Chellappan Sairam returned from a beautiful pilgrimage to Pothigai Peak. He shares his experience with Siddha Heartbeat readers in his own words.
ஓம் அகத்தீசாய நம, முன்னவனை பணிந்திட்டு தித்திக்கும் தேன் தமிழ்க் கொண்டு நாவார உனைப் பாட நலம் பல நல்கிடும் நமச்சிவாய செல்வமே. தேவாரமும், திருவாசகமும் நான் பாடி அனுதினமும் அழுது தொழுதிட அணுவுக்குள் அணுவானவன் அன்புடன் அகம் மகிழ்ந்து உன்னிடம் என்னை சேர்ப்பித்தான். பராசக்தி பாலகனே பார்போற்றும் குறு முனிவனே, திருப்புகழ் நாயகனிடம் தெய்வத்தமிழ் பயின்ற தமிழ் முனிவனே. கடலெல்லாம் உண்டவா, வாதாபியை வென்றவா, ஆதித்ய ஹ்ருதயம் அருளியவா, மாமுனிவா, மாதவ முனிவா, குறுமுனிவா, குடமுனிவா, திருமுனிவா, பொதியவா, எங்களின் தலையாய குருமுனிவா நின் தாழ் சரண்...
தலையாய சித்தர் அகத்திய பெருமானின் தனிபெருங்கருணையினால் அடியேனின் பொதிகை மலை பயண அனுபவமும், அகத்திய பெருமானின் தரிசன அனுபவமும், என் குருநாதர் ஷிர்டி சாய் நாதரை, காஞ்சி மஹா பெரியவாவை வணங்கி கடந்த 2014 அக்டோபர் மாதம் தலையாய சித்தர் அகத்திய பெருமானின் தனிபெருங் கருணையினால் அடியேன் பொதிகை மலை செல்ல வாய்ப்பு கிடைத்தது.
இந்நேரத்தில் எங்களை அழைத்து சென்ற திரு. சதிஷ் அண்ணா, முரளி அண்ணா, கண்ணையன் அண்ணா, கிருஷ்ண அய்யா, ஜகதீஷ், கணேஷ் மற்றும் எங்களுடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி எங்களின் பயணத்தை திருவனந்தபுரம் போன காட் எஸ்டேட் இல் இருந்து காலை 17 பேர் பொதிகை மலை யாத்திரையை துவக்கினோம். முதல் நாள் பாபநாசத்தில் லோகநாயகி உடனுறை பாபவிநாசகரை தரிசித்து கல்யாண தீர்த்தத்தில் லோபா முத்ரா சமேத மஹரிஷி அகத்திய பெருமானை வணங்கி கிருஷ்ண அய்யா வீட்டில் நாங்கள் எடுத்து செல்ல வேண்டிய உணவு மற்றும் அகத்திய பெருமானுக்குறிய அபிஷேக பொருட்கள் அனைத்தையும் எடுத்துகொண்டோம். நாங்கள் சென்று வர அனைத்து ஏற்பாடுகளையும் நல்ல முறையில் செய்து கொடுத்த கிருஷ்ண அய்யா, கணேஷ் அவர்களின் குடும்பத்தாருக்கு எங்களின் நன்றிகள்.
கேரள வனவிலங்கு துறை காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி வாங்கிய பிறகு, போன காட் எஸ்டேட் காலை 8 மணிக்கு வந்தடைந்தோம். எங்களின் அனுமதி சீட்டை வன இலாக்கா அதிகாரி பரிசோதனை செய்தபின் பணம் செலுத்தி காலை உணவை முடித்துக்கொண்டு நாங்கள் எங்களின் பயணத்தை அகத்திய பெருமானை வேண்டி துவக்கினோம். நாங்கள் புறப்படும் சமயம் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மழைக் காலம் என்பதால் அட்டை வேறு எங்கள் அனைவரையும் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. அதில் இருந்து தப்பிக்க மூக்குபொடியை வேப்ப எண்ணையில் குழைத்து கை கால்களில் தடவிக் கொள்ள சொன்னார்கள் எங்களுடன் வந்த வழிகாட்டிகள். கடித்துக் கொண்டு இருக்கும் அட்டையில் இருந்து விடுபட சிறிது தூள் உப்பை அதன் மீது தூவினால் விழுந்துவிடும். இவையெல்லாம் நினைத்து தயவு செய்து யாரும் பயப்பட தேவை இல்லை. அட்டை இருந்ததால் அந்த பகுதிகளை நாங்கள் விரைவாக வனங்களில் கடந்து சென்றோம். மேலும் அகத்திய பெருமான் அட்டை விடல் என்ற சித்த மருத்துவத்தை தனது அகத்தியர் நயன விதி 500 என்ற நூலில் விரிவாகவும், தெளிவாகவும் விளக்கி உள்ளார். நன்றி சித்தர்கள் இராச்சியம் வலைத்தளம்.
