Monday, July 28, 2014

சூக்பி ஞானியர் ஹஜ்ரத் ஷெய்கு சாஹீப் ஔலியா அப்பா

‘பணமில்லாதவனுக்கு இவ்வுலகில்லை’ என்று சொல்லுகிறார்கள். பணத்தை ஒருவன் சம்பாதித்துவிடுகிறான். பெருஞ்செல்வத்தைத் திரட்டிக் குவித்து விடுகிறான். வீடு, மனை, நிலபுலன்கள், இன்னும் பரந்த சொத்துக்களுக்கு அதிபனாகி குபேர சம்பத்துப் படைததவனாகவும் ஆகிவிடுகிறான். தன் மனைவி மக்களுக்கு மட்டுமல்ல, தன் பிள்ளைகள், தன் பிள்ளைகளின் பிள்ளைகள் அனைவருக்கும், ஜன்ம ஜன்மத்திற்குச் சுகபோகத்தில் சுகித்திருக்கும் அளவுக்கு தனபாக்கியத்தை விட்டுச் செல்கிறான். அத்தகைய ஒருவனை வெற்றிகரமாக வாழ்ந்தவன், உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் என்று மக்கள் கருதுகின்றனர்.

ஆயினும் நம்மிடையே வேறு சிலர் இருக்கின்றனர், இவர்கள் செல்வத்தால் வரும் வெற்றியை வெற்றி என்று கருதுவதில்லை. இவ்வுலக இன்பங்களில் திளைத்து உண்டு, உடுத்தி, உறங்கி பின்னொரு நாள் மறைந்து போகும் எந்த மனிதனும் வாழ்வில் வெற்றி கண்டவனல்லன் என்பது இவர்கள் கருத்து. இந்த பிரபஞ்சமே மாயை, இந்த மாயையில் சிக்குண்டு மண்ணில் வாழ்ந்து மடிந்து விடுபவர் பிறவிப் பயன் எய்தாதவராகி விடுகின்றனர். ஆகவே வாழ்வில் உண்மை வெற்றி காண விழைகிறவர் ஆசாபாசங்களைத் துறந்து, மண்ணுலக வாழ்க்கையை மறந்து மனிதப் பிறப்பெடுத்த பெரும்பயனை அனுபவிக்க , ஜன்ம சாபல்யம் பெற, யோகத்தில் ஆழ்ந்து விடவேண்டும்; நிஷ்டையில் இருந்துவிட வேண்டும்; வாழ்வின் பிறப்பினின்று விடுபட்டு, உலக பந்தங்களை அறுத்தொதுக்கி எங்கோ காட்டிலோ, மலையிலோ, குகையிலோ தவமிருந்து “நான்” எனும் அகந்தையை மாய்த்து இந்த கட்டையைத் தேயவிட்டுத் தேயவிட்டு முக்தி பெறவேண்டும். பரமாத்மா ஜீவாத்மாவோடு ஐக்கியமுற வேண்டும். இந்த ஐக்கியம் கைவரப் பெற்றவனே வாழ்வில் உண்மையான வெற்றி பெற்றவனாவான் என்று கருதுகின்றனர் பக்தரும், முக்தரும், சித்தரும், போதருமாகி, ஐம்புலன் அவித்து யோகத்திலும் ஞானத்திலும், சித்தாந்த, வேதாந்த வைராக்கிய, ஆன்மீகத் தத்துவார்த்த விசாரணையிலும் மூழ்கித் திளைக்கும் இந்த சிலவித்தகர்.

வாழ்வைத் துறந்து விடுவதையும், ஐம்புலன்களையும் அவித்துவிட்டு, சந்நியாசத்தை மேற்கொள்வதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. பதி, பசு, பாசத் தத்துவத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சூஃபி ஞானிகளின் கோட்பாடுகளைக்கூட இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களுக்கு எதிரானவை என்று வைதீக இஸ்லாமிய ஞானிகள் எதிர்த்த சரித்திரம் உலகறிந்தது. ஹல்லாஜ் ரஹ்மத்துல்லாஹி காலம் தொடங்கி ஜலாலுதீன் ரூமி, இமாம் கஜ்ஜாலி, முஹைதீன் இபுனு அரபி அவர்கள் காலம் வரையுள்ள சூஃபி ஞான மேதைகளின் ஆன்மீகத் தத்துவங்கள் எவ்வாறு இறுதியில் இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கைக்கும் இதர இஸ்லாமிய புனித கருத்துக்களுக்கும் இயைந்தவாறு அமைந்துகொண்டன என்பதை விளக்குவதாகவே அமைந்துள்ளன.

இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளின்படி ஜீவாத்மா பரமாத்வாவோடு ஐக்கியப்படுவதென்பது இயலாத காரியம். ஏக இறைவன் வேறு, தனி மனிதனின் ஆன்மா வேறு, ஒன்றேதான் தெய்வம். அந்த ஒன்றோடு இன்னொன்று கலத்தல் என்பது என்றுமே சாத்தியமில்லை. ஒன்றோடு ஒன்று இயைந்து இரண்டாக முடியாது. ஏக தெய்வத்தைப் பொருத்தமட்டில் ஒன்றை இரண்டாகவோ அல்லது ஒன்றையும் இரண்டையும் சேர்த்து மூன்றாக்கி ஏக தெய்வத்திற்குப் பங்கம் விளைக்கும் பல தெய்வ தத்துவத்திற்கோ இஸ்லாம் இடம் கொடுக்க மறுத்தே வந்திருக்கிறது.

இஸ்லாமிய அடிப்படையைப் பொறுத்த வரையில் இறைஞான காரியங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் இவ்வுலக மனிதனுக்கு ஆன்மீகக் காட்சி வேண்டுமாயின் ஒருகால் சித்திக்கலாம். ஆனால் தனி மனிதனின் ஆன்மா இறைவனோடு கலந்து விடுவதென்பது மட்டும் ஒருபோதும் முடியாத காரியம்.

இந்த பின்னணியில் பார்க்கும்போதுதான் உலக வாழ்வில் உண்மையில் வெற்றி எனப்படுவது எது என்ற கேள்வி கூர்மையும் முனைப்பும் பெறுகிறது. மனிதராகிய நம் வாழ்வில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொன்றையும் உண்மையான வெற்றி எனக் கருதிகிறோமே, அவை ஒவ்வொன்றும் உண்மையில் வெற்றி எனக் கொள்ளத்தக்கவைதாமா?

எது வெற்றி? திரண்ட செல்வத்திற்கு அதிபதியாகி இவ்வுலக வாழ்வை இன்ப லாகிரியாக்கி, தன் மனைவி மக்கள், சுற்றம் கிளையனைத்தும் சுகமாக வாழ வழி செய்துவிட்டுச் செல்கிறானே அவன் வெற்றி வெற்றியா? வறுமையில் சிக்கிச் சுழன்று வாழ்வதாக நினைத்து தினமும் செத்து செத்துக் கொண்டிருக்கிறானே அவனும் அவனைச் சார்ந்தோரும் வாழும் வாழ்வு வெற்றியின் அடைப்படையில் அமைந்ததா? உலகம் பொய், வாழ்வு மாயை என நினைத்து தெய்வத்தோடு கலந்துவிட துறவறம் பூண்டு கடுந்தவம் செய்கிறார்களே அவர்கள் வாழ்வு வெற்றி தர வல்லதா?

இஸ்லாமிய ஏகத்துவ வழிபாட்டின் அடிப்படையிலும் இஸ்லாமியக் கோட்பாடுகளின் படியும் பார்த்தால் மேற்கூறிய எவையும் உண்மையில் வெற்றிகள் ஆகமாட்டா.

தனக்காக, தன் குடும்பத்தினருக்காக, தன் ஊரார், நாட்டாருக்காக, தன்னலத்தையே அகத் தளத்திற்கு கொண்டு செயலாற்றும் எந்த தனி மனிதனின் சாதனையையும் இஸ்லாம் வெற்றி என ஏற்றுக் கொள்ளாது. இஸ்லாத்தின் கோட்பாடுகளின்படி நோக்கின் தனிப்பட்டவனின் வெற்றி இறைவனுக்கு உகந்ததாக அமைய வேண்டும். உலகம் முழுவதற்குமே ஏற்றதாக இருக்கவேண்டும். அல்லாஹ்வின் குறிக்கோளை நிறைவேற்றி அவனின் மகிமைகளை விளக்குவதாக மிளிர வேண்டும். மனிதன்பால் இறைவன் வைத்திருக்கும் அருள் நோக்கை அர்த்தமுள்ளதாக்கி தனி மனிதனுக்கு இறவா வாழ்வளிக்கத்தக்க தன்மைத் தானதாக வெற்றி விளங்க வேண்டும் எனக் கொள்ளலாம்.

