ஒம் நம சிவாய!!!
திருக்கார்த்திகை தோன்றிய விதம்!!!
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார். தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.
இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.
தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.
திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் திருவண்ணாமலை!!!
-----------------------------------------------------------------------------------------
கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பது தான். அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்துக்கு தான் தெரியும். அதையே மலை உச்சியிலோ, தரையில் சொக்கப்பனையாகவோ ஏற்றினால் அதன் பிரகாசம் நீண்ட தூரம் தெரியும். மலையில் ஏற்றும் தீபம், ஏற்றும் ஊரில் மட்டுமின்றி பக்கத்திலுள்ள பல ஊர்களுக்கும் கூட தெரியும். அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துக்களின் உடலில் கூட அதன் பிரகாசம் படும். மனிதர் மட்டுமின்றி, சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும். இந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் இன்னும்பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப்பனையும் கொளுத்துகின்றனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை
திருக்கார்த்திகையன்று காலையில் ஏற்றப்படுவது பரணிதீபம். இத்தீபத்தை அண்ணாமலையார் கருவறையில் ஏற்றுவர். பரம்பொருள் ஒன்று என்பதை காட்டுவதற்காக ஒரு பெரிய கற்பூரக் குவியலில் ஜோதி ஏற்றி தீபாராதனை செய்வர். அதிலிருந்து ஒரு மடக்கில் உள்ள நெய்த்திரியில் விளக்கு ஏற்றப்படும். அந்த தீபத்தை நந்திதேவரின் முன் காட்டி ஐந்து மடக்குகளில் நெய் விளக்கேற்றுவர். விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளையும் இந்த ஐந்து தீபங்கள் குறிக்கும். முதலில் ஏற்றப்பட்ட நெய்தீபத்தை உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கு கொண்டு செல்வர். அங்கே ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றுவர். இது தேவியின் பஞ்சசக்திகளைக் குறிக்கும். அதன்பின் எல்லா சந்நிதிகளிலும் தீபம் ஏற்றப்படும். பரணி நட்சத்திர வேளையில் ஏற்றுவதால் இதை பரணிதீபம் என்பர். இந்த தீபங்கள் அனைத்தும் மாலையில் ஒன்று சேர்க்கப்படும். உலகம் எல்லாம் பரம்பொருளின் மாறுபட்ட கோலங்களே. அவை அனைத்தும் மீண்டும் பரம்பொருளில் ஐக்கியமாகிவிடும் என்பதை உணர்த்தும் விதத்தில் இதைச் செய்வர். மாலையில் பின்னர் பஞ்சமூர்த்திகளும், அர்த்தநாரீஸ்வரரும் கோயிலுக்குள் எழுந்தருள்வர். இவர்களுக்கு தீபாரதனை செய்யும் போது மலையில் தீபம் ஏற்றப்படும்.
அண்ணாமலை தீபம்: கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் 3500 கிலோ நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது. தீபம் குளிர்ந்த பின்னர், மலையுச்சியில் இருந்து திருக்கோயிலுக்கு தீப கொப்பரை எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அதனை அப்படியே பாதுகாத்து, மார்கழி- ஆருத்ரா தரிசன திருநாளில், கொப்பரையில் இருந்து தீப மை சேகரித்து, அதனுடன் இதர வாசனைத் திரவியங்கள் சேர்த்து, நடராஜருக்கு சார்த்தி வழிபாடுகள் நடைபெறும். பிரசாத மை பக்தர்களுக்கும் வழங்கப்படும். அதை, தினமும் அண்ணாமலையாரை தியானித்து நெற்றியில் இட்டு வர, துயரங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்; நம் இல்லத்தை தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணிக்கப்படும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் பாலிக்கின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது. ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன. விளக்கில் சுடர் எரிவது நமக்கு நன்றாக தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச்சுடர் எண்ணெயை மெல்ல கிரகித்து எரிகின்றது என்பது நாம் உணர வேண்டிய அகத்தோற்றமாகும். வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான, நுட்பமான அகத்தோற்றத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தீப வழிபாடு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. திருவிளக்கால் அறியத்தக்க மறைபொருள்கள் பல இருக்கின்றன என்பதை தெரிந்து செயல்பட்டால் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பெருகும்.
# தீபதரிசனம் பாவவிமோசனம்
----------------------------------------------------
சிவனுக்குரிய பஞ்சபூதத்தலங்களில் அக்னிதலமாகத் திகழ்வது திருவண்ணாமலை. இறைவன் அக்னி வடிவமாகத் திகழ்வதால் இங்கு திருக்கார்த்திகை நாளில் தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர். இந்த தீபத்தை தரிசிப்போர் பெறும் நற்பேறுகளை கார்த்திகைத் தீபவெண்பா கூறுகிறது.
புத்தி தரும் தீபம்; நல்ல புத்திர சம்பத்து முதல்
சித்தி தரும் தீபம் சிவதீபம்- சக்திக்கு
உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்
பயிராகும் கார்த்திகை தீபம்.
திருவண்ணாமலை தீபத்தை தரிசிப்போர் நல்ல புத்தி, புத்திரபாக்கியம், காரிய சித்தி, ஞானம் ஆகிய நலன்களைப் பெற்று வாழ்வர்.
# 21 தலைமுறைக்கு புண்ணியம்
-----------------------------------------------------
திருவண்ணாமலை தீபத்தைப் பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம். இந்த புராணத்தின் 159வது பாடலின்படி, திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு வராது. பார்த்தவர்களுக்கு மட்டுமின்றி அதைப்பற்றி சிந்தித்தவர்களுக்கும் கூட இடையூறு நீங்கி விடும். இவர்களது 21 தலைமுறை பிறவா வரம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் போது, கார்த்திகை தீபத்தைக் காணாமல் இருக்கலாமா! கார்த்திகை வெண்பா என்ற பாடலின்படி, அண்ணாமலையார் தீப தரிசனத்தால்புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அறிவார்ந்த புத்திரர்கள் பிறப்பர். பிறப்பற்ற நிலை கிடைக்கும்.
# அண்ணாமலை கோபுரங்கள்
------------------------------------------------
திருவண்ணாமலை கோயிலில் ஒன்பது ராஜகோபுரங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் எனப்படும் பிரதான கோபுரம் 11 நிலை கொண்டது. உயரம் 217 அடி. தெற்கு
கோபுரத்தை திருமஞ்சனக் கோபுரம், மேற்கு கோபுரத்தை பேய்க்கோபுரம், வடக்கு கோபுரத்தை அம்மணி கோபுரம் என்பர். இரண்டாம் கோபுரத்தை வல்லாள மகாராஜா கோபுரம் என்றும், மூன்றாம் கோபுரத்தை கிளி கோபுரம் என்றும் கூறுவர். இதுதவிர, மூன்று கோபுரங்கள் இங்கு உள்ளன.
கிரிவலம் சுற்ற நல்லநேரம்
திருவண்ணாமலை கிரிவலத்தை ராஜகோபுரத்தில் துவக்க வேண்டும். இந்த மலையின் உயரம் 2268 அடி. சுற்றளவு 14 கிலோ மீட்டர். நடந்து செல்பவர்கள் 4 முதல் 5 மணிக்குள் வலம் வந்துவிடலாம். உடல்நிலை முடியாதவர்கள் ஆட்டோ, கார்களில் ஒன்றரை மணி நேரத்தில் சுற்றிவர முடியும். இவர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் வருவதை தவிர்ப்பது நல்லது. சாதாரண நாட்களில் சுற்றிவந்தாலே முழு பயனும் கிடைக்கும்.
கிரிவலம் துவங்குவோர் பவுர்ணமி அன்று இரவு 9 மணிக்கு மேல் நிலவொளியில் வலம் வருவது உடலுக்கு நல்லது. அன்று சந்திரபகவான் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிப்பார். அந்த கிரணங்களை உடலில் ஏற்றால் மனோசக்தி அதிகரிக்கும்.