நாங்கள் அனைவரும் போணக் காட் எஸ்டேட்ல் லிருந்து சுமார் இரண்டு மணி நேர நடை பயணத்திற்கு பிறகு போணக் காட் பிகெட் ஸ்டேசன் வந்தோம். இங்கிருந்து தான் நம்முடைய பொதிகை மலை பயணம் ஆரம்பம் ஆகும். இதுவரை வர ஜீப் வசதி உள்ளது. சிறிது தூரம் நடந்து சென்ற உடன் நாம் முதலில் காண்பது விநாயக பெருமான் கோவில் அவரை வணங்கி விட்டு பயணத்தை தொடர்கிறோம். அங்கிருந்து சுமார் 1.30 மணி பயண நேரத்திற்கு பிறகு நாங்கள் காரமணையாறு வந்தடைந்தோம். மிகவும் அடர்ந்த வனப்பகுதி நாங்கள் சென்ற நேரம் மழை வேறு பெய்து கொண்டு இருந்ததால் எங்கும் நீர் வரத்து அதிகமாகவே காணப்பட்டது. நீண்ட கம்பை ஆங்காங்க ஊன்றி வழிகாட்டுவோரின் துணைக் கொண்டு காட்டாறுகளை கடந்தோம். வழியில் நாங்கள் கொண்டு வந்த மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் நடந்தோம். சிறிது தூரம் மலை ஏற்றம், பிறகு இறக்கம், அடர்ந்த வனப்பகுதி, காட்டாறு, சிறிது தூரம் சமதள பாதை, ஒற்றை அடி பாதை மிகவும் கவனமாக அகத்திய பெருமானை மனதினுள் வேண்டிக் கொண்டே நடந்து சென்றோம். சுமார் 5 மணி நேர பயணத்திற்க்கு பிறகு வழியில் மேலும் இரண்டு காட்டு ஆறுகளை கடந்த பிறகு இறுதியாக அட்டையாரை கடந்து அதிரு மலை கேம்ப் வந்தடைந்தோம். வேகமாக நடந்ததால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்தடைந்தோம்.
மூன்று நாள் பொதிகை மலை பயணத்தில் முதல் நாள் மாலை நாங்கள் கேரள வனத்துறையால் பக்தர்களுக்காக அமைக்க பட்ட அதிரு மலை கேம்ப்பில் தங்கினோம். கை கால்களில் கடித்துக் கொண்டிருந்த அட்டைகளை முழுவதுமாக சுத்தம் செய்து குளித்து விட்டு தங்குவதற்க்காக அமைக்கபட்டுள்ள கொட்டைகைக்கு உள்ளே சென்றோம். சிறிது நேரத்தில் எங்களுடன் வந்த வழிகாட்டிகள் எங்களுக்காக உணவு தயார் செய்தனர். நடந்து வந்த பயண களைப்பு பசி வேறு அதிகமாகவே நாங்கள் அனைவரும் நன்றாக நிறையவே உண்டோம். இரவு முழுவதும் மழை பெய்துக் கொண்டே இருந்தது. பிறகு நாங்கள் அனைவரும் உறங்கினோம்.
