Wednesday, March 4, 2015

மலேசியா தாப்பாவில் ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமிகள் ஜீவசமாதி

Thank 

My Photo
 


 நான் பிறந்தது தாப்பா எனும் ஒரு சிறிய நகரத்தில். இது மலேசியாவில் உள்ள பேராக் மாநிலத்தில் உள்ளது. இதே ஊரில்தான் ஜெகந்நாத் சுவாமிகள் எனும் ஒரு மாபெரும் ஞானியின் ஜீவ சமாதி உள்ளது. தாப்பா நகரிலிருந்து கம்பார் செல்லும் வழியில் உள்ள பாலதண்டாயுதபானி ஆலயத்தின் அருகே இருக்கும் ஒரு சிவாலயத்தின் உள்ளேதான் சுவாமியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

சென்ற வருடம், ஒரு நண்பர் வீட்டிலுள்ள பூஜை அறையில் ஒரு சாமியாரின் படத்தை கண்டேன். அந்த படத்தில் "சுவாமி ஸ்ரீ ஜெகந்நாத்" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர் யார் என்று என் நினைவுக்கு வந்தது. உடனே சுவாமியைப்பற்றிய தகவல்களை அங்கும் இங்கும் தேடினேன். அவரை பற்றிய சில தகவல்களும் இறைவன் அருளால் கிடைத்தது. மேலும், மலேசியாவில் பிரபலமான தன்முனைப்பு பேச்சாளர் டாக்டர் காதிர் இப்ராகிம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சுவாமி ஸ்ரீ ஜெகந்நாத் அவர்களை பற்றி நிறைய தகவல்கள் எனக்கு கிடைத்தது.

தவத்திரு ஜெகந்நாத் சுவாமிகள்
ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமிகள் 1814 ஆண்டில், கல்கத்தாவில் உள்ள பூரி என்னும் நகரில், தை மாதத்தில் பிறந்தார். தன்னுடைய 18-ஆவது வயதுக்கு மேல் பர்மாவில் வாழ்ந்து வந்தார். பிறகு தனது முப்பதாவது வயதில் தாய்லாந்து வழியாக மலேசியா வந்தடைந்தார். மலேசியாவில் உள்ள தஞ்சோங் மாலிம் எனும் ஊரில், ரயில்வேயில் "பிறேக்மேன்"-ஆக சுமார் நான்கு ஆண்டுகளாக வேலை செய்தார். மேலும், கெடாவில் உள்ள பாலிங் எனும் ஊரில் அவர் எட்டு ஆண்டுகளாக வாழ்துள்ளார். அங்கே, அவருடைய அருள் நிறைந்த தோற்றத்தை கண்டு பலரும் "சுவாமி" என்று அழைத்தனர்.

பாலிங்கிலிருந்து சிங்கபூருக்கு யாத்திரை செல்லும் வழியில், சுவாமிகள் தைபிங் எனும் ஊரில் தங்கினார். அந்த சமயம் ஆங்கிலேயர்களின் ராணுவப்படையை சேர்ந்த பர்மா சிப்பாய்கள் சுவாமியை எதிரிகளின் உளவாளி என்று தவறாக எண்ணி, அவரை கைது செய்து சிறையிலிட்டார்கள். இறைவனின் அருளால், மறுநாள் விடிந்ததும் சுவாமியை விசாரணையின்றி விடுதலைச் செய்தார்கள்.  அங்கிருந்து சுவாமிகள் சிரம்பான் நகரை வந்தடைந்தார். அங்கே பலர் சுவாமியின் தரிசனம் கண்டு மன ஆறுதல் அடைந்தார்கள். மெதுவாக சுவாமியின் புகழ் அங்கே பரவ தொடங்கியது. பிறகு அவர் தெலுக் அன்சனுக்கு பயணம் செய்த்தார். அங்கே ஏழை மக்களுக்கு தானங்கள் செய்த்தார். இதற்கான பணத்தை எங்கே எப்படி இவர் சேர்த்தார் என்று யாருக்கும் தெரியாது. தெலுக் அன்சனில் ஒரு மாட்டு தொழுவத்தில் சுவாமிகள் தவம் செய்து வந்தார் என்று ஒரு செய்தியும் உண்டு.

