பாரதியாரின் ஞான குரு குள்ளசாமி சித்தர் ( மாங்கொட்டை சித்தர் )
குள்ளச்சாமி
பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது அவருக்கு ஞானகுருவாக விளங்கியவர் குள்ளச்சாமி. வண்ணான் தொழில் என்ற தலைப்பில் பாரதியார் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார். அவருக்கு நூறு வயதாகிவிட்டது என்றும் பார்ப்பதற்கு நாற்பது வயதானவராகவே காணப்படுகிறார் என்றும் மக்கள் கூறுவர். கறுப்பு நிறமும் உருண்டை முகமும் கொண்ட அவர், நாலரை அடி உயரமே உள்ளவராக இருந்தார். வயிரம் ஏறிய உடல். திக்தித் திக்கி தொடர்பின்றிப் பேசுவார்; தெருவிலே படுத்திருப்பார்; மண்ணிலே புரள்வார்; நாய்களுடன் சண்டை செய்வார்; கள் குடிப்பார்; கஞ்சா தின்பார்; பசித்தபோது சில வீடுகளுக்குச் சென்று பிச்சையெடுத்து உண்பார். பெண்களுக்கு அவர் மேல் இரக்கம் உண்டு. திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து, அந்த வீட்டிலிருக்கும் குழந்தைகளின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு ஓடி விடுவார். யாராவது அவரைத் திட்டினாலும் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகலுவார். அவரிடமிருந்து திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டால் நோய் அணுகாது என்பது பலருடைய நம்பிக்கை. ஒரு நாள் குள்ளச்சாமியார் கிழிந்த அழுக்குத்துணிகளை மூட்டையாகக் கட்டி, அதை முதுகின்மேல் சுமந்துகொண்டு வந்தார். பாரதியார் அதைக் கண்டவுடன் வழக்கம்போல் வணங்கினார். ஆனால் சாமியார் குறும்புச் சிரிப்பு சிரித்தார். பாரதியார், சாமி, கந்தைகளைக் கட்டி முதுகின்மேல் வைத்து சுமப்பதேன்? என்று வினவினார். சாமியார், நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய். நான் முதுகின் மேலே சுமக்கிறேன் என்று விடையளித்துவிட்டு, விரைவில் மறைந்தார்.
குள்ளச்சாமியார் கூறியதன் பொருளை பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்:
அஞ்ஞானப் பழங் குப்பைகளையும், பழங்கவலைகளையும், பழந்துன்பங்களையும், பழம் சிறுமைகளையும் மனதில் வைத்து வீணாய்ச் சுமந்து திரியும் மனிதனுடைய அறிவீனத்தை விளக்கும் பொருட்டே குள்ளச்சாமி இவ்வாறு கூறினார். ஒருநாள் பாரதியார் குள்ளச் சாமியாரைப் பார்த்து விளையாட்டாக, சாமி. இப்படி பிச்சை வாங்கி உண்ணுகிறீர்கள். ஏதேனும் தொழில் செய்து பிழைக்கலாகாதா? என்றார். சாமியார், தம்பி, நான் வண்ணான் தொழில் செய்கிறேன். ஐம்புலன்களாகிய கழுதைகளை மேய்ப்பதும் அந்தக்கரணம் ஆன துணி மூட்டைகளை வெளுப்பதும் என் தொழில்கள் என்றார். பாரதியார், சாமியாரே, ஞானநெறியில் செல்வோன் எத்தொழிலை முதலில் செய்யவேண்டும்? என்று கேட்டார். சாமியார், முதலில் நாக்கை வெளுக்கவேண்டும். பொய், குறளை, கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி ஆகியவை கூடாது. உண்மையே பேசவேண்டும். அச்சத்தை நீக்குவதே அந்தக்கரணத்தை வெளுத்தலாகும் என்றார். சும்மா என்ற கட்டுரையில் பாரதியார் குள்ளச்சாமியைப் பற்றி எழுதுவதாவது : இவர் கலியுக ஜடா பரதர். மகாஞானி. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவர். பெண்கள் இவரைத் தெருவில் கண்டவுடன் வணங்குவார்கள். குழந்தைகள் இவரைக் கண்டால் விருப்பத்துடன் ஓடி வருவார்கள்.
பாரதி அறுபத்தாறு எனும் பகுதியில் பாரதியார் பாடியிருப்பதன் கருத்து :
குள்ளச்சாமி புகழ் :
குருவின் திருவருளால் பிறப்பு மாறி அமர நிலை அடைந்துவிட்டேன். பராசக்தியின் திறம், சித்தின் இயல்பு, வானத்தைத் தீண்டும் வகை ஆகியவற்றை அவர் உணர்த்திக் காத்தார். அமைதி நிலை அளித்து குப்பாய ஞானத்தால் சாவு எனும் அச்சத்தைப் போக்கினார். தெளிந்த ஞானியான இக்குள்ளச்சாமி பாசத்தையும் அச்சத்தையும் நீக்கியவர்; அவர் பெருமை எவ்வளவு எழுதினும் அடங்காது. காயகற்பம் சாப்பிட்டவராகையால், அவருடைய வயதைக் கணக்கிட்டுச் சொல்ல யாராலும் இயலாது. 1930ஆம் ஆண்டில், பாரதி பாடல்களுக்குத் தகுந்த ஓவியங்கள் மித்திரனில் தொடர்ச்சியாக வெளிவந்தன. கே.ஆர். சர்மா என்ற ஓவியர் வரைந்த படமொன்றில், பாரதியார் தலைப்பாகையைக் கழற்றி வைத்துவிட்டு, தரையில் அமர்ந்து, தம் முன்னுள்ள மேசைப் பெட்டிமேல் உள்ள ஏட்டினில் எழுதிக் கொண்டிருப்பதையும், அருகில் குள்ளச்சாமி நின்று கொண்டிருப்பதையும் காண்கிறோம்.
