thank :
நண்பர் - யோகப் பயிற்சிகளைச் செய்வதால் தற்பொழுதைய மாசு படிந்த கால சூழலில் ஏற்படும் கொடிய நோய்களை சீர் செய்து விட முடியும் என்று நம்புகிறீர்களா ?
பதில் - கொடிய நோய்கள் என்று எடுத்துக் கொண்டால் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள், ஒழுக்கக் குறைவால் ஏற்படும் நோய்கள், கர்ம பலனால் ஏற்படும் நோய்கள் என்று மூன்று வகைகளாகக் கொள்ளலாம். நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை யோகப் பயிற்சி செய்வதால் வராமல் தடுக்கவும் முடியும், ஏற்கனவே வந்திருந்தால் குணப்படுத்தவும் முடியும். ஒழுக்கக் குறைவால் ஏற்படும் எயிட்ஸ் போன்ற நோய்களை யோகப் பயிற்சிகளால் குணப்படுத்த முடியாது. அதே சமயம் மருத்துவத்தோடு, யோகப் பயிற்சிகளையும் செய்து நோயின் தாக்கத்தை சற்று மட்டுப்படுத்தலாம். புகைத்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு, நோயின் கடுமைக்கேற்ப தீர்வு அமையும்.
யோகப் பயிற்சிகளோடு சேர்த்து தியானப் பயிற்சியையும் முறையாகக் கடைபிடித்து வருபவர்கள் கர்ம பலன்களில் இருந்தும் விடுபட வாய்ப்பிருக்கிறது. யோகா, தியானம் செய்பவர்கள் பெரும்பாலும் தீய வழிகளில் செல்ல மாட்டார்கள். எல்லையற்ற வல்லமை உடைய பிரபஞ்ச சக்தியின் ஆற்றல்களையெல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ளும் பொழுது நம் உடலில் நோய் தடுப்பாற்றல் பெருகுகிறது. அது எவ்வாறு என்று பார்ப்போம். மனிதனுடைய உடலில் நோய் தடுப்பாற்றலைத் தரவல்ல நிணநீர் மண்டலமும், தடுப்பாற்றலைத் தரும் பொருட்களை உருவாக்கும் மண்ணீரலும், தடுப்பாற்றலைத் தரும் பல்வேறு சுரப்பு நீர்களும் உண்டு.
நோய்களை உருவாக்கும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து விடும் பொழுது, நிணநீர் சுரப்பிகள் எதிர்ப்புத் திறன் கொண்ட பொருட்களை(anti bodies) உருவாக்கி அழித்து விடுகின்றன. மண்ணீரலும் தன் பங்கிற்கு இந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இரத்த நாளங்களில் ஊடுருவும் இத்தகைய நுண்ணுயிரிகளை இரத்த வெள்ளை அணுக்கள் அழித்து விடுகின்றன. இதைப் போல உடலுறுப்புகளிலும், சுரப்பிகளிலும் சுரக்கும் அமிலங்களும், சுரப்பு நீர்களும் இத்தகைய கிருமிகளை அழிப்பதில் வெவ்வேறு செய் திறன்களைப் பின்பற்றுகின்றன. இப்படி பல வகையினில் எதிர்ப்பு ஆற்றல் பெறப்பட்டாலும் தொற்று நோய்கள் ஏன் வருகின்றன என்று கேட்டால்,....
அதற்கான காரணம், நம் உடலில் சக்திப் பற்றாக் குறை காரணமாக, நோய் தடுப்புத் திறன் குறைந்து விடுவதால்தான் வருகின்றன. யோக சாதனங்கள் மூலம் பிரபஞ்ச சக்திகளின் திணிவும், பிராண சக்தியின் திணிவும் நம் உடலில் ஏற்பட்டு விடுவதால் நோய் தடுப்புத் திறன் இயல்பாகவே பெருகி விடுகின்றது. அதாவது யோகாசனம் மற்றும் உடற் பயிற்சிகள் செய்வது மூலம், நரம்பு மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், இவைகளைச் சார்ந்து இயங்கும் நிண நீர் மண்டலம் ஆகிய யாவும் வலிமையடைந்து நோய் எதிர்ப்பாற்றல் பெருகி விடுகின்றது. அது போலவே யோக சாதகர்கள் சாத்வீகமான உணவு முறையைக் கையாள்வதால் ஜீரணத்திற்குச் செலவாகும் அதிக சக்தி சேமிக்கப்படுகின்றது.
மேலும், மிளகு, சுக்கு, திப்பிலி, மஞ்சள், பூண்டு, வெங்காயம், துளசி, வேப்பம் பூ மற்றும் தளிர் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக நோய் எதிர்ப்பாற்றலைப் பெற்றுக் கொள்ளலாம். பிரத்யாகாரம், தாரணை, தியானம் போன்றவைகளால் மனதைக் கட்டுப்படுத்தும் பொழுது, மூளையும், நரம்பு மண்டலமும் பலப்பட்டு விடுவதால், இவைகளோடு தொடர்புடைய நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் சுரப்பு நீர்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கின்றன. இவைகளோடு கூடி நல்ல சுகாதாரமான பழக்க வழக்கங்களும், ஒழுக்கமும், பக்தியும் அமையும் பொழுது எந்த நோய்க் கிருமிகளும் சாதகனை ஒன்றும் செய்ய முடியாது. நோய் எதிர்ப்புத் திறன் மட்டுமல்ல, யோக சாதனங்கள் மூலம் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment