ஒரு நாட்டின் அரசிக்குத் திருமணம் நடந்தால், கல்யாண விருந்து எப்படியிருக்கும்? அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடந்து முடிந்திருக்கிறது மதுரை மீனாட்சியின் திருக்கல்யாண விருந்து.
திருக் கல்யாணத்துக்கு (30.4.15) முந்தைய நாள் மதியம் தொடங்கிய விருந்து, கல்யாணத்தன்று மாலை வரையில் இடைவிடாமல் நடந்தது. திருக்கோயில் நிர்வாகமோ, விருந்து குழுவினரோ ஒரு பைசாகூடச் செலவழிக்காமல் ஒரு லட்சம் பேருக்கு விருந்து வழங்குவது சாத்தியமா?
பக்தர்களின் பங்களிப்பு
விருந்துக்குத் தேவையான அரிசி முதல் கடுகு வரை அனைத்தும் பக்தர்கள் கொண்டுவந்து கொடுத்தவை. மீனாட்சி கல்யாணத்துக்கு தன்னுடைய பங்காக 50 கிராம் கடுகு, 100 நல்லெண்ணெய் கொடுக்கும் பக்தர் முதல் மூட்டை மூட்டையாக அரிசி கொடுத்த பக்தர் என்று எல்லாரும் பங்களிக்கலாம்.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், கத்தரிக் காய், முருங்கைக் காய், தக்காளி போன்ற நாட்டுக் காய்கறிகளை லாரியில் வந்து இறக்க, பரவை காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகளோ உருளை, கேரட், முள்ளங்கி, பீன்ஸ், அவரை போன்ற மலைக் காய்கறிகளைக் கொண்டுவந்து குவித்துவிட்டனர்.
இந்தக் காய்கறிகளை நறுக்க பக்தர்கள் வரலாம் என்று விருந்தை ஒருங்கிணைத்த பழமுதிர்ச்சோலை முருகன் திருவருள் பக்த சபை அறிவிப்பு வெளியிட, திருமணத்துக்கு முந்தைய நாள் அதிகாலையிலேயே, அரிவாள்மனை கத்தியுடன் பெண்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்துவிட்டனர். விருந்துக்கென ஒதுக்கப்பட்டிருந்த மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமர்ந்து காய்கறிகளை மலைபோல் வெட்டிக்குவித்தார்கள்.
பெரியவர்கள் காய்கறிகளை வெட்ட, குழந்தைகளோ சிறு கூடையில் அவற்றை சேகரித்து சமையல் நடந்த பகுதிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். இந்த ஓட்டம் இரவுவரை தொடர்ந்தது. தாளிக்கும் கறிவேப்பிலையின் எடையே 150 கிலோ.
“இந்த விருந்தை நடத்தியது நாங்கள் அல்ல. அன்னை மீனாட்சிதான் நடத்தினாள். நாங்கள் வெறும் பரிமாறும் கரண்டி தான்” என்று அடக்கத்துடன் சொன்னார் பழமுதிர்ச்சோலை திருவருள் பக்த சபை தலைவர் சாமுண்டி விவேகானந்தன்.
மதுரையில் கேட்டரிங் தொழில் செய்யும் ரமேஷ் என்பவர், வடைச்சட்டி, கண் கரண்டியுடன் வந்து, இரண்டு நாட்களும் ஓய்வே இல்லாமல் தன் குழுவினருடன் வடை சுட்டார். 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான வடைகளைச் சுட்டிருப்பார்.
நம் வீடுகளில் திருமணம், திருமண விருந்துக்குப் பிறகு மொய் எழுதும் சம்பிரதாயம் நடைபெறும். அதேபோல மீனாட்சி திருக் கல்யாணத்திலும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மொய் எழுத நிறைய ஊழியர்கள் இருந்தார்கள். சாதாரணக் குடும்பப் பெண்கள் முதல் பெரும் முதலாளிகள் வரை பயபக்தியோடு மீனாட்சி கல்யாணத்துக்கு மொய் எழுதினார்கள். வெறும் 50 ரூபாய் கொடுத்தாலும் கூட, அன்னை மீனாட்சி கல்யாணத்துக்கு மொய் எழுதிய பெருமிதம் அவர்களது முகத்தில் தெரிந்தது.
மீனாட்சிக்கும், சிவபெருமானுக்கும் மதுரையில் திருக் கல்யாணம் நடந்தபோது, கல்யாண விருந்துக்கெனத் தயாரான உணவு மீந்துபோய்விட்டதாகச் சற்றுக் கர்வத்துடன் மீனாட்சி சொன்னதாகவும், உடனே தன்னுடைய பூதகணங்களில் ஒன்றான குண்டோதரனை அழைத்து சிவன் சாப்பிடச் சொன்னதாகவும் புராணக் கதை ஒன்று இருக்கிறது.
ஆனால், கடந்த 16 ஆண்டுகளாக மீனாட்சி திருக் கல்யாண விருந்தில் தயாரிக்கப்படும் உணவின் அளவு ஆண்டுதோறும் 20 முதல் 30 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால், ஒருமுறை கூட உணவு மீதமானதே இல்லை.