இந்துமதம் இறை வழிபாடு விளக்கம்
[ கேள்வி பதில் ]
Hindu worship Description [ Question Answer ]
[ கேள்வி பதில் ]
Hindu worship Description [ Question Answer ]
இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?
இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும்.
அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள, இறையருளானது மந்திர, யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளது என்றும் எனவே ஆலயங்களிலே சென்று வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து போய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார். அத்துடன் ஒரு பசுவின் உடல் முழுவதும் இரத்தம் வியாபித்திருந்தாலும், அந்தப்பசுவின் மடியில்(முலையில்) தான் இரத்ததை பாலாக மாற்றித் தரும் சுரப்புகள் உள்ளன. அதேபோல இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும்; ஆலயத்தில் அமையப் பெற்றுள்ள மந்திர, யந்திர, பூசைகளின் சக்திகளினாலே சுரக்கப் பெறும் இறைவனின் கருணையை சுலபமாக பெற முடிகின்றது.
பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது?
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
இதன் பொருள்:-
நிலம் ----- (சப்தம்,பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்கள் கொண்டது)
நீர் ----- (சப்தம், பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்கள் கொண்டது)
தீ ----- (சப்தம்இ பரிசம், ரூபம் என்னும் 3 குணங்கள் கொண்டது)
காற்று ----- (சப்தம், பரிசம் என்னும் 2 குணங்கள் கொண்டது)
ஆகாயம் ----- (சப்தம் என்னும் ஒரே குணம் கொண்டது)
கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர் என்பதால் அவர் எங்குமே வியாபித்திருக்கும் பொழுது உருவ வழிபாடு எதற்காக?
இறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவவழிபாடு முக்கியமானதாகின்றது. நாம் காணாத இறைவனை, அதைக் கண்ட யோகிகள், ஞானிகள் அது இப்படித்தான் இருக்கு என்று கூறும் போது அதை நம்பியே ஆகவேண்டி உள்ளது.
"இறைவன் ஒருவனே" என்று சொல்லப்படும் பொழுது வெவ்வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு?
ஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்.
அவ்வாறாயின் சிவலிங்கம் எந்த உருவமாகவும் (கை,கால் போன்ற உறுப்புகள் கொண்டில்லாமையினால்) புரிந்து கொள்ள முடியவில்லையே?
சிவலிங்கம் என்பது அருவுருவத் திருமேனியென்று சொல்லப்படுகின்றது. அதாவது கால் கைகளுடன் கூடிய உருவமாகவும் இல்லாமல் உருவமே இலையென்று சொல்லுகின்றவாறும் இல்லாமல் இரண்டுமே கலந்து அருவுருவத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றது. லிங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் அடையாளம் என்று பொருள்படும். எனவே சிவனை அடையாளப்படுத்துவதால் சிவலிங்கம் என்று கொள்ளப்படுகின்றது.
சிற்ப சாத்திர முறைப்படி சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டதென்றும் அதாவது:-
அடிப்பாகம் ----- பிரம்ம பாகம் ---- பிரம்ம லிங்கம் ----ஆத்ம சோதி
நடுப்பாகம் ----- விஷ்ணு பாகம் ----- விஷ்ணு லிங்கம் -----அருட்சோதி
மேல்பாகம் ---- சிவன் பாகம் ----- சிவலிங்கம் ----- சிவசோதி
என்றும் சொல்லப்படுகின்றது. எனவே சிவலிங்கத்தை வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்கிய அருள் கிடைக்கும்.
உருவமாக அமைக்கப்பட்டிருக்கின்ற இறைவனை விக்கிரகம் என்று கூறுவதேன்?
விக்கிரகம் = வி + கிரகம் (வி = மேலான, கிரகம் = உறைவிடம்) அதாவது மேலான உறைவிடம் என்னும் பொழுது இறைவன் சிறப்பாக உறையுமிடமென்று பொருள்படும்.
அதாவது இறைவன் ஒளி மயமானவன். கல்லை ஒன்றுடனொன்று உரசும்பொழுது ஒளி (நெருப்பு) உண்டாவதைக் காணலாம். எனவே தான் அப்படிப்பட்ட கல்லிலே இறைவனது திருவுருவங்கள் செதுக்கப்பட்டு கும்பாபிசேகத்தின் பொழுது கோவில்களிலே பிரதிட்டை செய்யப்படுகிறது.
"சொல்லுக் கடங்கான்காண் சொல்லறிந்து நின்றவன்காண்
கல்லுள் ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்".
என்று பட்டினத்தார்" கூறுகின்றார்.
அடுத்து உற்சவ மூர்த்திகள் தாம்பர(தாமிர) விக்கிரகங்களாக அமைவதன் காரணமென்னவென்றால், உலோகம் மின்சாரத்தைக் கடத்த வல்லது. எனவே மூலத்தானத்திலிருக்கும் அருள் மின்சாரத்தை வீதியிலே செலுத்தவல்லது தாம்பர மூர்த்திதான் என்று வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
சிற்பியினாலே கல்லிலே வடிக்கப்படும் பொழுதோ அல்லது கோவிலில் பிரதிட்டை செய்யப்பட முன்னரோ ஆச்சாரமற்ற இடங்களில் இந்த விக்கிரகங்களை வைப்பது தவறா?
