Thursday, July 13, 2017

யாகினீ தேவி (ஸஹஸ்ராரம்)

Thank ; http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4266&Cat=3யாகினீ தேவி (ஸஹஸ்ராரம்)

Image may contain: 1 person
ஆறு ஆதாரங்களையும் கடந்து வந்தால் ஸஹஸ்ராரத்தில் (உச்சந்தலை) பேரானந்தம் ஏற்படுகிறது.
இதன் தேவதை யாகினீ. எல்லாமாய் இருப்பவள் அவள். அதன் காரணமாகவே சகல தளங்களுடன் கொண்ட தாமரையில் இருந்து கொண்டு சர்வாயுதங்களையும் தரிக்கிறாள்.
எல்லா வர்ணங்களிலும் பிரகாசிக்கிறாள். எல்லா அன்னங்களிலும் விருப்பமுடையவளாக இருக்கிறாள்.
சகல தாதுக்களும் அடங்கியுள்ள சுக்லத்தின் அதிதேவதையாக இருப்பவள் இத்தேவி. இந்த சுக்லதாது எல்லா தாதுக்களுக்கும் நிறைவைக் கொடுப்பது. முதுமையிலும் உடலைக் காப்பது. ஆண், பெண் அனைவருக்கும் நிறைவைக் கொடுப்பது.
எல்லா திக்குகளிலும் முகமுள்ளவள். சகலவிதமான சுகங்களையும் பக்தர்களுக்கு வாரி வாரி வழங்கும் இந்த அம்பிகை ஈசனிடம் பிரியமாக இருப்பவள்.
பாடல, சியாம, ரக்தபீதம் முதலிய எல்லா வர்ணங்களும் சேர்ந்தது ஸர்வவர்ணம். வர்ணம் என்றால், அக்ஷரம் என்றும் பொருள் உண்டு. 50 அக்ஷரத்திற்குள்ள தேவதைகளும் இத்தேவியின் பரிவார தேவதைகள். அ முதல் க்ஷ வரையிலும், அதேபோல க்ஷ முதல் அ வரையிலும் கணக்கிட்டால் மொத்தம் 100. இந்த 100 தேவியர் ஒவ்வொருவரும் 10 தளங்கள் வீதம் ஆயிரம் தளங்களில் வீற்றிருக்கின்றனர்.
எல்லா அக்ஷரங்களோடு தேவி அருள்பாலிப்பதால் ‘ஸர்வவர்ணா பிசோபிதா’ எனப்படுகிறாள். சுக்லத்தின் அதிதேவதையாதலால் சுக்லி எனும் திருப்பெயரும் இவளுக்கு உண்டு.
இதையே லலிதா ஸஹஸ்ரநாமம், 
ஸஹஸ்ரதள பத்மஸ்தா ஸர்வவர்ணோப ஸோபிதா 
ஸர்வாயுததரா சுக்ல ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ
ஸர்வோதனப் ப்ரீதசித்தா யாகின்யம்பா ஸ்வரூபிணி 
-எனப் போற்றுகிறது.

சுப்பிரகாசரை ஜோதிஸ்வரூபரை 
சொல்லுக்கெட்டாத பரப்பிரம்மத்தை
அப்பிரகாசரை அகண்டரூபரை
ஆதியந்தமற்ற ஜோதியைக் கண்டு தொழுதேன் 
-எனும் பாடல் ஸஹஸ்ராரத்தைப் பற்றி பேசுகிறது.

