Tuesday, December 18, 2012

சபரிமலை ஐயப்பனின் திருவாபரணம்



ஸ்ரீ மஹாசாஸ்த்ரு ப்ரியதாஸன்
ஸ்ரீ V. அரவிந்த் ஸுப்ரமண்யம்
94 B மூன்றாவது வீதி டாடாபாட், கோவை 641 012
(aravindsai@gmail.com)

( எனது கட்டுரை ஜனவரி 2012 திரிசக்தி இதழில் வெளியானது)


சபரிமலையில் மகர ஸங்க்ரமண நேரத்தில் ஐயப்பனுக்கு சார்த்துவதற்காக பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணம் புறப்படும் கண் கொள்ளாக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. வருடத்தின் மற்ற நாட்கள் முழுவதும் பந்தளம் அரண்மனையின் பொறுப்பில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணம் வருடத்தில் 5-6 நாட்களுக்குத்தான் வெளியே கொண்டு வரப்படுகிறது.

பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக அரசர் உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். வானில் கருடன் வந்து திருவாபரணத்தை வட்டமிட்ட பிறகுதான் திருவாபரண யாத்திரை புறப்படும்.

இந்த ஆபரணப் பெட்டியை சுமப்பதற்காகவே பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களே இந்த பெட்டிகளை சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள்.

பந்தளம் அரண்மனையிலிருந்து தலைச்சுமையாக புறப்படும் திருவாபரண ஊர்வலத்தைக் காண வழியெங்கும் விளக்கேற்றி சாதி மத பேதமின்றி பக்தர்கள் காத்திருந்து வரவேற்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாகும்.

சுமார் மூன்று நாட்கள் காட்டுவழியில் வந்து சேர்ந்த ஆபரணம் பெரியானைவட்டத்தை அடையும் போது உண்டாவது பரவசம்.

சரங்குத்தி கடந்து பதினெட்டாம் படியேறி ஆபரணம் சன்னிதானம் அடைவதைக் கண்டாலே ஆனந்தம்.

ஐயப்பனுக்கு திருவாபரணம் சார்த்தி காணக்கிடைக்கும் தரிசனம் - கண நேரம் மட்டுமே கிடைக்கும் அரிதான ஒரு தரிசனம்.

அந்த ஆபரணங்களைக் குறித்து அறிய பல பக்தர்களுக்கு ஆர்வம் இருக்காதா ? சபரிமலைமெய்யனின் ஒரு அளவிடமுடியாத திருவருளின் காரணமாய் ஒரு நாள் முழுதும் அந்த திருவாபரணங்களை கண்ணாரக் காணும் பாக்யம் கிட்டியது.

பந்தளம் அரண்மனையில்
கட்டுரை ஆசிரியர் அரவிந்த் ஸுப்ரமண்யம்


பந்தளம் அரண்மனையில்
கட்டுரை ஆசிரியர் அரவிந்த் ஸுப்ரமண்யம்

சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன அந்த ஆபரணங்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு, பந்தள மன்னனால் சபரிமலை சாஸ்தாவுக்காக செய்யப்பட்டது.

இந்த வருடம் சிறப்பு அழைப்பின் பேரில் பந்தளம் அரண்மனைக்கே சென்று ஆபரணங்களை ஒரு நாள் முழுக்க காணு அரிய வாய்ப்பு கிடைத்தது.


பந்தளம் அரண்மனையில்
கட்டுரை ஆசிரியர் அரவிந்த் ஸுப்ரமண்யம்
இந்த ஆபரணங்களைக் குறித்த சரியான தகவல்கள் பக்தர்களிடம் போய் சேராததால் பலரும் பலவிதமாக  கூறிவருகிறார்கள்.

நான் கோவிலருகே நின்று கொண்டிருக்கும் போது கூட சிலர் "இது ஐயப்பனே அணிந்து கொண்டிருந்தது" என்று கூறினார்கள்.

பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோவில் கொண்ட தர்ம சாஸ்தாவுக்காக பந்தள ராஜனால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.

திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும் போது கண்டிருப்போம்; மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது அது.

1. திருவாபரணப் பெட்டி
2. வெள்ளிப் பெட்டி
3. கொடிப் பெட்டி

இந்த திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சன்னிதியை அடைகிறது. மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைப்புறத்தம்மன் சன்னிதிக்கு சென்று விடும்.



