Thursday, April 13, 2017

குரு மலையில் அருளும் தவசி தம்பிரான் சுவாமிகளின் சமாதி


thank : http://bakthi-yugam.blogspot.in/2012/03/blog-post_15.html

குரு மலையில் அருளும் தவசி தம்பிரான் சுவாமிகளின் சமாதி
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி நகரின் அருகிலே சுமார் 12  km தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம்தான் குருமலை.(GURUMALAI). ஆனால் நடைமுறை வழக்கில் மக்கள் இதை Kurumalai என உச்சரிக்கின்றனர்.கோவில்பட்டியில் இருந்து நகர பேருந்துகள் இந்த கிராமத்திற்க்குச் செல்கின்றன.

 திரு."சித்தர்". மணி , சித்த-மார்க்க ஆராய்ச்சியாளர் திரு."வசியன்" ஜோதி கிருஷ்ணா, மற்றும் அவரது இரு நண்பர்கள் ஆகியோரோடு என்னையும் சேர்த்து நாங்கள் ஐந்து நபர்கள்  கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டோம்.

வறண்ட பாதைகளின் வழியாக சுமார் 1 /2  மணி நேரம் பேருந்தில் பிரயாணப் பட்டால் இந்த கிராமத்தினை அடையலாம். ஒன்றிரண்டு டீ கடைகள் உள்ளன. பேருந்து இறக்கிவிடும் இடத்தில் இருந்து நடக்கத் துவங்கினால் , கிட்டத்தட்ட 4 km தூரம் நடக்க வேண்டும்.நாங்கள் சென்றது  நல்ல வெயில் கால முற்பகல் நேரம்.  எங்கள் ஐவர் குழு , பேசியபடி மெதுவாக   நடக்கத்துவங்கியது. வழி முழுவதும் நல்ல செம்மண் சரள் பாதை  , இருபுறமும் குறுங்காடு.

சுமார் 2 km சென்றதும் நாம் ஒரு அய்யனார் கோவிலை அடையலாம். அதன்  அருகிலேயே ஒரு ஊற்று உள்ளது. தெள்ளிய நீர் வருடம் முழுவதும் அதில் ஊறி வந்துக் கொண்டே இருக்கிறது. குடிப்பதற்கு அருமையாக உள்ளது. அந்த இடத்தில் இருந்து , நாம் "குரு மலை" மீது ஏறத் துவங்கினோம்.

    ( வற்றாத நீர் ஊற்று )

சரள் பாறைகள் நிறைந்த பாதை. கிட்டத்தட்ட உச்சி வெயிலில் வியர்வை சொட்ட , மேலே ஏறத் துவங்கினோம்.இது ஒரு சிறு குன்று  போல அமைந்துள்ள , சிறு காடு. ஒரு காலத்தில் இங்கே  மிகப் பெரிய காடுகளும், கொடிய விலங்குகளும், இருந்ததாகவும் , தற்போது அவை அழிக்கப் பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர்.

காற்றின் ஒலி ஒரு விதமான  லயத்தோடு கேட்கிறது. அது அந்த சூழலின் அமானுஷ்ய தன்மையினை அதிகமாக்குகிறது.பாறைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் , யாரோ எடுத்து பொருத்தி வைத்தது போல இருப்பது, காண வியப்பான ஒன்றாகும். அவை காற்றினால்  அரிக்கப்பட்டு, காணப்படுகின்றன. 


( நந்தி போன்ற தோற்றம் உடைய பாறை )(பாறைகளின் வழியாக மலை அடிவாரத்தின் தோற்றம் )
மலையின் உச்சியினை அடைந்த பின் அங்கே , ஒரு சிறு குகை ஒன்றினை காண்கிறோம். நிசப்தமான இடம். நிறைய அபூர்வமான மூலிகைகள் இருக்கின்றன. ஆனால் பசுமையான காடு இல்லை.