ஆறு சக்கரங்களையும் கடந்து வந்த குண்டலினி சக்தி இங்கு பேரானந்தம் கொள்கிறாள். முதல் மூன்று ஆதாரங்களில் இருக்கும்போது சரீர சுக எண்ணங்கள் உண்டாகின்றன. அதற்கு மேல் உள்ள ஆதாரங்களைக் கடக்கும்போது அன்பு, தயை, தூயசிந்தனை, ஆத்ம சிந்தனை போன்ற உயர் குணங்கள் மேலோங்கும் நாடிகள் வலுவடைவதால், மேதை என்ற புது நாடி உண்டாகிறது. அதனால் ஆத்ம தேஜஸ் உண்டாகிறது. ஸஹஸ்ராரத்தில் சிவனும் சக்தியும் அர்த்த நாரியாக விளங்குகிறார்கள். பின் சிவமும் சக்தியும் வெவ்வேறாக ஆனால், ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் மூலாதாரம் முதல் எல்லா ஆதாரங்களிலும் விளங்குகின்றனர்.
அந்தந்த ஆதாரங்களில் சிவசக்திகள் வெவ்வேறு பெயர்களும் வடிவங்களும் கொள்வர். இதை ஆதிசங்கரர் தன் ஸெஸந்தர்யலஹரியின் 9ம் ஸ்லோகமான ‘மஹிம் மூலாதாரே’ எனும் துதியில் அதை விளக்கியுள்ளார். அதில் ஸஹஸ்ராரத்தில் அம்ருத தாரையை பொழிந்துவிட்டு மீண்டும் குண்டலினி மூலா தாரத்தையே அடையும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
சக்தி வழி பாட்டின்படி பாற்கடல் என்பது மூலாதாரத்தில் குண்டலினி சக்தி உறங்கிக் கொண்டிருக்கும் இடத்திலுள்ள சுக்ல தாதுவின் தேக்கம்.அதுவே குண்டலினிக்கு ஆகாரமாகிறது. சாமான்யர் களுக்கு மறைந்து யோகிகளுக்கு மட்டுமே அறியக் கிடைப்பதால் இதனை ‘மறைகின்ற வாரிதி’ என்பர். மேலும் யோக சாதனையில் பிராணன், அபானன் என்ற இரண்டு வாயுக்கள் சேரும்போது மூலக்கனல் ஏற்பட்டு சுக்கிலத்தை வற்றச் செய்யும். சுக்கிலம் என்ற ஆகாரம் வற்றியவுடன் குண்டலினி இறைதேட மேலே ஏறும். இந்நிகழ்வு ஆப்யாந்திர உற்சவம் எனும் (குண்டலினியை எழுப்பி ஸஹஸ்ராரத்தில் சேர்ப்பிப்பது) நிகழ்வு அம்பிகைக்கு மிக மிகப் பிரியமானதாகக் கூறப்பட்டுள்ளது.
ஸஹஸ்ராரத்தில் எல்லாம் அமைதி பெறுகிறது. அங்கு உண்டாகும் அமுத தாரை உடல் முழுதும் வியாபிக்கிறது. ஆன்மா, பேரானந்தத்தில் மிதக்கிறது. குண்டலினி சக்தி என்ற அம்பாள் சொரூபம், நம் இதயத் தாமரையில் அமர்வதால் பேரானந்தம் உண்டாவது இயற்கைதானே!
எண்ஜாண் உடம்பிற்கு சிரஸே பிரதானம் என்பர். நம் தலையில் பிரம்மகபாலம் என்ற மண்டையோட்டின் கீழ் மிருதுவான ஜவ்வினால் வளைவாக மூடப்பட்ட மூளை இருக்கிறது. அது ஏராளமான நரம்புகள் சூழப்பட்டு 1000 இதழ் கமலம் போல் உள்ளது. அம்பிகையின் முக்கியமான கலையான சாதா எனும் கலை பிரகாசிக்கும் இடம் அதுவே. அதுவே மஹாபத்மாடவீ எனப்படும்.