# நான்கு லிங்க தரிசன பலன்
--------------------------------------------------
கிரிவலப்பாதையில் அஷ்டலிங்கம் எனப்படும் எட்டு லிங்கங்கள் உள்ளன. அவற்றில் நான்கு முக்கியமானவை.
* இந்திரன் தனது பதவியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்த மலையை அங்கப்பிரதட்சணமாக வலம் வந்தார். அவருக்கு ஓர் இடத்தில் அண்ணாமலையார் காட்சி தந்தார். அந்த இடத்தில் இந்திரனின் பெயரைப் பெற்று இந்திரலிங்கமாக அமர்ந்தார். புதிதாக வேலைக்கு சேர்பவர்களும், இடம் மாற்றலாகி செல்பவர்களும், பதவி உயர்வு பெறுவோரும் தங்கள் பணி தடங்கலின்றி நடக்க இந்த லிங்கத்தை வழிபடுவது வழக்கம்.
* வெப்பம் தொடர்பான நோய் உள்ளவர்கள், அக்னி லிங்கத்தை வணங்கினால் உடல் குளுமை பெறும் என்பர்.
* வருணபகவான் ஒற்றைக்காலால் அண்ணாமலையை வலம்வந்தபோது அவரைப் பாராட்டி சிவன் காட்சியளித்தார். அந்த இடத்தில் லிங்கமாக அமர்ந்தார். வருணனின் பெயரைப்பெற்று வருணலிங்கம் ஆனார். இவரை வணங்குவோர் சர்க்கரை நோய், சிறுநீரக நோய் மற்றும் தண்ணீரால் விளைகின்ற தோஷங்கள் நீங்கி நலம்பெறுவர்.
* குபேர பகவான் சிரசுக்கு மேல் இரண்டு கரங்களையும் உயர்த்தி குதிகாலை மட்டும் ஊன்றி இந்த மலையை வலம் வந்தார். அவருக்கு சிவன் லிங்கவடிவில் காட்சி தந்து குபேரலிங்கம் என பெயர் பெற்றார். சிரமப்பட்டு சேர்த்த பணம் நிலைத்து நிற்க இவரை வணங்குவர்.
# அனலே.........அண்ணாமலையே!
----------------------------------------------------------
பார்வதிதேவிக்கு திருவண்ணாமலை தீபோற்ஸவ மகிமை குறித்து கவுதம மகரிஷி எடுத்துரைத்ததாக ஸ்கந்த புராணம் விவரிக்கிறது...
திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையை கிரிவலம் வரும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது; வாய்ப்பு கிடைத்தவர்கள் பெரும் புண்ணியசாலிகள். கார்த்திகை மகாதீபத்தைத் தரிசித்தவருக்கு மறுபிறப்பு இல்லை. ஒரு மண்டலமோ, பதினோரு நாட்களோ கிரிவலம் வருதல் சிறப்பு. முடியாதவர்கள், கார்த்திகை தீபத்திருநாள் அன்றாவது உரிய நியதிகளைக் கடைப்பிடித்து அண்ணாமலையை கிரிவலம் வந்தால்... ஒவ்வொரு அடிக்கும் ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். திருக்கார்த்திகையில் ஈசனுக்கு நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றால் தீபமேற்றி வழிபடுதலும், சிவாலயங்களில் உள்ள தீபங்களை வணங்குதலும் அளப்பரிய நன்மைகளைத் தரும்; அனைத்து தர்மங்களையும் செய்த பலனும், கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனும் கிடைக்கும்.
தீப தரிசனம் காணச் செல்பவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்வதுகூட மிகப்பெரிய புண்ணியத்தைத் தரவல்லது. மகாதீபத்தை பக்தியோடு தரிசித்தவரை நாம் கண்ணால் கண்டாலே நமது பாவங்கள் விலகும். எனில், தீபத்தை தரிசித்தவருக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும்?! ஆயுளில் ஒரு முறையாவது திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பவரது சன்னதி வளம் பெறும்; அவருக்கு மறுபிறவி என்பதே இல்லை; அத்தகையவர், மேலான தேவ நிலையினை அடைகின்றார்கள்.