நினைத்ததை நினைத்த வண்ணம் செய்து முடித்துவிட்டு அதை நாம் முனைந்து பெற்ற வெற்றியென்றும் மற்றதெல்லாம் தோல்வி என்றும் கருதுவது போன்ற தவறு உலகில் வேறு எதுவும் இருக்கமுடியாது. வஞ்சனைக்கு வித்தூன்றி வரும் விளைவை வெற்றியெனக் கொள்வது நமது புத்தியின்மையையே காட்டும். மண் நாடி, பொன் நாடி, புலன் நாடும் பெண்நாடி பெறும் சுகத்தை வெற்றியென்று சொல்ல இயலுமா? சிந்தித்துப் பார்ப்போமாயின் வெற்றியின் தன்மை நமது சிந்தையில் எழும் எண்ணத்தின் தன்மையைப் பொறுத்தது. எண்ணம் சிறந்ததாக, உயர்ந்ததாக, இறைவனுக்கு உகந்ததாக இல்லாத வரையில் அவ்வெண்ணத்தின் விளைவை வெற்றி என்று கொள்ள இயலாது. எண்ணத்தில் ஈசன் ஒளி இல்லையெனில் வெற்றி இல்லை, எண்ணத்தில் நேர்மை இன்றேல் என்றைக்கும் எதிலுமே வெற்றியில்லை. எண்ணம் ஒரு பரம்பொருளாய், இதயம் ஒரு விண்ணகமாய் மாறாத வரையில் இந்த உலகில் எதிலும் வெற்றியில்லை. ஆகவே எண்ணத்தில் ஈசன் ஒளி ஏறிவிடில் தோல்வி இல்லை வெற்றிக்கு. தோல்வி இல்லாத வெற்றி சாகாத வெற்றி இந்தத் தரணியில் வேண்டும் எனில் நம் ஒவ்வொருவரும் பரம்பொருளின் தன்மைபெறப் பாடுபட வேண்டும். பரம்பொருளின் தன்மை பெற ஓயாமல் பாடும்படும் பொழுது நம்மை அறியாமலே நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வ குணங்கள் குடிபுகுந்து விடுகின்றன. தெய்வகுணம் குடிபுகுந்த இதயத்திலிருந்தெழும் எண்ணங்கள் நம்மை அழியாத வெற்றிக்கு இழுத்துச் செல்லுகின்றன.

இஸ்லாமிய ஏகத்துவத்தின்படி என்னதான் மனிதன் பாடுபட்டாலும், தவங்கிடந்தாலும் அவன் இறையோடு கலக்க முடியாது; ஐக்கியமாகிவிட முடியாது. ஆனால் அளவற்ற அருளாளனின் அடியார்களாக, சேவகர்களாக, அடிமைகளாக அந்த ஒப்பற்ற இறைவனின் அருள் வழியில் செயலாற்றுவதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து, தொல்லையும் குழப்பமும் நிறைந்த உலகில் சாந்தியையும் ஒழுங்கமைதியையும் நிலை நாட்டி, மன்பதை உய்ய வழிவகுப்போமானால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக படிப் படியாக நம்மை ஆண்டவன் பக்கம் உயர்த்திக் கொண்டவர்களாகிறோம்.