மகாபத்மம் எனில் 1000 இதழ்களுள்ள தாமரை புஷ்பம். ஆயிரம் இதழ்களும் மலர்ந்தால் அது ஒரு காடு போல் காட்சியளிக்கும். எனவேதான் மஹா பத்மாடவீ (அடவீ - காடு). இங்கு அருளும் தேவியை லலிதா ஸஹஸ்ரநாமம் சதாசிவ பதிவ்ரதா என போற்றுகிறது.
ஆதிசங்கரர் தன் பவாநீ புஜங்க ஸ்லோகத்தில், ‘ஷடாதார பங்கேருஹாந்தர் விராஜத் எனும் துதியில் மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களின் நடுவே செல்லும் ஸுஷும்னா நாடியின் நடுவில் அளவுகடந்த ஒளியுடன் விளங்குவதும், சிரசிலுள்ள சந்திரமண்டலத்தைப் பெருகச் செய்கின்றதும் அங்கு பெருகும் அம்ருதத்தைச் சுவைத்தவண்ண மிருப்பதும் அமுத மயமான வடிவம் கொண்டதுமான குண்டலினி சக்தியாகிய பவானியைத் துதிக்கிறேன்’ என்று பாடியுள்ளார்.
ஸஹஸ்ரதளபத்மத்தை சக்தியர் கோயில் என்பர். அதோமுகமாக உள்ள தாமரையே ஊர்த்வ முகமாகத் திரும்பும்போது இடக்கலையை வலப்புறமாக மாற்றினால் நாத முழக்கம் கேட்கும். அந்த நாதத்தில் மனம் பதிந்தால் சித்தம் சிவமாகிவிடும். சித்தம் சிவமாகும்போது ஜீவனும் சிவனாகிவிடும். அந்நாதம் பிரணவகோஷம் என அழைக்கப்படுகிறது. இடகலைக்குரிய சிவமும், பிங்கலைக்குரிய சக்தியும் சேரும்போது இக்கோஷம் சாதகர்களுக்குக் கேட்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மூலாதாரத்தில் நஞ்சாக இருக்கும் சக்தி குண்டலினி யோகப்பயிற்சி மூலம் ஸஹஸ்ராரத்தில் அமுத ரசமாகிறது. நஞ்சு அமுதமாவதும், வறியவர் செல்வர் ஆவதும், கல்வியறிவில்லாத மூடன் மகாமேதாவியாவதும், தேவியின் திருவருளாலேதான். ஈசன் ஆலகால விஷத்தை உண்டபோது கூட தேவியின் மாங்கல்ய பலத்தாலும், தாடங்க மகிமையாலுமே ஈசன் இறக்கவில்லை என்பதை ஆதிசங்கரர் கூட கூறியுள்ளார்.
‘வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோரி
பொறுக்கும் தகைமை புதியதன்றே புது நஞ்சை உண்டு
உறுக்கும் திருமிடற்றான் இடப் பாதம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவேனே’ என்றார் அபிராமி பட்டர். தேவர்களைக் காக்க விஷமுண்டவரின் மனைவி பக்தர்களின் பிழைகளைப் பொறுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது! ‘அம்மா! நான் பல பிழைகள் செய்யக்கூடும். நீ வெறுக்கும் அளவிற்குக்கூட அவை இருக்கலாம். அவற்றைப் பொறுத்தருள்வது உன் கருணை,’ என்கிறார் அபிராமி பட்டர். 
பட்டினத்தார்,

