உலோகச் சிலைகள் செய்யும் முறை --புகைப்படக் கண்ணோட்டத்துடன்.
மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம் முதலியவைகளினால் சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன.
"கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன’’
என்பது திவாகர நிகண்டு.
உலோகத் திருமேனிகள் இருவகைப்படும். முழுவதும் கனமாகச் செய்யப்பட்ட உலோகத் திருமேனிகள் என்றும் உள்ளே பொள்ளலாகச் செய்யப்பட்ட திருமேனிகள் என்றும் இருவகைப்படும். தமிழகத்தில் செய்யப்பட்ட திருமேனிகள் அனைத்தும் முழுதும் கனமாகச் செய்யப்பட்ட உலோகத்திருமேனிகளாகும். பல வாகனங்கள் கனப்பொள்ளலாகச் செய்யப்பட்டவை.
உலோகத் திருமேனிகள், பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. பொன் விலையுயர்ந்த உலோகமாகையால் அதனால் செய்யப்பட்ட சிலைகளும் மிகவும் குறைவு. அவ்வாறு இருந்தவையும், அவ்வப்போது நிகழ்ந்த படையெடுப்புக்களின்போது கொள்ளையிடப்பட்டன.
தற்காலம் வரை தப்பியிருக்கும் பெரும்பாலான தெய்வச் சிலைகள் செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் ஆகிய உலோகங்களில் செய்யப்பட்டவையே. பஞ்சலோகமே தெய்வச்சிலைகள் செய்வதற்குப் பெரிதும் விரும்பப்படுகிறது. பஞ்சலோகம் என்பது, தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தம் ஆகிய ஐந்து உலோகங்களைக் குறிப்பிட்ட அளவுவிகிதங்களில் கலந்து உருவாக்கப்படுகின்றது.
உலோகச் சிலைகள் பெரும்பாலும் 'செர்-பெர்டியூ' (Cire-Perdue) எனும் முறையில் தான் வார்க்கப்படுகின்றன. 'செர்-பர்டியூ' என்பது பிரெஞ்சு வார்த்தை, செர் என்றால் மெழுகு, பெர்டியூ என்றால் தொலைந்த (lost) என்று அர்த்தம் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் 'மதுசிஷ்டவிதானா' என்று பெயர்.
செய்யப் போகும் சிலையின் வடிவத்தை முதலில் மெழுகில் தயாரித்து பின் அதைச் சுற்றி கவனமாக அச்சு தயாரிக்கப்படுகிறது. அச்சு காய்ந்த பின் உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி வெளியேற்றி விட்டு உலோகத்தை உருக்கி உள்ளே ஊற்றி சிலை தயாராகிறது.
அழகு காட்டும் ஒரு சிலைக்குப் பின்னால் கடும் உழைப்பு இருக்கிறது. முதற்கட்டமாக மெழுகில் கரு உருவாக்கப்படும். இது சாதாரண மெழுகல்ல. ஒருவகை மரத்தில் உருகி வழியும் பாலக்காட்டு மெழுகு. அதோடு சம அளவுக்குக் குங்கிலியம் கலந்து உருக்கி வைத்துக்கொள்கிறார்கள். கைக்கு வாகாக வரும் இந்த மெழுகை வைத்துத் தேவையான அளவுக்கு ஒரு சிலை உருவாக்கப்படும்.
சிலை செய்யும் 'ஸ்தபதிகள்' உருவத்தின் நீளம், பருமன் ஆகியவை சரியாக இருக்குமாறும், வளைவுகள், ஆடை மடிப்புக்கள் தத்ரூபமாக தோன்றுமாறும் கலைநயத்துடன் மெழுகுச்சிலை
வடிக்கப்படுகிறது.
ஒரு வகையில் பார்த்தால் இந்த மெழுகுச்சிலை தான் அசல், உலோகச் சிலை நகல் தான்.
மெழுகுச்சிலையின் சிறிய பகுதிகளுக்குப் பலத்திற்காகவும், பின்னர் அச்சு தயார் செய்த பின் உலோகக் கலவை இந்தப் பகுதிகளுக்கு எளிதாக ஓடிச் சேரவும் கீழிருந்து இணைப்புக்கள் கொடுக்கப்படுகிறது.
மிக நுண்ணிய களிமண் (எறும்புப் புற்றிலிருந்து எடுப்பது), பசுஞ்சாணம், தவிடு ஆகியவற்றைக் கொண்டு அச்சுக் கலவை தயாரிக்கப்படுகிறது. அச்சுக் கலவை முதலில் குழம்பாக்கப்பட்டு மெழுகுச் சிலையின் மேல் பூசப்படுகிறது. நுணுக்கமான பகுதிகளும் விடுபட்டுப் போகாமல், காற்றுக் குமிழ்கள் உருவாகாமல் கவனத்துடன் மேலும் மேலும் பூசப்பட்டு தடிமனான அச்சு தயாராகிறது.
அச்சு நிழலில், வெடிப்புகள் ஏற்படாவண்ணம் உலர வைக்கப்படுகிறது.