# கோயிலை வலம் வரும் முற
------------------------------------------------------
திருவண்ணாமலை கோயிலை வழிபடும் முறையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
* முதலில் அண்ணாமலையார் கிழக்கு கோபுர வாயிலை வணங்கவேண்டும்.
* பின், தெற்கு கோபுரம், மேற்கு கோபுரம் இரண்டையும் வணங்கி பின் வடக்கு கோபுரத்தை வணங்க வேண்டும். வடக்கு கோபுர வாயில் எதிரே உள்ள நான்குமாடவீதி வழியில் உள்ள பூதநாராயணரையும், பின் இரட்டைப் பிள்ளையாரையும் வணங்க வேண்டும்.
* கிழக்கு கோபுர வாயிலின் இடப்புறம் வீற்றிருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.
*வலப்புறம் உள்ள சாமுண்டேஸ்வரியை வணங்கி கம்பத்து இளையனாரை (முருகப்பெருமான்) தரிசிக்க வேண்டும்.
* சிவகங்கை தீர்த்தத்தின் அருகே உள்ள கணபதியை வணங்கியதும், நந்தீஸ்வரரை தரிசிக்கவேண்டும்.
* உள்ளே சென்று அடுத்த கோபுரவாயிலைக் கடந்து,இடப்புறம் திரும்பி பிரம்மலிங்கத்தை வணங்கி, படியேறிச் சென்று திருவண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்.
பின், உண்ணாமுலையம்மனை தரிசித்தபின் கிரிவலத்தை துவங்க வேண்டும்.
# ஜலால் என்றால் என்
--------------------------------------
பார்வதிதேவியை சிவபெருமான், தன் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனதைக் குறிக்கும் வகையில், கார்த்திகையன்று மாலையில் திருவண்ணாமலை கோயிலுக்குள் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடக்கும். இந்த ஒருநாள் மட்டுமே இவருடைய தரிசனம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடிமரத்தின் அருகே பரணிதீபங்கள் ஒன்று சேர்ந்ததும், தீ பந்தத்தை அடையாளமாகக் காட்டுவர். அதற்கு ஜலால் என்று பெயர். உடனே, மலையில் கார்த்திகைதீபம் ஏற்றப்படும். மலைதீபத்தை ஏற்றும் உரிமை பர்வதராஜ குலமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கும் தொழிலைக் கொண்ட இவர்கள் தங்கள் குலதெய்வமாகிய பார்வதி தேவிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இவ்வழிபாட்டைச் செய்கின்றனர். இவர்கள், காலையில் கோயில் நிர்வாகத்தினரிடம் தீபம் ஏற்றும் மடக்கு, நெய், திரி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு மலையேறுவர். முற்காலத்தில் வெண்கலப்பாத்திரத்தில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டு வந்தது. 1991ல் இரும்புக் கொப்பரையாக மாற்றப்பட்டது. 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புக் கொப்பரையில், மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருக்கும். சுற்றியுள்ள ஊர் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே தீபத்தை வழிபடுவர்.
# இவ்ளோ பேரு இருக்கா
-------------------------------------------
அண்ணாமலையாருக்கும், அவரது துணைவியான அபிதகுஜாம்பிகைக்கும் இன்னும் பல பெயர்கள் உள்ளன. கண்ணார் அமுதன், பரிமள வசந்தராஜன், அதிரும் கழலன், கலியுக மெய்யன், தியாகன், தேவாராயன், மெய்யப்பன், அபிநய புஜங்கராஜன், புழுகணி பிராப்தன், (புழுகு என்பது வாசனைத்திரவியம்) மன்மதராஜன், வசந்த விநோதன், மலைவாழ் மருந்தன், வசந்தவிழா அழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை ஆழ்வார், திருவண்ணாமலை உடையார், அண்ணா நாட்டு உடையார்... இவையெல்லாம் அண்ணாமலையாரின் வேறு பெயர்கள். அபிதகுஜாம்பிகை என்பது அம்பாளின் சமஸ்கிருதப் பெயர். இதற்கு வற்றாத செல்வமுடையவள் எனப் பொருள். இதையே தமிழில் உண்ணாமுலையம்மை என்பர். தாய்ப்பால் குறையாத தாய் உலகில் இல்லை. ஆனால், இவளிடம் தாயன்பு குறைவதே இல்லை. கேட்டவர்க்கு கேட்டதைத் தரும் தயாபரியாகத் திகழ்கிறாள். இதையே தமிழில் உண்ணாமுலையம்மை என்பர். திருக்காமகோட்டமுடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமான் தம்பிராட்டி என்ற பெயர்களும் உண்டு.