‘கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் -கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச் 
சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தோதாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே’
-என்று பாடியுள்ளார்.

குற்றம் புரிவது மனித இயல்பு. அதைப் பொறுத்தருள்வது இறைவனின் இயல்பு. தேசிகர் தன் தயா சதகத்தில் 108 ஸ்லோகங்களை திருவேங்கடவனிடம் குடி கொண்ட தயா எனும் கருணையை தேவியாக உருவகப்படுத்தி தயாசதகம் பாடியருளினார். அதில் வேங்கடவனின் கருணையே கருப்பஞ்சாறாகி, ஆறாய்ப் பெருகி ஓடி, பின் கற்கண்டு கட்டியாகி, திடப்பட்டு, திருமலையாக உருவெடுத்தது. அம்மலையை சரணடைகிறேன் எனும் பொருள்படும்படி,
‘ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய:
ஸ்ரீனிவாஸ நுகம்பயா
இக்ஷூஸார ஸ்ரவந்த்யேவ
யந்மூர்த்யா சர்க்கராயிதம்’
-என்று பாடியருளியுள்ளார்.

அவ்வளவு தயை கொண்ட தேவி தன் பக்தர்களுக்காக எதைத்தான் செய்ய மாட்டாள்? திருப்பெருந்துறை எனும் தலத்தை தரிசித்தாலும் நமக்கு பேரானந்தம் ஏற்படுகிறது. எதனால் தெரியுமா? 
அங்கு ஈசனை சிக்கெனப் பிடித்து மனமுருக துதித்தார் மாணிக்கவாசகப்பெருமாள். தன் பக்தனுக்காக நரியை பரியாக்கிய தயாபரனல்லவா ஈசன்! அறந்தாங்கிக்கு அருகில் உள்ள அத்தலம் குண்டலினி தலமாக விளங்குகிறது. அங்குள்ள அம்பிகை யோகாம்பிகை எனும் திருப்பெயருடன் அரூப வடிவில் ஸ்ரீசக்ர மேடையில் திருவருள்புரிகிறாள். யோகமார்க்கத்தோடு போகமார்க்கத்தையும் திருவருட்பாலிக்கும் தயாபரி இத்தேவி. இந்த ஆலயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக ஆறு மண்டபங்கள் உள்ளன.

அந்த ஆறு மண்டபங்களே நம் உடலில் உள்ள ஆறு ஆதார சக்திகள் எனப்படும் சக்கரங்கள். அம்மண்டபங்களைக் கடந்து சென்றால் ஸஹஸ்ராரமாக விளங்கும் கருவறை. அம்பிகையை 43 துவாரங்கள் கொண்ட பலகணி மூலமே தரிசிக்கலாம். 43 துவாரங்கள் மேருவில் உள்ள முக்கோணங்களை நினைவுபடுத்துகின்றன. அங்கு சென்று வந்தாலே மனம் அமைதியுறும். இங்கு சங்கொலி கண்டாமணி தவிர வேறு இசை ஒலி எதுவும் கிடையாது. இதயத்திலுள்ள சூஷ்ம சத்தம் பின் கண்டாமணி மாதிரி ஒலிக்கும். தேவியை வழிபட பூஜை, தவம், யோகம் போன்ற எத்தனையோ வழிகள். பூஜித்து ஈசனை வழிபட்டாள் அம்பிகை காஞ்சியில்; தவமிருந்து வழிபட்டது திருவாரூரில்; யோகத்திலிருந்து இறைவனையடைய வழிகாட்டியது திருப்பெருந்துறையில்.
இத்தலத்தில் ஈசன் அருவமாகவே இருந்து அருள்பாலிக்கிறார். கொடிமரம், நந்தி, பலிபீடம் எதுவுமில்லை. தியானிப்பவர்களின் அகப்பார்வையே நந்தி. வீணா தண்டத்தில் சுழுமுனை வழியாக மேல்நோக்கி புருவ மத்தி வழியே செல்கின்றதே, அதுவே கொடிமரம். மார்புப் பகுதியே பலிபீடம். இத்தலத்தில் எல்லாம் ஞானமயம். ஈசன் மாணிக்கவாசகருக்கு உபதேசித்த குருந்தமரம் கருங்கல் சிற்பமாக ஒரு மேடையில் உள்ளது. இங்கு இசை வாத்தியங்கள் ஒலிப்பதில்லை. சங்கு மணி ஓசை மட்டும்தான்.
சாதத்தை மலைபோல் சுடச்சுடக் குவித்து படைப்பர். அதன் ஆவிதான் நிவேதனம். அத்துடன் தேன்குழல், முறுக்கு, அப்பம், அதிரசம், வடை போன்றவையும் நிவேதிக்கப் படுகின்றன. ஈசன் வயதானவராம், எனவேதான் ஆவி மட்டும்தான் நிவேதனமாம்! ஆவிநாதராக இருந்து நமக்கு ஆத்மநாதராக ஈசன் அருளும் அற்புதத்தலமிது. இந்த ஆலய கொடுங்கை மிகப் பிரபலமானது. 
மனமாகிய குரங்கை ஒரு நிலைப்படுத்த இறைவனை உடும்பு போல் (இதையே மாணிக்கவாசகர் சிக்கெனப் பிடித்தேன் என்றார்) பற்றிக்கொள்ளவேண்டும். அதை நினைவுபடுத்தும் வகையில் கொடுங்கையின் மேல் உருவத்தில் குரங்கையும் உடும்பையும் வடித்து, ‘அத்தகுதிகள் இருக்கின்றனவா? இல்லையேல் அதைப்பெற்று ஆலயத்தில் பிரவேசி,’ என்று கூறாமல் கூறியுள்ளனர்.

எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து நமக்கு அருள்பவள் பராசக்தி. அவளை வழித்துணையாகக் கொண்டு எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வோம். நம் உடலாகிய ஆலயத்திலேயே அவள் திருவருள் புரிகின்றாள். அவள் நம் உடலில் தங்கியிருக்க வசதியாக நம் காம, குரோத, மோக, மத, லோப, மதமாச்சர்யங்களை அகற்றி தூய்மையாக வைத்தால் தேவி ஓடோடி வந்து நம் உடலில் அமர்ந்தே விடுவாள். இது முக்காலும் சத்தியம்.
உலக நியாயத்திலும் தாய் அடையாளப் படுத்தினாலன்றி தந்தையை அறிய முடியாது. தந்தையாகிய சிவத்தை ஆன்மா அடைந்து உயர்வு பெற, தாயாகிய சக்தியின் சிபாரிசு கட்டாயம் தேவை. மக்கள் தமக்கு வேண்டியதை தாயிடம் கூறி தந்தையிடம் பெறுவது சகஜமான ஒன்று. ஆன்மா எங்கிருந்து கிளம்பியதோ அந்த பரமாத்மாவிடம் இரண்டறக் கலக்க வேண்டும். இதற்கான சாதனங்களே ஆலய வழிபாடு, ஜபம், தவம், தியானம், பாராயணம், பூஜை, யாகங்கள் போன்றவை.
நல்வினை, தீவினை என்ற இரு வினைகளால் நமக்கு இடையறாது பிறவிகள் வந்து கொண்டிருக்கின்றன. தீவினை, இரும்பு விலங்கு. நல்வினை, பொன்விலங்கு. தீவினை செய்யாமல் இருக்க வேண்டும். நல்வினைப் பயன் கருதாது செய்யவேண்டும். இரண்டும் சமமாக நிகழ வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் ஆணவம், கன்மம், மாயை போன்ற மும்மலங்களும் நம்மை விட்டு அழியும்.
இந்த குண்டலினி யோகத்தில் சித்தி பெற்றவர்களுள் சதாசிவ பிரம்மேந்திரர், தியாக பிரம்மம், தாயுமானவர், வள்ளலார், அருணகிரிநாதர், ஓளவையார், மாணிக்கவாசகர் போன்றோர் முக்கியமானவர்கள். இந்த குண்டலினி வித்யைக்கு ஹம்ஸவித்யை எனவும் பெயருண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ‘யோகத்தால் ஞானமும், ஞானத்தால் யோகமும் சித்திக்கிறது. இவை இரண்டும் சித்திக்க நாம் நம் பூதவுடலை காப்பாற்றிப் பேண வேண்டும்,’ என்றார்.
தியாக பிரம்மம் தன் மோக்ஷமுகலதா எனும் கீர்த்தனையில் ‘‘ப்ராண நல ஸம்போகமு வல்ல ப்ராண நாதமு சப்தஸ்வர முலபரசு’’ என்றார். அதாவது, மூலாதாரத்தில் உள்ள மூலக்கனல் சேர்க்கையினால் ஏற்பட்ட பிரணவத்திலிருந்து ஏழு ஸ்வரங்கள் உதித்து அவை ஆறு ஆதாரங்களில் ஆறு ஸ்வரங்களாக இயங்கி, நிஷாத ஸ்தானமாகிய ஸஹஸ்ராரம் எனும் ஆனந்த வெளியில் கலக்கின்றன என்றார்.
தாயுமானவர் அகம் கிளம்பினால் சுகம், அகம் அடங்கினால் சுகம் என்றார்.
வள்ளலார் ராமலிங்கர் தன் அனுபவ மாலையில் ‘தூங்குக நீ என்கிறாய்’ எனும் பாடலில் குண்டலினியை தானாகவும், ஸஹஸ்ராரத்திலுள்ள சதாசிவனை நாயகனாகவும் பாடிப் பரவியுள்ளார். 
அருணகிரிநாதர் தன் கந்தரலங்காரம் 85ம் பாடலாக
கட்டிற்குறத்திபிரான் பதத்தே கருத்தைப் புரட்டின் 
வீட்டிற் புகுத மிக வெளிதே விழி நாசி வைத்து
மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூச்சையுன்றே
ஒட்டிப் பிடித் தெங்கும் ஓராமற் சாதிக்கும் யோகிகளே 
-என்கிறார்.