காலை சுமார் 7 மணியளவில் அனைவரும் குளித்துவிட்டு காலை உணவை அங்கேயே முடித்துக்கொண்டு எங்கள் சுமைகளை பெரும் அளவு கேம்ப்பில் வைத்துவிட்டு அகத்திய பெருமானுக்காக கொண்டு வந்த மாலைகள், பூஜை மற்றும் அபிஷேக பொருட்களை சுமந்து கொண்டு எங்களின் இரண்டாம் நாள் பயணம் அகத்திய பெருமானை தரிசனம் செய்ய புறப்பட்டோம். வழியில் முதலாவதாக அதிரு மலை காவல் தெய்வத்தை வணங்கி நடக்க தொடங்கினோம். இனி கடக்க வேண்டிய பாதை மிகவும் கடினமாகவும், செங்குத்தாக ஏறக்கூடிய பாதையாகவும் இருந்தது. கயிறுகள் கட்டி இருக்கும் மூன்று செங்குத்தான மலைகளை கடந்து நான்கு மணி நேர பயணத்திற்க்கு பிறகு பொதிகை மலை உச்சியை அடைந்தோம். அதுவரை நன்றாக பெய்துக் கொண்டிருந்த மழை நாங்கள் பொதிகை மலை உச்சியை அடைந்தவுடன் நின்று விட்டது. ஆனால் மலையை சுற்றி பரவலாக மழை பெய்து கொண்டு இருந்ததை காண முடிந்தது.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள் பொதிகை மலை உச்சியை அடைந்து அகத்திய பெருமானை தரிசித்த மாத்திரத்தில் நீங்கள் இதுவரை கடந்து வந்த சிரமங்கள், உடல் வலி அனைத்தும் மறைந்து அவரை கட்டிக்கொண்டு ஆனந்த படுவீர்கள். பெருமானின் கால்களை கட்டிக் கொண்டு ஆனந்த கண்ணீர் விடுவீர்கள். அனுபவத்தில் உணர்ந்தது.
மேலும் உச்சியில் உள்ள சிறு நீர் சுனையில் நீரை அங்கே இருந்த மண் பாண்டத்தில் எடுத்துக் கொண்டு அய்யனை அந்நீரினால் சுத்தம் செய்தோம். பிறகு அய்யனுக்கு சந்தனாதி தைலம் அபிஷேகம் செய்யும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. அப்போது எங்களோடு வந்த இருவர் அடியேன் பெருமானுக்கு சந்தனாதி தைலம் அபிஷேகம் உடலில் தேய்க்கும் பொழுது அவர்கள் அய்யனின் ஜடா முடி உச்சியில் சூடு இருப்பதை தொட்டு உணர்ந்தனர். அந்த மழைகாலத்தில் சூடாக இருப்பதை எங்களுக்கு தெரிவித்தனர். சில மணி துளிகள் மட்டுமே அந்த சூடு இருந்தது.
அதன் பிறகு வரிசையாக ஒவ்வொருவரும் அகத்திய பெருமானுக்கு விபூதி, சந்தானம், பன்னீர், பஞ்சாமிர்தம் முதலிய அபிஷேகங்களை தனித்தனியாக செய்தோம். அனைத்தையையும் அன்போடு இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டார் கும்பமுனி பெருமான். பிறகு பொங்கல் இட்டு படையல் வைத்து தீபாராதனை காட்டி வழிபடும் பொழுது சிறிது மழை தூரல். அகத்திய பெருமானின் ஆசிர்வாதமாகவே எண்ணிக்கொண்டோம். அய்யனை மனதார வேண்டி அவர் திருப்பாதங்களில் விழுந்து வணங்கி அடுத்த முறையும் கருணைக் கொண்டு வாய்ப்பு தருவீராக என்று பிரிய மனமில்லாமல் மலை இறங்கினோம். அது வரை இல்லாமல் இருந்த மழைத் தூரல் மீண்டும் வெகுவாக அதிகரித்தது. மிகவும் கடினமாக இருந்தது மழை காரணமாக இருந்தாலும் அனைத்து இடத்திலும் அகத்திய பெருமான் கருணையோடு காப்பாற்றினார்.
மூன்று மணி நேர மலை இறக்கத்திற்கு பிறகு அடியேன் மட்டும் கீழ குனிந்து என் கால்களில் கடித்துக் கொண்டிருந்த அட்டையை எடுத்து விட்டு செல்லலாம் என்று அட்டையை ஒவ்வொன்றாக எடுத்து கொண்டிருந்தேன். அந்த சிறிது நேர கவனக் குறைவால் என்னோடு வந்தவர்கள் என்னை விட்டுவிட்டு வெகு தூரம் சென்று விட்டனர். இப்பொழுது அடியேன் மட்டும் தனியாக காட்டில் வழி தெரியாமல் கண்ணீர் விட்டபடி வந்த பாதையில் அம்பு குறியை பார்த்தவாறு மிகவும் பயத்தோடு நடந்து வந்துக் கொண்டிருந்தேன். என்னால் அழுகையை அடக்க முடிய வில்லை அகத்திய பெருமானை வேண்டி அழுகிறேன், ஷிரிடி சாய் நாதரை வேண்டி அழுகிறேன். ஏனென்றால் சில இடத்தில் அம்பு குறியை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. சில இடத்தில் பாதைகள் இரண்டு பிரிவாக இருந்தன என்னால் எந்த பாதை சரியென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அகத்திய பெருமானை அழுது வேண்டினேன் சத்தம் வராமல். யானை மற்றும் இதர மிருகங்கள் பயம் வேறு.
அப்பொழுது என் மனதில் நீ இடது பக்கம் போ என்று ஒரு செய்தி வந்து விழுந்தது. மனதை தேற்றிக் கொண்டு செய்தி வந்த திசையில் சென்றேன். கொஞ்ச தூரம் சென்ற உடன் மீண்டும் அம்பு குறி தென் பட்டது. மனதில் ஒரு வாரு நிம்மதி வந்தது. சிறிது தூரம் சென்ற பிறகு மறுபடியும் அதே குழப்பம் ஏனென்றால் காட்டுப் பாதை இரு வேறு பிரிவுகளாக இருந்தது. மெதுவாக கண்களை மூடி வேண்டினேன். அப்பொழுது மனதில் போ!! போ!!! இடது பக்கமே போ!!! என்றது மனதில் அந்த சொல். மனதை திடப்படுத்திக் கொண்டு செய்தி வந்த இடது திசையில் சென்றேன். அப்படியே செய்தி வந்த இடது பக்கமாகவே மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தேன்.
அதன் பிறகு மீண்டும் கால்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அட்டையை எடுப்பதற்காக குனிந்தேன் அப்பொழுது மனதில் வந்து விழுந்தது இந்த செய்தி உயிர் முக்கியமா அட்டையை எடுப்பது முக்கியமா என்றது. சற்று நடுங்கி விட்டேன். மனதில் ஒரு வித படப்படப்போடு சிறிது தூரம் கடந்த உடன் மீண்டும் ஒரு முறை அதே இரட்டை வழிப்பாதை ஆனால் இம்முறை மிகவும் குழப்பமாக இருந்தது. என்னால் அமைதியாக கண்களை மூடி வேண்ட முடியவில்லை சற்று தடுமாறி போனேன் செய்வது அறியாமல். ஒரு வித பயத்தோடு அந்த இரு வழி பாதையையும் உற்று நோக்கினேன். அப்பொழுது தான் அந்த ஆச்சரியம்.
அதில் ஒரு வழிப் பாதையை மட்டும் அடைத்த வாரு ஒரு மரக் குச்சி நான்கு அடி இருக்கும் அந்த பாதையின் சரியாக நடுவில் குறுக்கே கிடந்தது. அந்த நொடியில் எனது மனதில் வந்து விழுந்தது இந்த செய்தி அதை அப்படியே பதிவு செய்கிறேன்.
நீ இந்த பாதையில் போகக்கூடாது என்பதற்காக தாண்டா இங்க விழுந்து கிடக்குறேன் என்றது. அந்த மரக்குச்சி பேசியதை போலவே ஒரு உணர்வு. சத்தியமாக அந்த மரக்குச்சியின் வார்த்தைகள் தான் எம் மனதில் ஒழித்தது போன்று இருந்தது. அந்த கணத்தில் மனம் விடை கிடைத்ததை எண்ணி நிம்மதி அடைந்தாலும் நடுங்கிவிட்டேன். இப்பொழுது அந்த பாதையை விடுத்து மனதினுள் அகத்திய பெருமானை வேண்டி நடக்க தொடங்கினேன்.