கும்பாபிசேகம் நடைபெறும் வரையில் இவ்விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக் கணிக்கப்படுவதால் தான் அவ்வாறு வைக்கப்படுகின்றது. கும்பாபிசேகத்தையொட்டி இந்த விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது.
புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தாற்ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில்களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம்.
விக்ரகங்களை பீடத்தில் ஸ்திரமாக வைக்க, பீடத்துக்கும் விக்ரகத்துக்கும் இடையில் உள்ள பகுதியில் “அஷ்டபந்தனம்’ என்ற கலவையைச் சாற்றுவது வழக்கம்.
கொம்பரக்கு ----- 1 பங்கு
குங்குலியம் ----- 3 பங்கு
காவிக்கல் ----- 3 பங்கு
வெண்மெழுகு ----- 3 பங்கு
எருமை வெண்ணெய் ----- 3 பங்கு
செம்பஞ்சு ----- 3 பங்கு
சுக்கான்தூள் -----முக்காற் பங்கு
சாதிலிங்கம் ----- காற்பங்கு
ஆகிய எட்டு விதமான பொருட்களை அளவுப்படி கலந்து, இடித்துச் சேர்த்து சூடாக்கி அணிவிப்பது அஷ்டபந்தனமாகும்.
கும்பாபிஷேகம் செய்வதன் பொருள் என்ன?
கும்பாபிஷேகம் செய்யும்போது கும்பத் தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகத்தின்மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி, அந்தக் கும்பத் தீர்த்தத்தை இறை பிம்பத்திலும் கோபுர கலசங்களிலும் அபிஷேகம் செய்வர்.
கடவுளின் உடலாகக் கும்பத்தையும், அதன் மேல் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்பு களையும், உள்ளே ஊற்றப்பட்ட நீர் ரத்தமாக வும், அதனுள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே வைக்கப்பட்ட தேங்காய் தலையாகவும், கும்பத்தின் கீழ் பரப்பப்பட்ட தானியம் ஆசனமாகவும் பாவித்து; வஸ்திரம், சந்தனம், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து யாக மேடையில் அமைப்பது வழக்கமாகும். சாதாரண கும்பமானது மந்திர சக்தியால் உயர்கலசமாக மாறுகிறது. கும்பாபிஷேகத்தால் ஆலயத்தின் இறைசக்தி பன்மடங்கு பெருகுகிறது.
1. தெய்வ மூர்த்தங்களையும் கோவிலையும் புதிதாக அமைத்து நிர்மாணம் செய்வது ஆவர்த்தம் எனப்படும்.
2. கோவிலோ, தெய்வ மூர்த்தங்களோ வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டால், அவற்றை மறுபடி அமைப்பது அனுவர்த்தம் என்று சொல்லப்படும்.
3. ஆலயம் பழுதடைந்துவிட்டால் அதற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிப்பது புனஸ்வர்த்தம் ஆகும்.
4. கள்வர்களால் அபகரிக்கப்பட்ட மூர்த்தி களை மீண்டும் பிரதிஷ்டை செய்வது அந்தரிதம் என்று சொல்லப்படும்.
கோவில்களிலுள்ள விக்கிரகங்களிற் சில பார்ப்பதற்குப் பயங்கரமாகத் தோற்றமளிப்பதன் காரணமென்ன?
இறைவன் எம்மால் அறியப்பட முடியாதவாறு ஊர், பேர், உருவம் குணம்குறிகள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மாக்களின் மீது கொண்ட அன்பினால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரணமாகக் கருணை வடிவானவையே. இருப்பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை நல்வழிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் தோற்றங்கள் தான் சற்று பயங்கரமாகத் தோற்றமளிக்கின்றன.
இறைவன் கருணை உள்ளங் கொண்டவரெனும் பொழுது சிவபெருமான் தனது காலுக்கடியில் ஒருவரை மிதிப்பது போன்ற நிலை எதற்காக?
இறைவன் எப்பொழுதுமே கருணையுள்ளங் கொண்டவர்தான்;. இருப்பினும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதனையே அவர் கொண்ட உக்கிர தோற்றங்கள் வெளிப்படுத்துகின்றன. சிவபெருமானின் காலுக்கடியிலே இருப்பவரின் பெயர் முயல கன் என்பதாகும். சிவபெருமானிடத்திலே கோபங்கொண்ட தாருகா வனத்து ரிசிகள் வேள்வியொன்றை நிகழ்த்தி, அதன் மூலமாக முயலகனையும் பாம்புகள் மிருகங் களையும் தோற்றுவித்து சிவபெருமானைத் தாக்கி அழிக்கும் வண்ணம் ஏவினார்கள். இதையுணர்ந்த சிவபெருமான் தன்மீது ஏவப்பட்ட மிருகங்களில் மானையும் மழுவையும் தனது இரு கரங்களிலும் தாங்கிக் கொண்டாரென்றும் பாம்புகளைத் தனக்கு அணிகலன்களாக்கிக் கொண்டாரென்றும், சிங்கத்தையும் யானையையும் கொன்று அவற்றின் தோல்களை தனது ஆடைகளாக்கிக் கொண்டாரென்றும் முயலகனை தனது காலின் கீழ் வைத்துக் கொண்டாரென்றும் ஆகம விளக்கம் கூறுகின்றது.