குகையின் முகப்பிலே ஒரு சிறு லிங்க வடிவம் காணப் படுகிறது. அதன் முன்னால்  காணப்படும்    சிறு பள்ளம் "யாக குண்டமாக" விசேஷ நாட்களில் பயன்படுத்தப் படுகிறது.
( இதன் வீடியோ காட்சி அடுத்து வரும்)


 குகை வாசலில் ஒரு மரம் வளைந்து நிழல் கொடுத்தபடி உள்ளது. அதை "கன எருமை மரம் " எனவும் , லிங்கத்திற்குப் பின்னால் அமைந்துள்ள குகையினுள் ஒரு நீண்ட பாதை உள்ளதாகவும் , ஆனால் அதனுள் செல்ல இயலாது எனவும் நண்பர் "வசியன்" ஜோதி கிருஷ்ணா  கூறினார்.               (யாக குண்டம் )--->                                                                            
ஆங்காங்கே நிறைய அகல் விளக்குகள் காணப்படுகின்றன.உச்சி பாறை ஒன்றினில் திருகார்த்திகை சமயத்தில் பயன்படுத்திய மிகப் பெரிய மண் விளக்கு காணப்படுகிறது. மாத பௌர்ணமி நாட்களில் இந்த மலையில் மக்கள் கூடுவதாகக் கூறுகிறார்கள்.

தவசி தம்பிரான் சுவாமிகள் முருக பெருமானின் பூரண அருள் பெற்றவராகவும் , ரசவாததிலே தேர்ச்சிபெற்றவராகவும் திகழ்ந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். அவரது ஜீவ சமாதி  எட்டயபுரம் அருகே வேறு ஊரிலும் இருப்பதாகவும் கூறுகிறார்கள். அந்நாட்களில் இந்த காடு எட்டயபுரம் சமஸ்தானதிற்குச் சொந்தமானதாக இருந்ததாகவும், எட்டயபுர அரசர்களுக்கு தம்பிரான் சுவாமிகள் தனது ரசவாதத்தின் மூலம் தங்கம் செய்துக் கொடுத்ததாகவும் ஒரு செய்தி நிலவுகிறதாம்.


 திரு." சித்தர் " மணி (இடது) மற்றும் திரு. "வசியன்" ஜோதி கிருஷ்ணா (வலது)


குகையின் முன்னால் ஒரு கற்றாழை மரத்தின் நிழலிலே நாங்கள் அமர்ந்து , சித்தர்கள் பாடல்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். "சித்தர்கள் கோவை " எனும் புத்தகத்திலே இந்த "குருமலை" குறித்து, சிறப்பாகக் கூறப்பட்டுள்ளதாக ஜோதி கிருஷ்ணா கூறினார்.இந்த மலை முருகபெருமான் தவம் செய்து, சூரனை அழிக்க இங்கிருந்து புறப்பட்டு திருசெந்தூர் சென்றதாகவும் தகவல் உள்ளதாகவும்  அவர் கூறினார்.

நாங்கள் சித்தர்கள் குறித்தும் முருகப் பெருமானைக் குறித்தும் பேசிக்கொண்டு இருந்த நேரத்திலே ஒரு  மயில்   அவ்விடம்  வந்து , குகை வாசல் வரை சென்று பின் மலை சரிவிலே சென்று விட்டது. மீண்டும்  ஒரு முறை வந்து இதேமாதிரியாக செய்தது. முருகனை குறித்து பேசிக்கொண்டு இருந்த நேரத்திலே மயில் வந்தது எங்களுக்கு  ஆச்சரியமாக   இருந்ததது.( இதன் வீடியோ காட்சி அடுத்து வரும் )
எங்கள் ஆச்சரியம் தீரும் முன்னே , மேலும் ஒரு ஆச்சரியம். நாங்கள் பேசிக்கொண்டு இருந்த நேரம் கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும் , அந்த உச்சி வெயிலிலே அங்கே ஒரு சாது வந்தார். குருந்தாடியோடும் , பச்சை உடையிலும் அவர் காணப்பட்டார். அவர் எங்கே இருந்து வருகிறார் எனக் கேட்டதற்கு "கைலாயம்" எனக் கூறி விட்டு , குகைக்குள் சில அடிகள் இறங்கி வழிபடத் துவங்கிவிட்டார்.  (இந்த காட்சியும் அடுத்து வழங்கப்படும்).

நாங்களும் அவரோடு சேர்ந்து , சிறிது நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு, மெல்ல இறங்கினோம். நேரம் இன்மையால் ,  1 k.m  தூரத்தில் உள்ள முருகனின் ஆலயத்திற்க்குச் செல்ல இயலவில்லை.

மொத்தத்தில் ஒரு அருமையான சத்சங்கம் குரு மலையிலே நடைபெற்றது.

No comments:

Post a Comment