சரியாக 15 நிமிட நேரத்தில் அதிரு மலை கேம்ப் க்கு வந்துவிட்டேன். மற்ற அனைவரை பார்த்த உடனே மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அகத்திய பெருமானுக்கு மனதார நன்றி கூறினேன். வந்தவுடன் அவர்களை விட்டு சென்றதற்காக கடிந்து கொண்டேன். அவர்களும் நீங்கள் எங்களோடு தான் வருகிறீர்கள் என்றே நினைத்து இருந்தோம் என்றனர். சரியாக அவர்கள் எனக்கு முன்னர் முக்கால் மணி நேரம் முன்னால் வந்ததாக கூறினர்.
எனக்கு பிறகு அரை மணி நேரம் கழித்து இன்னொருவர் வந்தார். அவரும் என்னை போலவே தனியாக வந்தவர் ஆனால் அவர் அதிர்ச்சியாக கூறினார், அங்கு இருந்த அடியவரை பார்த்து, "மாமா நீங்கள் எனக்கு பின்னால் தான் வருகிறீர்கள் என்று உங்களோடு வழி நெடுக பேசிக் கொண்டு வந்தேனே, நீங்களும் ஹ்ம்ம் சொல்லி வந்தீர்களே. பார்த்தால் எனக்கு முன்னால் இங்கு இருக்கீர்கள்" என்று கூறினார். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டோம்.
அகத்திய பெருமானின் தனிப்பெருங் கருணையை எண்ணி நாங்கள் அனைவரும் மனதார வேண்டினோம் மலையை நோக்கி அகத்திய பெருமானை நினைத்து. அனைவரும் வந்த உடன் எங்களை முழுவதுமாக சுத்தம் செய்து கொண்டு குளித்து விட்டு இரண்டாம் நாள் இரவு உணவை அங்கேயே சாப்பிட்டப்பின் உறங்கினோம்.
அகத்திய பெருமானை வணங்கி மூன்றாம் நாள் எங்களின் காலை உணவை முடித்துக் கொண்டு சுமார் 7 மணியளவில் அதிரு மலை கேம்ப் விட்டு இறங்கினோம். மிக அதிகமாக மழை பெய்துக் கொண்டிருந்தது. நாங்கள் கடந்து சென்றபோது இருந்த காட்டாறு நீர் வரத்து திரும்பும் பொழுது சற்று அதிகமாகவே இருந்தது. வழிகாட்டிகளின் உதவியோடு கடந்தோம். மழை அதிகமாக இருந்ததால் மலையில் இருந்து இறங்க நீண்ட நேரம் ஆனது. நாங்கள் அனைவரும் மதியம் 1 மணிக்கு வந்து சேர்ந்தோம். அவ்வளவு அதிகமான மழையில் எங்கள் அனைவரையும் காத்து ரட்சித்து பாதுக்காப்பாக இறங்க வைத்த தலையாய சித்தர் அகத்திய பெருமானின் கருணையை எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தோம்.
சற்குரு ஷிர்டி சாய் நாதர் திருவடிகள் சரணம் சரணம். அகத்திய மாமுனிக்கு அரோகரா. அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி திருச்சிற்றம்பலம்.
எங்கள் குழுவினர் |
மேகங்களால் சூழப்பட்ட பொதிகை மலை |
கேரள வனத்துறையினரால் பக்தர்களின் தங்குவதற்காகவும் ஓய்வு எடுப்பதற்காகவும் அமைக்க பட்ட அதிரு மலை கேம்ப் |
விபூதி, மற்றும் சந்தன அபிஷேகத்தில் அகத்திய பெருமான் |
Thank: Mr.Chellappan Sairam ..Maldives
Arumai ana pathivu.nengal sonnathu pola mela சிறு நீர் சுனை enga ullathu. Nandri
ReplyDeleteஅருமை ஐய்யா நானும் காணவேண்டும் என்று அசீ வயங்கவும்
ReplyDelete