ஆம். கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களிலே அமைக்கப்பட்டிருக்கின்ற விக்கிரகங்களிலே தெற்கு நோக்கியிருப்பவர் தட்சிணாமூர்த்தியாகும். இவரை யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூரத்தி, ஞான தட்சிணாமூரத்தி, வியாக்கியான தட்சிணாமூரத்தி என்று நான்கு வகையாகக் கூறப்பட்டாலும் பெரும்பாலும் கோவில்களில் வியாக்கியான தட்சிணாமூரத்தியையே காணக் கூடியதாகவுள்ளது. அடுத்து சிவாலயங்களின் பின்புறச் சுவரிலே இருப்பவர் "இலிங் கோற்பவர்". திருமாலும் பிரம்மனும் சிவபெருமானின் அடிமுடி தேடிச் சென்றதனைக் கூறுகின்ற வடிவம்தான் இலிங்கோற்பவ மூர்த்தியாகும். அடுத்து வடக்குப் புறச்சுவரிலே பிரம்மன், துர்க்கை போன்றவர்களுக்கு இடமுண்டு.
அகம்பாவம் இருக்கக் கூடாதென்பதை வலியுறுத்தவே இறைவன் இவ்வாறான திருவிளையாடலை நிகழ்த்தினார். அதாவது செல்வத்துக்கு அதிகாரி திருமால் கல்விக்கு அதிகாரி பிரம்மன் எனவே செல்வத்தினாலேயோ அல்லது கல்வியினாலேயோ இறைவனைக் காண முடியாது உண்மையான பக்தியினால் தான் இறைவனைக் காணமுடியுமென்பதை உணர்த்துவதற்காகவே இறைவன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார்.
தண்டேசுவரர் சந்நிதானத்தை வணங்கும் முறை பற்றியும் வெவ்வேறு கருத்து உண்டா?
அதாவது கையிலே தட்டி வணங்குவது பற்றி இரு வேறு கருத்துக்கள் கூறுவார்கள்.
1) சண்டேசுவர் இறைவனை தியானித்தபடியே நிட்டையிலே இருப்பாரென்றும், அவ்வாறு இருப்பரை நமது கைகளிலே தட்டி விழிக்க வைத்து வணங்குவதாகக் கூறுவார்கள்.
2) ஆலயத்தின் உடமைகள் யாவற்றுக்கும் பொறுப்பானவர் சண்டேசுவரர் தானென்றும் அதனாலே ஆலயத்தின் உடமைகளெதனையும் நாம் எடுத்துச் செல்ல வில்லை என்ற பாவனையாகவே எமது கைகளை ஒன்றுடனொன்று தடவி (காலப் போக்கில் கையில் தட்டுவதாகிவிட்டதாகவும்) வணங்குவதாகவும் கூறுவார்கள். எப்படி வணங்கினாலும் சண்டேசுவரர் கருவறைக்கு மிக அண்மையாக கருவறையை நோக்கி இறைவனையே தியானித்துக் கொண்டிருப்பதால் சண்டேசுவரர் சந்நிதானத்துக்கும் கருவறைக்கும் இடையிலே சென்று இடையூறு செய்யாது போனவழியிலேயே திரும்ப வேண்டுமென்று கூறப்படுகிறது.
இறை வழிபாட்டுக்கும் நவக்கிரக வழிபாட்டுக்கும் சம்பந்தமுண்டா?
கோவிற் கிரியைகளில் சிலசந்தர்ப்பங்களில் நவக்கிரகபூசை முக்கிய இடம்பெறுவதாகவும் புராணங்கள் செவ்வாயை முருகனாகவும், புதனை நாராயணனாகவும் இவ்வாறே ஏனைய கிரகங்களையும் தனித்தனித் தெய்வங்களுடன் தொடர்புபடுத்திக் கூறுவதோடு பெருந்தெய்வங்களே நவக்கிரகவழிபாடு நிகழ்த்தியதாகவும் புராணங்களை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் அவர்கள் கூறியுள்ளார்கள்.
சூரியன் ---சூடான சர்க்கரைப் பொங்கல்
சந்திரன் --- குளிர்ந்த பால் பாயாசம்
செவ்வாய் --- பொங்கல்
புதன் --- புளியோதரை
குரு ---- தயிர்சாதம்
சுக்கிரன் ---- நெய்ப்பொங்கல்
சனி ----- எள்ளுசாதம்
ராகு ---- உளுந்து சாதம்
கேது ---- அன்னம
போன்றவையாகும்.
தீபாராதனைகள் பல்வேறு தீபங்களாலும், உபசாரங்கள் வெவ்வேறு பொருட்களினாலும்(உதாரணமாக சாமரம், குடை) செய்யப்படுவது பற்றி கூறுவீர்களா?
இதன் விளக்கம் மிகவும் பரந்துபட்டதொன்றாகும். இருப்பினும் மிக சுருக்கமாகப் பார்ப்போம்.
ஐந்து அடுக்குள்ள அலங்காரதீபம் ஐந்து கலைகளையும் குறிக்கின்றது.
மூன்று அடுக்கள்ள தீபம் மூன்று தத்துவங்களையும் குறிக்கின்றது.