மனிதன் தனிப்பட்டவன்; தனித்தவன். ஆண்டவனும் தனித்தவனே, அவன் ஏகன், தன்னந்தனியன். ஆனால் தனித்தியங்குவோருள் எல்லாம் முற்ற முற்ற முழுமை பெற்ற பூரணன் என இமாம் அஹமது இப்னு ஹன்பல் அவர்களின் வியாக்கியானம் சொல்லுகிறது. மனிதன் தனியன், தனித்தியங்குபவன் எனினும் முழுமை பெற்றவனல்லன். பூரணமாகத் தனித்தியங்கும் வழி வகையறியாது தயங்கித் தயங்கித் திகைத்திருப்பவன். இந்த பூரணத்துவத்தை நோக்கிச் செயலாற்றுவதே அவனது இலட்சியமாக இருக்க வேண்டும். இதுவே இயற்கையின் நியதியும் உயிர்வாழ்க்கையின் தாத்பரியமுமாக இருக்கிறது. எந்த அளவிற்கு அவன் தன் எண்ணத்தால், சொல்லால், செயலால், முயன்று முயன்று முன்னேற வேண்டும் என்ற வெறியால் முழுமை பெறும் இலட்சியத்தின் பக்கமாக முனைகிறானோ அந்த அளவிற்கு ஆண்டவன் பக்கமாக அண்டி அண்டி வருகிறான். எந்த அளவிற்கு அவன் இந்த இலட்சியத்தினின்றும் பிறழ்ந்து பின்னோக்கிச் செல்லுகிறானோ அந்த அளவிற்கு அவன் ஆண்டவனை விட்டும் வெகு தூரத்திற்கு அப்பால் சென்றுவிடுகிறான். ஆண்டவனுக்கு அவனுக்கு இடைவெளி, தூரம், அதிகரிக்க அதிகரிக்க அவன் கீழ்படியின் கீழ்ப்படியினருகே நிற்கும் தாழ்ந்த மனிதனாகி, பஞ்சை மனிதப் பதராகி, தரத்தில் குறைந்து மிகச் சாதாரண வெறும் மனிதனாகி விடுகிறான். அத்தககயவனால் சாகா வரம் பெற முடியாது, அழியா வெற்றியை அடையவும் முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளி குறுகியும் அற்றும் வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மேற்படியின் மேற்படியை நோக்கி உயர்கிறான்; முழுமையின் பக்கமாக வருகிறான். ஆண்டவனின் அண்மையிலும் அண்மை வந்துவிடப் பார்க்கிறான். காலத்தை வென்று சாகா வரம் பெற்று அழியா வெற்றியையும் பெற்றுவிடுகிறான்.

‘தெய்வ குணங்களையும் பண்புகளையும் உன்னுள் நீ சிருஷ்டித்துக்கொள், உண்டு பண்ணிக்கொள்’ என்னும் தத்துவம் தொனிக்க நம் நபிகள் கோமானும், “தகல்லஹு ஃபீ அக்லாக்கல்லாஹ்” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். இப்படி பரம் பொருளின் தன்மைபெற பாடுபட்டு, பாடுபட்டு நம்மை நாம் தெய்வத்தின் பக்கமாக உயர்த்திக் கொள்ளும்போது நாம் அந்த ஏகத் தனி இறைவனோடு கலந்துவிட முடியாது. ஆனால் இறையோனின் தன்மைகளை, பண்புகளை, கல்யாண குணங்களை, அம்சங்களை ஓரளவாவது நம்முள் வருவித்துக் கொள்ளவும் கிரகித்துக் கொள்ளவும் இயலும். அவற்றுள் தோய்ந்து நாம் சுகிர்தமடையவும் கூடும்.