# சொக்கப்பனை
----------------------------
கார்த்திகையன்று கோயில்களில் சொக்கப் பனை என்னும் தீபவிழா கொண்டாடப்படும். இதுவே உலக வழக்கில் சொக்கப் பானை என்றாகிவிட்டது. திருக்கோயில்களில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் விசேஷமான நிகழ்ச்சி. கோயிலிலிருந்து சற்று தொலைவில், நெடிதுயர்ந்த தென்னை அல்லது பனை மரத்தை நட்டு, அதனை ஓலையால் சூழக்கட்டி, உச்சியிலிருந்து தீபமிட்டு படிப்படியாக அடிவரை நெருப்புப் பந்தம் செய்வார்கள். இந்தக் காட்சி ஜோதிமயமாக இருக்கும். இந்த தீபதண்டத்தை திருக்கார்த்திகையன்று பார்த்து தரிசிக்க வேண்டும். இறைவன் ஒளி வடிவமாக இருப்பவன். தீப மரமான சொக்கப்பனையின் ஒளியில் கோபுரமும், கோயிலும், மலை தீபமும் கண்டு களிப்பது எல்லையில்லாத புண்ணியம் அளிக்கும். சொக்கப் பனை சுடர் விட்டு எரியும் போது தங்கம் உருக்கிய தழல் போல் முப்பதடி உயரம் இருக்கும். வைக்கப்பட்ட மரம் எதுவாக இருந்தாலும் சொக்கத் தங்கம் போன்று ஜொலிக்கும்.
கார்த்திகை தீபத்தன்று சொக்கப் பனையாக நட வேண்டிய மரம், தென்னை மரம் என்பது ஆகமவிதி. தென்னை இல்லையென்றால் பனை மரம் சேர்க்கலாம்; இது மத்திமம். கமுகு மரம் அதமம் என்பர். சொக்கப் பனைக்கு மற்றைய மர வகைகளை உபயோகிக்கக் கூடாது என்பது காரண, காரிய, விசயம் என்னும் மூன்று ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ளது. ஒரு கோயிலின் கர்ப்பகிரக உயர அளவுக்கு கொளுத்தப்படுகின்ற மரம் இருக்க வேண்டும். அதில் பனை ஓலைகள் சூழ்ந்து கட்டப்பட வேண்டும். காய்ந்த தென்னை ஓலை, கமுகு ஓலை, வாழைச் சருகுகள் மற்றும் காய்ந்த இதர சருகுகளையும் சூழக் கட்டலாம். இதனை ஒளிமரம் என்றும் சொல்வார்கள். நாள்தோறும் ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனைத் தொழுது தூப தீபம் பார்த்துப் பரவசமடைகிறோம். ஆனால் திருக்கார்த்திகையன்று கோயில் விமானம், கோபுரம், மதிற்சுவர், மலையுச்சி, பிராகாரங்கள் மற்றும் ஊர் முழுமையும் ஒளி வெள்ளத்தில் இருக்கும் அற்புத நிகழ்ச்சியை அனுபவித்து பக்தியைப் பாராட்டுவது திருக்கார்த்திகை நன்னாளில்தான். சொக்கப் பனையும் ஒரு ஜோதி தரிசனம்தான்.