நாகதீபம் புத்திர விருத்தியின் பொருட்டும்
இடபதீபம் பசுவிருத்தியின் பொருட்டும்
புருசதீபம் சகல சித்தியின் பொருட்டும்
நட்சத்திரதீபம் மல நிவாரணத்தின் பொருட்டும்
கும்பதீபமும் அதனுடனிருக்கும் ஐந்து தட்டைகளும் முறையே மலநிவாரணத்தின் பொருட்டும், ஈசானம் முதலிய ஐந்து குணங்கள் பதிதற் பொருட்டும்
கற்பூர ஆராத்தியானது ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பப் பெருவாழ்வை அடையும் குறிப்பை உணர்த்துவதாக செய்யப்படுகின்றது. அதாவது கற்பூரம் வெண்மை நிறம் கொண்டது. அக்கினி பற்றிக் கொண்டதும் அதன் வடிவாகி முற்றுங் கரைந்து ஒளியிலே சங்கமமாவது போல ஆன்மாவும் ( வெண்மை நிறமான )சாத்வீக குணம் பொருந்தி ஞானாக்கினியாகிய இறையருளில் முற்றாக தன்வடிவிழந்து இறைவ னுடன் இரண்டறக் கலக்கின்ற தத்துவத்தை உணரத்த்தும் பொருட்டும் செய்ய ப்படுகின்றது.
மற்றும் கண்ணாடி முதல் ஆலவட்டம் வரை காட்டி ஆராதனை செய்யப்படுவது
கண்ணாடியிலே சிவசக்தியும் அதன் ஒளியில் சிவனும் இருப்பதால் அதைக்கொண்டு ஆராதித்தால் சிவலோக பதவி கிட்டும்.
குடையிலே சூரிய மண்டலமும் அதனுடைய காம்பிலே சூரியனும் இருப்பதால் இதனால் ஆராதனை செய்வதனால் மிகுந்த பலத்தையும் அடையமுடியும்.
சாமரையிலே வாயுவும் அதன் காம்பிலே கார்க்கோடனும் இருப்பதால் மலநீக்கம் பெற்று திருவருள் கிட்டுமென்று கூறப்படுகிறது.
விசிறியிலே சூரியனும் அதன் காம்பிலே பதுமன் என்ற பாம்பும் இருப்பதால் இதுகொண்டு ஆராதனை செய்வதனால் சகல போகங்களும் கிடைக்கும்.
ஆலவட்டத்தினாலே ஆராதனை செய்வதனால் தர்க்காயுளும் சகல சுகபோகங்களும் கிடைக்குமென்றும் கூறப்படுகின்றது.
எந்த ஓரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. அத்தோடு முனனொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார்.
வழிபாடு ஆரம்பிக்கும் பொழுது ஒரு தடவை (தலையிலே மூன்று முறை) குட்டி வணங்குதல் போதுமானதாகும். அதாவது எந்த ஆலயங்களுக்குச் சென்றாலும் முதலிலே நாங்கள் வணங்க வேண்டியது விநாயகரையே. எனவே தான் முதலிலே ஒரு தடவை குட்டி வணங்குதல் போதுமானதென்று கூறப்படுகின்றது.
இறைவனுக்கு அபிசேகம் முடிவடைந்து அலங்காரம் செய்யும் பொழுதும், திருவமுது செயயும் பொழுதும் வணங்கலாகாது.
ஆலயங்களில் எங்கே எவ்வாறு விழுந்து வணங்கல் வேண்டும்?
ஆலயங்களிலே விழுந்து வணங்கும் பொழுது எப்பொழுதும் பலிபீடம் கொடிமரத்துக்கு அப்பால் வடதிசை நோக்கி தலையும் தென்திசை நோக்கி காலும் இருக்கும்படியாக ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்து வணங்கலாம்.
அப்படியாயின் பரிவார மூர்த்திகளை எவ்வாறு விழுந்து வணங்குவது?
பரிவார மூர்த்திகளை விழுந்து வணங்குவதென்றால் மற்றத் தெய்வங்களின் பக்கம் கால்கள் நீட்டப்படாதவாறு பாh;த்துக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டுதான் சில ஆலயங்களின் உட்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.
அப்படியாயின் பலிபீடம், கொடிமரத்துக்கு அப்பால் மட்டும் விழுந்து வணங்குதல் போதுமானதா?
ஆம். ஆலயத்தின் பலிபீடத்தை வணங்கி, எம்மிடத்திலுள்ள அகங்காரம் மற்றும் தீய எண்ணங்களையெல்லாம் அங்கே பலியிட்டு தூய மனதோடு இறைவனை வணங்க வேண்டுமென்ற பாவனையாகத்தான் நாம் இந்த அட்டாங்கநமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் போன்றவற்றை செய்கின்றோம்.
உட்பிரகாரத்தைச் சுற்றிவரும் பொழுது மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
சுற்றிவரும் பொழுது சந்நிதானத்தின் புறச்சுவர்களில் தலையை முட்டிவணங்குவது , சூடம் ஏற்றுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
நல்ல கேள்வி. நிறைய விடயங்கள் இருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் எல்லாவற்றையும் சரிவரச் செய்வதென்பது முடியாதகாரியம். இருப்பினும் எம்மால் செய்யக்கூடியவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். முக்கியமாக புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலயங்களில் பரிவார மூர்த்திகளுக்குரிய சந்நிதானங்கள் மிகவும் சிறிய அளவிலேயே அமைக்கப்படுவதால் அங்கே எழுந்தருளியிருக்கின்ற விக்கிரகங்களும் வெளியே நிற்பவர்களின் கைக்கெட்டிய தூரங்களில் தான் அமைகின்றன. எவ்வளவுதான் கைக்கெட்டிய தூரத்திலிருந்தாலும் கைகளினாலே இறைவனைத் தொட்டு வணங்குவதோ அல்லது நாம் கொண்டு சென்ற மலர்களை இறைவனுக்கு நாமாகவே சாத்துவதோ செய்யத்தக்கதன்று.