இவ்வித கடவுள் தன்மை பெற பாடுபடுவது நமது சுயநலத்திற்காக அல்ல என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இயற்கையையும் அதன் சக்திகளையும் வென்று, பஞ்ச பூதங்களையும் வெற்றிகொண்டு, மனித குலத்தின் சுபிட்சத்திற்கு வழிகோலுவதன் மூலம் இறைவனுக்குப் பணியாற்றுவதைவிட சிறந்த சேவை இருக்க முடியாதல்லவா? பஞ்ச பூதங்களின் சேர்க்கை என்ன? ஜடப்பொருள்களின் உள்ளுறைந்திருக்கும் இரகசியங்கள், அற்புதங்கள் யாவை? இவைபற்றி முழுவதும் அறியாது நாம் திகைத்திருந்தோம். இன்னும் திகைத்து நின்றோம். அணுவைத் துளைத்தோம், தகர்த்துத் தகர்த்துப் பிரித்தோம், பிளந்தெறிந்தோம். இதை மானிடத்தின் வெற்றி என்றும் கண்டோம்; கொண்டோம். இருப்பினும் காற்று, நீர், நெருப்பு, மண், வெளி ஆகியவற்றுள் மறைந்திருக்கும் சிருஷ்டியின் இரகசியங்கள் அனைத்தையும் நாம் அறிந்துவிட்டோம் என்றில்லை. அறியாத வரையில் அச்சக்திகள் அனைத்தும் மன்பதையின் முன்னேற்றத்திற்கும் உய்வுக்கும் முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. மனிதகுலம் இத்தடைகளைத் தகர்த்தெறிய இயற்கையின் கட்டுகளை அறுத்தொதுக்கி வெற்றி கொள்ள செயல்கள் செய்வின் அச்செயல் இறைவனின் மாண்பினையே காட்டும் அல்லவா? மனிதன் நெருப்பை இரவின் இருளுக்கு ஒளியேற்றும் விளக்காக மாற்றினான். நஞ்சை நோய் தீர்க்கும் அருமருந்தாக மாற்றுவித்தான். வெறுங் கல்லினுள் சுடர் திணித்து மணியாக்கினான், களிமண்ணை அடித்தெடுத்துக் குடமாக்கினான். சிருஷ்டித்தான். தான் எனும் அகந்தையை வளர்த்து, பஞ்ச பூதங்களையும் வெல்லும் முயற்சியில் ஆண்டவனின் மாட்சியையும் அருள் ஞானத்தையும் பறைசாற்றினான். இன்றோ பூமியின் இழுப்புச் சக்தியையே தாண்டிப்போய் இங்கிருந்து நாம் சந்திரனையும் உடுக்களையும் பார்ப்பதுபோல் வானவெளியில் நின்று பூமியையே பார்க்கும் பாக்கியம் அவனுக்கு சித்தித்திருக்கிறது. நாமும் சிருஷ்டிக்கிறோம் இறைவனால் ஏவப்பட்டு, அவனின் சேவகர்களாக, அடிமைகளாக சிருஷ்டிக்கிறோம். “சிருஷ்டி கர்த்தாக்களுள் எல்லாம் மிகச் சிறந்த சிருஷ்டிகர்த்தா மாட்சி மிக்க ஆண்டவனே” என்னும் பொருள் தரும் திருமறையின் வசனம் நம்மை செயலாற்றத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அச்செயலினால் நாம் வெற்றி பெறுகிறோம். இறைமாண்பின் அடிப்படையில் தோன்றும் இவ்வெற்றி அழியா வெற்றி. இந்த வெற்றிக்காக நாம் ‘நான்’ என்ற நம்முள் அடங்கிக் கிடக்கும் சக்திகள வெளிக் கொணருகிறோம். நாம் உணர்வையும் அறிவையும் வளர்க்கிறோம். நம் உணர்ச்சிகள் வலுவடைகின்றன. நம் அறிவு கூர்மைப் பெறுகிறது. அசாதாரண அறிவும் அபரிமிதமான ஆற்றலும் பெற்று நாம் அதியுன்னத அமானுஷ்யமான மனிதர்களாக ஆகிவிடுகிறோம். காலத்தையே வென்று சாகா வரமும் பெற்றுவிடுகிறோம். இத்தகைய பண்புகள் பெற்றவர்களாக மனிதகுலத்தின் ஒவ்வொருவரும் மாறிவிடும் பொழுது இலட்சிய உலகமே தோன்றிவிடுகிறது. இறைவனின் இலட்சியமும் வெற்றிபெறுகிறது. இறைவனுக்கு உகந்த இந்த வெற்றிச் சாதனைக்காய்த் தன்னையே அடக்கி ஆண்டும், கட்டுப்படுத்தியும், தன்னுள்ளே உறைந்தும் மறைந்தும் இருக்கும் சக்திகளை வெளிக் கொணர்ந்தும் அதியுன்னத மானிடனாக மாறி வையத்தை உய்விப்பவன், என்றும் மாளாத முழுமை பெற்றவன். அத்தகையவனை இறைவனின் பிரதிநிதி என்றும் ‘கலீபா’ என்றும் கொள்ளலாம் அல்லவா?

