Thank : Meenakshi Dasan [FB] at Meenakshi Temple. Madurai ·
மீனாட்சியும் மாணிக்கவாசகரும் !!!
பக்தி பரவும் மார்கழி மாதம் !!! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எண்ணெய்காப்பு உற்சவம் 10 நாள் திருவிழாவாக சமீபத்தில் நடந்து முடிந்தது. மதுரை உற்சவங்கள் என்றாலே ஒரு தனி அழகு தான். அதிலும் பிரத்யேகமாக அம்பைகைக்கு மட்டுமே கொண்டாடப்படும் 4 உற்சவங்கள் (ஆடி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி ) அழகோ அழகு. அதில் ஒன்று தான் இந்த மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம்.
தினமும் மாலை கோவிலில் இருந்து "தந்த சிம்ஹாசனந்த்தில்" (ஆம் முற்றிலும் யானை தந்தத்தால் ஆனது !!!) "பட்டு சௌரி முடி" சாற்றிக்கொண்டு புறப்படும் மீனாட்சி நேரே புதுமண்டபம் அடைவாள். மாபெரும் மண்டபத்தில் நடுநாயகமாக கொலுவீற்றருளும் மகாராணிக்கு அர்க்ய , பாத்ய, ஆச்சாமயீனம், தந்த தாவனம் (பல் விளக்குதல், நாக்கு வழித்தல்), தாம்பூலம் தரித்தல், முடிக்கு வாசனை தைலம் தேய்த்தல், வகிடு எடுத்தல் / தலை வாருதல் , முடிந்து பூச்சூட்டல், கண்ணாடி சமர்ப்பித்தல் ஆகிய அனைத்து ராஜோபசாரங்களும் வெகு அழகாகவும் அதற்கேற்ற நளினத்துடனும் நடைபெறும் (ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஆண்டாளுக்கு இதே போல வைபவம் உண்டு). இவ்வைபவத்திற்கென்று பிரத்யேக நாதஸ்வரமும், கொட்டும் இசைக்கப்படும். இறுதியாக சௌரி முடி களைந்து கிரீடம் சாற்றி தூப தீப நெய்வேதியங்கள். தினமும் புதுமண்டப பிரதட்சிணமும் உண்டு (ஒரு காலத்தில் பத்தி உலாத்துதல்). இவ்விழாவின் முக்கிய அங்கங்களாக திகழும் வெள்ளி கோரத உற்சவத்தையும், கனக தண்டியல் சேவையையும் காண கண்கோடி வேண்டும்.
இந்த எண்ணெய் காப்பு உற்சவம் முடியும் நாள் திருவாதிரை திருநாள் !!! எல்லா ஊர்களிலும் ஆதிரை அன்று ஐயனுக்கு மட்டுமே முக்கியத்துவம். அனால் மதுரையிலோ அம்பிகைக்கும் சேர்ந்தே கொண்டாட்டம் தான் !! (எல்லாவிதங்களிலும் தன் அதிகாரத்தை செலுத்துகிறாளோ என்று யோசிக்க வைக்கிறது ) அன்று மாலை அம்பிகை நால்வர் சன்னதிக்கு !! எழுந்தருளி "ராட்டினம் பொன்னூஞ்சல்" ஆடுவாள்.
அது என்ன ராட்டினம் பொன் ஊஞ்சல் ???
ஊஞ்சல் நமக்கு தெரியும். மாசற்ற தங்கத்திற்கு ஈடான திருமேனி உடைய அம்பிகை ஆடுவதால் அது பொன்னூஞ்சல். அது சரி அது என்ன ராட்டினம் ?? இது ஒரு அழகிய கலை. ராட்டினம் என்பது ஒரு வித வட்டவடிவமான பொருள் (ரங்க ராட்டினம்). இதை ஆங்கிலத்தில் "Spring and the wheel" என்று அழைப்பர். இதனை உயரே கட்டி தொங்க விடுவர். அது இப்படியும் அப்படியுமாக அழகாக சுற்றி ஆடும் . அந்த ராட்டினத்தில் இருந்து பல வித வண்ண புடவைகள் தொங்கும். பெண்கள் சிலர் ஒரு கூட்டமாக கூடி அந்த புடவைகளின் நுனியை பிடித்துக்கொண்டு இசைக்கு ஏற்றாற்போல் நடனம் ஆடுவர். அம்பிகையும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு இந்நாடனத்தை தானும் ரசிப்பாள். நடனம் முடியும் தருவாயில் இப்பெண்கள் ஆடிய ஆட்டத்தினால் தனித்தனியே தொங்கிக்கொண்டிருந்த அப்புடவைகள் ஒருங்கே ஒன்று சேர்ந்து அழகாக பிண்ணப்பட்டிருக்கும். இந்த கலை இப்போது முற்றிலுமாக அழிந்து விட்டது (ஸ்ரீவில்லிபுத்தூரில் யாரோ ஒரு அம்மையார் இதை மறுபடியும் சொல்லித்தருகிறார்கள் என்று ஒரு கேள்வி !!!). கலை அழிந்ததால் ராட்டினமும் தான் சுத்துவதை நிறுத்திக்கொண்டது. ஆனால் ராட்டினம் பொன்னூஞ்சல் என்ற பெயர் மட்டும் மாறாமல் நிலைத்து நிற்கிறது ......
சரி இப்பொழுது ஆரம்பித்த கதைக்கு வருவோம். மீனாட்சியும் மாணிக்கவாசகரும் !!!
இந்த ராட்டினம் பொன்னூஞ்சல்லில் வைத்து அம்பிகைக்கு கண்ணூறு கழிப்பார்கள். பிறகு சோமசுந்தர பெருமான் அம்பிகையை நோக்கியவாறு நேரே வந்து அமருவார் . ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி. ஸ்வாமியும் அம்பிகையும் ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் நோக்கி, இருக்க அம்பிகை ஊஞ்சல் ஆட , இந்த காட்சியை மணிவாசகர் கண்டு மெய்சிலிர்த்தார் போலும் !!! அதான் மதுரை வரும் சமயத்தில் ஐயனுக்கு பாடிய அனைத்தையும் அம்பிகையிடம் கொட்டிவிட்டார் !!! திருவெம்பாவை முழுவதும் மீனாட்சிக்கு முன்னின்று ஓதுவார் இசைக்க !!! (ஆம் ஊஞ்சலில் இருக்கும் மீனாட்சி முன் தான் !!!) ஒவ்வொரு பாடல் முடிவிலும் ஒரு நிவேதனமும் தீபாராதனையும் அம்பிகைக்கு !!! எல்லாம் முடிந்து பஞ்ச மூர்த்திகள் வீதிப்புறப்பாடு.
அப்பன் உடல் பாதி வாங்கி, ஆதிரை நாளும் தான் வாங்கி, அன்று மணிவாசகன் உதிர்த்த சொல் முதுதும் வாங்கி,ஆனிப்பொன்னூஞ்சல் ஆடும் அருந்தவ காட்சியை என்னவென்று சொல்வது !!!
No comments:
Post a Comment