உண்மைதான் ஆலயங்களிலே ”பரம் பொருளின் பெரும் புகழைப் பாடிப் பணிதலன்றிப் பிறவார்த்தை யாதொன்றும் பேசற்க” என்று தான் கூறுவார்கள். இங்கே பிறவார்த்தை அல்லது வீண்வார்த்தை என்பது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும்படியாக நாங்கள் பேசுவதையே வலியுறுத்தி நிற்கின்றது. எனவே நாங்கள் ஏதாவது பேசவேண்டுமென்றால் பக்கத்திலே நின்று வணங்குகின்றவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் சற்று அப்பால் சென்று மெதுவாகப் பேசிக் கொள்ளலாம். அதிலும் பூசை நடைபெறும் பொழுதும் வேதபாராயணங்கள் ஓதப்படும்பொழுதும் அமைதி காக்கப்படவேண்டும்.
கோவில்களிலே மடைப்பள்ளியிலிருந்து (சிவாச்சாரியார்கள்) நைவேத்தியம் எடுத்துச் செல்லும் பொழுது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அப்பொருள்களை அவர்கள் தங்கள் வயிற்றுக்கு மேலாகவோ அல்லது தோள்களுக்கு மேலாகவோ தான் தூக்கிச் செல்வார்கள். அதே போன்று இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இறைவனுக்குரிய நிவேதனங்கள் எவையென்று கூறமுடியுமா?
சிவன் ------ வெண் பொங்கல், வடை, வெறும்சாதம்.
பார்வதி ------ சர்க்கரைப் பொங்கல், உழுந்து வடை.
விநாயகர் ------ மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும்.
முருகன் ------ வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவு.
பெருமாள் ------ லட்டு, வெண்பொங்கல், புளியோதரை.
பூசை நேரங்களில் தீபாராதனை காண்பதற்காக ஒருவரையொருவர் முட்டிமோதி ஓடிச்சென்று வழிபாடு செய்வது சரியாகுமா?
இது சரியா அல்லது பிழையா என்பது முக்கியமல்ல. நாம் தீபாராதனை காண்பதற்காக அவசரமாகச் செல்லும் பொழுது வயதானவர்கள் மீதோ அல்லது ஒரு சுகவீனமானவர் மீதோ மோதி அவர்களின் உடலிலோ உள்ளத்திலோ வலியினை ஏற்படுத்திவிட்டு தீபாராதனை காண்பதில் பயனேதுமில்லை. இது தான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அதுமட்டுமல்ல பரிவார மூர்த்திகளுக்கு பூசை நடைபெறும் பொழுது சிலசமயங்களில் பக்தர்கள் முன்னே ஓடிச்சென்று சந்நிதானத்தின் வாயிலையே முற்றுகையிடுவதால் பூசை செய்யும் சிவாச்சாரியார்களே உள்ளே செல்ல சிரமமான நிலை ஏற்படுவதுமுண்டு.
சிவன் கோவில்கள் :-- குறைந்தது 3 முறை : அதன் மேல் 5, 7, 9 ------------இவ்வாறாக
விநாயகர் :- ஒரு முறை
அம்பாள் :- 4 முறை
விஷ்ணு :- 4 முறை
முருகன் :- 3 முறை
மேலே குறிப்பிட்டவாறு கோவில் வழிபாட்டு முறைகளில் கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக 3 முறையோ அல்லது விரும்பினால் அதற்கு மேல் 5,7,9 ----- இவ்வாறாக வணங்கலாம். சில ஆலயங்களின் பிரகாரத்தினுடைய உட்சுவர்களிலே மேற்பாகம், நடுப்பாகம், கீழ்ப்பாகம் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து மேற்பகுதியிலே தொடங்கி தொடர்ச்சியாக இறைவனின் திருச்செயல்களைச் சித்திரமாக விபரிப்பது, தேவாரங்களை எழுதிவைப்பது போன்ற முறையுமுண்டு. இப்படியான சித்திரங்களையோ அல்லது தேவாரப் பதிகங்களையோ நாங்கள் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு சென்று தொடங்கிய இடத்துக்கே வந்து திரும்பவும் இரண்டாம் மூன்றாம் முறையென்று எம்மையறியாமலே பிரகாரத்தை மூன்றுமுறை சுற்றி வந்துவிடுவோம்.
” யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம்வருவார்”
என்று சிவஞான சித்தியார் கூறுகின்றது. எனவே சிவன்கோவில் வலம்வரும் முறையினைக் கடைப்பிடிப்பதில் தவறில்லையென்று கூறப்படுகின்றது.
ஆச்சாரியார்களிடத்தில் பிரசாதம் ( விபூதி, தீர்த்தம் போன்றவை ) பெறும் பொழுது எவ்வாறு பெறுதல் வேண்டும்?
இடது கையானது கீழேயும் வலது கையானது மேலேயும் இருக்கும்படியாக இரண்டு கைகளையும் சேர்த்து பெறவேண்டும்.
