Saturday, April 26, 2014

வல்ல நாட்டு சித்தர்


Shri Mystic Selvam ayya article in "Anmeega Payanam Vol 1" Book


சாது சிதம்பர சுவாமிகள். இவரது பெற்றோர் சண்முக சுவாமிகள் - உலகம்மை. இவர் 20.10.1922 வெள்ளிக்கிழமை, தீபாவளி தினத்தன்று சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவரது ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியிலுள்ள வல்ல நாடாகும். இவர்தான் பின்னாளில் அனைவராலும் போற்றப்பட்ட சாது சிதம்பர சுவாமிகள் ! இவர் வள்ளலார் வழி வந்தவர் என்பதை அருட்பெருஞ்ஜோதி அணிந்துரை பாடலில் காணலாம்.

அருட்பெரும் ஜோதி அருட்பிரகாசர்
அகத்தும் புறத்தும் அணிந்தெழுந்து
பொருட்பெரும் உலகில் புதுயுகம் தோன்றப்
போந்த நாள் தருமச் சாலை நாளாம்
மருட்டவிர்த் தன்பர் மகிழ்வினில் வாழ
வல்ல நாட்டடிகள் வழி திறந்தார்
அருட் சுடர் உள்ளே அகவற் பொருளை
அருட்குரு வாய்க்கண்டு போற்றுதுமே

என்பதே அப்பாடல். வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வகுத்தருளிய பாதையிலேயே தன் ஆன்மிகப் பணியைச் செய்து வந்தார். கருணை, அடக்கம் போன்ற உயர் பண்புகளின் உறைவிடமாக - மிகவும் எளிமையாக - மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்தவர் சாது சிதம்பர சுவாமிகள். இவர் தினமும் தம் தாய் - தந்தையரை வணங்கி விட்டு - அதுவும் 108 முறை தாயாருக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்கிய பின்புதான் தனது அன்றாட வாழ்க்கை முறையைத் தொடங்குவார். அவரது பெற்றோர்கள் லட்சுமி என்னும் உத்தமியை அவருக்குத் திருமணம் செய்வித்தனர். இல்லற இன்பத்தில் நாட்டமில்லாத சுவாமிகள் பேரின்ப நாட்டமுடையவராகவே வாழ்ந்து வந்தார். வள்ளலார் வழங்கிய சன்மார்க்க நெறியை பாமர மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வாழ்ந்து காட்டினார். மனிதனுக்கு அருளும் ஆறுதலும் கிடைக்க ஒரே வழி மனிதன் மனித குலத்துக்கு தொண்டு செய்வது ஒன்றே. நாமெல்லாம் தொண்டர் குலம்; தொண்டு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு விநாடியைக்கூட வீணாக்காமல் தொண்டு செய்து கொண்டேயிருந்தார்.

திருக்கோயில் குடமுழுக்கு, திருமணம், மஞ்சள் நன்னீராட்டு, நீத்தார் நினைவு, புதுமனை புகுதல் போன்ற அனைத்து விழாக்களையும் சன்மார்க்க வழியில் நடத்தி வைத்தார். கோபூஜை. கணபதி ஓமம், 108, 1008 தீபஜோதி வழிபாட்டு முறையில் விநாயகர் அகவல், அருட்பெருஞ்ஜோதி அகவல், சிவபுராணம், தேவார - திருவாசக - திவ்யப் பிரபந்த பக்திப் பாடல்களைப் பாடச் செய்து, சமபந்தி போஜனம் நடத்தி விழாக்களை நிறைவு பெறச் செய்வார். ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல், தீப தரிசனமே பாவ விமோசனம் என்னும் அருள் வாக்கை தான் செல்லும் இடங்களில் எல்லாம் செயற்படுத்திக் காட்டினார். எண்ணற்ற சித்துகள் செய்தவர் சிதம்பர சுவாமிகள். தீர்க்க முடியாத வியாதிகளைத் தனது ஆத்ம சக்தியாலும் மூலிகை மருந்துகளாலும் தீர்த்து வைத்துள்ளார். சுவாமிகள் பாதம் பட்ட வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சுவாமிகளின் அருள் பெற்று, தம் கர்ம வினை நீங்கி ஆத்மானந்தமும் அமைதியும் அடைந்தனர். வல்ல நாட்டு சுவாமிகள் பல இடங்களில் 1008 தீபங்கள், லட்ச தீபங்கள் ஏற்றி, அருட்பெருஞ் ஜோதி அகவலைப் பாராயணம் செய்து, அன்னதானம் சிறப்பாக நடத்தி உலகில் அமைதியை ஏற்படுத்தப் பணி புரிந்துள்ளார். இறந்தவர்களை எரிப்பது தவறு; சமாதி செய்வதே சாலச் சிறந்தது என்பது சுவாமிகளின் கொள்கையாகும். சமாதி நிலை கூடிய முன்னோர்களுக்கு, அவர்களின் குரு பூஜை நாளன்று மகேசுவர பூஜை நடத்தி நன்மைகள் பெற வழிகாட்டினார். தம்மை நாடி வந்த மங்கையர்க்கரசி அம்மையாருக்கு காசியில் முக்தி கொடுத்தார்.