அதன் பிறகு சுவாமிகள் தாப்பா நகர் வந்தடைந்தார். அங்கே உள்ள சீனர் மயானம் அருகில், 8-அடி குடிசையிட்டு, சுமார் 75 ஆண்டுகள் தவ சாதனையில்  ஈடுபட்டார்.


ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமியின் குரு யார்? அவரின் குரு வடலூர் அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க அடிகள். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஜெகந்நாத் சுவாமிகளை விட வயதில் இளையவர். இருப்பினும் குருவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர் ஜெகந்நாத் சுவாமிகள்.
ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமிகளுக்கு மூன்று சீடர்கள் இருந்தார்கள்:

வீமவர் - இந்தோனேசியா
சித்திர முத்து அடிகள் - ஆத்மா சாந்தி நிலையம், பனைக்குளம் ,   இராமநாதபுரம் (தமிழ் நாடு)
சத்யானந்தா - சுத்த சமாஜ இயக்கம், கோலா லம்பூர் (மலேசியா)

இவர்கள்தான் சுவாமிகளின் ஆத்மானந்த சீடர்கள். வீமவர் மற்றும் சத்யானந்தா அவர்களை பற்றி எனக்கு போதிய தகவல் கிடைக்கவில்லை. ஆகையால், சித்திர முத்து அடிகளை பற்றிய விவரங்கள் மட்டுமே என்னால் இந்த தளத்தில் வழங்க இயலும். சித்திர முத்து அடிகள் பற்றிய தகவலை மற்றொரு தொகுப்பில் காண்போம்.

ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் வெளியில் செல்லும் பொழுது, அவர் குருநாதர் ராமலிங்க சுவாமிகளை போலவே முக்காடு அணிந்துதான் செல்வார். எப்போதும் கோவணத்துடன் பித்தனை போலவே காட்சியளிப்பார் தவத்திரு ஜெகந்நாத் சுவாமிகள். பெரும்பாலும் தனிமையாகும் மௌனமாகவும் இருப்பார். யாரிடமும் இவர் அதிகம் பேசுவதில்லை. இவர் மீது ஒரு வகையான வாசனை எப்போதும் வீசிக்கொண்டே இருக்கும். பச்சைப்பயிர், கடலைபருப்பு மற்று பழங்கள் இவரது பிரதான உணவாகும்.

சுவாமிகளிடம் நடந்துக்கொள்ளும் ஒழுங்கு முறைகளை காட்டும் அறிவிப்பு பலகை.
(புகைப்படம்: திரு ஷண்முகம் ஆவடையப்பா)

சித்தர்கள் என்றாலே ஏதாவது சக்தி இருக்க வேண்டுமே?...என்று பலரும் கேட்க வாய்ப்பிருக்கிறது. எல்லோரும் சக்தியை பற்றியே நாட்டம் கொள்கிறார்களே தவிர, சித்தர்கள் கூறிய வாழ்கை மற்றும் ஆன்மிக நெறிகளை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. தவத்திரு ஜெகந்நாத் சுவாமிகள், இருந்த இடத்திலிருந்தே பல இடங்களில் பல பேர்களுக்கு பல உருவங்களில் காட்சி அளித்துள்ளார். தாவரங்கள் மற்றும் மிருகங்களிடம் தொடர்புகொள்ளும் அற்புத ஆற்றலும் இவருக்கு உண்டு. இவர் பூப்பறிக்க சற்று உயரமான பூச்செடிகள் அருகில் சென்றால், செடிகள் அதுவாகவே வளைந்து கொடுக்குமாம்.