ஓற்றை விரலினாலே விபூதி தரிக்கலாமா?
எப்பொழுதும் விபூதி தரிக்கும் பொழுது சிவசிவ என்று சொல்லி வலது கையின் நடுவிரல்கள் (சுட்டுவிரல்,நடுவிரல், மோதிரவிரல்) மூன்றினாலும் நெற்றியிலே தரித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக தரித்துக்கொள்வதை உத்தூளனமாகத் தரித்தல் என்றும், நீரிலே குழைத்து மூன்று குறிகளாக தரித்துக்கொள்வதை திரிபுண்டரமாகத் தரித்தல் என்றும் சொல்லப்படும்.
திரிபுண்டரமாகத் தரிக்கத்தக்க அங்கங்கள் எவை?
சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுக்கள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.
சந்தனம், குங்குமம் போன்று ஒருவிதமான கரியநிறப் பொட்டும் சிலசமயங்களில் வழங்கப்படுகின்றதே?
ஆம், அதன் பெயர் ”யாகரட்சை” என்பதாகும். இது அக்கினிகாரியம் செய்யும்பொழுது ஓமகுண்டத்தைச் சுற்றி வைக்கப்படும் தர்ப்பையை ஓமாக்கினியிற் சுட்டு நெய் சேர்த்துக் குழைக்கப்பட்டு நெற்றியிலே பொட்டாக அணியப்படுகின்றது. திருநீற்றுக்கு இரட்சையென்ற பெயருமுண்டு. இறைவனை வேண்டி நிகழ்த்தப்பட்ட யாகத்தில் பெறப்பட்டதால் ”யாகரட்சை” என்று பொருள்கொள்ளலாம்.
விபூதி தரித்துக் கொள்வதன் காரணம் என்ன?
சிவபக்தர்களுக்குரிய இலட்சணங்கள் மூன்று. அதாவது விபூதி தரித்தல் , உருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் செபித்தல் போன்ற மூன்றாகும். இம்மூன்றிலும் விபூதிதரித்தலானது மிகச்சிறிய பராயத்திலேயே ஆரம்பிக்கக் கூடியதொன்றாகும். எனவே சைவர்களாகிய நாமெல்லாம் விபூதி தரித்துக்கொள்ள வேண்டுமென்பதையே சைவசமயம் கூறுகின்றது.
”கங்காளன் பூசுங் கவசத்திருநீற்றை
மங்காமற் பூசிமகிழ்வாரே யாமாகிற்
றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே”
என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பசுவின் சாணத்திலிருருந்து தான் விபூதி தயாரிக்கப்படுகின்றதா?
கடைகளில் விற்கப்படும் விபூதிகளெல்லாம் பசுவினது சாணத்திலிருந்து தான் தயாரிக்கப் பட்டவையா என்பது தெரியவில்லை. ஆனாலும் பசுவினது சாணத்திலிருந்து கற்பகவிதிமுறையில் (இது பற்றிய விளக்கத்தைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்) தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாகும். சில கோவில்களில் கோபூசை (பசு பூசை) சிறப்பிடம் பெறுகின்றது.
பசுவின் வலது கொம்பில் ----- கங்கையும்
பசுவின் இடது கொம்பில் ----- யமுனையும்
பசுவின் மத்திய பகுதியில் ----- சரஸ்வதியும்
பசுவின் முன்காலில் ---------------- பிரம்மனும்
பசுவின் பின்காலில் ----------------- உருத்திரனும்
பசுவின் குளம்புகளில் ------------- தேவர்களும்
பசுவின் பால்சுரக்கம் மடியில் -----சமுத்திர தேவர்களும்
வாசம் செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இப்படியான புனிதத்தன்மை வாய்ந்த பசுவினுடைய சாணத்திலிருந்து பெறப்படுகின்ற விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியதென்று புராண வரலாறுகள் கூறுகின்றன. திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தில் இதன் பெருமையை விரிவாகக் காணலாம்.
பலிபீடத்துக்கும் மூலமூர்த்திக்குமிடையே குறுக்கே செல்லலாகுமா?
பலிபீடமென்று நாம் பேசிக்கொள்ளும்பொழுது அங்கே முதலாவதாக கொடிமரமும் அடுத்து பலிபீடமும் அதனையடுத்து மூலமூர்த்தியை நேராக நோக்கியவாறு அவருக்குரிய ஊர்தியும் (அந்தந்த தெய்வத்துக்குரிய வாகனம் உதாரணமாக விநாயகருக்கு பெருச்சாளி போன்று) அமைந்திருக்கும். இங்கே கூறப்படுவது யாதெனில் பரமாத்மாவாகிய இறைவனுக்கும் அவரை அடையும்பொருட்டு சதாசர்வகாலமும் அவரையே நோக்கியவாறு அமைந்திருக்கும் சீவாத்மாவாகிய ஊர்திக்குமிடையே குறுக்கே சென்று இடையூறு செய்யக்கூடாதென்றே கூறப்படுகின்றது.
அப்படியாயின் கொடிமரத்துக்கப்பால் சென்றுதான் நாம் மற்றப்பக்கம் செல்ல வேண்டுமா?