இதன் பின்புறத்தே தலையிலும், இடையிலும், அடியிலும் துளைகள் இருக்கும். இது நன்கு உலர்ந்த பின்னர் தீயிலே இடுவர். மண்ணின் உள்ளே மெழுகிருந்த பகுதி அச்சாக நிற்கும். பெரும்பகுதி செம்பும், சிறிய அளவில் துத்தம், தங்கம், வெள்ளி, ஈயம் ஆகியவற்றையும் கலந்து உருக்கி அச்சின் பின் நடுவிலுள்ள துளையின் வழியாக ஊற்றுவர். தலையிலும் அடியிலும் உள்ள துளையின் வழியாக உலோகக் குழம்பு வெளிப்படும். அப்பொழுது அச்சு முழுவதும் உலோகம் பரவி இருக்கிறது என்று அறிவர்.
இதைக் குளிர வைப்பர். ஊற்றிய உலோகம் கெட்டியாகும். பின்னர் அச்சை உடைத்து வார்ப்பை வெளியில் எடுப்பர். பின்னர் சிற்றுளி கொண்டு திறனுக்கு ஏற்பச் செதுக்கி எழிலுற அமைப்பர். இம்முறையை '' தேன் மெழுகு முறை '' என்பர். இவ்வாறு செய்யப்பட்ட உருவம் முழுவதும் கனமாக இருக்கும். ஐந்து உலோகக் கலவை ஆனதால் பஞ்சலோகம்’ என்பர்.
ஐம்பொன் என்றால் பெயருக்குத்தான் பொன். ௭௦ சதவிகிதம் செம்பு, ௨௦ சதவிகிதம் துத்தம், , ௧௦ சதவிகிதம் ஈயம் என்பதுதான் கணக்கு. வெள்ளியும் தங்கமும் வசதியைப் பொறுத்தது.[ இந்த விகிதத் தன்மை மாறுபடலாம் ]
சில்ப சாஸ்திரம், மானசாரா, அபிலாசித்தார்த்தா சிந்தாமணி ஆகிய நூல்களில் பஞ்சலோகம் பற்றியும் சிலை செய்யும் விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மிக உயர்ந்தவை என்றும், இவை ஐந்தும் கலந்தது பஞ்சலோகம் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன.
ஆனால் அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காலத்திய பஞ்சலோக சிலைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வுகளிலிருந்து தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் கலந்திருப்பதாக கண்டறியப்படவில்லை.
ஐம்பொன்னை உருக்குவதற்கு மூசை என்னும் ஒரு அடுப்பு இருக்கிறது . அதில் கரியைப் போட்டு அதிகபட்ச வெப்பத்தில் உருக்கவேண்டும் . அதே நேரம் அந்த அச்சுக் கூட்டையும் செக்கச் சிவக்க சூட்டிலேயே வைத்திருக்கவேண்டும் . ஐம்பொன் உருகி தண்ணீர் போல நிற்கும் நேரத்தில் கவனமாக எடுத்து அச்சில் உள்ள இருக்கிற சிறு துளைகள் வழியாக உள்ளே கவனமாக ஊற்றவேண்டும்.
தமிழகத்து நூல்களில் சிறந்த குறிப்பு ஒன்று காணப்படுகிறது. ஓர் ஊரில் தெய்வ உருவை உலோகத்தில் செய்ய விழையும்போது, மெழுகினால் செய்த உருவை அலங்கரித்து ஊர் முழுவதும் வலமாக எடுத்துச் செல்வர். பின்னரே மண்ணிட்டு அச்சு செய்வர். இவ்வாறு ஊர்வலமாக எடுத்துச் செல்வதால் ஊரார்களின் ஒப்புதலையும், அவர்கள் விரும்பினால் வேண்டிய மாற்றங்களையும் செய்ய வாய்ப்புண்டு.
உருவம் முழுவதும் வார்த்து செதுக்கியமைத்து அதன் பின்னர் அவற்றை உரிய பீடங்களிலே அமைக்கும்போது பல இரத்தினக் கற்களைப் பீடத்திலிட்டு பின்னர் தெய்வ உருவை அப்பீடத்தில் பொருத்துவர். இதற்கு '' இரத்தின நியாசம் செய்தல்" என்று பெயர். எவ்வாறு கருவறையில் தெய்வச் சிலைகளை பிரதிஷ்டை செய்கிறோமோ, அதுபோல செப்பு உருவங்களுக்கும் பிரதிஷ்டை செய்வதாய் இச்செயல் அமையும்.
உருவைத் தெய்வமாக மாற்றும் கடைசிச் செயல் கண் திறப்பது ஆகும். கலை நிறைந்த ஸ்தபதி உளியால் கணிணைச் செதுக்கியவுடன் அச்சிலை தெய்வமாகக் கொள்ளப்படும். கண் திறப்பது சிறந்த விழாவாகக் கொண்டாடப்படும். அப்பொழுது அவ்வழகிய செப்புத் திருமேனியை வடித்த ஸ்தபதிக்கு பட்டாடைகள் அளித்து மலர்மாலைகள் அணிவித்து பொன்னும் பொருளும் கொடுத்து கெளரவிப்பர்,
நன்றி=
௧.கலிபோர்னியா லோட்டஸ் அருங்காட்சியக இணையதளம்.௨. தமிழ் இணையக்கல்விக் கழகம்.௩.தி ஹிந்து தமிழ் நாளிதழ்.௪.கட்டுரைப்பூங்கா -கரந்தைத் தமிழ்ச் சங்கம்.௫.தமிழர் நாகரிகமும் பண்பாடும் -அ. தட்சிணாமூர்த்தி.
புகைப்படங்கள்==
௧.மெழுகுச் சிலை தயாரிக்க ,தயாராகும் மெழுகுக் குழம்பு.