ஒரு பள்ளியின் அருகேயுள்ள திடலில் நிறைய பாம்புகள் இருந்தன. பள்ளி மாணவர்கள் அங்கு விளையாடும்போது, அந்த பாம்புகள் அவர்களை தீண்டிவிடுமாம். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. அப்போது மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் ஆசிரியர்களும் தவத்திரு ஜெகந்நாத் சுவாமிகளிடம் சென்று முறையிட்டனர். சுவாமிகள் அந்த திடலுக்கு சென்று எல்லா பாம்புகளையும் வர செய்து இனிமேல் அங்கு யார் நடமாடினாலும், அவர்களை தீண்டக் கூடாது என்று உத்தரவு போட்டார். அன்று முதல் இன்று வரை, அந்த இடத்தில் யாரையும் பாம்புகள் தீண்டியதாக ஒரு செய்தியும் இல்லை. இந்த நிகழ்ச்சி தாப்பா அல்லது ஈப்போவில் நடந்ததா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியின் விவரங்கள் அனைத்தும் ஈப்போ மாநகராட்சி தகவல் மையத்தில் உள்ளது. இதை நான் டாக்டர் காதிர் இப்ராகிம் அவர்களின் நிகழ்ச்சியில் தெரிந்துகொண்டேன்.

சுவாமிகள் பாம்பாக மாறும் ஜாலத்தை அறிந்தவர் என்று பலரும் கூறியிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். இதை ஜெகந்நாதர் சிவாலயத்தின் குருக்கள்கூட என்னிடம் கூறியுள்ளார். அவருடைய அனுபவத்தை இப்போது பார்ப்போம்...அவர் புதிதாக அந்த ஆலயத்தில் சேவை செய்து கொண்டிருக்கும்போது, பலர் சுவாமிகள் நாகமாக மாறும் ஆற்றல் கொண்டவரென்று அவரிடம் கூறினார்கள். இதை அவர் மறுத்தார். சுவாமியின் திரு உருவச்சிலையை பார்த்துக்கொண்டே, "என்ன ஐயா இப்படியெல்லாம் சொல்கிறார்கள்?...நீங்களாவது பாம்பாக மாறுவதாவது..." என்று சொன்னார். பிறகு மதியமானதும் உணவருந்திவிட்டு உறங்க சென்றார். அவர் வசிக்குமிடம் முழுவதும் அடைக்கப்பட்திருக்கும். வெளியிலிருந்து ஏதேனும் கொசு, பூச்சிகள் வரமால், கதவு மற்றும் ஜன்னல்கள் நன்கு  அடைக்கபட்டிருக்கும்.

ஸ்ரீ ஜெகந்நாதர் சிவாலயம் உள்ளே இருக்கும் புற்று
(புகைப்படம்: திரு ஷண்முகம் ஆவடையப்பா)
நன்றாக உறங்கிகொண்டிருந்த அவர் திடிரென்று ஏதோ ஒரு சத்தம் கேட்டு கண் விழித்துப்பார்த்தார். அவர் முன்னே ஒரு பெரிய நாகம் படமெடுத்து க்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டார். அலாதி பயத்தினால் அவரால் நகர முடியவில்லை. வேறு வழியின்றி கண்களை மூடியவாறே  சுவாமியை பிராத்தனை செய்தார். சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்க்கும் போது அந்த நாகம் அங்கு இல்லை. இப்பெரிய  நாகம் எப்படி உள்ளே நுழைந்து, வெளியே சென்றது என்று குருக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார் . அப்பொழுதுதான் முன்பு ஜெகந்நாத் சுவாமியின் சிலையைப் பார்த்து  இவர் சொன்னது, மெதுவாக இவர் சிந்தையில் உதித்தது. நாகமாக வந்தது யாரென்று அவருக்கு அப்போதுதான் புரிந்தது.

சுவாமிகளின் சீடரான சித்திர முத்து அடிகள், 1922-ஆம் ஆண்டு மலாயாவை வந்தடைந்தார். அவர் 1900-ஆம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள இராமநாதபுரத்தில் பிறந்தவர். மலாயாவில், கோலா கங்சார் என்னும் இடத்தில் கள் இறக்கும் தொழிலை செய்தார். பிறகு 1928-ஆம் ஆண்டில், மறுபடியும் தமிழகத்துக்கு திரும்பினார். அங்கே திருமணம் செய்துகொண்டார். ஒரு குழந்தையும் பிறந்து, பிறகு சில வாரங்களில் அக்குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு மீண்டும் மலாயாவிற்கு வந்தார். தைப்பிங் எனும் ஊரில் தங்கி, கள் இறக்கும் தொழிலை மறுபடியும் தொடங்கினார். ஜோதிட கலையையும் கற்றார்.