ஆம், அவ்வாறு செல்லும்பொழுதிலும் தம்பத்துப் பிள்ளையாரைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அடியவர்கள் கொடிமரத்தையண்டிக் குறுக்காகச் செல்லும் பொழுது (விரைவாக) அவர்களது ஆடை கொடிமரத்துக்கு கீழேயிருக்கும் பிள்ளையாரின்மீது படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஆலயங்களிலே பக்தர்கள் ”அரோகரா” என்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது?
அதாவது ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும். எனவே ” ஹர ஓ ஹர” என்பது தமிழிலே ”அரோகரா” என்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள். அரோகரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடுமென்று நம்பப்படுகின்றது.
நன்றி - திரு. பேரி
ஆலயங்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன? நெய்தீபம் ஏற்றுவது எதனால்?
கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லு கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத் துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது. ஒளி வடிவான இறைவனை ஒளி மூலம் நாம் தரிசித்து பக்திப்பூர்வமாக மகிழ்கிறோம். ஞானமே வடி வான இறைவன் நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம். இந்த மகத்தான தத்துவத்தைக் காட்டுவதே கற்பூர தரிசனத் தின் விளக்கமாகும். தற்போது கற்பூரங்களில் ரசாயனம் சேர்ந்து வருவதால் சுத்த நெய் தீபத்தில் கோவில்களில் ஆரத்தி காண்பிக் கப்படுகிறது.
புண்ணிய நதிகளில் குளிப்பதால் பாவங்கள் விலகுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. தீபாவளி யின்போது கங்கா ஸ்நானம் என்பது சிறப் பாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் காசிக்குச் சென்று கங்கையில் குளிப்பது அவ சியமா? காசிக்குப் போக முடியாதவர்கள் என்ன செய்வது?
புண்ணிய நதிகளில் மகான்கள் வந்து குளிப்பதால், அது நம் பாவங்களைப் போக்கக்கூடிய சக்தியைக் கூடுதலாக அடைகிறது.
காசியில் தீபாவளி சமயத்தில் நீராடுவது மிகச் சிறந்ததாகும். இதனால் பித்ருக்கள் நலமடைவார்கள். அதனால் நமது குடும்பம் நலமாக இருக்கும். வறுமை நீங்கும்; புத்திர பாக்கியம் ஏற்படும்; சந்ததிகள் நலமாக இருப்பார்கள்.
தீபாவளியன்று, காசியில் உள்ள விஸ்வநாதரின் தரிசனமும் தங்க அன்னபூரணியின் தரிசனமும் புண்ணிய பலனை அளிக்கக்கூடியது.
தீபாவளியன்று அதிகாலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் வெந்நீரில் கங்கை குடியிருப்பதாக ஐதீகம். காசிக்குச் செல்பவர்கள் அங்கு வர இயலாதவர் களுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு நீராடினால், அதனால் ஏற்படும் புண்ணியம் அவர்களைச் சேரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கங்கையில் மடி, தீட்டு பார்ப்பது இல்லை. கங்கை நீரின் துளிகளைத் தலையில் தெளித்துக் கொண்டாலும் கங்கையில் நீராடிய பலன்களை அடைய முடியும்.
கங்கை நீரை சொம்பில் அடைத்து எடுத்து வந்து வைத்துக் கொண்டால் பல காலம் அது கெட்டுப் போகாமல் இருக்கும். அந்தப் புண்ணிய நீரை, மரணம் அடைந்தவர்களின் சரீரத்தில் தெளித்தாலும் அதனால் முழுக்காட்டினாலும் காசியில் மரணமடைந்த புண்ணியம் உண்டாகும்.
நமது உடலிலுள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும் வகையில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே- அது எவ்வாறு?
நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள்தான் ஆலய கட்டிட நிர்மாணத்திலும் கையாளப்படுகிறது. மூலாதாரம்- கர்ப்பக்கிரகம்; சுவாதிஷ்டானம்- அர்த்த மண்டபம்; மணிபூரகம்- மகா மண்டபம்; அநாகதம்- ஸ்நாந மண்டபம்; விசுத்தி- அலங்கார மண்டபம்; ஆக்ஞை-சபா மண்டபம்.
உபவாசத்தின்போது பலகாரங்கள் சாப்பிடலாமா?
உபவாச காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும். “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள் வதே பலகாரம் என்பதாயிற்று. இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படு கிறது. இது தவறு. இது உண்மையான உபவாசம் ஆகாது. ஜீரண உறுப்பு களுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே உபவாசத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு உபவாசம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி உபவாசம் இருப் பதே சிறந்ததாகும்.
விபூதியை பஞ்சாட்சரம் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அதன் பொருள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
திருநீறு மிகவும் புனிதமானது. இதற்குப் பல பெயர்கள் இருக்கின் றன. நம்மை ரட்சிப்பதால் அதனை ரட்சை என்று குறிப்பிடுகிறார்கள். வினைகளை அழித்துப் பொடிபடச் செய்வதால் அதனைத் “திருநீறு’ என்று சொல்லுகிறோம். மகத்தான பெருமை பொருந்திய ஐஸ்வரியத்தை அளிப்பதால் அதனை “விபூதி’ என்றும் அழைக்கின்றோம். ஐந்தெழுத்தை ஓதித் தருவதால் விபூதியை பஞ்சாட் சரம் என்றும் குறிப்பிடுகிறோம்.