ஸ்ரீ குள்ள சாமி யின் புகழை பாடும் பாரதியார்
பாரதி -- அறுபத்தாறு ( link...)
குரு தர்சனம்
| |
அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி அடைக் கலஞ்சேன் ஈசுவரன் தர்மராஜா என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில், இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான் முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்தனைத் திருத்தச் சொல்லி என்றனை வேண்டிக்கொள்ள யான்சென் றாங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி. | 23 |
அப்போது நான்குள்ளச் சாமி கையை அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்; “அப்பனே, தேசிகனே, ஞானி என்பார் அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்; செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே; ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய். உத்தமனே, எனக்குநினை உணர்த்து வாயே. | 24 |
“யாவன் நீ? நினக்குள்ள திறமை யென்னே? யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே? தேவனைப்போல் விழிப்பதென்னே? சிறியா ரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே? பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே? பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே? ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம், ஆரியனே, எனக்குணர்த்த வேண்டும்” என்றேன். | 25 |
பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி பரிந்தோடப் பார்த்தான்; யான் விடவே யில்லை. சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்; தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்! குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்; மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன். | 26 |
உபதேசம்
| |
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனையொன் றிருந்த தங்கே; பரமயோகி ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி “அறிதிகொலோ?” எனக் கேட்டான் “அறிந்தேன்” என்றேன். மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும் வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். | 27 |
தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்: “வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி, மண்போலே சுவர்போலே, வாழ்தல் வேண்டும்; தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்; பேசுவதில் பயனில்லை, அனுப வத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம்” என்றான். | 28 |
கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன், கருத்தையதில் காட்டுவேன்; வானைக் காட்டி, மையிலகு விழியாளின் காத லொன்றே வையகத்தில் வாழுநெறி யென்று காட்டி, ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம், அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும், பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன் பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே. | 29 |
மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை வளமுறவே கட்டியவன் முதுகின் மீது கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக் கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்; சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்: “தம்பிரானே இந்தத் தகைமை என்னே? முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ? மூட்டைசுமந் திடுவதென்னே? மொழிவாய்” என்றேன். | 30 |
புன்னகைபூத் தாரியனும் புகலுகின்றான்: “புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே, இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ” என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான். மன்னவன்சொற் பொருளினையான் கண்டுகொண்டேன்; மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே, இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும். | 31 |
சென்றதினி மீளாது; மூடரே நீர் எப்போதும் சென்றைதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும் | 32 |
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ! மேதையில்லா மானுடரே, மேலும் மேலும் மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர், ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே! மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். | 33 |
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா; “ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ? நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்து விட்டேன், நான்புதியன், நான்கடவுள், நலிவி லாதோன்” என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக் குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து, குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். | 34 |
குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி் வெறியுடையோன் உமையாளை இடத்தி லேற்றோன் வேதகுரு பரமசிவன் வித்தைபெற்றுச் செறிவுடைய பழவினையாம் இருளைச் செற்றுத் தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர், அறிவுடைய சீடா, நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். | 35 |
கேளப்பா, மேற்சொன்ன உண்மை யெல்லாம் கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும் நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்; தோளைப்பார்த் துக்களித்தல் போலே யன்னான் துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே. வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும் மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க! | 36 |
கோவிந்த சுவாமி புகழ்
| |
மாங்கொட்டைச் சாமிபுகழ் சிறிது சொன்னோம்; வண்மைதிகழ் கோவிந்த ஞானி, பார்மேல் யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான், எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்! தீங்கற்ற குணமுடையான், புதுவை யூரார் செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன், பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன். | 37 |
அன்பினால் முக்தியென்றான் புத்தன் அந்நாள்; அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்; துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி; அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான், அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்; மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற மதியுடையான், கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்; | 38 |
பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப் போந்தானிம் முனியொருநாள்; இறந்த எந்தை தன்னுருவங் காட்டினான்; பின்னர் என்னைத் தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்: அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத் தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்; மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்; மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன். | 39 |
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
| |
கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்; குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி, சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான், பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி பரமபத வாயிலெனும் பார்வை யாளன்; காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன் | 40 |
தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம் சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும் துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்; தோழரே, எந்நாளும் எனக்குப் பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர்கோன், யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி. | 41 |
குவளைக் கண்ணன் புகழ்
| |
யாழ்ப்பாணத் தையனையென் னிடங் கொணர்ந்தான், இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக் காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான், பார்மேல் கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்; பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்; பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்; தீர்ப்பான சுருதிவழி தன்னிற் சேர்ந்தான். சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார். | 42 |
மகத்தான முனிவரெலாம் கண்ணன் தோழர்; வானவ ரெல்லாங்கண்ணன் அடியா ராவார்; மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின் வீரர்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான். ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்துச் சாமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான். அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்; “அன்றேயப் போதேவீ டதுவே வீடு.” | 43 |
பாங்கான குருக்களைநாம் போற்றிக் கொண்டோம்; பாரினிலே பயந்தெளிந்தோம்; பாச மற்றோம்; நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்: நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம் அப்பா. தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர், தாரணியில் பலருள்ளார், தருக்கி வீழ்வார்; ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல் என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர். | 44 |
Thank: https://copiedpost.blogspot.com/
https://www.ourjaffna.com/யாழ்ப்பாணத்து சுவாமி
https://jnanabhoomi.blogspot.com/
bharathi oru siddhan...pattiley pithan....vaalvilay oru mukthan.... i like him and follow him...vaalha avar puhal..
ReplyDelete