தவத்திரு சித்திர முத்து அடிகள்

அதன் பிறகு தவத்திரு ஜெகந்நாத் சுவாமிகளை காணும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. சுவாமிகள் இவரை தன்னுடைய சீடனாக ஏற்றுகொண்டார்.  அதற்க்கு பிறகுதான் சித்திர முத்து அடிகள், அவருடைய வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொண்டார். மீண்டும் தமிழகத்துக்கு திரும்பினார். அப்போது சித்திர முத்து அடிகளுக்கும் அவர் துணைவியாருக்கும் ஒரு ஆன் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு தன் குருவான ஜெகந்நாத் சுவாமிகளின் பெயரை சூட்டினார் சித்திர முத்து அடிகள்.

சித்திர முத்து அடிகள் பல முறை மலாயாவிற்கு வருகை புரிந்தார். பல கோவில்களிலே சமய சொற்பொழிவாற்றினார். அந்த சமயம் தைப்பிங் நகரிலுள்ள மாரியம்மன் கோவிலில் கணக்குபிள்ளையாக வேலைப்பார்த்துகொண்டிருந்த கே. எஸ். குருசாமி பிள்ளை என்பவர் இவரை சந்தித்தார். ஜெகந்நாத் சுவாமிகளை பற்றிய விவரங்களை சித்திர முத்து அடிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார் கே. எஸ். குருசாமி பிள்ளை.

பிறகு 1951-ஆம் வருடம், ஜெகந்நாத் சுவாமியை தேடி தாப்பா நகருக்கு சென்றார் குருசாமி பிள்ளை. தாப்பாவில் உள்ள தனது நண்பரான செல்லையாவிடம் ஜெகந்நாத் சுவாமியை பற்றி விசாரித்தார். நண்பர் செல்லையா, இங்கே அப்படி ஒரு சாமியருமில்லை ஆசிரமமுமில்லை என்று குருசாமியிடம் கூறினார். பிறகு குருசாமி பிள்ளை, தன்னிடம் உள்ள ஜெகந்நாத் சுவாமியின் புகைப்படத்தை செல்லையாவிடம் காண்பித்து, இவரைத்தான் தேடிவந்ததாக சொன்னார்.

அதற்க்கு செல்லையா, "ரோட்டுல கோவணத்துடன் பித்தனை போல திரிஞ்சிகிட்டு இருப்பானே, அவனையா நீ தேடிவந்தே? அங்கே இருக்கிற மயானக் காட்டுலே தான் இருப்பான், போய் பாரு!", என்று சொன்னார். உடனே குருசாமி பிள்ளை சுவாமியைத் தேடி மயான காட்டுக்குள் சென்றார். ஜெகந்நாத் சுவாமியை கண்டவுடன் அவர் காலிள் விழுந்து வணங்கினார். சுவாமிகள் சொன்னார், "என்னை பைத்தியக்காரன் பித்தனென்று சொன்னானே...முதலில் அவன் காலிள் போய் விழு!". குருசாமி பிள்ளைக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. அங்கே அவர் நண்பர் கூறியதை எப்படி சுவாமிகளுக்கு தெரிந்தது என்று வியந்தார்.