ஓளவையார் யோகசாஸ்திரம் முழுதும் அடங்கிய விநாயகர் அகவலில் ‘சொற்பதம் கடந்த துரிய மெய்ஞானம்’ என குண்டலினி யோகத்தை போற்றிப் பாடியுள்ளார்.
‘உள்ளொலி நாதம் புள்ளொலி முழங்க’ என்பது ஆன்றோர் வாக்கு. மாணிக்க வாசகர் தம்முள் சிவநாதம் கேட்ட பின்னரே தான் சிவபெருமானை ‘கூவின பூங்குயில் கூவின கோழி குருவிகள் இயம்பின’ என திருப்பள்ளியெழுச்சியை திருவாதவூரில் பாடினார்.

தேவியின் திருவருள் நம்பியவரை சத்தியமாகக் காக்கும். காரைக்கால் அம்மையார் கயிலாயத்தில் தலையால் நடந்து வந்தபோது முதலில் அம்பிகையின் பார்வைதான் காரைக்கால் அம்மையாரின் மீது விழுந்தது. இந்நிகழ்வை சேக்கிழார், ‘சிலைநுதல் இமயவல்லி திருக்கண் நோக்கு உற்றதென்றே,’ என குறிப்பிட்டுள்ளார். அதனாலேயே ஈசன் காரைக்கால் அம்மையாரை ‘அம்மையே’ என அழைத்தார்.
அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கிடைக்க திருவருள் புரிந்தவள் தேவியே. சீதையின் சிபாரிசே ராமதாசருக்கு ராமரின் திருவருள் கிட்ட காரணமாயிற்று. சிவம் என்பது அதிகமான வோல்ட்ஸ் கொண்ட சக்தி. அந்த சக்தியை உபயோக்கிக்க உதவும் ட்ரான்ஸ்ஃபார்மரே அம்பிகை. அவளை வழிபட்டே நாம் சிவத்தோடு கலக்க வேண்டும்.

த்யான ஸ்லோகங்கள் 

முண்டவ்யோ மஸ்த்த பத்மேதச சததளகே
கர்ணிகா சந்திர ஸம்ஸ்தாம்
ரேதோ நிஷ்டாம் ஸமஸ்தாயுத கலிதராம்
ஸர்வதோ வக்த்ர பத்மாம்
ஆதிக்ஷாந்தார்ண சக்தி ப்ரகட பரிவ்ருதாம்
ஸர்வ வர்ணாம் பவாநீம்
ஸர்வான்னா ஸக்த ஸித்தாம் பரசிவரசிகாம்
யாகினீம் பாவயாமி.

பிரம்மரந்த்ரே ஸஹஸ்ரதளபத்மே
மாலாக்லுப்ட ஸமஸ்தவர்ண நிகராம்
ஸௌவர்ண வீணாதராம்
மத்யே சுத்த ஸஹஸ்ரபத்ம
கமலே நித்யம் ஸ்திதாம் சாம்பவீம்
உத்யத் பூர்ண ஸுதாம்ஸு
மண்டலகதாம் ப்ரஹ்மஸ்வரூபாம் சிவாம் 
தேவீம் த்வாம் த்ரிதசார்ச்சி தாங்க்ரீ
யுகளாம் வந்தே பராம் சித்கலாம்.

No comments:

Post a Comment