# சொக்கப்பனை ஏற்றுவது எப்படி
----------------------------------------------------------
பனை மரம் ஒன்றை நட்டு, சுற்றிலும் ஓலைகளைக் கட்டி விட வேண்டும். சொக்கப்பனை முன்பு சுவாமி சப்பரத்தில் ஊர்வலமாக வருவார். சுவாமிக்கு தீபாராதனை முடிந்ததும், அந்த கற்பூரத்தைக் கொண்டே அர்ச்சகர் சொக்கப்பனையில் தீ மூட்டுவார். மக்கள் சிவாயநம, நமசிவாய, சரவணபவாய நம, சுப்ரமண்யாய நமஹ, அண்ணாமலைக்கு அரோகரா என்ற மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும்.
# சொக்கப்பனை-பெயர்க்காரணம்
---------------------------------------------------------
கார்த்திகை தீபம் பார்த்தால் பாவம் நீங்கும். பாவம் நீங்கினால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். சொர்க்கப்பனை என்பதே திரிந்து சொக்கப்பனை ஆனது. மற்றொரு காரணமும் உண்டு. சொக்கு என்றால் அறியாமை. இந்த உலக வாழ்வு நிலையானது என்ற அறியாமையில் மனிதர்கள் வாழ்கிறார்கள். அதன் காரணமாக பல பாவச்செயல்களைச் செய்து சொத்து சுகம் சேர்க்கிறார்கள். அந்த அறியாமையை நீக்கும் தீபப்பனையே சொக்கப்பனை என்னும் பெயர் பெற்றது.
கார்த்திகை விரதத்தின் சிறப்பு!
பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான் நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். மகாபலிச் சக்கரவர்த்தி, திருக்கார்த்திகை விரதமிருந்தே தனது உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொண்டான். திரிசங்குவும், பகீரதனும் கார்த்திகை விரதமிருந்தே பேரரசர் ஆனார்கள். மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, பார்வதியாள் திருக்கார்த்திகை விரதம் இருந்ததாகச் சொல்கிறது புராணம்.
முருகனுக்கு உகந்த கார்த்திகை விரதம்
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது. மாதக் கார்த்திகைகளே சிறப்புடையது என்றால், கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை குமரனுக்கு மிக மிக முக்கியமானது. இதற்கு அடுத்த நிலையை ஆடிக்கிருத்திகை பெறும். இவ்விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி 12ஆண்டுகள் இந்த விரதமிருந்து, எல்லா முனிவர்களிலும் மேலாக எல்லா உலகமும் சுற்றி வரும் வரம் பெற்றார். இவ்விரதநாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டிக்கவசம், சண்முககவசம் படிக்க வேண்டும். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் கேட்பதும் நல்லது.
சிவபெருமான் தன் ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோமுகத்தையும் சேர்த்து ஆறு கண்களில் இருந்து நெருப்புப்பொறியை தோற்றுவித்தார்.
அப்பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறுகுழந்தைகள் உருவாயின. அவர்களை வளர்க்கும் பொறுப்பை, கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார். அவர்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். பிள்ளைகள் ஆறுபேரையும் காணவந்த பார்வதி ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள். அப்பிள்ளைக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டானது. கந்தன் என்றால் ஒன்று சேர்ந்தவன் எனப்பொருள். சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம், நம் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள். உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார். காளிதாசர் இயற்றிய குமாரசம்பவத்தில் இந்த வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்வதி இமவான் மகளாகப் பிறந்தது முதல் குமாரக்கடவுளான முருகனின் பிறப்பு வரை எட்டு சருக்கங்கள் இதில் அமைந்துள்ளன. குமார சம்பவத்தில் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. தமிழ் புராணங்களில், பத்மாசுரனை ஆட்கொண்ட தகவல் உள்ளது.
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார்.
Thanks to https://temple.dinamalar.com/news_detail.php?id=7196
Very nice blog. It is informative post. I am working in Vehicle towing company . it is best service provide. I shared post in many social sites. It is very useful information. Thanks for posting.
ReplyDelete