், எத்தனையோ அரிய செய்திகள் கிடைக்கும். அவற்றைத் தனியாகவும் ஒப்புநோக்கியும் ஆராய்தல் இன்றியமையாதது.



Oppiyal Ilakkiyam
(A study of Comparative Literature)
by Dr. K. Kailasapathy, M.A., Ph.D.


No comments:

Post a Comment