ஆன்மிகம், மருத்துவம், ஜோதி டம் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கிய சித்தர்கள் எந்தெந்த ஊர்களில் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தயவு செய்து கூற முடியுமா?
காயகல்பம் மூலமாக என்றும் இளமையுடன் வாழ்ந்து, உரிய காலம் வந்தவுடன் தமது உடலை உயிருடன் ஜீவ சமாதியாக்கிக் கொண்டவர்கள் சித்தர்கள். அவர் கள் ஜீவசமாதியாகும்போது அங்கே என்ன ஆற்றல் விளைய வேண்டும் என்று எண்ணி முடிவு செய்தார் களோ, அந்த ஆற்றல் அவ்விடங் களில் இன்றும் அவர்களது சக்தியுடன் எழும்பிக் கொண்டிருக்கிறது என் பதுதான் விசேஷ தத்துவமாகும். அப்படி சித்தர் கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.
கமலமுனி- திருவாரூர்.
கும்பமுனி- கும்பகோணம்.
அகப்பேய் சித்தர்- எட்டுக்குடி.
இடைக்காடர்- திருவண்ணாமலை.
திருமூலர்- சிதம்பரம்.
சட்டைமுனி- சீர்காழி.
மச்சமுனி- திருப்பரங்குன்றம்.
போகர்- பழனி.
குதம்பைச் சித்தர்- மயிலாடுதுறை.
கொங்கணர்- திருப்பதி.
அகத்தியர்- திருவனந்தபுரம்.
கோரக்கர்- பேரூர்.
இப்படிப்பட்ட தலங்களில் உள்ள தீர்த்தங் களில் நீராடி, சித்தர்களின் ஜீவசமாதிகளைத் தரிசிப்பது சிறப்பான நன்மைகளைத் தரும்.
தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங் கள் கூறுகின்றன. எதையெதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் விளையும் என்பதைக் கூறுங்களேன்.
அன்னதானம்- வறுமையும் கடன்களும் நீங்குகின்றன.
பூமிதானம்- பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும்.
கோதானம்- ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும்.
வஸ்திரதானம்- ஆயுளை விருத்தி செய்யும்.
தீப தானம்- கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.
தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாக்கும்.
அரிசி தானம்- பாவங்களைப் போக்கும்.
தயிர் தானம்- இந்திரிய விருத்தி உண்டாக்கும்.
நெய் தானம்- நோய்களை நிவர்த்தி செய்யும்.
நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாக்கும்.
பால் தானம்- துக்கம் நீக்கும்.
தேங்காய் தானம்- பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தங்க தானம்- குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்.
வெள்ளி தானம்- மனக்கவலை நீக்கும்.
பழங்கள் தானம்- புத்தியும் சித்தியும் தரும்.
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பலன்கள் உண்டு.
சாதாரண மந்திரங்களுக்கும் பீஜா மந்திரங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? குறிப்பிட்ட பயன்களை அடைவதற்காக மந்திரங்களைப் பிரயோகம் செய்வது சரிதானா?
பீஜம் என்பது விதை என்று சொல்லப்படும். பீஜாட்சரங்கள் என்றால், மந்திரங்களின் வித்துகள் என்று பொருள் கொள்ளுகிறோம். பீஜாட்சரங்களை மந்திரங்களுடன் இணைத்துச் சொன்னால்தான் மனதில் அலை எழுப்ப முடியும். அவை மனதைத் தூண்டும் சக்தி உடைவை.
பீஜா மந்திரங்களில் “ஐம்’ என்பது சரீரத்தை யும், “ஹ்ரீம்’ என்பது மனத்தையும், “ஓம்’ என்பது மூலாதாரத்தையும் ஊக்குவிக்கும். மேலும், இந்த பீஜாட்சரங்கள் உச்சரிப்பவரின் உட லுக்குள் சென்று பக்தி நெறிக்கு அழைத்துச் செல்லும் பக்குவத்தையும் ஏற்படுத்தும். அதனால் பீஜாட்சரங்களை மந்திரங்களுடன் இணைத்துச் சொல்வதே சிறந்த பலனைத் தரும்.
மந்திரங்களை உச்சாடனம் செய்யும் பொழுது, அவை எதனைக் குறித்துச் செய்யப் படுகின்றனவோ, அந்தப் பலன்களை உறுதியாக அளிக்கும். மந்திர உபாசனை செய்யும்போது நல்லதற்கும் தீயதற்கும் அவை உதவும். சரியான உச்சரிப்புடன் சொற்சோர்வு இல்லாமல், நல்ல நோக்கங்களுக்காக உச்சாடனம் செய்தால் நாம் எதிர்பார்க்கும் நன்மை உண்டாகும். உதாரண மாக, சந்தான கோபால கிருஷ்ணனுக்குரிய மந்திரத்தை பக்தியுடன் ஜெபம் செய்து ஹோமத்தில் பிரயோகம் செய்தால் நிச்சயமாகப் புத்திர பாக்கியம் உண்டாகும். வெண்ணெய்யில் மந்திர உச்சாடனம் செய்து கொடுத்தால் சந்தான பாக்கியம் ஏற்படும் என்பதில் உறுதியாக இருக்கலாம்.
Thanks & Regards
ஹரிமணிகண்டன்
Harimanikandan .V
Harimanikandan .V
Be Good & Do Good
No comments:
Post a Comment