குறுக்குத்துறை அமாவாசை பரதேசி என்பவருக்கு, ஒரு அமாவாசை நாளன்று முக்தி நிலைக்கு உதவினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்ற அறவோர்க்கும் சமாதி நிலை அமைத்து உதவினார். ஞானி மாதவானந்தா, ஐந்நூறு வயதுக்கு மேல் வாழ்ந்த யோகி சடை நஞ்சப்ப சுவாமிகள் போன்ற மகான்களுக்கு நிர்விகல்ப சமாதி அடைய துணை புரிந்து, மண்டல பூஜையையும் இயற்றி அருளினார். பொதிகை மலையில் வாழ்ந்த தெய்வீக வெள்ளை யானையோடும், சதுரகிரி மலையில் வாழ்ந்த ஒற்றைக் கொம்பன் என்ற தெய்வீக யானையோடும் சுவாமிகளுக்கு நட்பு இருந்தது. வள்ளலார் தண்ணீர் விட்டு விளக்கெரித்த தன்மைபோல், வல்ல நாட்டு சுவாமிகளும் தீப ஜோதி வழிபாட்டில் அவசியம் நேரும் பொழுது தண்ணீர் விட்டு விளக்கெரித்துள்ளார். பிறர் தம் காலில் விழுந்து வணங்குவதை சுவாமிகள் ஒப்புக் கொள்வதில்லை. அறியாமல் விழுந்தால், தாமும் அவரடியில் வீழ்ந்து வணங்குவது சுவாமியின் வழக்கம். நவக்கிரக நூதன ஸ்தாபனம் இவர் செய்த புதுமையாகும். நடுவில் தீபத் தண்டும், அதைச் சுற்றி நவக்கிரக மூர்த்திகள் வெளிப் பார்வையாகவும் அமைத்தலே அந்த முறை. இந்த மூர்த்திகள் யாவும் அனுக்கிரக மூர்த்திகளாகச் காட்சியளிக்கும். இத்தகைய நூதன நவக் கிரகங்களை வல்ல நாடு, வீரசிகாமணி, ஐவர் மலை, பூண்டி போன்ற திருத்தல கோயில்களில் இன்றும் காணலாம். இத்தகைய மகிமை வாய்ந்த வல்ல நாட்டுச் சுவாமிகள் 1981-ஆம் ஆண்டு, வைகாசி பூசத்தில் அருட்ஜோதியில் கலந்து அருள்பாலித்து வருகிறார்.

குரு பூஜை: மார்கழி மாத அவிட்டத்தில் சுவாமியின் தந்தைக்கும், ஆனி மாத மகத்தில் தாயாருக்கும், வைகாசி பூசம், மாதப் பூசம் போன்ற நாட்களில் வல்ல நாட்டு சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் (லட்சம் பேருக்கு) நடைபெற்று வருகின்றது. பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும் என்பது வல்ல நாட்டாரின் அருள் மொழியாகும். ஏழைகளின் பசியாற்றினால் இறைவன் அருள் தானாகக் கிட்டும் என்பது அவரின் வேத வாக்கு. வல்ல நாட்டு சுவாமிகளின் தாய் - தந்தை சமாதி, வல்ல நாட்டு சுவாமிகளின் ஜீவசமாதி, சுவாமிகள் அன்புடன் பழகி வளர்த்த மணிகண்டன் என்ற யானை சமாதி அனைத்தும் வல்ல நாட்டு சித்தர் பீடத்தில் உள்ளன. அணையா விளக்கு எப்பொழுதும் அங்கு எரிந்து கொண்டிருக்கும். இன்றும் தினசரி வயது முதிர்ந்தவர்களுக்கு அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. எண்ணற்ற பக்தர்கள் சுவாமிகளின் சமாதிக்குச் சென்று வழிபட்டு, தம் கர்மவினை நீங்கி செல்வச் செழிப்புடன் பிணியில்லாத வாழ்வு வாழ்கின்றனர்.


Thank: 1. Mysitic (India) mission
            2. http://sivarppanam.blogspot.in/

No comments:

Post a Comment