இயற்கையின் சக்திகளை ஆட்கொண்டு ஆண்டவனின் அடியானாக இருந்து அவனின் பேரருள் கொடையை நிதர்சனமாக்கிக் காட்டவல்ல செயற்கரிய காரியங்கள் செய்து அதியுன்னத மனிதனாகி இறவா வரம் தரும் அழியாத வெற்றிக்காக தவம் கிடக்கிறார் முஸ்லிம் ஞானி ஒருவர். இவ்வுலக வாழ்க்கை எனும் சிறையில் சிக்கி இலட்சியத்தையும் குறிக்கோளையும் மறந்து கேவலம் பஞ்சை மனிதனாக உழன்று இவ்வுலக வாழ்வில் தன்னை இழந்து விடுகிறவர்களை இந்த ஞானியார் வெறுக்கிறார். அழியாத வெற்றி பெறுகிறவன் தன்னைத் தான் இழந்து விடமாட்டான். ஆனால் இந்த உலகம் தன்னை அவனில் இழந்து விடும் என்று கூறுகிறவர் இந்த ஞானியார். தன் உள்ளத்திலும் உடலிலும் தன்னுள் எங்கும் அந்த ஒப்பற்ற ரஹ்மானின் அருள் நிறைந்து ததும்ப வேண்டும்; அவனின் அருள் ஞான போதத்தால் ஆண்டவவனின் அடியானாகிய தான் அழியாத வெற்றி பெற வேண்டும் என்று தவிக்கிறார் இவர். நிலையாத காயத்திற்கு ரஹ்மான் துணை கொண்டு நித்தியத்துவம் அளித்து காலத்தையும் வென்று “பகுமானம்” மிக்க புத்தி நுட்பம் பெற்று அழியாத வெற்றிபெற இந்தக் கோட்டாற்று ஞானியார் சாஹிப் அவர்கள் அருளாளனிடம் எப்படி வரம் கேட்கிறார் பாருங்கள்:

‘ரஹுமானே யென்னுள் மணியா யுருண்டு
நினைவாகி யெங்கும் நிறைவாய்
நிலையாத காய மதிலே நிறைந்து
நிலைகொண்டு நின்ற பொருளே
பகுமான மென்ற திகழாத புந்தி
பலபேத மாயுன் னடியேன்
பரஞான ஜோதி யருளான வின்பம்
பரவாத பாவி யானுஞ்
செகமீதி லிந்த முறையா விருந்து
திருடான பாவ வலையுள்
தினமூழ்கி வந்து மதினூ டுழைந்து
சிறைபட் டிருந்த வடியேன்
அகமீதி லுன்றன் அருள்ஞான போதம்
அடியார்க்கு ளீந்து னருளால்
அழியாத வெற்றி தரவேணு மென்னுள்
அருள்வா யெழுந் தருள்வாய்’

கன்னியா குமரி மாவட்டத்தில் இன்றைக்கு 280 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் ஹஜ்ரத் ஷெய்கு ஞானியார் சாஹிப் ஒலியுல்லாஹ் அவர்கள். மன்சூர் ஹல்லாஜு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை ஞானகுருவாகக் கொண்டு அருள் ஞானம் பெற்றவர்கள். தன் ஞான குருவிடத்திருந்து கிடைத்த அகக் காட்சியின் விளைவாக எழுந்த நூற்றுக் கணக்கான பக்தி ரசப் பாடல்களை தமிழில் தந்தவர்கள். இப்பாடல்கள் ‘திருமெஞ்ஞான திருப்பாடல் திரட்’டாக வெளியிடப்பட்டு இறைஞான நூலாகத் திகழ்கின்றது.

இந்த சூஃபி ஞான வள்ளலார் மாபெரும் முஸ்லிம் முனிவராக விளங்கி பல அற்புதங்களை நிகழ்த்தி தம் காலத்து முஸ்லிம்களாலும் அல்லாதாராலும் ஞானியார் சாஹிப் எனப் போற்றப்பட்டு வாழ்ந்தவர்கள். மாபெரும் ஷெய்காகவும் இறைநேசராகவும் விளங்கி தமிழ் நாட்டில் தீன் பயிர் வளர்த்தவர்களில் ஒருவராவார். இவர்களின் மக்பரா கோட்டாற்றில் உள்ளது. இவர் வம்சத்தினர் ஞானியார் குடும்பத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். காலஞ்சென்ற மகாமதி, சதாவதானி ஷெய்கு தம்பி பாவலர் அவர்கள் ஞானியார் அப்பா வழிதோன்றலே.

Thank: http://sivanandabbaraty.blogspot.in/2011/02/blog-post_3160.html

No comments:

Post a Comment