ஸ்ரீ ஜெகந்நாதர் சிவாலயத்தில் உள்ள தவத்திரு சித்திர முத்து அடிகளின் படம்

சுவாமிகள் குருசாமி பிள்ளையை அவரின் குடிசையில் அமர வைத்துவிட்டு வெளியே  சென்றார். அப்போது திடீரென்று ஒரு பெரிய நாகமொன்று பெரிய சத்தத்துடன் குடிசையின் மேலேயிருந்து தொங்கியது. அந்த நாகம் சீரும் ஒலி ஓங்காரத்தின் ஒலியை போன்று இருந்தது என்று சில குறிப்புகளில் நான் படித்திருக்கிறேன். பயந்துபோன குருசாமி பிள்ளை, சுவாமியை தேடினார். சுவாமி திரும்பியதும், அந்த நாகம் மறைந்து விட்டது. குளிர் அதிமாக இருந்ததால் வேட்டி தயார்செய்து கொடுக்கட்டுமா என்று குருசாமி பிள்ளை கேட்டபோது, "கோவணத்தின் மகிமையை பிறகு நீ அறிந்துகொள்வாய்!", என்று சுவாமிகள் கூறினார். குருசாமி பிள்ளைக்கும் கோவணத்தை கட்டிவிட்டு, மாற்று கொவனமொன்றையும் கொடுத்தார். அதை பத்திரமாக வைத்துகொள்ளும்படி உத்தரவிட்டார். 


1953-ஆம் வருடம் சுவாமிகளை மீண்டும் சந்திக்கப் போனார் குருசாமி பிள்ளை. அப்போது சுவாமிகளின் சீடரான சித்திர முத்து அடிகள் இலங்கையிலே தங்கியிருந்தார். குருசாமி பிள்ளையிடம் சித்திர முத்து அடிகளுக்கு ஒரு கடிதத்தை எழுதச் சொன்னார் ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமிகள். "இலங்கையிலே யோகா சுவாமின்னு ஒருத்தன் இருப்பான்...அவன் கிட்ட போய் இந்த தகவலை சொல்லு!" என்று சுவாமிகள் கடிதம் மூலமாக சித்திர முத்து அடிகளுக்கு உத்தரவிட்டார்.

தன் குருநாதர் உத்தரவின்படி இலங்கையில் யோகசுவமியை தேடினார் சித்திர முத்து அடிகள். அங்கே அவர் யோகசுவமியை கண்டதும் பெரும் ஆச்சிரியத்திற்குள்ளானார். ஜெகந்நாத் சுவாமிகள் இதுவரைக்கும் இங்கு வந்ததில்லையே, எப்படி இவருக்கு இங்கே இப்படி ஒரு சாமியார் இருக்கிறார் என்று தெரிய வந்தது என்று வியந்தார் சித்திர முத்து அடிகள். எங்கும் செல்லாமல் அனைத்து இடங்களில் சஞ்சரிக்கும் ஆற்றால் பெற்றவர்தான் ஜெகந்நாத் சுவாமிகள்.

சரி, இந்த யோகசுவாமி என்பவர் யார்? இவரின் பெயர் சதாசிவன். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தசாமி கோவிலில் அருகே பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே பிரம்மச்சாரியத்தை கடைபிடித்து துறவறம் பூண்டவர். பல ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில், கொழும்புத்துறை சாலையோரத்தில் உள்ள இலுப்பை மரத்தடியில் தவம் செய்தவர். தன்னுடைய ஆன்மிகச் சிந்தனைகளை பரப்புவதற்காக "நட்சிந்தனை" எனும் மூவாயிரம் ஞானப்பாடல்களை கொண்ட தொகுப்பை இவர் வழங்கியுள்ளார். "தன்னை அறிதல் எனபது ஒரு சிவத்தொண்டு!" என்று இவர் கூறியுள்ளார்.


யோகசுவாமி
(புகைப்படம்: http://kataragama.org)

தான் தவம் செய்த இலுப்பை மரத்தின் அருகிலேயே ஒரு குடிசையை அமைத்து சுமார் ஐம்பது வருடங்கள் அங்கே வாழ்ந்து வந்தார். யோகசுவாமிகள் 1964-ஆம் வருடம், மார்ச் மாதத்தில், ஒரு புதன் கிழமையன்று அதிகாலை 3.18 அளவில், தனது 91-ஆம் வயதில், சிவபாதம் அடைந்தார். இவர் வாழ்ந்த குடிசை பகுதியில் ஒரு கோவிலை அமைத்து, இன்று வரையிலும் மக்கள் வழிபாடுகள் செய்து வருகின்றார்கள். யோகசுவாமிகளுக்கு வெள்ளைகார சீடர்கள் கிடைப்பார்கள் என்று முன்க்கூட்டியெ சொன்னவர் ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமிகள். சுவாமிகள் சொன்னது போல, யோகசுவாமிக்கு சில வெள்ளைகாரர்கள் சீடராக வந்து சேர்ந்தார்கள். (யோகசுவாமியின் சீடரின் படத்தை நீங்கள் ஜெகன்னாதர் சிவாலயத்தில் கானலாம்.)