௨.இலட்சுமி -மெழுகுச்சிலை .


௩. கோபாலகிருஷ்ணன் மெழுகுச்சிலை ,ஓவியத்துடன் ஒப்பிடப்படுகிறது.

௪.பசுவின் மெழுகுச்சிலை.[கோபாலகிருஷ்ணனுக்கு ]
௫.Cleveland Museum of Art.உள்ள கணபதியின் மாதிரி தயாரிக்க ,மெழுகுச்சிலை.

௬, ௭, ௮..மெழுகுச்சிலைகளில் நகாசு வேலை.


௯, .அச்சுக் கலவை மூலம் அச்சு தயாரித்தல்.[ மெழுகுச் சிலை உள்ளே]




௧௪,௧௫.உலோகக்குழம்பினை அச்சுக்குள் வார்த்தல்.

௧௬.அச்சு உலோகக்குழம்பால் நிறைந்ததை உறுதிச்செய்தல்.[இரண்டு சிவப்பு வட்டங்கள்]

௧௭.ஆறின அச்சை உடைத்தல்.

௧௮,௧௯,௨௦ அச்சிலிருந்து வெளிப்பட்ட திருமேனிகள்.


௨௪, ௨௫.. சிற்பி வரதராஜ் அவர்கள் பணியினை நிறைவு செய்த மகிழ்வில்.




No comments:
Post a Comment