Monday, January 19, 2015

குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி


குணங்குடி மஸ்தானின் இயற்பெயர் சுல்தான் அப்துல்கதிர் என்பதாகும். பிறப்பு கி.பி. 1788 ம் ஆண்டு தொண்டியில். கீழக்கரை சென்று ஷெய்கு அப்துல்காதர் லெப்பை ஆலிம் (தைக்கா சாஹிபு) என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் திரிசிரபுரமடைந்து ஷாம் ஷாஹிபிடம் தீட்சை பெற்று, தம் 17ஆவது வயதில் துறவு பூண்டார்.

"அதன்பின் அவர்கள் பித்தர் போன்று தலைவிரிக் கோலமாய்ப் கோவணம் அணிந்து, சதுரகிரியிலும் புறாமலையிலும் யானைமலையிலும் இன்னும் ஏனைய மலைகளிலும் இருளடை வனங்களிலும் விலங்குசெறி கானகங்களிலும் பல்லாண்டுகள் தனித்திருந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்குச் சருகும் கிழங்கும் தழையும் குழையும் கருகும் கனியும் காயும் புசித்துத் தம் உயிரைத் தம் உடலைவிட்டும் ஓடிவிடாதவாறு பாதுகாத்து வந்தனர். சிலபொழுது மரங்களில் மேலாம் காலும் கீழாம் தலையுமாகத் தொங்கி, இறைவனைப் பலப்பட வணங்கியும் வந்தனர்.

இவ்வாறு ஏழாண்டுகள் கழிந்தன.

அதன்பின் அவர்கள் காரைக்கால் சென்று அங்குள்ள குப்பை மேடுகளில் தங்கித் தம் காலத்தைக் கழித்து வந்தனர். மக்கள் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதையும் பொருட்படுத்தாது அங்குத் தங்கியிருந்த அவர்களைச் சில ஆலிம்கள் அணுகி, அவர்கள் தொழாது தூய்மையற்ற இடத்தில் தங்கிப் போலித்துறவி வேடம் புனைந்திருப்பதாகக் குறைகூறினர். உடனே அவர்கள் தண்ணீர் கொணரச் செய்து உளூச் செய்து அங்கேயே தொழுதனர். ஆனால் தொழத் துவங்கியவர்கள், துவங்கியவர்கள்தாம். மூன்று நாள்கள் அவர்கள் உணர்வற்று நின்ற நிலையிலேயே நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு அவர்களைக் குறைகூறிய ஆலிம்கள் அவர்களின் மகாத்மியத்தை உணர்ந்து, அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். இந்நிலையில் அவர்களும் அவ்வூரைவிட்டும் நீங்கி விட்டனர்
பிறகு சென்னை வந்து தம் வாழ்வின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளையும் சென்னை இராயபுரத்தில் யோகநிஷ்டையில் கழித்த அவர், தம் 47ஆம் வயதில் அங்கேயே காலமானார். அவருடைய பெயரால் உருவான 'தொண்டியார் பேட்டை', இன்று தண்டையார் பேட்டை என மருவி வழங்குகிறது.

குணங்குடியார் இஸ்லாமியச் சூபி ஞானியாக அறியப்பட்டாலும்கூட அவரது சீடர்களாக இருந்த பலரும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களே என்பதில் இருந்து இந்து - இஸ்லாமிய பாரம்பரிய உறவை அறிய முடிகிறது. குணங்குடி மஸ்தான் சாகிப் எழுதிய 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களும் முக்கியமானவை. முகியத்தீன்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. இஸ்லாமியச் சமயத்தை நடைமுறைப்படுத்திய முகமது நபி பற்றிய பாடல்கள் முக்கியமானவை.

இதேபோல அகத்தீசன் சதகமும் 100 பாடல்களைக் கொண்டது. குருவருள் நிலை

இவர்களின் சில பாடல்கள்:

அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.

எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்... அந்த பேரின்பைதை தந்திடுவாய்.

ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.

ஆதியானவனே... ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே

வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே

வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள்யாருள்ளார் பராபரமே

அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே

அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும்மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே.

நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே.

thank:
http://shivayamjeeva.blogspot.in/2013/01/blog-post_2782.html

No comments:

Post a Comment