ஜெகந்நாத் சுவாமிகள் விபூது புசுவதில்லை. கையில் ஒரு விசிறியை வைத்திருப்பார். இதை நீங்கள் அவருடைய படத்தில் கூட காணலாம். ஒரு சமயம், ஒரு பெரியவர், ஜெகந்நாதர் சிவாலயத்திற்கு வந்தபோது, சுவாமிகளின் படத்தை அங்கே கண்டார். உடனே, "இவர் முற்றும் துறந்தவர்தானே?...பிறகு கையில் எதற்கு விசிறி? உல்லாசமாக காற்று வாங்கவா?" என்று அங்கு இருந்தவர்களிடம் கிண்டலாக விமர்ச்சித்தார். பூசை முடிந்ததும் அந்த பெரியவர் வீட்டுக்கு திரும்பினார். செல்லும் வழியில் ஒரு வயதானவர் அவர் முன் நடந்து வந்து நின்றார்.

அந்த வயதானவர் திடிரென்று, "ஐயா, என் கையில் உள்ள விசிறி நான் பயன்படுத்துவதற்கு அல்ல. உடல் நலம் இல்லாதவர்கள் என்னிடம் வந்தால், அவர்களுக்கு நான் இந்த விசிறியால் விசிரிவிட்டால், அவர்கள் குனமடைந்துவிடுவார்கள். அதற்காகத்தான் அதை வைத்திருக்கிறேன்" என்று கூறிவிட்டு, வந்த வழியிலேயே சென்று விட்டார். அந்த பெரியவருக்கு ஒரே ஆச்சிரியம். வந்தவர் யார்? இவருக்கு எப்படி நான் கோவிலில் சொன்னதை பற்றி தெரிய வந்தது? இவரை நான் கோவிலிலே பார்க்கவில்லையே, என்று பல கேள்விகள் அவர் சிந்தையில் குவிந்தன. பிறகு வந்தது யார் என்று கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு புரிய வந்தது. உடனே கோவிலுக்கு திரும்பிச சென்று, ஜெகந்நாத் சுவாமிகளின் சந்நிதியில் விழுந்து வணங்கி, சுவாமிகளை கிண்டல் செய்து  பேசியதற்காக மன்னிப்பும் கேட்டார். இந்த சம்பவத்தை அந்த சிவாலயத்தின் குருக்களிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன்.
ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமிகள் நமக்கு என்னே கூறியுள்ளார் என்பதை இப்போது காண்போம். ஜுரம், பூச்சி கடி மற்று இதர விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்ப, "என் நாமத்தை சொல்லி பிராத்தனை செய்யுங்கள், நீங்கள் குணமடைவீர்கள்!" என்று கூறியிருக்கின்றார் ஜெகந்நாத் சுவாமிகள். மேலும், சிவாலயத்தில் உள்ள அபிஷேக விபூதியை, பலரும் பூச்சி கடி மற்றும் ஜுரம் போன்றவற்றுக்கு உபயோகித்து பலனும் பெற்றிருக்கார்கள். "நீங்கள் உங்களை புனிதமாக்கிகொள்ள குருவிடம் சரணடைந்துவிடுங்கள்" என்கிறார் ஜெகந்நாத் சுவாமிகள். குருவை நம்முல் தரிசனம் செய்து, அவர் நாமத்தை ஜெபித்தால், நம்மை நாம் புனிதமாக்கிகொள்ள முடியும். "வாசியில் குருவை தரிசனம் செய்!" என்பதே ஜெகந்நாத் சுவாமிகளின் வாக்கு. மூச்சை (வாசியை) கவனித்து கொண்டு, குருவின் நாமத்தை மனதிலே ஜெபித்தால், மனம் ஒடுங்கும். குருவின் தரிசனம் கிட்டும், பேரொளியை தரிசனம் செய்யும் பெரும் பாக்கியத்தை நாம் அடைவோம்.