திருவாபரணப் பெட்டி - பெட்டி 1
ஐயப்பன் சன்னிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்ம சாஸ்தாவை அலங்கரிக்க கீழ்காணும் ஆபரணங்கள் உள்ளது.

ஃ திருமுகம் - (சாஸ்தாவின் முக கவசம்)
ஃ ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி)
ஃ வலிய சுரிகை (பெரிய கத்தி)
ஃ செறிய சுரிகை (சிறிய கத்தி)
ஃ யானை - யானை விக்ரஹம் 2
ஃ கடுவாய் - புலி விக்ரஹம் 1
ஃ வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு
ஃ பூர்ணா - புஷ்கலா தேவியர் உருவம்
ஃ பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்க தட்டு)
ஃ நவரத்தின மோதிரம்
ஃ சரப்பளி மாலை
ஃ வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)
ஃ மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)
ஃ எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

வெள்ளி பெட்டி (பெட்டி 2)
வெள்ளிப்பெட்டி என்று அழைக்கப்படும் இந்தப் பெட்டியில்

ஃ தங்கக் குடம் ஒன்றும்,
ஃ மற்ற பூஜா பாத்ரங்களும் இருக்கின்றன

இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும்

கொடிப்பெட்டி (பெட்டி 3)

மாளிகைப்புறம் சன்னிதிக்கு செல்லும் இந்த கொடிப்பெட்டியில்,

ஃ யானைக்கான நெற்றிப் பட்டம்
ஃ தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள்
ஃ குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கான பொருட்கள் உள்ளன

கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மாளிக்கப்புறத்து தேவி சரம்குத்தி வரையில் யானையில் பவனி வருவாள்

இந்த திரு ஆபரணங்கள் சபரிமலையில் கோவில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல

திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில் - அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும்.



இந்த ஆராய்ச்சியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்... ஆபரணம் சன்னிதானத்தை அடைவதை காண்பதே ஒரு பரவசமான அனுபவம் !

மகர நக்ஷத்ரம் உதித்து, " வானில் கருடன் வட்டமிட ", அந்த ஆபரணங்களை ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும் நொடி பேரானந்தம்; அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று. அந்தக் கணமே பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனம் கிடைக்கும் நேரம் - அதுவே பரவசத்தின் எல்லை


ஸ்வாமியே சரணம் ஐயப்பா

-------------------------------------
தமிழகத்தில் திருவாபரணம்

சபரிமலை ஐயப்பனின் திருவாபரணம் மிக ப்ரத்யேகமான ஒன்று. அது பகவானின் நேரடியான உத்தரவின் பேரில் பந்தள ராஜனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இதனைப் போல் வேறு எந்த இடத்திலும் அமைக்கப்படவில்லை. வேறு ஐயப்பன் கோவில்களுக்கு திருவாபரணங்கள் இருந்தாலும் அவை சபரிமலை திருவாபரணங்களைப் போல இருக்காது.

கடந்த ஆண்டு -  ஐயப்பனின் சந்நிதியில் கிடைத்த உத்தரவுப்படி,  கோவை மாவட்டத்திலுள்ள ஸ்ரீ மஹா சாஸ்த்ரு ஸேவா ஸங்கம், சபரிமலை திருவாபரணம் போலவே அச்சாக செய்ய தீர்மானித்தார்கள். வேலையை துவங்கிய அன்று இரவே ஸ்தபதியின் கனவில் ஐயப்பன் தோன்றி ஆசீர்வதித்த அற்புதமும், வெறும் ஏழே நாளில் அந்த திருவாபரணம் உருவான அற்புதமும் நிகழ்ந்தது. ஆக, சபரிமலை திருவாபரணம் போலவே அமைந்துள்ள திருவாபரணம் உலகிலேயே இது ஒன்று தான்.

பூஜையின் துவக்கத்திலேயே கருடனு வட்டமிட்டு வர அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள். சபரிமலை போலவே வருடத்துக்கு ஒரே ஒரு நாள் ஸ்ரீ மஹா சாஸ்த்ரு ஸேவா ஸங்கத்தின் சாஸ்தா ப்ரீதி பூஜையின் போது இந்த திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தர்ம சாஸ்தாவுக்கு சார்த்தப் படுகிறது.

-------------------------------------
Thank to : Mr. Aravind  aravindsai@gmail.com
                 https://shanmatha.blogspot.com/2012/12/blog-post.html 

No comments:

Post a Comment