சுவாமிகள் பௌர்ணமி மற்று அமாவாசை நாட்களின் சிறப்பை பற்றியும் கூறியுள்ளார். புதிய முயற்சிகள் வெற்றி பெற மற்றும் புதிய திட்டங்களை வகுப்பதற்கு பௌர்ணமி மிக சிறந்தது என்று கூறியுள்ளார். அதே போல், பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க, அமாவாசையில் செய்யுங்கள் எனபது சுவாமிகளின் வாக்கு. டாக்டர் காதிர் இப்ராகிம் அவர்கள், ஒரு நிகழ்வில், இதை வேறு விதமாக விமர்சித்தார். நம் புருவ மத்தியில் உள்ள ஒளியை பௌர்ணமி என்றும், அமாவாசையை மூலதாரமென்றும் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார் என்று டாக்டர் அவர்கள் கோடிகாட்டினார். கருப்பு அல்லது சிவப்பு நிறத்தை மூலாதாரத்தில் நினைத்து தியானித்தால் , நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று டாக்டர் காதிர் இப்ராகிம் மேலும் விளக்கினார்.

ஒரு உண்மையான சித்தன், தான் ஒரு சித்தனென்று யாரிடமும் அடையாளம் செய்துகொள்ள மாட்டான். ஜெகந்நாத் சுவாமிகளும் அப்படிதான். அவர் தான் ஒரு சித்தன் என்று யாரிடமும் கூறியதில்லை. பலரும் அவரை பைதியக்காரனென்றும் பித்தனென்றும் கூறினார்கள். இன்னும் சிலர், தெருவில் வருவோர் போவோரை எல்லாம் திட்டிக்கொண்டே இருப்பவரென்று கூறியதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெகந்நாத் சுவாமிகளை பற்றி என் தாயார் பல ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கூறியிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் ஒரு சாதாரணமான சாமியார் என்று நான் நினைத்திருந்தேன். என் தாயார் சுவாமிகளை தன் சிறு வயதில் கண்டிருக்கிறார். சுவாமிகள் வீடு வீடாக தானம் கேட்டு வருவாராம். குழந்தைகளுக்கு கற்கண்டு கொடுப்பாராம்.

ஜெகந்நாத் சுவாமிகளின் உருவ சிலை
(புகைப்படம்: திரு பாலா சந்திரன்)

சுவாமிகள் சமாதி அடைய போகும் நாளை குறிப்பிட்டு மூன்று மாதங்களுக்கு முன்பே எல்லோருக்கும் தகவல் கொடுத்துவிட்டார். அதன் படி சமாதி கட்டிட வேலைகளும் தொடக்க பட்டது. தன்னுடைய கோவணங்கள், தண்ணீர் குடிக்கும் கொட்டாங்குச்சி, ஆசன பலகை, சங்கு, பாதரட்சை மற்றும் தான் வழிபட்ட இராமலிங்க சுவாமிகளின் படத்தை சமாதிக்குள் வைத்துவிட வேண்டுமென்று சமாதியை கட்டும் வேலைகளை பார்த்துகொண்டிருந்த பொன்னுசாமி மேசனாரிடம் சுவாமிகள் கூறினார். தான் சமாதியாகும் அந்த நாளில் தன்னுடைய சீடரான சத்யானந்தா அவர்களையும் வரச் சொல்லி கட்டளையிட்டார்.

சுவாமிகள் அவரை உயிருடன்  சமாதிக்குள் வைத்துவிட வேண்டுமென்று கூறினார். ஆனால், விஷயம் தெரிந்த காவல் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து, அது சட்டத்துக்கு புறம்பான ஒன்று என்று அதை தடுத்தார்கள். வேறு வழியின்றி சுவாமிகள் பரகாய பிரவேசம் செய்து தன் உடலை துறந்தார். அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்று நினைத்தார்கள். மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று உறுதியாக கூறிய பின், சுவாமிகளின் உடலை சமாதிக்குள் வைத்து, அடக்கம் செய்தார்கள் .சுவாமிகள் தன் உடலை துறக்கும் முன்பே சமாதி உள்ளிருந்து ஒரு குழாயை வைக்கச் சொன்னார்.  சுவாமிகள் கூறியபடி சமாதி உள்ளிரிந்து வெளியே ஒரு குழாயை வைத்தார்கள். அந்த குழாயின் வழியே, மீண்டும் அவருடைய உடலை அடைந்தார் ஜெகந்நாத் சுவாமிகள். தன் உடலை ஒளி  உடம்பாக்கி வேட்டவேளியோடு கலந்தார்.

சுவாமிகள் தன்னுடையா 145-ஆவது வயதில், 25-ஆம் திகதி ஜனவரி மாதம் 1959-ஆம் ஆண்டு, தைப்பூசமன்று, அதி காலை 4.30 மணி அளவில் பூரண சமாதி அடைந்தார். சமாதி அடையும் போது, எங்கும் ஜோதிமயமாக இருந்ததை அனைவரும் கண்டார்கள். அவர் சமாதியின் மேல் ஒரு லிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்து இன்னமும் வாழிபடுகள் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் தைபுசத்தின் மறுநாள், சுவாமிகளுக்கு சிறப்பு பூசை செய்யபடுகின்றது. மாதம் தோறும் வரும் பௌர்ணமியன்று சிறப்பு பூசைகள் இங்கு நடைபெர்ருகின்றது.

ஜெகந்நாத் சுவாமிகளின் சமாதிக்கு மேலே பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட லிங்கம் இருக்கும் கருவறை. கருவறையின் வலது புறம் முருகப்பெருமானும், இடது புறம், விநாயகரும் எழுந்தருளியுள்ளார்கள்.
(புகைப்படம்: திரு பாலா சந்திரன்)


ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமிகளை பற்றி வேறு ஏதும் தகவல்கள் இறைவனின் அருளால் அடியேனிடம் வந்து சேர்ந்தால், அதை அவர் ஆசியுடன் இங்கே சமர்ப்பிப்பேன்...

சுவாமி ஸ்ரீ ஜெகந்நாத் சமாதி இருக்கும் இடம்


ஸ்ரீ ஜெகந்நாதர் சுவாமி சிவாலயம், தாப்பா.
( புகைப்படம்: திரு. பால சந்திரன்)

தவத்திரு ஜெகந்நாத் சுவாமிகள்

சுவாமிகளிடம் நடந்துக்கொள்ளும் ஒழுங்கு முறைகளை காட்டும் அறிவிப்பு பலகை.
(புகைப்படம்: திரு ஷண்முகம் ஆவடையப்பா)

ஸ்ரீ ஜெகந்நாதர் சிவாலயம் உள்ளே இருக்கும் புற்று
(புகைப்படம்: திரு ஷண்முகம் ஆவடையப்பா)

தவத்திரு சித்திர முத்து அடிகள்


ஸ்ரீ ஜெகந்நாதர் சிவாலயத்தில் உள்ள தவத்திரு சித்திர முத்து அடிகளின் படம்


யோகசுவாமி
(புகைப்படம்: http://kataragama.org)


ஜெகந்நாத் சுவாமிகளின் உருவ சிலை
(புகைப்படம்: திரு பாலா சந்திரன்)

ஜெகந்நாத் சுவாமிகளின் சமாதிக்கு மேலே பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட லிங்கம் இருக்கும் கருவறை. கருவறையின் 


thank 

My Photo
 
Credits:

1. Thavayogi Thanggaraasan Adigal, Kallar Agathiyar Gnana Peedam Monastery.

2. Mr. Shanmugam Avadaiyappa (http://agathiyarvanam.blogspot.com/)

3. Ms. Nithyavani (http://nithyavani.blogspot.com/)

4. Mr. Bala Chandran

No comments:

Post a Comment